அந்த 44 நாட்கள் - முதல் பகுதி

உற்சாகமும், வலியும் நிரம்பிய நாட்கள்தான் அந்த 44 நாட்களும். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திரும்பிப் பார்க்கிறபோது சிலிர்ப்பாகவும், அதிசயம் போலவும் தெரிகிறது. அந்த அனுபவங்களை மறுவாசிப்பு செய்கிறபோது, தொழிற்சங்கம், போராட்டம் குறித்தெல்லாம் புதிய பார்வைகளும், அணுகுமுறைகளும் தேவை என்பதை உணரமுடிகிறது. அந்த தளங்களில் தீவீரத்தோடு செயலாற்றுவதற்கான தேவை இருப்பதையும் அறிய முடிகிறது.

இடதுசாரி பார்வையும் அணுகுமுறையும் கொண்ட எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், ஐ.என்.டீ.யூ.சி (காங்கிரஸ்) பாரம்பரியத்தில் வந்த பாண்டியன் கிராம வங்கி எம்ப்ளாயிஸ் யூனியனும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தம் அது.  மிகச் சாதாரணமாக ஒன்றிரண்டு நாட்களில் நிர்வாகம் அடிபணிந்துவிடும் என்று பாண்டியன் கிராம வங்கியில்ஆரம்பித்த அந்த வேலைநிறுத்தம் 44 நாட்கள் நீண்டது. ஊதியங்களில் உள்ள முரண்பாடு, கடைநிலை ஊழியர்களின் பிரமோஷன் போன்றவைதாம் முக்கிய கோரிக்கைகள். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் பேசி வந்தும், இந்தக் கோரிக்கைகள் குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது, ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி)தான் முடிவெடுக்க வேண்டும் என நிர்வாகம் ஒரேயடியாகச் சொல்ல, வேலைநிறுத்தத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

துரோகங்களும், நம்பிக்கைகளும் கொண்ட கதையாக அது உருவெடுத்தது......

1988ம் வருடம் ஆகஸ்ட் 30ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் ஆரம்பமாகியது. காலையிலேயே ஊரிலிருந்து தூத்துக்குடி விசாகா லாட்ஜுக்கு புறப்பட்டேன். அம்மா எப்போது வருவாய் என கேட்டார்கள். தெரியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். எனக்கு முன்னரே திருச்செந்தூரிலிருந்து சோமு வந்திருந்தார். சங்கரலிங்கம், கண்ணன், அகஸ்டின், அருள்ராஜ், கனகராஜ், ராமர், ராஜரத்தினம் என பல தோழர்கள் வந்திருந்தனர். ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கிக்கொண்டு எந்தெந்த கிளைகள் திறக்கப்பட்டிருக்கிறது, அவைகளை எப்படி பூட்டுவது, யார் யாரையெல்லாம் சந்திப்பது என திட்டமிட்டோம். இது போலவே திருநெல்வேலி, தென்காசி, சாத்த்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி என ஒவ்வொரு பகுதியிலும் தோழர்கள்  தினந்தோறும் வந்து சந்திக்க, விவாதிக்க இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஓரிரு நாட்களில் வேலைநிறுத்தம் முடிந்துவிடும் என்கிற நினைப்பில் எங்கும் உற்சாகத்தில் தோழர்கள் இருந்தனர்.

சிலர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இருபது கிளைகள் போல இயங்கிக் கொண்டிருந்தன. காசாளர்களாக பணிபுரிந்து வந்த தோழர்கள் கேஷ் பார்க்கும் சாவியோடு வெளியே வந்துவிட்டதால் பல கிளைகளில் இயக்கமில்லை. ஆனால் அதுபோன்ற கிளைகளில் ஊழியர்கள் யாராவது பணிக்குச் சென்றால், நிர்வாகம் வேறு யுக்திகளை காட்டியிருந்தது. அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் காலையில் பணமெடுத்து வந்து வரவு செலவுகளை முடித்து அன்றே போய் திரும்பவும் கட்டி விட வேண்டும். அப்படி சில கிளைகள் இயங்கின. அந்தக் கிளைகளில் பணிபுரிபவர்களிடம் முதலில் பேச வேண்டும் என திட்டமிடப்பட்டது.

நிர்வாகம் குறிவைத்து எத்தனையோ தோழர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. உயர் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் சொந்த பந்தங்கள் மூலம் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தாரை மிரட்டியச் சம்பவங்கள் நடந்தன. எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கள் முகாம்களில் வந்து நாட்கணக்கில் வெறும் தரையில் படுத்து உறங்கிய அற்புதமான தோழர்களையெல்லாம் அப்போது பார்க்க முடிந்தது.

லேபர் கமிஷனரோடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தலைமையலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. நிர்வாகம் கொஞ்சமும் தன்னிலையில் இருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. அவ்வப்போது சாத்தூரில் கூடும் செயற்குழுக் கூட்டங்களில் கலந்துவிட்டு நானும் சோமுவும் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்துவிடுவோம். அந்த சமயங்களில்தான் இன்னொரு செயற்குழு உறுப்பினராயிருந்த காமராஜ், பொதுச்செயலாளராக இருந்த கிருஷ்ணகுமாரை எல்லாம் சந்தித்து பேசிக்கொள்ள முடியும்.

வீட்டிற்குச் சென்று பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தன. முதலில் நான்கைந்து நாட்கள் விசாகா ஓட்டலிலேயே சாப்பிட்டு வந்த எங்களுக்கு பிறகு பணம் இல்லை. தூத்துக்குடியிலிருந்த தோழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு கொண்டு வருவார்கள். சிகரெட்டு குடித்து வந்த நானும் சோமுவும் மெல்ல பீடிக்கு மாறிக் கொண்டோம். இது போன்ற நிலைமைகள் எல்லா இடங்களிலும் இருந்தன.

நிர்வாகம் விவசாயிகளுக்குக் கடன் கொடுக்காமல், அரசுத் திட்டங்களை செயல்பட விடாமல் தங்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்திகள் தடித்த எழுத்துக்களில் வெளியாகி இருந்தன. சோமு அதனை அம்பலப்படுத்தி ஒரு பிரசுரம் எழுதச் சொன்னார். உட்கார்ந்து விவாதித்து ஒன்று தயாரித்தோம். விவசாயிகளுக்கு இந்த அரசும், வங்கிகளும் என்னவெல்லாம் கடந்த காலத்தில் துரோகம் செய்தன என்பதையெல்லாம் விளக்கி, எப்போதுமில்லாத கரிசனம் இப்போது நிர்வாகத்திற்கு விவசாயிகள் மீது பொங்கி வருவதற்கு காரணம் எங்களின் வேலைநிறுத்தம் என்பதை புரிய வைத்திருந்தோம். விவசாயிகளுக்கு எதிராக போராடும் ஊழியர்களை நிறுத்துகிற குள்ள நரித்தனம் எனச் சுட்டிக்காட்டியிருந்தோம். அடுத்த சில நாட்களில் அனைத்து நகரங்களிலும் சைக்கிள் பேரணி நடத்தினோம். வீதியெங்கும் 'உங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் என்றும், எங்கள் ரத்தம் உங்கள் ரத்தம்' என்றும் முழக்கமிட்டு நின்றோம். பெரும்பாலும் கூட்டங்களில் அமைதியாயிருக்கிற அகஸ்டின் ஆவேசத்தோடு தன் சொந்த ஊரில் தெருதெருவாக கோஷமிட்டுச் சென்றார். எல்லோருக்குள்ளும் தீ பரவி தகதகவென இருந்தார்கள்.

எதோ ஒரு கிராமத்தில் தன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டு அடகுவைத்த நகைகளை திருப்புவதற்கு காத்திருக்கும் எளிய மனிதர்களின் முகங்கள் உள்ளுக்குள் தெரியத்தான் செய்தன. அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் பூட்டியிருக்கும் வங்கியின் கதவுகளை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் பெருமூச்சுக்கள் கேட்கத்தான் செய்தன. குற்ற உணர்ச்சி தனிமைகளில் மேலோங்கி வரும். இந்த அமைப்பில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்வுக்கும், உரிமைக்கும் போராடுவது, இன்னொரு பகுதியினருக்கு எதிரானதாக பேசப்படுகிறது. எந்தவொரு போராட்டமும் பொதுத்தன்மை பெற்றுவிடக் கூடாது என்று அதிகார மையங்கள் மிகத் துல்லியமாக திட்டமிட்டு காட்சிகளை முன்வைக்கின்றன. முஷ்டி உயர்த்தி ஜிந்தாபாத் முழக்கமிடுகிறவர்கள் தனிமைப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சமூகக் கட்டமைப்பிலேயே உருவாக்கம் பெற்றிருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்துக்கு இந்தத் தடையை அகற்றுவதுதான் மிகப் பெரிய காரியமானதாகத் தெரிகிறது. பொதுமக்களின் அவதிக்கு தொழிலாளர்கள் ஒருபோதும் காரணம் இல்லை. அவர்களை வீதியில் கொண்டு வந்து நிறுத்தியதற்கு நிர்வாகமும், அரசின் குளறுபடித்தனமான ஆணைகளும் தான் காரணம். இதை இதரத் தரப்பினருக்கு புரிய வைப்பதில்தான் ஒரு போராட்டத்தின் தாக்கமும், வெற்றியும் அடங்கியிருக்கிறது.

அரசு தலையிட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களின் அலுவலகங்கள் முன்பு தர்ணாக்கள் நடைபெற்றன. வாரத்துக்கு இருமுறையாவது அனைத்து முன்னணித் தோழர்களும் ஒரு இடத்தில் சந்திக்கிற மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டு இருந்தன. இந்த காலத்தில் ஒவ்வொரு தோழருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை தொகுக்க முடிந்தால் ஒரு காவியத்துக்கு இணையான சம்பவங்கள் இடம்பெறக்கூடும்.

நிர்வாகத்துடன் எங்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் எதோ சமரச முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டு இருந்தன. “இப்போது அதைப்பற்றி பேச வேண்டாம்” என கிருஷ்ணகுமார்  எங்களை எச்சரித்தார். ஒருவரை ஒருவர் முழுமையாக நம்ப வேண்டிய களத்தில், இடத்தில் நிற்கும்போது இப்படியான சிந்தனைகள் எழுவது போராட்ட முனையை கூர் படுத்த ஒரு போதும் உதவாது எனப் புரிந்தாலும், உள்ளுக்குள் எதோ எச்சரிக்கை மணி விடாமல் ஒலிக்கத் தொடங்கியது.

அங்கங்கு சில முணுமுணுப்புக்களும் எழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தன. சில கிளைகள் மேலும் திறக்கப்பட்டன. தோழர்கள் அங்கு சென்று அந்த ஓட்டைகளை அடைக்க முயற்சித்தனர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளை திறந்து வைக்கப்பட்டு இருக்கும். மீண்டும் தோழர்கள் அந்த கிளையை முற்றுகையிடுவார்கள். விடாப்பிடியான மன உறுதி கொண்ட தோழர்கள் போராட்டத்தை வெற்றியின் பக்கம் இழுத்துக் கொண்டு இருந்தனர். தோல்வி என்பது, பெற்ற சகல உரிமைகளையும் உடைத்துப் போட்டுவிடும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். நிர்வாகமோ எந்தச் சலனமும் இல்லாமல் அனைவரையும் பார்த்துக் கொண்டு எப்போது சோர்வடைவார்கள் என காத்திருந்தது.

அலட்டிக் கொள்ளாமல் இருந்த நிர்வாகத்தை அலற வைக்கிற ஒரு நிகழ்ச்சி நடந்தது. எப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிற சம்பவம் அது. வத்றாப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், இடைகால் போன்ற பகுதியிலிருந்து பொதுமக்கள் மூன்று லாரிகளில் தலைமையலுவலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர். அந்தப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த தோழர்கள் பொது மக்களின் அன்பை எப்படி சம்பாதித்து வைத்திருந்தனர் என்பதை உலக்குக்கு அறிவித்த நாள் அது. ஆவேசத்தோடு தலைமையலுவலகத்தை முற்றுகையிட்டு நின்றனர் மிகச் சாதாரண எளிய மனிதர்கள். 'வங்கிகளில் பணி புரியும் எங்கள் மக்கள் அவர்கள். அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். நியாயம் கேட்க வந்திருக்கிறோம்' என்று ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கொண்டு லாரியிலிருந்து இறங்கி  தலைமையலுவலகத்தை நோக்கி நடந்தார். வங்கியின் சேர்மனோடு தாங்கள் பேச வேண்டும் என்றனர் அந்த மக்கள். உள்ளே நிர்வாகத்திற்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. காவல்துறைக்கு போன் செய்தார்கள்.

(இந்த சிறு தொடரின் அடுத்த காட்சிகள் விரைவில்...)

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அன்றைய தொழிலாளர் போராட்டங்களை கண் முன்னே கொண்டு வந்து உள்ளீர்கள்.
  அன்றைய வங்கி ஊழியர்களிடம் ஒற்றுமை மேலோங்கி இருந்தது.
  இன்றைய ஹெச் எஸ் பீ சி , ஹெச் டி எப் சி ,பார்க்லேய்ஸ் வங்கி ஊழியர்களையும் நினைத்து பார்க்கிறேன்.

  அன்று போலவே இன்றும் அலுவலகங்களில், வங்கிகளில் ஊழியர்கள் ஒற்றுமையாக இருந்தால் இன்று பூவரசி யின் கள்ள காதல் போன்ற நிகழ்வுகள் நடந்து இருக்காது. அன்றைய நாட்களில் சக ஊழியர்கள் அறிவுரை சொல்லி கள்ளக் காதலை (பிறன் கணவனை கள்ளக் காதல் ) தடுத்து இருப்பார்கள்.
  இன்று பெரும்பாலான அலுவலகங்களில் ஒவ்வொரு ஊழியரும் ஒரு தனி தீவு போலவே செயல் படுகின்றோம்.

  பதிலளிநீக்கு
 2. "இந்த அமைப்பில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்வுக்கும், உரிமைக்கும் போராடுவது, இன்னொரு பகுதியினருக்கு எதிரானதாக பேசப்படுகிறது. எந்தவொரு போராட்டமும் பொதுத்தன்மை பெற்றுவிடக் கூடாது என்று அதிகார மையங்கள் மிகத் துல்லியமாக திட்டமிட்டு காட்சிகளை முன்வைக்கின்றன"

  யாதார்த்தமான உண்மை..

  மக்களின் ஆதரவை பெறாமல் எந்தப் போராட்டமும் வெற்றியடையாது. அதில் பொதுத்துறை ஊழியர்கள் குறிப்பாக சர்வீஸ் செக்டாரில் பணிபுரியும் தோழர்கள் மக்களுக்கு சேவகனாக பணிபுரியவேண்டும். அதன் மூலம் பொதுமக்களையும் ஆதரவுக்கு கோரலாம்.

  பதிலளிநீக்கு
 3. அன்றைய தொழிலாளர் போராட்டங்களை கண் முன்னே கொண்டு வந்து உள்ளீர்கள்.

  யாதார்த்தமான உண்மை..

  பதிலளிநீக்கு
 4. நெருப்பின் கத்த கதப்பை உணர்ந்தநாட்கள்.

  பதிலளிநீக்கு
 5. Those days cannot be forgotten by the trade union movement...Where the fighting tendencies have gone now a days ?where is the fault ?Do we have any perspective plans to revive our agitation path ?
  In the overall banking industry the above questions must be answered.

  பதிலளிநீக்கு
 6. வாழ்வின் நெருக்கடியான நிலைமைகளை மிக அழகாக பதிவு செய்து உணர்வு உள்ளவர்கள் போராடவேண்டும் என்று போரட்ட உணர்ச்சியை கிளரும் வண்ணம் உள்ளது இந்த பதிவு...எழுத்து உங்கள் கை வந்த கலை...

  பதிலளிநீக்கு
 7. 44நாட்கள் போராட்டம் நடந்த போது உங்கள் போராட்டம் வெற்றி யடையவேண்டி வயிறு கலங்கி நின்றவர்களில் நானும் ஒருவன்.1983ம் ஆண்டு எல்.ஐ.சி ஊழியர்கள் காலவரயரையற்றவெலைநிறுத்தம்.செய்தார்கள்.ஏப்ரல் 2ம் தே தி ஆரம்பம்.1ம் தேதி புதியவர்களை நியமித்தது நிர்வாகம்.இதன் மூலம் வேலைநிறுத்தத்தை உடைக்க விரும்பியது.புதியவர்களை சந்தித்து வேண்டிக்கொண்டோம்.1ம் தேதி வேலையில் செர்ந்தவர்கள் 2ம்தெதியிலிருந்து கலவரையற்ற வேலைநிருறுத்தத்தில் கலந்துகொண்டார்கள்.அவர்களில் பலர் சங்கத்தலைமையில் இருக்கிறார்கள்.சிலர் அகில இந்திய தலைமையை அலங்கரிக்கிறார்கள். they were steeled in struggle..and no struggle will go waste......kashyapan.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!