அவனது கடவுளின் மரணம்

 

அசாதாரணமான உயரம். முறுக்கு மீசை. உருட்டும் விழிகள். உக்கிரத்தைச் சேர்க்கிற வலக்கை வீச்சரிவாள். இடதுகையில் சங்கிலியில் பிணைத்த நாய். கருப்பசாமியை இப்படித்தான் பார்க்க முடியும். வழிபட முடியும். ஆனால் மாரநாட்டில் மட்டும் ஒரு மணல்கும்பத்தை கருப்பசாமியாய் பூஜிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் சேர்க்கிற அந்த சிறிய கிராமத்திற்கு நானூறு வருஷங்களுக்கு முன்பு ஆற்றருகே கிடைத்த ஒரு பெட்டியில் நிறைந்திருந்த மணற்குவியல் அது. கிராமத்து மக்களுக்கு அது கருப்பசாமி. ஆனால் மாரிமுத்துவுக்கு....? தீர்க்கமான காதலின் வெளிப்பாடு. அசக்க முடியாத ஒரு நம்பிக்கையின் சின்னம். இதிகாச ராமனைக் காட்டிலும் நமது மாரிமுத்து உயர்ந்து நிற்கிறான். புதையூண்டு போன சரித்திரத்தை கதையாய் தந்திருப்பவர் நண்பர் மணிமாறன்.

-----------------------

இன்று காலையில் கூட மேலத்தெரு பெருமாள் சொல்லி விட்டான். “நாஞ் சொல்றேன்னு தப்பா நினைக்கப்புடாது. அந்த பெரியசாமிப்பயகிட்ட எப்பவும் பேச்சுஞ் சிரிப்புந்தான். ஊர்ல ஆளாளுக்கு பேசுறாங்க.”

மாரிமுத்து அப்படியே கருப்பசாமியின் காலில் உட்கார்ந்தான். புசுபுசுவென அழ ஆரம்பித்தான். யாருமற்ற தனிமையில் அது ஆறுதலாய் இருந்தது. அண்ணாந்து பார்த்தான். நட்சத்திரங்கள் அடர்ந்திருந்த வானத்துக்கு அடியில் பிரம்மாண்டமாய் கருப்பசாமி தரையிலிருந்து உயர்ந்து நின்றார். எல்லாம் தனக்குத் தெரியும் என்கிற மாதிரி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விசாலத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. நடையைச் சாத்திக் கிளம்பினான்.

தெரு நிர்ச்சலனமாய் இருந்தது. பகல் நேரங்களில் நடக்கும்போது யார் யாரோ அவனைப் பார்த்து பேசுவது போலவும், சிரிப்பது போலவும் தெரியும். ‘பெரியசாமிக் கிட்டப் பேசினா என்ன. சிரிச்சுப் பேசினாளாம். ஊர்க்காரப் பயல்களுக்கு இந்தக் கோயில் பண்டாரத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கையா....  இப்படி ஒரு பொம்பளையாங்குற வயித்தெரிச்சல். அதான் அங்க நின்னா.... இவங்கூடப் பேசினான்னு சொல்லிட்டுத் திரியுறாங்க... ச்சே! என்ன ஜென்மங்க இவங்க... விசாலத்தைப் போயா இப்படி....’  தனக்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொண்டான்.

விசாலத்துக்கும் இவனுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகவில்லை. இன்னமும் பூ மாதிரியேத்தான் மாரிமுத்துவுக்குத் தெரிகிறாள். எப்பவும் முகத்தில் ஒரு சந்தோஷம் இருக்கும். அவளைத் தந்ததற்கு கருப்பசாமிக்கு மனசுக்குள் பலதடவை நன்றி சொல்லியிருக்கிறான் மாரிமுத்து.

விசாலம் வாசலில் நின்று புன்னகைத்து “வாங்க..” என்றாள். கால்கழுவ த்ண்ணீர் கொண்டு வரப்போனாள். தலை நிறைய பூக்கள் புன்னகைத்தன. சாப்பிடும்போது அவளையேப் பார்த்தான். திரிவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவள் பகலில் இருப்பதைவிடவும் பிரகாசமாகி இருந்தாள். ’இவளைப் போயா...’

“கோயில் பூசாரின்னா வெத்துடம்போடத்தான் திரியணுமா” வெளியே கிளம்பும்போது துண்டு போர்த்துவாள். இவன் நடப்பதை வாசல் வரை வந்து நின்று பார்ப்பாள்.  இருட்டி வீடு திரும்பினா “என்ன இது, அய்யனார் சாமி மாதிரி முகம் பூரா எண்ணெய் வழிஞ்சிட்டு.... வரும்போது ஆத்துல மூஞ்சிய கழுவியிருக்கக் கூடாதா” தண்ணீர் தருவாள். குளிப்பான். சாப்பாடு. சந்தோஷம்.  “ஏங்கருப்பசாமி..... ஏ... கருப்பசாமி..” அவனோடு கலப்பாள்.

விசாலம் தூங்கிவிட்டாள். ஆறுமாச தென்னம்புள்ளையை மல்லாக்க படுக்க வைத்தது போலிருந்தாள். பச்சைக்குழந்தை. கொஞ்சம் தள்ளி கோயில் நிலத்து விளைச்சலில் வந்த நெல் குளுமை நிறைந்து மணம் பரப்பி தரையில் இருந்தது. மாரிமுத்துவுக்கு தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். விரித்த சேலையையும் கட்டில்கயிறு தாண்டி குத்தியது. இந்தப் பயல்களை கருப்பசாமி  தண்டிப்பார் என தூங்கிப் போனான்.

கனவில் கருப்பசாமி வந்தார். வலதுகையில் அதே வீச்சரிவாள். அதே வைரவசாமி வாலை ஆட்டிக்கொண்டு இருந்தது. கருப்பசாமியேதான். “ஏ.... மாரிமுத்து..”  காற்றில் கரைந்து குரல் கேட்டது. நடுங்கி விழுந்து கும்பிட்டான். “ஓனக்கே நியாயமாப் படுதா..... ஓம்பொண்டாட்டி வேலியத் தாண்டிட்டா. அந்த ஆட்ட எப்பிடி பட்டியில சேப்ப..”. மாரிமுத்து அவர் காலடியில் கிடந்தான். வைரவசாமி குரைத்தது.

விழித்துக்கொண்டான். எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. பக்கத்தில் விசாலம் முழங்காலை அடிவயிற்றோடு சேர்த்து வைத்து தூங்கிக் கொண்டு இருந்தாள். அவனது சுவாசக் காற்றில் தனது பாதுகாப்பைத் தேடுவது போல ஒண்டியிருந்தாள். மூடியிருந்த கண்களுக்குள் எந்த ரகசியமும் இல்லை. இப்போதும் பூவைப் போல இருந்தாள்.

மாரிமுத்து கட்டிலை விட்டு இறங்கினான். தண்ணீர் குடித்தான். முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியது. எண்ணெய் இல்லாமல் விளக்கு சுருங்கிக்கொண்டு வந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தான். உச்சிப்பனி உறைக்கவில்லை. திண்னையில் உட்கார்ந்தான். தவித்தான். எழுந்து கோயிலை நோக்கி நடந்தான்.

இவன் ஏற்றிய விளக்கு இன்னமும் எரிந்து கொண்டிருந்தது. கருப்பசாமியை அண்ணாந்து பார்த்தான். விகாரமாய்த் தெரிந்தார். ‘இவர் கருப்பசாமியில்ல... இவரு கருப்பசாமியில்ல... என்னோட விசாலம் நல்லவ. ஆமா நல்லவ..’ விளக்கை ஊதி அணைத்தான். கருப்பசாமியின் கையில் இருந்த அரிவாளை உருவினான். ஒரு மாதிரி ஊளையிடுகிற சத்தம் அவன் தொண்டையில் இருந்து வந்தது.   பக்கத்தில் இருந்த கோக்காலியில் வேகமாய் ஏறினான். தலை, இடது கை, வயிறு என ஆத்திரம் தீர அடித்து நொறுக்கினான். முச்சு இறைக்க கிடந்து கொத்தினான். கருப்பசாமி மண்துண்டுகளாய் நொறுங்கிக் கொண்டு இருந்தார். மாரிமுத்துவின் ஆத்திரம் தீர்ந்தபாடில்லை. ‘உன்னோட சுவடு கூட இங்கு இருக்கக் கூடாது’ என சிதறிக்கிடந்தவைகளை ஒரு பெட்டியில் அள்ளினான். கோயில் வாசலைக் கடந்து ஆற்றில் இறங்கினான்.  மூழ்கி குளிக்க ஆரம்பித்தான். பெட்டியை ஆற்றில் விட்டுவிட்டு ஈர வேட்டியோடு கரையேறினான்.

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஆதலினால் காதல் செய்வீர்......இப்படியே காதல் செய்வீர்....

  இந்த மாரிமுத்துவின் மனம் நம்மில் எத்தனைபேரிடம் உண்டு?

  அழகான கதை.....அருமை

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் மாதவராஜ்

  நம்பிக்கை, அன்பு எனில் அது இப்படித்தான் இருக்கவேண்டும்.

  இவ்வாறான நம்பிக்கை இருந்தால்தான் வாழ்கைதுணை எனபதற்கு சரியான அர்த்தம் தரும்.

  இது கதையாக இருந்தாலும் சரி மிகவும் அருமை

  இராஜராஜன்

  பதிலளிநீக்கு
 3. கடவுளே சொன்னாலும் ........

  மனித மனம் இப்படி அமைந்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் இதோ இந்த கதையின் முடிவைப்போல :)

  பதிலளிநீக்கு
 4. அன்பு மாதவராஜ்,

  நல்ல மண் மனத்துடன் வந்துள்ள, ஈரமான கதை. அழகாய் இருக்கிறது மேலோட்டமாய் பார்க்கும் போது. இதை கேள்விகள் ஏதும் கேட்காமல் எடுத்துக் கொள்கிற பட்சத்தில் இது மனதை நெகிழ்த்தும் ஒரு கதை தான் அதில் இரண்டு கருத்துக்கள் இல்லை.

  ஆனால் கொஞ்சம் உற்று நோக்கினால் எனக்கு இரண்டு தர்க்கரீதியான கேள்விகள் தோன்றுகிறது, மனதில் தோன்றியதை இங்கு எழுதலாம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

  1) பெரும்பாலும் கனவுகள் அடிமன எண்ணங்கள் தான் என்பதால், மாரிமுத்துவுக்கும் அந்த எண்ணத்தின் தீவிரம் பாதித்திருக்கலாம், இல்லையா?
  2) பெரியசாமி, கருப்பசாமி கோயில் பண்டாரமாய் இருக்கிறபட்சத்தில் மூலத்தை அழிக்கும் பட்சத்தில், பெரியசாமிக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்த நினைத்திருக்கலாம்??? பெரியசாமியை மாரிமுத்துவால் ஒன்றும் செய்யமுடியாத இயலாமையில், எதிர்வினை காட்டாத ஒருவரிடம், கடவுளிடம் காட்டியிருக்கலாம்..

  இது என்னோட கேள்விகள் மட்டுமே, இவை ஏதும் இல்லாத பட்சத்தில் நிஜமாகவே இதை புனிதப்படுத்தி கொண்டாட முடியும் எல்லோராலும், என்னாலும் கூட...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 5. Demolished 'Karuppasamy' is a superior monument compared constructed TajMahal. Marimuth's love, faith and perception is great.

  At the beginning of the story, he cries at the feet of Karuppasamy; at the end he kills karuppasamy - good to show that his faith in his wife is more than his belief in his own god.

  Thanks for this wonderful story.

  பதிலளிநீக்கு
 6. பயந்து கொண்டே படித்தேன்.

  அற்புதமான மனித மனத்துக்கு முன் கடவுள் எம்மாத்திரம்?
  என்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்
  (or)
  இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ளுக்குக் க‌ட‌வுளே தேவையில்லை என்கிறீர்க‌ளோ?
  :)

  பதிலளிநீக்கு
 7. ஆரூரன்!
  வனம்!
  அமித்து அம்மா!
  புகழ்!
  தீபா!
  அனைவருக்கும் நன்றி.

  ராகவன்!
  நீங்கள் கேள்விகள் கேட்டபடி கூட இருந்திருக்கலாம். மாரிமுத்துவும் மனிதன்தானே! அவன் தன் சஞ்சலங்களை வென்றதன் அடையாளமாகத்தான் கடவுளைக் கொல்கிறான் எனவும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!