மாதவராஜ் பக்கங்கள் 10

 

மீண்டும் ஜின்னா வரலாற்றின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்திருக்கிறார். பிடிவாதமும், சர்ச்சைகளும் மிக்க அந்த மனிதர் லேசில் விடமாட்டார் போலிருக்கிறது. அவரைப் புரிந்துகொள்வதில் மற்ற எல்லோரையும் விட பா.ஜ.கவுக்கு பெரும் குழப்பம் காலகாலமாய் நீடிக்கிறது. தங்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரியாக முன்வைத்த அந்த மனிதரை வேறு ஒரு நிறத்தில் சித்தரிக்க தலைப்பட்ட அத்வானி கடுமையாக முன்னர் விமர்சிக்கப்பட்டார். இப்போது ஜஸ்வந்த் சிங்  கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா காரணமல்ல என்றும் நேருதான் காரணமென்றும் சொல்லும் அவரது புதுப்பார்வையை கட்சியும், ஆர்.எஸ்.எஸும் ரசிக்கவில்லை.

 

ஏன் ரசிக்கவில்லை என்பதை பிறகு பார்ப்போம். முதலில் மனித இரத்தத்தால் கோடுகள் கிழிக்கப்பட்ட தேசப்பிரிவினை குறித்து அந்த இயக்கங்கள் திரும்ப திரும்ப பேசுவதற்கும், யார் இதற்கு காரணம் எனக் கண்டுபிடித்துச் சொல்வதற்கும்  பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மற்றவர்களை கைகாட்டிவிட்டு, தாங்கள் இதற்கு காரணமும், பொறுப்புமல்ல என்று காட்டிக்கொள்ளவும், புனிதர் கீரீடத்தை யாருக்கும் தெரியாமல் தங்கள் தலையில் சூட்டிக்கொள்ளவுமே இந்த சர்ச்சைகள் அவ்வப்போது ஆவிகளாய் எழுப்பப்படுகின்றன.

 

1929ல் இந்து மகாசபையை சார்ந்த பாய்பரமானந்தா   "இந்துக்களும்,முஸ்லீம்களும் சேர்ந்து ஓட்டளித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்" என்று சொன்னார்(Hindu national movement, lahore, 1929). 1938ல் கோல்வார்கர் எழுதி வெளியிட்ட- we our nationhood, defined- என்னும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940ல் லாகூரில் நடந்த மாநாட்டில் "இரண்டு தேசங்கள் வேண்டும்" என்று முஸ்லீம் லீகும் தீர்மானம் நிறைவேற்றியது.

 

அடிப்படையில் ஒன்றையொன்று பரம எதிரிகளாக கருதினாலும் தேசப் பிரிவினையில் இந்த இரண்டு மதவாத அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்றன என்பது ஒரு விசித்திரமான இயல்பு. ஆகஸ்ட் 15, 1943ல் சவார்க்கர்  "கடந்த 30 ஆண்டுகளாக பூகோள ரீதியிலான ஒற்றுமைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காங்கிரஸ் இதையே பலமாக ஆதரிக்கிறது. ஒவ்வொரு சலுகையாக தங்களுக்கு கேட்டு அனுபவித்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினர் திடீரென தனி நாடு வேண்டுமென்று கேட்கின்றனர். ஜின்னாவுடன் எனக்கு இதில் எந்த பேதமும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் ஒரு தேசமாகவே இருக்கிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை' என்று சொன்னார்.

 

ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி, இலட்சக்கணக்கில் மனித உயிர்களை இழந்த, நினைவுகளை விட்டு அகலாத தேசப்பிரிவினையில் 
பெரும்பங்கு இந்து மகாசபைக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்த தலைவர்களுக்கும் உண்டு. திரும்பத் திரும்ப பேசுவதால் எந்த உண்மையையும் மறைத்துவிட முடியாது.

 

சரி. ஏன் இப்போது ஜின்னா இவர்களில் சிலருக்குப் புனிதராகிறார்? கடந்த இரண்டு நாட்களாக சிம்லாவில் நடந்து வரும் அவர்களது ‘சிந்தன் பைதக்’ கூட்டத்தில் தீவீரமான இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பதா, இந்துத்துவாவை கொஞ்சம் தளர்த்துவதா என்று அவர்கள் நடத்தி வரும் விவாதத்தில் இதற்கான விடையும் இருக்கிறது. இந்திய முஸ்லீம்களை முழுவதுமாக விரோதிப்பதா, அல்லது அவர்களையும் நெருங்கிப் பர்ப்பதா என்னும் அரசியல் லாபக் கணக்கும் இதற்குள் இருக்கிறது. இன்னும் நிறைய இருக்கிற்து.....  

 

 

ன்னர் செண்பகப்பாண்டியனுக்கு வந்தது போல ஒரு சந்தேகம் நம் நாட்டின் தலைவருக்கு வரவில்லை. நேற்றைய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் “பணவீக்கமே இல்லை. அப்புறம் விலைவாசி ஏன் கடுமையாக கூடுகிறது?’ என்று திருமதி சோனியா காந்தி, ‘புதியப் பொருளாதார’ மேதை மன்மோகன்சிங்கிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். விலைவாசி உயர்வுக்கு வறட்சியைக் காரணம் காட்டியிருக்கிறார் மன்மோகன்சிங். சிறப்பு அழைப்பாளராக(?) கலந்துகொண்ட ப.சிதம்பரம்  “அத்தியாவசிய பொருட்களின் செயற்கை பற்றாக்குறைக்கு காரணமான பதுக்கல், கள்ளச்சந்தையை ஒழிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்று வற்புறுத்தியிருக்கிறார்       (இவர் மத்திய அரசில் இல்லையா?). அடுத்தக் கூட்டத்தில் பணவீக்கம்- விலைவாசி முரண்பாடு குறித்து விவாதிக்கப்படும் என்றாராம் மன்மோகன்சிங். இதற்கு யாராவது காரணம்  தெரிந்தால் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் மூலம் எதாவது விமோசனம் ஏற்படலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.

 

இந்தக் கூட்டத்தில்தான் மத்திய அரசின் வறட்சி நிவாரண நிதிக்கு சம்பளத்தில் 20 சதவீதம் தர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தில் இருபது சதவீதம் எல்லாம் சும்மா! சம்பளம் ஒரு பொருட்டாகவே இல்லாதவர்களிடம் இந்த சதவீதச் சமாச்சாரங்கள் என்ன பெரிய இழப்பாயிருந்து விடும். தியாகம் தியாகந்தான்!

 

வளர்ச்சி, வளர்ச்சி என்று மார்தட்டிக்கொண்டிருந்த அரசே கவலைப்பட்டு புலம்புகிற அளவுக்கு நாடு மிகப்பெரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகிறது. இதோடு வறட்சியும் இந்த வருடம் சேர்ந்து கொண்டு இருக்கிறது. தேசம் குறித்த மிகுந்த கவலையோடும், அக்கறையோடும் யோசிக்க வேண்டிய தருணம் இது.

 

கடந்த இருபது நாட்களில் மட்டும் ஆந்திராவில் 40 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என ஆந்திர முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் இதுபோல் 5 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். வாழ்வதற்கு வகையற்று, வழியற்று உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த சோகத்தை என்னவென்பது? தேச நிலைமை இன்னும்  மோசமாகும்போது......? யோசிக்கவே முடியவில்லை. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்று சொன்ன வள்ளுவருக்குச் சிலை வைத்தால் மட்டும் போதுமா எங்கள் ஆட்சியாளர்களே?

 

ப்படி யோசிப்பதற்கும், உரையாடுவதற்கும், தெளிவதற்கும் இங்கு செய்திகளும் சம்பவங்களுமாய் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளை விட்டு விட்டு நமது ஊடகங்கள் நடிகர் ஷாருக்கானை அமெரிக்க விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததற்கும், காத்திருக்க வைத்ததற்கும் ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. திரும்பி வந்த ஷாருக்கானிடம் சி.என்.என் முதன்மை எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் இந்த விவகாரம் குறித்து பேட்டி கண்டிருக்கிறார்.

 

“உங்களை அவர்கள் விசாரித்த போது, நீங்கள், ‘நான் யார் தெரியுமா?’” என்று அவர்களிடம் கேள்வி கேட்கவில்லையா என சர்தேசாய் ஷாருக்கானிடம் கேட்கிறார். “என்னை யார் என்று நீங்கள் தெரியாமல் இருக்கும்போது அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கு முன் நான் செத்துப்போவேன்” என்று பதில் சொல்கிறார் ஷாருக்கான். மரியாதை ஏற்படுகிறது அவர் மீது.

 

ஷாருக்கானின் பிரச்சினை கூட இங்கு பேசப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அப்துல் கலாமுக்கும், அமைச்சராயிருந்தபோது ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும் இதுபோல அவமானங்கள் நிகழ்ந்த போது இப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென்பதுதான் நான் சொல்ல வருவது.

 

இவை யாவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முக்கியச் செய்தியாயிருப்பது சினேகாவுக்கு  நிகழ்ந்திருக்கிற எஸ்.எம்.எஸ் கொடுமைதான். ஒருவாரமாய் தொடர் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்போதும் படத்தில் சிரித்துக்கொண்டுதானிருக்கிறார் சினேகா!

 

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //“என்னை யார் என்று நீங்கள் தெரியாமல் இருக்கும்போது அப்படி ஒரு கேள்வி கேட்பதற்கு முன் நான் செத்துப்போவேன்” //

    இதையெல்லாம் இந்தியன் படத்திலெயே கவுண்டமணி சொல்லிவிட்டார்..,

    பதிலளிநீக்கு
  2. /
    இவை யாவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முக்கியச் செய்தியாயிருப்பது சினேகாவுக்கு நிகழ்ந்திருக்கிற எஸ்.எம்.எஸ் கொடுமைதான்.
    /

    கொடுமைன்னு நீங்க சொல்லுறீங்க பலவாறா இல்ல செய்தி வருது??
    :)))))))))

    பதிலளிநீக்கு
  3. //பணவீக்கமே இல்லை. அப்புறம் விலைவாசி ஏன் கடுமையாக கூடுகிறது?//

    இப்பொழுதுதான் கேள்வி கேக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள்..

    இவர்களுக்கு விடை கிடைப்பதற்குள்.... நினைக்கவே பயமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுக்களும்,

    விவசாயம் செய்யும் தோழர்கள் குறித்த கவலையும்....

    பதிலளிநீக்கு
  5. இந்திய திரு நாட்டை மூவர் கூட்டணி அதல பாதாளத்தில் தள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.
    ஆம், சோனியா, பொருளாதார மேதை என்று தனக்கு தானே தம்பட்டம் அடிக்கும் உயர் திரு பிரதமர் மற்றும் விவசாய மந்திரி பவார்.

    நேற்று பவார் உணவு தானிய பொருள்களின் உற்பத்தி வெகுவாக குறையும் என்று மிகப்பெரிய ரகசியத்தை கண்டுபிடித்துள்ளார் ( உபாயம் வருண பகவான்). இப்படி நாளிததழ்களில் பேட்டி கொடுத்து காலத்தை கடத்தாமல் அதை சரிக்ட்ட எந்த நாட்டிடம் வாங்கலாம் என்று சிந்தித்து செயல்பட்டு முன்னெச்சரிக்கையாக இருப்பு வைத்து உணவு பொருளுக்கு தட்டுபாடுவராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது ஒரு மந்திரி / அரசின் கடமை. பார்ப்போம் என்ன தான் நடக்கும் என்று.

    பதிலளிநீக்கு
  6. madhavji! i got some translation from sri kashyapanji.your reaction is very quick and spontaneous.how much i wish that such things must come in other indian languages!pl.expose these elements as much as possible.....ranjan sarkar.

    பதிலளிநீக்கு
  7. தீராத பக்கங்கள் - தீர்க்கமான அலசல்!

    //இவை யாவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முக்கியச் செய்தியாயிருப்பது சினேகாவுக்கு நிகழ்ந்திருக்கிற எஸ்.எம்.எஸ் கொடுமைதான். //

    அவ்வ்வ்வ்!

    பதிலளிநீக்கு
  8. சுரேஷ்!
    கவுண்டமணியை யாராவது தெரியாது என்பார்களா! அமெரிக்க விமான நிலையத்தில் இப்படியெல்லாம் அவருக்கு அவமானங்கள் நிகழுமா?

    மங்களூர் சிவா!
    அப்படியா....! தொடந்து நான் படிக்கவில்லையே....


    இரவுப்பறவை!
    //இவர்களுக்கு விடை கிடைப்பதற்குள்.... நினைக்கவே பயமாய் இருக்கிறது..//
    விடை கிடைப்பதற்குள்மக்களும் மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தல் வந்துவிடும்.

    ரோஜா காதலன்!
    நன்றி.


    ஜானிவாக்கர்!
    உண்மை. மிகச்சரியாய் சொன்னீர்கள். ஆனால் நாம் வேடிக்கையாப் பார்ப்பது?


    ரஞ்சன் சர்கார்!
    மிக்க நன்றி.


    வால்பையன்!
    நன்றி.


    சந்தனமுல்லை!
    உங்கள் ‘டிரேட் மார்க்’ கமெண்ட்! நன்றி.

    பதிலளிநீக்கு
  9. //
    அடுத்தக் கூட்டத்தில் பணவீக்கம்- விலைவாசி முரண்பாடு குறித்து விவாதிக்கப்படும் என்றாராம் மன்மோகன்சிங். இதற்கு யாராவது காரணம் தெரிந்தால் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் மூலம் எதாவது விமோசனம் ஏற்படலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
    //

    :-D

    அதைத் தானே அறுபது வருஷமா எதிர்பார்த்திட்டு இருக்காங்க நம்ம மக்கள்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!