முதல் பெண் சபாநாயகர் - சந்தோஷமும், வருத்தங்களும்

மிக முக்கியமான ஒரு செய்தியாக இன்று  பேசப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண், மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு தலித் என்பது இந்த நிகழ்வை மேலும் சந்தோஷத்துடன் உற்று நோக்க வைத்திருக்கிறது. ஆரவாரத்துடன் கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் கண்முன்னே நாம் பார்க்கும் யதார்த்தங்கள் கசப்பானவை. அவை உண்மையானவை.

சபாநாயகர் பெயருக்கு மாண்புமிகு மீராகுமார் அவர்கள் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்த கருத்தோடு, மக்களவையின் இந்த நடவடிக்கையில் சேர்ந்து நின்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், இதேபோல் ஒன்றுபட்டு நின்று பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்ற முன் வருவார்களா? இல்லையென்பதுதான் கடந்தகாலத்தின் வருத்தமான வரலாறு. அணுசக்தி உடன்பாட்டிற்காக, அத்தனை சித்துவேலைகளும் செய்து, மக்களவையில் பெரும்பான்மை திரட்டிய காங்கிரஸ், மகளிர் சக்திக்காக திறந்த மனதுடன் என்ன காரியம் ஆற்றியிருக்கிறது? அந்தத் தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் மட்டும், கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நவக்கிரகங்களாய் திரும்பிய வண்ணம் காட்சியளிக்கின்றன.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்களில் நின்று வெற்றி பெறும் மகளிரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது இன்னொரு வருத்தமான சங்கதி. பஞ்சாயத்துத் தலைவர் என்று போர்டுகளில் அவரது பெயர் இருக்கும். ஆவணங்களில் அவரது கையெழுத்து இருக்கும். ஆனால் அவர் வழக்கம்போல் அடுப்பங்கரையிலேயே இருப்பார். அவரது கணவர்தான் எல்லாம். சகலத்துக்கும் அவரே ஆஜர். பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் முதல் நாள் உட்கார்ந்துவிட்டு, பிறகு நிரந்தரமாக தன் கணவருக்கு வழிவிட்டுச் செல்கிற அவலம்தான் பெண்களுக்கு இருக்கிறது. தலிதகள் நிலைமை இதைவிட மோசம். சொல்லவே முடியாது.

இப்படியாக, இந்த தேசத்தில்- இந்திய ஜனநாயகத்தில்- ஒரு பெண் ஜனாதிபதியாக வரமுடிவதும், சபாநாயகராக வர முடிவதும் சாத்தியம். ஆனால் அதிகாரம் பற்றி மட்டும் பேச முடியாது. ஜனநாயகம் என்னும் மூகமுடியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நடக்கும் சில ஏற்பாடுகளாகவே இந்நிகழ்வுகள் அமைகின்றன. இந்த லட்சணத்தில் ‘மிஸ்டர் சபாநாயகர்’ என்றும் ‘மேடம் சபாநாயகர்’ என்ற விவாதங்களையே இங்கு பெரிதாக ஊதிக்கொண்டு இருப்பார்கள்.

நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த தூரத்தைச் சொல்லும் மைல்கற்கள் இந்தப் பதவிகள் கிடையாது. அவை நம் கண்முன்னே தினமும் காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றைக் காணாமல் கூட்டம் கூட்டமாய் கடந்து போய்க் கொண்டு இருக்கிறோம். காட்சிப்பிழை.

*

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //பஞ்சாயத்துத் தலைவர் என்று போர்டுகளில் அவரது பெயர் இருக்கும். ஆவணங்களில் அவரது கையெழுத்து இருக்கும். ஆனால் அவர் வழக்கம்போல் அடுப்பங்கரையிலேயே இருப்பார். அவரது கணவர்தான் எல்லாம். சகலத்துக்கும் அவரே ஆஜர்.//

    ஒதுக்கீடு மூலம் உரிமைகளை பெறுவது பல சமயங்களில் இவ்வாறே முடிய வாய்ப்பிருக்கிறது . பிறர் என்ன ஒதுக்குவது?தகுதியான பெண்கள் தாமாகவே அரசியலில் ஈடுபட்டு அவர்களே வென்று வருவதே இதற்கு தகுந்த வழி. ஜெயலலிதா , மாயாவதி , சுஷ்மா சுவராஜ் போன்று என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  2. //பஞ்சாயத்துத் தலைவர் என்று போர்டுகளில் அவரது பெயர் இருக்கும். ஆவணங்களில் அவரது கையெழுத்து இருக்கும். ஆனால் அவர் வழக்கம்போல் அடுப்பங்கரையிலேயே இருப்பார். அவரது கணவர்தான் எல்லாம்//

    இப்படிதான் நடக்குதா நாட்டுல....
    வாழ்க ஜனநாகம் ..ச்சீ நாயகம்.

    உங்கள் பாரவையிலிருந்து சில விசயங்களை உண்மைக்கு அருகிலிருந்து அறியமுடிகின்றது.

    பதிலளிநீக்கு
  3. மகளீர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி அதை நிறைவேறவிடாமல் தடுத்த
    ‘செக்யுலர்' கட்சிகளின் பெயர்களை
    குறிப்பிடுவதில் என்ன தயக்கம்.நீங்கள்
    வெறுக்கும் பாஜக தடையாக இல்லை.
    உங்கள் நட்பு சக்திகளான ‘செக்யுலர்' கட்சிகள்தான் முட்டுக்கட்டை.சிபிஎம்,
    மற்றும் இந்த ‘செக்யுலர்' கட்சிகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை
    -முஸ்லீம் ஒட்டுவங்கிக்காக அவர்களை தாஜா செய்வது.

    சிபிஎம் மில் பெண்கள் நிலை என்ன?.
    கட்சிப்பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா?. ஒரு கெளரியோ அல்லது சுசீலா கோபாலனோ கேரளாவில் ஏன் முதல்வராக முடியவில்லை. மைதிலி
    சிவராமனுக்கு பொலிட்பீரோ உறுப்பினர் பதவி கிடைக்காது.
    பிருந்தா கரத்திற்கு பொலிட்பிரோவில்
    இடம் தரப்பட்டது. அதை ஏன் இன்னொரு பெண்ணிற்கு தரவில்லை.
    கணவன் - மனைவி என இருவரும்
    இருக்க வேண்டிய தேவை என்ன?.
    சிபிஎம் பெண்களுக்கு பாரளுமன்ற/
    சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்கள் தருகிறது, 10% கூட இல்லையே, ஏன்?.

    பாஜக ஆட்சியில் பெண் முதல்வர்கள்
    (உ-ம் சுஷ்மா சுவராஜ், உமா பாரதி,
    வசுந்த்ரா) இருந்துள்ளனர்.சிபிம்/இடது
    சாரி கூட்டணி ஆட்சியில் அது ஏன்
    இன்னமும் சாத்தியமாகவில்லை.
    உங்கள் கட்சியை விட இதில்
    பாஜக,அதிமுக பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  4. பதவியைக் கொடுத்துவிட்டு, நாங்கள் இந்த இனப் பெண்ணுக்கு இப்பதவியைக் கொடுத்துள்ளோம் எனக் கூறி, சாதி அரசியல் நடத்துவது தொடருவது கண்டிக்கத்தக்கது. திறமையுள்ளவர்களுக்கு பதவியைக் கொடுங்க. ஆனால் கொடுத்தபின் அவர்களின் சாதியைக் கூறாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. வருத்தப்படாத வாலிபன்!

    முதலில் இந்தப் பொறுப்பு ஒதுக்கீட்டால் தேர்வு செய்யப்பட்டதல்ல.

    அடுத்தது, ஒதுக்கீட்டையே இங்கு உரிமையாக பெற வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



    ஆ.முத்துராமலிங்கம்!
    இதுபோல இன்னும் பல கசப்பான உண்மைகள் நம் மண்முன்னே இருக்கின்றன.


    அனானி!
    பா.ஜ.க மகளிர் பிரிவு பெண்கள் குறித்து என்ன கருத்து கொண்டு இருக்கிரது என்பதை ஒரு தனிப்பதிவாகவே போடலாம்.

    செக்யுலர் கட்சிகளாகக் கருதப்படுகிற முதலாளித்துவக் கட்சிகள் சில மிக மோசமான பிற்போக்குத்தங்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் எதிர்த்து கருத்துப் போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ளது.

    எதற்கெடுத்தாலும் உடனே சி.பி.எம்மை நோக்கி கைகாட்டும் உங்கள் நோக்கம் புரிகிறது. இந்த விமர்சனத்தில் ஒரு பகுதி உண்மையாகவே இருக்கிறது. அது சரி செய்யப்பட வேண்டும். கௌரி, மைதிலி சிவராமன்,பிருந்தா காரத் என்னும் தனிநபர்கள் பற்றி பேசியது சரியல்ல என்பது என் கருத்து.

    அதிமுக, பாஜக எல்லாம் பரவாயில்லை என்பது செம ஜோக்.


    உழவன்!
    பொதுவாகச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றனவே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!