இந்திய வரலாற்றில் இன்று முக்கிய தினம்!

1857

இதே மார்ச் 29ம் நாள்தான்! இன்று போல அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான்! 152 வருடங்களுக்கு முன்பு  பராக்பூரில் வங்காளப்பிரிவு சேனையில் இருந்த மங்கல் பாண்டே புதுவகை என்பீல்டு துப்பாக்கியை உபயோகிக்க மறுத்தார். ஆங்கிலேய சார்ஜெண்ட்டுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. 1857 ஏப்ரல் 8ம் தேதி மங்கல்பாண்டே தூக்கிலிடப்பட்டார். இந்திய வரலாற்றின் மகத்தான அத்தியாயமான 1857 முதல் சுதந்திரப் போருக்கான பொறி இப்படித்தான் வெடித்தது.

புதிதாக வந்த என்பீல்டு துப்பாக்கியின் தோட்டாவில் பசுக்கொழுப்பும், பன்றிக் கொழுப்பும் தடவப்பட்டிருக்கிறது என்னும் செய்திதான் இந்த உக்கிரம் நிறைந்த போராட்டத்திற்கு காரணம் என்று அறியப்பட்டாலும்,  ஏற்கனவே  புகைந்து கொண்டிருந்தது நெருப்பாக பற்றிய இடம் மட்டுமே அது என்பதுதான் உண்மை. இந்தியச் சிப்பாய்களும், வெள்ளைச் சிப்பாய்களும் ஒரே படையில் இருந்த போதும், வெள்ளைச் சிப்பாய்களுக்கு நல்ல ஊதியம், வீடு, உணவு என்று கவனிக்கப்பட்டார்கள். நமது சிப்பாய்கள் அவர்கள் குடும்பங்களோடு ஒரே கொட்டடியில் ஆடு மாடுகளைப் போல தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தியச் சிப்பாய்களுக்கு வரி உண்டு. பென்சன் கிடையாது. இப்படி பல காரணங்கள் இருந்தன.

1857 மே மாதம் 10ம் தேதி மீரட்டில் இருந்து யுத்தம் துவக்கப்பட்டது. எதிர்பாராத ஆங்கிலேய ஆபிசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு இடமாய் மீட்டுக்கொண்டு “டெல்லி சலோ” என முழக்கமிட்டு குதிரைகளில் விரைந்தார்கள். போகிற வழிகளில் அங்கங்கு படைப்பிரிவுகளில் இருந்த இந்தியச் சிப்பாய்கள் தங்களை அந்த பயணத்தில் இணைத்துக் கொண்டனர். இட்டவா மாகாணத்தின் கலெக்டர் ஆலன் விக்டோ ஹியும் சிப்பாய்கள் வரும் பாதையில் பெரும் குழிகளைத் தோண்டி வைத்தான். சூழ்ச்சி பலிக்கவில்லை. எதிர்கொள்ள முடியாமல், உயிர் பிழைக்க இறுதியில் பெண்வேடம் தரித்துத் தப்பினான்.( இந்த தந்திரக்காரன்தான் பின்னாளில் இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினான்!)

டெல்லி நமது சிப்பாய்களின் வசமானது. இரண்டாம் பகதூர்ஷாவை மன்னராக்கி, கிராம பஞ்சாயத்து முறையில் ஜல்சா கமிட்டி அமைத்தனர்.ஒவ்வொரு படைப்பிரிவிலிருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்றைய சுதந்திர இந்தியாவில் செய்யத் துணியாத முற்போக்கான பனிரெண்டு கட்டளைகள் அன்று அறிவிக்கப்பட்டன. அதில் முதல் கட்டளை என்ன தெரியுமா?

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்!”

இன்னும் இருக்கிறது......

“கந்து வட்டிக்காரர்களை விசாரணையின்றி நடு வீதியில் தண்டிப்பது”
“இந்தியர்களுக்கு மட்டுமே வாணிபம் செய்யும் உரிமை”

130 நாட்களுக்குள், ஆங்கிலேயர்கள் தங்களுக்கிருந்த தகவல் தொடர்பு காரணமாக சுதாரித்து, இந்த புரட்சியை ஒடுக்கினர். 1857 செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் டெல்லியை மீண்டும்  கபளீகரம் செய்தனர். மன்னர் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்தோடு விடவில்லை. வெறி பிடித்துக் கோரத்தாண்டவம் ஆடினர். கண்ணில்பட்டவர்களைக் கொன்று தள்ளினர். ஜான்சிராணி வீரத்துடன் போர் புரிந்து மரணம் அடைந்தார். அவெத் மாகாணத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களும், காசியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டனர்.

இதனை நேரில் பார்த்த கிரி பித்ஸ் என்பவர் தனது siege of delhi நூலில் எழுதுகிறார்:

“தெருக்கள் கடுமையான அதிர்ச்சியில் தாக்குண்டு மயான அமைதியோடு கிடந்தன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்த பிரதேசத்திலேயா நாம் இப்போது இருக்கிறோம் என்பதையே நம்ப முடியவில்லை.சிப்பாய்களும், ஜனங்களும் உயிரற்றுத் தரையெங்கும் எல்லாத் திசைகளிலும் கிடந்தார்கள். குடலைப் புரட்டுகிற தாங்க முடியாத நாற்றம் காற்றில்...”

அடிவயிறு பதைபதைக்க பெருந்துக்கத்தின் சாட்சியாய் கிடந்தது இந்த மண். ஒரு வெள்ளி பூத்ததைப் பார்த்த சிறு சந்தோஷத்தில் திளைப்பதற்குள் நட்சத்திரங்களையெல்லாம் வானம் இழந்து நின்றது. ஆங்கிலேய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும், தீவீர கண்காணிப்புகளையும் செலுத்தியது.

1857 டிசம்பரில் கவிஞர் மிர்ஜா காலிப் தனது நண்பருக்கு எழுதுகிறார்...

முன்ஷி ஹர்கோபால் தஃப்தா அவர்களுக்கு!

நாமெல்லாம் கூடிக் கவிதைகள் பாடி இன்பமாகப் பொழுது போக்கிய அந்தக் காலம் இப்போது கனவு போல் இருக்கிறது. இன்று அந்தச் சூழ்நிலை, அந்த நிலவரம், அந்த வசதி எல்லாம் போய் விட்டன. நட்பு, பரிவு, மதிப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.

நான் வேறு பிறவி எடுத்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது இருந்த டில்லியா இது. மக்கள் எல்லோரும் டில்லியை விட்டுப் போய் விட்டார்கள். போகாதவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ள நிலைமையை எழுதவே அச்சமாய் இருக்கிறது. ஆங்கிலேயே ஜெனரல் துரை ஆட்சியில் கெடுபிடி அதிகம். கோட்டை வாசலில் தினமும் விசாரணை. வழக்கு, பரிசோதனை.  இன்று வரை அதே நிலைமைதான். மேலே என்ன நடக்கப்  போகிறதோ தெரியவில்லை.

மத அடையாளங்களைத் தாண்டி கடிதம் எழுதியவரும், எழுதப்பட்டவரும் டில்லி வீதிகளில் எப்படியெல்லாம் உலாவித் திரிந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கும் போது ஆச்சரியங்களின், சந்தோஷங்களின் பூமியாக தெரிகிறது. வரலாறு என்பது வெறும் செய்திகளின் தொகுப்பா. நம் மூதாதையர்களின் எலும்புகளிலிருந்து உருவி எடுக்கப்பட்ட வாழ்க்கை அல்லவா?

பி.கு: எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கரின் பெரும் பங்களிப்போடு என் எழுத்தில் வந்த ”வீரசுதந்திரம் வேண்டி...” புத்தகத்தில் சில பக்கங்களை வாசித்திருக்கிறேன். இன்னும் கிராமங்களில், ஜனங்களைக் கூட்டி விடிய விடிய புத்தகம் வாசிப்பது நமது மரபாயிருக்கிறது. தேசமே அப்படி உட்கார்ந்து படிக்க வேண்டிய பக்கங்கள் இவை. எனது 150வது பதிவு இது.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. very moving account.The information on Allen Octavian Hume was very useful I read it aloud to my children.Amal

    பதிலளிநீக்கு
  2. முகமது பாருக்29 மார்ச், 2009 அன்று 9:15 AM

    முதலில் வாழ்த்துகள் அண்ணா..

    //கலெக்டர் ஆலன் விக்டோ ஹியும் சிப்பாய்கள் வரும் பாதையில் பெரும் குழிகளைத் தோண்டி வைத்தான். சூழ்ச்சி பலிக்கவில்லை. எதிர்கொள்ள முடியாமல், உயிர் பிழைக்க இறுதியில் பெண்வேடம் தரித்துத் தப்பினான்.( இந்த தந்திரக்காரன்தான் பின்னாளில் இந்திய தேசீய காங்கிரஸ் கட்சியை உருவாக்கினான்!)//

    காங்கிரஸ்காரர்கள் எந்த வரலாறுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை..ஆனால் எல்லா தலைவர்களை வைத்து ஓட்டு பொறுக்கி விடுவார்கள்..தேசத் துரோகம் என்ற வார்த்தைக்கு சொந்தமானவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள்..


    //இன்னும் கிராமங்களில், ஜனங்களைக் கூட்டி விடிய விடிய புத்தகம் வாசிப்பது நமது மரபாயிருக்கிறது. தேசமே அப்படி உட்கார்ந்து படிக்க வேண்டிய பக்கங்கள் இவை..//

    உண்மைதான் ..நமது வீர சுதந்திரத்தை எடுத்துச் செல்வோம் அடுத்த தலைமுறைக்கு...

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  3. Hallo madhavaraj sir!
    This is a important day in Indian history as well as You.This is 150 th article..I feel happy and proud of you.Your hard working dragging you to "Long march".But what i feel is the speed shall be restricted.Then only we will get a fresh fruits from you.And also you should come out from the work pressures.my wishes---R.Slvapriyan-Chalakudy

    பதிலளிநீக்கு
  4. 150 வது பதிவுக்கு முதலில் வாழ்த்துக்கள்...

    வரலாற்றுப் பதிவு..நன்றாக அமைந்திருந்தது..

    பதிலளிநீக்கு
  5. 150 பதிவிற்கு, வாழ்த்துக்கள் ஐயா! இன்னும் கிராமங்களில், ஜனங்களைக் கூட்டி விடிய விடிய புத்தகம் வாசிப்பது நமது மரபாயிருக்கிறது. தேசமே அப்படி உட்கார்ந்து படிக்க வேண்டிய பக்கங்கள் இவை.
    நிச்சயமாக, இன்னும் நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள் .

    பதிலளிநீக்கு
  6. சிப்பாய்க் கலகத்தை பற்றி சில கூடுதல் தகவல்களை இன்று தெரிந்துகொண்டுள்ளேன்.

    உங்கள் பதிவுலக வரலாற்றில் கூட இன்று முக்கிய தினமாக இருக்கலாம். 150 பதிவு - நட்சத்திரப் பதிவாக.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. முக்கியமான வரலாற்றுப் பதிவுக்கு நன்றி

    150 பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அண்ணா 150 பதிவுக்கும்

    //வரலாறு என்பது வெறும் செய்திகளின் தொகுப்பா.
    நம் மூதாதையர்களின் எலும்புகளிலிருந்து உருவி எடுக்கப்பட்ட வாழ்க்கை அல்லவா?//

    இன்றைய சுதந்திர தினங்கள் வெறும் விடுமுறை கொண்டாட்டமாகவே
    நாலு பேருக்கு இனிப்பு கொடுத்து வரலாறு காணாத பாதுகாப்புகளுடன்
    குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் தலைவர்களின் வாய்பேச்சில் கழிகிறது

    பதிலளிநீக்கு
  9. 150க்கு வாழ்த்துகள் அண்ணா.

    எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உங்கள் இடம் வெகு உயரத்தில் இருக்கிறது..!!!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் மாதவராஜ் சார்

    வரலாற்று பக்கங்கள் பெரும்பாலும்
    இரத்தகறை படிந்ததாகவே இருக்கின்றன ஏனோ.

    வரலாற்றை பற்றிய இப்பதிவில்
    உங்கள் எழுத்து மேலும் உங்களில்
    ஈர்த்துச் செல்கின்றது.

    பதிலளிநீக்கு
  11. அறியாச் செய்திகள் அறியத்தந்தமைக்கு நன்றி.வரலாறு படித்தால் துப்பாக்கியில் கொழுப்பு,1857 முதல் சிப்பாய்கள் கலகம் என்று முடிந்து விடும்.பகதூரி ஷா,ஜான்சி ராணி பெயர்கள் தனித் தனியே வாசிக்கப் படும்.இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பது இப்போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  12. உங்களின் எல்லாபதிவுகளை வசிக்கிறான் மிகவும் அருமை .

    பதிலளிநீக்கு
  13. வரலாற்றுப்பதிவு வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்களில் உலவவிட்டிருக்கிறது

    150 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. இந்திய சுதந்திரப் போரின் முக்கியமான பக்கங்கள் நம் தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம்தான் திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    எதோ காந்தி வந்தார், இரத்தம் சிந்தாமல் எல்லாம் நல்லபடி நடந்ததாக இங்கு கற்பிதம் செய்ய்ப்படுகிறது.


    முன்னூறு ஆண்டுகளின் போராட்டத்தை, முப்பது ஆண்டுகளாகச் சுருக்கி, மற்ரவைகளை இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

    இங்கு சன்னியாசிகளிலிருந்து, ஆதிவாசிகள் வரை எல்லோருமே பிரிட்டிஷாரை எதிர்த்து போராடி இருக்கின்றனர்.

    அந்த வரலாற்றுக் குறிப்புகளை நாம் நமது எதிர்வரும் தலைமுறையினருக்குச் சேர்க்க வேண்டும்.

    அதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆயுதம்.

    வந்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!