அந்த 44 நாட்கள் - இரண்டாம் பகுதி

(இத்தொடரின் முதல் பகுதி இங்கே)

சப் இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டபிள்களும் தலைமையலுவலகத்தில் வந்திறங்கினர். மக்கள் அவர்களைப் பார்த்து அசந்துவிடவில்லை. தாங்கள் வங்கியின் சேர்மனோடு பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று சேர்மனோடு பேசினார். கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தார். 'ஐந்து பேர் மட்டும் பேச வரலாம்' என்றார்.  'நீங்க போங்க...நீங்க போங்க' என்று அவர்களே சிலரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். இடைகாலில் இருந்து வந்திருந்த ஒரு முஸ்லிம் பெரியவரும் அவர்களோடு பேச்சு வார்த்தைக்குச் சென்றார். சப்-இன்ஸ்பெக்டரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். நாங்கள் சேர்மன் கேபின் ஜன்னல் அருகில் நின்று கொண்டிருந்தோம். அமைதியாகச் சென்று கொண்டிருந்த பேச்சு வார்த்தையில் அந்த முஸ்லிம் பெரியவரின் குரல் திடுமென ஓங்கி ஒலித்தது. 'நீங்க சொல்ற மாதிரி தப்பானவங்க இல்ல அவங்க. ஒவ்வொருத்தர்ட்டயும் எவ்வளவு அன்பா, மரியாதையா பழகுவாங்க என்பது எங்களுக்குத்தான் தெரியும்' என்றார். சேர்மன் பேசாமல் இருந்தார்.

'அவங்க கோரிக்கையை செஞ்சு கொடுக்குற பவர் இவர்ட்ட இல்லன்னு சொல்றார்...என்ன செய்ய...' என்று சப்-இன்ஸ்பெக்டர் இடையிடையே சொல்லிக் கொண்டிருந்தார். 'இவராலச் செய்ய முடியலன்னா...இவர் எதுக்கு இங்க இருக்கார்" என்று வத்றாப்பில இருந்து ஒருவர் கேட்ட கேள்வி பாமரத்தனமாக இருக்கவில்லை. 'பேசிக்கிட்டு இருக்கோம்...இவர் என்னடான்னா...மோட்டு வளையப் பாத்துட்டு இருக்கார்..' "ஒரு அரை மணி நேரம் பேசுறதுக்குள்ள பொது மனுசங்க எங்கக் கிட்டயே இப்படி மாத்தி மாத்தி பேசுறாரே...இவர் அந்த ஸ்டாஃப்களை என்ன பாடு படுத்தியிருப்பார்' என்று அவ்வப்போது அந்த கிராமத்து எளிய மனிதர்கள் பேசியது வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த தோழர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரும் வெளியே வந்தார்கள். 'அந்த ஆள் ஒண்ணும் சரியான ஆளாத் தெரியல... நீங்க விடாதீங்க' என்று சொல்லிப் புறப்பட்டர்கள்.

நாங்கள் சங்க அலுவலகத்தில் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டோம். பணியில் சேர்ந்து நிரந்தரம் ஆகியிராத அலுவலர்கள் பதினைந்து பேர் போல வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக ஒரு தகவலை சங்கத்தலைவர் பரமசிவம் சொன்னார். அவருக்கு இப்படியான தகவல்கள் எப்படியோ தெரிந்துவிடுவதாய் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடச் சொல்ல வேண்டாம் என்பது சங்கத்திற்குள்ளே ஒரு கருத்தாக இருந்து வந்தது. இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, அவர்களைப் போகச் சொல்லி விடலாம் என்று பேசப்பட்டது. பார்போம், என்ன செய்து விடுவார் இந்தச் சேர்மன் என்றும் ஆவேசக் குரல்கள் எழுந்தன. எது குறித்தும் ஒரு தெளிவான கருத்தும், பார்வையும், அணுகுமுறையும் யாரிடமும் இருக்கவில்லை.

வேலைநிறுத்தம் என்கிற மிகப் பெரிய ஆயுதத்தை கையிலெடுக்கும் போது, அனுபவமிக்க தலைவர்களையோ, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகத் தலைவர்களையோ கலந்து ஆலோசித்திருக்கவில்லை. அவர்களைக் கேட்டிருந்தால் காலவ்ரையறையற்ற வேலைநிறுத்தம் வேண்டாம் என்றே ஆலோசனை தந்திருப்பார்கள் என்பதை சோமு போன்ற தோழர்கள் சொன்னார்கள். எல்லாம் நதியின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைப் போல இருந்தார்கள். தலைமைக்குள் ஒருவரையொருவர் நம்ப முடியாமல், சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தார்கள். உறுப்பினர்களின் ஒற்றுமையின் மீதுதான் போராட்டம் உறுதியாக இருந்தது. அடுத்தக் கட்டமாக திருநெல்வேலியில் நடந்த வங்கி நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முன்  தர்ணா நடத்துவது என முடிவெடுத்தோம்.

ஒரு மாதத்திற்கும் மேலாகி இருந்தது. விசாகா லாட்ஜுக்கு பணம் கொடுக்க முடியாமல் நாங்கள் தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் தங்கிக் கொண்டோம். சவரம் செய்யப்படாத முகங்களோடு தோழர்கள் காட்சியளித்தார்கள். எல்லா போராட்ட மையங்களிலும் நிலைமை அப்படித்தான் இருந்தது. தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தோழர்களை அடிக்கடி ஒருவரையொருவர் சந்திக்க வைத்தன. ஒன்றாய் இருப்பது நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் உருவாக்கி விடுகிறது. நாட்கள் ஆக, நாட்கள் ஆக தோழர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி நிர்வாகக்குழுக் கூட்டத்திலாவது, இயக்குனர்கள் நிலைமையை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒப்புக் கொள்வார்கள் என நம்பினார்கள். தர்ணா நடத்திகொண்டு இருந்த போது  சங்கத்தலைவர்கள், இயக்குனர்கள் குழுவை சந்தித்துப் பேசச் சென்றார்கள். மொத்த இயக்குனர் குழுவும் சேர்மன பேசுவதையும், செய்வதையும்  ஆமோதித்துவிட்டு கார்களில் நகர்ந்தார்கள். பாலாஜி பாலகிருஷ்ணன் கார் முன்னால் பாய்ந்து மண்ணள்ளிப் போட்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டது தாங்க முடியாததாக இருந்தது. அதிகாரத்திலிருந்தவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தக் காட்சியைக் கடந்து சென்றனர்.

அடுத்த சில தினங்களில், புதிதாக வேலைக்குச் சேர்ந்து பணி நிரந்தரம் ஆகாத பதினான்கு அலுவலர்களை, வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டததற்காக நிர்வாகம் பணி நீக்கம் செய்து விட்டிருந்தது. நிர்வாகம் தாக்குதல் நடத்தத் துவங்கிவிட்டது என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. தோழர்களிடையே கோபமும் ஏற்பட்டது. பயமும் ஏற்பட்டது. போராட்டத்தின் உறுதியை நிர்வாகம் குலைக்க முயற்சிக்கிற போதே,  நிர்வாகமும் பயந்து போயிருக்கிறது என்பதும் தெரிந்தது. எச்சரிக்கையாகவும், அதே நேரம்  தீவீரமாகவும் நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியிருந்தது.  போராட்டத்தை அடுத்தக் கட்டக்த்துக்கு நகர்த்த வேஎண்டும் என செயற்குழுவில் விடிய விடிய விவாதித்தோம்.. சங்க செயற்குழுவின் முடிவுகள் நிர்வாகத்துக்கு முன்னதாகவே போய்விடுகின்றன என கிருஷ்ணகுமாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் சோமு.

தலைமையலுவலகத்தின் முன்பு மறியலுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் தலைமையலுவலகத்தின் முன்பு கோஷங்களிட்டு நிறைந்திருந்தார்கள். ஏராளமாக காவல்துறையினரும் காணப்பட்டார்கள். பொது மேலாளர் வந்த காரை மொத்தமாய் சென்று மறிக்கவும் பெரும் கூச்சல் எழும்பியது. காவல்துறையினர் இடையில் புகுந்து தோழர்களை அப்புறப்படுத்தினார்கள். அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தார்கள். போலீஸ் சூழ தலைமையலுவலகம் முன்பு உட்கார்ந்திருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர். எஸ்.ஏ.பெருமாள் அப்போது அங்கு வந்து எங்களை வாழ்த்திப் பேசினார். அவரது பேச்சில் அனல் தெறித்தது. 'எங்கள் தோழர்களுக்கு எதாவது நேர்ந்தால், நாங்கள் இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.' என அறிவித்த போது பெரும் ஆரவாரம் எழுந்தது. நாங்கள் ஊர்வலமாய் சாத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டோம். போலீஸ் ஸ்டேஷன் வளாகம் கொள்ளாமல், சாலை வரை நிரம்பி அங்கேயே உட்கார்ந்திருந்தோம். வேன் இல்லை, வரும் என்றார்கள். திருச்சிக்குக் கொண்டு செல்லப் போவதாய்ச் சொன்னார்கள். எதிரில் இருந்த தபால் அலுவலகத்தில் கார்டு வாங்கி 'எங்களை கைது செய்திருக்கிறார்கள். விரைவில் திரும்பி வருவோம்' என மனைவிக்கும், பெற்றோர்களுக்கும் கடிதம் எழுதிய சிலரை பார்க்க முடிந்தது.

மதியம் கடந்து, சாயங்காலம் ஆகியது. அங்கேயே தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சாத்தூர் நகரமே எங்களை பார்த்து நின்றது. தாசில்தார் முன்பு பேச்சு வார்த்தை நடக்க இருப்பதாக காவல்துறையினர் சொன்னார்கள். இந்தப் பிரச்சினையை இன்றோடு முடிவுக்கு கொண்டு வரப் போவதாகச் சொன்னார்கள். தோழர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். இரவு ஏழு மணிக்கு மேல் சேர்மன் காரில் வந்தார். சலசலப்பு ஏற்பட்டது. உள்ளே சென்றவர் ஒரு கல்லை கையில் வைத்துக்கொண்டு என் மீது கூட்டத்திலிருந்து எறியப்பட்டது என்று தாசில்தாரிடம் காண்பித்திருக்கிறார். பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தலைவர்கள் 'இது அவருடைய வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லாக இருக்க வேண்டும். எங்கள் தோழர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்' என்று மறுத்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நபார்டுக்கும், நிதியமைச்சகத்துக்கும் கடிதம் எழுதுவதாகச் சொன்னதையே சொல்லியிருக்கிறது நிர்வாகம். வெளியே நின்றிருந்த ஒரு கான்ஸ்டபிள் 'இப்படி ஒரு பைத்தியக்காரனை எங்கும் பாத்தது இல்லீங்க' என்று எங்களிடம் சொல்லி சிரித்துக் கொண்டார். பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் சேர்மன் காரில் ஏறியபோது காவல் நிலையம் என்று பார்க்காமல் அனைவரும் 'சேர்மன், ஓழிக...சேர்மன் ஒழிக...' என பெருஞ்சத்தத்தோடு எழுப்பிய கோஷத்தில் எல்லோருக்குள்ளும் சிலிர்ப்பு ஏற்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு மேல் அனைவரின் பேரெழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவித்தார்கள்.

விடிய விடிய கிருஷ்ணகுமாரோடு, காமராஜோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு விடிகாலை நான்கரை மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டேன். காற்றின் பரவசம் எதுவும் இருக்கவில்லை. கலக்கமாய் இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெளிவாக எந்தத் திட்டமும் இருக்கவில்லை. கோபம் மட்டும் இருந்தது. இது ஆபத்தானது. பணிநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.  பலசரக்குக் கடைகளில் கடன்கள் ஏறிக்கொண்டு போக அன்றாடம் செலவுக்கும் கஷ்டப்படும் சூழலில் பலர் இருந்தார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு என்னும் கேள்வி மெல்ல மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. நிர்வாகத்தின் கோரப்பல்லிடையில் எச்சில் ஒழுகிக் கொண்டு இருந்தது. அடுத்த சில நாட்களில் தூத்துக்குடியில் உள்ள ஒரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் மூலமாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு சங்கத்தலைவர் பரமசிவம் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டோம். அவர் எங்கள் சங்கத்தோழர்களை விட ஐ.என்.டி.யூ.சி யூனியன் மக்களோடு நெருக்கமாய் இருந்தார். கிருஷ்ணகுமார், சோமு, காமராஜ், நான் இன்னும் சில தோழர்களை கொக்கிகள் என்று அடைமொழி  கொடுத்து பேச ஆரம்பித்திருந்தார்.

சாத்தூர் மையத்தில் நாங்கள் இல்லாவிட்டாலும் தூத்துக்குடிக்கு செய்திகள் வந்து கொண்டிருந்தன. நிர்வாகம் சில கோரிக்கைகளை நிறைவேற்றித்தர ஒப்புக் கொண்டிருப்பதாய் பரமசிவம் பேச ஆரம்பித்திருக்கிறார். யாரிடம் சொல்லப்பட்டது என்பதற்கு எந்த பதிலும் சரியாக இல்லை. 'நல்லது நடந்தால் சரிதானே..எப்படி நடந்தது என்பதெல்லாம் தேவையா' என்று ஒருவித முரட்டுத்தனமான பதிலே அவரிடம் இருந்து வர ஆரம்பித்தது. இந்த தகவல்கள் தோழர்களை அசைக்க ஆரம்பித்தன. எதோ ஒன்று நடந்து முதலில் உள்ளே செல்வோம் என்கிற ஒரு பொது மனநிலையை தருவிக்கச் செய்தது.  இரண்டு சங்கங்களின் கூட்டுச் செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்பது என்று தீர்மானித்தோம். 1988 அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடியில் இருந்து நானும், சோமுவும், கண்ணனும் காலையிலேயே புறப்பட்டுச் சென்றோம். காலவரையரையற்ற வேலை நிறுத்தம் நடக்க ஆரம்பித்து அன்றோடு நாற்பத்து இரண்டு நாட்கள் முடிந்து நாற்பத்து மூன்றாம் நாள் துவங்கியிருந்தது.

”ஊதிய முரண்பாடு, மெஸஞ்சர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும், வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரையும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் வேலைநிறுத்தத்தை தொடர வேண்டும்' என்று கண்ணன் ஆக்ரோஷமாக பஸ்ஸில் சொல்லிக் கொண்டு வந்தார். சோமு அமைதியாக இருந்தார். கண்ணன் விடவில்லை. ”என்ன அமைதியா இருக்கீங்க...செயற்குழுவில் என்ன முடிவெடுக்கப் போறீங்க” என்று கேட்டுக் கொண்டே வந்தார். 'அதெப்படி....எதுவுமில்லாமலா போராட்டத்தை வாபஸ் வாங்குவோம்?' என்று பட்டும் படாமல்  சோமு சொன்னார். 'தலைவர்களை நம்ப முடியாது... நீங்க பாட்டுக்கு எதாவது முடிவெடுப்பீங்க... பிறகு காலத்தின் கட்டாயம், அது இது என்று எதாவது சமாளிப்பீங்க' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே கண்ணன் இருந்தார்.

(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //... இன்னும் எத்தனை நாளைக்கு என்னும் கேள்வி மெல்ல மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. நிர்வாகத்தின் கோரப்பல்லிடையில் எச்சில் ஒழுகிக் கொண்டு இருந்தது...//

    Porattaththin vali niraintha pathivu...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!