தேர்தலோடு எதுவும் முடியப் போவதில்லை......

'இடதுசாரிகளின் முட்டுக்கட்டைகள் இல்லை, இனி பொதுத்துறை பங்குகள் விற்பனை' என்று அலறுகிறது தினமலர்.  15வது மக்களவைக்காக நடந்த தேர்தலின் முடிவுகள் வரத் துவங்கிய மே 16ம் தேதி, யார் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட யார் அதிக எண்ணிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதில் நாட்டின் தொழிலதிபர்களுக்குப் பெரிய வேகம் இருந்தது.  61 என்ற ஓர் எண் வெறும் 20 என்று சுருங்கியவுடன் தான் அவர்களிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.  நிலையான ஆட்சி, அதுவும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, அதுவும் முட்டுக்கட்டைகள் போடும் இடதுசாரிகளின் தயவு தேவைப்படாத ஆட்சி என்று அவர்களது ஷாம்பெய்ன் கிண்ணங்கள் அன்று இரவு பொங்கி வழிந்திருக்கக் கூடும்.

இடதுசாரிகளுக்கு ஏன் இப்படி அடி விழுந்தது என்பது பற்றி அந்தக் கட்சிகள் ஒருபக்கம் பரிசீலனையைத் துவக்கியிருக்க, பத்திரிகையில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் எழுதும் பத்தியாளர்கள் அலசல்களை வைத்தவண்ணம் உள்ளனர்.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜூலை 2008ல் திரும்பப் பெற்றது தவறா, அதற்குத் தேர்வு செய்த காரணம் தவறா என்றும் 2004ல் ஆதரவு அளிப்பது என்று எடுத்த முடிவே தவறா என்றும் கேள்விகள் எழுப்புவோர் எல்லோரும் இடதுசாரிகளின் ஆதரவாளர்களுமில்லை, எதிர்ப்பாளர்களுமில்லை.  இடதுசாரிகள் மீது விமர்சனம் வைப்பவர்களில் சிலர் சீர்திருத்தக் கொண்டாடிகளாகவே இருந்தபோதிலும் இன்றைய உலக பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்திய நிதித்துறை அவ்வளவு தீவிரமான பாதிப்புகளை அடையாமல் காபந்து செய்திருப்பது யார் என்று அறிந்தவர்கள்.  அந்த உணர்வின் நிழல் படிந்திருக்கிறது அவர்களது விமர்சனங்களில். 

ஆனாலும், மன்மோகன் தலைமையில் சீர்திருத்தங்களின் படைவரிசையை வெகுவேகமாக முன்னேற்றிச் சென்றுவிட வேண்டும் என்று நிதியிதழ்கள் (FINANCIAL DAILIES) எழுதுகின்றன. "நிதித்துறைக்குப் பொருத்தமாகக் குறைந்தபட்சம் இரண்டு நிர்வாகப் புலிகளாவது மன்மோகன் வசம் இருக்கையில் போயும் போயும் பிரணாப் முகர்ஜியைத் தானா நிதியமைச்சராகக் கொண்டுவர வேண்டும் ? வரும் காலங்கள் சந்தைக்கும் அரசின் பாத்திரத்திற்கும் முரண்பாடுகளைக் கூர்மையாக்கும்போது சந்தையின் சுதந்திரத்தை அனுமதிப்பதா, அரசின் தலையீட்டை நிறுவுவதா என்ற கேள்வி முன்னுக்கு வரும், துரதிருஷ்டவசமாக பிரணாப் போன்ற ஒரு மனிதர் பின்னதற்குத் தான் வாதிடுவார்" என்று பிசினஸ் லைன் நாளேடு தலையங்கம் எழுதிப் புலம்பியது. ஆனால், முகர்ஜி இந்த விமர்சனங்களை எல்லாம் புரிந்து கொண்டு, பெருமுதலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசத் துவங்கிவிட்டார். பிரதமரும் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமாகத் தொடரும் என்று தமது முதல் பத்திரிகை செய்தியிலேயே அறிவித்தார்.

ஜூலை 2008ல் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த விவாதங்களுக்கு எழுத்துபூர்வமாக அளித்த தமது பதிலுரையில் டாக்டர் மன்மோகன் சிங் இடதுசாரிகள் தம்மை அவர்களது கொத்தடிமையாக நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பொருள் என்ன? 'இந்திய அரசியல் சாசன சட்டத்தின்முன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கிற விதத்தில் நாங்கள் செயல்படுகிறோம், இடதுசாரிகள் விடமாட்டேன்' என்கிறார்கள் என்று அவர் சொல்லமுடியாததன் மொழிபெயர்ப்பு வாக்கியம் அது.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற அபாரமான நூலை எழுதிய ஜான் பெர்க்கின்ஸ், நாட்டின் அதிபர்களை உலக வங்கியின் கொடிய கரங்கள் எப்படி வளைத்துப்போட்டன, மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்பட்டன என்று அப்பட்டமான உண்மைகளைப் பதிவு செய்துவிட்டு, தமது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான இந்த நூலாக்கத்தில் தான் ஏன் இறங்க நேர்ந்தது என்பதை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  தமது பாவங்களைக் கழுவிக்            கொள்ளும் இந்த முயற்சிக்குத் தம்மைத் தூண்டியது தமது அன்புமகள் என்றும், இதனால் தான் மரணத்தைத் தழுவ நேர்ந்தாலும் மகிழ்ச்சியே என்றும் எழுதும் பெர்க்கின்ஸ் இப்படி முடித்திருந்தார்: "நியூ ஹாம்ப்ஷயரில் கள்ளம் கபடமற்ற பாலகனாக வளர்ந்த நானா அப்படியொரு அடியாளாக மாறினேன் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது".

சாதாரண மக்கள் லஞ்சத்தையும் ஊழலையும் புரிந்து கொள்கிற பாணியே வேறானது. அவர்களுக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதும், தாசில்தார் மீதும் ஏற்படுகிற கோபம் நாட்டையே விலைபேசுகிற ஆட்கள் ஏற்படுவதில்லை.  அவர்கள் பாவம் தமது அன்றாடத் தேவைகளுக்கு எதிரான வில்லன்களை மீறி பெரிய தாதாக்களை அறிய முடிவதில்லை. இல்லையென்றால், தங்களது வாக்குரிமையை கேவலம் பணத்தை வைத்து யாரையும் விலைபேசி விட அனுமதிப்பார்களா?  ஒரே ஒரு புதுச்சேரி சரவணன் கோபப்பட்டு காங்கிரஸ் எம்.பி., (இப்போது அமைச்சர்!) நாராயணசாமி பெயருக்கு லஞ்சப் பணத்தை டிமாண்ட் டிராப்டு எடுத்து முகத்தில் வீசியிருகிறார். அவர் என்ன ஆகப்போகிறாரோ, அவரது தார்மீகத் துணிச்சலைப் பாராட்டி அந்த உணர்வைப் பாதுகாக்கும் பொறுப்பு நாகரிக சமூகத்திற்கு இருக்க வேண்டும்.

வெள்ளைத்துரையை எதிர்த்து கட்டபொம்மன் பேசியதாக எழுதப்பட்ட சிவாஜி கணேசன் வசனத்தை திருமண வீடுகளில் ஒலிச்சித்திரம் போட்டுக் கேட்டுக் கொள்ளவும், பள்ளிக்கூடங்களில் மாறுவேடப் போட்டிக்கு ரசித்துக் கொள்ளவும் மட்டும் பழக்கிக் கொண்டிருக்கிற சமூகமாக மாறிவிட்டோம். ஏகாதிபத்தியம் என்று சொன்னால், ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று அலுத்துக் கொள்கிற மத்திய தர வர்க்கம், உலக நிதி நெருக்கடியின் சூத்திரக் கயிறு எங்கே இருக்கிறது என்று விவாதிக்கத் தயாராயில்லை. ஐ டி துறை வேலைகளின் திடீர் மகிழ்ச்சி போலவே அதன் திடீர் அதிர்ச்சியையும் தனித்தனி நபர்களின் அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே விளங்கிக் கொள்ள விரும்புகின்றனர்.

அதனால்தான், தினமலர் போன்ற ஒரு நாளேடு மக்களுக்கு எதிரான விஷயங்களையே சாதுரியமாகத் தலைப்பிட்டு அவர்களிடமே விற்றுப் பிழைக்க முடிகிறது. இடதுசாரிகள் தாம் சந்தித்த தேர்தல் தோல்வியைக் குறித்த படிப்பினைகளோடு மீண்டும் இயக்கத்தைத் தொடரவே செய்வார்கள். அவர்களது போராட்டங்கள் நாடாளுமன்றத்தோடு மட்டும் எப்போதும் சுருங்கியிருக்கவில்லை.  அங்கே அவர்களது பாத்திரம் இப்போது மட்டுப்பட்டுப் போயிருப்பதில் சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைய எதுவுமில்லை. 

ஏற்கெனவே காசுள்ளவர்களுக்கே கல்வி என்று தனியார் கல்வி வள்ளல்களின் கருணையின் கீழ் வாழத் தள்ளப்பட்டிருக்கிற தேசத்தில், அந்நிய பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவோம் என்றும், கல்வியில் அந்நிய நிதி முதலீட்டை வரவேற்போம் என்றும் புதிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆரம்பித்து வைக்கிறார்.  எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களைப் பங்கு விற்பனை செய்யப்போகிறோம் (அதாவது தனியார்மயப்படுத்தப் போகிறோம்) என்ற அறிவிப்பையும் புதிய, நிலையான மற்றும் இடதுசாரிகளின் தயவு தாட்சண்யம் தேவைப்படாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்திருக்கிறது.

நிதித்துறை சீர்திருத்தமும், பென்ஷன் சீர்திருத்தமும் உடனடி நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்றும், இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் தொழிலாளர் சட்டங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்கும் முன்னுரிமை வேண்டும் என்றும் உறுதியாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.  பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஓ.பி.பட், துணைவங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைக்க வேண்டுமென்ற தனது வீர சபதத்தை முதற்கண் நிறைவேற்றிக் கொள்ளத் தயாராக நிற்கிறார். அமெரிக்காவில், கடந்த ஆண்டு முழுக்க கவிழ்ந்த வங்கிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு ஜூன் துவங்குமுன் கவிழ்ந்த வங்கிகள் எண்ணிக்கை மிஞ்சிவிட்டது.  ஆனாலும், இந்தியாவிலோ நிதித்துறையை ஒழித்துக் கட்டத் துடியாய்த் துடித்தவர்களே ஆட்சிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உலகின் அசுர மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டது.  மணிக்கணக்கில் ஊதியம் பெறும் 61,000 பேருக்கும், நிரந்தர தொழிலாளர் சில ஆயிரம் பேருக்கும் கணக்குகளை 'செட்டில்' பண்ணிக் கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.  கம்பெனியின் அதிகப்படி பங்குகளை அரசுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்ல வேண்டிய நிலையில் முதலாளித்துவக் கோட்டையின் அதிபர் பாரக் ஒபாமா இருக்கிறார். அமெரிக்காவில் தங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்த மக்களின் மருத்துவச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளுக்கும் முழு நாமம் போட்டுவிட்டு ஏய்த்த நிறுவனங்களை இங்கும் வரச் சொல்கிறது இந்திய அரசு.  நிதித்துறை, எண்ணெய், தகவல் தொலை தொடர்பு, விமானத் துறை எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் படுவேகத்தில் பறக்கும் என்று பிசினஸ் லைன் நாளேடும் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறது.

தொலைதூர இலத்தீன் அமெரிக்காவில் ஈக்குவடார் என்ற மிகச் சிறிய நாடு ஒன்று இருக்கிறது.  இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ராஃபேல் கொரியா, கொள்ளை லாப அந்நிய கம்பெனிகள் தேச சொத்துக்களாக மாற்றப்படும் என்று அரசியல் சாசன சட்டத்திலேயே வழிவகை செய்யும் திருத்தம் செய்துதான் தேர்தலையே சந்தித்து அதிரடி வெற்றி பெற்றிருகிறார்.  வெற்றி பெற்றதும் நாட்டின் பட்ஜெட்டில் சரிபாதி  செலவினங்கள் கல்வி, பொது சுகாதாரம், மக்கள் நலத்திட்டங்களுக்கே என்று  முதல் அறிவிப்பும் விடுத்திருக்கிறார். கிழக்கே வலுமிக்க  பொருளாதாரமாகப் பேசப்பட்ட ஜப்பானிலிருந்தும் ஒரு செய்தி வந்திருக்கிறது. பத்தாண்டுகளாகத் தங்கள் நாட்டில் வேலை பார்த்துவரும் சுமார் 3 லட்சம் அந்நிய தேசத்தவரை (பெரும்பாலும் பிரேசிலைச் சேர்ந்தவர்கள்) அவர்களது தாயகத்திற்கு நடையைக் கட்டுமாறு  பயணச்செலவும் நஷ்ட ஈடும் கொடுத்துத் துரத்திக் கொண்டிருக்கிறது  நெருக்கடியில் சிக்கித் திண்டாடும் ஜப்பான்.

இப்படி இரண்டு வழிகள் இருக்கின்றன - இந்தியா எதைத் தேர்வு செய்யப் போகிறது? நாம் கேட்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசை அல்ல, அவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டு  உட்கார்ந்திருக்கும் அதன் சாதாரண - நாளொன்றுக்கு இருபது ரூபாய் கூட ஈட்ட இயலாதிருக்கிற 83.6 கோடி பேரையும் உள்ளடக்கிய -  தங்கள் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற பாமர மக்களைத்தான். 

தேர்தலோடு எதுவும் முடிந்துவிடுவதில்லை, ஆட்சியாளர்களுக்கும் சரி, அவர்களைப் பதவியில் அமர்த்தியவர்களுக்கும் சரி.

(திரு.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் Bank workers unity பத்திரிகைகாக எழுதிய கட்டுரை இது.)

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இடதுசாரிகளின் நிலையற்ற அரசியல் கொள்கைகளே அதற்கு காரணமாக இருக்கலாம்!

  ஜான் பெர்கின்ஸ் மட்டுமல்ல, யார் சொன்னாலும் மக்களுக்கு அரசின் மேல் அக்கறையில்லை, ஒரு நாள் ஓட்டு போடுவதோடு கடமை முடிந்துவிட்டது!

  சேகுவாராவை காட்டி கொடுத்தவனுக்கு நீதிமன்றம் பரிசு அறிவித்திருக்கிறது பார்த்தீர்களா?

  இந்த உலகமே இடதுசாரிகளை பூச்சியை போலத்தான் பார்க்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 2. 'ஏற்கெனவே காசுள்ளவர்களுக்கே கல்வி என்று தனியார் கல்வி வள்ளல்களின் கருணையின் கீழ் வாழத் தள்ளப்பட்டிருக்கிற தேசத்தில், அந்நிய பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறந்து விடுவோம் என்றும், கல்வியில் அந்நிய நிதி முதலீட்டை வரவேற்போம் என்றும் புதிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆரம்பித்து வைக்கிறார்'

  இந்தியாவில் ஆக்ஸ்போர்டும், கேம்பிரிட்ஜும்,ஹார்வர்டும்
  வளாகம் அமைத்தால் உங்களுக்கு
  என்ன பிரச்சினை. உருப்படாத
  பல்கலைகழகங்கள்தான் இந்தியர்களின் தலைவிதியா?.

  பதிலளிநீக்கு
 3. சென்ற பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் 61 எம்பிக்கள், தற்போது வெறும் 20க்குள். ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எல்லா “சீர்திருத்தங்களையும்” எளிதாக செய்யஇயலும். எல்லா “சீர்திருத்த”மசோதக்களும் எளிதாக பாஜகவின் உதவியுடனேகூட நிறைவேறும் ஆனால் விளைவுகள் யார் தலையில்.

  இழப்பதற்கு நம்மிடம் நிறைய இருக்கிறதா?

  பதிலளிநீக்கு
 4. communists admk allaiance were over confidence in Tn. In Kerala its internal politics, IN Bengal the alliance is weak.

  Thas the reason for failure of communist party in elections.

  No body worry about 123 agreement etc.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கட்டுரை.ஆனால் பாமர மக்கள் யாரும் blog பார்ப்பதில்லை. டிவிதான் பார்க்கிறார்கள்.நாம எங்கேயோ இருக்கோம்.

  பதிலளிநீக்கு
 6. அன்பர்களுக்கு நன்றி.

  உலகம் முழுதும் இடதுசாரிகளைப் பூச்சி போலத்தான் பார்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. இடதுசாரிகளின் கருத்தறியவும், அறிந்தபின் முரண்படவும் அல்லது எதிர்க்கவும் விரும்புபவர்கள் இருக்கலாமேயொழிய அவர்களற்ற ஓர் உலகை, குறைந்தபட்சம் முதலாளித்துவ உலகம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இடதுசாரிகளின் வேலை அவர்கள் நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரலெழுப்பும் காலத்திலும்கூட, அங்கே துவங்கி அங்கே முற்றுப் பெறுவதில்லை. மக்கள் கருத்தில் அவர்கள் பொங்கி மேலெழுந்துவர வேண்டிய நேரத்தில் சரிவைச் சந்தித்திருக்கும் அதிர்ச்ச்யின் பாடங்களோடு அவர்கள் தங்களைத் தக்கபடி தகவமைத்துக் கொண்டு மேலெழுவார்கள். ஆனால், இந்தக் கட்டுரை முன்வைக்கும் பார்வை, இடதுசாரிகளின் வலு நாடாளுமன்றத்தில் குறைந்துபோயிருப்பதில் சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியடைய ஏதுமில்லை என்பது. நெருங்கிப் பழகிப் பேசிக் கலந்து தோற்கிற காதலைவிட, தன்னை இன்னார் விரும்புகிறார், இன்னதற்காக அது உவப்பானது என்பது கூட பரஸ்பரம் செய்தி பரிமாறிக் கொள்ளாது தோற்கிற காதல் விசனத்திற்குரியது அல்லவா!

  2. கதிகெட்ட உள் நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு மேனாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கே வருவது மேலல்லாவ என்று கேட்டிருக்கிற நண்பர், இங்கே சக்கை போடு போட்டு ஜனங்களை காலி பண்ணிக் கொண்டிருக்கும் மேதாவிகளை உருவாக்கி இந்தியாவிற்குத் திரும்ப வைத்த பல்கலைக் கழகங்கள் எவை என்று யோசிக்கக் கேட்டுக் கொள்கிறோம். விஷயம் பல்கலையின் மேன்மை சம்பந்தப்பட்டது அல்ல. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று எழுதி வைத்த தேசத்தில், கற்றவராக மாற குடும்பங்கள், சமூகங்கள் ஓட்டாண்டியாகிக் கொண்டிருக்கின்றனவே, இந்த அரசுகளுக்கு கல்வி பற்றிய பொறுப்பு என்ன, நிதி ஒதுக்கீடு பற்றிய சிந்தனை என்ன, கல்வியைச் சந்தையாக்கியவர்கள் அதில் அந்நிய போட்டியாளர்களையும் கொண்டு வந்து இறக்கினால், பஞ்சைப் பராரிகளின் கதி என்ன என்பதே கேள்வி.

  3. ச தமிழ்ச்செல்வனின் பாராட்டுதல்கள் குளிர்விக்கின்றன. அவரது கவலை நெஞ்சை நெருடுகிறது.

  நன்றி அனைவருக்கும்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 7. இந்திய மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும்,மீராக்களுக்கும் அமெரிக்க/ஐரோப்பிய பல்கலைகளில்
  படிக்க நிதிஉதவி கிடைக்கிறது. அவை இங்கு வந்தால் அது கிடைக்காதா என்ன?. மே.வங்கத்திலும், கேரளாவில்
  பல்கலைகழகங்கள் எந்த லட்சணத்தில் இருக்கின்றன. அதில் இடதுசாரிகள்
  பங்கு என்ன?. கொஞ்சம் யோசியுங்கள். உண்மை கசப்பானது.

  இடதுசாரிகள் உயர்கல்வி தனியார்மயத்தையும்,பிறநாட்டு பல்கலைகழகங்களின் வருகையையும் ஒன்றாக நினைத்து குழப்புகிறார்கள்.

  பாஜகவை கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலும், முஸ்லீம்களை தாஜா செய்வதிலும் தங்கள் ஆற்றலை விரயம் செய்தனர் இடதுசாரிகள்.
  அது போல் இதையும் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. Paamarargal yaarum blog paarpathillai enbathu unmaithan. Aanal paamaragal paarkkum idangalil naam illai enbathu adhai vidap periya unmai!

  பதிலளிநீக்கு
 9. Makkal Idathusaarigalai poochigalaipol paarppathu illai. Avargal idathusaarigalukkum sindhanayil oru thani maadam katti utkaara vaiththirukkiraargal. Communistugal nallavargal, nermayanavargal, nyaaththukkaga poraaduvaargal endru oru moolayil irukkirathu andha maadam. Makkalin podhupputthhiyil oru mukkiaymana idaththaip pidippatharku idathusaarigal samooga, kalacchara thalangalil thangal paniyai theevrapaduthuvathu avasiyam.

  பதிலளிநீக்கு
 10. இந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களுக்கு எஸ்.வி.வி அவர்கலே பதில் பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

  தமிழ்ச்செல்வன்சொன்ன மாதிரி பிளாக் படிப்பவர்கள் குறைவு என்றாலும், சமூகத்தில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கும் வல்லமை கொண்ட மத்தியத் தர வர்க்கத்தினரில், தீவீர வாசகர்கள், சிந்தனையாளர்கள் இங்கும் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!