“கண் அவிஞ்சு போச்சே...”


சூரியன் மறைவது போல பொன்னுத்தாய் ஆச்சிக்கு பார்வை தேய்ந்து கொண்டு இருந்தது.

குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும் சுருங்கிய உடலெல்லாம் நடுங்கக் கோபம் வரும். சாபம் விட்டுத் தீர்ப்பாள். சர்க்கரை நோயால் தங்கவேல் இறந்து பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. தனியாகவே தன் குடிசையில் சுவாசித்து வந்தாள். 

மகன்களின் வீட்டில், நினைத்த நேரம் சென்று எதையாவது கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வாள். அவர்களின் பாசமும், ஒற்றுமையுமே அவளது ஆயுளை கெட்டிப் படுத்தின. இரவுகளில் திண்ணைகளில் உட்கார்ந்து அவர்களைப் பீற்றிக்கொள்ளா விட்டால் தூக்கம் வராது.

கால்களில் கண்கள் முளைத்திருக்க ஊரின் பாதைகளெல்லாம் அத்துப்பிடி அவளுக்கு. வழிமறிக்கும் செடிகள் விலக்கி சரளமாய் எல்லா முடுக்குகளிலும் நடந்து போவாள்.

திடுமென ஒருநாள் காய்ச்சலில் படுக்க, ‘பெருசு இந்த தடவை போய் விடும்” என்றே ஊர் பேசிக்கொண்டது. ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன் என ஆச்சி அடம் பிடிக்க, கம்பவுண்டரை வரவழைத்து ஊசி போட வைக்க மட்டும் மூத்த மகனால் முடிந்தது. நம்பிக்கைகள் இல்லாமல், ‘சரி... என்ன செய்ய முடியும்’ என்று மனதைத் தேற்றிக் கொண்டான். மருமகள்கள் மாற்றி மாற்றி கஞ்சி கொண்டு வந்து கொடுத்தனர்.

யாரும் எதிர்பாராமல் எட்டாவது நாள் ஆச்சி அவள் பாட்டுக்கு எழுந்து குளித்து உட்கார்ந்தாள்.

“பெருசுக்கு சாவே கெடையாது” என்று ஊர் இப்போது பேசிக்கொண்டது.
வழக்கம் போல தெருக்களுக்குள் வளைய வந்தவள் சந்தியம்மன் முடுக்கு தாண்டி, இடதுபக்கம் சந்தில் நுழையவும் எதோ தடுத்தது. தொட்டுப் பார்த்தவளுக்கு எதிரே தட்டியடைப்பு ஒன்று தட்டுப்பட்டது. திகைத்து நின்றாள்.

“பாட்டி! நேத்து ஒங்க இளைய மவனும் நடுவுல உள்ள மவனும் சண்ட போட்டு பாதைய மறிச்சு அடைச்சுட்டாங்க. ஒங்க இளைய மவன் இடமாம் இது” சக்திக்கனி குரல் கேட்டது.

பொன்னுத்தாய் அங்கேயே உட்கார்ந்து “ஐயோ, எனக்கு கண் அவிஞ்சு போச்சே, ஒண்ணும் தெரியலய” என்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள்.

Comments

20 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அருமையான பதிவு, யதார்த்தத்தை சொல்கிறது கதை.

    நன்றிகள் பல.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  2. மனதை கரைத்து விட்டது கதை.
    மிக அருமை.

    |குருடி என்று யாராவது சொல்லிவிட்டால் மட்டும் சுருங்கிய உடலெல்லாம் நடுங்கக் கோபம் வரும்.|
    |தனியாகவே தன் குடிசையில் சுவாசித்து வந்தாள்.|

    என் ஆச்சியும் நியாவகத்துக்க வர்ராங்க.

    ReplyDelete
  3. நல்ல பதிவு! ரசித்தேன்! உண்மையை போகிறபோக்கில் மனதில் தங்கும் கதைகளாக்கி விடுகிறீர்கள்!

    ReplyDelete
  4. அருமை.

    மனிதர்களின் நிஜமுகம் சொல்கிற பதிவு.

    ReplyDelete
  5. அந்தப் புகைப்படத்திலிருக்கும் பாட்டிம்மாவின் முகத்திலிருக்கும் சுருக்கங்களே போதுமானதாயிருந்தது அந்த வாழ்க்கையை உணர்ந்து கொள்ள, மேலும் தங்களின் வரிகள் பாரத்தைக் கூட்டியது. ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எப்படி பங்காளிகளாக மாறுகிறார்கள், இது எனக்கு எப்போதும் வருத்தமளிக்கும் விடயம்,

    இதற்கு ஒரு வழி என்னிடமிருக்கிறது, உடைமைகளை தாங்களே ஈட்ட வேண்டும், பெற்றோர்கள் தங்கள் உடைமைகளை வாரிசுகளுக்கு தரக்கூடாது, தன் விருப்ப காரியங்களுக்கு செலவிட்டு விட்டு இறந்து விட வேண்டும், முதல்ல தன் வாழ்க்கையின் தேவைக்கதிகமா பொருளீட்டுவதால் தானே இந்த பிரச்சனையெல்லாம், சொத்துகள் வாரிசுகளை சோம்பேரிகளாக முதுகெலும்பில்லாதவர்களாக ஆக்குவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.

    பொதுவுடைமை சகோதரத்துவம்,,,,, இந்த நிலைமையில் இருக்கிறது. எத்தனை மார்க்ஸ் வந்தாலும்,,,,,,

    மிகவும் சிந்தனையைத் தூண்டும் படியாயிருந்தது இந்தப் பதிவு.

    ReplyDelete
  6. நம்பிக்கையும், சந்தோஷமும் தானே மனித வாழ்வை வழிநடத்தி செல்கிறது.

    அதே ரெண்டும் போச்சு, இனி கிழவி...

    ReplyDelete
  7. நல்லதொரு பதிவு!

    எப்போதும் போல் உங்களுக்கு எதிர் வோட்டுகளை போடும் நல்ல தமிழ் உள்ளங்கள் வாழ்க, வளர்க!

    ReplyDelete
  8. ரொம்ப அருமையா இருக்குங்க. அந்த மூதாட்டி நிலைமை பாவம்!!! யாத்ரா சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்!!!!

    ReplyDelete
  9. இக்கதைக்கு நான்கு நெகட்டிவ் ஓட்டுக்கள்???
    கொடுமை!!!!

    ReplyDelete
  10. சாதாரணமா ஆரம்பிச்சு கடைசியில மனச கஷ்டபடத்திடீங்க..
    மறக்க முடியாத கதையாயிருச்சு...

    ReplyDelete
  11. ஆதவா said...
    இக்கதைக்கு நான்கு நெகட்டிவ் ஓட்டுக்கள்???
    கொடுமை!!!!//

    அய்யய்யோ இப்பதான் என்னக்கே புரியுது ஆதவன், இதை படித்தபின் தான் ஓட்டுப் போடுவதை கவினித்தேன் விரல் கீழேயும் மேலேயும் இருக்கு, இது இதுநாள் வரைக்கும் எனக்கு தெரியாது. காலையில ஓட்டுப் போடும் போது நான்னும் அந்த பக்கம் தான் போட்டுட்டேன், (இது அத விடக் கொடுமையா இருக்குள்ள என்ன பன்னுரது எல்லாம் கவனக்குறைவு) ரொம்ப நன்றி ஆதவனுக்கு.

    ReplyDelete
  12. //நல்லதொரு பதிவு!

    எப்போதும் போல் உங்களுக்கு எதிர் வோட்டுகளை போடும் நல்ல தமிழ் உள்ளங்கள் வாழ்க, வளர்க!//
    சின்னப்புள்ளத்தனமா?!

    ஆகச்சிறந்த புனைவு. //கால்களெல்லாம் கண்கள்// உவமையில் மெய்சிலிர்த்தேன். காட்சிகள் கண்முன் விரிந்த உணர்வு கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு.

    ReplyDelete
  13. பாசம்,ஒற்றுமை.
    இவற்றின் வலிமையை பார்வையிழந்த
    பாட்டியின் சரளமான பாதை(உறவு)ப் பயணங்கள் மூலம் அழகாய்
    அறியமுடிகிறது.

    அருமை.

    ReplyDelete
  14. குப்பன் யாஹூ!
    நன்றிங்க.

    ஆ.முத்துராமலிங்கம்!
    நம் ஆச்சிகளின் கனவுகள் அல்லவா நாம்!

    சந்தனமுல்லை!
    பாராட்டுக்கு நன்றி.

    மங்களூர் சிவா!
    நன்றி.


    அப்பாவி முரு!
    தங்கள் புரிதலுக்கு நன்றி. உண்மைதான்.

    முனைவர்.இரா.குணசீலன்!
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    தீப்பெட்டி!
    உற்சாகமளிக்கிறது உங்கள் வார்த்தைகள்.

    வெங்கிராஜா!
    உங்கள் கருத்துக்களும், பாராட்டுக்களும் அடுத்த கதையை எழுத வைக்கும்.

    ReplyDelete
  15. யாத்ரா!
    //பொதுவுடைமை சகோதரத்துவம்,,,,, இந்த நிலைமையில் இருக்கிறது. எத்தனை மார்க்ஸ் வந்தாலும்,,,,,,//
    மக்களை மார்க்ஸ் புரிந்து கொண்டார்.
    மார்க்ஸை மக்கள் புரிந்து கொள்ளவில்லையே...

    ReplyDelete
  16. ஜோ!
    ஆதவா!
    ஆ.முத்துராமலிங்கம்!
    இருக்கட்டும். அவர்கள் எதிர்த்து ஓட்டுப் போட போடத்தான் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று வெறியே ஏற்படுகிறது.

    ReplyDelete
  17. அன்பின் நண்பருக்கு,
    வணக்கம். சொற்சித்திரம் என்ற பதத்திற்கே உரித்தான அருமையான அனுபவப் பதிவு. வாழ்வியலை எடுத்துக்கூறும் இதுபோன்ற படைப்புகள் வித்தியாசமான வடிவம் கொண்டவவை, பாரதியின் வசன கவிதை போன்ற இதுபோன்ற வாழ்வனுபவங்களை சொற்சித்திர வடிவிலாக்கும் முயற்சிகளை தொடருங்கள்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. யதார்த்தத்தை சொல்கிறது

    ReplyDelete

You can comment here