நேர்மையின் துணிவோடு வெளிப்பட்டிருக்கும் இந்தக் கவிதை சென்ற மாதம் 31ம் தேதி காலமாகிவிட்ட- அற்புதமான படைப்பாளி கமலாதாஸிடமிருந்து பிறந்த வரிகள். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வேதனையோடு தன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பதிவில் இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார். நண்பர். எஸ்.வி.வி வேணுகோபாலன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.
அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்
முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்
சொல்வது போல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்,
ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.
என்னை ஏன் தனிமையில் விடக் கூடாது,
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே,
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்,
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்
நான் பேசுகிற மொழி எனதாகிறது,
அதன் பிறழ்வுகள், அசாதாரண பிரயோகங்கள்
எல்லாம் என்னுடையவை, என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம், அரை இந்தியம். ஒருவேளை
நகைப்புக்குரியதும் கூட. ஆனாலும் அது நேர்மையானது.
உங்களால் பார்க்கமுடியவில்லையா,
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ அவ்வளவு
மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல.
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல.
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் -
பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில்
நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள்
தள்ளிவிட்டுக் கதவைச் சார்த்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற எனது பெண் மேனி அடி வாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும் அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்,
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்,
சேலைகளை அணி, பெண்ணாய் இலட்சணமாய் இரு, மனைவியாய் இரு.
தையல் வேலையைச் செய்துகொண்டிரு, சமையல்காரியாய் இரு,
சண்டை போட்டுக் கொண்டிரு வேலையாட்களுடன்,
பொருந்தி இரு, ஓ, ஒட்டிக் கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே, மெலிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியே பார்க்காதே.
ஆமியாய் இரு. கமாலாவாக இரு.
மாதவிக்குட்டியாக இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்து கொள்ள
ஒரு பாத்திரத்தை முடிவு செய்து கொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுகள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின் போது
சங்கடப்படுத்தும்படி ஓவென்று இரையாதே..........
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டுமழைக்க வேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும்
எந்த ஒரு ஆண்தான் அவன்
காதலை நாடும்
எந்த ஒரு பெண் போலான என்னைப் போலவே
அவனுள்.........நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்.
என்னுள்........... சமுத்திரங்களின் சளைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்
யார் நீ ?
அது நானே என்பதே விடை.
எங்கும், எல்லா இடங்களிலும்
காண்கிறேன் தன்னை நான் என்று அழைத்துக் கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான் இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான் தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான் தான்.
பிறகு, வெட்கத்திலாழ்ந்து
செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்,
வஞ்சிக்கப்படுபவளும்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்
எனக்குமில்லை
உங்களுக்கற்ற வலிகள் எதுவும்
எனக்குமில்லை
நானும் அழைத்துக் கொள்கிறேன் என்னை
நான் என்று.
எல்லாவற்றையும் இந்தக் கவிதை சொல்லிக்கொண்டே இருக்கிறது. மீள முடியவில்லை....
*
எல்லாவற்றையும் இந்தக் கவிதை சொல்லிக்கொண்டே இருக்கிறது. மீள முடியவில்லை...
பதிலளிநீக்கு(repeatuuuuuuuuuuuu)
கமலாதாஸுக்கு
பதிலளிநீக்குஒரு அர்த்தமுள்ள அஞ்சலி.
அருமை தோழா.
//நேர்மையின் துணிவோடு வெளிப்பட்டிருக்கும் இந்தக் கவிதை //
பதிலளிநீக்குகவிதையை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல..
அற்புதமான மொழிபெயர்ப்பு.
பதிலளிநீக்குகவிதையின் உயிரோட்டம் அப்படியே இருக்கிறது.
தமிழாக்கம் என்றால் எப்ப்டி இருக்க வேண்டுன்ம் என்று நிறைய நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி திரு. வேணுகோபால் அவர்களுக்கும் உங்களுக்கும்.
நிஜம் தான் மீள வெகுநேரமானது.
பதிலளிநீக்குநல்ல கவிஞர், நல்ல மனிஷி போல. உயிருடன் இருந்த பொது தெரியாமல் பொய் விட்டேன்.
பதிலளிநீக்குஒரு முறை நேரில் பார்த்து பேசி இருந்து இருக்கலாம் என்ற ஏக்கம் இப்போது ஏற்படுகிறது.
குப்பன்_யாஹூ
மயாதி!
பதிலளிநீக்குநன்றி.
காமராஜ்!
மிக்க நன்றி தோழனே!
தீப்பெட்டி!
கவிதையை மொழி பெயர்த்துத் தந்த வேணுகோபாலனுக்குத்தான் சிறப்பு.
தீபா!
பதிலளிநீக்குநன்றி. உன் மொழிபெயர்ப்பும் அருமையாகவே இருந்தது.
விழியன்!
நாமெல்லாம் மனிதர்கள்தானே... மீளமுடியாமல் இருப்பது அதற்கான அடையாளமே.
குப்பன் யாஹூ!
ஆமாம். எனக்கும் அப்படித் தோன்றியது1
மாதவிக்குட்டி அவர்களின் கதைகளை வாசித்திருக்கிறேன், அவர் கவிதையின் மொழிபெயர்ப்பைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, கமலாதாஸ் அவர்களுக்கு அஞ்சலி.
பதிலளிநீக்குதமிழ், கமலதாசைப்பற்றி ஏற்கனவே நீங்கள் பேசியவை இப்போது மீண்டும் நெஞ்சில் நிழலாடுகிறது. ஒரு முறையாவது நமது த.மு.எ.ச.படைப்பாளிகளோடு பேச அழைத்திருக்கலாமே. அவரை முழுமையாய் உணர்ந்து கொள்ள உதவிய வேணுகோபாலுக்கும் நன்றிகள் ..
பதிலளிநீக்கு