உண்மையான எந்திரன்!

 

 

கவிதையோடும், காதலோடும் - எனவே களிப்போடும் கவலையோடும் தொடர்புடையதாக இருக்கிறது இந்த இதயம்.  எங்கேயோ தொலைத்துவிட்டேன், திருப்பிக் கொடு என்கிறான் காதலன்.  இதயம் போகுதே...என்று கரைகிறாள் காதலி.  கம்பரோ, "இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்" என்று  இதயங்கள் இடம் மாறிய கதையைச் சொல்கிறார்.  ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும் என்று சொல்லப்படும் ஒரு சின்னஞ்சிறிய உறுப்பை இலக்கியம் என்ன பாடு படுத்துகிறது.  உயிரின் இயக்கத்திற்காக அந்த இதயம் படும் பாடு கொஞ்ச நஞ்சமா.. 

மூளையின் செயல் பற்றிய விரிவான ஞானம் பெறுமுன், இதயத்தைத் தான் ஆராய்ச்சியாளர்கள் சிந்தனை பிறக்கும் இடமாக எண்ணியிருக்கக் கூடும்.  அதுதான் நமது பேச்சு வழக்கில் கூட, இன்னமும் நெஞ்சில் கைவைத்துச் சொல் என்று இடப்பக்கம் காட்டுவது, உள்ளம் - மனம் - எண்ணம் என்ற பதங்களை இதயத்தோடு பொருத்திப் புரிந்து கொள்வது எல்லாம் இருக்கிறது.

மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து  எஸ் வி வேணுகோபாலன்

முதலில், இதயம் இடப் பக்கம் இல்லை. நடுப் பாகத்தில் சற்று இடப்பக்கம் எட்டுகிற மாதிரி அமைந்திருக்கிறது.  நுரையீரலின் அன்பு அரவணைப்பில் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம் எனப்படும் இந்தச் சதைக் கோளம்.  இரத்த சுழற்சி இயக்ககத்தின் ஒரு மின் இயந்திரம் அது (எந்திரன் என்ற பெயரை உள்ளபடியே இதயத்திற்கே வைக்க வேண்டும்). உண்மைதான்.  மின் எந்திரமாக (மோட்டார்) இயங்குவதால் தான், இ.சி.ஜி போன்ற பரிசோதனைகளை நடத்தி இதயத்தின் இயக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது. 

உடலின் நல வாரியத் தலைவரான இந்த இதயம், நுரையீரலின் உதவியோடு ஆக்சிஜனையும், செரிமான உறுப்புகளின் ஏற்பாடு மூலம் சத்துக்களையும்  இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.  மேல் அறை (ஆரிக்கிள்) மூலம் பெறும் இரத்தத்தைக் கீழ் அறை மூலம் (வெண்டிரிக்கிள்) வெளியேற்றுவது என  இடமும் வலமுமாக  இந்த மொத்த ஏற்பாட்டுக்காக நான்கு அறை கொண்ட வீட்டைக் கட்டிக் கொண்டு வலுவான சுவர்களையும், வால்வுகளையும் வைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக நடத்தி வருகிறது. 

எப்போது, எங்கு தேவையோ அங்கே அந்தப் பகுதிக்கு அதிகம் இரத்தம் பாய வைக்கிறது இதயம்.  குளிக்கிற நேரத்தில், தோல் பகுதிக்கு.  சாப்பிட உட்கார்ந்தால் வயிற்றுப் பாகத்திற்கு. காலை நேரத்தில் சிறுநீரக இலாகாவிற்கு என தெளிவான அட்டவணை வைத்திருக்கிறது.  (நாம் அந்த நேர அட்டவணையை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்ளும் போது  அதற்குண்டான அவஸ்தையையும் ஏற்றுக் கொள்கிறது பாவம்! ).

தாயின் வயிற்றில் கருவாக உதித்த மாத்திரத்திலேயே இதயம் துடிக்கத் தொடங்கிவிடுகிறது.  மருத்துவரால் உள்ளே தோன்றியிருக்கும் உயிரின் துடிப்பை அழகாக அறிய முடியும்.  அந்தத் துடிப்பு உயிர் வாழும் காலம் வரையிலும் துடித்தபடி இருக்கிறது.  மருத்துவர் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்கிறபோது இதயத்தின் இயக்கம்  பற்றி 90 - 95 சதவீதம் அறிந்து கொண்டுவிட முடியுமாம். இப்படியான இடைவிடாத துடிப்பு, ஓய்வற்ற உழைப்பு என்று சொல்லிக் கொண்டாலும், மேலறை இயங்கும் போது கீழறை ஒரு சொடுக்கு போடும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் துளித் துளியாய்க் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு விடுகிறது.  அப்படியே கீழரை இயங்கும் போது மேலறை ஓய்வெடுத்துக் கொள்கிறது.  

இரத்த மண்டல சுழற்சிக்கான இரத்தக் குழாய்களின் பணியை இதயம் சரி பார்த்துக் கொள்கிறது.  எங்காவது சிறு சிறு அடைப்பு ஏற்பட்டால், வேறு குழாய்களை  உருவாக்கி இரத்த ஓட்டம் தடைபடாமல் இயங்க வைக்க  இயற்கையான மாற்றுப் பாதை வேலையை (Natural By pass) நமது உடலே செய்து கொள்கிறது.

இதயத்தின் சீரான இயக்கத்திற்கு மிக எளிய விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்

உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்த சமாளிப்பு இவை பற்றிய அக்கறை கொண்டால் போதும், இதயமே  நம்மைப் பார்த்து என் இதய தெய்வமே என்று கூப்பிட ஆரம்பித்து விடும். 

புரதம், மாவுப்பொருள், கொழுப்பு என எல்லா சத்துக்களையும் சரிவிகிதமாகக் கொண்ட உணவை இள வயதிலேயே பழக்கிக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.  இதில் எது அளவு மீறும் போதும், தேவையற்ற சிக்கல்களை பெற்றுக் கொள்கிறோம்.  அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு, நீண்ட நாளுக்காகத் தயார்ப்படுத்தப்படும் டின் உணவு, செரிமானத்திற்கு ஊறு செய்யும் அடுமனை (பேக்கரி) அயிட்டங்கள்...போன்றவை உறுதியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.  குறைக்கவாவது வேண்டும். நல்ல காய்கறிகள், பழவகைகள், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்.  பச்சைக் காய்கறிகள் மேலும் நன்மை பயக்கத் தக்கவை. 

உணவின் தன்மை மட்டுமல்ல, உணவுக்கான நேரத்தில் ஓர் ஒழுங்கிசைவும் முக்கியம்.  நேரம் தவறாமல் உண்பது, ஒரேயடியாகப் பிளந்து கட்டாமல் எளிய அளவுகளில் சீரான இடைவெளியில் பிரித்து உண்பது, உறக்கத்திற்குப் போகும்போது சாப்பிட உட்காராமல் அதற்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உண்பது..ஆகியவையும் முக்கியம். பெரிதாகிக் கொண்டு போகும் வயிறு, இதயம் பார்க்க வேண்டிய வேலையின் பரப்பளவையும் பெருக்குகிறது.  தொப்பையைப் பார்த்தால் எந்த இதயம் தான் நடுங்காது? ( காக்கிச் சட்டைக்கு  இதயம் இல்லை என்று ஏன் எழுதுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?).

அளவான தண்ணீர் உடலின் இயக்கத்திற்கு முக்கியம். தண்ணீர் தேவைக்கு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும்.  இதயத்தின் கோரிக்கை இது.

பள்ளிக்கூடத்தில் ஆரம்ப நிலையில் செய்யும் டிரில் போலவாவது, ஓர் எளிய உடற்பயிற்சி மிக மிக இன்றியமையாதது.  உட்கார்ந்து கொண்டே இருப்பவர் அல்லது படுத்துக் கொண்டே இருப்பவர் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற இதயம் எத்தனை சிரமங்களோடு (பம்பிங் ) வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணரவேண்டும்.  உடல் அயராத வண்ணம், நடைப் பயிற்சி அன்றாடம் எடுப்பது மிகவும் நல்லாது.   'வாகன யோகம்' என்று ராசி பலன் போட்டிருந்தாலும், முடிந்தவரை நடக்கப் பார்ப்பது நல்லது.  தொடர் மூளை உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அவ்வப்பொழுது இடைவேளை எடுத்துக் கொண்டு காலார அங்கே இங்கே நடப்பது அவசியம். 

உணர்ச்சிகளின் பிரதிபலிப்பை நமது எந்திரன் வெளிப்படுத்துபவர் என்பது உங்களுக்கே தெரியுமல்லவா.. மகிழ்ச்சித் துள்ளல், அச்சத்தின் பிடி...போன்ற உணர்ச்சிகளை அவற்றின் தன்மைக்கேற்ப - இசையின் தாள லயத்திற்கேற்ப எழுந்து பொங்கி நெளிந்து சரிந்து அடங்குகிற சங்கீத ஊற்றைப் போலவே, இதயத்தின் துடிப்புகளும் அமையப்பெறும்.  ஓடிக் கொண்டிருப்பவருக்கும், அதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவருக்கும் அப்போதே இ சி ஜி எடுத்துப் பார்த்தல் இது புரியும்.  எனவே தான், இ சி ஜி பரிசோதிக்கும் நுணுக்கம் அறிந்தவர்கள், நோயாளிகள் தம் எதிரே வந்து  அமர்ந்துவுடன் பரிசோதிப்பதில்லை.   சிறிது நேரம் பொறுத்துப் பரிசோதனை செய்து பார்க்கின்றனர். 

இரத்த அழுத்தம் மிகையாக அல்லது குறைவாக இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டால் அததற்குரிய மருத்துவ வழிகாட்டுதலை இடைவிடாது கடைப்பிடிக்க வேண்டும்.  அதை நினைத்துக் கொண்டே கவலையில் நாட்களை நகர்த்த வேண்டியதில்லை.  அதன் தன்மையை ஏற்றுக் கொண்டு அதனோடே  மகிழ்வான வாழ்க்கையை நாம் வாழ முடியும். 

இரத்த சோகை (அனீமியா)  என்பது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் போதுமான அளவிற்கு இல்லாது குறைந்துவிடுவதைக் குறிக்கும்.  அப்போது இரத்தம் நீர்த்துப் போயிருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.  ஒரு வேலையைச் செய்வதற்கு உடலின் ஒரு பாகத்திற்குச் செலுத்த வேண்டிய இரத்தம் ஒன்றரை பங்கு இரண்டு பங்கு கூடுதலாகத் தேவைப்படும் என்று பொருள்.  அதற்காக இதயம் இன்னும் அதிக பளுவோடு வேலை செய்யவேண்டும் என்று பொருள்.  எனவே தான் உடல் சோர்வு ஏற்படுவதும், வெவ்வேறு பாதிப்புகள் தோன்றுவதும், பிரச்சனைகள் மேலும் மோசமாவதும் நிகழ்கின்றன. 

இரத்த சோகை  உருவாக வறுமை, சத்தான உணவு எடுத்துக் கொள்ளாமை, சரிவிகித உணவு உண்ணாமை இவற்றோடு  உளச்சோர்வும் ஒரு காரணம். எலிகளுக்குத் தீனி போடும் பிரதமர்கள், வாடும் ஏழைகளுக்கு உணவு அளிக்காத செயற்கைப் பஞ்சத்தினாலும் போஷாக்கின்றி இரத்த சோகை உருவாகும். அதைத் தவிர்க்க வேண்டும்.  இரத்த சோகை நீங்க வாழ்விலும், சமூகத்திலும் அதற்குரிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தாக வேண்டும். 

இரத்தச் சுழற்சி இயக்கத்தின் போக்கில் அடைப்பு ஏற்படுவது பற்றி ஒரு குறிப்பை ஏற்கெனவே பார்த்தோம்.  மெதுவாக உருவாகிற சிறு அடைப்புகள் இயல்பாகவே சரிசெய்யப்பட்டுவிடும்.  அடைப்புக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு.  கூடுதல் கொழுப்பு அவற்றில் ஒன்று.  ஆனால், கொழுப்பை வைத்துத் தான் இதய நோய் வரும் என்று பல நிறுவனங்கள் அச்சத்தை பிரச்சாரம் செய்து, மக்களை மிரட்டுகின்றன.  எடுத்துக் காட்டிற்கு, எந்தத் தாவர எண்ணெயிலும் கொலஸ்டிரால்   எனப்படும் அந்த வகை கொழுப்பு கிடையாது.  எண்ணெய் பெயரை வைத்துத் தான் வர்த்தகமே நடக்கிறது.  எந்த எண்ணெயையும்  மிதமிஞ்சிய வெப்பத்தில் சூடாக்கினால் மட்டுமே, அதில் கரைந்திருக்கும் கொழுப்புத் துளிகள் உடைந்து வெளிப்பட்டுப் பிரச்சனைகளைத் தருகின்றன.   கூடுதல் கொழுப்பைத் தவிர்ப்பது அவசியமாகும்.

புகைப் பழக்கம் கூட அடைப்பை உருவாக்கும்.  தானே புகைத்தாலும் சரி, அடுத்தவர் புகைக்கும் போது அந்தப் புகையை பரோபகார உள்ளத்தோடோ, வேறு வழியின்றியோ சுவாசித்தாலும் சரி, அது இதயத்தை பாதிக்கும்.  படிப்படியாக விட்டு வெளியேறிவிடுவது நல்லது. ஆல்கஹாலும் அப்படித்தான்.  ஆல்கஹால் நேரடியாக இதயத் தசையை பாதிக்கிறது.  'இதயத்தைத் தொலைத்துவிட்டேன்...' என்று விரக்தியில் பாட்டிலைத் தொட்டால் நிஜமாகவே இதயத்தைத் தொலைத்த மாதிரிதான்.  புகையும், மதுவும் தங்கள் இதயத்துக்கு நெருக்கமானது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இதயத்துக்கு தீங்கானது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

உலகமய பண்பாடு இதயம் ஏற்க முடியாதது.  நான், என் விஷயம், எனது வாழ்க்கை, எனது இருப்பு...என்று கூட்டுக்குள் சுருங்குகிற வேலையை உலகமயம் ஊக்குவிக்கிறது.  அப்படியானவர்களுக்கு இதய பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.  ஒதுங்கிப் போகும் சிந்தனையை விட, சமூக வயமான எண்ணப் போக்கு இதயத்தை இதமாக்குகிறது என்கின்றனர் இதய வல்லுனர்கள்.  மன அழுத்தம், உளைச்சல் போன்றவை பொது வெளியில் கலந்து கூட்டாக முன்னேறும் உந்துதல் கொண்டவர்களாக மாறும் போது கரைந்து விடுகின்றன.  மூடி இருக்கும் கதவுகளுக்கு இடையே புதிய வழிகள் திறக்கின்றன. 

மலர்ச்சியான முகம், குளிர்ச்சியான பார்வை, விருப்பமாக சத்தான உணவு, அழுத்தமற்ற மனது, தோழமை நேசமிக்க வாழ்க்கை, சமூக ரீதியான பொறுப்புணர்வு, உற்சாக உடற்பயிற்சி என இதயத்தை சீராக பராமரித்துக் கொள்ள முடியும். 

கைப்பிடி அளவு தான் இதயம் என்பது, நமது இதயத்தின் சீரான இயக்கம் நமது கையில் தான் இருக்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.  வாழ்க்கையைக் காதலிப்பவர்கள், சமூகத்தை நேசிப்பவர்கள்  மிகச் சாதாரண விஷயங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே காதல் இதயத்தை இலகுவாகப் பார்த்துக் கொண்டுவிட முடியும்.  பிப்ரவரி 14 எப்போது வரும் என்று காத்திருக்காமல், இதய கீதத்தை எப்போதும் பாடிக் கொண்டிருக்க முடியும்.....

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. முத வட எனக்குத்தானா,இருங்க படிச்சுட்டு வர்றேன்

  பதிலளிநீக்கு
 2. காதல் சம்பந்தப்பட்ட கருத்துக்கலைக்கூட எந்திரனோடு ச்ம்பந்தப்படுத்தி சிறந்தஃ மார்க்கெட்டிங்க் மேனேஜர் பட்டம் பெற்றீர் சார்

  பதிலளிநீக்கு
 3. காதல் சம்பந்தப்பட்டது அல்ல. முழுவதும் படித்துவிட்டு சொல்லுங்கள். இது நண்பர் எஸ்.வி.வி அவர்கள் எழுதியது. தலைப்பும் அவருடையதே....

  பதிலளிநீக்கு
 4. நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவக்குறிப்பு இது >>>>

  அளவான தண்ணீர் உடலின் இயக்கத்திற்கு முக்கியம். தண்ணீர் தேவைக்கு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும். இதயத்தின் கோரிக்கை இது. >>>


  நன்றி சார்

  பதிலளிநீக்கு
 5. மருத்துவம்,பொறியியல் ஆகியவற்றை தமிழில் கற்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு எஸ்.வி.வியின் எழுத்து நடை. சரளமான மொழி.நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 6. தேவை படும் பகுதிக்கு இரத்தத்தை அதிகரிப்பது மூளையின் வேலை; இதயத்தின் வேலை இல்லை. "autonomic nervous system" எனப்படும் ஏற்பாடே இதற்கு காரணம்.

  இரத்த அடைப்புகளை இயற்கையாக byepass செய்ய இயலுமா? ஏனோ ஏற்றுகொள்ள முடியவில்லை. கண்டிப்பாக முடியுமா?

  பதிலளிநீக்கு
 7. எந்திரன் பற்றி ரஜினி ரசிகர்களை விட அதிகம் நினைப்பது எழுதுவது நீங்கள்தான் ...

  பதிலளிநீக்கு
 8. பயனுள்ள கட்டுரை. படிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்படியான எழுத்து நடை.
  தொடர்ந்து இதைப் போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 9. அன்பு மாதவ்

  வருகை புரிந்த அனைவருக்கும், வாசித்து வியந்தவர்களுக்கும், கருத்து சொல்லியிருப்பவர்களுக்கும் உளப்பூர்வமான நன்றி.

  உடல் நலக் கட்டுரைகளை, ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன் அவர்களோடு நேரடியாக உரையாடிப் பெறும் குறிப்புகளில் இருந்து எழுதிவருகிறேன். நோய்களைச் சொல்லி மக்களை மிரட்டுவதற்கு மாறாக வாழ்க்கையில் சுவாரசியத்தையும், நம்பிக்கையையும், உண்மையை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தையும் பேசும் இந்தக் கட்டுரைகள் உடல் நலம், உளநலம் இரண்டையும் பேசுகின்றன. சமூக விஷயங்கள் மீதான விமர்சனங்களையும் உடன் சேர்த்து வழங்குகின்றன.
  இந்த எளிய மொழிநடையை வாழ்த்தியிருக்கும் காஸ்யபன் மற்றும் நரேன் இருவருக்கும் சிறப்பு நன்றி.

  கோகுல் ராஜேஷ் பாராட்டுக்குரிய எதிர்வினையை ஆற்றி இருக்கிறார். அவரது கேள்விகள் இரண்டுமே நியாயமானவை.

  முதலாவது, உடலின் இயக்கத்தை ஒருங்கிணைப்பது, வழிநடத்துவது, இயக்குவது எல்லாமே மூளைதான். அப்படி பார்த்தால் வேறு எந்த உறுப்பின் வேலையையும் நாம் அதனதன் பொறுப்பில் வைத்துப் பார்க்க இயலாது போய்விடும். இரத்தம் எங்கே எப்போது பாயவேண்டும் என்று தீர்மானிப்பது யார் என்று கேட்காமல், அனுப்பி வைப்பது யார் என்று பார்க்கலாம். அதில் இதயத்தின் பங்கு முக்கியமானது.

  இரண்டாவது, இயற்கையே பை பாஸ் செய்ய முடியுமா என்ற ஐயம். உடல் அப்படி மாற்று இரத்தக் குழாய்களை தேவைப்படும்போதெல்லாம் ஏற்படுத்திக் கொள்வதால் தான் பிளாக் இருக்கும் பலர் அதன் பாதிப்பின்றி இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தீவிரமான பிரச்சனை பல காரணங்களால் ஏற்படுவது. அதற்குரிய சிகிச்சை தேவைப்படும். இதய நோய் வைத்து மிரட்டும் பல மருத்துவ மனைகள் சமூக ரீதியான காரணங்கள், மன அழுத்தத்திற்குக் காரணமாக உள்ள புறக் காரணிகள் பற்றியெல்லாம் பேசுவதில்லை. பொதுவாக பெரும்பான்மை இயற்கை மரணங்கள், காரணம் தவிர்க்கப் பட நினைக்கும் மரணங்கள் மாரடைப்பு என்று தான் பதிவாகின்றன. முதுமையின் காரணமாக ஏற்படுவன உள்பட. அதையெல்லாம் சொல்லாமல் ஆண்டுதோறும் 24 லட்சம் பேர் இதய நோயால் மரணம் அடைகிறார்கள் என்று பத்திரிகை செய்தி கொடுத்தால் வாசிப்பவர்கள் என்னாவார்கள்.....

  உடல் நலம் பேணுவது ஆரோக்கியமான சிந்தனையின் அடிப்படியில் எழ வேண்டுமே தவிர அச்சத்தின் மேடையில் அல்ல என்பதே இப்போது எழுதப்பட்டிருப்பது உள்ளிட்டு இத்தகைய கட்டுரைகளின் நோக்கம். இவை வரவேற்கப்படுவது மனத்திற்கு இதமளிக்கிறது.

  நன்றி மாதவ்

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!