பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்!

‘பூக்களிலிருந்து சில புத்தகங்கள்’ பணி முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. புத்தகங்களின் தலைப்பு, அவை பற்றிய குறிப்புக்களோடு அட்டைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.

முதன்முதலில் இதுகுறித்து பேசும்போது, வம்சி பதிப்பகம் சார்பாக எழுத்தாளர் பவா.செல்லத்துரை அவர்கள் சொன்ன ஒரே விஷயம், ‘எழுத்துக்கள் இலக்கியத் தரமாக இருக்க வேண்டும்’ என்பதுதான். அறிவிப்பு வெளியானபோது, சினிமா, பயணங்கள், விவாதங்கள் குறித்து சேகரிப்பது என்றெல்லாம் சொல்லப்பட்டு இருந்தது. வந்திருந்த சுட்டிகளில்  சினிமா குறித்தும் இருந்தன. ஆனால் அவை புத்தகங்களாகும் நிலையான தன்மை கொண்டிருக்கவில்லை. உலக சினிமா குறித்து தீவீரமாக எழுதப்பட்ட முக்கியப் பதிவுகள் பல இருக்கின்றன. அவற்றை பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளலாமே என்றார் பவா. இப்போதைக்கு, சென்னை புத்தகத் திருவிழாவுக்கு, அனுபவங்கள், கவிதை, சிறுகதை என மூன்று தொகுப்புகள் கொண்டு வருவது என முடிவானது. இவைகளோடு வலைப்பக்கங்களில் நான் எழுதிய சொற்சித்திரங்களின் தொகுப்பும் வருகிறது.

1.பெருவெளிச் சலனங்கள்
(அனுபவங்களின் தொகுப்பு)

தாளிடப்படாத அறைகளுக்குள்ளிருந்து வெளிப்படும் குரல்கள் காற்று வெளியில் தெறிக்கின்றன. விரியும் வளையங்களின் அடுக்குகளில் அவரவர் வாழ்வின் கணங்கள் மிதக்கின்றன. அன்பும், காதலும், சோகமும் தீராமல் கரைகின்றன. பெருவெளியின் சலனங்கள் மனிதருக்கு எளிதில் புலப்படுவதில்லை. உள்ளங்கையில் அள்ளிப் பார்த்தால் அவரவர் ரேகைகளே தெரிகின்றன.

2.கிளிஞ்சல்கள் பறக்கின்றன
(கவிதைத் தொகுதி)

கட்ற்கரைப் பூக்களாய் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஒடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும், அவைகள் பறந்துவிடக் கூடும். கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.

3.மரப்பாச்சியின் சில ஆடைகள்
(சிறுகதைத் தொகுப்பு)

குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைகளிடம் பேசுகின்றன. பொட்டு வைக்கின்றன. சின்னச் சின்னத் துணிகளால் ஒரு ஓவியனைப் போல ஆடை அணிவிக்கின்றன. அழகு பார்க்கின்றன. கொஞ்ச நேரத்தில் அடுத்த ஆடை. அப்புறம் இன்னொரு ஆடை. சலிப்பில்லாமல் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. களையும் ஒவ்வொரு ஆடையும் ஒரு கதையாகிறது. கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.

4.குருவிகள் பறந்து விட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது
(நான் எழுதிய சொற்சித்திரங்கள்)

எதிரும் புதிருமாக அலைக்கழிக்கிறது. சரி, தவறு என்பதில் மூளை கசங்குகிறது. திசைகளில் சிக்கித் தவித்து தடுமாறுகிறது. இழப்பதைக் காட்டிலும் பெறுவதில் மோகம் முட்டுகிறது. இரையைத் தேடி மூச்சு இழைக்கிறது. வன்மம் குருதியிலும், கண்களிலும் தேங்குகிறது. இந்தச் சின்னப் பறவைகளுக்கு மட்டும் நாட்கள் எளிமையாகவும், இயல்பானதாகவும் வந்து கொண்டு இருக்கின்றன.

நண்பர்களே!

வந்திருந்த சுட்டிகளிலிருந்து புத்தகங்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணி முடிந்து விட்டது. முக்கியப் பதிவர்களின் சுட்டிகள் வராததால் அவர்களிடம் போன் மூலமாகவும், மெயில் மூலமாகவும் அனுமதி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை நல்ல எழுத்துக்களை அடையாளம் காணவேண்டும் என நினைக்கிறேன். இதில் நான் தோற்றுப் போகக் கூடும். ஆனால் முயற்சி இருக்கும். அது தொடரம், மேலும் சில புத்தகங்களாக....

ஏற்கனவே இங்கு நான் எங்கள் வங்கியில் நிலவும் அசாதாரணச் சூழலை தெரிவித்து இருந்தேன். நிர்வாகம் வெறி பிடித்து நிற்கிறது. charge sheetகளும், show-cause noticeகளும் குவிந்து கொண்டு இருக்கின்றன. பழிவாங்கும் transfers போடப்படுகின்றன. நாங்கள் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறோம். இன்று நான்காவது நாள். இதற்கிடையில்தான் ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ பணியும் நடந்து கொண்டு இருக்கிறது. சங்க அலுவலகத்திலேயே தங்கி இருக்கிறோம். நடு இரவிலோ, விடியற்காலையிலோ நேரம் வாய்க்கிறது. “இப்போது இருக்கும் நிலையில், இந்த வேலை எதுக்கு” என சக தொழிற்சங்க நிர்வாகிகள் என்னை ஒரு விரோதத்துடனே பார்க்கிறார்கள். பவா செல்லத்துரையோ டிசம்பர் 10ம் தேதிக்குள் அச்சுக்கு போக வேண்டும் என்கிறார்.

இன்னும் பதிவுகளை வரிசைப்படுத்த வேண்டும், எழுத்துப் பிழை பார்க்க வேண்டும். நேரம் கொல்லுகிறது. பார்ப்போம்.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. உங்கள் போராட்டம் வெல்லட்டும்....

  பதிலளிநீக்கு
 2. உங்கள் முயற்சியும் போராட்டமும் வெற்றி பெற எப்போதும் எங்கள் பிராத்தனைகள்.

  //கதை சொல்லுகிறவன் ஒரு குழந்தைதான் எப்போதும்.//

  இந்த வரி வெகு அழகாய் இருக்கிறது :)

  பதிலளிநீக்கு
 3. சிரமான பணிகளுக்கிடையில் கொண்வருகிறீர்கள். உழைப்புக்கு வெற்றி உண்டு. வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் மகிழ்ச்சியான செய்தி, பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உங்களின் இந்த மஹாமுயற்சிக்கு என் வந்தனங்கள்

  பதிலளிநீக்கு
 6. உங்கள் ஆர்வம்ம் உழைப்பும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைத்தும் சிறப்பாய் அமைய இயற்கையை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. புத்தக தலைப்புகள் அழகாக இருக்கின்றன.முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 8. புத்தகத்தலைப்பைவிட தங்கள் உழைப்புதான் அழகாய் தெரிகிறது..

  போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 9. தலைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

  வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. நண்பருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. (தாமதமான மறுமொழி) வித்தியாசமான தலைப்புகள் ! தங்களின் கடின உழைப்பிற்கு இந்தப் புத்தகங்கள் நல்ல வரவேற்பைப் பெற என் நல் எண்ணங்கள்! தமிழ் வலைப் பதிவுகளில் இருக்கும் சிறப்பான,பலவிதப்பட்ட எழுத்துக்களை இணையவசதி இல்லாத வாசகர்களுக்கும் இந்தப் புத்தகங்கள் அறிமுகப்படுத்த உதவும். இந்த வரிசையில் உலக சினிமா குறித்தும் புத்தகத்தை எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்திருந்தால் உங்களுடைய பணிச்சுமைகளில் நாங்களும் பங்கெடுத்திருப்போம். மிகவும் வருத்தமாக உள்ளது..!

  முன்பின் அறிந்திராதவர்களின் படைப்புகளை கேட்டு வாங்கி அதை அச்சுக்குக் கொண்டு வரும் உங்களையும், பவா அண்ணனையும் மனதார மெச்சுகிறேன்..!

  பதிலளிநீக்கு
 13. நண்பர்களின் எழுத்துகளுக்கு ஒரு புது முகவரி தேடித் தந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!