மாதவராஜ் பக்கங்கள் - 21

யக்குனர் பாலாவின் புதிய படத்தில் கதை வசனம் எழுதி பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செங்கோட்டை அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வரும் ஷீட்டிங்கிற்குச் செல்லும் வழியில் தன் அண்ணனைப் பார்க்க சாத்தூருக்கு நேற்று வந்திருந்தார். அப்படியே எங்கள் வீட்டிற்கும் வந்து சில மணிநேரங்கள் பேசியிருந்துவிட்டுச் சென்றார். தொடர்ந்த பயணங்களோடு வாசிப்பும், எழுத்துமானவர். ரசித்து சிரித்துக்கொண்டே உரையாடும் இயல்பு மிக எளிதில் கவர்வதாக இருக்கும். நானும், காமராஜும், அம்முவும் கேட்டுக்கொண்டு இருந்தோம்.

சினிமா குறித்த பிரமைகளற்ற இயக்குனர் பாலா, எம்.ஜி.ஆரிடம் இருந்த சினிமா ஆற்றல், எழுத்தாளனுக்கும் சமூகத்துக்குமான உறவு, இயக்கம் சார்ந்தவர்களின் சமூக பங்களிப்பு, அவரது ரஷ்ய பயணம் என்று ஒன்றிலிருந்து ஒன்று தாவி தொடர்ந்த உரையாடல் அந்தன் செகாவ், டால்ஸ்டாய் பக்கம் வந்தது. டால்ஸ்டாயின் மகளை செகாவ் விரும்பியது, டால்ஸ்டாய்க்கு அது பிடிக்காமல் போனது என்றொரு தகவலோடு  ஆரம்பித்தவர் டால்ஸ்டாயின் டைரிக்குறிப்புகளும், அவரது மனைவியின் டைரிக்குறிப்புகளும் புத்தகங்களாக வந்திருப்பதாகச் சொன்னார்.

இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மேதையாக அறியப்பட்ட டால்ஸ்டாய், அவரது மனைவிக்கு ரொம்பச் சாதாரணமானவராகவும், தெளிவற்றவராகவும் இருந்திருக்கிறார். அதில் ஒன்று, வீட்டில் மணியடித்து சாப்பிடும் வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தியதாம். முதல் மணியடித்ததும் குழந்தைகளும், இரண்டாம் மணியடித்ததும் பணியாளர்களும், மூன்றாம் மணியடித்ததும் பெரியவர்களும் சாப்பிட வேண்டும் என ஒரு விதியை உருவாக்கினாராம். அவரவர்கள் விருப்பப்பட்ட நேரம் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை இப்படி மாற்றியமைத்தது பிடிக்கவில்லையாம் அவரது மனைவிக்கு. நடைமுறைப்படுத்த சங்கடப்பட்டாராம்.  இப்படிச் சின்னச் சின்னச் சம்பவங்களோடு சொல்லிக்கொண்டே சென்றார். ’நேற்று ஏன் மோசமாக நடந்துகொண்டோம்’ என்ற ரீதியில் எழுதிய பக்கங்கள் நிறையவாம் டால்ஸ்டாயின் டைரியில்.

மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள்  எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

 

சாயங்காலத்திற்கு மேல் எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வந்திருந்தார். சாத்தூரில் எழுத்தாளர் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்.

எப்போதும் உற்சாகமாக மனநிலையில், மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பேசுகிற தமிழ்ச்செல்வனாக அவர் இல்லை. டபிள்யூ.ஆர்.வியின் மரணம் உலுக்கி இருந்தது. இதுதான் சமயம் என கட்சிமீது அவதுறுகளையும், சேற்றையும் வாரி இறைக்கிறார்களே என வேதனைப்பட்டார். இயக்கம் ஸ்தம்பித்துப் போயிருப்பதிலிருந்து விடுபட்டு, அனுபவம் பெற்று,  பயணப்படவேண்டும் என்ற துடிப்பு அவரிடமிருந்தது.

எனக்குள்ளும் நிறைய ஒடிக்கொண்டு இருந்தது. பிறிதொரு சமயம் பேசலாம்.

 

ரவில் நானும் காமராஜும்  நிலவின் கீழே மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். மீண்டும், குறும்படங்கள் எடுக்க வேண்டும் என உறுதி வந்திருந்தது. வார்த்தைகள் நட்சத்திரங்களாகி விண்ணில் மிதக்க ஆரம்பித்தன.

 

ப்படியாக இந்த ஞாயிறு கூடியது.

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. \\மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்\\

  டைரி மூலமாக தான் அறிவுஜீவிகளின் இன்னொரு பக்கம் தெரிகிறது.
  நம் அம்மு டைரி எழுதினால் எப்படியிருக்கும் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்\\

  சொல்ல முடியாது, அப்படி அவர்கள் நாட்குறிப்பு எழுதினால் அது குறிப்பிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களையும் விட அதிக வரவேற்பு
  பெறலாம் ;)

  பதிலளிநீக்கு
 3. நல்ல தொகுப்பு!

  /நம் அம்மு டைரி எழுதினால் எப்படியிருக்கும் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்./

  :-)

  பதிலளிநீக்கு
 4. அம்முவின் டைரியை படித்தால்.

  இன்று வீட்டுக்கு வரவில்லை...

  இன்று வெளியூர் சென்று இருக்கிறார்கள்..

  போன்ற வார்த்தைகளே அதிகம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. குறும்படத்திற்கு அழகான ஹீரோ தேவைன்னாய்ங்களே :)

  பதிலளிநீக்கு
 6. //மிகப்பெரிய ஆளுமைகளின் அன்றாட வாழ்க்கை சாதாரணமானதாகவும், சமயங்களில் மிகச் சாதாரணமாகவும், எப்போதாவது விநோதமாகவும் இருக்கும் போலும். இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்//.

  எடுத்து கொடுக்காதீர்கள் மாது.

  :-)

  மொட்டை மாடி..

  நல்லாருங்கையா..

  :-))

  பதிலளிநீக்கு
 7. சுவாரஸ்யமாக இருந்தது வாசிக்க.

  எஸ்ராவின் கதை சொல்லும் திறன் அபூர்வமானது ,அவரது வாசிப்பின் ஆழத்தைக் காட்டும் படைப்புகள் அவருடையவை.நான் பிறந்ததும் சாத்தூரில் தான்.சாதாரணப் பிரஜையாகச் சொல்வதானால் அங்கத்திய மக்களின் பார்வையில் ரெண்டும் கெட்டான் தனமான நகரம் அது.கிராமமாகவும் அல்லாமல் நகரமாகவும் அல்லாமல் ஒரு வடிவத்தில் இருக்கும்.அங்கிருந்து இப்படி உலகப் பார்வை கொண்ட படைப்பாளிகளை அறிய நேர்கையில் மிகுந்த சந்தோசமாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 8. ///இப்படி எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளும் டைரிகள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்///

  அறிவுஜீவிகளின் மனைவியர் பட்ட துயரங்கள் தனியாக பல தொகுதிகளாக வெளியிடும் அளவுக்கு வரலாற்றில் உள்ளது,
  என்றாலும் பல சந்தர்ப்பங்களில் குடும்பங்களில் பெண்கள் ஆண்களின் அசட்டுத்தனமான செய்கைகளைக் கூட பாராட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.. யதார்த்தமாக விமர்சனரீதியான கருத்துக்களை கூட வெளியிட பெண்கள் முன்வருவதில்லை..

  குடும்ப ஜனநாயகம் பற்றி நாமும் ரொம்ப நாளாக பேசுகிறோம் இல்லையா?

  குடும்பம் என்பது காதலில் கட்டமைக்கப்பட்டதாக மட்டும் இருந்தால்,பல சிரமங்கள் தவிர்க்கப்படும் என்பது என் கருத்து

  பதிலளிநீக்கு
 9. அன்பு மாதவராஜ்,

  நல்ல பகிர்வு...

  குறும்படம்...!! காத்திருக்கிறேன்

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 10. மாதவராஜ்,

  அழகானதொரு ஞாயிறு :-)

  பகிர்தலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பாரதியார் கூட வெட்டிலும் தெருவிலும் சாதாரண மனிதராகவே வாழ்ந்து இருக்கிறார்.

  கிண்டலாக கேட்கிறேன், எஸ்ரா வீடு டைரி கிடைக்குமா..

  பதிலளிநீக்கு
 12. விஜியண்ணா சிரிச்சு முடியல...

  பதிலளிநீக்கு
 13. ஈரோடு கதிர்!
  ஆமாம். அருமையான் ஞாயிறுதான். நன்றி.

  அம்பிகா!
  விஜியண்ணன் சொல்வதைப் பார்த்தாயா.

  அமித்து அம்மா!
  நீங்கள் சொல்வது உண்மைதான்.


  நிலாரசிகன்!
  நன்றி.


  சந்தனமுல்லை!
  நன்றி.


  விஜயராஜ்!
  அண்ணா, அத்தோடு விட்டால் சரி....


  செல்வேந்திரன்!
  அப்படி யாராவது தெரிந்தால் சொல்லு தம்பி.


  பா.ரா!
  நீங்களும் ஒருநாள் மொட்டை மாடிக்கு வரத்தானே போகிறீர்கள்.


  கார்த்திகா வாசுதேவன்!
  ஆமாம். அவருடைய பேச்சில் அப்படியொரு சுவராசியம் இருக்கும்.


  பவித்ரா பாலு!
  முக்கியமான விஷயங்களை நீங்கள் முன்வைத்திருப்பதாக படுகிறது. ந்ன்றி.  சுரேஷ் கண்ணன்!
  நன்றி.


  ராகவன்!
  நன்றி.


  லேகா!
  நன்றி.


  யாஹூ ராம்ஜி!
  அவரிடமே கேட்டுச் சொல்கிறேன்.


  காமராஜ்!
  உனக்கேண்டா இந்தச் சிரிப்பு. நானும் உன்னைப் பார்த்துச் சிரிக்க ரொம்ப தூரம் இல்லை.

  பதிலளிநீக்கு
 14. ஓர் அற்புதமான ஞாயிறு அனுபவத்துடன் தங்கள் அறிமுகம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..
  உங்கள் பக்கங்களை ரொம்பவே தாமதமாக அறிந்துகொண்டுள்ளேன்... தொடர்ந்து படிக்கிறேன்...

  Nice to read you sir :)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!