மாதவராஜ் பக்கங்கள் 1

kalaizar fasting

சென்ற ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் ‘மக்கள் திரை இயக்கம்’ என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேச அழைத்திருந்தார்கள். உள்ளூரில் காளிமுத்து என்பவர் இயக்கியிருந்த ‘தேசீய விருது’ என்னும் குறும்படம் திரையிடப்பட்டது. மிகச்சாதாரண காமிரா, நேர்த்தியற்ற இசைப் பின்புலம், தெளிவற்ற எடிட்டிங் எல்லாவற்றையும் மீறி படம் பார்வையாளர்களை ஊடுருவியது. படம் முழுக்க ஒரு கிராமத்தில், கவனிப்பாரற்ற ஒருச் சின்ன கட்டிடத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் முகங்களாய் மாறி மாறி காட்டப்படுகின்றன.  உரையாடல்களே இல்லை. பள்ளியில் அவர்கள் உட்கார்ந்திருப்பது, பாடங்களை அவர்கள் கவனிப்பது என காமிரா பேசிக்கொண்டே இருக்கிறது. குளோசப் காட்சிகளில் அந்தக் கண்களில் மின்னும் கனவுகளை நாம் வாசிக்க முடிகிறது. முள் அடித்து விறகு சுமந்து பிழைக்கும் குடும்பத்தில் இருந்து கல்வி படிக்க வந்த சிறுவனின் உடலில் உள்ள காயங்களையும், சிராய்ப்புகளையும் மீறி அந்த சிறுவனும் கரும்பலகையை பார்த்துக் கொண்டு இருக்கிறான். பள்ளி விழாவில் அவன் முதல் மாணவனாய் தேறியதற்கு கிராமத்துப் பெரியவர் எதோ ஒரு பரிசை வழங்குகிறார்கள். அனைவரும் கை தட்டுகிறார்கள். படம் இவ்வளவுதான். தேசீய விருது என்று இயக்குனர் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரிகிறது.

எனக்கு அந்தப் பையனின் நிலையில்தான் இயக்குனரும் இருப்பதாகப் பட்டது. வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தால் காளிமுத்துக்களும் தேசீய விருதுகளை தமிழ்ச்சினிமாவுக்கு வாங்கித்தரத்தான் செய்வார்கள்.

0000

கடந்த இரண்டு நாட்களாக கோவில்பட்டியில் ஆரம்பித்து, தூத்துக்குடி சென்று, திசையன்விளை வரை எங்கள் கிராம வங்கிக்கிளைகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தோம்.
காலையிலேயே புறப்பட வேண்டி இருந்ததால் டி.வி செய்திகள் பார்க்கவில்லை. கோவில்பட்டி தாண்டி எட்டையபுரத்துக்குள் நுழையும்போது போனில் பேசிய நண்பர் ஒருவர் சொல்லித்தான் கலைஞரின் திடீர் உண்ணாவிரதம் தெரியும். ‘நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே’ என்னும் அளவுக்கு நண்பரின் குரலில் தெரிந்த பரபரப்பு கண்ணெதிரே  எங்கும் தெரியவில்லை. எல்லாம் அது அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டு இருந்தன. இடையில் கீழ ஈரால் என்னும் சின்ன ஊரில் டீக் குடித்தோம். கடையில் ஒருவர் கேட்டார் “கருணாநிதி உண்ணா விரதம் இருக்காராமே”. நான் சுவராஸ்யமாகி அவர் பக்கம் திரும்பினேன். டீ ஆற்றிக் கொண்டு இருந்தவர் மிகச் சாதாரணமாகச் சொன்னார்: “அவரு எல்லா எடத்துக்கும் போக முடியாதுல்லா... அதான் இருந்த எடத்துல இருந்தே பிரச்சாரம் செய்றாரு” டீக்குடித்துக் கொண்டு இருந்த எனக்கு புரை ஏறியது.

0000

காரில் பயணம் செய்கிறபோது  எனக்கும் அண்டோவுக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. யுத்ததின் கோரக் காட்சிகளை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டோம். விடுதலைப்புலிகள் மீதான என் விமர்சனம் மட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினான். நாற்பதைத் தாண்டிய எங்களில், அவன் இருபத்தைந்தை நெருங்கியவனாய் இருந்தான். அருகிலிருந்த சட்டையப்பன் இலங்கைப் பிரச்சினை குறித்த விஷயங்களை ஆதியிலிருந்து குறிப்பிட்டு, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் தவறாக இருந்தன என்பதையெல்லாம் பட்டியலிட்டார். எதையும் அண்டோ வாங்கிக் கொள்கிற மனோ நிலையில் இல்லை. “அண்ணா, நீங்களுமா” என்று என்மீது வருத்தப்பட்டான். “அங்கே செத்துக் கொண்டு இருக்கிறார்கள்... நீங்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்..” என்று சாடினான். அவன் குரலும், வேகமும் எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரிந்ததை அல்லது புரிந்ததை நான் சொல்லிப் பார்த்தேன். ஒருக் கட்டத்தில் கூட வந்தவர்கள் “இப்ப நீங்க ரெண்டு பேரும் இத நிறுத்துறீங்களா இல்லியா” எனச் சத்தம் போட்டனர்.

ஒரு கிளையில் நுழைந்து பேசிக்கொண்டு இருந்தோம். வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாய் இருந்தது. நகைக்கடன் பகுதியில் ஒரு அம்மா கையில் இரண்டு சின்னக் கம்மல்களோடு பாவம் போல நின்றிருந்தார். என்னைப் பார்த்ததும் எதோ அதிகாரி என நினைத்து “சார் பேங்குக்கு வந்து ரெண்டு மண்ணேரம் ஆவுது. இங்ஙனேயே நிக்கிறேன். கொஞ்சம் சொல்லுங்க சார்“ என்றார்கள். “சரிம்மா” என்றுவிட்டு, அப்ரைசரிடம் பேசினேன். அவர் ஏற்கனவே கொடுத்திருந்த டோக்கன்களை காட்டினார். அந்த அம்மாவிடம் போய் “எந்த ஊரு” “என்ன பண்றீங்க” என்று விசாரித்துக் கொண்டு இருந்தேன். பேச்சுவாக்கில் “என்னம்மா இலங்கையில நிறைய தமிழர்களை கொன்னுட்டாங்க, தெரிமா” என்றேன். “ஆமா, சார்...சொன்னாங்க.. நகைக்கு எடை போட்டு எவ்வளவு கிடைக்கும்னு சொல்லுங்க சார். ஒரு ஆயிரத்து ஐநூறு  வேணும்,  மெட்ராஸ்ல படிக்கிற பையனுக்கு அனுப்பனும்” என்றார்கள். என்ன படிக்கிறான் என்கிற விபரத்தைக் கேட்டுவிட்டு  “என்னம்மா. அவ்வளவு பேர அங்கக் கொல்றாங்க.. அதை ரொம்பச் சாதாரணமா பேசுறீங்க” என்று கேட்டேன். “அட போங்க சார்.... இங்க அவ அவ செத்துச் செத்துப் பொழைக்கிறா...நாளைக்கு என்னச் செய்ய எங்கிறது உயிர வதைக்கு... எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..” என்று சட்டென்று குரல் உயர்த்திச் சொல்லவும் அமைதியானேன். நல்லவேளை, அண்டோ பக்கத்தில் இல்லை. சுற்றிலும் பெண்களும், ஆண்களும் ஏதேதோ கவலைகளோடு நின்றிருப்பதாய்த் தெரிந்தது. அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.

0000

பயணங்களின் போது அருகில் இருக்கும் நகரத்தில் உள்ள லாட்ஜில் இரவுகளில்  தங்குவது என்றாகிவிட்டது. சமீபத்திய அனுபவம் முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. லாட்ஜை புக் பண்ணி, ”வாங்க சார்” என்று நகர்ந்த ரூம் பாய் பின் தொடர்ந்தோம். ஒரு அறையைத் திறந்தான். சட்டென்று மூடி அடுத்த அறை நோக்கி போனான். “என்னப்பா” என்றேன். “இப்பத்தான் ரூமை காலி பண்ணியிருக்காங்க... ஒழுங்கு படுத்தணும்” என்றான். அருகில் வந்த நண்பர் மூடிய அந்தக்  கதவைத் திறந்து பார்த்தார். போர்வைகளும், தலையணைகளும் தாறுமாறாய்க் கிடந்தன. தரை முழுவதும் சிகரெட் துண்டுகளும், தீக்குச்சிகளும்.  மேஜையில் மதுபாட்டில்கள் சரிந்திருக்க, அறையே கசக்கிப் பிழியப்பட்டதாய்த் தெரிந்தது. ரூம்பாய் இரண்டு ரூம்கள் தள்ளி இன்னொரு அறையைத் திறந்து பார்த்தான். அருகில் போய் நின்றேன். அறை கலையாமல், கலங்காமல் இருந்தது. மேஜை மீது வாடிய ஒரு முழம் பூவும், இரண்டு ஹேர்பின்கள் மட்டும் இருந்தன. அமைதியும், லேசாய் பவுடர் வாசமும் மிதந்தபடி இருந்தன. “சார்.. கொஞ்சம் இருங்க.. படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் மாத்தி தந்துர்றேன்” என்று வேலைகளில் மும்முரமானான். ‘இவ்வளவு வித்தியாசமா?’ என்று எனக்குள் குரல் ஒலித்தபடி இருந்தது.

 

*

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. நிகழ்வுகளை கண் முன் நிறுத்தியது உங்கள் எழுத்து.

  என்ன அருமையாய் சொல்லி விட்டார் டீ மாஸ்டர்.??

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. உண்மை நிலையைக் கூறும் பதிவு.
  /*நாளைக்கு என்னச் செய்ய எங்கிறது உயிர வதைக்கு... எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..”*/
  யுத்தம் வருத்தமான விஷயம். ஆனால் அவரவருக்கு அவரவர் வாழ்வுப் பிரச்னைகள் வந்து முன் நிற்கின்றன. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் வசூலிக்கும் கட்சிகள் எதுவுமே மக்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் தர முயல்வதில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்சிகள் பிரசாரத்திற்கு செலவழிப்பதை ஏதேனும் ஊர்நலத்திற்கு செலவிட்டிருந்தாலே பலர் அடிப்படை வசதிகளுடன் இருப்பர். என்று விடியும்?

  பதிலளிநீக்கு
 3. // டீ ஆற்றிக் கொண்டு இருந்தவர் மிகச் சாதாரணமாகச் சொன்னார்: “அவரு எல்லா எடத்துக்கும் போக முடியாதுல்லா... அதான் இருந்த எடத்துல இருந்தே பிரச்சாரம் செய்றாரு” டீக்குடித்துக் கொண்டு இருந்த எனக்கு புரை ஏறியது.//

  :)

  இது போன்ற கடைக்கோடி மனிதர்கள் பெரும்பாலானோர் படித்து வளர்ந்ததே முரசொலி போன்ற பத்திரிக்கைகள் தான் !!!!

  அதனால், இனி இது போன்ற மனிதர்களிடமிருந்து "கடிதம்" கூட எதிர்பார்கலாம் !!!!!!!

  பதிலளிநீக்கு
 4. கூடவே நாங்களும் பயணித்தது போல் இருந்தது. ஒவ்வொரு நிகழ்வையும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள்..உங்கள் பார்வையில்!

  பதிலளிநீக்கு
 5. “அவரு எல்லா எடத்துக்கும் போக முடியாதுல்லா... அதான் இருந்த எடத்துல இருந்தே பிரச்சாரம் செய்றாரு”

  100 சதவிதம் உண்மை!!!!

  மிக அருமையான பதிவு.

  தங்களின் கை தொலைபேசிக்கு என்ன ஆயிற்று????
  தொடர்பு கொள்ள முடியவில்லை ஏன்?

  பதிலளிநீக்கு
 6. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி நீங்க சொல்லி இருப்பது தான் சாதரண இந்திய மக்களிடம் இருக்கும் நிதர்சனம். அவர்கள் தான் ஊட்டு வங்கிகள்.

  பதிலளிநீக்கு
 7. //எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..” என்று சட்டென்று குரல் உயர்த்திச் சொல்லவும் அமைதியானேன். நல்லவேளை, அண்டோ பக்கத்தில் இல்லை. சுற்றிலும் பெண்களும், ஆண்களும் ஏதேதோ கவலைகளோடு நின்றிருப்பதாய்த் தெரிந்தது. அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்.//

  மிகத்தெளிவு.. தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றிய அக்கறை துளியும் இல்லாதது வருத்தமே.

  ஆனால் மெத்த படித்த பலர் இந்த அக்கறையின்மையை, சுலபமாக மறந்துவிட்டு...தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மாதிரியே எழுதி வருகிறார்கள்...

  பதிலளிநீக்கு
 8. கருணாநிதி உண்ணாநோன்பு, வேலைநிறுத்தம் என்று நடத்திப் பார்க்கிறார். எதிர்கட்சிகளை கவிதையில் விமர்சனம் [இல்லை ஏசுகிறார்]. இருந்த இடத்தில் இருந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். ஆனால் என்னவோ தெரியவில்லை. அவரது ஒவ்வொரு நகர்த்துதலும் எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. பாவம் பெரியவர் கருணாநிதி.

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 10. //“அவரு எல்லா எடத்துக்கும் போக முடியாதுல்லா... அதான் இருந்த எடத்துல இருந்தே பிரச்சாரம் செய்றாரு” டீக்குடித்துக் கொண்டு இருந்த எனக்கு புரை ஏறியது.
  //

  நல்ல வேளை இதை படிக்கும்போது..நான் எதுவும் குடிச்சிட்டிருக்கல...தப்பிச்சேன்

  பதிலளிநீக்கு
 11. இரண்டு நாட்கள் பதிவு இல்லாத குறையை இப்பதிவு நிறைவேற்றியது. இலங்கை பிரச்சனை குறித்தான அந்த பெண்மணியின் எண்ணமும் ஒருவகையில் சிந்திக்கத் தகுந்ததே.

  லாட்ஜ்..... அப்படியொன்றும் புதியதாக இல்லை....!!!

  பதிலளிநீக்கு
 12. தோழர் மாதவராஜ்!
  கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா? ரெங்கா குறிப்பிட்டு காட்டுகிற அந்த வார்த்தைகளில் எதை ஞாயப்படுத்த முயல்கிறீர்கள்? இலங்கை பிரச்சனையில் நம் எல்லோரின் மொளனத்தையா? இல்லை என்ன சொல்ல வருகிறீர்கள்? அவரவர் வாழ்கை அவரவர் பிரச்சனை(இலங்கையில்) அதனால் நாம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்றா? இல்லை தமிழ்நாட்டிலே போதுமான பிரச்சனைகள் இருப்பதால் கடல் தாண்டி கண்ணீர் விடத்தேவையில்லையென்றா?
  எனக்கும் 27தான். அதனால்தானோ என்னவோ குழப்பமாகவேயிருக்கிறது. கோபப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 13. மக்கள் திரை இயக்கத்திற்கும்,தேசிய விருது காளிமுத்துவிற்கும் வாழ்த்துக்கள்.

  0000

  எள்ளலும்(டீ கடைக்காரரின் பேச்சு) கோபமும்(கருணாநிதியின் செயல்) ஒரு சேர,ஒரு தேர்ந்த கார்ட்டூனைப் போல் காட்சிபடுத்தி ரசித்தேன்.

  0000

  சில கிராமங்களில்(எங்கள் கிராமத்திலும் சிலரைத் தவிர) இலங்கைப் பிரச்சனையின் தாக்கம் இல்லைதான்.

  0000

  தனிமைக்கும்,தாம்பத்தியதிற்குமான வித்யாசமோ?

  பதிலளிநீக்கு
 14. நிகழ்வுகளை அத்தனை அருமையா
  எழுதிவிட்டீங்க.
  படிக்க சுவாரசியமா இருந்தது.
  பார்வையின் பரந்த வெளி எழுத்தில்
  படர்ந்திருந்தது.

  தீராத பக்கங்கள் - க.
  அருமை.

  பதிலளிநீக்கு
 15. “என்னம்மா. அவ்வளவு பேர அங்கக் கொல்றாங்க.. அதை ரொம்பச் சாதாரணமா பேசுறீங்க” என்று கேட்டேன். “அட போங்க சார்.... இங்க அவ அவ செத்துச் செத்துப் பொழைக்கிறா...நாளைக்கு என்னச் செய்ய எங்கிறது உயிர வதைக்கு... எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..” என்று சட்டென்று குரல் உயர்த்திச் சொல்லவும் அமைதியானேன். நல்லவேளை, அண்டோ பக்கத்தில் இல்லை."

  அண்ணா! நான் மட்டும் அல்ல இன்று நம் நாட்டில் பலரும் என்னைப் போலவே இருக்க வேண்டிய நேரத்தில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பது தான் பிரச்சனையே

  பதிலளிநீக்கு
 16. இயக்குனர் காளிமுத்துவிற்கு வாழ்த்துக்கள், பகிர்ந்த உங்களுக்கு கூடன்னு கோடி நன்றிகள்.

  நானே பேருந்தில் உங்களுடன் அமர்ந்து இளம்புவனம், குமாரகிரி, எட்டயபுரம், கீழா ஈரால், எப்போதும் வென்றான் , குறுக்குசாலை வந்த மாத்ரி இருந்தது உங்களின் எழுத்து.

  குப்பன்_யாஹூ

  பதிலளிநீக்கு
 17. இந்த மாதிரி நிறைய காளிமுத்துக்கள் இருக்கிறார்கள், நானும் மூன்று வருடம் இந்தப் பாழாய்ப் போன சினிமாவை துரத்தியிருக்கிறேன்.

  அந்த டீக்கடை மனிதரின் அவதானிப்பு மிக கூர்மை, பயங்கரமாக சிரித்தேன்.

  ஈழம் குறித்த பேச்சு, இதில் நான் இயக்குனர் சீமான் பக்கம்.

  பேங்கல அந்த அம்மாவால் ஈழத்துக்கு என்ன பண்ண முடியும்,செய்ய முடிந்தவர்களே அரசியல் செய்து கொண்டிருக்கும் போது. இங்கே ஈழம் அரசியல் செய்வதற்கு ஒரு கருவி.

  லாட்ஜ் காட்சிகள் அருமை.

  வாழ்வில் தான் எவ்வளவு சம்பவங்கள் நடக்கின்றன.

  பதிலளிநீக்கு
 18. நகர்ப்புறங்களை விட கிராமங்களில்
  இருப்பவர்கள் தெளிவானவர்கள்
  நீங்கள் கூறிய செய்திகளே சான்று

  இவர்களின் கஷ்டஙகளை தீர்க்க எந்த
  அரசியல்வாதிகளுக்கும் விருப்பமில்லை
  தீர்த்துவிட்டால் அரசியல் செய்ய முடியாது என்கிற காரணமாக இருக்கலாம்
  காவிரி தொடங்கி ....

  பதிலளிநீக்கு
 19. வண்ணத்துப்பூச்சியார்!
  நன்றி. டீ மாஸ்டருக்கும் நன்றி.

  அமுதா!
  //தேர்தலுக்காக கோடிக்கணக்கில் வசூலிக்கும் கட்சிகள் எதுவுமே மக்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் தர முயல்வதில்லை.//
  ஆமாங்க...

  பதி!
  அவர்கள் கடிதம் எழுத ஆரம்பித்தால், இவர் நிறுத்திவிடுவார்.

  சந்தனமுல்லை!
  மிக்க சந்தோஷம். நன்றி.

  பொன்ராஜ்!
  நன்றி. கைபேசியில் சார்ஜ் இல்லை.

  SK!
  ஆம். அவர்களின் மனோநிலை வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

  ரெங்கா!
  தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  சுபா!
  பிள்ளையார் பிடிக்க... என்னும் ப்ழமொழி ஞாபகத்திற்கு வருகிறதோ....

  தீப்பெட்டி!
  நன்றி.

  ராஜ்!
  தப்பியதற்கு வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.

  ஆதவா!
  வருகைக்கு, பகிர்வுக்கும் நன்றி.

  சைக்கோ!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. தனிமைக்கும், தாமப்த்தியத்திற்குமுள்ள வித்தியாசமல்ல.... ஆணுக்கும், பெண்ணுக்குமுள்ள வித்தியாசம்.

  ஆ.முத்துராமலிங்கம்.
  நன்றி. தீராத பக்கங்கள் அவ்வப்போது தொடரும்.

  அண்டோ!
  இருக்கக்கூடாத இட்த்தில் இருக்காமல் இருப்பதும் நல்லதுதான்.

  குப்பன்யாஹூ!
  இப்போது நால்வழிப் பாதை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இடங்களெல்லாம் மாறிப் போச்சு.

  அனானி!
  நன்றி. யாருங்க நீங்க...?

  யாத்ரா!
  உங்கள் கவிதைகளில் தொனிக்கும் வலி, இந்த கனவுத்தொழிற்சாலை துரத்தல்களிலிருந்தா பிறந்தவை? நீங்கள் அதைப் பற்றி எழுதலாமே. ஒரு இலக்கியவாதியிடமிருந்து அந்த அனுபவங்கள் வரும்போது சிறப்பாயிருக்கும்.

  J!
  வருக. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அனானி!
  வருகைக்கு நன்றி.
  //தோழர் மாதவராஜ்!
  கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா? ரெங்கா குறிப்பிட்டு காட்டுகிற அந்த வார்த்தைகளில் எதை ஞாயப்படுத்த முயல்கிறீர்கள்? இலங்கை பிரச்சனையில் நம் எல்லோரின் மொளனத்தையா? இல்லை என்ன சொல்ல வருகிறீர்கள்? அவரவர் வாழ்கை அவரவர் பிரச்சனை(இலங்கையில்) அதனால் நாம் ஏதும் செய்யவேண்டியதில்லை என்றா?//

  நல்லவேளை கேட்டீர்கள். என் அடுத்த பதிவு இது பற்றி எழுதிவிடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

  //கோபப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.//
  ஏன் தம்பி... நான் கோபப்படணும்?

  பதிலளிநீக்கு
 21. /நாளைக்கு என்னச் செய்ய எங்கிறது உயிர வதைக்கு... எங்களைப் பத்தி யார் சார் கவலைப்படறாங்க..”/

  ஆனா, இந்தக் கேள்விய, கம்மல்-ல கையிலே வைச்சுக்கிட்டு, இதுக்கு எவ்வளவு தருவாங்கன்னு/தருவீங்கன்னு எதிர்பார்க்கும் ஒரு தாயிடம், இந்த கேள்விக்கு இதுதான் அந்த நேரத்துக்கான பதிலா இருக்கும். அதாவது, இது முற்றிலும் நிகழும் நிலை/தளம் வேறு.

  இந்தம்மாகிட்டயே, அவுங்க வங்கில அவுங்க வேல முடிஞ்சதும் கேட்டீங்கன்னா சொல்லிருப்பாங்க பாருங்க அதுதான் பொது கருத்தா இருக்கும். அதனால, இன்னும் முயற்சி செய்யுங்க பொது கருத்த அறிய.

  பதிலளிநீக்கு
 22. கவிதைகளில் இருக்கும் வலிக்கு அதுவும் ஒரு காரணி, நிச்சயமாக எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. பாலாஜி பாரி!
  இதுகுறித்து அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினை அவரவர் கவலை என்றொரு [பதிவில் இன்னும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

  யாத்ரா!
  நன்றி. எதிர்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 24. //அவரவர் வாழ்க்கை, அவரவர் பிரச்சினைகள், அவரவர் கவலைகள்//

  நிதர்சனமான உண்மைங்க... வருத்தப்பட்டு பேசறதை தவிர்த்து நம்மால் வேறு என்ன செய்யமுடிகிறது...

  பதிலளிநீக்கு
 25. நமக்கு எல்லாம் சந்திர மண்டலத்தில் இடம் பார்த்து வச்சிருக்கார்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!