எழுத அவரிடம் நிறைய இருந்தன…

 

சென்ற ஞாயிற்றுக்கிழமை சாத்தூரில் டாக்டர் அறம் புதிதாக கட்டியிருந்த  ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது. முகப்பில் வைக்கப்பட்டு இருந்த அந்த படத்தை பார்த்ததும் கண்கள் கலங்கின. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அதே சிரிப்புடன் இருந்தார். தமிழ் இலக்கிய உலகம் அறிந்து வைத்திருக்கிற முக்கியமான கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஆனந்த விகடனில் வெளிவந்திருந்த அவரது முதல் சிறுகதை ’நாரணம்மா’ மருத்துவமனையின் கொடுமைகளால் அவதியுற்ற ஒரு கிராமத்து ஏழைத்தாயின் கதறலாய் வெளிப்பட்டு இருந்தது. இதோ இன்றைக்கு அவரது பெயரிலே ஆஸ்பத்திரி திறக்கப்பட்டு இருக்கிறது.  

பதிவுலகம் வந்த புதிதில் நான் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி குறித்து எழுதியதை இங்கு மீள்பதிவாய் தந்திருக்கிறேன்.  

 

பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திற்கு வெளி பூராவும் ஈசல்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்து பறந்து கிடந்த 2005 டிசம்பர் மாதத்தின் ஒரு அந்தி நேரம். மௌனமாக சாத்தூர் வீதியில் வந்து தெருக்களில் நுழைந்து ஆற்றங்கரையோரமாய் நடந்து மயானக்கரையில் திரளாய் நின்றிருந்த மக்கள் தங்கள் மீது மோதி விழுந்து கொண்டிருந்த அந்த பூச்சிகளை பொருட்படுத்தாமல் கடந்தகால நினைவுப்பரப்பிற்குள் உறைந்தும், உருகியும் போயிருந்தார்கள். எழுத்தாளர்கள் பொன்னீலன், தமிழ்ச்செல்வன், சிவசுப்பிரமணியன், கோணங்கி, சோ.தருமன், ஷாஜஹான், லட்சுமணப்பெருமாள், உதயசங்கர், காமராஜ் ஆகியோர், கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த தோழர்கள், பழகிய ஆசிரியர்கள், அவரிடம் படித்த மாணவர்கள், மருத்துவர்கள் என பலரும் நிறைந்திருந்தனர். கசிந்து கொண்டிருந்த மெல்லிய முணுமுணுப்புகளில் உச்சரிக்கப்பட்ட தனுஷ்கோடி ராமசாமி என்னும் மனிதர் அங்கே சிதையில் இருந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்து, டாக்டர் அறம் தனது அருமைத் தந்தைக்கு கொள்ளி வைக்க, தீப்பற்றிய கணத்தில் கண்கள் கலங்கின. 'வாருங்கள், வாருங்கள் எங்கள் இளைஞரே' வரவேற்கும் தனுஷ்கோடி ராமசாமியின் பெருங்குரல் கேட்கிறது. தோற்றத்துக்கு சம்பந்தமில்லாமல் அவரின் கைவிரல்கள் சின்னச்சின்னதாகவும், மென்மையாகவும் இருக்கும். கண்களை அகல விரித்து பாவனையோடு பார்க்கின்ற, "ஏ..மனுஷா.." என்று நகைச்சுவைக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிற அந்த முகம் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது.  

ஒரு ஓரமாய் நின்று கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் பொன்னீலன் இரங்கல் கூட்டத்தில் தழுதழுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும் போதும் வார்த்தைகள் உடைந்து உடைந்து வந்தன. தோழர் நாவலில் இறுதியில் விடைபெறும்போது 'காம்ரேட்" என்று துடித்துக்கூவிய ஷபின்னாவின் குரலே எல்லோருக்குள்ளும் படிந்து விட்டிருந்தது. "மாதவராஜ்...பேச வாங்க" யாரோ அழைத்தார்கள். போகவில்லை. கதறி அழுவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. அப்படி ஒரு உணர்வு பூர்வமான உறவோடு கைகளை அகல விரித்து எல்லோரையும் வாசலில் நின்று அழைத்த மனிதராயிருந்தார் தனுஷ்கோடி ராமசாமி. இருபது வருடங்களாக மிக நெருக்கமாக பழகிக் கலந்த சொந்தம் ஒன்று, புகைந்த நெருப்பில் கரைந்து கொண்டிருந்தது.  

அந்த நாள் இன்னும் கலையாமல் இருக்கிறது. 1985ம் ஆண்டில் ஒரு மத்தியான வெயில் நேரம். பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து சங்கம் தர்ணா நடத்திக்கொண்டிருந்தது. அமர்ந்திருந்த வங்கித்தோழர் ஒருவர் கையில் சிறுகதைப் புத்தகம் இருந்தது. வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியக் கிராமங்களில் சோகத்தை உரக்கச் சொல்லிய தொகுப்பின் முதல் கதை 'நாரணம்மா'வின் அலறல் உலுக்கியது. கதை எழுதியவரின் இதயம் எழுத்துக்களில் துடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் "நாரணம்மா கதை எழுதியவரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான தோழர்.தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நம்மிடையே இப்போது பேசுவார்கள் என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவித்த போது பிரமிப்பாய் இருந்தது. புத்தகங்களிலிருக்கும் வாசனை போல எழுத்தாளர்களிடம் ஒரு வசீகரம் இருப்பதாகவே எப்போதும் படுகிறது. கம்பீரமான பார்வையும், கிருதாவும், மீசையுமாக, பேண்ட் சட்டை போட்ட கிராமத்து மனிதராய் அவர் இருந்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாரணம்மாவின் அழுகையை பத்திரமாக வைத்திருக்கும் அந்த மனிதர் மீது அன்பு பெருகியபடி இருந்தது. கிருஷ்ணகுமாரிடம் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டுச் சென்றார்  

இன்னொருமுறை அதேபோல் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம். சங்கத்தின் முடிவின்படி நானும் இன்னும் நான்கு தோழர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம். இரண்டாம் நாள் சாயங்காலம். தனுஷ்கோடி ராமசாமி வாழ்த்திப் பேசினார். சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து "நீங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளை காதலிக்கிறீர்களாமே?" என்று வியப்போடு கேட்டார். கிருஷ்ணகுமார் சொல்லியிருக்க வேண்டும். சங்கடத்தில் நெளிந்தபடி புன்னகைத்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தார்.  

ஒருநாள் வக்கீல் மாரிமுத்து என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். ஆற்றங்கரையொட்டிச் செல்லும் கிணற்றுக்கடவுத் தெருவில் ஒரு காம்பவுண்டு வீடு. வக்கீல் மாரிமுத்துவை உரக்க வரவேற்றவர் கூடவே என்னைப் பார்த்து அடையாளம் கண்டு, "வரணும்..வரணும்" என்று நாற்காலியை காட்டி அமரச் செய்தார். உள்பக்கம் தலை திருப்பி "சரஸ்வதி...! டீ கிடைக்குமா.." என்று கேட்டுக் கொண்டார். ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போதான் அவரது மகன் அறம் படித்துக் கொண்டிருந்தான். 'தோழர்' நாவலை எழுதிக் கொண்டிருந்த நேரம். பேச்சு அதிலிருந்து ஆரம்பித்து, கிறிஸ்டியன் மிஷனரிகளை மையமிட்டு, அப்படியே ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆரையெல்லாம் சுற்றி வந்து, பாரதியைத் தாண்டி, டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பில் லயித்து, சிங்கிஸ் ஐத்மாத்தாவோடு உலவியபடி இரண்டு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்டது. அப்போதுதான் சோவியத் இலக்கியங்களை படிக்க ஆரம்பித்திருந்ததால் அந்த உரையாடல்கள் பெரும் சுவராஸ்யத்தோடு இருந்தன. 'தீபம்', 'கணையாழி' பத்திரிக்கைகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியிருந்த எனக்கு இலக்கியத்தின் மீது மேலும் பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்தது.  

அதுதான் விடாமல் அவரைத் தேடிச் செல்ல வைத்திருக்க வேண்டும். அப்போது கிணற்றுக்கடவுத் தெருவில் இருந்த அந்த காம்பவுண்டு வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் நானும் காமராஜும் அடிக்கடி செல்ல ஆரம்பித்தோம். சேவு, பொரிகடலை, சிகரெட்டுகள் வாங்கிக்கொண்டு பைபாஸ் கடந்து வைப்பாற்றுக்குள் இறங்கி எதாவது ஒரு மணல் திட்டில் உட்கார்ந்து அவரோடு பேசிய நாட்கள் வாழ்வின் இனிமையான தருணங்களாக இப்போதும் வற்றாமல் இருக்கின்றன. மணலை நோக்கமற்றுக் கீறியபடி எத்தனை எத்தனையோ கணங்கள் அவரை உள்வாங்கியிருக்கிறேன். பேச்சின் நடுவே குறுக்கிட மாட்டார். முழுவதுமாய் கவனித்த பிறகு பொறுப்போடும், ஆழத்தோடும் பேச ஆரம்பிப்பார். எல்லாம் தனக்குத் தெரிந்ததாய் ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. எல்லோரிடமும் தெரிந்து கொள்வதற்கு விஷயங்கள் இருக்கிறது என்பதே அவரது மனநிலையாக இருந்தது. சிறுபிள்ளைத்தனமாகப் பேசினால்கூட புறக்கணிக்காமல் நோகாத விமர்சனத்தோடு அதை புரிய வைப்பார். நகைச்சுவையை அவர் ரசிப்பதே அழகாகவும் உயிர்ப்போடும் இருக்கும். பேச்சின் இடையிடையே சிலசமயங்கள் தூரத்துப் பாலத்தின் மீது எதிரும் புதிருமாய் வெளிச்சத்தை இறைத்தபடி ஒடிக்கொண்டிருக்கும் வாகனங்களை பார்த்தபடி மெனங்களாய்க் கழியும். அசைபோட்டுக்கொண்டும், சிந்தனை வயப்பட்டும் இருந்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பிப்போம். குரல்களே உடலாகவும், உள்ளமாகவும் வெளிப்படுகிற இருள் சூழ்ந்து பத்துப் பதினோரு மணியைத் தாண்டிவிடும். ஒவ்வொரு முறையும் இன்னும் நிறைய பேச வேண்டியிருப்பதாகவே பிரிய நேரிடும்.  

ஆனந்த விகடனில் "அன்புள்ள.." சிறுகதையப் படித்தபோது மிக முக்கியமான விஷயம் ஒன்றை அவரது எழுத்து தொட்டுவிட்டதாய் பட்டது. கிராமத்தின் எளிய பெண் ஒருத்தி தனது மனதுக்குப் பிடித்தவனுக்கு கடிதம் எழுத ஆரம்பித்து கடைசி வரை வெளிப்படுத்த முடியாமல் போவதாய் அந்தக்கதை முடியும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டாளுக்கு 'திருப்பாவையாக' வந்திருந்த தைரியம் இன்னமும் நமது பெண்களுக்கு இல்லையே என்றும், ஒரு பெண் தன்னை முதலில் வெளிப்படுத்துவதை அருவருப்பாகவும், நாகரீகமற்றும் இந்தச் சமூகம் கருதுகிறது என்றும் தெரிவித்தேன். தான் எழுதிய கதையைக் காட்டிலும் இந்த விமர்சனம் அடர்த்தியாக இருப்பதாக என்னை உற்றுப் பார்த்துக்கொண்டு சொன்னார். பாராட்டுவதில் தயக்கம் கொஞ்சமும் இருக்காது. இதைச் சொல்லி அவரை விமர்சிப்பவர்களை நிறைய பார்த்திருக்கிறேன். எதையும் அதீதமாய் பண்ணுகிறார் என்று சிரிக்கும் கேலிப்பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ அது ஒரு அபூர்வ குணமாகவே தோன்றுகிறது. எது குறித்தும் ஆச்சரியப்படாத, உற்சாகமடையாத, சக மனிதனிடம் இருக்கும் திறமைகளை பாராட்டத் தெரியாத மொண்ணையாகப் போன சமூகத்தில் தனுஷ்கோடி ராமசாமி வித்தியாசமான மனிதர்தான். தோழர் நாவல் படித்துவிட்டு காமராஜ் அவருக்கு எழுதிய போது "ஏ...நம்ம காமராஜ்தானா! கடிதமே இவ்வளவு இலக்கிய நயத்தோடு இருக்கிறதே...நீ கதை எழுதலாமே மனுஷா.." என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். காமராஜ் அவரிடம் ஆரிய வைசியப் பள்ளியில் தமிழ் படித்தவன். எனது 'மண்குடம்' கதையையும், ஷாஜஹானின் 'ஈன்ற பொழுது.." கதையையும் படித்துவிட்டு பல நாட்கள் ஒயாமல் பேசியிருக்கிறார். அவரது பல நண்பர்களிடம் சிலாகித்திருக்கிறார். இளைஞர்களிடம் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே இளமையாக இருந்தார்.  

தனக்கு முந்தையவர்கள் மீதும் அளப்பரிய மரியாதையும், விமர்சனம் தாண்டிய அன்பும் கொண்டிருந்தார். மகாத்மா காந்தியை, மகாகவி பாரதியை, எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதற்கு அவரிடம் நிறைய இருந்தன. சமூகத்தின் மீதிருக்கும் அக்கறையே, அதற்கு எதாவது ஒரு வகையில் பங்களிப்புச் செய்தவர்களையும் நினைவுகூறச் செய்கிறது. மாறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதைவிட இணக்கமான விஷயங்களோடு மனிதர்களை அடையாளம் காண்பது அவரது தன்மையாகவே இருந்தது. அது பலவீனமா, பலமா என்ற ஆராய்ச்சியை மற்றவர்களே செய்து கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனைப்போலவே தன்னை ஆக்கிக் கொள்கிறார் என்றும் கூட பேசியிருக்கிறார்கள். அவரே அதைச்சொல்லிவிட்டு, சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும் என்பது போல அமைதி காப்பார். புதுமைப்பித்தன், ஜீவா, தொ.மு.சி, கு.அழகிரிசாமி, கி.ரா, கு.ப.ரா, சுந்தரராமசாமி, பொன்னீலன், கந்தர்வன் எழுத்துக்களைப் பற்றி அடிக்கடி பேசுவார். 'ஜே.ஜே சில குறிப்புகள்' மீது அவருக்கு லயிப்பும் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. வண்ணதாசனின் கதை சொல்லும் அழகில் தன்னை பறிகொடுப்பார். ஆரம்ப காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஈடுபாடு கொண்டு, அவரோடு தர்க்கங்கள் செய்து பின்னாளில் மார்க்சீயத்தின் பால் ஈர்க்கப்பட்டு 'அசோகவனம்' கதையோடு தமிழ்ச்செல்வன் அவரது வீட்டுக் கதவைத் தட்டிய இரவை எத்தனையோ தடவைச் சொல்லியிருக்கிறார். வேதனையோடு பகிர்ந்து கொண்டது என்றால் ஜி.நாகராஜனோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான். மதுரை வீதிகளில் தாடியோடும், கந்தல் உடையோடும், மிகுந்த உரிமையோடும் வழிமறித்து பணம் கேட்ட நாட்களை நினைவு கூர்ந்து "எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்' என்று அதற்கு மேல் பேச முடியாமல் கொஞ்ச நேரம் மெனமாயிருப்பார். எல்லோரையும் நேசிக்கிற ஒரு பரந்த தளத்தில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.  

தான் நம்பிக்கை வைத்திருந்த எழுத்தாளர்கள் பலர் எழுதாமல் நிறுத்திக் கொண்டதை பெருங்குறையாக கருதினார். "சங்க வேலைகளை குறைத்துக் கொண்டு நீங்கள் நிறைய எழுதலாம்" என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார். தமிழ்ச்செல்வனிடமும் இதேபோல் சொல்லியிருக்கிறார். இலக்கியத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையே "தொழிற்சங்க வேலைகள் பார்ப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவையில்லை" என்று சொல்ல வைத்தது. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் இருந்து செயல்படுவதைத் தாண்டி பரந்த மக்களிடம் செல்ல வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் என உறுதியாக நம்பினார். வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்த போதும், சாத்தூரில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் பலர் எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தோம். அதில் பலர் அவரது மாணவர்களாக இருந்தனர். இன்று எங்கெங்கோ இருக்கும் சாத்தூரின் இளைஞர்கள் பலரிடம் ஒரு இடதுசாரி சிந்தனையும், தொடர்பும் இருப்பதை கவனித்திருக்கிறேன். விசாரித்துப் பார்த்தால் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமியிடம் படித்தவர்களாக இருப்பார்கள். ஆசிரியரைப் பிடிக்காமல், அவரிடம் ஈர்ப்பு இல்லாமல், அவரது தன்மைகள் மாணவனிடம் படிந்து விடாது. அவரது மாணவர்கள் எல்லோரும் 'அண்ணா' என்றுதான் அவரை அழைத்தார்கள். ஆசிரியப் பணியில் அவ்வப்போது ஏற்படும் சோர்வுகளையெல்லாம் இந்த உறவுகளால்தான் அவர் துடைத்தெறிந்திருக்க வேண்டும்.  

பாவமாய் இருக்கும். பரீட்சை முடிந்து லீவில்தான் இருப்பார் என்று பார்க்கச் சென்றால் கட்டுக் கட்டாய் விடைத்தாள்கள் மேஜையில் அடுக்கி வைத்து திருத்திக் கொண்டு இருப்பார். 'தொடர்ந்து ஒரே வேலையைச் செய்கிறீர்களே....போரடிக்காதா?' என்றால் சிரிப்பார். "ஒரே கேள்விதான். பதில் விதவிதமாய் இருக்கும்" என்று மாணவர்கள் படிக்கிற அழகைக் காட்டுவார். "ஒரே பாடம்தான் தொடர்ந்து எடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு வருடமும் வேறு வேறு மாணவர்கள்" என்று தத்துவம் போலச் சொல்வார். கல்வியமைப்பின் மீதும், ஆசிரியர்கள் மீது கடுமையான விமர்சனம் அவருக்கு இருந்தது. 'தொழில்தர்மத்தைச் சொல்லிக் கொடுக்காமல் உரிமைகளை மட்டும் சங்கங்கள் சொல்லிக் கொடுக்கின்றன" என்று வருத்தப்படுவார். பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஒரு கனவுகொண்டிருந்தார். அதனால் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்று கொஞ்சகாலம் செயல்பட்டும் பார்த்தார். கனவுக்கும் யதார்த்தங்களுக்குமான இடைவெளியில் முட்டிப் பார்த்து, முடியாமல் ஒருநாள் திடுமென தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து மீண்டும் தமிழாசிரியராக நிம்மதியடைந்தார். அந்தக் காலக் கட்டங்களில் குழப்பங்களோடும் வேதனையோடும் சங்கடப்பட்டார்.  

சோவியத் நொறுங்கிய போது மிகவும் கலங்கிப் போனார். ஆயுத ஒழிப்பு குறித்து ரீகனுக்கும், கோர்பச்சேவுக்கும் நடந்த உரையாடலை மிகுந்த ஆரவாரத்தோடு ஒரு காலத்தில் வாசித்துக் காட்டி, கோர்பச்சேவின் வார்த்தைகளை பெருமிதத்தோடு கூட்டங்களில் முழங்கவும் செய்தார். பெரிஸ்த்ரோய்கா, கிளாஸ்நாத்தையெல்லாம் உயர்த்திப் பிடித்து "யாருக்கு இந்த தைரியம் வரும். யார் தனது பலவீனங்களை இப்படி போட்டு உலகத்தின் முன் உடைப்பார்கள். யாரால் இந்தப் புதுமைகளை சிந்திக்க முடியும்" என வேகமாகப் பேசியிருந்தார். சட்டென எல்லாம் கலைந்து போன போது தடுமாறி நின்றார். பெருமூச்சோடு மௌனங்கள் சூழ்ந்த அந்த நாட்களில் அடிக்கடி அவரைப் போய் பார்ப்பேன். மீள்வதற்குச் சிரமப்பட்டார். அதுபோல ஜோதிபாசு பிரதமர் பதவிக்கு வாய்ப்பு வந்து, சி.பி.எம் அதை மறுத்தபோதும் ரொம்ப வருத்தப்பட்டார். 'நம்மீது இருக்கும் நம்பிக்கைகளை நாமே தகர்த்து விடுகிறோம்" என்று அடிக்கடிச் சொல்வார். தான் நம்புவதையும் உணர்வதையும் வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இருக்காது. தென்தமிழ் மாவட்டங்களில் ஜாதிக்கலவரங்கள் பற்றி, சாத்தூரிலும் பரவியபோது ஒருநாள் "இந்தக் கலவரமெல்லாம் தேவைதான்" என்று அவர் சொல்லியபோது ஆச்சரியமாக இருந்தது. "திருப்பி அடிக்க மாட்டான் என்று தானே இவ்வளவு காலமா நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ பதிலுக்கு பதில்னு ஆனதால கொஞ்சம் யோசிப்பாங்க." என்றார். எப்போதும் தலித் மாணவர்களையே தனது வகுப்பில் லீடர்களாக முன்னிறுத்துவாராம்.  

இசங்கள் குறித்தெல்லாம் அவர் அலட்டிக்கொண்டதேயில்லை. அதற்குள் உட்கார்ந்து விவாதம் செய்ய ஆர்வமும் பெரிதாக இருந்ததில்லை. மேஜிக்கல் ரியலிசம் குறித்து சுற்றிலும் பேசப்பட்டபோது அவர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் 'அன்னை வயல்' பித்தனாக மாறிப் போயிருந்தார். இராணுவம் செல்லும் புகை வண்டியில் பெற்ற மகனைக் காண மணிக்கணக்காக காத்திருந்தும் கடைசியில் நிற்காமல் செல்லும் வண்டியிலிருந்து வீசியெறியப்பட்ட தன் மகனின் தொப்பியை மார்பில் பொத்தி அந்த அன்னை அழும்போது புத்தகத்தை அதற்குமேல் படிக்க முடியாமல் தரையில் புரண்டு புரண்டு அழுததைச் சொல்லியிருக்கிறார். பல கூட்டங்களில் அந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக பேசியுமிருக்கிறார். 'எழுத்து என்பது மிக எளிமையாக, இயல்பாக, உண்மையாக இருக்க வேண்டும்' என்பதுதான் அவர் அறிந்து கொண்ட இலக்கணம். 'மதினிமார்களின் கதை', 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' தவிர கோணங்கியின் எழுத்துக்களின் மீது பிரமிப்பு அவருக்கு இருந்ததில்லை. "யப்பா...ஒங்கதை ஒண்ணும் எனக்குப் புரியல. அதுக்கு நா வெக்கப்பட வேண்டியதுமில்ல" என்று கோணங்கியிடம் சொல்லவும் செய்வார். வாக்குவாதம் நடக்கும். "நீங்க எழுதுறதெல்லாம் எழுத்தா" என்றெல்லாம் கோணங்கி கோபப்படுவார். தனுஷ்கோடி ராமசாமியின் துணைவியார் சரஸ்வதி, இதெல்லாம் சகஜம் என்பது போல அமைதியாக எல்லோருக்கும் டீ பரிமாறிக்கொண்டு இருப்பார்கள். ஒருதடவை கோணங்கி எழுதிய கடிதமொன்றை சிரித்துக்கொண்டே காண்பித்தார். அதில் "எல்லோரும் மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் காலரியைச் சுற்றி ஓடி கோல், கோல் என கத்திக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றிருந்தது. பிறகு ஒரு வாரத்துக்குள் கோணங்கி அவர் வீட்டுக்கு வந்து உணவருந்தி, விடிய விடிய பேசிச் சென்றதையும் சிரித்துக்கொண்டே சொன்னார். பிடிபடாத அன்பின் விளையாட்டாய் காட்சியளித்தாலும், கதை எழுதுகிறவர் என்று ஒருவர் பற்றி ஒருவர் வைத்திருந்த பரஸ்பர புரிதலே இத்தனைக்கும் அடியில் நீரோட்டமாய் இருந்திருக்க வேண்டும். முகமெல்லாம் கனத்து, தொண்டை அடைக்க ஒரு மாலையைத் தூக்கிக் கொண்டு வந்து தனுஷ்கோடி ராமசாமியின் உடல் மீது வைத்து, கண்கள் பொங்க நின்ற கோணங்கியை பார்த்தபோது, திரும்பப்பெற முடியாத ஒன்றை இழந்த சோகம் தெரிந்தது.  

சங்க இலக்கியங்களை வெறும் பாடமாக பார்க்காமல், வாழ்க்கையாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்திருந்தது அவரால். மார்கஸ், லெனின் எழுதிய கட்டுரைத் தொகுதிகளோடு பெரிது பெரிதாக கம்பராமாயணத் தொகுதிகளையும் வரிசையாக அவரது அலமாரிகளில் பார்க்கலாம். கம்பனின் வரிகளை ஒரு சுதியோடு சொல்லி, விளக்கமளிக்கும் போது கேட்பதற்கு ஆசை ஆசையாய் இருக்கும். அப்படியொரு செறிவுமிக்க இலக்கியப் பார்வையும், ரசனையும் இருந்தது. அகத்திணையில் வீசிக்கொண்டிருக்கும் தமிழரின் காதல் வேட்கையை அவரிடம்தான் சுவாசித்தேன். புறங்காலால் அடித்து கடலையே வற்றச் செய்து விடுவேன் என்று தன் பிரிவுத் துயரை சித்தரிக்கும் தொன்மை காலத்துப் பெண்ணை பார்த்தேன். அழகுத் தமிழின் அற்புதங்களையெல்லாம் தனக்குள் சுமந்து கொண்டிருந்த மனிதர் அவர். "இதையெல்லாம் நீங்கள் பேசுகிற மாதிரியே எழுதினால் போதும். இந்தத் தலைமுறைக்கு நமது பாரம்பரியம் மிக்க இலக்கியத்தை அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும், தமிழை அவர்களுக்கு நெருக்கமானதாக உணர வைக்கவும் முடியும்" என்றேன். "அப்படியா..." என்று ஆச்சரியத்தோடு, தீவீரமாகவே யோசித்தார். இலக்கியத்தின் நயங்களோடு ஒரு சிறுகதை மட்டும் எழுதினார். வேறு என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தாரோ. வெந்தணலில் தமிழ் வெந்து கொண்டிருந்தது.  

தேடிப் போகிற சில சமயங்களில் வீட்டில் இருக்க மாட்டார். அவரது துணைவியார் "மானாமதுரை போயிருக்காங்க" என்பார்கள். "திருவண்ணாமலை போயிருக்காங்க" என்பார்கள். வெளியூர் சென்று வந்த பிறகு, தான் சந்தித்த இளைஞர்களை, புதிய இலக்கியவாதிகளைப் பற்றி விடாமல் பேசுவார். அவர் யார், பெயர் என்ன என்பது கூட என் நினைவில் இருந்ததில்லை. சுவராஸ்யமற்றும் இருக்கும். மனிதர்கள் மீது எப்போதும் ஈர்ப்பு இருந்தது. புதுமைகளை ஆராதிக்கிற அபூர்வ குணத்தின் வெளிப்பாடு என எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் "நேற்று ஜே.கேவைப் பார்த்தேன்" என்று சொல்லி பொருள் நிறைந்த பார்வையோடு நிறுத்துவார். புன்னனகையோடு காத்திருப்பேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அப்படியொரு காதல் இருந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் எப்படியும் எதாவது ஒரு விஷயம் ஜே.கேவைச் சுற்றி வந்துவிடும். அவர் எழுதியது, பேசியது, அவரைப் பற்றி தெரிந்து கொண்டது, அவரைச் சந்தித்தது என ஏராளமான சம்பவங்களை வைத்திருந்தார். 'ஜே.கே வாழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்' என்பதை பெருமை பொங்கச் சொல்வார். மெல்ல "மெட்ராஸுக்குப் போயிருந்தீங்களா...அம்முவை பார்த்தீங்களா" என்று கேட்டுக் கொள்வார். பின்னாளில் எங்கள் திருமணம் குறித்து சென்னை சென்று ஜே.கேவிடம் அவர்தான் முதலில் பேசினார். எங்கள் வாழ்வெல்லாம் வந்துகொண்டிருக்கும் மிக முக்கிய மனிதர்.  

பொங்கி வந்த அழுகையோடுதான் அம்மு அன்று இருந்தாள். சென்னையிலிருந்து அவரது உடல் கொண்டு வரப்பட்டு தென்வடல் புதுத்தெருவில் அவரது வீட்டின் முன்பு வைக்கப்பட்ட போது, "ஏ...அம்மு! உன் அங்க்கிளப் பாத்தியா" என்று சரஸ்வதி அம்மாள் கதறியபோது அம்மு வெடித்து அழுதாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தொண்டை அடைத்தது. தொழிற்சங்க வேலைகள் காரணமாக வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்த 1990களில் நான் அவரைப் பார்க்கச் செல்வது ரொம்ப குறைந்து போனது. அவர் எங்கள் வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் வருவார். பெரும்பாலும் நான் இருக்க மாட்டேன். அம்முவோடு பேசியிருந்து செல்வார். அவள் முதல் குழந்தை உண்டாகியிருந்த சமயத்தில் கல்கத்தா, டெல்லி, கைதராபாத், சென்னை என ஒடிக்கொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் தனுஷ்கோடி ராமசாமியும், அவரது துணைவியாரும் வந்து அம்முவைப் பார்த்துக்கொள்ளவும், அவளுக்குப் பிடித்தமானதை செய்து கொண்டு வரவும் செய்தார்கள். "சங்க வேலைகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே.." என லேசாய் கடிந்து கொள்ளவும் செய்தார். "எங்க அப்பாவப் பாக்குறதப் போல இருக்கு" என அம்மு அடிக்கடிச் சொல்வாள். ஆச்சரியமாக இருக்கும். எங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்களைக் கூட கவனமாக ஞாபகம் வைத்து, அவரும் அவர் துணைவியாரும் வீட்டுக்கு வந்து வாழ்த்துச் சொல்வார்கள். அன்பைத் தவிர அந்தக் குடும்பத்திற்கு வேறு எதுவும் தெரியாதோ என்றுதான் தோன்றும்.  

யோசிப்பதற்கும், சொல்வதற்கும் எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கின்றன. பழகிப் பேசிய காலங்கள் அடுக்கப்படாத காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கம்மங்கூழும், கேப்பைக்களியும் கிடைத்த சிறுபிராயத்தில் அரிசிச் சோற்றுக்கு ஆசைப்பட்ட காலத்திலிருந்து, தன் மகனை டாக்டராகப் பார்த்து பூரித்த காலம் வரை எவ்வளவோ எவ்வளவோ சொல்லியிருக்கிறார். எதையும் யாரிடமும் எதிர்பார்க்காத மனிதராகவே கடைசிவரை மிடுக்காக வாழ்ந்திருக்கிறார். சாத்தூர் வீதிகளில் கம்பீரமாக நடந்து திரிந்த அந்த மனிதர் தனது கடைசி நாட்களில் புற்றுநோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே அடைந்து போனது மிகப்பெரிய சோகம். கொடுக்கப்பட்ட வைத்தியம் முழுவதுமாய் எதிர்ப்பு சக்தியை உறிஞ்சிவிட, யாரும் போய்ப் பார்ப்பதே அவருக்கு ஆபத்தானதாய் மாறிவிடும் என்றாகிப் போனச் சூழலில், இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே போய்ப் பார்க்க முடிந்தது. கடைசியாய் தமிழ்ச்செல்வன், லஷ்மிகாந்தன், காமராஜ் ஆகிய தோழர்களோடு சென்றிருந்தபோது மெலிந்த தேகத்தோடு இருந்தவரிடம் நம்பிக்கை பூத்துக் குலுங்கியதை தரிசிக்க முடிந்தது. அந்த நேரத்திலும் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாளின் கதையைப் படித்து ரசித்ததைச் சொன்னார். எல்லோரும் மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு சந்தோஷமடைந்தார். ஜீவாவின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டார். அடுத்த சில நாட்களில் எல்லாம் இரக்கமற்று வெறுமையில் புதைந்து போனது.  

ஆசிரியர் பணி, அதில் ஓய்வு பெற்ற பிறகு அருமை மகன் திருமணம் முடிந்து முழுமையாக எழுதுவதற்கு உட்கார்ந்த நேரம் தனுஷ்கோடி ராமசாமி என்னும் எழுத்தாளர் மறைந்து விட்டார். எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன. வாழ்க்கையே ஒரு புதையலாக அவரிடம் இருந்தது. எல்லாம் சட்டென தொலைந்து போனது போல சோகம் அழுத்துகிறது. உண்மையை நம்ப மறுத்து, திடுமென 'என்ன மனுஷா..." என்று குரல் எழுப்பியவாறு வீட்டின் முன் வந்து நிற்க மாட்டாரா எனத் தோன்றுகிறது. சந்தோஷப்படும்படி எதாவது நடந்தால், 'இதப் பார்ப்பதற்கு அவர் இல்லையே' என்று ஏங்க வைக்கிறது. அழுத்தமாக பற்றும் முடிகள் அடர்ந்த தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் கைகளின் ஸ்பரிசத்தை சொரசொரப்பாய் உணர முடிகிறது. அவர் எழுதாத கதைகள் குறித்து சிந்திக்க வைக்கிறது.

 

*

கருத்துகள்

17 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான தமிழ் ஆசிரியர்.எங்கள் அண்ணாவை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி
  உங்கள் மறுபதிப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஈரமான இந்த மீள்பதிவு கண்களையும் ஈரமாக்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு. மூத்த எழுத்தாளர்களை பற்றியும், அவர்களுக்கு வருங்கால சமுதாயத்தின் மீதிருந்த அக்கரையும், ஆளுமையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. அறம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கு நல்வாழ்த்துக்கள். அவரது அப்பா ரொம்பவும் பூரித்திருப்பார்.

  மிக அன்பான அங்கிள். அவரைப் பற்றி அறியாத பல அற்புதமான விஷயங்களைக் கூறி இருக்கிறீர்கள். நன்றி.

  இப்பதிவைப் படிக்கும் போது அவரை நானும் அறிந்து அவர் அன்பில் நனைந்திருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமையும் ஆறுதலும் கொள்கிறேன். அவரது இழப்பையும் ஆழமாக உணர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அற்புதமான பதிவு.

  கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது.

  நன்றிகளுடன்

  பதிலளிநீக்கு
 6. இனிமையான நினைவுகளை கொணர்ந்து நெகிழ வைத்து விட்டீர்கள்.
  மறுபதிப்புக்கும் நன்றி !!!

  என்னுடைய வலைதளம் உங்கள் முதல் வருகையால் பெருமையடைகிறது.அந்த சிறுகதையின் மீதிப்பாகத்தையும் எழுதி விட்டேன்.

  மீண்டும் நன்றிகள் !!!

  பதிலளிநீக்கு
 7. படித்து முடித்தவுடன் அவரை பார்க்க வேண்டும் போல உள்ளது . புகைப்படம்
  இருந்தால் , வெளி இடவும் .

  பதிலளிநீக்கு
 8. நன்றி மாதவராஜ்.

  அவரைப்பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும். கண்களின் ஈரம் மேலும் வாசிக்க விடவில்லை.

  பதிலளிநீக்கு
 9. மனம் கணக்கிறது மாதவ்.

  ஏதோ ஒரு காலகட்டத்தில் ”உங்களை புகழ்ந்து சுஜாதா எழுதியிருக்கிறார்...நீங்கள் கவனிக்கவில்லையா” என்று போடப்பட்ட போஸ்ட் கார்டுக்கு ”எங்கே தோழர்” என பதிலாக வந்த கடிதத்திற்க்கு,

  சுந்தர ராமசாமிக்கு பதிலாக இவரை குழப்பிவிட்டோமே என பதிலே போடாமல் சங்கடப்பட்டிருக்கின்றேன்.

  சிறு கதைகளை பரவலாக வாசித்ததுண்டு.

  அவரின் மறைவு குறித்து உடனடியாக தெரிந்து கொள்ளாததற்க்கு குறிப்பிட்ட இலக்கிய வட்டங்களிலிருந்து ஒதுங்கியே இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

  எது எப்படியிருப்பினும் தொலைதூரங்களிருந்த என்னைப்போன்ற சிறு வாசகனும் தாங்கவியலா இழப்புதான் அது.

  உடனிருந்து பழகிய நுட்பமான மனம் கொண்ட உங்களின் வலி உணர்கிறேன் தோழர்.

  என்றும் மாறா அன்புடன்,
  கும்க்கி.

  பதிலளிநீக்கு
 10. aarampaththila arinthu kolla muitnthathu

  avarudaiya sirukathaikalai kovilpatti yil iruntha poothu vaasiththirukkireen

  nan santhikka ninaiththa alumaikalil oruvar

  dordharsan tv kkaaka vaipaaraip paarri oru kuzhanthaiyaippool sollik kontirunthathu kannukkulla irukkiRathu

  avarin ninaivukku nanri

  பதிலளிநீக்கு
 11. அருமையாக இருக்கிறது தங்கள் இடுகையும் அவரை நினைவு கூர்ந்த விதமும்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 12. படிக்க மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. பாரதி!
  நன்றி. நீங்கள் அவரிடம் படித்திருக்கிறீர்களா!


  துபாய் ராஜா!
  நன்றி.

  ஆருரன் விசுவநாதன்!
  நன்றி.

  தீபா!
  உண்மைதான்.

  ராம்ஜி!
  நன்றி.


  செய்யது!
  நண்பரே... படித்து விட்டேன். அற்புதமான மொழி உங்களிடம் இருக்கிறது. நிறைய எழுதுங்கள்.

  முத்துக்குமார்!
  பழைய பதிவின் லிங்க் இதோ. அதில் படம் இருக்கிறது.
  http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post_23.html


  மதுமிதா!
  அவரோடு பழகிய உங்களுக்கு இருக்கும் வேதனை புரிகிறது...


  கும்க்கி!
  நன்றி.ம்னிதாபிமானமும், நல்ல இலக்கிய வளமும் கொண்ட மனிதரைம் இழந்துவிடோம்.


  மண்குதிரை!
  நன்றி. ஆமாம். தூர்தர்ஷனில் எப்போதோவாது அதை காண்பிப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.

  சந்தன்முல்லை!
  நன்றி.

  சுந்தர்!
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அண்ணா,மனசு ரொம்ப ரொம்ப கனமாக இருக்கிறது, சில இழப்புகளின் பிறகான அந்த இடம் எப்போதுமே வெற்றிடம் தான். வேறு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 15. நெகிழ்ச்சியான பதிவு. படிக்க மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 16. யாத்ரா!
  நாஞ்சில் நாதம்!

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. அன்புள்ள ஜெ,
  மிக விளக்கமான விரிவான பதிலுக்கு நன்றி.
  அந்த எழுத்துக்களில் உள்ள யதார்த்தமும், நேர்மையினாலும்தான் இவ்வளவு வருடங்களாகியும் என்னை மாதிரி ஒரு நியாபகமறதிக்காரனின் நினைவில் கூட இருக்கின்றன போல.
  கூடவே தளத்தில் கொடுத்திருக்கும் இணைப்புச்சுட்டி...ஆசிரியர்களைப்பற்றிய அவரது அபிப்ராயம், சோவியத் உடைந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி...நல்ல, ஆழமான நினைவுக்கூறல்...அவரது மகனின் பெயர் அறம்...
  ஒரு கட்டத்திற்கு மேல் படிக்கமுடியவில்லை...இவ்வளவு கள்ளம் கபடமற்ற, அன்பே உருவானவரை ஒரு முறையாவது சந்தித்திருக்கலாம்...ஏன் நான் செய்யவில்லை...
  தொகுப்பு படித்த கொஞ்ச நாட்கள் கழித்து சாத்தூரில் இருந்த சித்தியிடம் கேட்டபோது எழுத்தாளரை தனக்கு தெரியும் என்றும் அடுத்த முறை சாத்தூர் வரும்போது சந்திக்கலாமே என்றும் சொன்னார்கள். எனக்கே உண்டான தயக்கம், கூச்சம், படிப்பு, வேலை(யின்மை முதலில்)...அப்புறம், அப்புறம் என்று தள்ளி அப்படியே விட்டு போய்விட்டது.
  இப்போது எழுத்தாளரும் இல்லை...சித்தியும் இல்லை...
  சிவகுமர் கிருஷ்ணமூர்த்தி

  [சொல்புதிது தளத்தில்]

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!