என்ன பாவம் செய்தார் இந்த விநாயகர்?

கூடப் பிறந்த நாங்கள் ஐந்து பேருமே, சின்ன வயசில் படம் என்ற பேரில் வீட்டில் எதாவது கிறுக்கித் தள்ளிக்கொண்டு இருப்போம். மூத்த அண்ணணும், கடைசித் தம்பியும் நன்றாகவே வரைவார்கள். நான் ஓரளவுக்குத்தான். எனது இரண்டாவது அண்ணனுக்கு அவ்வளவாக படமெல்லாம் வரையத் தெரியாது. எப்போதும் ஒரே படத்தை விதம் விதமாய், வரைந்து வரைந்து நிபுணனாகி இருந்தான். அப்படி அவனிடம் மாட்டிக்கொண்டவர்தான் பிள்ளையார். அவருக்கு கோட், சூட் போடுவான். பெல்ஸ் (பெல்பாட்ட்ம்) போடுவான். தொப்பியும், கூலிங்கிளாஸும் கட்டாயம் உண்டு. இவ்வளவுமான பிறகு அவர் கையில் சிகரெட்டும் கொடுப்பான். ஒருதடவை துப்பாக்கியை நீட்டியபடி கூட நின்றிருந்தார். இதுபோன்ற சித்தரிப்புகள் எப்படி அவனுக்கு வந்தது என்றும் ஏன் வந்தது என்றும் தெரியவில்லை. நாங்கள் எல்லோரும் சிரித்துக்கொண்டு இருப்போம். எங்க அம்மாவுக்கு மட்டும் பிடிக்காது. “சாமிய இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது “ என அண்ணனைச் சத்தம் போடுவார்கள். “என்ன பாவம் செஞ்சாரோ இந்தப் பிள்ளையார்” என்று முணுமுணுப்பார்கள்.

அண்ணன் ஒரு தீர்க்கதரிசிதான். இன்றைக்கு துப்பாக்கிகள், வாள் என பலவிதமான ஆயுதங்களைக் கொடுத்து பிள்ளையாரை பெருசு பெருசாய் நிறுத்தியிருக்கிறார்கள். சிலவருடங்களுக்கு முன்பு இது போன்ற நாட்கள் ஒன்றில் சென்னைக்குள் நுழையும்போது தாம்பரத்திலிருந்து வரிசையாக சாலையோரத்தில் விநாயகர் சிலைகள் உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. சமீபகாலங்களில் விநாயகர் சதுர்த்தி ரொம்ப விமரிசையாக கொண்டாடப்படுகிறதுதான். விநாயகர் ஊர்வலத்தில் இந்த தடவை மதுவருந்திவிட்டு வந்தவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று இராமகோபலன் பத்திரிக்கையொன்றில் அப்போது திருப்திப்பட்டிருந்தார். அது ஒருபுறமிருக்கட்டும். அந்த விநாயகர் சிலைகளின் மீது ஒவ்வொன்றிற்கும் ஒரு பட்டங்கள் அளித்திருந்தார்கள். ஒரு விநாயகர் மீது 'வீர சவார்க்கர் வழிபட்ட வீர விநாயகர்' என்று எழுதப்பட்டிருந்தது. இங்கே சவார்க்கர் ஏன் வந்தார்? அலுவலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அரக்க பரக்க ஓடுகிற சென்னை அந்தக் காலை நேரத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தது.

சவார்க்கர் குறித்த கருத்துக்களும், விவாதங்களும் ஏராளமாய் வந்துகொண்டிருந்த நேரம் அது. மத்திய அமைச்சர் மணிசங்கர ஐயர் சவார்க்கரை விடுதலை போராட்ட வீரர் என்று சொல்ல முடியாது என்று கருத்து தெரிவிக்கவும் கொதித்து எழுந்தது பாரதீய ஜனதாக் கட்சி. பாராளுமன்றத்தில் கத்துவதைபோல தெருவில் நின்று கத்தினார்கள். மணிசங்கர ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். அவரது உருவ பொம்மையை சிவசேனைத்தலைவர் பால்தாக்கரேவும், முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மனோகர் ஜோஷியும் பம்பாய்த் தெருக்களில் செருப்பால் அடித்தனர். மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சவார்க்கர்தான் குரு என்று ஆதாரங்கள் பத்திரிக்கைகளில் வந்தன. அந்தமான் சிறையில் மாட்டிக்கொண்ட சவார்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்த கதைகள் எல்லாம் எடுத்து வாசிக்கப்பட்டன. சவார்க்கரோ அமைதியாக வந்து பிள்ளையாரின் தலைக்கு மேலே உட்கார்ந்திருந்தார்.

சிரிக்கவும் தோன்றுகிறது. சவார்க்கரின் உண்மையான பெயர் விநாயக் தாமோதர சவார்க்கர். அதிலிருந்த 'விநாயகரை' எடுத்து விட்டுத்தான் அந்த மேன்மக்கள் 'வீர' என்ற அடைமொழியை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வீரத்தை பிரிட்டிஷாருக்கு அவர் எழுதிய கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் பார்க்கலாம்.

"பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.' என்று ஆரம்பிக்கிறார். "பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்' என்பதோடு மேலும் சொல்கிறார். "மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்." தன்னுடைய விடுதலைக்காக தேசத்தின் விடுதலையை துச்சமாக மதித்த இவரின் படத்தைத்தான் 2003ம் வருடம் பிப்ரவரி 23ம் தேதி பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நேர் எதிராக வாஜ்பாய் அன் கோ திறந்து வைத்து சந்தோஷப்பட்டார்கள்.

இந்த வீர புருஷரின் பராக்கிரமங்கள் அத்தோடு முடியவில்லை. மகாத்மாவைக் கொன்ற கோட்சே என்னும் அம்புக்கு வில்லாக இருந்திருக்கிறார். கோட்சே இவரை குருவே என்று அழைத்து எழுதிய கடிதங்களை பத்திரிக்கைகளில் அப்போது முதல் பக்கத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தி இருந்தார்கள். அந்த வழக்கிலும் தனக்கு சம்பந்தமில்லை என்று சொல்லி வெளியே வந்தார். நீதிமன்றத்தில் கோட்சேவும் சவார்க்கருக்கு இதில் சம்பந்தமில்லை என்றே சொல்கிறான். ஆனால் காந்தியை ஏன் கொன்றேன் என்று மணிக்கணக்கில் நீதிமன்றத்தில் பேசிய வாக்குமூலத்தின் ஒவ்வொரு வரியிலும் சவார்க்கர் இந்த மண்ணுக்கு சாபமாய் வழங்கி இருக்கிற இந்துத்துவாவின் வெறியை பார்க்க முடியும். அதுதான் நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டவுடன் சவார்க்கரின் காலில் கோட்சே விழுந்து தனது உயிரை பாதகாணிக்கையாய் செலுத்தி இருக்கிறான். "நானே நீ, நீயே நான்...இந்த காரியத்தை நீயா செய்தாய்...நான் செய்தேன்" என்று அர்ஜூனனிடம் கிருஷ்ண பரமாத்மா சொல்லிய காட்சிதான் உடனடியாக நினைவுக்கு வரும்.

இந்த பரமாத்மாக்கள் எப்போதும் தங்கள் நோக்கத்தை இன்னொருவர் மூலம் செயல்படுத்தி தாங்கள் உயரத்தில் நின்று அதை பார்த்துக் கொண்டிருப்பார்கள். நேரடியாக அதைச் செய்யாமல் ஒதுங்கி நிற்பார்கள். அதேநேரம் அதற்கான மூலவேராக தாங்களே இருப்பதையும் உணர்த்துவார்கள். இது ஒருவகையான புனிதமான யுத்த தந்திரமாக வழிவழியாய் செய்து கொண்டிருக்கிறார்கள். அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு கரசேவை அழைப்பாக அத்வானி என்கிற இன்னொரு பரமாத்மா தேசம் முழுவதும் யாத்திரை செய்தார். இந்திய விடுதலைக்கு ஒருபிடி மண் கூட அள்ளிப் போடாதவர்கள் ராமர் பிறந்த இடத்தை விடுதலை செய்யப் போவதாக செங்கற்களை சுமந்தார்கள். டிசம்பர் 2ம் தேதி அஜாம்கரில் நடந்த கூட்டத்தில் அத்வானி "கரசேவை செங்கற்களாலும், கடப்பாறைகளாலும் நடத்தப்படும்" என பேசினார். டிசம்பர் 6ம் தேதி ஒரு உயரமான இடத்திலிருந்து மசூதியின் கோபுரங்கள் இடிக்கப்படுவதை பார்த்தார். ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டபோது தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார். 'உணர்ச்சி வசப்பட்ட கரசேவகர்களின் காரியம் இது' என்று சொன்னார். அந்த உணர்ச்சியை யார் ஏற்படுத்தியது என்பதுதான் கேள்வி. அத்வானியின் வீரம் இதுதான்.

நேர்மையானவர்கள் என்றும் தங்களை யாரும் சந்தேகிக்க முடியாது என்றும் சொல்லாமல் சொல்வார்கள். பகத்சிங்கைப் போல நிமிர்ந்து நின்று அதனை எதிர்கொள்கிற வீரமற்றவர்கள் இவர்கள். தாங்கள் கொண்ட கொள்கைக்கு தாங்கள் உண்மையாய் இருப்பதை வெளிப்படையாய் சொல்ல முடியாத இந்த கோழைகள் இந்த தேசத்திற்கும் இந்த மக்களுக்கும் என்ன நன்மையைச் செய்துவிட முடியும். பாவம். இவர்களை பின்பற்றும் சாமானியத் தொண்டர்கள் இந்த சாணக்கியங்கள் எல்லாம் தெரியாமல் இவர்களுக்கும், இவர்கள் காட்டும் உலகத்துக்கும் உண்மையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் போல வீரமெல்லாம் தெரியாது. பரமாத்மாக்களுக்கும், இந்த வீர புருஷர்களுக்கும் இப்படிப்பட்ட தொண்டர்கள்தான் வேண்டும்.

இந்து என்ற ஒற்றை அடையாளத்தை உருவாகுவதற்கு ‘வீர’புருஷர்கள் இப்போது விநாயகருக்கும் ‘வீர’என்னும் அடைமொழி கொடுத்து தெருத்தெருவாய் அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விநாயகர் என்ன பாவம் செய்தார்?

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பு மாதவ்

    சாவர்க்கர் பற்றியும், மத வெறியர்கள் பற்றியும் எத்தனை எழுதினாலும் தகும். பழைய விவாதஙளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். செம்மையாக.....

    வாழ்த்துக்கள்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. அடி தூள்!!!! என் மனசும் உங்க கையும் சேர்ந்து எழுதிய பதிவு இது!!!!!

    பதிலளிநீக்கு
  3. திடீரென பெரும்பாலான வீதிகளின் சந்திப்புகளில் பந்தலில் விநாயகர் சிலையும், நீள் முக்கோண காவிக்கொடியும் தற்காலிகமாக ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறது...

    இந்த திடீர் பக்தியின் பரினாம வளர்ச்சி எதை நோக்கிப் போகுமே

    பதிலளிநீக்கு
  4. ARUMAIYANA PATHIVU. NERATHUKKU THAKUNTHA PATHIVU. TAMIL NADAI RATHTHA KALARIYAKA MARDIYE THIRUVEN ENRU ORU VERIPIDITHA KUMPAL ALAIKIRATHU? ATHAI THADUPPATHU NAMATHU KADAMAI. NAAM ANAIVARUM ONRU SERVOOM.

    MAHARAJA

    பதிலளிநீக்கு
  5. அதானே... இப்பிடியெல்லாம் பதிவு போட்டு சிந்திக்க வைக்கும் உங்களுக்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பேன்.. இன்னொரு விருது..(கடுப்பாதான் இருக்கும்) ஏற்றுக் கொள்ளுங்கள் அண்ணா
    http://karavaikkural.blogspot.com/2009/08/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  6. அச்சச்சோ இதுக்கு முன்னர் கொடுத்தது தவறான லிங்.. இங்க கிளிக்குங்க
    http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பரே..!

    உங்களது இப்பதிவு பல 'மூட'நம்பிக்கைகளைத் தகர்த்திருக்கிறது.

    பலர் மேற்கோள் காட்டக்கூடிய வகையில் ஒரு அரும்பெரும் பதிவை இட்டிருக்கிறீர்கள்.

    இன்னும் முகமூடிக் கிழிப்புகள் தொடரட்டும்..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வீர வினாய்கருடன் வீர அனுமாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அனுமார் பட்த்தோடு ஓடித்தான் தீ வைப்பார்கள் பஞரங்கபலி என்னும் இந்துதுவா குரூப்.

    பதிலளிநீக்கு
  9. வேணுகோபால்!
    நன்றி.

    அபி அப்பா!
    உங்கள் பகிர்வு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கு.

    கதிர்!
    இது பக்தியின் பரிணாம வளர்ச்சி அல்ல. திட்டமிட்ட மதவெறியர்களின் சூழ்ச்சி.


    மகராஜா!
    நன்றி.


    கிருத்திகன் குமாரசாமி!
    ரொம்ப நன்றி. உங்க பதிவைப் படித்தேன். சந்தோஷம். ஆனா பத்து பேருக்கு கொடுக்கச் சொல்றீங்களே!


    இலக்கியா!
    உண்மைதான். பெரியார் சொன்ன கருத்துக்கள் உங்களிடமும், என்னிடமும் பத்திரமாக இருக்கும் வரை, இவர்களை எதிர்கொள்ள முடியும்.


    சிம்பு!
    ரொம்ப நன்றிங்க.


    sword fish!
    பாவம் அனுமாரும்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!