அப்போதுதான் விடிந்திருக்கும் காலையில் ஆம்னி பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி வழியே ஒவ்வொரு முறை சென்னைக்குள் நுழையும்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மெல்ல எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறிக்கிற ஊர் இல்லை இது. எண்ணெய் தேய்க்காமல், பவுடர் பூசி அந்த நேரத்திலும் ஓட்டமும் நடையுமாக பல பெண்களைப் பார்க்க முடியும். மணிக்கட்டை பார்த்தபடி பஸ் ஸ்டாண்டில் தவிப்பவர்களை, ஷூ, ஷாக்ஸ் போட்ட குழந்தைகளைப் பார்க்க முடியும். அருகாமையில் செல்லும் காருக்குள் உற்றுப் பார்த்தால் கோர்ட் சூட் போட்டு பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் மனிதர் தெரிவார். பிரமை பிடித்தபடியும், வெறிபிடித்தபடியும் மனிதர்கள் உட்கார்ந்திருக்கிற ஒரு இராட்சச சக்கரம் எப்போதுமே சுற்றிக்கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. துருப்பிடித்து நிற்கும் மரங்கள் மனதில் ஒட்டுவதேயில்லை. பறவைகளின் சத்தங்களை விழுங்கிவிட்டு வாகன இரைச்சல்களாய் சதாநேரமும் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமா போஸ்டர்களுக்குள்ளும், விளம்பர பேனர்களுக்குள்ளும் தன்னைச் சுருட்டி வைத்துக் கொண்டு நிற்கிற ஒரு பைத்தியக்கார உலகம் என்றே தெரியும். இதெல்லாமுமே ஒரு இந்திய நகரத்தின் பொதுவான, அதுவும் வெளித்தோற்றமாகவே இருக்கின்றன. சென்னையைப் பற்றிய சித்திரம் அவரவர் அனுபவங்களிலிருந்தே தீட்டப்படுகிறது.
பிறந்தது இங்கேதான் என்பது எதோ காகிதத்தில் எழுதிவைத்த குறிப்பாகத்தான் இருக்கிறது. அது குறித்து சிலிர்ப்பூட்டும் எந்த உணர்வும் இல்லை. திருவல்லிக்கேணியில் மணி ப்ரொப்ரைட்டரி ஸ்கூலில் சேர்ந்த முதல் நாள் வகுப்பறை இருட்டுக்குள் இருந்ததாய் தெரிகிறது. கிருஷ்ணாம்பேட்டையில் கண்ணகிச்சிலைக்கு நேர் உள்ளே வரும் தெருவில் இருந்த பெரிய இரண்டடுக்குக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் தெரியும் கடல் ஞாபகத்தில் இருக்கிறது. கபாலீசுவரர் கோவிலில், அம்மாவையும், அண்ணன்களையும் விட்டு, தொலைந்து போனவனாய் கூட்டத்தில் தேடி அழுதுகொண்டே அலைந்ததை இப்போது நினைத்தாலும் திக்கென்று இருக்கிறது. இரும்புக்கடையும், பொட்டுக்கடையும் கோடம்பாகத்துக்கு நகர்ந்திட, சூளைமேட்டில் பஜனைகோவில் தெருவில் இருந்த வீட்டின் நடு அறையில் அப்பா மஞ்சள் காமாலையில் படுத்துக் கிடந்தது லேசாய் மனதில் இருக்கிறது. அரசுப்பள்ளியில், பக்கத்திலிருந்தவன் என் வலது கையை பிளேடால் வெட்டிவிட முதன்முதலாய்ப் பார்த்த என் ரத்தம் உறைந்து போயிருக்கிறது. இன்றைக்கும் எனக்கான அடையாளங்களில் ஒன்றாய் அந்த வெட்டுக்காயம் ரெக்கார்டுகளில் பதியப்பட்டு கூடவே வருகிறது. ‘நான் தன்னந்தனி காட்டு ராஜா, என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’என்னும் அந்தப் பாடல் வழியே சென்று குழந்தைகளோடு காரில் வரும் சிவாஜி கணேசனை முதன் முதலாய் ராம் தியேட்டரில் பார்க்க முடிகிறது. ஒருநாள் ஊர்நோக்கி எல்லோரும் ரயிலில் போய்க்கொண்டு இருந்தோம். வளர்ந்து வாழ்ந்த இடங்களை விட்டு ஒரேயடியாக அப்பா திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.“உனக்கு இந்த ஊர் லாயக்குப்படாது. ஓடிப் போய்விடு” என்று அப்பாவை சென்னை விரட்டி விட்டதை நான்காம் வகுப்பு படித்து முடித்திருந்த நான் புரிந்திருக்கவில்லை.
ஊர்தான் என்னையும் என் உலகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியது. “நீ ஜோதியின் மகனா”, “தங்கவேல் தாத்தாவின் பேரனா” என்ற விசாரிப்புகளும், “மாது” என வாஞ்சையோடு தூக்கிவைத்துக் கொண்டவர்களுமாய் நிறைந்திருந்தது. வயலுக்கும், குத்தகை எடுத்திருந்த ரைஸ்மில்லுக்குமாய் அப்பா ஓடிக்கொண்டு இருந்தார்கள். ஆச்சியின் மகாபாரதக் கதைகளின் ஊடே சென்னையின் கடந்த கால வாழ்வும் புரிய ஆரம்பித்தது. அரக்குமாளிகையில் இருந்து தப்பிவந்த ஐந்து பேரும் நாங்கள்தான் என்றே பட்டது. வாய்க்கால்களும், குளங்களும், மனிதர்களும், கதைகளுமாய் நிரம்பிய உலகத்தில் நான் முழுவதுமாய் சுவாசித்தேன். கூடப் படித்தவர்கள் திடுமென காணமல் போய், அந்த வருட அம்மன்கோவில் கொடைக்கு சென்னையிலிருந்து திரும்பி வருவார்கள். அப்படி வந்த சேகர்தான் முதன்முதலாய் ஊருக்குள் பெல்ஸை அறிமுகப்படுத்தியவன். எதாவது கடையில் வேலைபார்க்கும் அவர்கள் சென்னையைப்பற்றி அளந்துவிடுபவை ஒரு மாய உலகத்திற்கு ஊரையே இட்டுச்செல்லும். “ஆமாம், பெரிய ஊர்..” என அம்மா முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறேன். அப்பாவைக் கல்யாணம் செய்துகொண்டு முதன்முதலாய் சென்னைக்குச் செல்லும்போது அம்மாவுக்கும் நிறைய கனவுகள் இருந்திருக்க வேண்டும்.
கல்லூரியின் இரண்டாமாண்டு படிக்கும்போதுதான் திரும்ப சென்னைக்கு வந்தேன். தினத்தந்தியில் அப்ரைண்டிசாக இரண்டு மாத காலம் பணிபுரிய கோடை விடுமுறையில் கல்லூரியிலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். என் அண்ணனோடு படித்து, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்தவர் நுங்கம்பாக்கத்தில் தண்டவாளங்களின் அருகே ஒரு வீட்டில் அவரது நண்பர்களோடு தங்கியிருந்தார். அங்கேதான் நானும் அடைக்கலம் புகுந்தேன். சாவகாசமாய் நகரும் புகைவண்டியில் தினந்தோறும் திருச்செந்தூருக்கு நண்பர்களோடு படிக்கச் சென்று வந்துகொண்டு இருந்த எனக்கு எலக்டிரிக் டிரெய்னின் வேகமும், தடதடக்கும் சத்தமும் மிரட்சியைத் தந்தது. அந்தக் கூட்ட நெரிசலில் நுங்கம்பாக்கத்திலிருந்து எக்மோருக்கு செல்வதற்குள் கசங்கித்தான் போனமாதிரி இருக்கும். கண்ணிழந்த ஒருவன் எப்போதும் அங்கே பாடிக்கொண்டிருந்தான். எல்லா இடங்களிலும் நிரோத் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருந்தன். பிளாட்பாரம் தாண்டி வெளிச்செல்ல படியேறி மேல்நின்று பார்க்கும்போது கூட்டம் பெரும் பைத்தியம் பிடித்ததாய் கீழே அலைபாய்ந்து கொண்டு இருந்தது. சென்னையின் அழிக்கமுடியாத சித்திரங்களில் அதுவும் ஒன்று. லிபர்ட்டி தியேட்டரில் நான்கு தடவை பார்த்த ஒருதலை ராகம் படம் ஊரின் நினைவுகளையே மீட்டிக்கொண்டு இருந்தது. இரண்டுமாதம் கழித்து ஒரு காலையில் புதுக்குளத்தில் முங்கி குளித்து எழுந்த போது அப்பாடா என்று இருந்தது.
அண்ணன்கள், தம்பி எல்லோரும் வேலைக்குச் சென்றுவிட படித்து முடித்து ஊரில் சும்மா இருந்த என்னை சென்னையில் மாமா வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அண்ணாநகரில் அவர் இருந்தார். யுனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் டெவலப்மெண்ட் ஆபிசராகிவிடலாம் என்று ஏஜண்ட்டாக சேர்த்துவிட்டார். தனியாகவே சென்னையில் அலைந்தேன். கார்கள் இருக்கும் வீடுகளின் அழைப்புமணியடித்துக் காத்திருக்கும் அந்த நிமிடங்கள் பதற்றமானவை. திறந்ததும் அவர்களிடமிருந்து பாயும் பார்வைகளில் தலைதெறிக்க ஒடிவிடத் தோன்றும். எனக்கான மனிதர்கள் யாரும் இல்லையெனத் தோன்றியது. நானும் தோற்றுக்கொண்டு இருந்தேன். என்னை விட்டு விடுங்கள் என ஊருக்கு திரும்பிவிடத்தான் எப்போதும் தோன்றும். அண்ணாநகர் டவரிலிருந்து சென்னயைப் பார்க்க பயமாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஹிந்து நாளிதழில் வரும் classified பக்கங்களாய்த்தான் கட்டிடங்கள் அடைந்து கிடந்தன. வீடுகளின் வாசல்களில் ஒரு வயதான அம்மாவோ அப்பாவோ தெருவைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அப்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரம்பூர் மாதவராம் ஹைரோடு சென்று, அங்கு ஸ்டேஷனரி கடை வைத்திருந்த பால்ய சினேகிதன் அழகுவேலைப் பார்ப்பேன். ரெயில்வே ஸ்டேஷன் சென்று பேசிக்கொண்டு இருப்போம். சென்னையைப் பற்றி நிறைய எனக்குச் சொன்னவன் அவன்தான்.
ஏழெட்டு மாதங்களில் அண்ணனுக்குச் சென்னையில் வேலை கிடைத்து, திருமணமும் ஆனது. கே.கே.நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தான். நானும் அவனோடு போய் ஒன்றரை வருடம் போல இருந்தேன். சென்னை என்னும் நகரத்தின் அகவாழ்வு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். அம்முவையும் அங்குதான் பார்த்தேன். வாழ்க்கை மீண்டும் சுவராசியமானது. வீட்டுக்காரர் தெலுங்கு. பக்கத்து வீடு மலையாளம். அந்தத் தெருவின் ஒருமுனையில் டைரக்டர் மணிவண்ணன் வீடு. இன்னொரு முனையில் குடிசை மாற்றுவாரியக் கட்டிடங்கள். தினமும் கன்னிமரா லைப்ரரிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எல்.ஐ.சி கட்டிடத்தை காண்பித்து, இதுதான் சென்னை என்று சினிமா அடையாளம் காட்டிக்கொண்டு இருக்க, புதுமைப்பித்தன் வீடுகளுக்கு வெளியே டிராம் வண்டிகள் ஓடிய சாலைகளுக்குள் சிக்கிக்கொண்டு இருந்த சென்னையின் கதைகளைச் சொன்னார். வீடுகளுக்குள்ளும், சேரிகளுக்குள்ளும் இருந்த சென்னையை ஜெயகாந்தன் காண்பித்தார். சென்னையின் மனிதர்கள் மெல்ல மெல்ல புலப்படவும் பரிச்சயமாகவும் ஆரம்பித்தார்கள். பயம் மட்டும் விலகாமலேயே இருந்தது. ஊரில் எப்போதாவது யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சிகரெட் குடித்தவன் ‘யார் என்னை இங்கே கேட்க முடியும்’ என்பதாய் காமராஜ் சாலையில் சிகரெட்டைக் குடித்து நான் பாட்டுக்கு புகையை ஊதிக்கொண்டு தைரியமானவனாய் காட்டிக்கொண்டேன். சென்னையின் எல்லாத் தியேட்டர்களிலும் படம் பார்த்துக் கொண்டு அலைந்தேன்.
வேலை கிடைத்து சாத்தூருக்கு வந்தேன். அண்ணன் பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டான். சாத்தூரில் பார்த்துப் பழக ஆரம்பித்த நண்பர்கள் எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் சென்னையா” என்று கேட்டது ஆச்சரியமாயிருந்தது. உடைகளையும், பேசுவதையும், பழக்க வழக்கங்களையும் பார்த்தால் தெரிகிறது என்பார்கள். இது ஒரு வினோதம்தான். இரண்டு, இரண்டரை வருடங்களுக்குள் சென்னையால் ஒரு மனிதனுக்குள் ஊடுருவிக்கொள்ள முடிகிறது. மனிதர்கள் அந்த அடையாளங்களுக்கு தனிப்பார்வையும், மரியாதையும் கொடுப்பதும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
சென்னை என்ற சொல்லே அப்போது பிடித்துப் போனதாயிருந்தது. என் தனிமையையும், தூக்கத்தையும் அது கொன்று கொண்டு இருந்தது. அம்முவைப் பார்க்க வேண்டுமென்றால், திருவொற்றியூரில் இருந்த நண்பனின் வீட்டில் போய்த் தங்க வேண்டியிருந்தது. தொழிற்சங்க வேலைகளாக தோழர்களோடு செல்லும்போதெல்லாம் காவேரி லாட்ஜிலும், பாரிஸ் கார்னரில் இருந்த தொழிற்சங்க அலுவலகங்களிலும் தங்கிக்கொள்வோம். வருசத்துக்கு பத்துப் பனிரெண்டு தடவையாவது லேபர் கமிஷனரையும், வக்கீலையும், அப்படியே அம்முவையும் பார்த்து வந்தேன். சென்னையில் காதலர்களுக்கான இடம் ஏராளமாய் இருந்தாலும் காதலுக்கான் இடம் சொற்பமாகவே இருக்கிறது. மெரீனா கடற்கரையெல்லாம் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு திருமணம் நடத்திவைக்கிற சங்கதிதான். உயிருக்குள் இறங்கும் கடல் அலைகளின் இரைச்சலையும் அங்கு விழுங்கிவிடுகிறார்கள். குழந்தைகளோடு சென்று விளையாடலாம். வள்ளுவர் கோட்டம், அடையாறு பார்க், எம்ரால்டு தியேட்டர் அல்லது ஒரு ஓட்டலின் மேஜை என்று காதலர்கள் நிரம்பி வழிந்தாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவே தனிமையையும், காதலர்களுக்கான ஏகாந்தத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அன்றிலிருந்து இன்றுவரை சென்னைக்கு போய் வந்து கொண்டே இருக்கிறேன். திருமணம், குடும்பம், தொழிற்சங்கப்பணிகளோடு இருபது வருடங்களாக அவ்வப்போது சென்னையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இப்போதும் அம்மு உற்சாகமாகி விடுகிறாள். திருச்செந்தூர் அருகில் உள்ள தேரிக்காடு சார்ந்த என் சொந்த ஊர் செங்குழிக்குச் செல்ல குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. சென்னை என்றால் குதூகலம் கொள்கிறார்கள். “ஐ.பி.எல் மேட்ச்சில் சென்னை இருக்கிறது, செங்குழி இருக்கிறதா” என்று என் எட்டு வயதுப் பையன் கேட்கிறான்.
அலுவல் வேலையாக காலையில் சென்னை சென்று மாலையில் மதுரைக்கு வீடு திரும்பும் கனவான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.. எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாமல், மூட்டை முடிச்சுக்களோடு மூச்சு விட மட்டுமே முடிந்த நெரிசலில் டிரெய்னில் முன்பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்ட்டில் மக்கள் சென்னை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். சென்னை எல்லாருக்குமான இடமாக இருக்கிறது. ஹோலிப் பண்டிகையும் கொண்டாடுகிறார்கள். பொங்கலையும் கொண்டாடுகிறார்கள். தீவுகளால் ஆன தனித்தனி பிரதேசமாகவும் இருக்கிறது. ஒரே உலகமாகவும் இருக்கிறது. புரசைவாக்கம் வேறு. திருவல்லிக்கேணி வேறு. அம்பத்தூர் வேறு. திருவொற்றியூர் வேறு. அண்ணாநகர் வேறு. குரோம்பேட்டை வேறு. பர்மா பஜாரும், பாண்டி பஜாரும், ரெங்கநாதன் வீதியும், டாஸ்மார்க் கடைகளும், தேவி தியேட்டர்களும் பொதுவானவை.
காலமும், விதிகளும் இங்கு வேகமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒருகாலத்தில் பேச்சலர்ஸுக்கு வீடு கிடையாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இப்போது பேச்சலர்ஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எவ்வளவு வேகமாக மாற்றிக் கொள்ளும் போதும், இந்திய நகரங்கள் தங்கள் தொன்மங்களையும், பழைய காலங்களையும் எங்காவது தேக்கி அடைகாத்துக் கொள்கின்றன. சட்டென்று ஒரு தருணத்தில் அவை பிடிபட்டு, வேர்களின் வாசனையோடு வெளிப்படும். சென்னைக்கு அந்த பிடிவாதம் இல்லையென்று தோன்றுகிறது. மிக எளிதாக உதறிவிட்டு, தன்னை உருமாற்றிக் கொள்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மூர்மார்க்கட்டே இருக்கும் இடம் தெரியாமல் போனதே!
தோற்பதற்கும், ஜெயிப்பதற்குமான ஒரு பெரும் திடல் சென்னை. சதா நேரமும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. ஏராளமான மனிதர்கள் மூச்சிறைத்தபடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அருமை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தோற்றுப்போய் நின்றது இங்குதான். ஒரு ஆர்மேனியப் பெட்டியுடன் வந்த இளையராஜாவும், வீட்டை விட்டு ஓடி வந்த ஜெயகாந்தனும் ஜெயித்துக் காட்டியதும் இங்குதான். எங்கள் அப்பா தோற்றுப்போனது இங்குதான். இந்தக் கதைகள் மகாபாரதம் போன்றவை. எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன. விளையாடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவை தெரியாது.
அதோ, போத்திஸ் ஜவுளிக்கடையின் முன்புறம் குளிர்பதனக் காற்றும் வாசமும் வீச, பட்டுப்புடவை உடுத்துக்கொண்டு ஒரு பெண் வருகிறவர்களையெல்லாம் பார்த்து சிரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறாள். அவளும் இந்த மாபெரும் போட்டியில் ஒடிக்கொண்டு இருப்பவள்தான். சென்னையில் இப்போது ஷோ கேஸ் பொம்மைகள் உயிர் பெற்றிருக்கின்றன. அவர்களின் கதையை எந்த எழுத்தாளன் எழுதப்போகிறான்?
*
nice and detailed post.
பதிலளிநீக்குBut i am afraid like kodambakkam tamil cinema directors all bloggers should not write about chennai 370. 1st sandanamullai and ayyanaar started .
சென்னை நகரம் (அ) நரகம்
பதிலளிநீக்குநீளமாக இருந்தாலும் சுண்டி இழுத்து சிந்தனைகுள்ளாக்கும் இடுகை.
பதிலளிநீக்கு//தீவுகளால் ஆன தனித்தனி பிரதேசமாகவும் இருக்கிறது. ஒரே உலகமாகவும் இருக்கிறது. புரசைவாக்கம் வேறு. திருவல்லிக்கேணி வேறு. அம்பத்தூர் வேறு. திருவொற்றியூர் வேறு. அண்ணாநகர் வேறு. குரோம்பேட்டை வேறு. பர்மா பஜாரும், பாண்டி பஜாரும், ரெங்கநாதன் வீதியும், டாஸ்மார்க் கடைகளும், தேவி தியேட்டர்களும் பொதுவானவை. //
உண்மைதான். சென்னை மொத்தமும் பல சமயங்களில் தனித்தீவாக இருந்தாலும் மேலும் பல விடயங்களில் மற்ற மாநகரங்கள் போலவும் இருப்பது போல.
சென்னையைப் பற்றி எவ்வளவு படித்தாலும் ஆர்வம் தணிவதில்லை.
அனுஜன்யா
வணக்கம் மாதவராஜ்
பதிலளிநீக்குமிகவும் அழகாக எழுத வந்திருக்கின்றது சென்னைய பற்றி.
ஒரு தீவிர எழுத்து வாசனை இருக்கின்றது உங்களின் பல இடுகைகளில்.
சென்னை எப்போதும் ஒரு மாயக்கண்ணாடி யாகத்தான் இருக்கின்றது, சென்னைக்கு வெளியில் இருப்பவர்களுக்கு
இராஜராஜன்
excellent sir
பதிலளிநீக்குஎனக்கான மனிதர்கள் யாரும் இல்லையெனத் தோன்றியது. நானும் தோற்றுக்கொண்டு இருந்தேன்
choolaimedu bajanaikkoil st, liberty, ram , innum niraiya nerukkamaaka irunthathu
arumaiya oru siru kathai maari irunthathu
ஆகா...சூப்பரா இருக்கு!
பதிலளிநீக்கு//எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன.//
பதிலளிநீக்குஉண்மைதான்...:-)
கத்திப்பாராவில் இறங்கி திருவல்லிக்கேனிக்கு ஆட்டோ கேட்டபோது 'ட்ரிப்ளிகேனா, ட்ரிப்ளிகேனியா? இங்க ரென்டு இடம் இருக்கு, உனக்கு எங்க போகனும்? என்று ஆட்டோகாரரின் அசத்தலோடு சென்னை அறிமுகம் ஆனது.
பதிலளிநீக்குசென்னை வந்த புதிதில் ஸ்பென்சர் ப்ளாசாவில் ஆர்வத்தோடு நுழைந்த என்னை அங்கிருந்த மனிதர்களின் தோற்றமும்,உடையும்,வாசனையும் நீக்கமற நிறைந்திருந்த ஆங்கிலமும் மொத்தமாய் மிரட்டியது. ஒட்டு மொத்த உலகமும் என்னை விட்டு விட்டு வேகமாய் முன்னே சென்றுவிட்டது போலவும், நான் மட்டும் தனியே வழிதவறிப்போனது போல, தாளமுடியாத தாழ்மையுணர்சி வந்தது. வேடிக்கை பார்க்கும் ஆசை கூட மறைந்து போய் வெளியேற முடிவு செய்து வாசலை கண்டு பிடிக்க முடியாமல் கட்டிடத்தின் பின்பக்கமாய் வெளியேறினேன். பிறகு நண்பர்களோடு போனபோதுதான் நம்மைப் போல வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அங்கு மெஜாரிடி என்பது புரிந்தது.
கொஞ்சம் ஆங்கிலம்,ஒரு பைக், ஐந்து வருட அனுபவம் இருப்பதால் சென்னை இப்போது எளிதாயிருப்பதாய் தோன்றுகிறது.
//எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன.//
பதிலளிநீக்குஎவ்வளவு பெரிய உண்மை இது
எங்கோ இருக்கும் சின்னக்கிராமத்திலிருந்து இந்த நகரத்தில் வாழுமளவுக்காவது ஜெயித்தவர்களில் என் பெற்றோர்களும் என்று நினைக்கவைத்தது இந்தப் பதிவு.
நகரமாயிருந்தது ஒரு காலத்தில் இப்போது நரகமாய் போய்க்கொண்டிருக்கிறது :(
அருமை, உங்களின் இந்த சென்னை குறித்த பதிவு தரும் சித்திரம், மாறும் நகரும் காட்சிகள் எல்லாம் இனிய அனுபவம்.
பதிலளிநீக்குராம்ஜி!
பதிலளிநீக்குநன்றி.
ttpian!
நன்றி.
அனுஜன்யா!
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. உண்மைதான். படிப்பதற்கு மட்டுமல்ல, இன்னும் கூட நிறைய எழுத வேண்டியது இருக்கிறது. வேறொரு மாநிலத்தில், ஒரு மிக முக்கிய இந்திய நகரத்தில் இருக்கும் உங்களுக்கு சென்னை பற்றி சித்திரங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
@ராம்ஜி!
... பயப்படாதீங்க...
வனம்!
பதிலளிநீக்குமிக்க நன்றி. மாயக்கண்ணாடி மட்டுமல்ல, மாயக்கம்பளமும் கூட.
மண்குதிரை!
நன்றி. பஜனைகோவில்தெரு தெரியுமா....!
சந்தனமுல்லை!
பதிலளிநீக்குஆரம்பித்து வைத்த உங்களுக்குத்தான் முதல் நன்றி சொல்லணும்.
பொ.வெண்மணிச்செல்வன்!
சென்னையை மிக எளிதாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்!!!
அமிர்தவர்ஷிணீ அம்மா!
நீங்கள் சொல்வது உண்மைதான். நன்றி.
யாத்ரா!
மிக்க நன்றி.
Excellent. மிகவும் விரிவாகவும், அதே சமயம் ஆழ்ந்த உணர்வுகளுடனும் எழுதி இருக்கிறீர்கள். வியந்து கொண்டே இருக்கிறேன் உங்கள் எழுத்தை.
பதிலளிநீக்கு//.“உனக்கு இந்த ஊர் லாயக்குப்படாது. ஓடிப் போய்விடு” என்று அப்பாவை சென்னை விரட்டி விட்டதை நான்காம் வகுப்பு படித்து முடித்திருந்த நான் புரிந்திருக்கவில்லை. ஊர்தான் என்னையும் என் உலகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியது. “நீ ஜோதியின் மகனா”, “தங்கவேல் தாத்தாவின் பேரனா” என்ற விசாரிப்புகளும், “மாது” என வாஞ்சையோடு தூக்கிவைத்துக் கொண்டவர்களுமாய் நிறைந்திருந்தது. //
கண் கலங்கினேன் இந்த வரிகளில்.
நீளமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறீர்கள் சார்
பதிலளிநீக்குநல்ல அனுபவ பகிர்வுகள்
அழகானதொரு கவிதை படித்த உணர்வு
பதிலளிநீக்கு/
பதிலளிநீக்குசென்னை எல்லாருக்குமான இடமாக இருக்கிறது.
/
well said.
96ல் இருந்து ஐந்து ஆறு வருடங்கள் சென்னைவாசிதான் நான் இப்போ சென்னைல வந்து இருக்கமுடியுமான்னு தெரியலை.
"துருப்பிடித்து நிற்கும் மரங்கள் மனதில் ஒட்டுவதேயில்லை. பறவைகளின் சத்தங்களை விழுங்கிவிட்டு வாகன இரைச்சல்களாய் சதாநேரமும் ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது"
பதிலளிநீக்குஊர்தான் என்னையும் என் உலகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியது. “நீ ஜோதியின் மகனா”, “தங்கவேல் தாத்தாவின் பேரனா” என்ற விசாரிப்புகளும், “மாது” என வாஞ்சையோடு தூக்கிவைத்துக் கொண்டவர்களுமாய் நிறைந்திருந்தது
சென்னையில் காதலர்களுக்கான இடம் ஏராளமாய் இருந்தாலும் காதலுக்கான் இடம் சொற்பமாகவே இருக்கிறது
இரண்டு, இரண்டரை வருடங்களுக்குள் சென்னையால் ஒரு மனிதனுக்குள் ஊடுருவிக்கொள்ள முடிகிறது
தோற்பதற்கும், ஜெயிப்பதற்குமான ஒரு பெரும் திடல் சென்னை. சதா நேரமும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. ஏராளமான மனிதர்கள் மூச்சிறைத்தபடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
its. true. மனதை சுண்டி இழுத்து சிந்தனைகுள்ளாக்கியது.
கண் கலங்கி...
doss.a
tirupur
தீபா!
பதிலளிநீக்குபிரியமுடன் வசந்த்!
மூகமூடி!
மங்களூர் சிவா!
doss.a!
வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
awesome
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகாலமும், விதிகளும் இங்கு வேகமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. ஒருகாலத்தில் பேச்சலர்ஸுக்கு வீடு கிடையாது என்று சொல்லப்பட்ட இடத்தில் இப்போது பேச்சலர்ஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
//
சரியாகச் சொன்னீர்கள், வருடா வருடம் வாடகையை ஏற்ற வேண்டுமா என்று கேட்ட போது, வீட்டு சொந்தக்காரர் சொன்ன பதில் "உங்களுக்கு வேணும்னா இருங்க, இல்லைன்னா கிளம்புங்க, நீங்க கொடுப்பதை விட இரண்டாயிரம் அதிகம் கொடுத்து தங்குவதற்கு நிறைய பேச்சலர் இருக்காங்க"
அனானி!
பதிலளிநீக்குநன்றி.
ஜோ!
நன்றி.
''காலமும், விதிகளும் இங்கு வேகமாக மாறிக்கொண்டு இருக்கின்றன.''
பதிலளிநீக்குதோற்பதற்கும், ஜெயிப்பதற்குமான ஒரு பெரும் திடல் சென்னை. சதா நேரமும் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. ஏராளமான மனிதர்கள் மூச்சிறைத்தபடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அருமை எழுத்தாளர் புதுமைப்பித்தன் தோற்றுப்போய் நின்றது இங்குதான். ஒரு ஆர்மேனியப் பெட்டியுடன் வந்த இளையராஜாவும், வீட்டை விட்டு ஓடி வந்த ஜெயகாந்தனும் ஜெயித்துக் காட்டியதும் இங்குதான். எங்கள் அப்பா தோற்றுப்போனது இங்குதான். இந்தக் கதைகள் மகாபாரதம் போன்றவை. எங்கோ இருக்கும் தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமத்திலும், ஒரு குடிசையிலும் கூட சென்னை பற்றிய எதாவது குறிப்புகள் இருக்கின்றன. விளையாடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அவை தெரியாது.
அருமையான வார்த்தை பிரயோகங்கள்... அற்புதமான வர்ணனைகள்...
அன்புடன்
சிம்மபாரதி, துபாயிலிருந்து
நல்ல கட்டுரை, நானும் படித்து முடிந்தவுடன் சென்னை போய், அன்னா நகர் ஷாந்தி நகரில் வீடா போய் அனுவப்பட்டு இருக்கன், வன்னாரப்பேட்டை எனக்கு நிரைய அனுவங்களை கொடுத்தது, ட்ரிப்பிலிகன் மான்ஷன் உன்மையில் வழ்க்கையில் மறக்க முடியாது. இப்ப சிங்கை என் வாழ்வில் வசந்தம் வீசுகின்றது.
பதிலளிநீக்குசிம்ம பாரதி!
பதிலளிநீக்குபித்தன்!
வருகைக்கும், பகிர்வுக்கும், நன்றி.
சென்னை ஒரு கன்னி தீவு. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். சென்னையைப் பற்றி எவ்வளவு படித்தாலும் ஆர்வம் தணிவதில்லை.
பதிலளிநீக்கு//சென்னையைப் பற்றிய சித்திரம் அவரவர் அனுபவங்களிலிருந்தே தீட்டப்படுகிறது//
முற்றிலும் உண்மை
நாஞ்சில்நாதம்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.