குழந்தைகளின் கனவுப் பள்ளி!

ரிக்சாக்காரர் வந்து வெளியே பெல் அடிக்கிறார். உள்ளே வீடே அந்த நேரம் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சில வினாடிகளில் யூனிபார்ம் அணிந்து, டை கட்டி, ஷூக்கள் மாட்டி அந்த சின்னப் பையன் வெளியே வருகிறான். அவனைப் போலவே ஏராளமானவர்கள் ரிக்ஷாவில் நிறைந்திருக்கிறார்கள். ரிக்ஷா புறப்படுகிறது. உள்ளே இருந்து அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அடித்துப் பிடித்து வெளியே ஓடி வருகிறார்கள். "சதீஷ்...ரைனோசெரஸ் ஸ்பெல்லிங் சொல்லு". அவன் முழிக்கிறான். "அம்மா உடுங்கம்மா.." ரிக்சாக்காரர் பையனைக் காப்பாற்றி வேகமாக சைக்கிள் அழுத்துகிறார். கல்யாணமான புதிதில் இதை பார்த்த போது ஒரே ஒரு சங்கல்பம் மட்டும் இருந்தது. நம் குழந்தைகளை இப்படி போட்டு இம்சை செய்யக் கூடாது. நன்றாக படிக்க வேண்டும் என்பதை அவர்களே புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அவர்களை காயப்படுத்தாமல் எதாவது செய்ய முடிந்தால் அதுவே போதுமானது.

"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே" ஏசுநாதரின் பிரசித்தி பெற்ற வரிகள் இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக் குழந்தைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. குழந்தையைப் போட்டு கல்வி நசுக்குவதும் அவர்கள் கூன் விழுந்து போவதும் கண்ணெதிரே காட்சிகளாகின்றன. "குண்டூசியால் குத்தப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைப் போல இன்றைய பள்ளிக்கூடங்களில் பெஞ்சுகளோடு ஆணிகளால் அறையப்பட்டு இருக்கின்றனர் குழந்தைகள்."இத்தாலிய முதல் பெண் மருத்துவரான மேரியா மாண்டிசோரி இப்படி வருத்தப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அவர்கள் ஆணிகளால் அறையப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சிரித்துக் கொண்டே பள்ளிக்குள் நுழைகிற குழந்தைகளை போன வாரத்துக்கு நான் பார்த்ததே இல்லை. தோழர்.கிருஷ்ணன் தங்கள் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் நடத்துகிற பள்ளியை பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாய் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். பட்டுக்கோட்டையிலிருந்து பத்து நிமிட தூரத்தில் குறிச்சி என்னும் அந்த சிறிய ஊர். பிரதான சாலையிலிருந்து இளம் செம்மண் பாதை ஒன்று நீள அந்தச் சின்னக் கட்டிடம். குழந்தைகளின் உற்சாகமான குரல்களில் மிதந்தபடி இருந்தது. தோழர். தனபாலை நோக்கி ஓடி வந்து குழந்தைகள் அப்பிக் கொள்கின்றன. ஒரு குழந்தை தாவி மேலே ஏறிக்கொள்கிறது. இந்த 'கரஸ்பாண்டெட்' என்கிற வார்த்தை ஒரு மாதிரி பயமுறுத்துகிற, கண்டிப்பான உருவமாய்த்தான் சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. அவர் வந்தால் மொத்த பள்ளியுமே அமைதியாகும். 'கரஸ்பாண்டெட்...கரஸ்பாண்டெட்' என்று வகுப்புக்கு வகுப்பு முணுமுணுப்புகள் கேட்கும். தோழர்.தனபால், கரஸ்பாண்டெட்டாக இல்லாமல் உண்மையிலேயே தாளாளராகத்தான் இருந்திருக்கிறார்.

குழந்தைகள் வரிசை வரிசையாய் அப்படியே உட்கார்ந்திராமல் அங்கங்கே தனித்தனியாய், ஒன்றிரண்டு பேராய் தங்கள் இஷ்டத்துக்கு உட்கார்ந்து இருந்தார்கள். எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு எதிரே, வெளியே நீண்டிருந்த வராண்டாவின் சின்னச் சுவர் முழுவதும் கருப்பு வண்ணத்தில் இருக்க சில குழந்தைகள் அங்கே உட்கார்ந்து அவர்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு குழந்தைகள் பல வண்ணங்களில் நிறைந்திருந்த பாசிகளை நூல்களில் கோர்த்துக் கொண்டிருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எழுதப்பட்டிருந்த அட்டையை தரையில் விரித்து ஒவ்வொன்றுக்கும் அருகே அந்த எண்களுக்கேற்ற சிறுகற்களை கூறு கூறாய் வைத்துக் கொண்டிருந்தனர். காலியான நூல் கண்டுகளை கை விரல்களில் நுழைத்து எண்ணிக் கொண்டிருந்தனர். ஒரு டப்பாவில் நிறைந்திருந்த மணலில் இருந்து பொடி பொடி கற்களை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தனர். சுவரில்  Racing  to Learn என்று ஒரு அழகான படம் தொங்கிக் கொண்டிருந்தது.

'இவன்தான் யாசிக்' என்றார் தனபால். கையில் காகிதத்தில் செய்திருந்த காற்றாடியை காற்றின் திசையில் வைத்து சுற்றுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன். முந்திய இரவு தனபால் அவர்களின் வீட்டில் தங்கிய போது அவர் இந்தப் பள்ளியை பற்றி விவரித்த போது அதில் யாசிக்கும் வந்திருந்தான். இவன் பள்ளியில் சேர்ந்த போது மிகுந்த கோபக்காரனாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தானாம். சக குழந்தைகளை அடித்து விடுவானாம். டீச்சர்கள் பொறுமையிழந்து இவனை அடித்து அடக்கா விட்டால் அடங்க மாட்டான் என சொன்னார்களாம். அவன் பெற்றோர்களுமே 'நல்லா அடிங்க... அப்பத்தான் திருந்துவான்' என்று எரிந்து விழுந்தார்களாம். பிரம்பு என்கிற அதிகாரத்தின், அடக்குமுறையின் அடையாளம் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பொறுமையாக அவனது நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அவனுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டனவாம். தினமும் சோடா பாட்டில் மூடிகளை அவனிடம் கொடுத்து ஆணியையும் சுத்தியலையும் கொடுத்து அவைகளில் ஒட்டை போடச் சொன்னார்களாம். அவன் ஆர்வமாய் செய்தானாம். அவன் கோபத்திற்கான வடிகாலாய் அந்தப் பயிற்சி இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அவனது பெற்றோர்களையும் மாறி மாறி சந்தித்து அவனை வீட்டில் கூட அடிக்காதிர்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேறு வேறு பயிற்சிகளில் அவனை மூழ்க வைத்திருக்கிறார்கள். சில மாதங்களில் அவனிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இன்று எல்லோரிடமும் இயல்பாய் இருக்கிறானாம். சுற்றிய காற்றாடியை கைகளால் பிடித்து நிறுத்தினேன். அண்ணாந்து பார்த்து சிரித்துக் கொண்டே 'கரண்ட் போச்சு' என சிரித்தான்.

"டீச்சர் நான் எழுதியதை பார்க்க வாங்க" என யூ.கே.ஜி டீச்சரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. பத்து பத்தாய் குச்சிகளை அடுக்கி கட்டி கட்டி வைத்துக் கொண்டிருந்தான் ஆசீர்வாதம். இன்னொரு வகுப்பில் பாரதி என்கிற சிறு பையன் உட்கார்ந்து கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு அந்த வேலை பிடித்திருக்கிறதாம். மனதை ஒருமுகப்படுத்த இந்தக் காரியங்கள் உதவும் என்று சொன்னார்கள். ஒன்றாம் வகுப்பில் இரண்டு மூன்று குழந்தைகளிடம் 'ஷட் அப்' என்று சொல்லிப் பார்த்தேன். அசைவற்று என்னைப் பார்த்தார்கள். எனக்கு என் பையன் நிகில்குமாரின் பரிதாபமான முகம் வந்து கஷ்டப்படுத்தியது. எல்.கே.ஜியில் சேருகிற வரையில் அவன் வீட்டில் அட்டகாசங்கள் பண்ணிக் கொண்டிருந்தான். எந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தாலும் இரண்டே நாளில் அதை துவம்சம் செய்து விடுவான். கம்ப்யூட்டரை ஆன் பண்ணி விடுவான். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறேன் என்று உதைத்துக் கொண்டிருப்பான். புத்தகங்களை கிழித்து விடுவான். அடங்கவே மாட்டான். பள்ளியில் சேர்ந்த சரியாக இரண்டாவது நாள் காலையில் மிக்ஸியை போடும் போது அருகில் போய் அதை தட்டிக் கொண்டிருந்தான்.  என் மூத்த மகள் "நிகில்.. ஸிட் டவுன்..ஷட் அப்" என்று ஒரு அதட்டல் போட்டாள். அவ்வளவுதான். அப்படியே அதே இடத்தில் சட்டென்று உட்கார்ந்து கையைக் கட்டி வாயை பொத்திக் கொண்டான். தாங்கவே முடியவில்லை. வாரியணைத்துக் கொண்டேன். இரண்டே நாட்களில் அந்தப் பள்ளி அவனை அடக்கி ஒடுக்கியிருந்தது. இங்கே பள்ளியில் குழந்தைகள் பறவைகளைப் போல இருந்தார்கள்.

கொஞ்சம் தூரத்தில் ஆறிலிருந்து ஒன்பது வரைக்கும் வகுப்புகளுக்கு தனியே கட்டிடம் இருந்தது. அதைப் பார்க்க சென்றோம். இங்கே படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் வேறு பள்ளியில் படித்தவர்கள். அதனால் எங்கள் கல்வி முறையோடு அவர்களுக்கு பெரிய சம்பந்தம் இருக்காது. பள்ளி ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆவதால் இப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே எங்கள் கல்வி முறையில் முழுமையாக வளர்ந்தவர்களாக இருப்பார்கள்" என்றார் தனபால். தரையில் சாக்பீஸால் நீள்வட்ட பாதைகள் வரையப்பட்டு பல வண்ணங்களில், பல அளவுகளில் பந்துகள் சூரியக் குடும்பமாய் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அதன் அருகில் நின்று விளக்கங்களையும், சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மதிய உணவுக்கான வேளை நெருங்கும் போது தனபாலிடம் விடை பெற்று கிளம்ப ஆரம்பித்தோம். அந்த மூன்று மணி நேரத்தில் அந்நியோன்யமாய் பழகிய குழந்தைகள் டாடா சொல்லின. ஆதிமூலமும், பாலகீர்த்தனவும் பிரியத்தோடு கையைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். யூ.கே.ஜி டீச்சர் தன்னருகில் குழந்தைகளை உட்கார வைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். மைதானத்தில் பெரிய பெரிய டயர்களை மணலில் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெயில் இல்லாமல் இதமான காற்று அதிராம்பட்டினக் கடற்கரையிலிருந்து வீசிக்கொண்டிருந்தது."ஓய்வில்லாத கடல் பேரிரைச்சல் இடுகிறது. எல்லையற்ற வார்த்தைகளின் கடற்கரையில் குழந்தைகள் ஆரவாரத்துடன் சந்திக்கின்றனர்." மகாகவி தாகூரின் குழந்தைகள் இவர்கள்.

பஸ்ஸில் ஏறி இரவு வீடு வந்து சேருகிற வரையில் பள்ளியின் நினைவாகவே இருந்தது. சுவர்கள், தளம் எதுவும் பூசப்படாமல் அந்தப் பள்ளி செங்கற்சுவர்களாகவே இருந்தது. ஆனால்  உயிர்த்துடிப்போடு இருந்தது. அடுத்த நாள் காலையில் நிகில்குமாரை பள்ளியில் கொண்டுவிடச் சென்றேன். பிரமாதமான கட்டிடங்களுடன் பெரிதாய் நின்றிருந்தது. பள்ளிக்குள் செல்லவே பிடிக்காமல் திரும்பி திரும்பி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றான். 'அப்பா என்னக் காப்பாத்துப்பா" அவன் குரலற்ற அழைப்பு எனக்குள் தவிப்பை ஏற்படுத்தியது. இது என் குழந்தைக்கான பள்ளி அல்ல. அது குறிச்சியில் இருக்கிறது.

பின் குறிப்பு:

இது ஒரு மீள் பதிவு.

நான் அந்தப் பள்ளிக்கு சென்று வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது அந்தப் பள்ளியைப் பற்றி இன்றுவரை தோழர்கள் வேணுகோபால் அவர்களும், தோழர்.கிருஷ்ணன் அவர்களும் எதாவது ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். போனவருடத்திற்கு முந்தைய வருடம்தான் அந்தப் பள்ளியிலிருந்து மாணவர்கள் முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். 97சதவீதம் தேர்ச்சி, முதல் மதிப்பெண் 463. சென்ற வருடம் 100 சதவீதம் தேர்ச்சி, முதல் மதிப்பெண் 463. இந்த வருடம் 100 சதவீதம் தேர்ச்சி, 475 முதல் மதிப்பெண்.

மிகக் குறைந்த கட்டணம் பெற்று, சுற்றுவட்டாரத்தில் உள்ள எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வியை, அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் தருவதற்கான பெருமுயற்சியில் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது குறிச்சியில் அந்தப் பள்ளி. வெறும் பந்தயக்குதிரைகளாய் குழந்தைகளை உருவாக்காமல், குழந்தைகள் ‘குதிரை கொண்டேறித் திரியுமோர் உள்ளம் படைத்திட’ பள்ளியை நடத்தும் இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு இருக்கிறது.

முடிந்தால், இயன்றால் தாங்களும் இந்த முயற்சிக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ibea_tn@hotmail.com ,
sv.venu@gmail.com

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //ரைனோசெரஸ்//

  அப்படினா என்ன?
  நான் ஒன்பதாவது படிக்கிற வரைக்கும் ஒருக்கா கூட கேள்வி பட்டதில்லையே!

  பதிலளிநீக்கு
 2. வால் பையன்!
  காண்டா மிருகமுங்க...

  பதிலளிநீக்கு
 3. ஏற்கெனவே வாசித்திருக்கிறேன் என்றாலும் அவசியமான மீள் இடுகை! தொடரட்டும் பள்ளியின் பணி!

  பதிலளிநீக்கு
 4. குழந்தைகள் மட்டுமல்ல எல்லோருடைய கனவுப் பள்ளியும்தான்!!!

  பதிலளிநீக்கு
 5. மீள் பதிவை முன்னற் படிக்கவில்லை.
  அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

  பதிலளிநீக்கு
 6. இப்படியான பள்ளியை உருவாக்கி சாதித்தும் காட்டியிருக்கிறார்கள் என்பது நிறைவாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 7. Your post reminds me of a story by Tagore - totar kahini - i think parents play a big role in choosing the school - there are lots and lots of options in the form of alternative education. These schools (learning environments) are available in all the cities. By the way, did you pull your son out of that school !

  பதிலளிநீக்கு
 8. சராசரி பள்ளியாக இல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கு உதவுகிற இந்த 'மாதிரி பள்ளி'கள்தான் இப்போதைய தேவை! அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மீள் பதிவிட்ட தங்களுக்கும்!

  பதிலளிநீக்கு
 9. இப்போதுதான் முதல்முறை வாசிக்கிறேன். நல்ல பதிவு, நல்ல அறிமுகம்.

  பதிலளிநீக்கு
 10. வால்பையன்!
  சந்தனமுல்லை!
  அன்புடன் அருணா!
  முத்துராமலிங்கம்!
  கையேடு!
  குடந்தை அன்புமணி!
  மங்களூர் சிவா!

  அனைவருக்கும் நன்றி.

  அனானி!
  என் மகனை அந்தப் பள்ளியிலிருந்து மீட்க முடியவில்லை. என் துணைவியார் அங்குதான் பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள் அப்போது.

  பதிலளிநீக்கு
 11. குறிச்சியிலுள்ள அற்புதமான பள்ளியைப் பற்றிய தங்களின் மீள்பதிவிற்கு நன்றி! முதல் வருடத்திலிருந்தே பள்ளியின் தேர்ச்சி சதவீதம் ஆச்சரியப்பட வைக்கிறது. யாசிக் மனமாற்றமடைய உதவி செய்த பள்ளியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் நன்றிக்குரியவர்கள். குழந்தைகளை வன்முறைக்கு உட்படுத்தாமல் அவர்களின் போக்கிலேயே படிக்க வைக்கும் இது போன்ற பள்ளிகள் பெருகட்டும். தாங்கள் ”டோமோயி” எனும் ஜப்பானியப் பள்ளியைப் பற்றிய நினைவுகளைச் சொல்லும் டெட்சுகோ குரோயாநாகியின், "டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி" (நேஷனல் புக் டிரஸ்ட) புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!