வண்ணங்களாய் நிறைந்தவன்!

 

ந்திய விமானப்படையில் இருபது வருடங்களாக பணிபுரிந்து முடித்தபோது, தனது முப்பத்தொன்பதாவது வயதில் எதிர்காலம் இனி சாத்தூர்தான் என்று நிச்சயம் செய்து கொண்டான் அவன். தொடர்ந்து இராணுவத்தின் ஒரு அங்கமாக இருந்து சொந்தங்களை, நெருக்கமானவர்களை, முக்கியமாக மனித சமுத்திரத்தை விட்டு விலகி இருக்க அவனால் முடியவில்லை. தனக்கென்று, தனக்கு விருப்பமான ஒரு தொழிலை ஏற்றுக்கொண்டு சாத்தூரில் தன் மனைவி, அற்புதமான இரண்டு குழந்தைகளோடு குடிபுகுந்தான்.

 

 

ஒரே வீட்டில் இருபது வருடங்களாக வாழ்ந்து, திடுமென திசைக்கொன்றாய் பறந்துவிட்ட பிறகு, எப்போதாவது காலத்தின் மடியில் தலைவைத்துப் படுத்து அந்த இழந்த நினைவுகளை அசைபோட்டுக் கிடந்த எனக்கு அது பெரும் சந்தோஷம் தந்தது. ”ஏல... மாது...”  என என்னை உரிமையோடு அழைத்த என் தம்பியின் குரல், திரும்பவும் நான் வாழ்ந்து கொண்டிருந்த ஊரிலேயே, மிக அருகில் கேட்கத் தொடங்கியது. எங்கள் வீட்டில் அவன் தான் கடைசி. ’குட்டியப்பூ’ என்றுதான் சொல்வோம்.

 

 

அவனைப்பற்றிச் சொல்ல எவ்வளவோ  இருக்கிறது.  எழுதும் திராணி இல்லை இன்னும் எனக்கு. அருமைத் தோழன் காமராஜ் (அடர் கருப்பு) அவனைப்பற்றி , செப்டம்பர் 2005ல் ஒரு கட்டுரை எழுதினான். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 

ராணுவத்திலிருந்துத் திரும்பிய எல்லோருமே சாமானியர்களிலிருந்து சற்று அலாதியாகத் தெரிவார்கள். அதிர்ந்து சிரிக்கத் தெரியாதவர்கள். நுண்ணிய அழகுகளை சிலாகிக்கத் தெரியாதவர்கள். ஒரே உடல்மொழியோடு வாழ்நாளை செலவழிப்பவர்கள். சீப்பில் தங்கிவிடுகிற தலைமுடியால் ஒழுங்கு குலைந்து போனதாய் கருதி தண்டனை கொடுக்கத் தயாராகுபவர்கள். இறுக்கமானவர்கள். இப்படியான மாஜி ராணுவர்களின் மேலுள்ள மரபார்ந்த மதிப்பீடுகளை தனது சிரிப்பால் துடைத்தெறிந்தவன் அவன். அவனும் ஒரு முன்னாள் விமானப்படை வீரன்தான்.

 

kutty ஒரு கம்ப்யூட்டரோடும், ஒரு காமிராவோடும், நிறைய நம்பிக்கைகளோடும் சாத்தூருக்கு நிரந்தரமாகக் குடி வந்தான். தேசீய நெடுஞ்சாலை கிழித்துப்போட்ட நகரத்தின் மையப்புள்ளியில் தனக்கொரு தளம் அமைத்துக் கொண்டான். ஆதன் பேர் ’ராஜ் டிஜிட்டல்’.

 

 

அவன் உட்கார்ந்திருக்கிற சுழல் நாற்காலியின் பின்னால் ஒரு ஓவியம் இருக்கும். இருளும் ஓளியுமான அதில் இரண்டு கிராமத்துப்பெண்கள் கூடை பின்னிக்கொண்டிருக்கிற செவ்வியச் சித்திரம் உள்ளுக்குள் பிரவேசிக்கிற யார் கண்ணையும் இழுக்கும். ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோவில் தைல வண்ண ஒவியம் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது எதிர் வினோதம். அது எங்கு கிடைக்கிறது என்று கேட்டபோது, “என்னிடம் கிடைக்கும்” எனச் சொல்லிவிட்டு பலமாகச் சிரித்தான். அதை அவன் அண்ணன் மாதவராஜும் ஊர்ஜிதம் செய்தான். பின்னர் ஒரு கல்யாண நாளுக்காக மாதவராஜூக்கு ஒரு ஒவியம் பரிசளித்தான். வியப்பும் கூடவே மயிரிழையில் ஒரு சந்தேகமும் தொங்கிக் கொண்டு இருந்தது.

 

 

ரத்ததானக்கழக நிதிக்காக சாத்தூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்த வேளையில், அதற்கான விளம்பர பேனர்கள் வரைய தீர்மானித்தோம். அந்த மாஜி ராணுவ வீரன் கையில் தூரிகையும், வண்ணங்களும் பொங்கியதைக் கண்டு என் கருத்தும் கணிப்பும் மாறியது. இனிமை நிறைந்த குரலில் பாடல்கள் பாடுவதும், ஹிந்திப்பாடல்களைப் பாடி வரிவரியாய் அர்த்தம் சொல்வதும், அதில் பளிச்சிடுகிற கவிதை வரிகளின் மீது கூடுதல் ரசனை ஏற்றுவதும் அவனது முத்திரைகள்.

 

 

வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓளிர்ந்த அவனது கம்ப்யூட்டர் திரையின் ஓய்வு நேரங்களில் கொஞ்சம் இலக்கியத் தேடல்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. அவனது சீருடை எண்ணங்களில் வானவில்லின் வண்ணங்கள் தெரிய ஆரம்பித்தன. மனதுக்குப் பிடித்துப் போகிறவர்களின் தோளில் கைபோட்டு, ராணுவக்காலங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வான். ஒரு கைதேர்ந்த கதைசொல்லியின் நேர்த்தியோடு விவரிப்பதைக் கேட்டுக்கொண்டே  இருக்கலாம். அப்போது முகபாவங்கள் மாறுவது ஒரு தனி நடிப்பைப் போலிருக்கும்.

 

 

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ராஜ் டிஜிட்டல் அறை எங்கள் தொழிற்சங்கத்தின் கிளை அலுவலமாக, ரத்த தான கழகத்தின், எழுத்தாளர் சங்கத்தின் சந்திப்பு நிலையமாகவும் இயங்க இடம் கொடுத்து, அந்த இயக்கங்களோடு தானாகவே இணைந்து கொண்டான். ‘குட்டியப்பூ’ என்று மாதுவாலும், ராஜ் சார் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்டு இறுதியில் தோழன் என்றும் அறியப்பட்ட அவனுக்கு ‘தனஞ்ஜெயராஜ்’ என்று பெயர் இருந்தது. அது அவனது குடும்பத்தாருக்கும், அதிகாரபூர்வ டாக்குமெண்ட்களுக்குமாக சுருங்கிப் போயிருந்தது. அவன் ஒரு ஓவியன். பாடகன். கம்ப்யூட்டர் கலைஞன். கிரிக்கெட் ஆட்டக்காரன். இப்படி பன்முக அடையாளங்களால் சாத்தூருக்கு வந்த நாலே வருடங்களில் ஒரு பெரும் கூட்டத்தை சம்பாதித்து இருந்தான்.

 

 

உற்சாகம், உழைப்பு, வேகம் நிறைந்தவனாக வாழ்ந்ததனால் அவன் பொருட்டு யாரும் கழிவிரக்கம் கொள்வதை சுத்தமாக நிரகரித்தவன். தூரத்துச் செய்திகளாகவும், முகம் திருப்பிக் கடந்து போகிற நிகழ்வுமான சாலைவிபத்து அவனுக்கு சம்பவித்தது. அவன் கடந்து போன மனிதர்கள் மீதும், காலங்கள் மீதும் கெட்டியான அடர் வண்ணத்து நினைவுகளாக விட்டுச் சென்றிருக்கிறது அது. ஜனனமும், மரணமும் வாழ்க்கையை ஆரம்பித்து முடித்து வைக்கிற ஒரு வரிக்கணக்கான போதும், நினைவுகள் மட்டும் காலத்தாலும் கழிக்க முடியாத, தீராது அழுத்துகிற பாரம்.

 

 

வேலை, வீடு, குடும்பம், ஓய்வு என்கிற நிப்பந்திக்கப்பட்ட வாழ்க்கை ஆயாசமாகிற தருணங்கள் எல்லோருக்குள்ளும் அவ்வப்போது முளைக்கும். அப்போது சாய்ந்து கொள்கிற ஒரு தோள் தேடும். அது எப்போதுமே நண்பர்களிடத்தில் மட்டுமே விரிந்து கிடக்கும். கிராமத்துச் சாவடிகள், பாலத்துச் சுவர்கள், டீக்கடை பெஞ்சுகள், ஆளரவமற்ற கட்டாந்தரைப் பொட்டல்கள் என அவரவர் சூழல்களுக்கேற்ப நெருக்கமான இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், அதிக நேரங்களில் மௌனங்களோடும் கனவுகள் மேல் பயணம் செய்யலாம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாக ’ராஜ் டிஜிட்டலை’ அவன் திறந்து வைத்திருந்தான். இன்று பூட்டிகிடக்கிற அந்த அறைக்குள் சில புத்தகங்களோடு, நெஞ்சம் விம்முகிற பாடல்களும், தீராத நட்பும், சந்தோஷமும் நிறைந்து கிடக்கிறது. அவன் மட்டுமில்லை.

 

 

kutty and maathu
குட்டியப்பூவும் நானும்

ன்று, ஆகஸ்ட் 23ம் தேதியோடு, அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. விபத்துக்குப் பிறகு, அவன் உடலிலிருந்து எடுத்த பொருட்களில் அவன் கட்டி இருந்த , சிதைந்து போன வாட்சை நான் வைத்திருக்கிறேன். இன்று காலை எடுத்துப் பார்த்தேன். காலை 7.27ல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.

 

 

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. கண்களை
  மறைத்துக்கொண்டு நிற்கிறது
  இரண்டு சொட்டுக்கள்,
  நினைவுகளாக.

  என் மணிக்கட்டை
  இறுக்கப்பிடித்துக் கொண்டு
  கதைசொல்லிய காலமின்னும்
  காந்தலோடு வலிக்கிறது.

  குட்டி...

  பதிலளிநீக்கு
 2. ஆழ்ந்த வருத்தங்கள்

  ஆண்டவன் எப்போதும் தனக்கு பிரியமானவர்களை அவர்களின் சிறிய வயதிலேயே தன்னுடன் அழைத்து கொள்வார் என்று பைபிள் சொல்கிறது.

  ராம்ஜி_யாஹூ

  பதிலளிநீக்கு
 3. எங்கள் மரியாதைக்குரிய தோழன் தனஞ்ஜெயராஜ் நினைவிற்கு
  பாங்க் வொர்க்கர்ஸ் யூனிட்டி அஞ்சலி செலுத்துகிறது.
  எங்கள் இதழின் அட்டைப்படங்களில் ஒளிரும் அவரது
  கலையும் கற்பனையும்
  காலத்தின் மீதான அவரது பதிவு....

  இழந்த பிறகே தெரிந்து கொண்டோம்
  இந்த அற்புதக் கலைஞனின் முகத்தை

  அது அவரது இழப்பை விடவும்
  கொடுமையான வேதனை

  விபத்து அவருக்கு நேர்ந்தது அல்ல,
  இயக்கத்தின் தேவைகளுக்கு
  அவரால் ஈர்க்கப் பட்டவர்களுக்கு....

  அந்த ஆகஸ்ட் 23 எனக்கும் நினைவில் இருக்கிறது...
  சென்னை மேற்கு மாம்பலம்
  விக்னேஷ் அச்சகத்தில் இருந்து
  பேசுகிறேன் மாதவ் எண்ணுக்கு
  எடுப்பவர்கள் வேறு யாரோ

  எங்கே மாது என்ற போது தானா
  அந்த இடி வந்து விழ வேன்டும் காதுகளில்

  "அவங்க தம்பி விபத்தில் அடிபட்டு....."

  செப்டம்பர் மாத BWU இதழுக்கான
  அட்டைப் படம்
  பின்னர் வரத்தான் செய்தது
  அதற்கு அப்புறமும்..
  இன்னும்
  வந்து கொண்டு தான் இருக்கிறது -
  அதற்குமுன் வந்த போது தெரியாமல் இருந்த
  அந்த முகம்
  அதற்குப் பின்
  அவர் இல்லாது
  மாது செய்து அனுப்பும்
  ஒவ்வொரு அட்டைப் பக்கத்திலும்
  தெரியத் தான் செய்கிறது....

  காமராஜின் இந்தப் பதிவு
  BWU இதழில் அப்போது
  அவர் நினைவாக
  வெளியிடப்பட்ட போதும்
  பலரும் உணர்ந்தனர்
  இழப்பின் வலியை....

  நினைவில் இருந்து பிரியாத முகத்தின் நினைவிற்கு
  அஞ்சலி....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 4. :(

  முன்பொருமுறை எனது இடுகையில் சொல்லியிருந்தீர்களே...தங்கள் தம்பியைப் பற்றிச் சொல்லப் போவதாக...

  அதிர்ச்சியடைய செய்தது இந்த இடுகை!! தங்கள் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது!! வருத்தங்கள்!!அஞ்சலிகள்!

  பதிலளிநீக்கு
 5. ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கு வார்த்தைகளால் வலி தீர்க்க முடியாது.

  என்னால் முடிந்த ஒரு ஆறுதல்....

  “அண்ணா....”

  (இதை வார்த்தையாக அல்லாமல் ஒரு தம்பியின் ’குரல்அழைப்பாக’ எண்ணிக்கொள்ளவும்...)

  பதிலளிநீக்கு
 6. மறக்க முடியாத சம்பவங்கள் நெஞ்சை கனக்க செய்து கொண்டே இருக்கின்றன...

  இளைஞர் முழக்க அட்டை...

  மித்ராவின் மேஜிக் ஷோ....

  சே குவரா புத்தக வெளியீடு...

  அந்த அதிர வைக்கும் சிரிப்பு...

  சில நேரம் முனு முனுத்த பாடல்கள்...

  காற்றில் கரையும் அந்த சிகரெட் புகை....

  தோழர்..............

  பதிலளிநீக்கு
 7. கண்கள் கலங்கிவிட்டன. உண்மையான நண்பர்கள், நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் அரிதாகிப் போன இந்த நாட்களில் இத்தகைய இழப்புகள் இன்னமும் வேதனையை அதிகப்படுத்துவன. மாதவராஜ், உங்களுக்குள் இப்படியொரு துயரம் இருக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. காமராஜ் நன்றாக எழுதக்கூடியவர் என்பதை இந்த நினைவுப்பதிவு மூலம் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 8. நண்பரே,

  உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அனைவருக்கும் நல்லவராக இருப்பவர்கள் அதிக நாள் பூமியில் இருப்பதில்லை.
  மற்றுமொரு விஷயம். சாலை விபத்துக்களில் உயிரை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு இந்தியா தான். குறிப்பாக ஹெட் இஞ்சுரி இறப்புகள் தான்அதிகம்,. டிராபிக் போலீஸ் பிடித்து வார்னிங் செய்தாலும் ஹெல்மெட் போட தயங்குபவர்களை பற்றி கவலையாக இருக்கிறது. வண்டி ஓட்ட துவங்கிய நாளில் இருந்தே நான் ஹெல்மெட் அணிந்து தான் செல்கிறேன். நண்பர்களுக்கும் இதை செய்தியாக சொல்லி வருகிறேன்.
  சாலை விபத்து என்றதும் இதை சொல்ல தோன்றியது.

  பவித்ரா

  பதிலளிநீக்கு
 9. சகோதரனை இழந்த மிகப்பெரிய சோகம் எனக்கும் உண்டு.

  எந்த ஆறுதலும் அந்த வலியை நிவர்த்தி செய்யமுடியாது....
  ஆனாலும் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. தோழர்,
  மிக ஆர்வத்தோடு வாசிக்கத்தொடங்கினேன். நடுவில் தோழர் காமராஜ் அவர்களின் பதிவு வந்ததும் உற்சாகம் மேலும் கூடியது.
  கடையில் அவரது மறைவு குறித்து எழுதியது மிகவும் அதிர்ச்சி. வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. ethuvum ezhutha mudiyavilai!!!
  ethuvum marakkavum mudiyavilai!!!

  Avar Ulagathai vittu pirinthalum avar nam manathil vaalkirar!!!
  nam uyir piriyum varai!!!

  Ponraj-Tuticorin

  பதிலளிநீக்கு
 12. அண்ணா இந்தப் பதிவு மிகுந்த பாரமாய் நெஞ்சையழுத்துகிறது. இழப்புகள் என்றுமே ஈடு செய்ய முடியாதவை. தனஞ்ஜெயராஜ் அவர்களுக்கு அஞ்சலி.

  //இன்று காலை எடுத்துப் பார்த்தேன். காலை 7.27ல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.//

  காலத்தில் உறைந்த இந்த கணத்தின் வலி மிகுதியாய் கனக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. வருத்தங்களையும், நினைவுகள் தரும் வலியையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. படித்துக் கொண்டு வரும் போது காமராஜ் எழுதியது என கருப்பு வண்ணப் பிண்ணனி வரும் போதே அப்படி ஏதும் இருக்கக் கூடாது என எண்ணிக்கொண்டே படித்தேன்.

  ப்ச்.....

  பதிலளிநீக்கு
 15. பருவந் தப்பி பனி நாளில் மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு பகலிது.
  பருவங்கள் தப்பிக்கொண்டிருக்கின்றன பலநேரம்.

  விதிபிடித்தாட்டும் விட்டிலோ நாம்...

  கொஞ்சம் ஸ்தம்பிக்கிறேன். பார்த்திருக்கவேண்டுமோ எனத் தோன்றிய ஒரு பாராமுகம் குறித்து!
  காலனின் பாராமுகம் மற்றும் கொடுங்கனவின் நிர்த்தாட்சண்யத்தின் முன் கையறு நிலையிலோடு ஒரு கையாய் நானுந்தான் நண்ப உன்னொடு...

  பதிலளிநீக்கு
 16. பருவந் தப்பி பனி நாளில் மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு பகலிது.
  பருவங்கள் தப்பிக்கொண்டிருக்கின்றன பலநேரம்.

  விதிபிடித்தாட்டும் விட்டிலோ நாம்...

  கொஞ்சம் ஸ்தம்பிக்கிறேன். பார்த்திருக்கவேண்டுமோ எனத் தோன்றிய ஒரு பாராமுகம் குறித்து!
  காலனின் பாராமுகம் மற்றும் கொடுங்கனவின் நிர்த்தாட்சண்யத்தின் முன் கையறு நிலையிலோடு ஒரு கையாய் நானுந்தான் நண்ப உன்னொடு...

  பதிலளிநீக்கு
 17. எல்லோர‌து வாழ்விலும், இப்ப‌டியொரு துக்க‌ம் ந‌ட‌ந்து
  வாழ்க்கை முழுவ‌தும் கூட‌வே வருகிற‌து.

  பதிலளிநீக்கு
 18. இன்றுதான் இந்த இடுகையை படிக்கிறேன். மனதில் எழும் வருத்தங்கள் எண்ணிலடங்காது.

  பதிலளிநீக்கு
 19. மவுனம் மட்டுமே சூழ்கிறது உங்கள் உணர்வுகளை வாசிக்கையில்/இழப்பை உணர்கையில்..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!