கமலஹாசன்கள் இதை யோசிப்பார்களா?

தனது திரைவாழ்வின்  ஐம்பதாவது ஆண்டையொட்டி, நேற்று என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமலஹாசன் அவர்கள் பல விஷயங்களை தனக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அவரது  வாழ்வில் செய்துகொண்ட சமரசங்களாக, வாணி கணபதி மற்றும் சரிகா ஆகியோரை திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். அவை அவரது தனிப்பட்ட விஷயங்கள். அதற்குள் போய் எட்டிப்பார்ப்பது, கருத்துக்கள் சொல்வது நாகரீகமானவை அன்று. ஆனால் பேட்டியின்  போக்கில், மிக கனமான ஒரு விஷயத்தை இப்படி சொல்லி இருக்கிறார்.

 

திருமணங்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. அது தொன்மையானதுமல்ல, சக்தி வாய்ந்ததும் அல்ல. குடும்பம்தான் சக்தி வாய்ந்த அமைப்பு. அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்.

 

அதாவது, குடும்ப உறவுகளே முக்கியமானவை. அதற்கு திருமணங்கள் தேவையில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். கணவன் மனைவி உறவு நிரந்தரமானது அல்ல என்பதும் தகப்பன்-குழந்தை உறவோ, தாய்-குழந்தை உறவோதான் நிலையானது என்பதும் அவர் சொல்லிய வார்த்தைகளின் மையத் தொனியாக இருக்கின்றன.

 

நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு அமைப்பு குறித்து பொதுவெளியில் வைக்கப்பட்டு இருக்கிற கருத்தாக இருப்பதால் கவனிக்க வேண்டியதாகவும், பொருட்படுத்த வேண்டியதாகவும் இருக்கிறது. சொல்லி இருப்பவரும் சாதாரணமானவர் அல்ல.

 

கடந்த பத்து வருடங்களாகவே ஒரு கருத்தை அறிவுஜீவிகளாகவும், பிரபலமாகவும் கருதப்படுகிற சிலர் அவ்வப்போது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணங்களுக்குப் பதிலாக ‘living together' சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார்கள். அதாவது மனதுக்குப் பிடித்தவர்களோடு, மனதுக்குப் பிடிக்கிற வரையில் வாழ்வது என்கிற ஒரு முறையை முன்மொழிகிறார்கள். பிடிக்காவிட்டால், வேறொரு மனதுக்குப் பிடித்தவர்களோடு வாழ்வது என்கிற சம உரிமையோடு பிரிந்துகொள்வது என்கிற தாத்பரியமிக்க தாம்பத்திய முறை அது. திருமணம் என்னும் கைவிலங்கை ஆணும் பெண்ணும் ஒரு சேர மாட்டிக்கொண்டு ஒருவரை ஒருவரை கட்டுப்படுத்தாமல், சுதந்திரமான ஒரு வாழ்வியலை இருவருக்கும் பொதுவாக்கிக் கொள்வது என்னும் மிகப்பெரும் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. கமலஹாசனும் அவரது பேட்டியில் சொல்லாமல் சொல்வதும் இதைத்தான்.

 

இன்றைக்கும் சில கிராமங்களில், சில குறிப்பிட்ட சமூகங்களில் ‘அறுத்து விடுவது’ என்கிற  வழக்கம் இருக்கிறது. தனக்கு அவன் பிடிக்கவில்லையென அவளோ, அவள் பிடிக்கவில்லையென அவனோ பஞ்சாயத்தில் முறையிட்டு, தாலியை அறுத்துப் பிரிந்து கொள்ளலாம். நவீன வாழ்க்கைச் சிக்கல்கள் இதே முறையீட்டோடு இப்போதெல்லாம் அதிக அளவில் ஆண்களையும், பெண்களையும் கோர்ட்டில் கொண்டு போய்  நிறுத்திக்கொண்டு இருக்கின்றன. இப்படி பலர் முன்னிலையில் சேருவதும், பலர் ஒப்புதலோடு பிரிவதும் தேவையில்லை என்பதே இந்த living together வாழ்க்கை முறை கோருகிறது. தேர்தெடுப்பதும், சேருவதும், பிரிவதும் சம்பந்தப்பட்ட, தனிப்பட்ட அந்த ஆணின், அந்த பெண்ணின் விருப்பம் என்று சொல்கிறது.

 

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யோசிப்பதற்கும் நிறைய இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்று, அனுபவித்து,  இன்று பெரும் சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. குடும்பம் என்ற கோட்பாடு சிதைந்து, குழந்தைகளின் எதிர்காலம் கவனிப்பாரற்றுப் போவதாகவும் பல அறிஞர்கள் கவலையோடு கருத்துத் தெரிவிக்கின்றனர். எதிர்காலச் சந்ததியினர் தங்களையே அறியமுடியாமல் பெரும் மனக்குழப்பங்களுக்கு ஆளாவதும், மனநலம் பாதிக்கப்படுவதும் அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகள். திருமணம், குடும்பம் குறித்த மறுசிந்தனையும், மறுபார்வையும் தேவை என வலியுறுத்துகிறார்கள். சமீப காலங்களில் ஐரோப்பாவில் அதிகமாக விறகப்படும் புத்தகங்கள், இந்தப் பிரச்சினை சம்பந்தமானவையாக இருக்கின்றன. திருமணம் என்ற பந்தம் இல்லாமல், குடும்பம் என்ற அமைப்பை எப்படி பாதுகாப்பது என்பதுதான் முன்வந்திருக்கும் முக்கிய கேள்வி.

 

நடிகர் கமலஹாசன் இந்த இடத்தில்தான், திருமணம் இல்லாமல் குடும்பங்கள் நிலைக்கும் என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கிறார். அவரது மகள் சுருதி அவரோடு இல்லாமல், தன் தாயோடு இருந்தால், அவரது கருத்தும் பார்வையும் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை.

 

இந்தத் திருமணம், குடும்பம் எல்லாம், புனிதமானவை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. குடும்ப அமைப்புகளே, இந்தியாவில் ஜாதியையும் மதத்தையும் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் அரண்களாக இருக்கின்றன என கருத்துக்களும் முன்வந்து கொண்டு இருக்கும் காலம் இது. கவலையெல்லாம் குழந்தைகள் எதிர்காலம் குறித்தும், அவர்களது அடையாளம் பற்றியும் தான். இங்கே அடையாளம் என்று சொல்வது initial அல்ல; identityயை! அவர்கள் மீது கவலையும் அக்கறையும் யாருக்கு இருக்கும் என்பதற்கு பதில் இல்லையே. தங்கள் சுதந்திரத்துக்காக தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பலிகொடுப்பது சரியாய் இருக்குமா?

 

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சோவியத்துக்குச் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை அவரது சபையில் சொல்லிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்து  கேட்டு இருக்கிறேன். சோஷலிச சமூகத்தை ஏற்றுக்கொண்டு இருந்த அந்த காலக்கட்டத்தில், யார் வீட்டிலாவது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டு இருக்குமானால், போலீஸ் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டி காரணம் கேட்குமாம். குழந்தைகள் அரசுக்குச் சொந்தமானவை, அவர்களை அழவிட அவர்களது பெற்றோர்களுக்கும் கூட உரிமை கிடையாது என்கிற மிக உயர்ந்த கோட்பாடு அப்போது இருந்ததாம். கேட்கும்போதே சிலிர்த்தது.

 

அப்படியொரு சமூகத்தில், கமலஹாசன்களின் இதுபோன்ற கருத்துக்கள் பரிசீலிக்கப்படலாம். ஏற்றுக்கொள்ளவும் படலாம். தங்கள் மீது காட்டப்படுகிற அக்கறைக்காகவும், தங்களோடு நிற்கும் சுற்றத்துக்காகவும் ஏங்குகிறவன் மனிதன். தவறோ, சரியோ இப்போது அதை இங்கு குடும்பங்கள்தான் நிரப்பிக்கொண்டு இருக்கின்றன. அந்த இடம் வெற்றிடமாவது பெரும் சிக்கல்களையும், சமூகக் கேடுகளையும் உருவாக்கும்.

 

கமலஹாசன்கள் இதை யோசிப்பார்களா?

 

*

கருத்துகள்

36 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. What's your problem, man? Are you practising how to make a hill out of a mole? Funny, don't you think so?

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாக சொல்வதற்கு முன் அவர்கள் யோசிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. கமல் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்!
  இரண்டு திருமணத்தை அவர் புரிந்து கொண்டது வெளிபட்டிருக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. //குழந்தைகள் அரசுக்குச் சொந்தமானவை, அவர்களை அழவிட அவர்களது பெற்றோர்களுக்கும் கூட உரிமை கிடையாது என்கிற மிக உயர்ந்த கோட்பாடு அப்போது இருந்ததாம். கேட்கும்போதே சிலிர்த்தது.
  //

  கண்டிப்பாக இது ஒரு உயர்ந்த கோட்பாடு எனச் சொல்ல முடியுமா? அதேபோல் சில நாட்களில் , குழந்தைகளை தாங்கள் வேலைக்காக எடுத்துச் செல்ல முடியுமென அவர்கள் கூறியதும் உயர்ந்த கோட்பாடா?

  குடும்பம் எனும் அமைப்பில் இருக்கும் சங்கடங்களுக்கு பலியானவர்கள் உறவு முறையை (கணவன் - மனைவி) மறுபரிசீலனை செய்வது தவறாகுமா என்பதும் ஒரு கேள்வியே.

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 5. ஒரு நல்ல ஆராய்ந்து பார்த்து புரிந்து கொள்ளவேண்டிய பகிர்வாகவே தங்களின் பதிவினை கருதுகிறேன்...

  சில இடங்களில் விவாகரத்து பெற்ற பெற்றோர்களின் ஆதரவற்று அனாதையான குழந்தைகளும் இருக்கிறார்கள். இவ்வாறான இட்ஙகளில் பெற்றோரின் தவறான புரிந்துணர்வு தான் காரணம் என்றில்லாமல் அவர்களது சுயநலமும் ஒரு காரணம், தண்டனை என்னவோ பிள்ளைகளுக்குமட்டும்...

  கமலஹாசன் என்ற ஒருவரின் வாழ்க்கையிலும் இவ்வாறான சுயநலம் இருந்திருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 6. //அப்படியொரு சமூகத்தில், கமலஹாசன்களின் இதுபோன்ற கருத்துக்கள் பரிசீலிக்கப்படலாம். ஏற்றுக்கொள்ளவும் படலாம். //

  கமல்ஹாசன் வலியப்போய் சமூகம் இப்படி இருக்க வேண்டும் ,அப்படி இருக்க வேண்டும்-ன்னு சொல்லல . சினிமாவில் 50 வருடம் இருந்ததற்காக பேட்டி என்று கூப்பிட்டு திருமணத்தில் நம்பிக்கை இல்லாத நீ ஏன் கல்யாணம் பண்ணிகிட்ட -ன்னு கேட்டா அவர் தன் வாழ்க்கை பற்றிய தன் கருத்தை சொல்கிறார் ..அதை சமுதாயம் ஏற்றுக்கொள்ளணும் -ன்னு அவர் கோரிக்கை வைத்த மாதிரி தெரியல்ல

  பதிலளிநீக்கு
 7. அனானி நண்பரே!
  நான் அப்படி நினைக்கவில்லை. பேனை பெருமாளாக்கும் முயற்சியெல்லாம் இல்லை இது. தனக்கென்று மிகப்பெரும் அபிமானிகள் வைத்திருக்கும் பிரபலங்கள் சொல்லும் கருத்துக்கு பௌதீக சக்தி உண்டு. அதனால் எனக்கு வந்த கவலைதான் இது.


  கதிர்!
  அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.நன்றி.


  வால்பையன்!
  வழக்கமான உங்கள் எள்ளல்!


  ரா.கிரிதரன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  க.பாலாஜி!
  வருகைக்கு நன்றி.தனிப்பட்ட கமலஹாசனை நான் ஆராயவில்லை. அது தேவையுமில்லை என நினைக்கிறேன்.

  ஜோ!
  ஒப்புக்கொள்கிறேன். அவர் வலியப்போய் சொல்லவில்லைதான். இப்படித்தான் சமூகம் இருக்க வேண்டும் என்றும் கோரவில்லைதான். ’தான் செய்துகொண்ட சமரசம்’ என்பது வரைக்கும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
  திருமணங்கள் தேவையில்லை என்றும், ஆனாலும் குடும்ப அமைப்பு இருக்கும் என்றும் வெளியிட்ட பொதுவான கருத்தில் இருக்கும் குழப்பங்கள் குறித்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதட்டம் புரிகிறது. ஆனால், உறவு என்ற பெயரில் நாள்தோறும் இருவரும் அவஸ்தைப் படுவதில் அர்த்தம் இல்லை. விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது இங்கே, பஸ் பயணத்தில் சக பயணியோடு செய்து கொள்ளும் compromise என புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில் காதல் துணையின் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி என்றிருப்பின் இந்த பிரச்சனை எழாது. வாழ்க்கைப் பயணம் நீண்டது, விருப்பார்ந்த ஏற்பு இல்லையென்றால், விபரீதம் தான். இதைத் தான் தினமும் பத்திரிக்கைகளில் காணமுடிகிறது.
  அன்புடன்
  ஆரூரன்.

  பதிலளிநீக்கு
 9. அவசியமான பதிவு. அதுவும் கடைசி பத்தியில் சொல்லி இருப்பது ரொம்ப சரி. அப்படி ஒரு காலம் வரும் போது கமல் அவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளப் படலாம்.

  தங்கள் குழந்தைகள் எதிர்காலத்துக்காகக் கண்டிப்பாகத் திருமணம் என்ற பந்தத்தை மதித்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் இச்சமூகம் இருக்கிறது.

  குறைந்த பட்சம் குழந்தைகள் ஓரளவுக்கு வளரும் வரையிலாவது.

  யாரோ சொன்னது: “கணவன் மனைவி பிரியலாம். அப்பாவும் அம்மாவும் பிரியவே கூடாது”

  பிரிய மாட்டோம் என்ற உறுதி இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நிறைய யோசிக்க வேண்டும்.

  பொதுவாகத் திருமணம் என்பது குறித்து அடிப்படை தெளிவு வேண்டும். அதன் மீது மரியாதையும் வேண்டும்.

  அது இல்லாத குறையைத் தான் கலாசாரம், சம்பிரதாயம் என்பதைப் போட்டு நிரப்புகிறார்கள். அது ஒரு காலம் வரைக்கும் தான் பயன்பட்டது. இப்போது பல்லிளிக்கிறது!

  அவரவர் தங்கள் சந்தோஷத்துக்காகவே திருமண்ம், தங்கள் பெருமைக்காகவே குழந்தைகள் என்று பக்குவமில்லாமல் செயல்படுவதும் இதற்கெல்லாம் ஒரு காரணம்.

  எனக்குப் பட்டதைச் சொல்லி இருக்கிறேன். யாருக்காவது தவறாக இருந்தால் மன்னிப்பீர்களாக.

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான பதிவு. முடிவில் ஏற்பில்லை..
  இந்தப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏதோ ஒரு இழையில் இருக்கிறது, இன்னும் நாம் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். இன்னும் வெளிப்படையாக பலரும் விவாதிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்துக்காகக் கண்டிப்பாகத் திருமணம் என்ற பந்தத்தை மதித்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் இச்சமூகம் இருக்கிறது.//

  இதைத்தவிர திருமணத்தில் வேறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.:)

  பதிலளிநீக்கு
 12. ஆருரன் விசுவநாதன்!
  //உண்மையில் காதல் துணையின் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி என்றிருப்பின் இந்த பிரச்சனை எழாது. //
  இப்படி இருந்துவிட்டால்தான் பிரச்சினையே இல்லையே. பரஸ்பரம் புரிதலும், சுதந்திர உணர்வும் இருக்கும்பட்சத்தில் இது சாத்தியமே.
  நவீன வாழ்வின் சிக்கல்கள் இன்று திருமணம் குறித்து புதிய சிந்தனைகளையும், சிக்கல்களையும் உருவாக்கி இருக்க்கிறது. (அதனை ஒரு தனிப்பதிவாக எழுதலாம்). இந்தச் சிககல்களை புரிந்து கொள்வதிலும், எதிர்கொள்வதிலும் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குடும்ப அமைப்பையே நிராகரிக்கும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்துகின்றன. இன்று பெரிய அளவுக்கு பேசப்படவில்லையென்றாலும், புகைவதை உணரமுடிகிறது. அதுபற்றி நானும் இங்கு கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. தீபா!

  //யாரோ சொன்னது: “கணவன் மனைவி பிரியலாம். அப்பாவும் அம்மாவும் பிரியவே கூடாது” //

  நான் பதிவு முழுக்க எதைச் சொல்ல வந்தேனோ, அதை அந்த யாரோ மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்களே!

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. ஆதிமூலக்கிருஷ்ணன்!

  சரிதான். நான் இதுதான், இப்படித்தான் தீர்வு இருக்கும் எனச் சொல்லவில்லை. யோசித்துப் பார்த்திருக்கிறேன். இன்னும் தெளிவாக, யாரேனும் உரையாடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. //
  அவர்கள் மீது கவலையும் அக்கறையும் யாருக்கு இருக்கும் என்பதற்கு பதில் இல்லையே. தங்கள் சுதந்திரத்துக்காக தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை பலிகொடுப்பது சரியாய் இருக்குமா?
  //

  மாதவ்ராஜ்,

  இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம்....எப்பொழுது ஆண் பெண் உறவில் மன ஒற்றுமை இல்லையோ அப்பொழுதே அது கசந்து விடுகிறது...அதற்கு பின் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்வது காம்ப்ரமைஸாகத் தான் இருக்கும்..எல்லா நாளும், எல்லா நேரமும் காம்ப்ரமைஸ் செய்ய முடியுமா?? பல நேரங்களில் மனம் கட்டவிழ்கிறது என்பது தான் உண்மை...குழந்தைகளுக்காக ஒருவரை விருப்பமில்லாமல் சகித்துக் கொண்டு, பல நேரம் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதை விட, இருவரும் பிரிந்து வாழ்வதே குழந்தைகளுக்கு நல்லது..

  யோசித்துப் பாருங்கள்...அம்மாவை அடிக்கும் அப்பன், அப்பனிடம் முகம் கொடுத்து பேசாத அம்மா, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு யார் பக்கம் சரி, யார் தவறு என்று சொல்ல முடியாத குழந்தைகள்...அவர்களின் மன நலம் எப்படி இருக்கும்??

  இதற்கு பதில் இருவரும் குழந்தை நலன் பற்றி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு தனியாக இருப்பதே நல்லது...

  இந்தியாவின் குடும்ப அமைப்பில் பல பெண்கள் வேறு வழியின்றி சகித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்....ஒரு வேளை பொருளாதார ரீதியாக தனித்து நிற்கும் பலமும், கணவனை பிரிந்தவள் தானே என்று "தப்பாக" பார்க்கும் வக்கிரங்களும் இல்லாவிட்டால் இந்த பெண்கள் வேறு விதமாக முடிவெடுக்கக் கூடும்...

  பதிலளிநீக்கு
 16. மற்றபடி இந்த பதிவு கமல்ஹாசனைப் பற்றியல்ல, அவர் சொல்லிய ஒரு விஷயத்தை ஆராயும் பதிவு என்றே எனக்கு தோன்றுவதால், கமலை பற்றி எதுவும் சொல்லவில்லை..

  பதிலளிநீக்கு
 17. //
  மாதவராஜ் said...
  August 31, 2009 11:28 PM
  ஆருரன் விசுவநாதன்!
  //உண்மையில் காதல் துணையின் மகிழ்ச்சி, தன் மகிழ்ச்சி என்றிருப்பின் இந்த பிரச்சனை எழாது. //
  இப்படி இருந்துவிட்டால்தான் பிரச்சினையே இல்லையே. பரஸ்பரம் புரிதலும், சுதந்திர உணர்வும் இருக்கும்பட்சத்தில் இது சாத்தியமே.
  நவீன வாழ்வின் சிக்கல்கள் இன்று திருமணம் குறித்து புதிய சிந்தனைகளையும், சிக்கல்களையும் உருவாக்கி இருக்க்கிறது. (அதனை ஒரு தனிப்பதிவாக எழுதலாம்). இந்தச் சிககல்களை புரிந்து கொள்வதிலும், எதிர்கொள்வதிலும் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குடும்ப அமைப்பையே நிராகரிக்கும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்துகின்றன. இன்று பெரிய அளவுக்கு பேசப்படவில்லையென்றாலும், புகைவதை உணரமுடிகிறது. அதுபற்றி நானும் இங்கு கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்கிறேன்.
  //

  மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் மகிழ்வது நல்ல விஷயமே என்றாலும் இது மிக சிக்கலான விஷயம்...அப்படி ஒரு மகிழ்ச்சி ஏன் ஏற்படுகிறது என்று ஆராயப் புறப்பட்டால் முற்றிலும் எதிரான விடைகள் வரக்கூடும்!

  எனிவே, அப்படி இருப்பவர்கள் மிகச்சிலரே...

  இன்றைய வாழ்க்கையின் சவால்கள் மிக அதிகமானவை...உண்மையில் ஒரு போர்க்கால மன நிலையில் தான் இன்றைக்கு எல்லாரும் இருக்கிறார்கள்...தினந்தோறும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விடாத ஓட்டம்...தன்னை பாதுகாத்து கொள்ளவே எல்லாரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்...

  ஒரு எளிய ஆராய்ச்சி...இன்றைக்கு திருமண சந்தையில்(!) ஆண்களும்/பெண்களும் எத்தனை எத்தனை கண்டிஷன்கள் போடுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே இன்றைய சூழ்நிலையை புரிந்து கொள்ளலாம்!

  பதிலளிநீக்கு
 18. SORRY COMRATE...
  I CAN'T WRITE....

  I THINK FIRST TIME MATHAVRAJ CONFUSED IN ONE MATTER....

  I WANT TO DISCUSS SOMETHING DIRECTLY....

  பதிலளிநீக்கு
 19. உங்கள் வலைப்பூ கோவி.கண்ணனின் வலைப்பூ மாதிரியே மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்! :-)

  பதிலளிநீக்கு
 20. அதுசரி!

  நீங்கள் சொல்வதும் முக்கியமான கோணம்தான். ஆரோக்கியமான விவாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள். தாயும், தந்தையும் சேர்ந்திருந்தாலும் பிரசினை என்றாகிறபோது, அதற்கு பிரிந்திருப்பது மேல்தான். ஆனால் அப்போதும் அந்தக் குழந்தைக்கு பிரச்சினைதான்.ஆண் பெண் உறவுகள் குறித்தும், குடும்பம் குறித்தும் அப்போதும் அந்தக் குழந்தைக்குள் விநோதமான பிம்பங்களே உருவாகும். அதைத் தெளிவாக்கும் அக்கறையும், சமூகப் பொறுப்பும் கொண்ட ஊடகங்களும், சூழலும் இல்லையே! அதனால்தான் தாயின் ஸ்பரிசம் கொண்ட ஒரு அமைப்பு வேண்டும் எனச் சொல்ல வந்தேன். இன்னும் யோசிப்பதற்கு நிறைய உள்ளன.

  //மற்றபடி இந்த பதிவு கமல்ஹாசனைப் பற்றியல்ல, அவர் சொல்லிய ஒரு விஷயத்தை ஆராயும் பதிவு //
  மிகச்சரியாக புரிந்துகொண்டதற்கு நன்றி.


  //இன்றைய வாழ்க்கையின் சவால்கள் மிக அதிகமானவை...உண்மையில் ஒரு போர்க்கால மன நிலையில் தான் இன்றைக்கு எல்லாரும் இருக்கிறார்கள்...தினந்தோறும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விடாத ஓட்டம்...தன்னை பாதுகாத்து கொள்ளவே எல்லாரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..//

  மிக முக்கியமானது இது. எந்தக் காலத்தையும் விட, இப்போதுதான் மனிதன் ஒவ்வொருவரும் தனக்கான அடையாளத்தையும், இடத்தையும் கோருகிறார்கள். தான் என்பது விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. நவீன வாழ்வின் சிக்கலகள் என நான் குறிப்பிட்டதில் இதுவும் ஒன்று. அந்த அடையாளமோ, இடமோ தென்படாதபோது மனிதன் விபரீதங்களை நோக்கிச் செல்லக்கூடும் என அச்சமே வருகிறது. மாற்றம் குறித்து தயக்கங்கள் இல்லை. அது சரியான திசையில் இருக்க வேண்டும் என்ற கவலையே வருகிறது. எனவேதான் நான் அடையாளம் குறித்து திரும்ப திரும்பச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. இலக்கியா!
  நிச்சயம் நேரில் பேசுவோம்.

  யுவகிருஷ்ணன்!
  அப்படியா. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. குடுகுடுப்பை!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. திருமணம் என்பது அதுமட்டுமாகவும் இல்லை. குடும்பம் என்ற அமைப்புக்கு, நம் சமூகத்தில் திருமணம் என்பது முக்கியப் புள்ளியாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 23. மாதவராஜ்,
  "தனிச்சொத்துடமை" என்ற ஒன்று தோன்றியது முதற்கொண்டு அதை அனுபவிக்க தனது ஒரிஜினல் வாரிசு வேண்டும் என நினைக்கவைத்தது மனிதனை. அதன் விளைவுகளின் நீட்சிதான் திருமணம், குடும்பம் இத்யாதி...
  சோசலிச அமைப்பில் திருமணங்கள் இருக்கும். அவர்கள் சுதந்திரமாக வாழவும் வழி இருக்கும். தகுதியானவருடன் ஒருவர் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடியும். மண முறிவும் பெற முடியும் குழந்தைகளைப்பேணவும் முடியும் அதற்கான உத்தரவாதம் இருக்கும்.
  நாம் வாழும் சூழல் அப்படியானதல்ல..

  பதிலளிநீக்கு
 24. தீபா!

  //யாரோ சொன்னது: “கணவன் மனைவி பிரியலாம். அப்பாவும் அம்மாவும் பிரியவே கூடாது” //

  எனது கருத்தும் இதுவெ. சரியாக சொன்னிர்கல் தீபா.

  பதிலளிநீக்கு
 25. “”குடும்பம் தான் சக்திவாய்ந்த அமைப்பு அதை நீங்கள் என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும்”

  குடும்பம் என்பதே அப்பா அம்மா பிள்ளைகள் சோந்தது தான் அம்மா இல்லாமல் எப்படி குடும்பம் வரும், குடும்பம் ஆகும்? தவிர அப்பா பிரபலமாகவும் பொருளாதார ரீதியில் சக்தியாவும் இருப்பதால் சுருதி அப்பாவிடம் இருக்கிறார், இதே நிலையில் அம்மா இருந்தால் அவர் அம்மாவிடம் தான் இருந்திருப்பார், அப்போது எப்படி சொல்வார் கமல் ‘ என்னிடமும் சுருதியிடமும் பார்க்க முடியும் என்று”
  by rajakamal
  www.rajakml.blogspot.com

  பதிலளிநீக்கு
 26. /அந்த காலக்கட்டத்தில், யார் வீட்டிலாவது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டு இருக்குமானால், போலீஸ் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டி காரணம் கேட்குமாம். குழந்தைகள் அரசுக்குச் சொந்தமானவை, அவர்களை அழவிட அவர்களது பெற்றோர்களுக்கும் கூட உரிமை கிடையாது என்கிற மிக உயர்ந்த கோட்பாடு அப்போது இருந்ததாம். கேட்கும்போதே சிலிர்த்தது./

  இது தான் சமூகம் என்பது. கேட்கும்போதே உண்மையாகவே சிலிர்த்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 27. திலீப் நாராயணன்!
  அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.


  இரும்புக்குதிரை!
  நன்றி.


  ராஜ்கமல்!
  //தவிர அப்பா பிரபலமாகவும் பொருளாதார ரீதியில் சக்தியாவும் இருப்பதால் சுருதி அப்பாவிடம் இருக்கிறார், இதே நிலையில் அம்மா இருந்தால் அவர் அம்மாவிடம் தான் இருந்திருப்பார்//
  உண்மைதான். இதிலும் அடையாளம் என்பதுதான் முக்கிய விஷயமாகிறது இல்லையா?


  திகழ்!
  புரிதலுக்கும், தங்கள் உணர்வுக்கும் என் வணக்கங்கள்.


  நாஞ்சில்நாதம்!
  நன்றி


  ck!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 28. First of all: What is the need for this question? this show was for commomerating Kamal for completeing 50 years in Indian Cinema, then wht is the purpose of asking his personal life? I couldn't understand, is that bcoz no other N.Indian actor has done this ? These ppl are simply there to Tarnish Kamal's image.There are so many things they could ask, why his personal life ? Is this constructive Journalism ?

  பதிலளிநீக்கு
 29. Healthy discussion on an interesting comment made by an well know person. I recently watched the drama 'Washingtonil thirumanam'. How many conditions and hurdles the girl's parents had to meet and cross before during the marriage. After over 20 years, did the situation? I doubt not!

  பதிலளிநீக்கு
 30. Good discussion.
  Only small doubt
  if Kushboo talks then tamil culturists all joined together and filed case.
  But when this olganayagan tells something , what a sappaikaattu.
  So how many of the people here who supported that is his opinion are ok if your children in future say the same thing.
  So family is not needed, marriage is not needed so any two can have kids, the kids could be raised by one of the two is ok.
  Even in western societies,though they have live in relationships, still the child is given opportunity to see both mom and and dad when the couple separated.
  The parenthood of both are respected eventhough the partnership of the both is not respected.
  Here this famous actor of olaga tharam even has acclaimed that his daughters are not communicating to their mom is right. so that is what the Tamil culture.
  Not too much a conventional but still this person's views are really too much damaging for a healthy relationship of kids and parents also.
  Pity many are supporting this views,
  what to do he is not rajinikanth to attack from all corners as anti tamil

  பதிலளிநீக்கு
 31. JDK!

  தென் இந்திய, வட இந்தியா என்றெல்லாம் இதனை பார்க்கவேண்டாம் என்பது என் கருத்து. பல இந்தி நடிக, நடிகைகளிடமும் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன. அது பிரச்சினையில்லை. கமலின் பர்சனல் ஆன விஷயங்களில் நாம் தலையிட வேண்டாமென்பதுதான் எனது கருத்தும். அவர் வெளியிட்டுள்ள பொதுவான கருத்து குறித்து நான் யோசித்தவைகளை இங்கு சொல்லியிருக்கிறேன்.


  அனானி நண்பரே!
  நன்றி.


  அனானி நண்பரே!
  குஷ்புவின் கருத்துக்கு அப்படியொரு எதிர்வினை ஆற்றியிருக்கக் கூடாது. அதுபோல் கமலின் கருத்துக்கும் ஆற்ற வேண்டியதில்லை. இவைகள் கருத்துக்கள்தானே! உரையாடலாம், விவாதிக்கலாம். அதுதான் ஆரோக்கியமானதாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. ***அதாவது, குடும்ப உறவுகளே முக்கியமானவை. அதற்கு திருமணங்கள் தேவையில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்கிறார். கணவன் மனைவி உறவு நிரந்தரமானது அல்ல என்பதும் தகப்பன்-குழந்தை உறவோ, தாய்-குழந்தை உறவோதான் நிலையானது என்பதும் அவர் சொல்லிய வார்த்தைகளின் மையத் தொனியாக இருக்கின்றன.***

  As for married life is concerned Kamalahasan is a LOSER!

  But his mom and dad were not losers! Sruthi might not be a loser either if she finds a "right partner"

  Loser Kh is trying to say, "there are lots of LOSERS like me and I am not alone"! By saying that he feels better! That must make him feel better you see!

  But there are some Kh worshipers- though they found their correct partners and successful in their married life- who never forget to kiss his foot no matter what nonsense this guy says!

  பதிலளிநீக்கு
 33. தற்பொழுது ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் கணவன்-மனைவி பிரிவுகளலூம் பிரச்சணைகளாலூம் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்று ஒரு ஆய்வரிக்கை சொல்கின்றது... விரைவில் நம் நாடு மேற்கத்திய குழந்தைகள் போல் தந்தை யார் என்று தெரியத நிலைஏற்படலாம்... இதற்கு நம் நாட்டுச்சட்டமும் ஒரு மிகப்பெரிய காரணம்...

  கணவன்-மனைவி பிரிவில்.. கணவன் தன் குழந்தையை பார்க்க வேண்டுமென்றால் மனு செய்து தான் பார்கமுடியும் அந்த மனுவில் அவருக்கு ஒரு சில மணிநேரங்கள் மட்டுமெ அனுமதி... மற்றும் குழந்தையில் தாய் கொலைகாரியாக இருந்தாலும் தாயிடம் தான் குழந்தை வளரவேண்டும் என்கின்றது சட்டம்...

  பதிலளிநீக்கு
 34. வருண்!
  உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. பகிர்வுக்கு நன்றி.


  தமிழ்சரவணன்!
  குழந்தைகள், தாயிடமும், தந்தையிடமும் சேர்ந்து இருப்பதுதான் ஆரோக்கியமானது. அவர்கள் பிரியும்போதுதான் சட்டம், மூன்றாம் மனிதர்களின் தலையிடுகிறார்கள். தந்தையைக் காட்டிலும், தாய் பரிவும், பொறுப்பும் குழந்தைகளிடம் காட்டுகிறார்கள் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது. பிரிந்த தந்தை இன்னொரு திருமணம் செய்துகொள்ள முடியும்.இன்னொரு குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியும் தாய் அந்தக் குழந்தையே தன் உலகமாய் வாழவேண்டியதிருக்கும். சூட்சுமங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!