நாளை என்பது மற்றொரு நாளல்ல!

27th april 1

ரயில் தண்டவாளத்தின் மீது படுத்திருக்கும் இந்தச் சிவப்புச் சட்டைக்காரர்   என்ன சொல்கிறார்...உறுதிமிக்க அந்த முகத்தின் மொழியும், உயர்த்திய முஷ்டியும் தெரிவிப்பது என்ன... ஏப்ரல் 27 அன்று நாடு நெடுக நடந்த மறியலில் உழைப்பாளி மக்கள் அத்தனை ஆவேசமாகப் பங்கேற்றதன் ஒரு மின்னல் அடையாளமாக ஆங்கிலப் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தப் படம் ஆட்சியாளர்களது கொள்கைகளை நிராகரித்து எத்தனையோ செய்திகளைச் சொல்கிறது.

புதிய தாராளமயக் கொள்கை எந்த மேல் பூச்சுமின்றி கூச்ச நாச்சமின்றி பட்டவர்த்தனமாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதுகின்றனர் சமூக விஞ்ஞானிகள். 2009 மக்களவைத் தேர்தலின் முடிவுகளில் இருந்து தாங்கள் இனி இடதுசாரிகள் ஆதரவுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை,  கவலை கொள்ளத் தேவையில்லை என்று புரிந்து கொண்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இதில் முற்போக்கு என்ன பவிசுக்கு என்று தெரியவில்லை). செல்வந்தர்களைக் கொழுக்க வைக்கும் தமது கொள்கைகளை அவர்கள் மாற்றிக் கொள்ளத் தயாரில்லை என்பது அவர்கள் பேச்சுகள் ஒவ்வொன்றிலும் தெளிவாக்கப்படுகிறது. நடவடிக்கைகளில் பளிச்சென்று தெரிகிறது.

இரண்டு  லட்சம் விவசாயிகளின் தற்கொலைக்கு அதிராதவர்கள் அம்பானி சகோதரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் ஆடிப் போவதிலிருந்து புரிகிறது. மூங்கில் பத்தைகளை, நச்சு விதைகளை அரைத்துச் சாப்பிடும் அளவுக்கு வறுமைக்குத் தள்ளப்பட்டு (ஆதாரம்: ஹர்ஷ் மேந்தர் கட்டுரை - தி ஹிந்து 11 04 2010) இன்னும் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் மக்கள் வாழும் தேசத்தில் ஐ பி எல் என்ற பேரில் நடக்கும் கேலிக் கூத்தில் கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை வைத்து வர்த்தக சூதாடிகளும், அரசியல் சீமான்களும், தொழிலதிபக் கொள்ளையரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.   

வரைமுறையற்ற சுரண்டலுக்கும், மனிதத் தன்மையற்ற முறையில் தாங்கள் நடத்தப்படுவதற்கும் எதிராகத் தொழிலாளி வர்க்கம் திரண்டெழுந்த கதை தான் மே தின வரலாறு. உழைப்பாளி மக்களின் வாழ்வுத் தரம் பற்றிய மிதமிஞ்சிய அலட்சியமும் அவமதிப்பும் கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்க நலனுக்கு எதிராகத் திரளாமல்
உழைப்பாளி  மக்களுக்கு  விடியல் கிடையாது என்பதை உணர்த்திய ஆவேசமிக்க வரலாறு அது. மூலதனத்தின் வன்முறை முகத்தை அம்பலப்படுத்திய வரலாற்றுப் பதிவுகள் அதற்குப் பின்னும் தொடரவே செய்தன.

மே தினம் உலகத் தொழிலாளர் திருநாளாக உருப்பெற்றதற்குக் காரணம் அதன் உலகம் தழுவிய தொழிலாளி வர்க்கததின் அடையாளம் ஆகும். "மனிதர்களின் நெஞ்சங்களில் வைரம் பாய்ச்சியும், அவரது முதுகு நிமிர்த்தியும் புவியின் செல்வம் அனைத்தும் தந்தது மானுட உழைப்பே என்றே சொல்லி மனிதரையெல்லாம் எழுப்பியதும்..." (மே தினமே என்ற பாடலில் இருந்து) மே தினம். அது தந்த உத்வேகத்தால் தான் பெயர் அறியப்படாத ஆயிரமாயிரம் தொழிலாளர் தோழர்கள் உரம் பெற்றுக்  கனல் பொறியாய் எத்தனையோ களங்களில் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக, மூலதனத்தின் மூர்க்கத்திற்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கின்றனர்.

இந்த ஆண்டின் மே தினத்திற்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவில் முதன்முதல் மே தினக் கொண்டாட்டங்களை (சென்னையில் 1923ல்) நடத்திய தொழிலாளி வர்க்க உன்னதத் தலைவர் சிங்காரவேலர் அவர்களின் (1860 - 1946 ) 150 வது  பிறந்த நாள் கொண்டாட்டப்படும் வேளையில் அனுசரிக்கப்படும் மே தினம் இது.  1927ல் அமெரிக்காவில் சாக்கோ, வான்சேட்டி  என்ற இரு இத்தாலியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த தொழிலாளிகள் மீது போய்க் குற்றச்சாட்டு சுமத்தி ஆளும் வர்க்கம் தூக்கில் இட்டது. அதற்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர் சிங்காரவேலர்.

தண்டனை நிறைவேற்றப்பட இருந்த சூழ்நிலையில் தம்மைப் பார்க்க வந்த ஒருவரிடம் வான்சேட்டி சொன்னது இதுதான்: 

"ஒரு ஏழை மீன் விற்பனையாளனான என்னையும், செருப்புத் தொழிலாளியான எனது நண்பனையும் இப்படித் தண்டிப்பதன் மூலம், உலகுக்குத் தெரிய வாய்ப்பின்றி வீணாகப் போயிருக்கக் கூடிய  எங்கள் பிறவிகளை அர்த்தமுள்ளதாக்கி உள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். அவர்களை வெருட்டி இருக்கும் எங்களது இருப்பு எங்களது வெற்றி..."

தங்கள் இன்னுயிரை இழக்க நேர்ந்தாலும் அடி பணியோம் என்ற நெஞ்சுரத்தைத் தொழிலாளிக்கு ஊட்டி, ஏனைய மானுடருக்கான பொன்னுலகைச் சமைத்து  மனிதகுல விடியலுக்கான வாசல்களைத் திறக்கப் புரட்சி தீபத்தைக் காட்டுகிற மே தினம் விடிகிறது.

சிவப்புச் சட்டைக்காரர் படுத்திருப்பது ரயில்வே தண்டவாளம் என்றாலும், அது இப்போதைய சமூக அமைப்பு இப்படியே பயணப்பட்டுக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவிக்கச் செய்திருக்கும் மறியல்.  புதிய சமூக எழுச்சிக்கான திசைவழியை நோக்கி மக்களை ஈர்க்கட்டும் மே தினம்....

- எஸ்.வி.வேணுகோபலன்

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //இதில் முற்போக்கு என்ன பவிசுக்கு என்று தெரியவில்லை// உண்மைதான்! நாட்டைக் கூறுபோட்டு விற்கிறார்கள்... உலகின் தனியார்மயத்தையும் முதலாளித்துவத்தையும் ஆதரித்த எல்லா நாடுகளும் பொருளியல் நெருக்கடிகள் வந்து சிக்கலில் மாட்டியும் நாங்கள் அதே பாதையில் தான் தொடர்ந்து செல்வோம் என்று சொல்லும் 'பேரறிஞர் மன்மோகன்சிங்கை' என்னவென்று சொல்வது....

  பதிலளிநீக்கு
 2. "எழுத்தாளர்களிடமிருந்து எடுத்து' என்று போட்டிருக்கிறீர்கள்... 'எழுத்தாளர்களிடமிருந்து' என்று போட்டாலே போதாதா?

  பதிலளிநீக்கு
 3. ஆதி!

  வாங்க மே தின வாழ்த்துக்கள்.

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  தாங்கள் சுட்ட்டிக்காட்டியது சரியே. சரி செய்துவிட்டேன். அதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் முந்திய பதிவில் சொன்னது போல்... தோழர்கள் மைதானத்தை சுற்றி வரவில்லை... வீறு கொண்டு விளையாட(போராட்டம்) ஆரம்பித்துவிட்டார்கள்....

  பதிலளிநீக்கு
 5. தேர்தலில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பதவியில் அமராமல் இந்த மாதிரி அவ்விய முதலீட்டு கொளகைகளை தடுக்க முடியாது.

  எனவே , கம்முநிச்டுக்கள் முதலில் செய்ய வேண்டியது, தேர்தலில் பெரும்பான்மை எம் பி, எம் எல் ஆ இடங்களை கைப்பற்ற வேண்டும். அது இல்லாது வரை இந்த மாதிரி போராட்டங்கள், செய்திகள் வெறும் வலைப்பக்கங்களை அல்லது வார ஏடுகளின் கடைசி பக்கத்தை நிரப்ப மட்டுமே பயன் படும்.

  பதிலளிநீக்கு
 6. struggle is the only way to achieve anything>>the photo said so..

  பதிலளிநீக்கு
 7. அருமையான கட்டுரை அண்ணா. உங்களது சமூகப் பார்வை ஆழமானது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. மாத‌வ்,
  ஒரு குடும்ப‌ம் ந‌ல்லாயிருக்க‌ ஒருத்த‌ரை இழக்க‌லாம்,
  ஒர் ஊருக்குண்ணா, ஒரு குடும்ப‌ம்,
  நாட்டுக்கே ந‌ல்ல‌துண‌, ஒர் ஊரை இழக்க‌லாமுன்னு
  கேள்விப்பட்டிருக்கிறோம்.
  ஆனால், இப்போ, இங்கே எல்லாமே த‌லைகீழாய்,
  நூறு கேடிக‌ள் வாழ்வுக்காய், நூறு கோடி ம‌க்க‌ள்
  ந‌ல‌ன் புற‌ம் த‌ள்ள‌ப்ப்டுகிற‌து.
  (தேர்த‌ல் நாள் த‌விர்த்து)

  பதிலளிநீக்கு
 9. உங்கள் எழுத்து எனக்கு ர.சு. நல்லபெருமாளின் ‘போராட்டங்கள்’ நவீனத்தை ஞாபகப் படுத்தி விட்டது.
  உங்கள் பகிர்வில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அதில் உள்ள மாத்திரையை விட வீச்சு அதிகம்!! பாராட்டுக்கள்!!!

  பதிலளிநீக்கு
 10. மே தின வாழ்த்துகள் தோழரே...

  மே தினப் பேரணிகள் என் கண்முன் வந்து போகின்றன.

  பதிலளிநீக்கு
 11. மே தின வாழ்த்துக்கள்.

  உழைப்பவர்கள் தங்கள் உழைப்பின் பயனை அடைய எதிர் நோக்கும் இந்நாளில் ஒரு வன்முறையற்ற போக்கே அனைவருக்கும் நல்லது.

  பதிலளிநீக்கு
 12. அன்பு மாதவ்

  நன்றி...வழக்கம்போலவும் வழக்கத்தைவிடக் கூடுதலாகவும்...

  வருகை புரிந்த வந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் நன்றியும், மே தின சிறப்பு வாழ்த்துக்களும்.

  கஞ்சி குடிப்பதற்கிலாரையும், அதன் காரணம் அறிய மாட்டாதவரையும் உள்ளன்போடு நேசிக்கிற தோழர் எவருக்குமே மே தினம் ஒரு திருநாள்.

  அநீதியும், அராஜகமும், அநியாயங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கும் பூமியில்
  அதற்கு எதிரான ஒரே நம்பிக்கை, அனைத்தையும் புரட்டிப் போட்டுப் புதிய சமூகத்தை அமைத்திடும் இலட்சியமும், அதன்பால் விசுவாசத்தோடு போராடிக் கொண்டிருப்போரின் செயல்பாடுகளுமே..

  இடையில் சோர்வும், சுணக்கமும், அவநம்பிக்கையும் எட்டிப் பார்க்கும் வேளைகளில், உத்வேகத்தை ஊட்டுவது முன்னோரின் தியாக வரலாறுகள்....
  அதில் மணி மகுடம்
  இந்த மே தினம்.

  வாழ்த்துக்கள் இனியவர்களே....
  மீண்டும் நன்றி மாதவ்...

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 13. மே தின வாழ்த்துக்களைத் தோழருடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்..!

  பதிலளிநீக்கு
 14. சுறா’வை வறுத்த அளவுக்குக்கூட உழைப்பவனைப் பற்றி பேச அவகாசமில்லாத தமிழ் சமூகத்தில்...

  இந்த மாதிரியான எழுத்துகள் கொஞ்சம் நம்பிக்கை வலையை இன்னும் இறுக்கமாக பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!