தீக்கிரையாக்கப்பட்ட முதல் நாவலை எழுதியவர் இவர்!

mario-vargas-llosa "எழுத்தாளர் என்பதற்காக நீங்கள் கொல்லப்படுகிறீர்கள் என்றால்,

அது (உங்களுக்காக) உச்சகட்டமாக வெளிப்படுகிற மரியாதை, தெரியுமா..."

- மரியோ வர்கஸ் லோசா

 

எழுதியவர் :
எஸ்.வி.வேணுகோபாலன்

தாம் முதன்முதல் எழுதும் ஒரு படைப்பின் ஆயிரம் பிரதிகளை யாரோ மொத்தமாகப் போட்டு எரிக்கிறார்கள் என்றால் அந்த எழுத்தாளருக்கு என்ன உணர்வுகள் தோன்றியிருக்கும்?  தான் இன்னும் உரக்கப் பேச வேண்டும், இன்னும் காத்திரமாக ஆதிக்கப் போக்குகளை விமர்சிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றிவிடுமானால், அப்புறம் அந்தப் படைப்பாளியின் கைகளை யாரால் கட்டிப் போட முடியும்?

இதுதான் மரியோ வர்கஸ் லோசா என்ற எழுபத்து நான்கு வயது நிரம்பியிருக்கும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறும்வரை கடந்து வந்திருக்கும் கதையின் சுருக்கம்.  

உலகெங்கும் பேசப்படும் அற்புத எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா  மார்க்வெஸ் (கொலம்பியா) 1982ல் நோபல் பரிசு பெற்றதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இலத்தீன் அமெரிக்காவிற்கு  அந்த விருது வாய்த்திருக்கிறது. மிகச் செறிவான, அழகுணர்ச்சியும் பல்சுவை ரசனையும் மிக்க, வாழ்வின் புதிர்களுக்குள் நுட்பமான தேடலைத் தொடுக்கிற அந்தப் பகுதி இலக்கிய வளத்திற்கான பொதுவான பெருமையாக லோசா விருது பெற்றிருப்பதை மக்கள் அங்கீகரிக்கின்றனர்.

சீன மொழி, ஹீப்ரு, அராபி உள்ளிட்ட 31 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் - கவித்துவ மொழியும், தத்துவார்த்தச் சிந்தனைகளும் விரவிய, வித்தியாசமான கட்டுமானத்தில் செதுக்கப்பட்டிருக்கிற அபார  புதினங்கள் மட்டுமின்றி வேறு வகையான தளங்களிலும் பயணம் செய்யும் எழுத்துக்கள், தனி நபர் சுதந்திரம் - கலகக் குரல் - பண்பாட்டு மேடையில் மனிதர்களைச் செப்பனிட இலக்கிய பிரதிகளுக்குள்ள நிராகரிக்கக் கூடாத இடம்...போன்ற தீர்மானமான கருத்துக்களில் சமரசமற்ற போராட்ட உளவியல்....இவை லோசாவை வரையறுக்கிற விதமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோபல் இலக்கிய விருது: சில குறிப்புகள்

1901 முதல் 2010 வரை இதுவரை இலக்கியத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுகள் மொத்தம் 103.  பரிசை வென்றோர் 107 பேர்.  உலகப் போர் உள்ளிட்ட காரணங்களால் 1914, 1918, 1935, 1940, 1941, 1942 மற்றும் 1943 ஆகிய 7 ஆண்டுகளில்  நோபல் பரிசுகள் வழங்கப்படவில்லை.  நோபல் பரிசுகளைப் பகிர்ந்து பெற்றோர் இதர பிரிவுகளில் பலர் இருந்தாலும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு நான்கு முறை மட்டுமே இருவருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.


1909ல் பரிசு பெற்ற செல்மா லகேர்லோஃப் தான்  நோபல் விருது வென்ற முதல் பெண் எழுத்தாளர்.  அவரையும் சேர்த்து இதுவரை 12 பெண்கள் பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டு நோபல் விருது பெண் இலக்கியவாதிக்கே (ஹெர்ட்டா முல்லர் )  சென்றது.

 
ஆங்கிலப் படைப்புகளே அதிகம் (26 ) நோபல் பரிசு பெற்றுத் தந்துள்ளது. ஜெர்மானிய மொழி (13 ) , சீன மொழி (13 ),  ஐரோப்பிய மொழிகள் பலவும் அதற்கடுத்த நிலைகளில் நோபல் விருது பெற்றுத் தந்திருக்கின்றன.


பிரிட்டிஷ் பிரதமராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு நோபல் விருது கிடைத்தது சமாதான வகைப் பிரிவில் பலரும் நினைக்கின்றனர், ஆனால் அவர் இலக்கியத்துக்காகத் தான் பெற்றார் என்கிறது வலைத்தளக் குறிப்பு.

தாம் பிறந்த பெரு நாட்டின் இராணுவப் பயிற்சிக் கழகத்தைக் களமாகக் கொண்டு லோசா படைத்த "கதாநாயகனின் தருணம்" (The time of the Hero - )  என்ற அதிரடியான நாவல் 1960 களில் வெளிவந்தபோது, மிலிடரி அதிகாரிகளுக்குக் கடும் கோபம் பற்றி எரிந்திருக்கிறது.  அப்புறம் எரிந்தது அந்த நூலின் ஆயிரம் பிரதிகள்.   இதயமற்ற ஓர்  அதிகார வட்டத்திற்குள் ஏதும் செய்ய இயலாத மனிதர்கள் படும் பாட்டைக் குறித்த ஓர் இலக்கியவாதியின் காரமான விமர்சனத்தை, அந்த இயந்திர மூளை உலகம், அண்டை நாடான ஈகுவடார் செய்த சதி என்று பொருளாக்கிக் கொண்டு பாய்ந்தது. 

அதனால் எல்லாம் அவர் கலைந்துவிடவில்லை என்பது, "தேவாலயத்துள் நிகழும் உரையாடல்" (Conversation In The Cathedral), "உலகின் அந்திம யுத்தம்" (The War of the End of the World), "ஆட்டின் விருந்து" (The Feast of the Goat), "பச்சை இல்லம் (The Green house) போன்ற மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற நாவல்களும், எழுத்தோவியங்களும் அவரிடமிருந்து தொடர்ந்து உருவானதில் தெரிகிறது.

அவரது படைப்புகள் பலவும் திரையிலும் மலர்ந்தன. அதில் முக்கியமாகப் பேசப்படும்  "நாளைய இசை" (Tune in Tomorrow) என்ற திரைப்படம் அவரது சொந்த வாழ்க்கையைத் தழுவிய நாவலான "ஜூலியா அத்தையும், கதையாளனும்" (Aunt Julia and the Scriptwriter) என்ற புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.  ஹாலிவுட் ஆட்கள் கதைக் களத்தை வட அமெரிக்காவிற்கு மாற்றி எடுத்த படம் அது.  உறவுகளை அலசும் கதை அது என்றால், "பச்சை இல்லம்" தாசிகள் விடுதியை ஒட்டிய மிகப் பெரிய கதைப் பரப்பைக்  கொண்டிருந்தது.

நோபல் பரிசுக்கு உரியவராக அவரது பெயர் பல்லாண்டுகளாகவே இலக்கிய வட்டத்தில் உலா வந்த போதும், அவரது இடதுசாரிக் கருத்தோட்டம் அதற்குக் குறுக்கே நிற்கும் என்றும் பேசிக் கொண்டனர்.  இப்போது அவரது அரசியல் கருத்துக்கள் முற்றிலும் அதற்கு எதிரானவை.  கடந்த சில ஆண்டுகளாகவே, சுதந்திரச் சந்தையின் ஆதரவாளராகப் பேசிக் கொண்டிருக்கிறார் லோசா. 

மார்ச் 28 , 1936ல் பெரு நாட்டின் அரேக்விப்பா பகுதியில் பிறந்த லோசா, ஒரு கட்டத்தில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டுக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஃபியூஜி மோரிடம் தோற்றுப் போனார்.   அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, 1993ல் ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமையை ஏற்றார்.  ஆனாலும் சமூக விமர்சனத்தைத் தாங்கிய தமது எழுதுகோலை அவர் கீழே வைக்கவில்லை. 1995ல் ஸ்பானிய மொழி இலக்கிய உலகின் மிக உயர்ந்த விருதான செர்வாண்டிஸ் விருதைப் பெற்றார் லோசா. 

சக இலத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களோடான லோசாவின் நட்பு மிகவும் விமரிசையானதாகச் சொல்லப்படுவது.  மார்க்வெஸ் எழுத்துக்கள் மீது ஓர் ஆராய்சிக் கட்டுரையை (Doctoral Thesis ) எழுதினார் லோசா. புரட்சிகர உளப்பாங்கை முன்வைக்கும் ஆவேசமிக்க எழுத்துக்களை வார்த்துக் கொண்டிருந்த லோசா, கியூபா பற்றியும் புரட்சி நாயகன்  ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தும் பின்னர் மாறுபட்ட கருத்துக்களைப் பேசலானார்.  சோவியத் வீழ்ச்சியின் பாதிப்புகள் அந்நாளைய இலக்கிய ஆளுமைகள் பலரையும் உலக அளவில் பாதித்ததன் பிரதிபலிப்பாக இருக்கக் கூடும் அவரது போக்கும், கம்யூனிசக் கொள்கைகள் பால் ஏற்பட்ட அலுப்பும், எல்லாமே அதிகார மையங்கள் தான் என்ற அவரது பொதுவான வருணிப்பும் கடைசியில் சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதுதான் இப்போதைய அவரது வித்தியாசமான பரிணாமம். 

இந்த அரசியல் பார்வையின் மாறுபாடு லோசா- மார்க்வெஸ் நட்பிலும் விரிசலை ஏற்படுத்தியது.  மெக்சிகோ திரையரங்கு ஒன்றில் இருவருக்குமிடையே மூண்ட வாக்குவாதத்தின் உச்சத்தில் லோசா தனது உயிர் நண்பர் மூக்கில் ஓங்கிக் குத்தியதாகவும், கருமை படர்ந்த கண்களோடு  மார்க்வெஸ் வெளியேறியதாகவும் உள்ள செய்திகளோடு,  ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து, மார்க்வெஸின் அருமையான நாவல் ஒன்றிற்கு மிகப் புகழ் வாய்ந்த அறிமுகவுரையை லோசா எழுதியிருக்கிறார் என்பதும்,  லோசாவிற்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் " இப்போது நாம் சம நிலைக்கு வந்துவிட்டோம்" என்று  மார்க்வெஸ் பெயரில் இணையதள உரையாடலில் (ட்வீட்டர்) ஒரு பதிவு செய்யப்பட்டிருப்பதும்..என ரசமான செய்திகள் வலைத்தள உலகில் நிறைய வந்து விழுந்தபடி இருக்கின்றன. 

உணர்வுமயமான படைப்பாளிகள், உணர்ச்சிப் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக எப்படி இருக்க முடியும்....தமது முதல் மனைவி ஜூலியாவுடனான (1955–1964) சொந்த வாழ்க்கைப் பதிவாக அவர் எழுதிய முன் குறிப்பிட்டிருந்த நாவலை ஜூலியாவும் வாசிக்க நேர்ந்து அதில் ஆழ்ந்ததாகவும் ஒரு செய்தி இருக்கிறது.  லோசாவின் பெரிய புதல்வர் அல்வாரோ வர்கஸ் லோசா தமது தந்தையையும் விஞ்சி, காஸ்ட்ரோ - சே குவேரா இவர்களையும், வெனிசுவேலா மற்றும் பொலிவியா நாடுகளில் சாவேஸ் அரசும், இவா மொரேலஸ் அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து எழுதியும் பேசியும் வருபவர்.  நியூயார்க்கிலிருந்து இயங்கும் உலக மனித உரிமை கழகப் போராளி. லோசாவின் இன்னொரு வாரிசு மோர்கானா லோசா ஒரு புகைப்படக் கலைஞர்.  அடுத்தவர் ஐ நா துறை ஒன்றில் செயலாற்றுபவர். 

மாறியிருக்கும் அவரது அரசியல் கண்ணோட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு மரியோ வர்கஸ் லோசாவின் எழுத்தையோ, இந்த நோபல் அங்கீகாரத்தையோ பார்க்கத் தலைப்படுவது அவரது படைப்புகளின் அடிநாதமாகப் பேசப்படும் அம்சங்களுக்கு நியாயம் செய்வதாகாது.  அது ஒரு மனிதரின் தொடர்ந்த தேடலின் திசையில் அவருக்குத் தட்டுப்பட்ட அல்லது தேர்வு செய்து கொண்ட இன்றைய அடையாளம்.  இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வுச் சூழலின் சாளரமாகச் சொல்லப்படும் அவரது நாவல்கள் இந்த எல்லைக் கோடுகளுக்கு வெளியே விரியும் அகன்ற வானம்.

அவரது இதயம், இலக்கிய வாசிப்பின் மீது மனிதகுலம் வேட்கை கொள்ள இயலாததையோ, நழுவிப் போவதையோ, புறக்கணிப்பதையோ கண்டு நொறுங்கிப் போவதை "இலக்கியம் ஏன்?" (Why Literature ?) என்ற அருமையான கட்டுரைப் பிரதியில் தரிசிக்க முடிகிறது.  எழுத்திலக்கியம் இல்லாத ஒரு சமூகம் எழுத்து மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வேறொரு சமூகத்தைக் காட்டிலும் மிகக் குறைவான துல்லியத்தோடும், செறிவு மட்டுப்பட்ட அடையாளத்தோடும், தெளிவு குறைந்துமே நிலவும் என்பதாக ஓடுகிறது அவரது சிந்தனை.  வாசிப்பற்ற சமூகத்தைப் போலவே வாசிக்காத மனிதர்களையும் சபிக்கும் இந்தக் கட்டுரையின் முழக்கம், அறிவியல் அற்புதங்கள், தொழில் நுட்ப மேலாண்மை எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை பண்பாக்கம் செய்வது தரமான இலக்கியங்களே என்பதுதான்.  அவரது இந்தப் பிரதியும் விமர்சனத்திற்கு ஆட்பட்டிருப்பதுதான்.

எதிர்காலத்தில் காகிதங்களோ, புத்தகங்களோ இல்லாத உலகம் படைக்கவேண்டும் என்று பில் கேட்ஸ் எங்கோ பேசியதைக் கேட்டுப் பதறும் லோசா, தமக்கு இன்று கணினி எத்தனையோ உதவுவதையும் மீறி, நூல் இல்லாத வாசிப்பு ஒரு வாசிப்பா என்று கேட்கிற இடம் பழைய தலைமுறையின் தீன முனகல் என்று விட்டுவிட முடியாது.

லோசா நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாகப் பொறிக்கப்படும் இந்த வாசகங்கள்  அழகானவை: ".....அதிகார அடுக்குகளின் வரைபடங்களையும், தனி மனிதர்களின் எதிர்ப்புணர்ச்சி, கலகம் மற்றும் வீழ்ச்சியையும் படைப்புகளாக்கிய" செய்நேர்த்திக்காக அவருக்கு வழங்கப்படுகிறது  இந்த விருது.  தாம் உலக மனிதராக உருப் பெறவேண்டும் என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளும்  தாகத்தை இந்த நோபல் பரிசு சாத்தியமாக்கி இருப்பதாகக் கூறும் ஹிந்து நாளேட்டின் தலையங்க வரிகள் மிகவும் பொருள் பொதிந்தவை.

1960 களில் அவரது முதல் நாவலின் பிரதிகளைத் தீக்கிரையாக்கி வெறியைத் தீர்த்துக் கொண்ட விந்தை மனிதர்கள் எவரேனும் இன்று இருந்தால் தலை கவிழக் கூடும்.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //லோசா நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாகப் பொறிக்கப்படும் இந்த வாசகங்கள் அழகானவை: ".....///


    :( !!!!!

    பதிலளிநீக்கு
  2. //அதிகார அடுக்குகளின் வரைபடங்களையும், தனி மனிதர்களின் எதிர்ப்புணர்ச்சி, கலகம் மற்றும் வீழ்ச்சியையும் படைப்புகளாக்கிய" செய்நேர்த்திக்காக அவருக்கு வழங்கப்படுகிறது இந்த விருது//

    நிஜமாக இதுதானா அல்லது, இடது சாரி கருத்துக்களை மாற்றிக்கொண்டது காரணமாக இருக்குமா? ;)

    பதிலளிநீக்கு
  3. தீக்கிரையாக்கப்பட்ட முதல் நாவல்// என்பது ஏதோ இவருடைய புதினம் தான் உலகிலேயே முதன் முதலில் தீக்கிரையாக்கப்பட்டது என்னும் பொருள் அல்லவா தருகிறது! 'இவரின் முதல் புதினமே தீக்கிரையாக்கப்பட்டது' என்றோ 'முதல் புதினத்தையே தீக்கிரையாக்கக் கொடுத்தவர்' என்றோ அல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. மரியோ வர்கஸ் லோசா-
    இலத்தீன் அமெரிக்காவிலிருந்து
    உலகக் குடிமகனாக உயர்ந்தவரின் பயணம்
    நோபல்பரிசு வாங்கிய கணங்கள் காற்றில் கரையும் முன்பே அவர் குறித்த ஒரு கட்டுரையைச் சுடச்சுட (புத்தகம் பேசுது, நவ 2010) வழங்கிய எஸ்.வி.வி அவர்களுக்கு நன்றி. அதைத் தங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டிருக்கீறீர்கள்.
    நோபல் விருது குறிப்புகள் மிகவும் பயனுள்ள விவரங்கள்.
    நல்ல தொடக்கம்.
    ஒரு எழுத்தாளரைக் கொண்டாட எஸ்.வி.வியால்தான் முடியும். கட்டுரை முழுக்க லோசாவின் பாரட்டுதலாக அமைந்திருக்கிறது.
    நோபல் விருதைப் பொறுத்தவரை அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் மிகவும் முக்கியம்வாய்ந்த்து என்பதனை எஸ்.வி.வி நன்கு அறிவார். விருதின் பின்னணி மிக ஆழமாகச் சுட்டிக்காட்டப்படவில்லை.
    லோசாவின் அரசியல் அணுகுமுறை இடதுசாரித்தன்மையுடனும் இடதுசாரித்தன்மைக்கு எதிராகவும் என்று இருவேறு பிளவுகளாய் இருப்பதை லோசா எழுத்தில் எப்படிப் பிரதிபலித்துள்ளார் என்ற விவரம் மிகவும் முக்கியம் வாய்ந்த்தாகும்.
    கம்யூனிச எதிர்ப்பைத்தன் எழுத்தில் வைப்பதைத் தொழிலாகக்கொண்டிருக்கும் சாருநிவேதிதா கூட மிகச் சரியாக ஒரு விஷயத்தைப்பதிவு செய்துவிடுகிறார். அதன்சாரம் இதுதான்- இடதுசாரித்தன்மையுடன் பல நாவல்கள் படைத்த லோசா வலதுசாரி அரசியல்வாதி ஆனபின்பு எழுதுவதில்லை.(ஆனந்தவிகடன் 27.10.10) இப்படி இருகூறுகளாகப் பிரியும் லோசாவை மொத்தமாகப் பொத்தாம் பொதுவான ஒரு தளத்தில் வைத்து “…தனிநபர் சுதந்திரம், கலகக்குரல், பண்பாட்டு மேடையில் மனிதர்களைச்செப்பனிட இலக்கியப் பிரதிகளுக்குள்ளே நிராகரிக்க்க்கூடாத இடம்…போன்ற தீர்மானமான கருத்துகளில் சமரசமற்ற போராட்ட உளவியல் …இவை லோசாவை வரையறுக்கிற விதமாக எடுத்துக்கொள்ளலாம்.” என்று எல்லா எழுத்துகளுக்கும் ஒரே முத்திரைஎப்படிக் குத்தலாம்?
    மாறியிருக்கும் லோசாவின் அரசியல் கண்ணோட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் எழுத்தையோ, நோபல் அங்கீகாரத்தையோ பார்க்கத்தலைப்படுவது நியாயமாகாது என்று சொல்கிறீர்கள். இன்றைய அவரது அரசியல் நிலைபாட்டை தாங்கள் குறிப்பிடுவதைப்போல நான் வெறும் அடையாளமாகப் பார்க்கவில்லை. அவருடைய அடிநாதமாகப் பார்க்கிறேன். இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வுச்சூழலின் சாளரமாகக் கருதப்படும் அவரது நாவல்கள்…சரி. இன்று அவர் எந்தச் சாளரத்தில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்?
    27-10-10 ஆனந்த விகடனில் சாரு நிவேதிதா எழுதியிருப்பார்- யோசா ஒரு வலதுசாரியாக இருந்தாலும், அவருடைய புனைகதைகளில் அது தெரியாது. (கவனிக்கவும்- இல்லை என்று சொல்லவில்லை). உதாரணமாக, அவருடைய ‘ரியல் லைப் ஆப் அலகாந்த்ரோ மாய்த்தா’ என்ற நாவலைப் படித்தால் நீங்களே ஒரு கம்யூனிஸ்டாக ஆகிவிடுவீர்கள். அந்தளவுக்கு தான் எழுதுகின்ற விஷயங்களோடு ஒன்றிவிடுவார். மார்க்கேஸ் தன்னுடைய கோட்பாடுகளுக்கு இணக்கமான கதைகளையே எழுதினார். ஆனால் லோசா ஒரு வலதுசாரியாக இருந்தும், லத்தீன் அமெரிக்கப் புரட்சியாளனைப்பற்றி எழுதுவார். இதுபற்றி நாம் நிறைய யோசிக்க வேண்டும்.

    இலக்கிய வாசிப்பின்மீது மனிதகுலம் வேட்கை கொள்ளாதபோது, நழுவிப்போகிறபோது, புறக்கணிப்புச் செய்கிறபோது லோசாவின் இதயம் நொறுங்கிப்போகிறது. எதிர்காலத்தில் காகிதங்களோ, புத்தகங்களோ இல்லாத உலகம் படைக்கவேண்டும் என்று பில் கேட்ஸ் பேசியதைக் கேட்டு நெஞ்சம் பதறுகிறார் லோசா. ஆனால் முற்றுமுரணாக பில்கேட்ஸ்கள் சமைக்கவிரும்புகிற உலகத்துக்கானஅரசியல் சமையல்காராக இருக்க விரும்புகிறார். இந்த முரண் என் நெஞ்சைப்பதற வைக்கிறது.
    சோவியத்வீழ்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும் என்று சும்மாங்காட்டியும் சொல்லமுடியாது. சமுதாய விமர்சனத்தைத் தாங்கிய தமது எழுதுகோலை அவர் கீழே வைக்கவில்லை என்கிறீர்கள். எதுவரை? மேலும் அவர் எந்த சமுதாயத்தை விமர்சிக்கிறார்? நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்…லோசாவின் பெரிய புதல்வர் தந்தையையும் விஞ்சி காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோரையும் சாவேஸ், மொரேலஸ் அரசுகளையும் கடுமையாக விமர்சித்து எழுதியும் பேசியும் வருபவர். இதற்குமேலும் வெளிச்சம்போட்டு என்னத்தைச்சொல்ல எஸ்.வி.வி?
    1960 களில் அவரது முதல் நாவலின் பிரதிகளைத் தீக்கிரையாக்கி வெறியைத் தீர்த்துக் கொண்ட விந்தை மனிதர்கள் எவரேனும் இன்று இருந்தால் தலைகவிழக்கூடும்…என்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிவசப்படுதலில் இருக்கும் அர்த்த்தை லோசா இன்றைய அரசியல் நிலைபாட்டின் முலம் தகர்த்தெறிந்துவிடுகிறாரே என்ன செய்வது?
    இயக்கங்கள் மாபெரும் தவறுகள் இழைத்திருக்கலாம். இயக்கங்கள் திருத்தவும்படலாம். ஆனால்… வர்க்கங்களை?
    தோழமையுடன்
    நா.வே.அருள்

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவ்

    மிக்க நன்றி. இந்தப் பதிவிற்கு வருகை புரிந்த மற்றும் புரியவிருக்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. ஈர்க்கத்தாகதாக தலைப்பை மாற்றி வேறு போட்டிருப்பதாக மாதவ் சொன்னார். அது வேறு பொருளும் தருவதாகத் தோன்றியிருப்பது உண்மைதான். இலத்தீன் அமெரிக்காவிலிருந்து உலகக் குடிமகனாக உயர்ந்தவரது பயணக் கதை இது...

    அப்புறம், கவிஞர் நா வே அருள் நீண்ட எதிர்வினை ஆற்றியிருப்பது சிறப்பு. அவருக்கு பிரத்தியேக நன்றி. மனித மனம் விசித்திரமானது. எழுத்தாளர்களின் இதயங்களை அப்புறம் என்ன சொல்வது? லோசாவின் மொத்த ஆளுமையையும் தூக்கி எறிந்துவிட முடியாது என்பதே நான் சொல்ல வந்த விஷயம். அமைதிக்கான விருதை மக்கள் சீனத்தின் எதிர்ப்புரட்சியாளருக்குக் கொடுத்துவிட்டு அதைச் சரிகட்டத் தான் இலத்தீன் அமெரிக்கக் குரலுக்கு இந்த விருது என்று சொல்வோரும் உண்டு. அவரது இன்றைய அரசியலுக்கான அங்கீகாரம் தான் என்று புரிந்து கொள்வோரும் உண்டு. இதையெல்லாம் மீறி அவரது படைப்புலகம், அதன் கலக முழக்கம், அவரது எழுத்து மற்றும் வாசிப்பு தாகம் இதை அடையாளப்படுத்திக் கொள்வது எந்த வகையிலும் இடது சாரி சிந்தனையாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திவிடாது. கருத்துப் போராட்டங்களில் தவறான சித்தாந்தங்களே கண்டனத்திற்குரியவை. இருந்தாலும், அருளின் கருத்துக்களை, அதன் வேகத்தை, வாதங்களின் வீச்சை மதிக்கவே செய்கிறேன். விவாதக் களம் உருவாவது உண்மையில் ஆரோக்கியமானது.

    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!