நண்பர் முனிஷின் ‘ஐடியாஸ்’ அறைக்கு ஒருமுறை சென்றிருந்த போதுதான் கவனித்தேன். திருமண நிகழ்ச்சியொன்றை பிரிமியரில் எடிட் செய்து கொண்டிருந்தார். ‘காக்க... காக்க’ படத்தின் ‘உயிரின் உயிரே’ ஒலித்துக்கொண்டிருக்க, மரத்தின் பின்னே ஒளிந்திருந்த மணமகன், அருகே வந்த மணமகளின் கண்களை பின்புறமிருந்து மூடினான். வெட்கமும், சிரிப்புமாக அவனது கைகளை விலக்கி, மணமகள் ஸ்லோ மோஷனில் ஓடினாள். ஆற்றங்கரையில் பறவைகள் பறந்தன. மணமகனின் தோளில் சாய்ந்து மணமகள் நடந்தாள். சேலை, சட்டையின் நிறங்கள் வேறு வேறு நிறங்களில் மாறிக்கொண்டிருப்பதாய் மேட்ரக்ஸில் வித்தைகளைச் செய்திருந்தார் முனிஷ். மணமகளை அலாக்காகத் தூக்கி மணமகன் நடந்தான். கால்களை அவள் உதைத்து திமிறியது கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. சட்டென பனிபடர்ந்த மலைகள் வந்தன. காமிரா அப்படியே நகர்ந்து புல்வெளியில் உட்கார்ந்திருந்த இளம் தம்பதியினரை நெருங்கியது. அவளது மடியில் அவன் படுத்துக்கொள்ள, அவள் காமிராவைப் பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தாள்.
ஆச்சரியமாய் இருந்தது. ”என்னது முனிஷ் இதெல்லாம்...” என்றேன். இப்படியும் மக்கள் ஆசைப்படுவதாய் முனிஷ் சொன்னது நம்ப முடியவில்லை. “பொண்ணு கொஞ்சம் வெட்கப்பட்டுச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். இது நாலாவது டேக்” என்று முனிஷ் சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கம்யூட்டர் திரையினையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். “கல்யாணமாகி ஒருவாரம் கழிச்சு இதெல்லாம். பிற்சேர்க்கை. கொடைக்கானலுக்கு நானும் போயிருந்தேன்” என்று அந்த அனுபவம் குறித்து முனிஷ் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.
“விவஸ்தையில்லாம இருக்கே...” என்றேன். “மாதவராஜ் சார், நீங்க எந்த காலத்துல இருக்கீங்க.. சினிமாவுல வர்ற ஹீரோ ஹீரோயின் மாரி அவங்களுக்கும் ஒரு சின்ன ஆசை... இதுல என்ன இருக்கு” என்றார்.
எல்லோருக்குள்ளும் இப்படியான சின்னச் சின்ன சஞ்சலங்கள் இருக்கும் என அடித்துச் சொன்னார். எதையும் புரொபஷனலாகவே பார்க்கிற அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லையென்றாலும் நினைப்பெல்லாம் அந்தக் காட்சிகள் சுற்றியே ஓடிக்கொண்டு இருந்தது.
சினிமாவில்தான் இதுபோன்ற டூயட்கள் சாத்தியம் என்பதும்
நிஜவாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதும் உண்மைகள்தான். ஆனால் சினிமாவின் பிம்பங்கள் மனிதர்களுக்குள் ஏற்படுத்திவிடுகிற அபிலாஷைகளும், அந்தரங்கத்தில் ஏற்படுத்துகிற தாக்கங்களும் யதார்த்த வாழ்வை மீறிய சஞ்சரிப்புகளில் மூழ்க வைக்கின்றனவா? ரகசியம், விவஸ்தை, வெட்கம் எல்லாம் உடைத்து மனிதர்களை உள் இழுக்கின்றனவா? இந்தக் காலம் அதை நோக்கித்தான் நகர்கிறதா?
இப்படியான ரசனைகளை ஒளித்து வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்களா? குழப்பங்களோடு இருந்தபோதுதான் எனக்கு கௌதலைமுத்துவின் ஞாபகம் வந்தது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊர் மைனர்தான் கௌதலைமுத்து. ஐந்தோ, ஆறோ படித்துவிட்டு விவசாயம் செய்துகொண்டு இருந்தாலும் சாயங்காலம் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கடைப்பக்கம் வந்து நிற்பான். கூலிங்கிளாஸ் வேற. “லூஸூ”, “பைத்தியம்”, “மெண்டல்” என ஒரே அர்த்தத்தோடு கூடிய வார்த்தைகளை அவரவர்கள் வைத்திருந்தார்கள் அவனைப்பற்றி. ஊரேக் கிடந்து சிரித்தாலும் கவலைப்படாமல், சொடக்கு விட்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருப்பான். தாவணிகளைப் பார்த்தவுடன் கண்களில் செயற்கையாய் ஒரு காந்தம் வரும்.
பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வந்துவிட்டால் கௌதலைமுத்துவுக்கு களைகட்டிவிடும். ஊருக்குள் வசூல் செய்து, மீதப் பணத்தை அவனேப் போட்டு நாடகம் போடுவான். ‘நவரசத் திலகம்’ கௌதம்’ நடிக்கும் ‘காலங்களில் அவள் வசந்தம்’என்ற நாடகம் திரையிடப்படும் என போஸ்டர்கள் பக்கத்து ஊர்களில் கூட ஓட்டப்படும். திருச்செந்தூர், திருநெல்வேலியிலிருந்து நாடக நடிகைகளைக் கொண்டு வருவான். என்ன கதை, என்ன வசனம் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த நடிகைகளோடு கனவு, நனவு என பல சந்தர்ப்பங்களாக ”அழகிய தமிழ் மகன் இவன்”, “இன்பமே உந்தன் பேர் வள்ளலோ” என ஏழெட்டுப் பாடல்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா என நிற வெளிச்சங்கள் வெட்ட ஆடி மகிழ்வான். அந்தப் பெண்கள் இந்தக் கோமாளித்தனங்களை எல்லாம் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஆடுவார்கள். சட்டை மேல் சட்டை போட்டுக்கொண்டு, இடையிடையே திரைக்குப் பின்னால் சென்று ஒவ்வொன்றாய் கழற்றி வந்து ஆட, விசில் சத்தம் பறக்கும். எம்.ஜி.ஆர் போல பிரத்யேகமானப் பிடிகள் பெரும் ஆரவாரத்தை எழுப்பும். ஒருதடவை ஏடாகூடமாய் எங்கோ கைவைக்க, அந்த நடிகை அவனைப் பிடித்து தள்ளிவிட்டு ஆடமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். அதுவேறு கதை.
அந்த சமயங்களில் ஊரில் பல இளவட்டங்களுக்கு தாங்களும் அதுபோல ஆடமுடியவில்லையே என வருத்தங்கள் உண்டு என்பது தெரியும். வெளியே கௌதலைமுத்துவைக் கிண்டல் செய்து கொண்டாலும் அந்த நடிகைகளோடு அவன் ஆடும்போது அவர்கள் கண்களில் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்தன.
ஒருவருடத்திற்கு முன்பு கௌதலைமுத்துவைப் பார்த்தேன். நரைவிழுந்து, தொப்பையோடு ஒரு பனியன் போட்டுக்கொண்டு வீட்டின் முன்னே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டார். இரண்டு பையன்கள் சென்னையில் எதோ கடைகள் வைத்திருக்கிறார்களாம். பேசிக்கொண்டு இருக்கும்போது பழைய கதைகளை, நாடகங்களை ஞாபகப்படுத்தினேன். “அட... நீ ஒண்ணு... சும்மாயிருப்பா..” என்று வெட்கப்பட்டார். ஆச்சரியமாய் இருந்தது.
கௌதலைமுத்துவின் அந்த வெட்கமும், கூச்சமும் நினைவுக்கு வந்தன. குழப்பமில்லாமல் மெல்ல புன்னகைக்க ஆரம்பித்தேன். முனிஷுக்கு இது புரியாது.
*
:-))) முன்பெல்லாம் போட்டோ எடுத்து பேக்ரவுண்டில் பாடலை பாட விட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது டூயட்டுமே வந்துவிட்டது..ரீசண்டாக நான் பார்த்தது, சுப்ரமணியபுரம் பட பாடலுக்கு நடித்த பொண்னு மாப்பிள்ளை விடீயோ! :-)) குதிரை வண்டிக்குப் பதில் சுமோவில் அந்த பெண் மணமகனை போ போ வென சொல்லி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார்!!
பதிலளிநீக்குசூப்பர்!
பதிலளிநீக்குஒரு டான்ஸ் போட்டுற வேண்டியதுதான்
:))))))))))))
:-))))) super post!
பதிலளிநீக்குசிரிச்சுச் சிரிச்சு... முடியல..
அங்கிள்! நைஸா அந்த விடியோவைச் சுட்டுட்டு வாங்களேன். பார்க்கணும்!
மாதவராஜ் சார் ஏன் சார் சிரிப்பா இருக்கா
பதிலளிநீக்குஏன் அதுமாதிரி அவங்க புதுமையா இருக்ககூடாதா?
நல்ல ஐடியாவா இருக்கு நானும் கல்யாணம் பண்ணிட்டு இது மாதிரி வீடியோ பண்ணலாம்ன்னு இருக்கேன்
நன்றி சார்
hahaha...நல்லவேளை டூயட்டோட நிறுத்திகிடட்டும்..
பதிலளிநீக்குசினிமா வேறு நிஜம் வேறு என தெரியாமல் இன்னும் கனாக்காணும் இளசுகளும் ..கள்ள மனசுகளும் இருகின்றன . பதிவு நன்றாக் இருக்கின்றது . தொடருங்கள்.
பதிலளிநீக்குஹா ஹா ஹா!
பதிலளிநீக்குகல்யாணத்தப்போ நம்ம ஊரு போட்டோகிராபர், வீடியோகிராபர் பண்ணுகிற அட்டகாசம், வர வர தாங்க முடியல!
முனிஷைப் பற்றி என்
பதிலளிநீக்குகல்யாணத்திற்கு முன்னாலே சொல்லியிருந்தால் ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கும்....ஹும்..இப்ப சொல்லி...சரி விடுங்க..
//ஒருவருடத்திற்கு முன்பு கௌதலைமுத்துவைப் பார்த்தேன். நரைவிழுந்து, தொப்பையோடு ஒரு பனியன் போட்டுக்கொண்டு வீட்டின் முன்னே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டார். இரண்டு பையன்கள் சென்னையில் எதோ கடைகள் வைத்திருக்கிறார்களாம். பேசிக்கொண்டு இருக்கும்போது பழைய கதைகளை, நாடகங்களை ஞாபகப்படுத்தினேன். “அட... நீ ஒண்ணு... சும்மாயிருப்பா..” என்று வெட்கப்பட்டார். ஆச்சரியமாய் இருந்தது//
கௌதலைமுத்துவின் லொள்ளு தனத்தை எழுதும் போது எதோ உள்ளார்ந்த கடுப்பு உள்ளது போல் தெரிகிறதே....இல்லையென்றால் இத்தனை வருடங்கள் கழித்து போய் அவரை நொண்டி இருப்பீர்களா...?
சூப்பரான...ஜாலியான...லொள்ளுத்தனமான..
பதிவு...
சந்தனமுல்லை!
பதிலளிநீக்குநீங்களும் பார்த்திருக்கிறீர்களா....!
//குதிரை வண்டிக்குப் பதில் சுமோவில் அந்த பெண் மணமகனை போ போ வென சொல்லி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார்!//
கற்பனை செய்து பார்க்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது....!!!
மங்களூர் சிவா!
யாரோடு...?
தீபா!
அந்த சி.டி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அதற்கென்ன..?புதிதாக வேறு சி.டிக்கள் அவர் நிரைய எடிட் செய்துகொண்டுதான் இருப்பார்...
பிரியமுடன் வசந்த்!
அட்ரஸ் வேணுமா?
வண்ணத்துப்பூச்சியார்!
டேஞ்சரான ஆள்தான் நீங்க...
:-)))
நிலாமதி!
நன்றி.
ஜோ!
ஆமாங்க.... நம்ம மக்களுடைய ஆசைகளும் தாங்க முடியலத்தான்.
அண்டோ!
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. முனிஷ் நம்ம பிரண்ட்தான். சொல்லிக்கலாம்.
/
பதிலளிநீக்குமங்களூர் சிவா!
யாரோடு...?
/
ஆஹா குடும்பத்துல குழப்பம் வரவைச்சிடுவீங்க போலிருக்கே :)))))))))
“பொண்ணு கொஞ்சம் வெட்கப்பட்டுச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். இது நாலாவது டேக்” என்று முனிஷ் சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார். நான் கம்யூட்டர் திரையினையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். “கல்யாணமாகி ஒருவாரம் கழிச்சு இதெல்லாம். பிற்சேர்க்கை. கொடைக்கானலுக்கு நானும் போயிருந்தேன்” என்று அந்த அனுபவம் குறித்து முனிஷ் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.
பதிலளிநீக்குமக்களிடம் சினிமா மற்றும் சின்னத்திரையின் தாக்கம் இந்த அளவிற்கு சென்றுள்ளது சமூகம் மிகவும்
கீழே
கீழே போய்க்கொண்டிருக்கிறதே... ...