கட்டங்களிலிருந்து எழும்பும் சரித்திரம்!

ரெயில் சென்னையிலிருந்து டில்லிக்கு சென்றுகொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தை நமக்குச் சொல்கிற ராகுல்ஜிக்கு இப்போது பதினோரு வயது. அவனது அப்பா அம்மா, ஒரு சர்தார்ஜி குடும்பத்தார், ராணுவ வீரர், அப்புறம் தன் தாத்தாவோடு வந்திருக்கும் ராகுல்ஜியின் வயதொத்த மார்ட்டினும் ஒரே கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்கின்றனர். கபீர் என்னும் இன்னொரு நண்பனும் அறிமுகமாகிறான். இவர்களோடு அந்த ரெயிலில் பயணிகளுக்கு பணிவிடை செய்கிற சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவன் பேர் தோழர்! முக்கியமாகச் சொல்ல வேண்டியது இன்னும் ஒன்று இருக்கிறது. அது செஸ் விளையாட்டு!

 

ஒரே நேரத்தில் டில்லிக்கும், செஸ் விளையாட்டுக்குள்ளும், தோழரின் வாழ்க்கையோடும் பயணம் செய்கிற அனுபவம் வாசகனுக்கு மெல்ல மெல்ல வாய்க்கிறது. இரா.நடராஜன் எழுதிய ‘ஒரு தோழரும், மூன்று நண்பர்களும்’என்னும் சிறுவர்களுக்கான நாவலைத்தான் இங்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். சுவராசியத்தையும், வரலாற்றையும், சிறுவர்கள் உலகத்தின் விலைமதிக்கமுடியாத புதிர்களையும் தந்தபடி பக்கங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன.

 

தான் யார் என்று தெரிந்திராத தோழர் என்னும் பெயர் கொண்ட அவனுக்கு, ரெயிலில் கம்பார்ட்மெண்ட்டைத் துடைத்து பிச்சையெடுக்கும் சிறுவனாக வாழ்க்கைப் பயணம் ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் உதவும் அவனை, அங்கு சதா நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் முரட்டு டி.டி.ஆர் ஒருவன் கொத்தடிமையாக வைத்திருக்கிறான். ராகுல்ஜி, மார்ட்டின், கபீர் ஆகியோரின் முயற்சியில், தோழர் எப்படி விடுவிக்கப்படுகிறான் என்பதுதான் இந்த ரயில் பயணமும், கதையும். பதினான்கு வயதேயான தோழர் இருபத்து ஏழு கம்ப்யூட்டர்களோடு ஆடி செஸ்ஸில் வெற்றி பெறவும், விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்த்து தந்தி அவனுக்கு கிடைப்பதுமாக கதை முடிவடைகிறது. நாம் தொடர்ந்து அந்த சிறுவர்களோடு பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

 

குதிரை வண்டியோட்டிய மார்ட்டின் லூதர் கிங், வாழ்நாள் முழுவதும் பயணம் செய்துகொண்டிருந்த ராகுல் சங்கிருத்தியாயன், பூக்களே உடலாகிப்போன கபீர் என மனிதகுலம் தழைக்க சிந்தித்த அற்புதமான மனிதர்கள் இந்த பயணத்தில் அறிமுகமாகிறார்கள். ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் வருவது போல ரெயிலில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் காட்சி விரிய, அப்படியே ‘தி கிட்னாப்ட்’ நாவலில் வரும் டேவிட் பாஃபோர் என்னும் சிறுவனாக காட்சியளிக்கிற தோழர், பிறகு ஒரு இடத்தில் புதையலாய் கண்டெடுத்த மைக்கேல் ஆஞ்செலாவின்  சிற்பமாகவும்  நிற்கிறான். இலக்கியத்தின் முகங்களோடும் சித்தரிப்புகளோடும் நாம் கலந்து விடுகிறோம்.

 

சதுரங்கத்திற்குள் நாட்டையே இழக்க பயந்து, அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவனையே சாளுக்கிய மன்னன் ஹிந்த் என்பவன் வெட்டிவிட, அந்த உதிரத்திலிருந்து பெருகிய காவியமாய், செஸ் விளையாட்டு பிரம்மாண்டமாய் நம்முன் உருவெடுக்கிறது. ரூக் என்பது அரேபியாவில் ஒட்டகமாகவும், ரஷ்யாவில் கப்பலாகவும் நிற்கின்றன. மன்னர்கள் மட்டுமே செஸ் விளையாடிய காலத்தில் காய்கள் ஒன்றையொன்று வெட்ட அதிகாரமின்றி நிற்கின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி பயணம் செய்து கொண்டு இருக்கிற செஸ் உலகம் வியப்பிலாழ்த்தும் கதைகளைக் கொண்டதாயிருக்கிறது. தடையின்றி ஆடி பட்டினியால் இறந்துபோன டெக்ஸ்செப்பல்ஸ், தோல்வி உறுதி என்றவுடன் தன் எதிராளியை பிப்பின் தேசத்து மன்னன் செஸ் பலகையின் மீதே வெட்டி சாய்த்தது, சோவியத் யூனியனின் செஸ் விளையாட்டுக்கார அல்கலைன் ஹிட்லரை ஆதரித்தது என்பன செய்திகளாக இல்லாமல் நம் அறிவுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் படிந்து பழம் நினைவுகளாகி விடுகின்றன.

 

நாவலை படித்து முடித்த பிறகு, நமக்கு செஸ் கட்டங்களிலிருந்து, ஒரு சரித்திரம் உருவங்களாய் எழும்புவதைப் பார்க்க முடியும். அதிலொரு கட்டத்தில் தோழரைக் கொண்டு போய் உட்காரவைத்துப் பார்க்கிறார் நாவலாசிரியர் இரா.நடராஜன். வரலாற்றுச் செய்திகளை வைத்து நிரப்பிய, லாஜிக் இல்லாத கதை என்று எளிதாக சொல்லிவிடாமல், கதைக்காரன் சொல்லும் காட்சிகளுக்குள் சஞ்சரிக்க முடிந்தால் அற்புதமான வாசிப்பு அனுபவத்தை பெற முடியும். ஒரே நாளைக்குள் ஒருவன் எப்படி செஸ் சாம்பியன் ஆக முடியும் என்பவர்களுக்கு அதை ஒரு ஃபாண்டஸியாக பாருங்கள் என்றுதான் சொல்வேன். ஒரே பாடலில் கோடிஸ்வரர்களாகுவதை ஏற்றுக்கொள்ளும் நாம், சிறுவர் உலகத்தின் அண்டரெண்டாப் பட்சியகவும், மாயக்கம்பளமாகவும் செஸ் விளையாட்டை ஏன் பார்க்க முடியாது?

 

நாவல் :          ஒரு தோழரும் மூன்று நண்பர்களும்
ஆசிரியர் :     இரா.நடராஜன்
பக்கங்கள் :    72
விலை :         ரூ.60/-
வெளியீடு:     வம்சி புக்ஸ்
                             19, டி.எம்.சாரோன்
                            திருவண்ணாமலை - 606 601

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வழக்கம்போல தங்கள் நடையில் ஒரு அருமையான பகிர்வு! சென்னையில் கிடைக்கும்தானே?!


    //ஒரே பாடலில் கோடிஸ்வரர்களாகுவதை ஏற்றுக்கொள்ளும் நாம், சிறுவர் உலகத்தின் அண்டரெண்டாப் பட்சியகவும், மாயக்கம்பளமாகவும் செஸ் விளையாட்டை ஏன் பார்க்க முடியாது?//

    :-)))

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவைப் படித்த உடன், அந்த புத்தகம் வாங்கி உடனே படிக்க வேண்டும் என்ற அவா வந்து விட்டது.

    அறிமுகத்திற்கு மிகுந்த நன்றி.

    புத்தகங்கள் பல நேரம் நம் சிந்தனை போக்கை மாற்றுகின்றன. புத்தகங்களில் வரும் கற்பனை சூழ்நிலைகள், நிஜ வாழ்வில் நாம் அது போன்ற சூழ் நிலைகளை சந்திக்க முற்படும் போது பெரிதும் உதவி செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. அருமை... அருமை... தகவலுக்கு நன்றி.....!!

    பதிலளிநீக்கு
  4. நாஞ்சில் நாதம்!
    சந்தனமுல்லை!
    ராம்ஜி யாஹூ!
    லவ் டேல் மேடி!

    நன்றி.
    இந்த புத்தகம் சென்னையில் டி.நகர் புக்லேண்ட்ஸில் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் வலிமையான எழுத்து தோழா.
    சிலிர்க்க வைக்கிற பதங்கள், மற்றும் சுட்டுதல்கள்.
    மிக ஆழமானது....இந்த அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  6. அடுத்த‌ முறை சென்னை வ‌ரும் போது,வாங்க‌ நினைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளில் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே
    செல்கிற‌து.

    அறிமுகப் பகிர்வுக்கு மிக்க நன்றி !!!

    பதிலளிநீக்கு
  7. அருமையான் அறிமுக உரை. நன்றி
    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  8. புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்க மாட்டேன்.

    அம்முவிடம் கொடுத்து அனுப்புங்கள் அங்கிள்! :-)

    //தடையின்றி ஆடி பட்டினியால் இறந்துபோன டெக்ஸ்செப்பல்ஸ், தோல்வி உறுதி என்றவுடன் தன் எதிராளியை பிப்பின் தேசத்து மன்னன் செஸ் பலகையின் மீதே வெட்டி சாய்த்தது, சோவியத் யூனியனின் செஸ் விளையாட்டுக்கார அல்கலைன் ஹிட்லரை ஆதரித்தது என்பன செய்திகளாக இல்லாமல் நம் அறிவுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் படிந்து பழம் நினைவுகளாகி விடுகின்றன. //

    ஆஹா!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!