அணைக்க முடியாத நெருப்பு!

 

பத்து நாளைக்கு முன்தான் ரொம்ப சந்தோஷமாய் பேசிக்கொண்டு இருந்தார். “ திருநெல்வேலிப் பேட்டையில் இருக்குற அந்த அருந்ததியர் சமூகத்து மக்கள் சொன்னாங்க... உங்க குடும்பமே நல்லயிருக்கணும்னு. இதுதான் மாது நாம் செய்ற வேலைக்கான சன்மானம். என்ன சொல்றீங்க...? வாங்கின சம்பளத்த வீட்டுக்குக் கொண்டு போக முடியாம வட்டிக்காரன்கிட்ட கொடுத்துட்டு, வயிறெரிந்து போயிருக்கும் அந்த பாவப்பட்ட மனுஷங்களுக்கு ஒரு ஸ்கீம் வொர்க் அவுட் பண்ணி லோன் கொடுத்தோம். இப்ப கந்து வட்டிக்காரன் கிட்ட இருந்து மீண்டு, ஒருவேளையோ, ரெண்டு வேளையோ நிம்மதியாச் சாப்பிடுறோம்னு சொல்றாங்க...” இப்படி அவருடைய பேச்சுக்களில் பல சம்பவங்கள், உணர்வு மிக்க தருணங்கள் இருக்கும். “எதோ தொழிலா நமது வேலையைச் செய்யக் கூடாது. அதில் ஒரு தவமும், சந்தோஷமும் இருக்க வேண்டும்” என்பார்.

முத்து விஜயன் அவர் பேர். ஐம்பதைத் தாண்டிய வயது. இருபது வருஷமாக அவரோடு பழக்கம். எங்கள் வங்கியில் உள்ள மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். எந்த வங்கிக்கிளையில் பணிபுரிந்தாலும் கொஞ்ச காலத்தில் அங்குள்ள மக்களின் பிரியத்திற்குரியவராகி விடுவார். “ஐயாயிரம் ருபாய்க்கோ, ஐம்பதாயிரம் ருபாய்க்கோ ஒரு நகைக்கடன் கொடுக்குறத விட, கம்மலை கையில் வைத்துக்கொண்டு  அவசரத்துக்கு ஒரு ஐநூறு ருபா லோன் கிடைக்காதா என்று வருகிறவர்களுக்கு மொதல்ல சர்வீஸ் பண்ணனும். ஐயாயிரத்துக்கோ, ஐம்பதாயிரத்துக்கோ லோன் கொடுக்க நிறைய பேங்க் இருக்கு. ஐநூறுக்கு கொடுக்க நாமதான இருக்கோம்” என்பார். இதுதான் அவரது தத்துவம். வாழ்வு பற்றிய சிறுகுறிப்பு.

முந்தாநாள் இவரைத்தான் எங்கள் வங்கி நிர்வாகம் திடுமென சஸ்பெண்ட் செய்துவிட்டது. பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் தலைவராயிருக்கும் அவரையும், அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை. சமீபமாக எங்கள் வங்கியில் நடந்து வரும் போராட்டங்களில் அவர் ஒரு முக்கியமான பாத்திரமாய் இருந்தார். இதுதான் நிர்வாகத்தின் கோபத்திற்கு காரணம். ‘தாங்கள் கொடுத்த கடன்களில் முறைகேடுகள் இருக்கின்றன.’ என்று மட்டும் சொல்லிவிட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டது. என்ன லோன்கள், எப்படி முறைகேடுகள் என்ற எந்த விபரங்களும் இல்லை. அவரது 26 வருட கால, அப்பழுக்கற்ற வங்கிப் பணியை ஒரு காகிதத்தில் கொச்சைப்படுத்தவும், அவரை நிமிடத்தில் குப்பையைப் போல தூக்கி எறியவும் நிர்வாகம் துணிந்திருக்கிறது. போராட்டத்தை மழுங்கடிககவும், சிதைக்கவும் அவரை பலிகிடா ஆக்கியிருக்கிறது.

சிறிய புன்சிரிப்புடன் இரண்டு நாளாய் விருதுநகரில் சங்க அலுவலகத்தில் இப்போது நடமாடிக்கொண்டு இருக்கிறார். அடுத்து என்ன செய்வது, போராட்டங்களை எப்படி தீவீரப்படுத்துவது என திட்டமிடல்களும், விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன. அலைச்சல்களும், கோபங்களுமாய் நேரங்கள் விரைந்து கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில் வேகமும் வேண்டியிருக்கிறது. நிதானமும் வேண்டியிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட மனநிலைகள் விளைவுகளை யோசிப்பதில்லை.

நேற்று இரவில் தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த கமிட்டி மெம்பர்கள் எல்லோரும் அவரவர் ஊர்களுக்குச் சென்ற பின் மிகச்சிலரே மிஞ்சியிருந்தோம். விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குப் பின்னால் சங்கக் கட்டிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நின்றிருந்தது.  காட்டுப்புதர் போல அடர்ந்து கிடக்கும் செடிகொடிகள் அந்தக் கட்டிடத்தைத் தின்றுவிடும் மூர்க்கத்தோடு சுற்றி வளைத்துக் கிடந்தன. வாசல் படிகளில் உட்கார்ந்து நான், காமராஜ், முத்து விஜயன், சோலைமாணிக்கம், செல்வகுமார் திலகராஜ், அருண், அண்டோ பேசிக்கொண்டு இருந்தோம். இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்திருக்கும் முத்து விஜயன் ஆங்கிலக் கவிதைகளையும், திருக்குறளின் அர்த்தங்களையும் வியந்து வியந்து சொல்லிக் கொண்டே இருந்தார். பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் படித்து லயித்துக் கிடந்த அவரது அனுபவம்  எனக்கு புதியதாகவும், நெருக்கமானதாகவும் இருந்தது. ஊர், வயக்காடு, அரிசி குத்திச் சாப்பிட்ட சின்ன வயசுக் காலங்கள் என விரிந்த உரையாடல்களால் நிரம்பிக்கொண்டு இருந்தது இரவு. எங்கள் முன் ஒரு சித்தனைப் போல  உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தார் முத்து விஜயன். தூக்கத்தில் ஒவ்வொருவராய்ச் சரிய, அவர் எப்போதையும் விட உற்சாகமாயிருந்தார். ”சரி,  படுப்போம். காலையில் வேலைகள் இருக்கின்றன’ என்று அவரே முன்மொழிந்தார். படுத்துக் கிடந்தே அவர் பேசிக்கொண்டு இருந்ததாக ஞாபகம்.

கண்விழித்த போது, “இல்லம்மா.. அப்பா ரெண்டு நாளில் வந்துருவேன்..” என போனில் பேசிக்கொண்டு இருந்தார். என்னைப் பார்த்து ‘வணக்கம் மாது” என்றார்.  இன்றைக்கான ஆடைகள் இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அவசரம் அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அங்கிருந்து சாத்தூர் 24 கிலோ மீட்டர் இருக்கும். காமராஜ் பின்னால் உட்கார்ந்திருந்தான்.

காலை ஏழு மணிக்கும் பனியும், குளிரும் இருந்தன. பரந்து கிடந்த நாற்கரச்சாலையில் முன்னால் சென்று கொண்டு இருந்த பெரிய கண்டெய்னர்களை தாண்டி போய்க்கொண்டு இருந்தோம். ஓரங்களில் உட்கார்ந்திருந்த மைனாக்கள் சடசடவென மொத்தமாய் பறந்தன. கொஞ்சம் வீடுகளாய் தூரத்தில் தெரிந்தன. எதோ ஒரு சின்ன ஊராய் இருக்க வேண்டும். அதிலிருந்து மண்பாதை ஒன்று நீண்டு வந்து நாற்கரச்சாலையில் வந்து சேர்ந்துகொண்டது. அதன் முனையில் சில பையன்கள் யூனிபார்மில் புத்தகக் கட்டுக்களோடு நின்றிருந்தார்கள். ஸ்கூல் வேனுக்காக காத்திருக்க வேண்டும்.

இதையும் விட சாதாரண கிராமத்தில் இருந்து வந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முத்து விஜயன் பல கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்திருக்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்குள் இருந்த நெருப்பை நேற்று இரவில் பார்க்க முடிந்தது. இப்போதும் உணர முடிகிறது. போயும் போயும் நிர்வாகத்தின் கேடுகெட்ட காகிதமா, அதை அணைத்து விடும்! ஹா..ஹா!  இன்னொரு நாள் உற்சாகமாய் புலர்ந்துவிட்டது.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //உணர்ச்சிவசப்பட்ட மனநிலைகள் விளைவுகளை யோசிப்பதில்லை. //

  நிதர்சனம். போராட்டம் வெற்றி பெற என் வாழ்த்துகள் அண்ணா. :)

  பதிலளிநீக்கு
 2. இந்தத் தீ என்னிக்கும் அணைய வேணாம்.சுற்றி இருப்பவர்களின் உயிரோட்டத்தைத் தூண்டும் நெருப்பு ,முத்துவிஜயன் போல இருப்பவர்களின் இருத்தல்
  நமக்குத் தேவை.
  அவருக்கு நியாயம் கிடைத்தால்,கிடைக்கும் போது அதையும் பதிவிட வேண்டிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. நாற்கரச் சாலையில் செல்லும் போது கவனமாய்ச் செல்லுங்கள். கூடிய வரை இரு சக்கர வாகனப் பயணம் தவிர்ப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
 4. முத்து விஜயன் ஐயாவைப் பார்த்து வியக்கிறேன். நிச்சயமாக என்றும் அணையாது இந்த நெருப்பு. நல்லதொரு பதிவிற்கு நன்றி மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு
 5. அன்பு மாதவ்

  முத்து விஜயன் பற்றிய உங்கள் குறிப்பு எழுதப்படுவதற்கான காரணத்தை நிர்வாகம் செய்திருப்பது மட்டிலுமே வேதனையாக இருந்தது.

  கருமமே கண்ணாயினார் என்ற இலக்கணம் சொல்லும் பாடலில், பழி சுமத்தப்பட்டாலும் உதறி எழுந்து நடப்பார் என்பதையும் சேர்த்து எழுதவேண்டும் போல, முத்து விஜயனை நினைக்கும் போது.

  தொழிற்சங்க ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக வேலை நீக்கம் செய்வதன் நோக்கம் அதனை சொந்த அவமானமாகக் கருதுபவர்களை அத்தோடு முடக்கிப் போட்டு விட்டு, சிக்கல்காரர் ஒருவரை ஒழித்துக் கட்டிய நிம்மதி காணத் தான்.

  அதில் மிஞ்சுபவர்கள் பின் விஞ்சுபவர்களாக எழுந்து நிற்கும் போது, தொழிற்சங்க இயக்கம் மேலும் கெட்டிப்படும் என்ற அபாயம் அவர்களும் அறிந்தது தான். முத்து விஜயன் விஷயத்தில் நடந்திருப்பது, நடக்கப் போவது இதுதான். அதற்காகவே வாழ்த்துக்கள் கிராம வங்கி ஊழியர் இயக்கத் தோழர்களுக்கும்.

  தனிப்பட்ட அவரது ஆளுமை குறித்த எனது உற்சாகத்தையும், பரவசத்தையும் அவருக்குப் பரிமாற வேண்டுகிறேன்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 6. நேற்று பேசிக்கொண்டிருக்கையிலேயே ஆதங்கம் புரிந்தது தோழர்.
  தொழிற்சங்கரீதியாக கேள்வி கேட்பவர்களை எந்த நிர்வாகங்களுக்கும் பிடிப்பதில்லையே....
  இதில் அரசு நிர்வாகங்களுக்கும், தனியார் நிர்வாகங்களுக்கும் இருந்து வந்த இடைவெளிகளும், அடிப்படை உரிமை வித்தியாசங்களும் நாளடைவில் குறைந்து இன்று ஒன்றுமில்லாமலே ஆகிவிட்டது.

  அதற்கான எல்லா புன்னியங்களும் இந்த நாட்டின் மாபெரும் விற்பனை பிரதிநிதிகள் இருவரையுமே சாரும்.

  ஒரு அலுவலரின் நேர்மையான உழைப்பும், அனுபவமும், ஜனங்களின் மீதான அக்கரையும் எப்படி கால் தூசு பெறாமல் போய்விட்டது...?

  பிடிக்கவில்லையெனில் டீத்தண்ணியை வீசுவது போல வீசிவிட்டு போய்விடுவார்களா இவர்கள்...

  இது எந்த மாதிரியான சர்வாதிகாரம்...?

  ஜனநாயகபூர்வமான பழமையான தொழிற்சங்க போக்குகளால் மட்டுமே நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியாது தோழர்..
  முதலாளித்துவம் எப்படி காலத்துக்கு தக்க தன்னை தகவமைத்துக்கொள்கின்றதோ அதற்கேற்ப தொழிற்சங்க போராட்ட முறைகளும் மாறத்தான் வேண்டும்.
  கொடுக்கப்படும் பதில்கள் கால முழுமைக்கும் மாறா வடுக்களை உண்டு செய்ய வல்லதாக இருக்க வேண்டும்.

  முத்து விஜயன் தோழருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து யோசித்துக்கொண்டிருக்கையில் விடிகாலை பயணம் ரசிக்கதோன்றவில்லை தோழர்.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் வங்கியின் நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வரும் இது போன்ற செயல்கள் வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. பதிவைப் படித்துப் பார்க்கும் எனக்கே மனச் சோர்வாக இருக்கிறது. தங்களின் போராட்டம் வெற்றியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 8. இந்த பதிவை முத்து விஜயன் படித்தாரா ??? கண்டிப்பாக அவரை நெகிழ வைத்திருக்கும்.

  அற்புதமான மனிதரைப் பற்றி,உணர்வுப்பூர்வமாக பதிந்திருக்கிறீர்கள்..!

  பதிலளிநீக்கு
 9. //ஐயாயிரத்துக்கோ, ஐம்பதாயிரத்துக்கோ லோன் கொடுக்க நிறைய பேங்க் இருக்கு. ஐநூறுக்கு கொடுக்க நாமதான இருக்கோம்”//
  :-((


  இப்படிப்பட்ட மனிதரை எப்படிப் பிடிக்கும் நிர்வாகத்துக்கு?
  போராடுங்கள் அங்கிள்! அதிகாரத்தின் கோரப்பற்களைப் பிடுங்கி எறியுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. Mr.Muthuvijayan is the gift that was given to Pandyan Grama Bank at the proper time and place,to a worthy bank,and without expectation of return,is considered to be charity in the mode of goodness.
  Whoever knows him well,he is a gift to you too!

  பதிலளிநீக்கு
 11. Silently following you>>>Unable to tolerate the management's atrocities.
  Like this charges cannot survive.As Com.V.R.KRISHNA IYER Said in the Indira Gandhi VS Raj Narayanan case "THE LIFE IS LARGER THAN LAW''(June 24-1975)day before the Emergency declared.If you let us know the "CHARGE SHEET" WE will also contribute to the proceedings.I want to do ... vimalavidya@gmail.com

  பதிலளிநீக்கு
 12. உங்கள் போராட்டம் வெர்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 13. அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும்
  வணக்கம்.
  உங்கள் ஆதரவான வார்த்தைகள் உற்சாகத்தையும், வல்லமையையும் தருகின்றன.
  முத்துவிஜயன் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்.
  அவரது சஸ்பென்சனை எதிர்த்து போட்ட வழக்கில் நமக்குச் சாதகமாக stay order நேற்று கிடைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!