முடிந்தும் முடியாத கதைகள்: எது பெரிய உண்மை?

justice 1

இது ஒரு ஆப்பிரிக்க பழங்கதை.

ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.

அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. யாரோ வசித்து விட்டுப் போன குடிசை. இப்போது அந்தக் குடிசை, இருவருக்கு அடைக்கலமாகி உள்ளது. ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, சொத்தை, அழுகல் என்று மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர். பிரச்சினை ஏதும் இல்லை.

ஆனால் பஞ்சம் வந்த பிறகு, கடைத்தெரு பெரும்பாலும் அடைந்தே கிடக்கிறது. எப்போதாவது திறந்திருந்தாலும் இந்த இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது, ஒரு முடிவுக்கு வந்தனர். திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது என்பதுதான் அவர்களின் முடிவு.

கண் தெரியாதவரால் எவ்வளவு தூரம் தட்டுத் தடுமாறி போக முடியும்? முடமானவரால் ஊர்ந்து ஊர்ந்து எவ்வளவு தூரம் வரை போக முடியும்? போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.

கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.

அங்கே போவதென்று முடிவு செய்தார்கள். முடவரைக் குருடர் சுமந்து கொள்ள வேண்டும். முடவர் வழிகாட்ட, வழிகாட்டக் குருடர் நடக்க வேண்டும். வழிகாட்டுவது சுலபம். நடப்பது கஷ்டம். குருடர் மூச்சு வாங்க நடந்தார்.

ஒருவ்ழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள்.

தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர். கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது.

நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது.

ஊர் முச்சந்தியில் நின்று தலைவர் கத்திக் கொண்டிருந்தார். “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?”

யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நியாய தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நியாய தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.

நியாய தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவ்தை கண்டு பிடித்துவிடும். பொய் சொன்னாலும் கண்டுபிடித்து விடும். தப்பு செய்தவர்களைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்.

ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.

இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர் கத்தினார். “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா”

இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.

நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.

அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு. நியாய தேவதை கோயிலை விட்டு வெளியே வந்த பின் குற்றவாளியைத் தண்டிக்காமலும் திரும்பிப் போகாது!

அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நியாய தேவதையிடம் விளக்கம் கேட்டனர்.

சரி... இந்த இடத்தில் கதையை நிறுத்திக் கொள்கிறேன். நியாய தேவதை என்ன விளக்கம் சொல்லியிருக்கும் எனபதை நீங்கள் சொல்லுங்கள்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஊரை பஞ்சத்தில் விட்டதிற்காகவா?

  பதிலளிநீக்கு
 2. ஊர்த்தலைவர் என்பவர் யார் தன் ஊரில் உள்ள மக்களை காபாற்ற வேண்டும் ஆனால் இவர் மட்டும் வசதியா இருதார்.அதனால் இவர் தண்டனை பெற்றார்.

  பதிலளிநீக்கு
 3. கதை மிக அருமை அவர்களின் உடல் ஊனம் தெரிந்தும் அவர்களை ஊர்த்தலைவர் அழைத்தது தவறா (உண்மையான பதில் மண்டைக்கு இந்நமும் உரைகவில்லை என்று நினைகிறேன்)

  பதிலளிநீக்கு
 4. ஆப்பிரிக்க கதை நல்லாருக்கு

  மக்கள் பஞ்சத்தில் அல்லாடும் போது அவர் மட்டும் சகலவசதியுடன் இருப்பது முனபு செழிப்பாக இருக்கும் போதே மக்களிடமிருந்து திருடியதுதானே அவரின் போகங்கள்.
  அதனால் முதல் திருட்டுக்கு உரியவர்
  ஊர்தலைவரே என்று..?

  பதிலளிநீக்கு
 5. கிராமத்தையே கொள்ளை அடிப்பவர்தானே ஊர்த் தலைவராக இருப்பார்.

  பதிலளிநீக்கு
 6. முடிந்தும் முடியாத கதைகள்! :-)

  பதிலளிநீக்கு
 7. ஆஹா... கடைசிய்ல இப்படி முடிச்சுட்டீங்களே.... அந்த இருவரின் சாமர்த்தியம் மெச்சத்தகுந்தது!!

  பொய் சொல்லாதவனைத் தண்டிக்கும் தேவதை பொய்யை மறைப்பவனை எதுவும் செய்யவில்லை!!!

  முடிச்சு போட்ட மாதிரி இருக்கு!!! சீக்கிரம் அவிழுங்க!!!

  பதிலளிநீக்கு
 8. ஊரில் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தனது தோட்டத்தில் விளையும் பொருள்களை ஊராருக்கு பகிர்ந்தளிக்காமல், தானே அனுபவித்தது அவருடைய குற்றமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. ஆசானே!

  உங்கள் விளக்கம் எங்கே? எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 10. இது ஒரு நக்கல் comparison, இந்தியாவில்தான் இதுவும் நடக்கும் http://tinyurl.com/cn49km

  பதிலளிநீக்கு
 11. கதை குறித்து உரையாட வந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
  பதியும், பாரதியும் நெருங்கி வந்தனர். முத்துராமலிங்கம், முருகானந்தம்; செல்வன் மூவரும் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
  குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும்.
  சரி. இப்படிப்பட்ட நியாய தேவதைகள் நம் தேசத்துக்கு வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!

  தீபா!
  ஆதவா!
  அனானிமஸ்!
  சரிதானா?

  மீண்டும் வாசித்து, சிந்தித்த அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நியாய தேவதையின் குரல் உறுதியாய் எதிரொலித்தது .

  " சிறிய உண்மையைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை . உண்மைகளிலேயே பெரிய உண்மையாத்தான் நான் தேடுவேன் . திருடர்களைவிடத் திருடத் தூண்டியவர்களையே நான் தண்டிப்பேன் . ஊர் மக்கள் பட்டினி கிடைக்கும்போது , மொத்த உணவுப் பொருள்களையும் குவித்து வைத்திருப்பவந்தானே பெரிய திருடன் . ஆகவே , குற்றவாளியைத் தண்டித்தேன் . ' என்றது நியாய தேவதை .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!