அந்த 44 நாட்கள் - மூன்றாம் பகுதி

வைப்பாற்றுப் பாலத்தைத் தாண்டி, சாத்தூர் கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி சங்க அலுவலகத்திற்குச் சென்றோம். கண்ணனை முன்னே நடக்க விட்டு ”என்ன சோமு! அமைதியா இருக்கீங்க”  என்றேன். ”பரமசிவமும், இன்னும் நமது சங்க தோழர்கள் சிலரும் ஐ.என்.டி.யூ.சி தலைவர்களோடு நெருக்கமாயிருக்காங்க. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மூலமாகத்தான் இந்த பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு” என்று சொன்னார். சங்க அலுவலகத்தில் சில தோழர்கள் மட்டுமே இருந்தனர். ”ஸ்ரீராம் லாட்ஜில் செயற்குழுக்கூட்டம். கிருஷ்ணகுமார் போயிருக்கார்” என்று தகவல் சொன்னார்கள். ஸ்ரீராம் லாட்ஜுக்குச் சென்றோம். பிலால் கடையிலிருந்து ”என்ன மாமா, எப்ப வந்தீங்க” என்று குரல் வேகமாக வந்தது. சாத்தூர் அந்தக் காலை பதினொரு மணி வேலையின் பரபரப்போடு இருந்தது. எத்தனை முறை இதே தெரு வழியாக அலைந்து திரிந்திருக்கிறோம். இந்தச் சாலையை எல்லாக் கணங்களிலும் பார்த்திருக்கிறோன். கடைகள் பூட்டப்பட்ட நடு இரவுகளில் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள் போல நான், கிருஷ்ணகுமார், காமராஜ் சிகரெட் பிடித்துக் கொண்டு சங்கம், நிர்வாகம், குடும்பம், காதல், சினிமா, இலக்கியம் எனப் பேசிப் பேசி கடந்திருக்கிறோம். வேலைக்குச் சேர்ந்து ஐந்தாண்டுகள் ஆகப் போகின்றன. புதுப்புது மனிதர்களோடு, புதுப்புது சிந்தனைகளோடு உலவித் திரிந்த காலங்கள் எல்லாம்.

கிருஷ்ணகுமாரும், பரமசிவமும், சோலைமாணிக்கமும் நின்றிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் சிதம்பரம் டீக்குடித்துக் கொண்டு இருந்தார். அங்கங்கே தோழர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். சிதம்பரம் அருகில் சென்று 'என்னண்ணே... எப்படியிருக்கீங்க' என்றேன். ”இருக்கேம்ப்பா” என்றவரிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. பேசிக்கொண்டு இருக்கும் போதே ”இதுக்கு மேல இழுக்க முடியாதுப்பா... ஸ்டிரைக்கை ஒரு மாதிரி முடிச்சிர வேண்டியதுதான்” என்றார். வித்தியாசமாகப் பட்டது. லாட்ஜுக்குச் சென்றோம். இரண்டு சங்கங்களின் சப் கமிட்டி முதலில் பேசி ஒரு முடிவெடுத்து, பிறகு இரண்டு சங்கங்களின் செயற்குழுவில் உட்கார்ந்து பேசலாம் என முடிவு செய்யப்பட்டது. எம்ப்ளாயிஸ் அசோஷியேஷன் சார்பில் பரமசிவம், கிருஷ்ணகுமார், கணேசன், சோமு, ராதாகிருஷ்ணனும், எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் பரிமளச்செல்வம், சிதம்பரம், மாரியப்பன், சண்முகநாதன், கிருஷ்ணன், என்.டி.கோமதிநாயகம் லாட்ஜின் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். நானும், கண்ணனும், காமராஜும், இன்னும் சிலரும்  வெளியே நின்று பேசிக் கொண்டு இருந்தோம்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல விஷயத்தைக் கேள்விப்பட்டு வெளியூரிலிருந்தெல்லாம் தோழர்கள் சாத்தூருக்கு வந்த வண்ணம் இருந்தனர். மதியம் இரண்டு மணிக்குள்ளாக இருநூற்றுக்கும் மேலாக தோழர்கள் சாத்தூர் தெருக்களில் நடமாடிக் கொண்டு இருந்தார்கள்.

லாட்ஜுக்குள் சென்றுவிட்டு வந்த கண்ணன் 'கவுத்திருவாங்க போலுக்கு' என்று சொல்லிக் கொண்டே வந்தார். அகஸ்டினிடம் போய் எதையோச் சொல்ல அவர் என்னிடம் வந்து “என்ன நடக்குது உள்ளே" என்று கண்கள் சிவக்க கேட்டார். நான் ”ஒண்ணும் தெரியலயே” என்றேன். ”டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆபிசர்களை திராட்டுல விடப் போறீங்களா” என்றார். ”இல்லயே” என்றேன்.  “உள்ளே அப்பிடித்தான் பேசுறாங்களாம்" என்றார்.

நான் கண்ணனை அழைத்தேன். ”என்ன கண்ணன் ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லி எதாவது பிரச்சினையை உண்டு பண்ணிராதீங்க. அதெப்படி டிஸ்மிஸ் ஆனவங்களை விட்டுட்டு நாம் வேலைக்குப் போவோம்?” என்று கோபப்பட்டேன். ”பாவம். நீங்க குழந்தை'” சொல்லிவிட்டு ”நம்ம தூத்துக்குடிக்காரங்களை சாத்தூருக்கு வரச் சொல்லி போன் பண்ணப் போறேன்” என்று வேகமாக சென்றுவிட்டார்.

மெல்ல மெல்ல வெளியே சூழலின் தன்மை மாறிக் கொண்டு இருந்தது. லாட்ஜுக்குள் சென்றேன். என்னை ஜன்னல் வழியாகப் பார்த்து சோமு வெளியே வந்தார். ”என்ன நடக்குது உள்ளே... வெளியே ஒரு மாதிரி பேசுறாங்க” என்றேன். "என்ன பேசுறாங்க" என்றார்.  "டிஸ்மிஸ் ஆன ஆபிசர்களைப் பத்தி என்ன முடிவு?'”கேட்டேன். "அதுதான் பிரச்சினை. சேர்மன் ஐ.ஒ.பிக்குக் கடிதம் எழுதி நல்ல முடிவெடுப்பாராம்.. அதுவரைக்கும் காத்திருக்கணுமாம்.' என்றார். 'அதெப்படி அவரை நம்புறது... மத்த கோரிக்கைகள்?' என்றேன்  "ஊதிய முரண்பாடு சாதகமா முடிஞ்சிரும். மெஸஞ்சர்  பிரமோஷன் கஷ்டம் என்றுதான் நெனைக்கிறேன். அடுத்த போர்டுல வச்சு முடிவெடுப்பாங்களாம்'. என்றார்.  "இதுக்கு நாம எப்படி ஒத்துக்க முடியும்?' என்றேன். "ஒத்துக்கலன்னா அவங்க போயி செட்டில்மெண்ட் போட தயாரான மாதிரித் தெரியுது". எனக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தோன்றவில்லை. "கிருஷ்ணகுமார் என்ன சொல்றார்?' என்றேன். "என்ன செய்ய முடியும் அவரால.  பேசிப் பார்க்கிறார்.  ஒண்ணு புரிஞ்சிக்க.  உள்ளே நாம மைனாரிட்டி. நம்ம சங்கத்துல இருக்குற பரமசிவமும், கணேசனும் இப்ப ஐ.என்.டி.யூ.சி யூனியன் பக்கம்!” என்று சொல்லி என் கையை அழுத்திப் பிடித்துவிட்டுச் சென்றார். அவர் கைகள் நடுங்கியதா, என் கைகள் நடுங்கியதா என்று தெரியவில்லை.

கேள்விப்பட்டதும் காமராஜ் கடுமையாகிப் போனான். ”எப்படியும் பேசி முடிச்சிட்டு செயற்குழுக் கூட்டம் கூட்டுவாங்கள்ள அப்ப வச்சிக்கலாம்” என்றான்.  நேரம் ஆக, ஆக பல இடங்களிலிருந்தும் தோழர்களின் வருகை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நான்கு மணிக்கு மேல் சப்கமிட்டி விவாதங்கள் முடிந்தது. கிருஷ்ணகுமார் முகம் என்னவோ போலிருந்தது. தோழர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ”எந்த பாதிப்பும் இல்லாமல் போராட்டம் முடிவுக்கு வரும் கவலைப்படாதீர்கள்'” என்று சொல்லிக்கொண்டு இருந்தார். இரண்டு சங்கங்களின் செயற்குழுக்களும் தலைமையலுவலகத்தின் முன்புறம் நடக்கும் என்றும் அதற்குப் பிறகு நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் பரமசிவம் அறிவித்தார். தோழர்கள் அனைவரையும் பெருமாள் கோவில் மண்டபத்தில் இருக்குமாறும், பேச்சுவார்த்தையின் விபரங்களை வந்து தெரிவிப்பதாகவும் கிருஷ்ணகுமார் சொன்னார். நானும், காமராஜும் அவனது லூனா வண்டியில் தலைமையலுவலகம் சென்றோம்.

இரண்டு சங்கங்களின் சார்பிலும் முப்பது பேர் கூடியிருந்த அந்த செயற்குழுவில் கனத்த அமைதி நிலவியது. நிர்வாகம் எந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறது என்பதை பரமசிவம் தெரிவித்தார். ஏற்கனவே சோமு என்னிடம் பேசியதுதான்.  “டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களை திரும்பவும் உள்ளே கொண்டு வரும்' என்பதற்கு எப்படி இந்த நிர்வாகத்தை நம்புவது” என நான் கேட்டேன். "நம்பித்தான் ஆக வேண்டும். டிஸ்மிஸ் செய்வது என்பது போர்டில் எடுக்கப்பட்ட முடிவு. அதில் சேர்மன் மட்டும் எப்படி தனியாக முடிவெடுக்க முடியும்?”  என்றார் பரமசிவம். எல்லோரிடமும் கருத்து கேட்கப்பட்டது. எங்கள் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகுமார், சோலைமாணிக்கம், சங்கரலிங்கம், சோமு, நான், காமராஜ் உட்பட பனிரெண்டு பேர்கள் மட்டும் "நாம் வேலைக்குத் திரும்பும்போது நம்மோடு டிஸ்மிஸ் ஆனவர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும்" என வலியுறுத்தினோம். பரமசிவமோ "அவர்கள் நிச்சயம் வேலைக்கு வருவார்கள். ஒரு வாரம் மட்டும் காலதாமதமாகும். என்னை நம்புங்கள்" என்றார். அமைதிதான் நிலவியது.

"வாருங்கள். சேர்மனோடு பேசிப் பார்ப்போம்”  என்று பேச்சுவார்த்தைக்கு பரமசிவம் எழுந்தார். கிருஷ்ணகுமாரும் உற்சாகமற்றுச் சென்றார். எப்பேர்ப்பட்ட ஆளுமை கொண்ட ஆகிருதி அவர். எவ்வளவு பெரிய கூட்டத்தையும் தன் அற்புத பேச்சாற்றலால் உறையவும், உருகவும் வைக்கிற கிருஷ்ணகுமார் பேசுவதற்கு எதுவுமில்லாமல் நின்றது பெரும் அவலமாயிருந்தது. மொத்தம் நான்கைந்து பேர் போல வங்கிச் சேர்மனின் கேபினுக்குள் சென்றார்கள். மற்ற தோழர்கள் தலைமையலுவலகத்தின் வெளியே வந்து காத்திருந்தோம்.

ஒருமணி நேரம் கழித்து உள்ளேயிருந்து வெளியே வந்தவர்களின் கையில் ஒப்பந்த நகல் இருந்தது. நானும், காமராஜும் கிருஷ்ணகுமார் அருகில் சென்றோம். முகம் வெளுத்துப் போயிருந்த அவர் உதட்டைப் பிதுக்கினார். "யாரை கேட்டு கையெழுத்துப் போட்டீங்க... நீங்க கையெழுத்துப் போடாம வெளியே வந்திருக்க வேண்டியதுதானே" என ஆவேசத்தோடு கத்தினான். "காமராஜ்.. நிதானமாப் பேசு. நா மட்டும் வெளியே வந்து...?” என்றார். "இதோ நாங்க இருக்கோம்... நம்ம மக்கள் இருக்காங்க..." என கைகளை அகல விரித்து விசும்பினான். கிருஷ்ணகுமார் பதற்றப்படாமல் அவன் தோளில் கைவைத்து ஆசுவாசப்படுத்தினார். அவர் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். பரமசிவம், கணேசன், சிதம்பரம், எல்லோரும் முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். ”வாங்க... பெருமாள் கோவில் மண்டபத்துக்கு போவோம்?” என்றார் கிருஷ்ணகுமார். எதையோ இழந்த மாதிரி உணர்வு அழுத்தியது. சோலைமாணிக்கம் அவருடன் நடந்துகொண்டு இருந்தார்.

“கொஞ்ச நேரம் எங்காவது உட்கார்ந்துவிட்டுப் போவமா?” என்றார் சோமு. பைபாஸில் நடந்து வைப்பாற்றங்கரையோரம் போய் உட்கார்ந்து கொண்டோம். சூரியன் மறைந்து கொண்டிருந்த காட்சியை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். "கிருஷ்ணகுமார் கையெழுத்துப் போடாமல் வெளியே வந்து நாம் போராட்டத்தை தொடர்ந்திருந்தால் என்ன?” என்றேன். "ஒரு போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிக்கும்போது அது உடைந்தால் பெருத்த இழப்புக்கள் ஏற்படும். நாளைக்கே ஐம்பதுக்கு மேற்பட்ட கிளைகள் திறந்துவிடும். நம்மோடு ஒரு நூறு கிளையின் தோழர்கள் இருந்தாலும் மெல்ல மெல்ல வீரியம் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நிர்வாகம் மட்டுமே நமக்கு எதிராக இருந்தது. நாளை முதல் நம்மோடு இருந்தவர்களும் எதிரியாவார்கள். இதையெல்லாம் வேலைநிறுத்தத்திற்கு முன்பே நாம் யோசித்திருக்கணும். எவ்வளவு தூரம் போராட்டத்தை இவர்களை நம்பி கொண்டு செல்வது என்பது வரை திட்டமிட்டு இருக்கணும். இருக்கிற மாதிரி இருக்கிற இந்த ஒற்றுமை இப்போது குலைந்தால் காலாகாலத்துக்கும் நாம் எந்திரிக்க முடியாமல் அடி விழும்” என்றார். அந்த புதிய ஆபிசர்களுக்கும், இந்தக் கோரிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எதற்காக போராடினார்கள்?  எதற்காக டிஸ்மிஸ் ஆனார்கள்? இன்று அவர்களை மட்டும் வெளியே விட்டு நாம் எப்படி வேலைக்குச் செல்வது? எத்தனை கனவுகளோடு அந்த ஆபிசர்களின் குடும்பம் இருந்திருக்கும்? யோசித்ததையெல்லாம் ஒரு பைத்தியம் போல முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். சோமு எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். மெல்ல இருள் சூழ ஆரம்பித்தது. "வாங்க போவோம்" என்று எழுந்தார்.

பெருமாள் கோவில் மண்டபத்தில் கொந்தளிப்பு மிக்க ஒரு அமைதி நிலவிக் கொண்டு இருந்தது. மண்டபத்துக்கு வெளியேவும் ஏராளமான தோழர்கள் நின்றிருந்தார்கள். புகை நடுவே உருவங்களாக இருந்த காட்சியாக புலப்பட்டது. ஒரு ஜன்னலோரம் சென்று தலையெட்டிப் பார்த்தேன். மனித வெக்கையும், வேர்வையும் சுமந்த இறுக்கமாக இருந்தது. உள்ளே பரமசிவம் ஒப்பந்த நகலை வாசித்துக் கொண்டிருந்தார். முடிந்ததும் அடங்காத அமைதி நிலவியது. "எங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க காம்ரேட்ஸ்?" என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். கூட்டத்திலிருந்து முன்னுக்கு வந்து அருகில் இருந்த ஜன்னல் மீது ஏறி நின்றார் போஸ் பாண்டியன். புதிதாக பணியில் சேர்ந்து வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட அலுவலர்களில் அவரும் ஒருவர்.

மொத்தக் கூட்டமும் ஒரு கணம் திகைத்து அமைதி காத்தது. போஸ் பாண்டியன் திரும்பவும் சுற்றிலும் இருப்பவர்களை நிதானமாக பார்த்தவாறு "நாங்க திரும்பவும் வேலைக்கு வருவதற்கு என்ன உத்திரவாதம் இருக்கு" என்று கேட்டார். அவரது முகம் வலியில் துடித்துக் கொண்டிருந்தது. எல்லோருக்குள்ளும் முட்டிக் கொண்டிருந்த அவஸ்தையை உடைத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்து விழுந்தன வார்த்தைகள். நிச்சயம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அலுவலர்கள் குறித்து ஒரு பெரும் விவாதமும், சச்சரவும் வரும் என எதிர்பார்த்திருந்தார்கள். தலைவர்களுக்கு நேராக எப்படி விமர்சனத்தை ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தவர்கள் இப்போது கூட்டத்தின் முன்னே வர ஆரம்பித்தார்கள். ஒப்பந்த நகலை வாசித்துக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு என்ன பதில் சொல்வது என குழப்பமடைந்து, அருகிலிருந்த கிருஷ்ணகுமாரைப் பார்க்க ஆரம்பித்தார். அவரும் எதையோ சொல்ல வாயெடுத்தார். "நீங்க பேச வேண்டாம். தலைவரே நீங்க சொல்லுங்க" என்று சங்கரலிங்கம் கரகரவென குரலில் குறுக்கிட்டார்.

"ஒப்பந்தத்திலேயே தெளிவா சொல்லியிருக்கே. நிர்வாகம் ஐ.ஓ.பியில் கலந்தாலோசித்துவிட்டு முடிவு செய்யும் என்று எழுதியிருக்கே" என்று பரமசிவம் விளக்க ஆரம்பித்தார். "என்ன முடிவு" என்று போஸ் பாண்டியன் திரும்பவும் கேட்டார். "இன்னா பாருங்க. நிச்சயம் நல்ல முடிவா எடுக்கும்" என பரமசிவம் அழுத்தமாக பேசினார். "அதுக்கு என்ன உத்திரவாதம் என்றுதான் திரும்பத் திரும்ப கேட்குறேன்". என்று இப்போது போஸ் பாண்டியன் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். "இப்படி நம்பாம பேசினா எப்படி? சேர்மன் சொல்லியிருக்கார். நிச்சயம் உங்களையெல்லாம் உள்ளே எடுப்பாங்க. நான் சொல்றேன். போதுமாங்க"  கொஞ்சம் வேகமாக பரமசிவமும் பேச ஆரம்பித்தார். "நாங்க ஒங்களையே நம்பலயே. அப்புறம் எப்படி சேர்மனை நம்ப முடியும்?" என்று இன்னொரு மூலையில் இருந்து குரல் கேட்டது. சங்கரலிங்கம் கோபமாக பரமசிவத்தை நோக்கி கை நீட்டியபடி நின்றிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. இந்த சங்கரலிங்கம்தான் பரமசிவம் மேல் அத்தனை பிரியமாகவும், குடும்ப நண்பராகவும் இருந்தவர். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களை சங்கம் யோசிக்க வைக்கிறது. தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், உறவுகளை மீறிய உணர்வும், அறிவுத் தெளிவும் மனிதர்கள் பக்குவப்படுவதற்கான லட்சணங்களாயிருக்கின்றன.

கூட்டம் முழுவதும் இப்போது கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது. மாறி மாறி கேள்விகளாய் பாய்ந்து கொண்டிருந்தன. பரமசிவம் அருகில் இருந்த கிருஷ்ணகுமார் எல்லாவற்றையும் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  ”இப்போது நீங்கள் எதுவும் பேச வேண்டாம்” என கிருஷ்ணகுமாரிடம் சொல்லிவிட்டு வந்த சோலைமாணிக்கம் "அவர் பேசினா இந்தக் கூட்டத்தை சமாளிச்சிருவாரு. மத்தவங்க பேசட்டும். ஊழியர்களின் உணர்வுகளை தலைமையிலிருப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று என்னிடம் மெல்லிய குரலில் சொன்னார்.

"ஸோ காம்ரேட்ஸ்... நீங்க எல்லாம் நாளை மறுநாள் எங்களை விட்டுட்டு வேலைக்குத் திரும்பப் போறீங்க. இல்லையா" என்று போஸ்பாண்டியன் மீண்டும் உரத்த குரலில் கேட்டார்.  'டிஸ்மிஸ் செய்யப்பட்ட பதினான்கு ஆபிஸர்களும் உள்ளே வர்ற வரைக்கும் நாம யாரும் வேலைக்குத் திரும்பக் கூடாது. நிர்வாகம் ஐ.ஓ.பியில் கலந்தாலோசித்து நல்ல முடிவு சொன்ன பிறகு போவோம்."  என நூற்றுக்கணக்கில் குரல்கள் கோஷங்கள் போல எழும்பி எழும்பி பெருமாள் கோவில் மண்டபத்தை திணறடித்தன. அந்த தெருவில் உள்ளவர்கள், மண்டபத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அங்கே கூட ஆரம்பித்தார்கள்.

பெரும் கலகத்தின் கிளர்ச்சி போல காட்சிகள் உருமாறிக் கொண்டிருந்தன. தலைவர் பரமசிவத்தை நோக்கி மரியாதையற்ற வார்த்தைகள் கூட்டத்திலிருந்து தெறிக்க ஆரம்பித்தன. அவரை நோக்கி சிலர் பாய முயன்றனர். கிருஷ்ணகுமார் எழுந்து, "தோழர்களே...தோழர்களே" என்று எதோ சொல்ல வந்தார். அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தனர். அருகில் நின்றிருந்த ஒரு தோழர் "போச்சு...போச்சு..சங்கமே போச்சு" என்று முணுமுணுத்தார்.

(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

 

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. போராட்டத்தின் ஒவ்வொரு அசைவையும்
  நினைவில் வைத்திருந்து எழுதி இருப்பது
  பாரட்டத்தக்கது.

  அவ்வப்போது ஏற்படும் திருப்பங்கள்
  அதிர்ச்சியை தருகின்றன.

  ஊழியர்களின் சோகம்..
  முடிந்து போன விஷயம் என்பதையும் மீறி
  மனக்குமுறலை ஏற்படுத்துகிறது.

  அற்புதமான மொழிநடை..
  பாராட்டுக்கள் மாதவராஜ்.

  பதிலளிநீக்கு
 2. ORU KURUMPUTHINA ALAVUKKU EZHUCHCHIYAAKAVUM ,UZHIKKUM VARRATHTHI UNNATHA UNARVUKALIN VELIPPAADAAKAVUM MOONDRU BAAGANGALUM SENDRUKONDU IRUKKINDRANA.KRISHNA KUMAR URUVAANA PINNANIYUM NANGU PULAPPADUKIRATHU PAARAATTUKKAL.

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு.......வாழ்த்துகள் வாத்தியார்

  பதிலளிநீக்கு
 4. Luckily there were not many unions those days and also not divided by caste basis. Otherwise a negotiated settlement would have been hard to achieve. Vellaattu manthaiyil karuppu aadu is everywhere.

  VPC used to say ‘A responsible union not only protects the right of the people but also need to safeguard the job’. He mentioned it couple of times, prior to become an MLA, it was not easy for him or the union to approach the management and leaders were beaten with hooligans those days. Factory gates were closed immediately after seeing them. But things have changed once he became a MLA.

  So when people ask why to beg for a seat or two to the alliance leaders, the best answer would be to use the post for better negotiated settlement for workers.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!