இது பதிவு அல்ல!

reading

வணக்கம்.

வங்கி, தொழிற்சங்க வேலைகள், அவ்வப்போது கூட்டங்கள், பயணங்கள், புத்தகங்கள், நண்பர்களோடு அரட்டை,  என கழிந்த நாட்களிலிருந்து திடுமென சென்ற செப்டம்பர் இறுதி வாரத்தில் வலைப்பக்கம் வந்து நின்றேன். இழுத்து வந்து விட்டதில் பெரும் பங்கு தீபாவுக்கு உண்டு. எதாவது பதிவு போட்டுவிட்டு பேசாமல் இருந்தேன். தெரிந்த இரண்டு மூன்று பேருக்கு மட்டும் தகவல் தெரிவித்தேன். ஒரு நண்பர் “நல்லா எழுதுறீங்க... நிறைய பேருக்கு போய்ச் சேரணும்” என்று  நிறைய இ-மெயில்களைச் சேகரித்து அனுப்பி வைத்தார். ஓ, இப்படி அனுப்ப வேண்டும் போல என்று நானும் அதன்படியே செய்தேன். “ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள்... “ என்று ஒருவர் கோபப்பட்டு மெயில் அனுப்பினார். பிறகு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசும்போது,  “ஒங்க பிளாக்கை நா படிச்சுட்டு வர்றேன்...  நீங்க தமிழ்மணம், தமிழிஸ்ல சேருங்க என்று முகவரி சொன்னார். அங்கு போன பிறகுதான் எத்தனை பேர் இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், இது எவ்வளவு பெரிய உலகம் என்பதை புரிந்து கொண்டேன். என்னை பலரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் தமிழ்மணத்திற்கும், தமிழிஸுக்கும் பெரும் பங்கு உண்டு. நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இதர பிளாக்கர்களைப் பார்த்த பிறகு, அவர்களின் டெம்ப்ளேட்டுகளை விதவிதமாய்ப் பார்த்து நானும் அடிக்கடி டெம்ளேட்டுகளை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டேன். சின்னக்குழந்தைகள் மரப்பாச்சி பொம்மைக்கு புதுசுபுதுசாய் ஆடைகள் செய்து அழகு பார்ப்பது போல் ஒரு சுவராஸ்யம். இனி மாற்றுவதாய் எண்ணம்  இல்லை.

மண்டையைப் பிசைந்து, ரொம்பத் தீவீரமாக அலசி எல்லாம் எழுதுவதில்லை. எல்லோருக்கும் காட்ட முடிகிற எனது டைரியின் பக்கங்களாகவே பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலையில் எழுந்து எனக்குப் பிடித்ததை, பாதித்ததை, மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றுவதை  பதிவு செய்துவிட்டு, வங்கிக்குச் சென்று விடுவேன்.  இரவில் வந்து பின்னூட்டங்களுக்கு பதில்கள் போடுவதும், எனக்குப் பிடித்த வலைப்பக்கங்கள் சென்று படிப்பதும் நடக்கிறது. நான் சிரிக்க, பிரமிக்க, லயிக்க மயங்க இங்கு நிறைய நிறைய இருக்கிறார்கள். வலைப்பக்கங்களில் படிப்பது திருப்தி அளிக்கிறது என்றாலும் புத்தகங்கள் படிப்பது குறைந்து போய்க் கொண்டிருக்கிறது. வருத்தம்தான். சரி செய்ய வேண்டும். இதுவரையில் நான் எழுதியதில் கொஞ்சம் இலக்கியமாகத் தேறும் என நினைக்கிறேன். அவைகளை மேலும் செழுமையாக்கி புத்தகமாக கொண்டு வரலாம் என ஒரு ஆசை இருக்கிறது.

சந்தோஷமோ, கோபமோ அப்படியேத் தெரிவித்துவிட வேகம் வருகிறது. இப்படித்தான் ‘அறிவற்றவர்கள்’ என்னும் வார்த்தையும் ஒரு பதிவில் வெளிப்பட்டது. பலர் அந்தப் பதிவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் நெருக்கமானவர்கள் ‘கொஞ்சம் நிதானமாக எழுதலாமே’ என இ-மெயிலிலும், போனிலும் உரிமையுடன் சொன்னதை கவனத்தில் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன். சொல்ல வந்ததை அவர்கள் குறை கூறவில்லை. சொல்லிய விதம் சரியில்லை என்றார்கள்.

டிசம்பர் மாதத்திலிருந்து,  வலையுலகம் பற்றி தொடர் ஒன்றை செம்மலர் மாதப் பத்திரிக்கையில் எழுதி வருகிறேன். வலைப்பக்கங்கள் குறித்த என் அனுபவங்களை வெளிப்படுத்தியும். பிடித்த வலைப்பக்கங்களை அறிமுகம் செய்தும், முக்கிய பதிவுகளை எடுத்துக் காட்டியும் வருகிறேன். இதுவரை ஜ்யோவ்ராம் சுந்தர், தீபா, ராமச்சந்திரன் உஷா, தங்கராசா ஜீவராஜ், அனுஜன்யா, செல்வேந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரை குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத வேண்டும்.

வலைப்பதிவாளர்களில் வடகரை வேலன் அவர்கள் சிவகாசி வந்திருக்கும்போது என்னைத்தேடி வங்கிக்கிளைக்கு வந்திருந்தார். நான் அன்று லீவு. கிளையில் போன் நம்பர் பெற்று, பேசி, என் அழைப்பின் பேரில் சாத்தூர் வந்தார். அவர்தான் நான் நேரில் சந்தித்த முதல் வலைப்பதிவாளர். அருமையானவர். வலைப்பதிவாளர்களோடு என் வாசலைத் திறந்து வைத்தவர் அவர்தான். அனுஜன்யாவோடு இருமுறை பேசி இருக்கிறேன். ஜ்யோவ்ராம்சுந்தரோடு பேசியிருக்கிறேன். செல்வந்திரேனோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். தாமிராவோடும், முரளிக்கண்ணனோடும் பேசியிருக்கிறேன். அவர்களது முயற்சியால் சென்னைக்கு வந்திருந்தபோது நம் நண்பர்கள் சிலரை சந்தித்து ஒரு டீக் குடிக்க முடிந்தது. மகிழ்ச்சியான தருணங்கள் அவை. வலைப்பக்கத்தில் அறிந்து கொண்டிருந்தாலும் எப்போதாவது முடிந்தால் நாம் ஒருவரையொருவர் பார்ப்பதும் அற்புதமானதுதான். எல்லோரும் மனிதர்கள்தானே.

இந்த நட்சத்திர வாரம் படு உற்சாகமாக கழிந்தது. தினமும் இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறேன். ரொம்ப மெனக்கெடவெல்லாம். இல்லை. ஒரே மாதிரியான பதிவுகள் இருக்கக் கூடாது என்று மட்டுமே கவனமாயிருந்தேன்.எப்படியிருந்தது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைச் செப்பனிடவும், செழுமை படுத்தவும் உங்களுக்கும் உரிமை உண்டு.

நட்சத்திர வாரத்திலிருந்து விடைபெறுகிறேன். வழக்கம் போல நாளை சந்திப்போம்.

நன்றி.

அன்புடன்

மாதவராஜ்

கருத்துகள்

35 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்லதொரு நட்சத்திர வாரத்தை தந்தமைக்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அனைவரையும் கவரும் நட்சத்திர பதிவர்களில் நீங்கள் குறிப்பிடத்தக்கவர்..

    சிறப்பா எழுதி இருந்தீர்கள்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையாக போனது இந்த வாரம்!

    மனசுக்குள்( அப்பாடா சிங்கம் இடத்தை காலி செஞ்சுடுச்சு முயல் இந்த பக்கம் வரலாம்:)

    பதிலளிநீக்கு
  5. // வலைப்பக்கத்தில் அறிந்து கொண்டிருந்தாலும் எப்போதாவது முடிந்தால் நாம் ஒருவரையொருவர் பார்ப்பதும் அற்புதமானதுதான். //

    என் உணர்வுகளும் இதே.

    பதிலளிநீக்கு
  6. நட்சத்திர வாழ்த்துகள் மாதவராஜ்.! (எப்பிடி நம்ம ஸ்பீடு.. அத வுடுங்க.. வாரம் முடியறதுக்குள்ள வந்து வாழ்த்து சொன்னேனா இல்லையா.? அத்த மட்டும் பாருங்க.. ஹிஹி.. கொஞ்சம் பிஸி)

    பதிலளிநீக்கு
  7. மிக்க அருமையான ஒரு நட்சத்திரவாரம்! எல்லா பதிவுமே நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நண்பரே-
    கடந்த ஒரு வாரம் முழுவதும் தங்கள் நட்சத்திரப் பதிவுகளைப் படித்து வந்தேன். மிகவும் அருமையாக எழுதியிருந்தீர்கள்.

    திரைப்பட நடிகர்கள் விஷயத்தில் தாங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்களில் முழுமையாக என்னால் உடன்பட முடியவில்லை. அவர்களும் அறிவுள்ளவர்களே. பல நேரங்களில் புகழின் பிரமாண்ட நிழல் அந்த அறிவை மறைத்துக் கொண்டுவிடுகிறது. ஆனால் நிதானமான நாயகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

    மற்றபடி இந்த ஒரு வாரத்தில் என்னை பெரிதும் வியக்க வைத்த வலைப் பதிவர் தாங்கள் ஒருவர்தான் மாதவராஜ்.

    ஜெயகாந்தன் மருமகன் என்ற அடையாளத்தை தாங்கள் வெளிப்படுத்திய விதம் மிக அருமை.

    சினிமா, ரசனை, அறிவு குறித்த உரையாடல், முதல் இந்திய சுதந்திரப் போரைத் திரும்பிப் பார்க்க வைத்த உங்கள் சமீபத்திய பதிவு (நட்சத்திர வாரத்தில்) என அனைத்தையும் புதிய பரிமாணத்தில், நல்ல இயல்பு நடையில் கொடுத்திருந்தீர்கள்.

    குறிப்பாக, தங்களின் 'கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள்!' தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் படித்ததும், 'பாரீஸுக்குப் போ' தேவராஜன் நினைவுகளில் மின்னலடித்தார்.

    படிப்பவர் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் சில நிமிடங்களாவது யோசிக்க வைக்கும் விதத்தில் இருக்கவேண்டும் வேண்டும் என்ற நோக்கம் தெரிந்தது உங்கள் பதிவுகள் அனைத்திலுமே.

    அது வெகு அரிதான ஒரு மனப்பாங்கு.

    பதிவர்களைப் பற்றிய பொதுவான ஒரு மனப்பான்மையையே மாற்றிவிட்டீர்கள் மாதவராஜ்.

    நல்ல எழுத்துக்களைத் தந்ததற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    வினோஜாஸன்
    என்வழி.காம் (www.envazhi.com)

    பதிலளிநீக்கு
  9. நன்று. நிறைய விஷயங்களை புட்டு புட்டு வைத்து விட்டு விடைபெறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மாதவ், நீங்க எழுத்தாளர் என்பதாலோ, நண்பர் என்பதாலோ சொல்லவில்லை. 'நட்சத்திர' வாரத்தை உண்மையிலேயே பிரமாதப் படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள்.

    தொடர்ந்து இதே உற்சாகத்துடன் எழுதுங்கள் தோழா.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  11. @ குசும்பா,

    உன் சைக்கிள் கேப் கமெண்டு புரிஞ்சிது. வா, வா, உனக்கு இருக்கு :)

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  12. உங்கள் சாதாரண எழுத்தே நட்சத்திர எழுத்துதான். இது ச்சும்மா...!

    (பதிவப் படிச்சதும் ஒண்ணு யோசிச்சேன்... நீங்க இந்தப் பதிவ.. பதிவு அல்ல-ங்க்ற தலைப்புல எழுதியிருகீங்க. நானெழுதற நிறைய பதிவு இப்படித்தான்!!! ஹி..ஹி...!!!)

    பதிலளிநீக்கு
  13. நட்சத்திர வாரம் சிறப்பாக இருந்தது நண்பரே..!
    பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பதிவுகள் வித்தியாசமாகவும் நன்றாகவும் அமைந்தது.அதிரடியாக கோபத்தை சொல்லாமல் ... நறுக்கென்று இது சரியா என்று கேட்கும் போது உங்கள் கருத்து உயர்ந்தே நிற்கும்.
    இங்கே பதிவுலகில் எழுதிக்கொண்டிருப்பவர்களையும் ஒரு வார்த்தை குறிப்பிட்டது நல்லது. ஏனெனில் ஏற்கனவே பத்திரிக்கை உலகில் இருப்பவர்கள் அங்கிருந்து வலைப்பக்கம்வந்தவர்கள் உயர்ந்தவர்கள்.. மற்றும் இங்கிருந்து பத்திரிக்கை உலகிற்கு சென்றவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்து கொஞ்சகாலமாக வலுப்பெற்றிருக்கிறது. :)

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நன்றி சார்,
    நட்சதிர வாரத்தில் உங்களுடைய
    பதிவுகளை அனைத்தையும்
    படித்தில் சந்தோசம் ஒரு நல்ல சிந்தனையாளரின் எழுத்துகளை
    படித்திருக்கின்றோமென திருப்தி.
    நட்சத்திர வாரம் உங்களுக்கு முடிந்தாலும் உங்கள் பதிவுகள் அனைத்துமே நட்சத்திங்களை போல் மின்னிக் கொண்டிருக்கும்.
    தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படிக்க ஆர்வம் உள்ளது.
    இன்னும் நிறைய எழுதுங்கள்
    படித்து பயனடேவோம்.

    நட்சத்திர வாழ்த்தும்
    நன்றியும்

    பதிலளிநீக்கு
  16. உங்கள் உழைப்பும் ஆர்வமும் நட்சத்திர வாரத்தில், வாசகர்களுக்கும் நல்ல தீனி போட்டுவிட்டீர்கள். செம்மலரில் என் பதிவா? நன்றி நன்றி.

    //இங்கிருந்து பத்திரிக்கை உலகிற்கு சென்றவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்து கொஞ்சகாலமாக வலுப்பெற்றிருக்கிறது. :)//
    முத்துலஷ்மி, என்னுடைய லேட்டஸ்ட் பதிவு பார்க்கவில்லை, இணையத்தில் இருந்து அச்சுலகில் நுழைந்த முதல் போணி நான் :-)

    பதிலளிநீக்கு
  17. உஷா மிக்க மகிழ்ச்சி.. உங்கள் பதிவு இன்னும் படிக்கவில்லை ..படிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  18. தங்கள் நட்சத்திர வாரம் வெகு அருமையாக இருந்தது.

    சார், இந்த உங்களுடைய வலையுலக ஆட்டோகிராப் மனதிற்கு மிக நெருக்கமாயிருக்கிறது. இம்மாதிரி சுகமோ துயரமோ கடந்து வந்த பாதையை அசை போடுவது இருக்கிறதே,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  19. எனக்குத் தெரிந்து நட்சத்திர வாரத்தைத் தொடர்ந்து படித்தது உங்கள் பதிவுகளை மட்டும்தான். உங்களது எழுத்துக்கள் மட்டுமே என்னை படிக்கத் தூண்டியது. பிற்பாடு நீங்கள் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் என்பதை எளிமையாக வெளிப்படுத்தியதும் என்னைக் கவர்ந்தது!! எனக்கென்னவோ நட்சத்திர வாரத்திற்கு நீங்கள் எழுதியதாகத் தெரியவில்லை. ஏனெனில் எந்த வட்டத்திற்கும் அடங்காமல் எழுதுபவர்களுக்கு நட்சத்திர வாரங்களே தேவையில்லை. அத்தனையும் நட்சத்திரங்கள்தாம்.

    எழுத்துக்கள் என்றும் நீர்த்துப் போவதில்லை.
    தொடர்ந்து வலையில் எழுதுங்கள்.

    அன்புடன்
    ஆதவா

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு வாரம். எழுத்து நடை அசத்தல்.

    //சந்தோஷமோ, கோபமோ அப்படியேத் தெரிவித்துவிட வேகம் வருகிறது.//

    அது இருக்கிற வரைக்கும்தான் நிஜ, போலிகளற்ற மனிதனாக இருப்பதாகப் படுகிறது. என்று வார்த்தைகளில் வண்ணம் பூசப் பட்டு, ஜாக்கரி தடவப் படுகிறதோ அன்றே அந்த எழுத்து வியாபாரத்திற்கு தயாராகிவிட்டாதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

    எனவே, நியாத்திற்கு விடாமல் கோபப்படுங்கள் :-)

    பதிலளிநீக்கு
  21. In the "blog"world one important man is here>>>"sandippu"blog.he is writing politics related articles with determinations.you can write abt him .He is one of the senior writer ---R.Selvapriyan--chalakudy

    பதிலளிநீக்கு
  22. முன்பே சொன்னது போல சரமாரியான பதிவுகள் அழுத்தமான பதிவுகள் சுவாரஸ்யமானதொரு வாரம்.

    வாழ்த்துக்கள் நீங்கள் எழுத தொடங்கிய நாட்களில் உங்களை படித்திருப்பேன் போல, அதனால் நீங்கள் பல நாட்களாக எழுதுவது போல் ஒரு உணர்வு இருந்திருக்கிறது.

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  23. இந்தப் பதிவுக்கான தலைப்பு பொருத்தமாயிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  24. தொடர்ந்து ஒரு வாரம் சிறப்பாகச் சென்றது. ஆர்வமுடன் மேலும் எதிர்நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. சுவையான வாரம். வாழ்த்துக்கள், மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  26. அன்பின் மாதவராஜ்,\

    ஒரு வார காலமாக இணையப்பக்கமே வர இயலவில்லை. அனைத்துப் பதிவுகளையும் படித்து விடுகிறேன். பிறகு வருகிறேன். நல்வாழ்த்துகள் மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  27. நீங்க ரொம்ப நல்ல எழுதுறிங்க .. அத நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை ...
    உங்களுக்கு நேரம் இருந்தான் நான் எழுதி இருக்கும் சாரி கிறக்கி இருக்கும் பதிவகளை பார்த்து ஒரு கருத்து சொல்லுங்க ... :-)

    தொடர்ந்து எழுதுங்கள்!

    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    பதிலளிநீக்கு
  28. உங்கள் பதிவுகளை ரொம்பவே ரசித்தேன்.. கிறேன்..

    மிக இயல்பாக மனதில் பட்டதை சொல்கிறீர்கள்..
    இந்தப் பதிவல்லாத பதிவும் கூட மிக இயல்பாக ஒரு நண்பனிடம் கதை கேட்பது போல இருந்தது..

    நட்பு தொடரும்

    பதிலளிநீக்கு
  29. நல்லவாரமாக இருந்தது.

    தமிழ்மணம் ஆரம்பகாலத்தில் ஐநூற்றுச் சொச்சம் பேர். இப்போது நாலாயிரத்து அறுநூற்றுச் சொச்சம் பதிவுகள்.

    எல்லாவற்றையும் வாசிக்க நேரமும் கிடைப்பதில்லை. நட்சத்திரப் பதிவராக வரும்போது ...கவன ஈர்ப்புக் கிடைத்து வருகிறது.

    அதை நல்லமுறையில் செய்தீர்கள்.

    இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  30. Hi please provide your mobile no. to thamizhstudio@gmail.com

    thanks,
    thamizhstudio.com

    பதிலளிநீக்கு
  31. I wish you all success,sir, and I am eagerly waiting your next article

    பதிலளிநீக்கு
  32. நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    எழுத்துக்களின் மூலம் நான் மிக நேசிப்பவர்கள், என்னை நேசிப்பவர்கள் எல்லோரையும் இந்தப் புள்ளியில் சந்தித்ததும், அவ் அர்களிடமிருந்து வாழ்த்து பெற்றதும் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், அன்பாகவும், என் எழுத்துக்களுக்கு கிடைத்த மரியாதையாகவும் எடுத்துக் கொள்கிறேன்.

    எனக்கு இந்த நாள், உங்களால் முக்கியமான, மறக்க முடியாத நாளாகி இருக்கிறது.

    ரொம்ப நெருக்கமானவர்களிடம் என மன்ம் திறந்து பேசியதை போல உணருகிறேன்.

    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  33. அருமையாக இருந்தது மாதவராஜ். அனைத்து நட்சத்திரப் பதிவுகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  34. அமரபாரதி!

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!