பிள்ளை பெற்ற பெரியசாமி!

இந்தக் கதை படிக்கும் போதெல்லாம் தாங்க முடியாமல் சிரிப்பு வரும். கூடவே வேதனையும் வரும். தெலுங்கு நாட்டுப்புறக் கதை இது. தமிழுக்கு அதை எளிமையாக மொழியாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்.  பாரதி புத்தகாலயம் இதனை குழந்தைகளுக்கான புத்தகமாக வெளியிட்டு இருக்கிறது. என்னைக் கேட்டால் இது முதலில் பெரியவர்களுக்கான இலக்கியம்தான். கதை உங்களிடம் நிறைய பேசும்.

 

பெரியசாமி என்பவர் ஊரில் ஒரு பெரிய மனிதர். வயது 45தான் ஆகிறது. உடல்வாகும், அவர் வேட்டி கட்டும் பாங்கும் மிரட்டலாக இருக்கும். காடுகரையும் நிறைய இருப்பதால் ஊரில் அவருக்கு தனி மரியாதை. அவருடைய பார்வை பட்டதும் ஊர்மக்கள் கையெடுத்துக் கும்பிட்டு விடுவார்கள். வீட்டிலும் அவர் பெரிய மனுஷத் தோரணையுடன்தான் இருப்பார்.

 

அவருக்கு வழ்க்கையில் ஒரு மிகப்பெரிய குறை, தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பதுதான். மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்தபோது அவர் ரெண்டு மாத காலம் மனைவியின் மூஞ்சியில் கூட விழிக்கவில்லை. பொம்பளைப் பிள்ளையைப் பெத்துத் தாராளே என்று அவள் மீது ஆத்திரம்.

 

என்றைக்காவது ஆண்டவன் கண்திறக்க மாட்டானா என்ற நம்பிக்கை நாலாவதாகவும் பெண்குழந்தையே பிறந்தபோது உடைந்துபோனது. கொஞ்சநாள் கோவில், குளம் என தாடி வைத்துக்கொண்டு திரிந்தார்.

 

சக்கம்பட்டி ஜோசியர் பேச்சை நம்பி இறங்கிய கடைசி முயற்சியும் ஐந்தாவது பெண்குழந்தை பிறந்ததும் வீணானது. ஆகவே நிரந்தரமாக மனைவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். என்ன பொம்பள இவ, இப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்துருக்கா என்று வெறுப்படைந்து போனார்.

 

கதை இப்படி இருக்கையில் ஒருநாள் அதிகாலையில் வயக்காட்டுக்குப் போனார். தூரத்தில் வரப்பின் மீது வித்தியாசமான ஒரு ஒளி தென்பட்டது. கிட்டப்போய்ப் பார்த்தார். அதிசயமான கல் ஒன்று ஊதா நிற ஒளியில் பளபளத்துக் கிடந்தது. ஒரு நிமிடம் பயந்தார்.  பிறகு குனிந்து அதைக் கையிலெடுத்துப் பார்த்தார். கண்கள் கூசின. அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக்கல் பேசத் துவங்கியது.

 

“மகனே! நான்தான் சூரியக்கடவுள். உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள். ஒரே ஒரு வரம் தருகிறேன். நீ கேட்டது அப்படியே உனக்குக் கிடைக்கும்”. பெரியசாமி ஆடிப்போனார். பயமும் பதட்டமுமாக கையில் கல்லுடன் நின்றுகொண்டிருந்தார். அடுத்த நிமிடம் சட்டென்று “எனக்கு ஆண் வாரிசே இல்லை. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்” என்று கேட்டார்.

 

”தந்தேன். சீக்கிரம் உனக்கு ஆண்குழந்தை பிறக்கும்” என்று சொல்லிவிட்டு அந்தக்கல் மறைந்துவிட்டது.

 

நடந்ததெல்லாம் கனவா நிஜமா என்ற குழப்பம் ஒரு மாதம் வரை நீடித்தது. ஒரு மாதம் ஆகவும் அவருக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. மாத்திரைகளில் தலைசுற்று நிற்கவில்லை. எந்நேரமும் வாயில் எச்சில் ஊறியது. புளிச் புளிச் என்று கண்ட இடத்திலும் துப்பிக் கொண்டிருந்தார்.

 

ரெண்டு மாசமாகவும் அவருடைய வயிறு பெரிதாகத் துவங்கியது. நாடி பிடித்துப் பார்த்து உள்ளூர் வைத்தியர் அவர் ‘முழுகாமல்’ இருப்பதாக அறிவித்தார்.

 

“ஆண்டவா... இது என்ன சோதனை... எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றுதானே கேட்டேன். நீ எனக்கே கொடுத்து விட்டாயே”  என்று புலம்பினார். பாதங்களில் வீக்கம் வந்து கஷ்டப்பட்டார். சாப்பிட்டதெல்லாம் ரெண்டு மாசத்துக்கு வாந்தியாகிக் கொண்டே இருந்தது.

 

நாளாக நாளாக வயிறு உப்பிக்கொண்டே வந்தது. ஊரெல்லாம் இதே பேச்சுத்தான். கூட்டம் கூட்டமாக பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

 

சரி, இனி யோசிக்க ஒன்றுமில்லை. தடுப்பூசி, சத்தான சாப்பாடு என்று அவருடைய மனைவி அவரைப் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார்.

 

பாவம் பெரியசாமி பிள்ளைத்தாய்ச்சிக்காரர் என்று ஊரில் யார் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் அவருக்கு ஒரு தட்டு நிறைய வந்துவிடும்.  அவரும் தன்னுடைய மகன் நல்லா வளரட்டும் என்று தீவனத்தில் குறை வைக்காமல் வெளுத்து வாங்கினார்.

 

பிரசவகாலம் நெருங்கியது. பெரியசாமிக்கு இடுப்பு வலி கண்டது. கொஞ்ச நேரத்தில்  “குவா, குவா” சத்தம் கேட்டது. பெரியசாமிக்கு பாரம் குறைந்தது. பத்துமாதம் பட்ட அவஸ்தைகள் முடிவுக்கு வந்தது. எப்படியோ நல்லபடியாக தகப்பன் வேறு பிள்ளை வேறாகி விட்டோமே அது போதும் என்றிருந்தது.

 

ஆனால் என்ன கொடுமை. பிறந்தது பெண் குழந்தை. பெரியசாமி தலையணையில் முகம் புதைத்து அழுதார். அவருடைய மனைவி “அதுக்கென்னங்க... என்ன பிள்ளையானா என்ன... எல்லாம் ஒண்ணுதான” என்று அவருடைய தலையை வாஞ்சையுடன் வருடி தைரியம் சொன்னார்.

 

அன்று இரவு பெரியசாமியின் கனவில் கடவுளின் குரல் கேட்டது. “ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு  பெரியசாமி. கவலைப்படாதே. அடுத்த குழந்தை உனக்கு ஆண் குழந்தைதான். இந்தா வரம் “ என்றது. “ஐயையோ.... வேண்டாம்... இருக்கிற பிள்ளைங்க போதும்... இன்னொரு பிரசவம் என்னால தாங்க முடியாது. என் மனைவிக்கு நான் செஞ்ச கொடுமை இப்பத்தான் புரியுது.... வேண்டாம்... வேண்டாம்...” என்று கத்தி, கட்டிலிலிருந்து அவர் கிழே விழவும் கனவு கலைந்து போனது.

 

இது போன்ற கதைகளை யாராவது கார்ட்டூன் படமாக்க முயற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்!

 

*

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. Super super suuuuuuuuuuuuper!
    :-))))


    தமிழ்ச்செல்வன் ஸாருக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றி!

    பதிலளிநீக்கு
  2. :) நல்லாத்தான் இருக்கு கதை.

    பதிலளிநீக்கு
  3. மாது நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.வடிவம் மாற்றியிருக்கிறீர்கள்.பிடித்திருக்கிறது.பிள்ளை பெற்ற பெரிய சாமியை கொண்டு வந்தது மகிழ்ச்சி தருகிறது.அக்கதையை அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியபோது யோரோ மொழிபெயர்த்து வந்திருந்தது.என் வேலை அதை என் மொழியில் மாற்றியமைத்தது மட்டுமே.

    பிள்ளை பெற்ற பெரியசாமி ஒரு படக்கதைப் புத்தகம் என்பதைச் சேர்த்துக்கொள்க.

    தமிழ்ச்செல்வன்

    பதிலளிநீக்கு
  4. என்ன இருந்தாலும் பெரிய சாமி இன்னொரு ட்ரை பண்ணிருக்கலாம்
    :)))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  5. :-)))))
    சூப்பரா இருக்கு....பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றி

    உடன் தமிழ்ச்செல்வன் சாருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் :) :(

    பெரியசாமி புரிஞ்சிக்கிட்டாரு.

    பதிலளிநீக்கு
  8. ரொம்பவும் அருமையான கதையை பகிர்ந்திருக்கிறீர்கள், தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும உங்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தினம் எப்படி உங்களால் எழுத முடிகிறது?

    பதிலளிநீக்கு
  10. எங்கிருந்து எடுக்குறீங்க மாதவராஜ் இத்தனை விசயம்... நாங்களும்தான் எழுதிறம்..

    பதிலளிநீக்கு
  11. நண்பரே

    அருமையான பதிவு. முன்பே இந்த கதையை படித்திருந்தாலும் கூட , புதிதாய் தோன்றுகிறது. இது போன்ற படைப்புக்களை எல்லா தளங்களிலும் எடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. பெண்ணியம், பெண்கள் பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் இன்னும் விரிவடைந்த தளத்துக்கு செல்ல வேண்டும் . உங்களை போன்ற தோழர்கள் தான் அதற்கு உதவ முடியும்.
    தினமும் பதிவு செய்வது எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது... பாராட்டுகள்.
    பவித்ரா

    பதிலளிநீக்கு
  12. அய்யய்யோ......!! இப்புடியும்கோட நடக்குமா....!!

    இனிமேலு கோயிலுக்கு போனா ஏடாகூடமா எதையும் வேண்டிக்காதடா மேடி......!!

    பதிலளிநீக்கு
  13. பகிர்வுக்கு நன்றி

    உடன் தமிழ்ச்செல்வன் சாருக்கும்

    பதிலளிநீக்கு
  14. என் பக்கம்!
    தீபா!
    சின்ன அம்மிணி!
    சந்தனமுல்லை!
    அமிர்தவர்ஷிணி அம்மா!
    யாத்ரா!


    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தமிழ்ச்செல்வன்!

    மிக்க நன்றி.
    எப்போ வலைப்பக்கம் வரப்போறீங்க... எழுதப் போறீங்க....

    பதிலளிநீக்கு
  16. மங்களூர் சிவா!

    ரொம்ப ஓவருங்க இது!!!


    லவ்டேல் மேடி!
    கடவுள்கள் ஜாக்கிரதை!

    நாஞ்சில் நாதம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. முத்துக்குமார்!
    கிருத்திகன் குமாரசாமி!
    பவித்ரா!

    நன்றி.
    வாசிப்பதும், எழுதுவதும் தொடர்ந்து கொண்டு இருப்பதால், சாத்தியமாகிறது. நேரம்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. என்றுமே பிறரின் சிரமங்களை நாம் புரிந்துகொள்ளும் மன்ம வேண்டும் சரிதானா

    பதிலளிநீக்கு
  19. இப்பொழுது இந்தக் கதையைத் தங்களின் வலையில் படித்தேன்.
    அருமையான சிந்தனையுடைய கதை.அதை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!