கடவுள்தான் உண்மை என்பதிலிருந்து உண்மையே கடவுள் என்பதை நோக்கி

 

“உலகின் இரக்கமற்ற அந்த நகரில் ஆயுதமற்ற அஹிம்சாவாதியான ஒற்றை மனிதர் பெற்றிருந்த வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 55000 இராணுவ வீரர்கள் பெற்றிருக்க வில்லை”. இப்படியொரு சரித்திர அதிசயக் காட்சி ‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. எப்படி இது சாத்தியமானது என்பதற்கான கூறுகளை அவரது வாழ்க்கையிலிருந்துதான் நாம் பெற முடியும்.

அவர் ஒரு இந்துவாக இருந்தபோதிலும் மதவேறுபாடின்றி மக்கள் அவரை நேசித்தனர். இதொன்றும் சாதாரணமானது அல்ல. மதம், கடவுளைத் தாண்டி, உண்மையத் தேடிக்கொண்டு இருந்ததால் அப்படியொரு அபூர்வமனிதராக அவர் உருப்பெற்றிருந்தார்.

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவரகவும், ஆன்மீகவாதியாகவும் இருந்த காந்திஜி மிகவும் நேசித்த, மிகவும் மதித்த இருவர் உண்டு. ஒருவர், அவரால் தமது அரசியல் குரு என்று அங்கீகரிக்கப்பட்டவரான கோபால கிருஷ்ண கோகலே. மற்றொருவர் அவரால் தமது அரசியல் வாரிசு என் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவரான ஜவஹர்லால் நேரு. அந்த இருவருமே கடவுள் இருப்பதாக நம்ப மறுத்தவர்கள். மாறுபட்ட இந்த கண்ணோட்டங்களோடு காந்தியை அறிய முற்படுவது அவசியமானது.

வாழ்க்கையை சத்திய சோதனையாக பாவித்துக்கொண்ட அந்த மனிதரிடம், அவரது சிந்தனைகளில் முரண்படக்கூடிய விஷயங்கள் பலவுண்டு. அவருக்குமே, அவருடைய கருத்துக்களில் முரண்படக்கூடிய தருணங்கள் எவ்வளவோ இருந்திருக்கிறதே. “உண்மையைத் தேடுகிற என் முயற்சியில் நான் பல கருத்துக்களை கைவிட்டிருக்கிறேன். பல புதிய கருத்துக்களை கற்றிருக்கிறேன். ஆகவே இருவேறு காலக்கட்டங்களில் நான் எழுதியிருக்கக்கூடியதில் மாறுபாடு இருப்பதாக யாரேனும் நினைக்கக் கூடுமானால், அவருக்கு என்னுடைய சிந்தனைத் தெளிவில் நம்பிக்கை இருக்குமானால், குறிப்பிட்ட பொருள் குறித்து நான் இரண்டாவதாக எழுதியதையே எடுத்துக் கொள்வது நல்லது” என்று அவர் சொல்வதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

அப்படி அவரே தெளிவு பெற்ற கருத்துக்களில் இரண்டு மிக முக்கியமானவை.

1.அரசியலில் இருந்து மதத்தை பிரித்துவிட முடியாது என உறுதியாக நம்பியவராக இருந்தவர் காந்தி. அரசியல் அறவழிப்பட்டதாக இருக்க வேண்டும், அறநெறியை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என கருதினார். அந்த அறவழிக்கான ஊற்றாக அவர் மதத்தைப் பார்த்தார். அதைத் தெளிவுபடுத்தும்போது “ஆம். மதத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக அரசியலை என்னால் பார்க்க முடியாது என்ற கருத்து இப்போதும் எனக்குண்டு. சொல்லப்போனால் நமது ஒவ்வொரு செயலிலும் மதம் ஊடுருவியிருக்க வேண்டும். இங்கே மதம் என்பது குறுகியவாதமாகாது. முறைப்படுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள். இந்த மதம் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது” என விளக்கமும் அளித்தார். இதே காந்திதான் பின்னாளில் “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும் அரசியலும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்” என்று கூறினார்.

2.“கடவுள்தான் உண்மை’ என்று சொல்லிக்கொண்டு இருந்த காந்திஜி பின்னர் “உண்மையே கடவுள்” என்று தமது கருத்தை மாற்றிக்கொண்டார்.

இந்த மாற்றங்களுக்கு ஊடே அவருக்குள் ஒடியிருக்கிற சிந்தனைகளை மிக முக்கியமனவை.

"இந்தப் பகுத்தறிவு யுகத்தில் ஒவ்வொரு மதத்தின் ஒவ்வொரு நியதியும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால், பகுத்தறிவு மற்றும் உலகநீதிச் சோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டாக வேண்டும். உலகமறைகளெல்லாம் ஆதரித்தாலும் கூட தவறுகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது”

“சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள சாஸ்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லாமே நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியவை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளத் தேவையில்லை. அடிப்படை அற நியாயங்களுக்கும் தொடர்ச்சியான பகுத்தறிவுக்கும் ஒத்துவராத எதையும், அது எவ்வளவுதான் தொன்மையானது என்ற போதிலும் கூட, ஒரு சாஸ்திரம் என்று கூறுவதற்கில்லை.”

“பகுத்தறிவின்றி வேறு எதற்கும் மனிதன் பணிந்து போய்விடக் கூடாது”

“கீதை உட்பட எந்த திருமறையையும் விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பார்க்கிறேன்”

“திருக்குரானின் போதனைகள் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல”

“உண்மை நடப்பில் ஏராளமான மனங்கள் இருப்பதைப் போலவே ஏராளமான மதங்கள் இருக்கின்றன. கடவுளைப்பற்றி ஒவ்வொரு மனத்திற்கும் மற்றதிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தோட்டம் இருக்கும்”

“மத அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனமும் அரசு நிதியுதவி பெறக்கூடாது”

“தேசீயத்தன்மைக்கான உரைகல் அல்ல மதம். மாறாக அது கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையேயான் சொந்த விஷயம்”

“உலகின் எந்தப் பகுதியிலும் தேசிய இனமும் மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒரு போதும் இருந்ததில்லை.”

“என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களாக உள்ளவை ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள்தான். அல்லது ஒரே கம்பீரமான மரத்தின் கிளைகள்தான்”

“என்னைப் பொறுத்தவரையில் கடவுள் எனப்து வாய்மையும், அன்பும்தான். கடவுள் என்பது ஒழுக்க நெறியும், அற வழியும்தான். கடவுள் என்பது அச்சமின்மைதான். கடவுள் என்பது வெளிச்சத்திற்கும் வாழ்க்கைக்கும் மூல ஊற்றாகும். எனினும் கடவுள் இவற்றுக்கெல்லாம் மேம்பட்டவர். கடவுள் என்பது மனசாட்சி. நாத்திகவாதியின் நாத்திகமாகவும் கடவுள் இருக்கிறார்”

“இந்து மதவெறி இந்து மக்களுக்கே விரோதமானது. முஸ்லீம் மதவெறி முஸ்லீம்களுக்கே விரோதமானது”

“இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்றும், இந்து அல்லாதவர்கள், குறிப்பாக முஸ்லீம்கள் இந்துக்களின் அடிமையாகவே வாழவேண்டும் என்றும் இந்துக்கள் நினைப்பார்களானால் அவர்கள் இந்துயிசத்தைக் கொன்றவர்களாவார்கள். அதேபோல், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு மட்டுமே உரிமையான இடம் உண்டு என்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் அங்கே வாய்பேச முடியா அடிமைகளாய் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுமானால், அது இஸ்லாத்தின் சாவுமணியாகிவிடும்”

“இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாக சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால் இந்த இந்தியா தான் கனவு கண்ட இந்தியா அல்ல என்று அவரால் சொல்ல முடியும்”

“ராமராஜ்ஜியம் என ஒரு புனிதமான அரசு கடவுளின் அரசு என்ற பொருளிலேயே நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் ராமனும், ரஹீமும் ஒன்றுதான். ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும் நியாயம் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை.”

“ஒரு சிலர் செல்வங்களைக் குவித்துக் கொண்டிருக்க, பெருவாரியான மக்கள் உண்பதற்குக்கூட போதுமான வருமானமற்றவர்களாக இருந்து கொண்டிருக்கும் இன்றைய அநீதியான நிலையில் ராமராஜ்ஜியம் அமைந்திட முடியாது”

இந்த சிந்தனைகளே, கோட்சே என்னும் இந்துமத வெறியனை, காந்தியை நோக்கி துப்பாக்கியை குறிபார்க்க வைத்தன. காந்தியின் இந்த கனவுகளை சிதைத்திடவே இந்துத்துவா முழக்கங்களோடு பாசிச கும்பல்கள் கிளம்பி இருக்கின்றன. இன்று நாம் பேசும் தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாவற்றுக்குமான விடைகளை காந்தி கண்டறிய நடத்திய கருத்துப் போராட்டங்கள் இவை. தேசமே உற்றுக் கேட்க வேண்டிய நேரமிது. காந்தியின் பிறந்த நாளான இன்று இதைத் தவிர வேறு எதை இங்கு சொல்ல...?

(ஆதாரம்: பிபின் சந்திரா எழுதிய ‘மகாத்மா, மதச்சார்பின்மை, மதவெறி’ என்னும் கட்டுரை)

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. காந்தியின் சிந்தனைகளை அறியத் தந்தமைக்கு நன்றி! நல்லதொரு இடுகை! இந்த நாளிலாவது அவரை நினைவு கூர்வோம்!!

  பதிலளிநீக்கு
 2. காந்தியின் வார்த்தைகளின் இருந்து அழகாய் உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து அழகாய் மறுதலிக்க முடியாத ஒரு பதிவு இட்டு இருக்கின்றிர்கள். இது தங்களின் அனுபவம் மற்றும் சாமார்த்தியத்தை காட்டுகின்றது. நல்ல பதிவு. நான் தங்களின் இந்த பதிவு வாக்கியங்களை வழிமொழிகின்றேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு !

  காந்தியடிகள் பல்வேறு சமயங்களில் பல்வேறு நோக்கத்தோடு சொல்லப்பட்ட வாக்கியங்களை, தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள்.

  கோகுலேவைப் பற்றி பதிவில் உள்ள கருத்துக்களில் ஐயம் இருந்தாலும், அவைகளை பிறகு விவாதிக்கலாம். மகாத்மாவின் பிறந்த நாளில் வேண்டாமென்று கருதுகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு வரியையும் நிதானமாக படித்து உள்வாங்கும் அளவுக்கு கனமான,யாவர்க்கும் பொதுவான கருத்துகளை கூறியிருக்கிறார்.பிபின்சந்த்ரா நவீன இந்திய வரலாற்றாசிரியர்களில் முக்கியமானவர்.உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 5. காந்தி குறித்ததொரு நல்ல இடுகை
  நன்றி

  பதிலளிநீக்கு
 6. மகாத்மாவைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்களை அறிந்திருக்கிறேன். உங்கள் இடுகை பல விஷயங்களைத் தெளிவு படுத்துகிறது. நன்றி.
  //இந்து மதவெறி இந்து மக்களுக்கே விரோதமானது. முஸ்லீம் மதவெறி முஸ்லீம்களுக்கே விரோதமானது” //
  அவர் சொன்னதில் இதையாவது புரிந்து கொண்டால் போதுமே.

  பதிலளிநீக்கு
 7. அன்பு அண்ணன் மாதவராஜ்...

  காந்தி பற்றிய அருமையான பதிவு. காந்தி பற்றிய என்னுடைய பதிவிற்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. For India islamic terrorism is a major threat. Islamic fundamentalism is also a threat. You oppose hindutva 200% and when it comes to islamic terrorism you oppose it 20%. Even after 26/11 you pseudo-secularists are still singing the same old stale song. Perhaps you would prefer India to be ruled by Pakistan or Taliban than by BJP.

  Dont use Mahatma's words for promoting your pseudo-secularism.

  பதிலளிநீக்கு
 9. சந்தனமுல்லை!
  நன்றி.

  பித்தனின் வாக்கு!
  வழிமொழிந்ததற்கு நன்றி.


  கபிலன்!
  ஏண் மகாத்மாவின் பிறந்தநாள் அன்று விவாதிக்கக் கூடாது? வருகைக்கும், ப்கிர்வுக்கும் நன்றி.


  வேல்ஜி!
  ந்னறி.


  கதிர்!
  நன்றி.


  சரவணக்குமார்!
  நன்றி. உங்கள் பதிவைப் படித்து கருத்து தெரிவித்து இருந்தேன். பார்த்தீர்களா?


  அனானி!
  எத்தனையோமுறை இதற்கெல்லாம் என் பதிவுகள் பலவற்றில் பதில் சொல்லியாகிவிட்டது. திரும்பவும் இதையேச் சொல்லிக்கொண்டு திரியும் உங்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 10. காந்தி பற்றிய என் நண்பனின் கருத்துக்கு பதில் சொல்ல தெரியாமல் மனசுக்குள் அழுத எனக்கு உங்கள் பதிவு உதவியது நன்றி!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!