கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா
உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்
தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது
அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல
ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன
விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன
இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........
- பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)
கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.
அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல். உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.
இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது. போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை. அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள். போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது. வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.
பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....
நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார். ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது. ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.
அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு. மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.
அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல. விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது. எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.
ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது. இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார். நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின. இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது. எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.
இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர். மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை. டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள். 'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.
ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும். பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு. தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.
'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது
(கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்)
யூனியன் கார்பைட் போன்றே உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை தொடங்க உதவிய ஜெயலலிதா கட்சியோடு தேர்தல் ஆதரவு கொள்ளும் communist kalai (communists support ADMK in Tiruchendur & vandavasi elections)என்ன என்று சொல்வது.
பதிலளிநீக்குஎனவே தான் இந்த கட்டுரை மீது அதிகம் ஈடுபாடு வர வில்லை.
என்றுமே திராத வலி இருந்துகொண்டேதான் இருக்கும்
பதிலளிநீக்குஇன்று நீங்கள் மீண்டும் எழுது வடிவில் தந்திருகிறீர்கள்..
மிகவும் உபயோகமான,முக்கியமான பதிவு...
நன்றி..
எத்தனை நண்பர்கள் இந்தப் பதிவினை வாசித்திருக்கிறார்கள் என்று அறிய முடியவில்லை என்றாலும், அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. கமலேஷ் குறிப்பிட்டிருப்பதைப் போல், தீராத வலிதான் அது. குப்பன் யாகூ அவர்களுக்கு, தேர்தல் கூட்டு பற்றிய சினம்,போபால் பற்றிய எழுத்தை இவர்கள் என்ன எழுதுவது என்று பாய வைக்கிறது. அது அவரது பார்வை. தெரியாதவர்களுக்குத் தான் விளக்கங்கள் தேவைப்படும்.
பதிலளிநீக்குஜெர்மனியில் இட்லரின் நாஜிச வெறிச்செயலுக்குத் தனது தாயைப் பறிகொடுத்த ரூத் வாட்டர்மன் அவர்கள் போபால் சம்பவத்தை அறிந்து இங்கே வந்திருந்து வடித்துச் சென்றிருக்கும் சிலை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். ஓவியர் இரா.குமரகுருபரன் அவர்கள் மூலம் நான் அறிந்த அதனை இணைத்துள்ளேன். வாசகர்கள் தகவலுக்கு.
மாதவிற்குச் சிறப்பு நன்றி. போராட்டங்களுக்கு நடுவில், எனது பதிவினை வெளியிட்டதற்கு.
எஸ் வி வேணுகோபாலன்
Hi,
பதிலளிநீக்குThis is great work and very good information. This post will really help beginners, although it is basic but, it will help others in great deal in future.
நண்பர் வேணுகோபாலன் (இக்கட்டுரையின் ஆசிரியர்) அவர்களே!
பதிலளிநீக்குதோழர் குப்பன் யாஹூ குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கும் போபால் அரசியலுக்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாதா?
ஆண்டர்சனைத் தப்பிக்கவைத்த ராஜீவ் கும்பலுக்கும் அதன்பிறகு மத்திய ஆட்சியாண்ட நரசிம்மராவ், குஜ்ரால், வாஜ்பாய் உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களுக்குக்ம் போபால் பேரழிவில் பங்கிருக்கிறது. போபால் மக்களுக்கு பச்சையாக துரோகமிழைத்தது இந்திய நாடாளுமன்றம். அதற்கு ஒரு உதாரணம் போபால் விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டமானது, போபால் மக்கள் நீதிமன்றங்களை நேரடியாக நாடி நீதி கோருவதைத் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. இதுதான் நாடாளுமன்றம்! இதுதான் இந்திய ஜனநாயகம்!
ஸ்டெர்லைட்டைக் கொண்டுவந்த ஜெயாமாமியோடு நீங்கள் கூட்டணி கட்டிக்கொண்டிருப்பது கிடக்கட்டும், டௌ கெமிக்கல்ஸ் (யூனியன் கார்பைடின் இன்றைய கொலைமுகம் இதுதான்) என்கிற கொலைபாதக நிறுவனத்திற்கு பத்தாயிரம் ஏக்கர் விளைநிலங்களைத் தாரைவார்ப்பதற்காக, அந்நிலங்களைக் கொண்டிருந்த விவசாயிகளை போலீசை விட்டு கொன்றொழித்தாரே உங்கள் கட்சியின் புத்ததேவு பட்டாச்சார்யா, அதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?
விமர்சனங்களை விலக்கிவிட்டு, விமர்சித்தவரின் குரலை கமுக்கமாக மூடிமறைத்துவிட்டு, விலகி வலப்புறமாகச் சென்றுவிடுகின்ற டெக்னிக் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தெரியவில்லையென்றால் மாதவராஜிடம் கேளுங்கள்.
உங்களுக்கு அறிவுநாணயம் என்று ஒன்றிருந்தால், எமது கேள்விகளை உங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டு விடைதேடிப்பாருங்கள். எமது விமர்சனங்களுக்குத் திறந்த மனதுடன் பதில்களைத் தாருங்கள்.
http://bhopal-public.blogspot.com/2010/07/blog-post_30.html
பதிலளிநீக்குமேற்கண்ட வலைதளத்தில் நான் மாதவராஜ் அவர்களுக்காக பதிந்த பின்னூட்டம்தான் இது. ஆகச் சிறந்த ஜனநாயகவாதியான மாதவராஜ் அவர்களின் மேலான, கனிவான பார்வைக்காக இங்கே பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
============================================
மாதவராஜிடமிருந்து இத்தகைய பதிவு வெளிவந்துள்ளது உண்மையிலேயே வியப்பையே ஏற்படுத்துகிறது!
என்னதான் உணர்ச்சிப்பெருக்கோடு மாதவராஜ் இக்கட்டுரையைப் புணைந்திருந்தாலும், போபால் மக்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக காங்கிரஸ்காரன் சவடால் அடிப்பதைப் போலதான் மாதவராஜின் இந்த பதிவும் இருக்கிறது.
ஏனெனில், மேலே பின்னூட்டமொன்றில் தோழர் வினோத் குறிப்பிட்டுளதைப் போல, யூனியன் கார்பைடின் தற்போதைய கொலைமுகமான டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்காக நந்திகிராம மக்களின் நிலங்கள் சூறையாடப்பட்டது. தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய நந்திகிராமத்து அப்பாவி விவசாயிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரை, சி.பி.எம். அரசு போலீசை ஏவி கொன்றொழித்தது. நூற்றுக்கணக்கான உழைக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது சி.பி.எம். கட்சியின் குண்டர் கூட்டம்.
இப்படி நாம் சொன்னால் நண்பர் மாதவராஜ் கோபத்தில் பொங்கி வெடிப்பார். இவற்றுக்கு ஆதரமில்லாமல், சும்மா போகிற போக்கில் நான் இதனை இங்கு பதியவில்லை. நந்திகிராம துப்பாக்கிச் சூட்டு வெறியாட்டத்திற்குப் பிறகு உண்மைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயம் - முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன நேரடியான சாட்சியங்களிலிருந்துதான் நான் இதனை இங்கு பதிவிட்டுள்ளேன். அந்த மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரனை அறிக்கையின் தமிழாக்கத்தை கோவையைச் சேர்ந்த விடியல் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.
சிபிஎம் கட்சியானது நக்சல்பாரி புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் காங்கிரசு, பாஜக வை விஞ்சி நிற்கிறது. வன்முறையற்ற அமைதி வழியே (அதாவது காந்திய வழியே...) தமது அரசியல் என்று பிரகடனப்படுத்திவருகிறது.
ஆனால், டௌ கெமிக்கல்சுக்காக நந்திகிராமிலும், டாட்டாவுக்காக சிங்கூரிலும், ஜிண்டாலுக்காக லால்கார் பழங்குடி மக்கள் மீதும் தனது போலீசை ஏவுவது மட்டுமின்றி, கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’யையும் ஏவி முதலாளித்துவ சேவையாற்றுகிறது. கொலைகார ப.சிதம்பரத்துடன் இணைந்துகொண்டு ‘காட்டு வேட்டை’ என்ற உள்நாட்டுப்போரை மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் மீது நடத்திவருகிறது, மே.வங்க சிபிஎம் அரசு.
மேற்கு வங்கத்தில் நடைபெறுகின்ற சாதாரண தேர்தல் மோதல்களில் கூட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடந்தான் மம்தா கட்சி உள்ளிட்ட ஏனைய ஓட்டுக்கட்சிகளுடன் மோதலில் ஈடுபடுகிறது, சி.பி.எம்.கட்சி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அத்தகைய ஆயுத மோதல்களில் ஈடுபட்டது அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் நேரடியாகவே இந்த மோதலைப் பார்க்கமுடிந்தது.
எனவே, இவர்கள் பேசுகின்ற அகிம்சை வழி என்பது முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முதலாளித்துவத்திற்கு எதிரான எளிய மக்களின் போராட்டம் என்று வரும்போது, அகிம்சையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, அரச பயங்கரவாத நடவடிக்கைகளை கையிலெடுத்துக் கொள்கிறது.
ஆனால், உண்மையான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களோ, ஏகாதிபத்திய-முதலாளித்துவத்தின் கோர பிடியிலிருந்து அப்பாவி உழைக்கும் மக்களை மீட்பதற்காகவே ஆயுதங்களைக் கையிலெடுக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக, தற்காப்பு நிலையில் கூட புரட்சியாளர்கள் ஆயுதம் பிடிக்கக்கூடாது என்று பாசிசக் கூப்பாடு போடுகின்ற போலிமார்க்சிஸ்டு கட்சி, ஓட்டுப்பொறுக்குவதற்கான தேர்தல் குழாயடி சண்டையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு வெறியாட்டம் போடுகிறது. இதுதான் சி.பி.எம். கட்சி வலியுறுத்துகின்ற ‘அகிம்சைப் புரட்சி’யாகும்.
டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு நந்திகிராமத்து விளைநிலங்களைத் தாரைவார்த்து, தொழில் வளர்ச்சி புராணம் பாடிய தமது கட்சியின் இழிநிலை குறித்து பெயரளவுக்கேனும் அறிவுநாணயத்தோடு, நண்பர் மாதவராஜ் பதிலளிப்பாரானால், போபால் மக்களுக்காகப் பதியப்பட்ட அவருடைய கட்டுரையின் வரிகளை உண்மையென்று ஏற்பதோடு, மாதவராஜை மனமாற பாராட்டவும்கூட செய்யலாம். மாறாக, வழக்கமாக இருப்பதைப் போல கள்ள மவுனம் சாதிப்பாரானால், அல்லது இத்தளத்தின் வாசகர்களின் மறதியை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பாரேயானால், அவருடைய பதிவு சொல்லும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை நமது வாசக நண்பர்கள்தான் சொல்லவேண்டும். நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.