நடப்பதெல்லாம் நன்மைக்கே..............

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......என்ற பழைய திரைப்படப் பாடல், கவியரசு கண்ணதாசனின்  பாடல்களில் மிக பிரசித்தம்.  நினைப்பது நடப்பது இருக்கட்டும், நினைக்கிறபடி நடக்க முடிகிறதா நம்மால் என்று கொஞ்சம் அசைபோடுவோம் வாருங்கள்.  சொல்வது சுலபம். சொன்னபடி நடப்பது சிரமம் என்பது முதுமொழியல்லவா. வேறு எதற்குப் பொருந்துமோ, நடை விஷயத்திற்கு இது கனப் பொருத்தம்.

நடை வாழ்வின் முக்கிய அங்கமானது.  தளர்நடை போடும் குழந்தைப் பருவத்தில் அழகியலாகத் துவங்குகிற நடை அப்புறம் நடக்க சாத்தியமான கட்டம் வரை எத்தனை நடை, எத்தனை விதமான நடை...ஒரு நடை போய்விட்டு வந்துவிடலாம் என்று துவங்கி,  நடையாய் நடந்தும் கிடைக்காத வேலை, படியாத ஆசாமி, நடவாத காரியம், வாய்க்காத கடன், குதிராத வரன்....என்று சோர்ந்து விழுகிற வரை நடக்கின்றனர் மனிதர்கள்.  கவலைகளிலிருந்து விடுதலை நோக்கி நடக்கும் நடை ஒருபுறம், விடுதலையை நோக்கிய திசையில் இன்னொரு தளையில் சிக்கவைக்கும் நடை ஒரு புறம். ஆனாலும், தவிர்க்க முடிவதில்லை இந்த நடையை.
நடையினால் ஆய பயனென் கொல் என்று வள்ளுவர் மாதிரி ஒரு கேள்வி போட்டுத்தான் பார்ப்போமே.  நடை கால்களுக்கு வலு சேர்க்கிறது.  தசைகள், மூட்டு எலும்புகள் வலுப்படுகின்றன. இரத்த ஓட்டம்  சீராகிறது.  புத்துணர்ச்சி கிடைக்கிறது.  நுரையீரல்களுக்கும் சுவாச வேலை இலகுவாகிறது.  எவ்வளவிற்கு நடக்கிறோமோ, அவ்வளவிற்குண்டான பயன் கிடைக்கவே செய்கிறது.

ஆனால், பெரும்பாலும் நடை என்பது,  நடைபயிற்சி என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிற பொருளில் ஏதோ நாற்பது நாற்பத்தைந்தைக் கடந்த மனிதர்களுக்குத் தான் என்பது போல புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படியில்லை, வயது வேறுபாடின்றி எந்தப் பாலரும் நடக்கலாம்.  நடை அவசியம் என்று மருத்துவரால் அறிவுறுத்தப்படுகிறவர்கள், அன்பு கூர்ந்து மருத்துவர் சொல்படி 'நடப்பது' நல்லது.

நடப்பதை ஓர் உற்சாக அனுபவமாக எடுத்துக் கொண்டு நடப்பதுதான் கூடுதல் பயனளிக்க வல்லது.  கடனுக்காக நடப்பது (இங்கு சிலேடை எதுவும் பயன்படுத்தப்படவில்லை, கடனுக்காக என்றால் கடமைக்காக என்ற பொருளில்) - இயந்திரகதியாக நடப்பது அத்தனை பலனளிக்காது. அதாவது, கடிகாரத்தில் ஒரு கண், உடனே மனத்தில் நாற்பத்தைந்து நிமிட நடைக்கான ஓர் உத்தரவு, சரக் சரக் சரக்கென்று இராணுவ ரீதியான நடை, எப்பொழுதடா நாற்பத்தைந்து நிமிடம் முடியும் என்று இடையே இடையே கடிகாரத்தில் மீண்டும் ஒரு கண்....என்று ஒரு தவிர்க்க முடியாத கடனாக முடித்துவிட்டு வருவது உடலுக்கோ, உள்ளத்திற்கோ அத்தனை புத்துணர்ச்சியைத் தராது. அந்த நடை நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கிய நடையாக இராது,  கடந்த காலக் கசப்பான தடயங்களை நோக்கிய அலுப்பான நடையாக மாறிவிடுகிறது.  நடையின் நோக்கமே இழந்த வசந்தங்களை மீட்பதான தாகத்துடன் இருந்தால் ஒரு சுருதி சுத்தமான பாடல் போல அவ்வளவு சுகந்தமாக அமையும்.

இத்தனை நேரம் அல்லது இத்தனை தூரம் நடப்பது தேவை என்ற திட்டத்தை வைத்துக் கொள்வதில் தவறில்லை.  அந்த இலக்கை அவரவர் சொந்தத் திறனிலிருந்து பார்த்துப் படிப்படியாக உயர்த்திச் சென்று அடைவதுதான் சிறந்தது.  அடுத்தவரது நடையைப் பார்த்தோ, அடுத்தவரது அறிவுறுத்தலைக் கேட்டோ, ஒரு சிலரது பேச்சுக்கு அஞ்சியோ எல்லாம் வீறாப்பு நடைக்கு இறங்கிவிடக் கூடாது.  (இது வாழ்க்கையின் எல்லா அம்சத்திற்கும் பொருந்தும் தானே!).

உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றுக்கான சிகிச்சை எடுப்போர் போன்றோர் அன்றாடம் குறைந்தபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்களாவது 'வாக்கிங்' போனால்தான் பலனுண்டு என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.  முதல் இருபது நிமிட நடைக்கான எரிபொருளாக நமது உடலிலிருக்கும் குளுக்கோஸ் சத்து பயன்பட்டுவிடுகிறது. எனவே அதற்குமேலும் நடந்தால்தான் கொழுப்புச் சக்தியைக் கரைக்க முடியும் என்ற அளவில்தான் இந்த குறைந்தபட்ச அளவுகோல் அவசியமாகிறது. 

நடக்கும்போது உரிய காலணிகளை அணிவது நல்லது.  பாதம் தேய்ந்து போன காலணிகள் ஏற்றலும் தாழ்த்தலுமான முறையில் அழுந்துவதால் அவற்றால் கால்களுக்கு வலிதான் ஏற்படும். அதுவே கூட நடையை சோர்வாக்கும்.  அதேபோல் காற்று உட்புகும் வண்ணம் அமைந்துள்ள - சற்று மிதமான எடை உடையதாகவுமுள்ள இதம் பதமான காலணிகள் ஏற்றது.

சீரான பரப்பில் நடப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  மேடும் பள்ளமுமானதாகவோ, கரடு முரடானதாகவோ உள்ள பாதையில் நடக்க வேண்டிய சமூகத் தேவையைத் தவிர்க்கக் கூடாதுதான். ஆனால்,  அந்தப் பாதையை எல்லோருக்குமான சம பரப்பாக மாற்ற வேண்டிய நினைவுகளோடு, நடைபயிற்சியின் போது அதற்கு உகந்த பாதையில் நடக்க வேண்டும். 

பூங்கா போன்ற இடங்கள் கிடைத்தால் விடவேண்டாம்.  சின்னஞ்சிறு வட்டங்களாக இல்லாமல், நீள் வட்டப் பாதையாக இருந்தால், அலுப்பின்றி நடக்கலாம். நகரங்களிலும், மாநகரங்களிலும் பாதசாரிகளுக்கு அத்தனை மரியாதை கிடைப்பதில்லை.  எல்லாமே வாகனங்களின் ஏகபோக உரிமையாகிக் கொண்டிருக்கின்றன நமது வீதிகளும், சாலைகளும்.  எனவே, பாதுகாப்பு கருதியாவது உரிய இடம், உரிய நேரம் பார்த்து நடக்க வேண்டியது அவசியமாகிறது.

உலக இன்பங்களைப் பாடுகையில், 'வானகமே, இளவெயிலே, மரச்செறிவே....'என்றான் மகாகவி.  இளவெயில் உடலுக்கு மிகவும் உகந்தது. அப்படியான காலை நேரங்கள் நடைக்கு ஏற்றது. அல்லது மாலை நேரங்கள் இருக்கவே இருக்கின்றன. வானகத்தை, மரச்செறிவை, பூக்களை, கடந்து போகும் மழலையின் ஈர்க்கும் புன்சிரிப்பை ரசித்துக் கொண்டே நடக்கலாம்.  அபூர்வக் காட்சிகள் எதிர்ப்படும்போது ஏதோ விரதம் எடுத்தவர் போல முகத்தை வேறுபக்கம் பார்த்துக் கொண்டு போனால் நமக்கு யாரும் தீவிர நடை பயிற்சியாளர் என்று விருது கொடுக்கப் போவதில்லை. எந்தப் பயிற்சியும் உடலும், உள்ளமும்  இன்புறும் விதம் எடுக்க வேண்டும்.

வேர்க்க விருவிருக்க நடந்து திரும்பினால்தான் ஆயிற்று என்று கருத வேண்டாம்.  சிலருக்கு பத்தடி தூரம் போவதற்குள் முதுகு நனைந்திருக்கும். வேறு சிலர் வேர்வை என்ற சொல்லுக்கு எத்தனை எழுத்து என்று கேட்பவராக இருக்கலாம்.  அதெல்லாம் யோசித்துக் கொண்டு நடக்க வேண்டியதில்லை.  உற்சாகமாக இரண்டு கைகளையும் வீசிப் போட்டுக் கொண்டு  'ஆகட்டுண்டா தம்பி ராஜா, நட  ராஜா' என்று நடக்க வேண்டியது தான்.

காலை புறப்படும்போது இலேசாக ஏதாவது திடப் பொருள் உட்கொள்வதில் தவறில்லை. வெறும் வயிற்றோடு ஜனத்திரள் இருக்கும் பகுதியில் நடக்க நேர்ந்தால் கிருமிகள் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.  பொதுவாகவே ஜன சந்தடியோ, வாகனப் புகை மண்டலமோ இல்லாத பகுதியைத் தேர்ந்தெடுத்துவிடுவது நல்லது.  இந்த ஆண்டாவது 'போகி' அன்றைக்கு தெருக்களில் குப்பை கூளங்களைக் கொளுத்திக் கொண்டாட வேண்டாம் என்று போராடிப் பாருங்கள். எதற்கும் அத்தகைய சூழ் நிலைகளில் நடையைத் தவிர்த்துவிடுங்கள்.

சிலர் அதிக சாப்பாடு சாப்பிட்டு விட்டு கொஞ்சம் காலார நடந்துவிட்டு வரலாம் என்று நினைப்பதுண்டு.  அதில் தவறில்லை; ஆனால், வயிறார உண்டு விட்டு நீண்ட நடை நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.  அது, செரிமான வேலைக்கு இடையூறாக இருக்கக் கூடும். நடந்தால் எடையை சித்து வேலை மாதிரி குறைத்துவிட முடியும் என்று பலரும் நம்புகின்றனர்.  அது உண்மையில்லை. நடப்பது அதன் பங்கிற்கான கலோரிகளைக் குறைக்க உதவும்.  எடையைக் குறைப்பது என்பது உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம், இவற்றுக்கான மருந்துகள் எல்லாம் சம்பந்தப்பட்டது.  கொழுப்புச் சத்து குறைத்துக் கொள்ளாமல் - வாட்டி எடுக்கும் பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் உளச்சோர்விலிருந்து விடுபடாமல், வெறும் நடையினால் மட்டும் பெருத்த உடல் இளைத்துவிடுவதில்லை.

அதே போல், 'அடுத்த வேலை என்ன செய்ய வேண்டும், ஐயோ இன்றைக்கு இருபது நிமிடம் தாமதமாக எழுந்ததால் சமையல் அரோகரா ஆகிவிடுமே, குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ, நாம் போவதற்குள் காண்ட்ராக்டர் வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ.....' என்றெல்லாம் கவலைகளை அடுக்கிக் கொண்டே நடை பயிற்சி செய்தால் சோர்வு குறையாது.  அதனால் தான் சிலருக்கு நடை பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பட பட வென்று அடித்துக் கொள்வதாக உணர்வது.  அது நடையின் மீதுள்ள பிழையன்று.  தவிர்க்க முடியாத வேலைகள் இருக்குமானால், அன்று நடையைத் தவிர்த்துவிட்டு முன்னுரிமை வேலைகளை கவனிக்கலாம். அல்லது வேறு ஒருவரிடம் பொறுப்பு அளித்துவிட்டு இலேசான மனத்தோடு நடையை கவனிக்கலாம். ஒரு நாள் அல்லது தொடர்ந்து ஓரிரு நாட்கள் நடை பயிற்சி எடுக்க முடியவில்லை என்று வருந்துவதால் ஏற்படும் அசதி, நடை இல்லாததால் ஏற்படும் இழப்பைவிட அதிகமானது.  இதில் தெளிவு தேவை. நடையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் தண்ணீரை அருந்துவது, அப்பாடா என்று மின்விசிறியைச் சுழலவிட்டு அதன் கீழ் நிற்பது, குளிர்பதன அறைக்குள் போய் உட்கார்வது போன்றவை, நடையினால் பெற்ற பயன்களை நழுவச் செய்துவிடும்.  சூடான உடல் தானாகத் தணிந்து வர விட்டு விடவேண்டும்.

அன்றாடப் பணிகளின்போது நடக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் நடைக்கே முன்னுரிமை கொடுப்பது நல்லது. பிறந்த குழந்தை எப்போது நடக்கும் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.  வயதான காலங்களில் இறுதி மூச்சுவரை அடுத்தவர் உதவியின்றி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.  இடையில் ஏன் தவிர்க்க வேண்டும்.  நடப்பது எல்லாம் நல்லதற்கே என்று நடக்கலாமே.

நடப்போம்.   அநீதிக்கு எதிரான பேரணிகளில் நடப்போம்.  சமத்துவ உரிமைகளுக்கான குரல்களோடு நடப்போம்.  புவி வெப்பமயமாதலோ, வேறு தாக்குதல்களோ அவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாதையில் மனித குல மேன்மைக்கான நடையை நடப்போம். 

எஸ்.வி. வேணுகோபாலன் ( மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து)

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //சீரான பரப்பில் நடப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடும் பள்ளமுமானதாகவோ, கரடு முரடானதாகவோ உள்ள பாதையில் நடக்க வேண்டிய சமூகத் தேவையைத் தவிர்க்கக் கூடாதுதான். ஆனால், அந்தப் பாதையை எல்லோருக்குமான சம பரப்பாக மாற்ற வேண்டிய நினைவுகளோடு, நடைபயிற்சியின் போது அதற்கு உகந்த பாதையில் நடக்க வேண்டும்//

    :) :)
    நடந்து அல்ல துரத்திப் பிடிக்க வேண்டிய கனவு.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நடையில் எழுதியிருக்கின்றீர்கள்.

    //////நாற்பத்தைந்து நிமிட நடைக்கான ஓர் உத்தரவு, சரக் சரக் சரக்கென்று இராணுவ ரீதியான நடை, எப்பொழுதடா நாற்பத்தைந்து நிமிடம் முடியும் என்று இடையே இடையே கடிகாரத்தில் மீண்டும் ஒரு கண்....என்று ஒரு தவிர்க்க முடியாத கடனாக முடித்துவிட்டு வருவது உடலுக்கோ, உள்ளத்திற்கோ அத்தனை புத்துணர்ச்சியைத் தராது.///////

    முதலில் ஒரு மாதம் வரை எனக்கும் அப்படித்தான் இருந்தது. (நானும் நடையும்) பழகிய பின் உற்சாகம் பிறந்தது என்னவோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வுக்கு நன்றி.. பல தகவல்கள் தெரிந்தவை என்றாலும் சில நல்ல விஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்ல படுத்தல் அவசியமாகிறது

    பதிலளிநீக்கு
  4. நல்ல பயனுள்ள இடுகை.

    பொதுவாகவே உடற்பயிற்சி என்பது ஒரு தண்டனை போன்றது என்ற தவறான எண்ணம் இந்தியர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்பது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கட்டுரை...
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  6. நடை குறித்த பதிவிற்குள் நடந்து பார்த்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

    இந்தக் கட்டுரை Bank Workers Unity பத்திரிகையின் ஜனவரி மாத இதழில் வெளிவந்திருப்பதைப் படித்த ஒரு நண்பர் (பெயர்: வெங்கடேசன், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் புத்தகக் கடை நடத்தி வருபவர்) ஒரு வித்தியாசமான அனுபவத்தைச் சொன்னார். ஏனோ தெரியவில்லை, நடப்பது எல்லாம் நன்மைக்கே கட்டுரையை அவர் கடைசி பத்தியிலிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று முதல் பத்தி வரை வாசித்து மிகவும் ரசித்திருக்கிறார். அப்புறம் என்னடா இது என்று முதலிலிருந்து இறுதி வரை முறையாக வாசித்த போதும் அவரால் அதே வாசிப்பு இன்பத்தை அடைய முடிந்திருக்கிறது. பத்திகள் அமைப்பும், விஷயத்தை அடுக்கி இருப்பதும், எப்படி வாசித்தாலும் ரசிக்க வைத்திருக்கிறது என்றார்.

    நான் சொன்னேன்: இப்படித்தான் கோவையில் எழுபதுகளில் நடை மன்னன் பார்த்தசாரதி என்ற அபூர்வ மனிதர், பின் பக்கமாக நடந்து போகும் சாதனை ஒன்றைச் செய்வார். நடை பற்றிய கட்டுரையில் நீங்கள் பின்பக்க நடை நடந்திருக்கிறிர்கள்.

    கருத்துச் சொன்னவர்களுக்கு நன்றியும், பொங்கல் வாழ்த்துக்களும்.

    எதோ நடந்தது நடந்துவிட்டது என்று ஏற்றுக் கொண்டவர்களுக்கும் நன்றி.
    புரவலர் மாதவ் அவர்களுக்கு எப்போதும் போல் நன்றி.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!