மகளிர் மசோதா நிறைவேறப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, அர்த்தத்தில்!

பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா ஒருவழியாக நேற்று மாநிலங்களவையில் நிறைவேறி இருக்கிறது. இதன் மூலம் மொத்தமுள்ள  543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் இனி 181 பெண் எம்.பிக்கள் இருக்க முடியும். 28 மாநிலங்களில் மொத்தமுள்ள 4109 எம்.எல்.ஏக்களில் இனி 1370 பேர் பெண்களாக இருக்க முடியும். ஒரு மகத்தான அத்தியாயம் ஆரம்பித்திருப்பதாக காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள் சொல்கிறார்கள். இதன்மூலம் 13 வருடமாக இழுத்துக்கொண்டு இருந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதற்கும் இந்த ஜனநாயக அமைப்பில் எளிதில் முடிவு வந்துவிடாது என்பதும், வேறு வடிவங்களில் அவை வெளிப்படும் என்பதும் கடந்தகால வரலாறு அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

மசோதாவில் லல்லுவின் கட்சி, முலாயம் கட்சி, மாயாவதி உள்ளிட்ட சில கட்சிகள் திருத்தங்களைக் கோருகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அதுபோல, பெண்களுக்கான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் போற்றாத இந்து சனாதனத்தில் ஊறித் திளைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த மசோதாவை ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமே.

இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாக மட்டுமே காட்டும் ஒரு சித்திரம் இங்கே இயல்பாக எழும்புகிறது. ஒரு மேலோட்டமான புரிதலில் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் இப்படியாக வெளிப்படுகிறது. முன்வைக்கப்பட்ட ஒரு விவாதத்தை, எதிர்ப்பவர்களின் கருத்துக்களை ஒற்றை வரியில் நிராகரிக்கும் மனோபாவமே நம்மிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் தாட்சண்யமில்லாமல் சட்டென்று பெண்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விடுவது ஆரோக்கியமாக இருக்காது. அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் ஒரு ஜனநாயக அமைப்பில் கேட்டே ஆக வேண்டியிருக்கிறது.

“தலீத் பகுதியிலிருந்தே வரமுடியாதபோது தலித் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா? முஸ்லீம்களே வரமுடியாதபோது முஸ்லீம் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா?”

“காங்கிரஸின் தலைவியே ஒரு பெண்தான். அவர் தன் கட்சியில் 33 சதவீதம் பெண்களை தேர்தலில் நிற்கவைத்துவிட்டாரா? ஒவ்வொரு கட்சியும் 33 சதவீதம் பெண்களை நிறுத்த வேண்டும் என முதலில் சொல்லட்டுமே”

“எந்தக் கட்சி தங்கள் வேட்பாளர்களில் 33சதவீதம் பெண்களை நிறுத்தவில்லையோ, அந்தக் கட்சியை, தேர்தல் கமிஷன் தடைசெய்ய சட்டம் கொண்டு வரட்டுமே!”

“பணியிடங்களில் 33 சதவீதம் என்ன 50 சதவீதம் பெண்களுக்கு இடம் கொடுக்கட்டுமே. அதற்கென சட்டம் கொண்டு வரட்டுமே. அங்கெல்லாம் கொண்டு வராமல் இங்கு ஏன் கொண்டு வரவேண்டும்?”

“பல கட்சிகளில் முடிவு எடுக்கும் உயர்ந்த பட்ச அமைப்பில் எத்தனை பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாராளுமன்றத்தில் 33 சதவீத இடம் கோருவது விநோதமாயில்லை?”

இன்னும், இதையொட்டி இன்னபிற விவாதங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் முஸ்லீம்கள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சதி இந்த மசோதாக்களில் இருப்பதாக லல்லு பிரசாத், முலாயம், மாயாவதி, சரத் ஆகிய தலைவர்கள் ஆத்திரத்துடன் கூறுகின்றனர். அதாவது, 543 உறுப்பினர்களில் இருந்து 181 பெண்களுக்குப் போக, மீதி 362 இடங்களுக்குள்ளேதான் இனி, தலித்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் உறுப்பினர்களாகும் வாய்ப்பாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. இதையொட்டி இந்த மகளிர் இட ஒதுக்கீட்டில் உள்ளொதுக்கீடு வேண்டும் எனவும் திருத்தங்கள் கோரப்படுகின்றன. இப்போது ஒன்று தெளிவாகப் புரியும். இந்த 181 மகளிர் இட ஒதுக்கீட்டில் பெரும்பாலும் உயர் ஜாதியினரே வரக்கூடும் என்பதே எதிர்த்துக் கருத்துக்கள் தெரிவிப்பவர்களின் மையப்புள்ளியாக இருக்கிறது. சமூகத்தில் ஒரளவுக்கு முன்னேறிய, வசதிபடைத்த, வெளியுலகம் தெரிந்த பெண்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும், தலித், முஸ்லீம் பெண்கள் அந்த நிலைமையில் இல்லையென்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.

அதிகாரம் என்பதை நோக்கியே எல்லாக் கண்களும் இருக்கின்றன. அரசியல், வியாபாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் இந்த பார்வை நிலைகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் அடிப்படையில், இயல்பாகவே தங்கள் நலன் சார்ந்தே யோசிக்கிறார்கள். பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான ஊற்றுக்கண் இதுதான். நம் சமூக அமைப்பில், இத்தனை வருட அனுபவத்தில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. இந்த தேர்தல் முறையில், அழுகிப்போய்க்கொண்டு இருக்கும் அதன் நடைமுறைகளில் நியாயங்கள் நீர்த்துப்போய்க்கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இடமளிப்பது, எல்லாக் கருத்துக்களையும், பார்வையையும் உட்கொள்வது, எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் யோக்கியதையாக இருக்க முடியும். அப்படி இருந்திருக்கிறதா என்பதுதான் இன்று மக்கள் மக்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஜனநாயகம் அப்படி இல்லாதபோது, மகளிர் மசோதாக்கள் குறித்து இப்படிக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுவது தவிர்க்கமுடியாதவை. 

அரசியல் கட்சிகள், அவர்தம் நிலைபாடுகள் தாண்டி, தேசத்தின் பிரஜைகளாக இந்த விவாதங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், எந்த வகையான உரையாடலை நாம் நடத்தப் போகிறோம்?

ஜாதி, மத, மொழி பாகுபாடுகள் குறித்து பேசப்படுகிற அளவு, அவைகளுக்கு அழுத்தம் கொடுக்கிற அளவு இந்திய சமூகத்தில் பாலின பாகுபாடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோமா? பெண்களையும் அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கான முனைப்பு சமூகத்திடம் இருக்கிறதா? இவைகளின் ஒரு பகுதியே இந்த இடஒதுக்கீடு மசோதா என்று உணரவும், உணர்த்தியாகவும் வேண்டியிருக்கிறது.

1952ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 19 பெண்களே எம்பிக்களாக இருந்தனர். 57 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 59 பெண்கள் எம்.பிக்களாக இருக்கின்றனர். அதாவது 10.82 சதவீதம்! இந்த எளிய உண்மையே போதும், பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள. எந்த ஜாதியிலிருந்தாலும், எந்த மதத்திலிருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். 

பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பல நாற்காலியில் அவர்களது கணவன்மார்களே உட்காருகிறார்கள். சட்டங்களை அனுமதித்துக்கொண்டே அதிகாரம் வேறு ரூபத்தில், வடிவத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. இதைச் சுட்டிக்காட்டி குறை சொல்லும் கருத்துக்களில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம் சில இடங்களில் பெண்களும் உட்காரவும் முடிந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது.

மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மொத்த சமூகமும், பொதுவான நியாய அநியாயங்களோடு இந்த முரண்பாடுகளைப் புரிந்து, அதைச் சரிசெய்ய முன்வருவதே தீர்வாக இருக்க முடியும்.

சாதிய, மத ரீதியான பாகுபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்களின் உரிமைகளை தள்ளிவைப்பதோ, பெண்ணுரிமையை காரணம் காட்டி சமூக ஏற்றத்தாழ்வுகளை புறக்கணிப்பதோ சரியாய் இருக்காது. இரண்டையும் சரியாக புரிந்துகொண்டு, இரண்டுக்குமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, இந்த அர்த்தத்தில்தான்.

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் சொல்வது மூழுவதும் உண்மைதான் சார். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று. யார் யார் எப்படி என்று.. பெண்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இது..நடைமுறை எப்படி என்று பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  2. //மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது//

    இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு.. நல்லதே நடக்கும் என்று நினைப்போம் அண்ணா..

    பதிலளிநீக்கு
  3. This is definitely a historic move. But we cannot dismiss the apprehension that educated, English-speaking women will get preference when parties choose candidates. Our middle-class fascination for 'educated' politicians will extend to this area also. They do not generally take into account that it was a section of the educated politicians who are taking this country along a disastrous development path.
    Another danger is that party leaders' wives and daughters will also find a prominent place. Recent experience shows that thhis is a problem common to all political parties, including the Left.
    We hope that pressure builds up from below in these parties to avoid choice of elite women and daughters, wives, daughters-in-law, as candidates. The choice should be based on a woman's political commitment, the extent, of her conatact with the people, her abililty to mingle with the people and take up issues arising at the local level, and so on.
    The panchayat experience shows that 'uneducated' women in villages and small towns have emerged as successful leaders against heavy odds. It is these women who should be taken to the Assemblies and Parliament. Will the political parties do this? At least, the Left shoud do this and lead by example.

    பதிலளிநீக்கு
  4. 'அதுபோல, பெண்களுக்கான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் போற்றாத இந்து சனாதனத்தில் ஊறித் திளைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த மசோதாவை ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமே'

    உமா பாரதி,சுஷ்மா சுவராஜ்,வசுதா ராஜே என்று மூன்று பெண் முதல்வர்களைக் முன்னிறுத்த
    பாஜகவால் முடிந்தது. கெளரி அம்மாவிற்கு கேரளாவில் உங்கள் கட்சி அந்த வாய்ப்பினை தரவில்லியே.சுசீலா கோபலன், கெளரி போன்றவர்களை கட்சி எந்த அளவில் நிறுத்தியது எந்தப் பதவி வரை அனுமதித்தது. இன்று சுஷ்மா சுவராஜ்
    அத்வானி ஏற்றிருந்த பொறுப்பில் இருக்கிறார்.உங்கள் கட்சியில் அது போல் சாத்தியமேயில்லை.பொலிட்பிரோவில் ஒரே ஒரு பெண் அதுவும் பிருந்தா கரத் என்று சாதனை படைத்த கட்சியினர் பாஜகவில் எத்தனை பெண் அமைச்சர்கள், எம்பிக்கள்,
    எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்.மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணியில் எத்தனை பெண் அமைச்சர்கள்/தலைவர்கள் இருக்கிறார்கள். சிஐடியுவில் எத்தனை பெண்கள் நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள்.பாஜக இடதுகளை விட இதில் முற்போக்கு என்று நிருபீத்துள்ளது. அது சனாதனத்தில் திளைத்திருந்தால் இது எப்படி சாத்தியமாகியிருக்கும். தமிழ் நாட்டில் உங்கள் கட்சியில் இதுவரை பெண்கள் யாரவது கட்சியின் சட்டமன்றத் தலைவராக, பொதுச் செயலாளராக
    இருந்திருக்கிறார்களா.ஏன் இல்லை.
    பாஜகவை குறை கூறும் உங்கள் கட்சியின் யோகயதை என்ன.

    பதிலளிநீக்கு
  5. பாரளுமன்றத்திலும் அதுதான் நடக்கும், இப்போது உள்ள எம்பிக்களின் மனைவிமார்கள், மகள்கள் வருவார்கள். அப்படியாவது வரட்டும்.

    ஆனால் அதிலும் சில வேளைகளில் நன்மை நிகழ்ந்து விட்கிறது.

    அந்த உறவினர்கள் படித்தவர்களை, பண்பு உள்ளவர்களாய் இருந்தால் நன்மை நிலவுகிறது.

    உதாரணம்- தூத்துக்குடி பெரியசாமிக்கு பதிலாக அவர் மகள் அமைச்சராக வந்ததால் சாந்தம் நிலவுகிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்த மசோதாவால் பெண்களுக்கு குறைந்தபட்ச முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது சந்தோஷமான விசயம்தான்.

    இதை எதிர்ப்பவர்களை பற்றின என் மனோபாவமும் தாங்கள் முதற்சொன்ன வகையிலேயே இருந்தது. பிறகு செய்தியை முழுமையாய் தெரிந்து தெளிந்தேன்.

    தாங்கள் சொல்வதுபோல் எதுவும் எழுத்தில் மட்டும் இருக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  7. /*மகளிர் மசோதா நிறைவேறப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, அர்த்தத்தில்! */
    உண்மை

    /*மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. */
    இதுபோன்ற விஷயங்களில் தீர்வு என்று எதையும் அறுதியிட்டு கூற இயலாது. ஒருவருக்கு தீர்வு என்பதே இன்னொருவருக்கு பிரச்னை ஆகலாம். என்றாலும் , நீங்கள் சொல்வது போல் காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
    பல நாற்காலியில் அவர்களது கணவன்மார்களே உட்காருகிறார்கள். சட்டங்களை அனுமதித்துக்கொண்டே அதிகாரம் வேறு ரூபத்தில், வடிவத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. இதைச் சுட்டிக்காட்டி குறை சொல்லும் கருத்துக்களில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம் சில இடங்களில் பெண்களும் உட்காரவும் முடிந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது //

    தெளிவான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  9. பிற்காலத்தில் மகளிர் மசோதா திசை திரும்ப நிச்சயம் சாத்தியங்கள் உண்டு.ஆனால் அஸ்திவாரம் தோண்டியாகி விட்டது.இனி மேல் கட்டமைப்புக்களை செய்வது பணம் பற்றாக்குறையிலும்(மசோதா முழுமையின்மை)கடனை,உடனை வாங்கி கட்டி முடிக்கிறமாதிரி எளிதானது.

    கட்சிகள் தங்கள் பங்குக்கு மசோதாவை ஆமோதித்ததை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. ////அப்படியெல்லாம் எதற்கும் இந்த ஜனநாயக அமைப்பில் எளிதில் முடிவு வந்துவிடாது என்பதும், வேறு வடிவங்களில் அவை வெளிப்படும் என்பதும் கடந்தகால வரலாறு அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். ////////


    சுழற்சி முறையில் தலித் தொகுதிகள் ஒதுக்கப்படும் நடைமுறை உள்ளது, அந்த தொகுதியே மகளிருக்கு ஒதுக்கப்பட்டதாக இருக்கும் பொழுது தலித் மகளிர் வர முடியுமே-


    ....எல்லாவற்றுக்கும் இடமளிப்பது, எல்லாக் கருத்துக்களையும், பார்வையையும் உட்கொள்வது, எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் யோக்கியதையாக இருக்க முடியும்,,,


    நியாயமான, நேர்மையான உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள்,

    வாழ்த்துக்கள்

    பின்குறிப்பு
    (இன்று கூட பல நண்பர்கள் பெண்களை நோக்கி ஏன் இனிப்பு கொடுத்து கொண்டாடவில்லை என்றும், தாங்கள் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை விட்டுக் கொடுத்து விட்டதற்காக (தியாகம்-?) அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,, என்ன செய்ய தோழர்?

    பதிலளிநீக்கு
  11. \\மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும்.\\

    நல்லதே நடக்கும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  12. WHY I support this bill
    ------------------------
    I wish a historic bill like this should never go to dust bin. Indian democracy will cherish by passing the bill, a notion that was not tried anywhere in the world.

    Today in Parliament many bills are passed without even any discussion, because of the unruly behavior of the MPs and most of them are men. This will get streamlined when more women MPs go to parliament.

    Many MPs and MLAa have criminal records and statistically male indulges in more criminal activity than a female. So the parliament and assembly will have some respected members.

    Also a woman works more both in the family and outside and a mother’s contribution towards the development of a child is more than a father. Obviously one can expect similar kind of work in administration too.

    Rabri Devi got a chance just because Laluji was out in jail. Otherwise she would not have had a chance to contest and become a CM in Bihar. Now she will have more social respect than be treated just as Laluji’s wife.

    Now because of reservation all parties are bound to put more women candidates in the fray. Also the argument like Panjayat administration is being run by a woman leader’s husband will not hold well in terms of MPs and MLAs. They can’t do the same in assembly and parliament.

    I think the arguments like lack of minority muslim candidates, etc., all won't stand in the long run if the bill is actually implemented. This will give a real opportunity for all the women (including dalit and Muslim) to come forward and prove the diversity of our nation. This will in fact help the Hindu-Muslim unity and solve the long standing problem.

    Why can't one see it in a positive way than just be scared of hearing the word 'RESERVATION'

    Swami

    பதிலளிநீக்கு
  13. Response on Anonymous' views
    There are three MLAs (out of nine)from CPM in Tamilnadu Assembly. One of them is a dalit woman who was fielded by the party in a general constituency -- Ms Latha from Gudiyatham and she could win. Ms Balabarathy is the leader of the Party in the Assembly. The reservation would certainly encourage women to take more active part in political administration. Communist parties do not nominate people to leadership; they encourage women to evolve and emerge and whoever could occupy higher positions, it is due to their work. More space requires to be given to women if only the entire society is to be empowered.

    பதிலளிநீக்கு
  14. BTW from my earlier post if it gives some wrong impression, please ignore it. I support reservation, and not against it.

    Swami

    பதிலளிநீக்கு
  15. "More space requires to be given to women if only the entire society is to be empowered"

    Well this is arguable. A women's perspective(view) on a social problem may differ from its counterparts. Unless sufficient representation is not there in the highest decision making body, chances of loosing their argument in majority-minority vote is possible and also it won't reach or may not be reviewed in the highest decision making body.

    Swami

    பதிலளிநீக்கு
  16. This has not been brushed off in one line. This has been debated endlessly for the past 14 years. Secondly atleast women will stop saying that they are not treated equally.

    பதிலளிநீக்கு
  17. Communist parties do not nominate people to leadership; they encourage women to evolve and emerge and whoever could occupy higher positions, it is due to their work.
    அப்படியானால் இ.கம்யுனிஸ்ட் கட்சியில் பிருந்தா கரத்திற்கு முன்பு பொலிட்பீரோ உறுப்பினர் ஆகும் தகுதி எந்தப் பெண்ணிற்கும் இருந்ததில்லை என்று சொல்கிறீர்களா.
    ஆண்களுக்கு வேறு விதிகள் என்றும் சொல்லியிருக்கலாமே.சீதாராம் யெச்சுரிக்கும்,பிரகாஷ் கரத்திற்கும் வெகுமக்கள் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  18. நடுநிலையில் நின்று எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்! படித்தவுடன் நண்பர்கள் அனைவருக்கும் உங்களுடைய கட்டுரையை மின்னஞ்சலிட்டுவிட்டேன்!

    பதிலளிநீக்கு
  19. கண்ணகி!
    உண்மைதான். பார்ப்போம். நன்றி.

    அமைதிச்சாரல்!
    நம்பிக்கை முக்கியம்தானே.
    நன்றிங்க.


    CLASSBIAS!
    //The panchayat experience shows that 'uneducated' women in villages and small towns have emerged as successful leaders against heavy odds. It is these women who should be taken to the Assemblies and Parliament.//
    ஆஹா.! அருமை. ஆமோதிக்கிறேன்.


    அனானி!
    உங்களுக்கு இன்னொரு அனானியே பதில் சொல்லி இருக்கிறார் கீழே. படித்தீர்களா?


    ராம்ஜி!
    குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரியா..... :-))))))

    பதிலளிநீக்கு
  20. பாலாசி!
    ஆமாம், நண்பரே!


    அமுதா!
    நன்றி.


    அமித்து அம்மா!
    நன்றி.


    ராஜநடராஜன்!
    நன்றி.


    பவித்ராபாலு!
    //இன்று கூட பல நண்பர்கள் பெண்களை நோக்கி ஏன் இனிப்பு கொடுத்து கொண்டாடவில்லை என்றும், தாங்கள் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை விட்டுக் கொடுத்து விட்டதற்காக (தியாகம்-?) அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,, என்ன செய்ய தோழர்?//

    இப்படித்தான் இருக்கிறது நமது சமூகம். நியாயமான (50%?) ஒன்று நிக்ழந்திருக்கிறது என்பதைவிட, தங்களது பெருந்தன்மை எனக் காட்டிக்கொல்வதில்தான் இவர்களுக்கு அக்கறை. இந்த மனோபாவங்களில் மாற்றங்களை முதலில் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.


    அம்பிகா!
    நிச்சயம் நம்புவோம்.


    சுவாமி!
    நீங்கள் சொல்கிற பல விஷயங்களில் ஒத்துப் போக முடிகிறது. ஆனால், இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களின் தொடர்ந்த நடவடிக்கைகளினால் மட்டுமே சாத்தியப்படும். பாதை வகுக்கப்பட்டு இருக்கிறது. பயணம் நிறைய அனுப்வங்களைத் தரும்தானே?


    அனானி!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கலீல்!
    //atleast women will stop saying that they are not treated equally.//
    என்ன நண்பரே! இப்படிச் சொல்லி விட்டீர்கள். இதற்காகத்தானா, இந்த மசோதா.
    பவித்ரா பாலுவின் பின்னோட்டத்தின் கடைசி பாரா பாருங்களேன்.


    அனானி!
    பீடம் தெரியாமல் சாமி ஆட வேண்டாமே!


    subu!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    ஆதி!
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. Anonymous reply to an anonymous' response to an anonymous posting:
    I agree that women legislators like Balabarathi have done very very well in Assembly. She is an excellent poet and orator also. Definitely the credit goes to the CPI(M) for this.
    You say that communist parties do not nominate people to leadersship: But in Tamil nadu it happened a few years before when a leader's daughter was elevated to the Central Committee, taking the entire organisation by surprise. What was the basis for this promotion? Exceptional work in the party or in its women's wing? There was at least one woman leader who is also an intellectioal who was not considered even to the State secretariat of the CPI(M. She has a long history of serving the party and the women's movement after giving up an excellent career at the international level.

    பதிலளிநீக்கு
  23. ஏறிய விலைவாசியைப் பற்றியோ பணவீக்கத்தைப் பற்றிப் பேசுவதையோ தள்ளிப் போட ஒரு வழி. பெண்களின் உரிமை குறித்த மாற்றங்கள் கிராமங்களிலிருந்து தனி மனங்களிலிருந்தும் தொடங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!