இது அவர்கள் உலகம்!

நம்மை நாமே சிதைத்துக் கொண்டிருக்கிறோம். சிந்தனை ஊற்றெடுக்கும் ஆன்மாவின் இரத்தமாகிய தாய்மொழி நமக்குத் தேவையில்லை என்று மூளைக்குள் செலுத்தப்பட்டு விட்டது. நமது குழந்தைகள் முதன் முதலாக பேசுகிற ஆங்கில வார்த்தையில் புல்லரித்துப் போகிறோம்.

நமது பத்திரிக்கைகள்,  சினிமாக்கள். இப்போது தொலைக் காட்சிகள், ஆங்கிலப் படங்கள் என நம்மைச் சுற்றிலும் அரூபமான சதிகள் அமைக்கப்பட்டு நாம் பாடம் செய்யப்பட்டிருக்கிறோம்.  நமது  கதாநாயகன் நாலு வார்த்தை  ஆங்கிலத்தில் பேசிவிட்டால் விசிலும், கைதட்டல்களும் தியேட்டரை அமர்க்களப்படுத்துகிறது. கல்லூரியில் தமிழ்  பேராசிரியர் என்றால் என்னத்த கன்னையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஓமக்குச்சி நரசிம்மன்கள் என்றாகிவிட்டது.

கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் தேவையற்ற மொழிகளாக கோடிக் கணக்கான மக்களின் தாய் மொழிகளை உலகமயமாக்கல் சத்தமில்லாமல் நிராகரிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் அடுத்த நூற்றாண்டிற்குள் 6800க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து போகும் என ஆப்பிரிக்க கட்டுரையாளர் ஒருவர் எச்சரிக்கிறார். ஆதித்தாய்களின் நாக்குகளை அறித்தெறிகிற வன்முறை ஊடகங்களின் மூலம் இலகுவாக நடந்தேறுகிறது. சுதந்திரச் சந்தையை ஆக்கிரமிக்கும் நாடுகளின் மொழிகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.  கலாச்சாரத்தின் மாண்புகள் இங்கு சந்தையின் கரையான்களால் அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கலாச்சாரமும் ஒரு பொருளாக- கைவினைப் பொருளாக, புத்தகமாக, இசையாக, உணவாக, உடையாக, - விற்கப்படுகிறது. மொழியாக ஆக்கிரமிக்கிறது. இன்றைய கலாச்சார பரிவர்த்தனை சமத்துவமற்றதாக இருக்கிறது. ஒரு திசையிலிருந்து மட்டுமே வீசுகிறது. பணக்கார நாடுகளிலிருந்து ஏழை நாடுகளின் மீது பொழிந்து நசுக்குகிறது.

யுனெஸ்கோவின் 1997ம் வருட ரிப்போர்ட்டில் "1980 லிருந்து 1991க்குள் கலாச்சார மதிப்புகொண்ட பொருட்களின் வியாபாரம் 670 கோடி டாலரிலிருந்து 2000 கோடி டாலருக்கு உயர்ந்திருக்கிறது.' எனச் சொல்லப்பட்டதோடு மட்டுமில்லாமல் "அவைகளில்  அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம்' எனவும் சொல்கிறது. அமெரிக்காவின் ஏற்றுமதியில் அதிக பங்கு வகிப்பது  வாகனங்களோ, விமானங்களோ அல்ல.... பொழுது போக்கு உள்ளிட்ட கலாச்சார விஷயங்களே!

எல்லாம் வீடுகளுக்குள் இருப்பதாகவும், கிடைப்பதாகவும்  பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. உலகமயமாக்கல் இன்றைய உலகத்தை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட விரும்புகிறது. மனிதர்களை பலவீனத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி வைக்கிறது. தொட்டால் விழுந்துவிடும் அளவுக்கு நாடிநரம்புகள் செல்லரித்துப் போயிருக்கின்றன.உபயோகித்து தூக்கி எறிவது என்பது மனித மனங்களில் அழுக்காக படியவைக்கப்படுகிறது. தொடர்ந்து உபயோகிப்பது என்பது சந்தையில் உற்பத்தியையும், விற்பனையையும் பாதிக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. பிளாஸ்டிக்கில் ஆரம்பித்த இந்த மனோபாவம்  இன்று மனிதர்கள் வரை தூக்கியெறியப்படக் கூடிய பொருட்களாக்கி இருக்கிறது.

உலகமயமாக்கலின் கட்டற்ற  போக்கால் வான்வெளியெங்கும் மீடியா மன்னர்களின் ராஜ்ஜியங்களாகின்றன. காற்று தான் சுமப்பது அறியாமல் பொதி கழுதையாய் சுமந்து  திரிகிறது. 24 மணி நேரமும் எந்த சேனலும் பார்க்க முடிகிற அளவுக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கிறது. பி.பி.சியில் சந்தை நிலவரத்தை பார்க்கமுடியும். ஸ்டார் மூவிஸிலோ, ஏ-எக்ஸ்-என்னிலோ, ஆக்ஷன் சேனலிலோ  க்ராபிக்ஸில் முகம் அழுகிப் போகிற மனிதர்களைப் பார்க்க முடியும். டபிள்யூ.டபிள்யூ.எஃபில்  நான்கு புறமும் கயிறு கட்டியிருக்க அதற்கு நடுவில்  மனிதர்கள் ஒருவரை ஒருவர் கை கால்கள் முறுக்கி, தலையில் மிதிக்கிற கொடூரங்களைக் காணலாம். நம் தமிழ்ச்சேனல்களில் எந்த நேரமும் இடுப்புகளைக் குலுக்கிக் கொண்டு ஆணும், பெண்ணும் துடிக்கிற பாடல்களைப் பார்க்க முடியும். 

குழந்தைகளின் காதுகளை அடைத்து கண்களை நிலைகுத்தச் செய்கிறது இந்த லீலாவினோதங்கள். தெருக்களில் அவர்களின் பாதச்சுவடுகள் காணாமல் போக பல அற்புதமான விளையாட்டுக்கள் இன்று அனாதைகளாகி விட்டன.

பெண்ணுடல் மீதான வக்கிரங்கள் எல்லோர் கண்களிலும் சொருகப்படுகின்றன. ஷேவிங் கிரீம் விளம்பரமென்றாலும் ஒரு பெண் வருவாள். உடலால் அளக்கப்படுகிற சங்கதியாக அழகு குறுகிப்போய் விட்டது. சிறுநகரங்களிலும் அழகிப்போட்டி வியாதிகள் தொற்றியிருக்கின்றன. அதற்கான சாதனங்கள் சந்தையில் புதிதுபுதிதாக முளைக்கின்றன.

அன்றாட வாழ்க்கையின் ஊடே நாம் பயன்படுத்தும் பொருள்களில் பல பன்னாட்டுக் கம்பெனிகளுடையது என்கிற பிரக்ஞையற்று நாம்  செண்ட்களின் வாசனையில் மிதக்கிறோம். வாசனைத்திரவியங்களின் புதையல் என்று இந்தியா வந்த வாஸ்கோடா காமாவின் கல்லறையிலிருந்து சிரிப்பு அலறலாய் கேட்கிறது.

சூரியன் உதிப்பதும், மறைவதும் அறியாத இந்த தொடர் ஒளிபரப்பில் நம் மனிதர்கள் வேறு  திசையில் சிந்திப்பதற்கான எந்த அவகாசமும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் காட்டுவதையே பார்த்து பார்த்து சுயங்களை இழந்து  போகிறார்கள். கையில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு சேனல்களை மாற்றி மாற்றிப் பார்க்கிற சுதந்திரம் இருப்பதாக நம்பிக்கொண்டு  வெளிச்ச சிதறல்களில் மதிமயங்கிக் கிடக்கிறார்கள். உண்மையில் நமது கைகளில் ரிமோட் கண்ட்ரோல் இல்லை. அது அவர்கள் கைகளிலிருக்கிறது. அவர்கள் எப்படி நம்மைப் பார்க்க விரும்புகிறார்களோ அப்படி நம்மை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகச்சந்தை மனிதர்களை பரிசுத்த நுகர்வோன் என்கிற ஒற்றை அடையாளத்தோடு மட்டுமே பார்க்க விரும்புகிறது.

இது அவர்கள் மொழி. அவர்கள் உணவு. அவர்கள் உடை. அவர்கள் கலாச்சாரம். அவர்கள் சந்தை! இது அவர்களின் உலகம்.

 

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //தெருக்களில் அவர்களின் பாதச்சுவடுகள் காணாமல் போக பல அற்புதமான விளையாட்டுக்கள் இன்று அனாதைகளாகி விட்டன.//

  மிகச்சரி.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் மட்டுமல்லாமல் உலகின் எல்லா மொழிகளுக்கும் இதே நிலை தான். தமிழக மற்றும் தென்னிந்திய வரலாறு தெரியாதவர்கள் இப்படிப் பேசுவதில் வியப்பில்லை.

  ஏறக்குறைய இரண்டு, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியே தென்னகமெங்கும் பயிலப்பட்டு வந்தது.

  பிறகு தமிழ் மொழி சுருங்கி, வடமொழி, மற்றும் பிற வட்டார மொழிகளின் கலப்பினால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் தென்னாட்டிலும், ஓரியா, குஜராத்தி, சிந்தி போன்ற மொழிகள் வட இந்தியாவிலும் தோன்றின.

  மேலும், அரபு, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாட்டினர் வருகையாலும், அவர்கள் கொண்டு வந்த கிறித்துவம், இசுலாம் போன்ற மதக் கொள்கைகளாலும் தமிழ் மொழி எப்பொழுதோ தன் தன் தனித் தன்மையையும், ஆளுமையையும் இழந்து விட்டது.

  இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்கள் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் வந்ததாகச் சொல்லப் படுகிறது.

  பழைய தமிழ் எழுத்துக்களைக் காண இங்கு சொடுக்கவும்.

  http://www.tamilheritage.org/old/tamievol.html

  தமிழைக் காக்க விரும்பும் மாவீரர்கள் பழைய வட்டெழுத்துக்களுக்கு மாறினால் நல்லது.

  இன்றைய தமிழ் எழுத்துக்களைப் பார்த்தால் திருவள்ளுவர் என்ன நினைப்பாரோ?

  பதிலளிநீக்கு
 3. அண்ணே, சின்ன வயசுல படிச்ச கவிதை ஒண்ணு ஞாபகத்துக்கு வருது...
  கவிஞர் பேரு ஞாபகமில்லை.

  லெமூரியா அழிந்தாலும்
  இருந்தது தமிழ்
  இருந்தான் தமிழன்
  இன்று தமிழே அழிகிறதே
  நாளை இருப்பானா தமிழன்?!

  பதிலளிநீக்கு
 4. பல விஷயங்களை தொட்டு செல்லும் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 5. அண்ணா சில நாட்களுக்கு முன்பு படித்த
  சீனா இந்தியாவின் வெளிநாட்டின் முதலீடுகளை
  அஙகிகரிக்கும் கொள்கைகளின் வித்தியாங்களை
  பற்றி கூறிய கட்டுரையின் சாராம்சம் இது
  சீனாவை பொறுத்தவரை வெளிநாட்டுக்கம்பெனிகள்
  ஆரம்பிக்க சலுகைகள் உண்டு இந்தியாவைப்போல
  ஆனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
  உள்ளூர் சந்தையில் விற்க இயலாது
  வரிகளின் காரணமாக உள்நாட்டு பொருட்கள் விலையோடு
  போட்டி போட இயலாது இது நாட்டின் சிறு
  உற்பத்தியாளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது
  இதற்கு நேர்மாறு இந்தியாவை பொறுத்தவரை

  இதன் விளைவே நீங்கள் கூறிய அனைத்திற்கும்
  காரணமாக

  பதிலளிநீக்கு
 6. அற்புதமான பதிவு.

  ஆனால் எவ்வளவு தான் சொன்னாலும், ஆங்கில மோகம் நம் மக்களை விட்டு அகல பல நூற்றாண்டுகள் ஆகும் என்று தான் தோன்றுகிறது. அதற்குள் தமிழ் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடலாம். பல ஆண்டு காலமாக காட்டப்பட்டு வரும், தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்று கூறப்பட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகளில், எத்தனை பேர் தமிழில் பேசினார்கள்?

  எனது முந்தைய பதிவில் (http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html) இது பற்றி பேசியிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. //பிளாஸ்டிக்கில் ஆரம்பித்த இந்த மனோபாவம் இன்று மனிதர்கள் வரை தூக்கியெறியப்படக் கூடிய பொருட்களாக்கி இருக்கிறது. //

  உண்மைதான்!

  நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 8. நம் அடையாளங்களை சிதைத்துக் கொண்டு நாம் வாழ்கின்ற இந்த நிலை எப்போது மாறும் ? சிந்தனையூட்டும் பதிவு.

  “அகநாழிகை“
  பொன்.வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 9. நாம் பல நல்ல பழைய விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான்.
  பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே வாழ்க்கை

  இப்பழமொழி மொழிக்கும் பொருந்தும்.

  மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்குத்தானே. இது கடவுளைக் காப்பாத்த பக்தன் கிளம்பின கதையாக் இருக்கீறது.

  இங்கே ஒரு சகோதரன் எந்த அடிப்படையில் வெளி நாட்டில் இருந்துவந்த கிறிஸ்தவர்கள் தமிழை ஓய்த்துவிட்டார்கள் என்று குMஉறுகிறார் என்று தெரியவில்லை. நண்பருக்கு வரலாறு தெரியாது போதும். இன்று தமிழின் உய்ரிய நிலைக்குக் காரணம் கால்டுவெல், வீரமாமுனிவர் போன்ற அறிஞர்கள் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டிருக்கிறார். தோழர் மாதவராஜும் எல்லாவற்றையும் கம்யுனிச சித்தாந்தத்தில்தான் பார்க்கிறார். இவர்களுக்கெல்லாம் பொதுவான் கண்ணோட்டம் என்று ஒன்று கிடையவே கிடையாதா?

  பதிலளிநீக்கு
 10. ஊர்சுற்றி!
  நன்றி.

  ரங்கூடு!
  மொழி காலத்திற்கேற்ப சுவிகரித்து, தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். காணாமல்தான் போய்விடக் கூடாது.

  செல்வேந்திரன்!
  உலகமயமாக்கல் சகல மொழிகளையும் உறிஞ்சிவிடுகிறது. மனிதர்களுக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கிறது. இந்தப் பிரக்ஞையிருந்தால், இதிலிருந்து மீளும் வழி அடைவோம் என நினைக்கிறேன்.

  மங்களூர் சிவா!
  நன்றி.

  J!
  நீங்கள் சொல்வது உண்மைதான். சீனா தன்னைக் காத்துக் கொண்டுதான் மற்றவைகளுக்கு இடம் கொடுக்கிறது. இங்கு இடத்தோடு நம்மையும் சேர்த்துக் கொடுக்கிறோம்.

  வண்ணத்துப்பூச்சியார்!
  நன்றி.

  ஜோ!
  நன்றி.
  அந்தப் பதிவை அவசியம் படிக்கிறேன்.

  சந்தனமுல்லை!
  நன்றி.

  அகநாழிகை!
  நன்றி.

  அஸ்குபிஸ்கு!
  நம்மோடு உறவாடுவதற்கு, நம் சாதாரண மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அவர்களுக்கு மொழி தேவைப்பட்டது. அதற்குப் பிறகே அவர்கள் ஆற்றிய தொண்டு எல்லாம். அதற்கு ஒரு இடம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இன்று அதுவா நிலைமை? இந்த உண்மையைச் சொன்னால் கம்யூனிசமா!

  பதிலளிநீக்கு
 11. வெகு நாட்களுக்குப்பிறகு விடுமுறைக்காலத்தில் பிள்ளைகளோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.."குழந்தைகளின் காதுகளை அடைத்து கண்களை நிலைகுத்தச் செய்கிறது இந்த லீலாவினோதங்கள். தெருக்களில் அவர்களின் பாதச்சுவடுகள் காணாமல் போக பல அற்புதமான விளையாட்டுக்கள் இன்று அனாதைகளாகி விட்டன"
  நீங்கள் சொல்லியிருக்கும் இந்த வரிகளை தினம் தினம் உணர்ந்து கொண்டிருக்கிறேன் அவர்களோ அதைப்பற்றிய சிந்தனை கூட ஏதுமின்றி தொலைந்துபோய்க்கொண்ட்டிருக்கின்றனர்.... வாசித்து காட்டவேண்டும் அவர்களுக்கு உங்கள் பதிவை...

  பதிலளிநீக்கு
 12. இது காலத்தின் கட்டாயமோ.. இருப்பினும் நம் பழமைகள் காக்கப்படவேண்டும்.
  என் குழந்தைக்கு அகமதி வெண்பா என பெயர் வைத்தேன். அவ்வளவுதான்... அகம் னா என்ன? மதினா என்ன? வெண்பா னா என்ன?? இப்படி அப்பெயருக்கான பொருளைக் கேட்காதவர்களே இல்லை. அத்தனைபேருமே தமிழர்கள் என்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய விடயம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!