(முன்குறிப்பு: சில வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை இது. என் பழைய டைரியின் பக்கம் என்றும் கொள்ளலாம்.)
நடந்து வர வர காமிரா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மூன்று பெண் காவலர்கள் அருகிலேயே வந்து கொண்டிருக்கின்றனர். சுற்றிலும் காவல்துறையினர். வக்கீல்கள். காமிராவோடு சில நிருபர்கள். பின்னணியில் செய்தி வாசிக்கப்பட, வாசிக்கப்பட அவர்கள் அனைவரும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். காட்சி மாறவில்லை. நடுவில் வருகிற அந்த பெண் மட்டுமே மாறிக் கொண்டு இருக்கிறார். ஜெயலட்சுமி நடந்து வருகிற இ டத்தில் ஷெரினா. அதற்கு முன்பு ஜீவஜோதி. நீதிமன்ற படிக்கட்டுகள் இவர்களின் காலடியோசையை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. 'மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது', 'இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என தெரிகிறது', இப்படியே ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகள் விடாமல் தொடர்கின்றன.
'இதெல்லாம் ஒரு முக்கியமான விஷயமா, அவனும் போடறான்னு இவங்களும் விழுந்து விழுந்து பாக்கிறானுங்க' என்று அலட்சியப்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள். என்றாலும் ஜெயலட்சுமியின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. டீக்கடைகளில், அலுவலகங்களில் மட்டுமல்ல, குடும்பங்களுக்குள்ளும் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. செய்திகளுக்குள் அலுக்காமல் மனிதர்கள் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.. 'உல்லாசம்', 'சல்லாபம்' 'சாகசம்' 'வலை விரித்து' போன்ற வார்த்தைகள் தரும் அர்த்தங்கள் தமிழில் விநோதமானவையாக இருக்கின்றன. சுவராஸ்யம், ஆச்சரியம் எல்லாம் தாண்டி ஒரு உந்துதல் இருப்பதை அறிய முடிகிறது. ஒருவரின், அதிலும் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி கொடுக்க ப்பட்டிருக்கிறது. அதன் ருசி உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு தொழில் அதிபர். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் அரசியல் பிரமுகர். இந்த பெண்ணின் வாழ்வில் முக்கியமாக காவல் துறையினர். அந்தப் பெண்களின் உடல்களின் வழியாகவே கதைகள் சொல்லப்படுகின்றன. உண்மைகள் வாடி கிழே விழுந்து கிடக்கின்றன. அவர்களுக்கு அடிப்படையில் தேவையாய் இருந்தது ஒரு வசதியான வாழ்க்கை. அதற்கான பாதைகளைத் தேடுகிற போது அழைத்துச் செல்ல நீளும் கைவிரல்களில் நகங்களும் நீண்டிருக்கின்றன. இதில் யார் யாரை குற்றம் சுமத்துவது?
காரும் பங்களாக்களும் கிடைக்கின்றன. அதிகாரம் கிடைக்கிறது. மாய உலகத்தில் மிதக்கின்றனர். சூழ்ச்சிகள் நிரம்பிய சதுரங்கத்தில் மனதும், உடலும் காயமேறி பகடைக்காய்களாகின்றனர். திடுமென எல்லாம் கலைகிறது. கணவர் கொலை செய்யப்படுகிறார். வீடு முழுவதும் கஞ்சா வந்து கிடக்கிறது. குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. அலறி எழும்புகின்றனர். சிறகுகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன. அகலிகைகளாய் சபிக்கப்படுகின்றனர்.
இந்தப் பெண்கள் தொடர் செய்தியாக வருகிற காலத்தில்தான் வேறு செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. 'கடன் தொல்லையால் தற்கொலை', ' குடும்பத்தோடு விஷமருந்திச் சாவு' அடிக்கடி நடக்கிறது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதேயில்லை. அடிப்படையில் இந்த இரண்டிற்குமான காரணம் ஒன்றாகவே இருக்கிறது. துயரங்களும், நிலையற்றதுமான வாழ்வோடு எதிர்த்து நின்று போராட முடியாதவர்களின் இரண்டு முகங்கள்தான் இவை. ஒரு முகம் நேர்மை தவற மறுத்து தன்னை அழித்துக் கொள்கிறது. இன்னொன்று நேர்மை தவறி முகத்தை மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டாவது முகமே நமது மூளைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சமூகம் கற்பித்திருக்கும் ஒழுக்கம், சட்டங்கள் வகுத்திருக்கும் நெறிகள் இவர்களை எல்லோர் முன்பும் இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது எனச் சொல்லிவிட முடியாது. எல்லோர் முன்னாலும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தாலும், தேவதைகளாக காட்சியளிக்க முடிகிறது இந்தப் பெண்களால். அதுதான் நடுக்கமேற்படுத்துகிறது. அக்கினிப் பிரவேசம் கதை எழுதிய பிறகு எதிரே வருகிற முன்பின் தெரியாத கார்களிடம் விரல் நீட்டி லிப்ட் கேட்ட பெண்களை பார்க்க முடிந்தது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை வருத்தத்தோடு சொன்னார். இந்த எதிர்மறையான உளவியல் பிரச்சினையோடு விஷயங்களைப் பார்த்தால்தான், இந்தக் கதைகள் எங்கே போய் முடியும் என்று தெரியும். இந்தப் பெண்களை விழுங்குகிற காமிராக்கள் ஒழுக்கம் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் வேறுவகையான பிம்பங்களையே வெளியே தள்ளுகின்றன.
தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் மோனிகா லிவின்ஸ்கி சமாச்சாரத்திற்கு முன் இவ்வளவு தூரம் தொடர் பிரபலமானதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதும் பத்திரிக்கைகளின் விற்பனையில் மோனிகா லிவின்ஸ்கி ஏற்படுத்திய சாதனை முக்கியமானது. வெள்ளை மாளிகையில் கிளிண்டனின் இருட்டாக மோனிகா லிவின்ஸ்கி காட்சியளித்தார். அவரது உள்ளாடைகள் கூட சாட்சியமானது. நாட்டின் மிக உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவரை நோக்கி விரல் நீட்ட இங்குதான் முடியும் என்று அமெரிக்கா தனது ஜனநாயக மாண்புகளை சுதந்திரதேவியைப் போல தூக்கிப் பிடித்து மார்தட்டிக் கொண்டது. பில்கிளிண்டன் தனது கோர்ட் கசங்காமல் பாவமன்னிப்புப் பெற்று கௌரவம் பாதிக்கப்படாமலிருந்தார். பிறகு ஒருமுறை இந்தியாவுக்கும் அந்த கனவான் வந்து ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் நமது பெண்மக்களோடு நடனமெல்லாம் ஆடினார். இப்போது எல்லாவற்றையும் தனது சுயசரிதையில் எழுதி பத்திரப்படுத்தியிருக்கிறார். மோனிகா லிவின்ஸ்கியும் தனது சுயசரிதையை எழுதி அமோகமாய் சம்பாதித்துக் கொண்டார்.
இங்கே ஜெயலட்சுமியின் கதையை சினிமாவாக எடுக்கப் போவதாகச் செய்திகள் இருக்கின்றன. யார் குற்றங்கள் செய்தது, அவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்கிற மர்மங்களின் திரையில் அவர் ஒரு தேவதையாய் சித்தரிக்கப்பட இருக்கிறார். இளவரசி டயானாவின் காதலை இவர்கள்தான் எழுதினார்கள். அவர் கல்யாணத்தை இவர்கள்தான் பிரமாதப்படுத்தினார்கள். மணவாழ்வின் முரண்பாடுகளை மாறி மாறி எழுதி விவாகரத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். பிறகு டயானாவின் அந்தரங்க வாழ்க்கையை கதை கதையாய் சொன்னார்கள். அவரது காரை துரத்தி மரணத்தை பார்த்தார்கள். அப்புறம் அன்னை தெரசாவிற்கு பக்கத்தில் பெரிதாய் அஞ்சலி செலுத்தி தேவதையாக்கினார்கள்.
'புத்திசாலித்தனமும், நிராசையும் மிக்கவர்களாக தேவதைகள் இருக்கிறார்கள்" என்று கலீல் கிப்ரான் எழுதுகிறார். இங்கு நிராசையின் உருவங்களாக மட்டுமே தேவதைகள் இருக்கிறார்கள். நிராசை கொண்டவர்களே அவர்களை தேவதைகளாக பார்ப்பார்கள். வாழ்க்கையில் சவால்களை எதிர்த்து நின்று போராடுகிறவ ர்களுக்கு இவர்கள் வெறும் பரிதாபத்துக்கு உரியவர்கள் மட்டுமே.
நீதிமன்ற படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அவர்களது கண்களைப் பாருங்கள். புரியும்.
*
ஊடகமெனும் பூதக்கண்ணாடிக்கு எதிராக மிகுந்த மனோதர்மத்துடன் ஆழ்ந்த பார்வையோடு நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் மிகச்சரியே
பதிலளிநீக்கு//பாதைகளைத் தேடுகிற போது அழைத்துச் செல்ல ந ளும் கைவிரல்களில் நகங்களும் நீண்டிருக்கின்றன. இதில் யார் யாரை குற்றம் சுமத்துவது? //
மிக உண்மை
/அடிப்படையில் இந்த இரண்டிற்குமான காரணம் ஒன்றாகவே இருக்கிறது. துயரங்களும், நிலையற்றதுமான வாழ்வோடு எதிர்த்து நின்று போராட முடியாதவர்களின் இரண்டு முகங்கள்தான் இவை. ஒரு முகம் நேர்மை தவற மறுத்து தன்னை அழித்துக் கொள்கிறது. இன்னொன்று நேர்மை தவறி முகத்தை மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டாவது முகமே நமது மூளைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது./
பதிலளிநீக்குஇவ்விசயத்தில், உங்களின் பார்வை,கண்ணோட்டம் உங்கள் மீதான வியப்பை,மதிப்பைக்கூட்டுகிறது.
/அவனும் போடறான்னு இவங்களும் விழுந்து விழுந்து பாக்கிறானுங்க' /
ரெட்டை அர்த்தத்துலப் படிச்சுட்டுச் சிரிச்சுக்கிறன்.இதனாலதான் நீங்க அப்படி இருக்கீங்க.:)
நான் இப்படி இருக்கிறேன்:(
/இங்கே ஜெயலட்சுமியின் கதையை சினிமாவாக /
ஜெயலட்சுமியின் சதையை...
அந்தரங்கம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஆண் பெண் கலந்த அந்தரங்கம் என்பது கொஞ்சம் கிளுகிளுப்பானது.
பதிலளிநீக்குவெறும் கடந்தொல்லை என்பது துலாபாரம் படம் பார்ப்பது போல் இருக்கும்.
ஆனால் அத்தியாயம் அத்தியாயமாய் வரும்போது ஜயலட்சுமியும் லெவின்ஸ்கியும் பயங்கர திரில்லர் சமாச்சாரங்களை கொடுத்தார்கள். இதில் ஆண்களின் அந்தரங்கமும் சேர்ந்துதான் எட்டிப் பார்க்கப் பட்டது.
/
பதிலளிநீக்குசூழ்ச்சிகள் நிரம்பிய சதுரங்கத்தில் மனதும், உடலும் காயமேறி பகடைக்காய்களாகின்றனர். திடுமென எல்லாம் கலைகிறது. கணவர் கொலை செய்யப்படுகிறார். வீடு முழுவதும் கஞ்சா வந்து கிடக்கிறது. குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. அலறி எழும்புகின்றனர். சிறகுகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன. அகலிகைகளாய் சபிக்கப்படுகின்றனர்.
/
:(((
சூழ்ச்சி செய்பவர்கள் பெரும்பாலான சமயங்களில் தப்பிவிடுகிறார்கள் - வேதனை
இந்த உலகம் உருவான காலத்திலிருந்தே பெண்கள் போகப்பொருளாகவும் ஆணிற்கு அடிமையாகவும் தான் உருவகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். மத நூல்களில் கூட ஆணாதிக்க மனோபாவமே பல இடங்களில் துருத்திக்கொண்டிருக்கிறது. ஆணாதிக்கம் இருக்கும் வரை எப்பொழுதும் இது தொடர்ந்துக்கொண்டே இருக்கும். இதில் நாமும் ஒரு அங்கம் என்பது தான் வேதனையளிக்கும் நிதர்சனம்.
பதிலளிநீக்குஆழமான கட்டுரை.
ஊடகங்களில் அதிக பட்சமாகவரும் பெண்களின் அட்டைப்படங்கள், கவர்ச்சிப்படங்கள் வர யார் காரணம். அவர்கள் கூறுவது மக்கள் விரும்புவதை அளிக்கிறோம், மக்களை சிற்றின்ப செய்திகளில் மூழ்கடித்துவிட்டு முக்கிய நிகழ்வுகளை மறைக்கும் வேலைகள் நடக்கிறதோ என ஐயம் வருகிறது இது மட்டுமல்லமல் சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொடர்கள் அதில் சித்தரிக்கப்படும் தவறான பெண்கள் சாபக்கேடு என்னவென்றால் அதை அதிகம் பார்ப்பது பெண்கள் தான்.
பதிலளிநீக்குமாற்று ஊடகங்கள், சமூக அக்கறையுள்ள குறும்படங்கள் மக்களிடம் பிரபலம் ஆவதில்லை.
மனக்கண்ணாடி முன் நின்றால் கண்ணாடியில் தெரியும் அசல் குற்றவுணர்சியில் தலைகவிழ்ந்தே நிற்கும், பெரும்பான்மையான ஆண்களுக்கு! ஒப்புக்கொள்ளவேண்டிய குற்றம். பெண்கள் இதுபோன்ற செய்திகளை எவ்வாறு வாசித்திருப்பார்கள்? பெண்ணின் அவலம் என்றா? ஆணின் அந்தரங்கம் என்றா?
பதிலளிநீக்குவேதனையாக இருக்கிறது.
பதிலளிநீக்கு// அந்தப் பெண்களின் உடல்களின் வழியாகவே கதைகள் சொல்லப்படுகின்றன. உண்மைகள் வாடி கிழே விழுந்து கிடக்கின்றன. //
பெண்கள் பற்றி வித்தியாசமான பார்வை. ஆழ்ந்த மனிதநேயம் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட பார்வை நமது ஊடகங்களுக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். லாபப்பிசாசுகளான அவர்களிடம் இதை எப்ப்டி எதிர்பார்க்க முடியும்.
உண்மை சுடும். இவர்கள் தேவதைகளோ,மற்ற எதுவோ ,பத்திரிகைகளுக்கு உணவு கொடுத்தார்கள். டயனா வாழ்க்கையும் கொடுத்தார்.
பதிலளிநீக்குஇன்னோரு நிஜ தேவதையின் மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அந்த ஆகஸ்ட் மறக்க முடியாதது.
"புத்திசாலித்தனமும், நிராசையும் மிக்கவர்களாக தேவதைகள் இருக்கிறார்கள்"
பதிலளிநீக்குBut why?
//காட்சி மாறவில்லை. நடுவில் வருகிற அந்த பெண் மட்டுமே மாறிக் கொண்டு இருக்கிறார்.//
பதிலளிநீக்குஉங்கள் சமூகம் குறித்த சிந்தனை
கூர்மையானது, செயதிதாள்களில்
படித்து விட்டு அது சொல்லும் பிம்பங்களை வைத்து கேலி பேசியும் நேரம் போக்க எவைஎவைகளையோ
தினித்து பேசி திரியும் சாமானியனாலிருந்து விலகுகிடன்றீரகள்.
//பெண்களை விழுங்குகிற காமிராக்கள் ஒழுக்கம் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் வேறுவகையான பிம்பங்களையே வெளியே தள்ளுகின்றன.//
100% உண்மையை இரண்டுவரிகளில்
சொல்லிவிட்டீங்க.
//அடிப்படையில் இந்த இரண்டிற்குமான காரணம் ஒன்றாகவே இருக்கிறது. துயரங்களும், நிலையற்றதுமான வாழ்வோடு எதிர்த்து நின்று போராட முடியாதவர்களின் இரண்டு முகங்கள்தான் இவை. ஒரு முகம் நேர்மை தவற மறுத்து தன்னை அழித்துக் கொள்கிறது. இன்னொன்று நேர்மை தவறி முகத்தை மாற்றிக் கொள்கிறது. இந்த இரண்டாவது முகமே நமது மூளைக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.//
சமூகத்தின் உட்கூர்களை அலசிவருகின்றது உங்கள் பார்வை.
இக்கட்டுரையை சட்டென்று படித்து விட்டு விடுபட முடியவில்லை அதன் உன்மை நம்மிடம் மீள்கேள்விகளை கேட்டுக் கொட்டே இருக்கின்றன.
ஆணின் அந்தரங்கமும் தானே எட்டிப்பார்க்கப்படுகிறது
பதிலளிநீக்குஊடகம் என்றாலே இப்படி விமர்சனத்திற்குள்ளாவது எதனால்....
பதிலளிநீக்குநல்ல அலசலுங்க.. தலைப்பைப் பார்த்ததும் நான் வேற ஏதோ பதிவோன்னு நினைச்சேன்.. ஹி ஹி.
பழைய கட்டுரை என்றே தெரிய வில்லை. காட்சிகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆட்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிலளிநீக்குபதிவில் சொல்லி இருந்ததை மறு பேச்சு பேசாமல் ஆமோதிக்கத் தோன்றுகிறது.
மிக முக்கியமாய் எழுத்து நடை கட்டிப் போட்டு போய் விட்டது. அவலத்தை சொல்ல வருகின்ற பதிவில் எழுத்து நடையைப் பற்றி பேசுகிறோமே எனும் குற்ற உணர்ச்சி எழும்பினாலும் நீங்கள் சொல்ல வருவதை தெளிவாகச் சொல்லிவிட்டுப் போன இந்த உயிரோட்டமுள்ள எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் பதிவில் நான் சொல்ல வந்ததை கருத்து தெரிவித்திருக்கும் அனைவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பதிலளிநீக்குசுரேஷும், புருனோவும் “ஆண்களின் அந்தரங்கமும்” எட்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் ஆண்களின் அந்தரங்கம் சாகசமானதாகவும், பெண்களின் அந்தரங்கம் அருவருப்பானதாகவும் பார்க்கப்படுகின்றன என நினைக்கிறேன்.
பத்திரிகைகள், தார்மீக நெறியிழந்து நிற்கின்றன. அதுதான் மிக முக்கியமாக விமர்சிக்கப்பட வேண்டியது.
ஹரிஹரன் சொன்னது போல மாற்றுப் பார்வைகளை உருவாக்கும் இலக்கியம், கலைப்படைப்புகள் அவசியம்.
மஞ்சூர் ராஜாவின் பார்வை கவனத்திற்குரியது. சமூகம் இந்தக் கழுகுக் கண்களை எங்கிருந்து பெற்றிருக்கிறது எனபதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
கருத்து தெரிவித்த யாத்ரா, முத்துவேல்,சுரேஷ், மங்களூர் சிவா,மஞ்சூர் ராஜா, தீபா, வல்லிசிம்ஹன்,யாத்ரா, விஜ்ச்ய், புருனோ, ஆதவா ஆகியோருக்கு என் நன்றிகள்.
நந்தா!
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டு உற்சாகத்தையும், இன்னும் நன்றாக எழுத வேண்டுமே என்ற எச்சரிக்கையையும் தருகிறது.
மனதைத்தொடும் பதிவு....
பதிலளிநீக்குநிறைய சிந்திக்கவேண்டியிருக்கிறது.
ஒரு பரபரப்பான நிகழ்வை செய்தியாக தருவதே ஊடகங்களின் வேலை. தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகள் ஊடகங்களில் வராவிட்டால் உங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்காது.
பதிலளிநீக்குஇங்கிலாந்தின் ரோஜா, தேவதை என்றெல்லாம் புகழப்படும் டயானாவின் இன்னொருபுறம் எவ்வளவு மோசமானது என்று தெரிவதற்கு காரணம் ஊடகங்கள் தான். தொழில் அதிபரால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதி, அரசியல் புள்ளி ஆதரவில் வாழ்ந்ததற்காக அலைக்கழிக்கப்பட்ட ஷெரினா, பொலிசாருக்கு பாதிப்பு ஏற்படுத்திய, போலீசாரால் பாதிக்கப்பட்ட ஜெயலெட்சுமி ஆகியோர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வராவிட்டால் வெளியே
தெரிந்திருக்காது. பலர் முகமூடி கிழிந்து இருக்காது.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் சாதனை செய்த மாணவ-மாணவிகளை துரத்தி,துரத்தி அவர்களின் படங்களும், செய்திகளும் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. மதுரை அருகே குக்கிராமத்தை சேர்ந்த பெண்மணி சின்னபிள்ளையின் சாதனையையும், பிரதமர் வாஜ்பாய் அவர் காலில் விழுந்ததையும் பிரமாதப்படுத்தியது ஊடகங்கள்தான். அப்துல் கலாமின் ஒவ்வொரு அசைவுகளையும்,வார்த்தைகளையும் செய்தியாக்கியதும் ஊடகங்கள்தான். இரண்டு கால்களும் இல்லாவிட்டாலும் கார் மெக்கானிக்காக பணியாற்றும் வாலிபர், கண் பார்வை இல்லாத மாண்வி தேர்வு எழுதும் செய்திகள், படங்கள் ஊடகங்களில்தான் வெளியாகின்ற்ன.
கலவர பூமியாக இருந்தாலும், கார்கில் போர்க்களமாக இருந்தாலும் குண்டுகளுக்கு இடையே ஓடித்திரிந்து உயிரோட்டமான செய்திகளையும்,படங்களையும் மக்களுக்கு தருபவை ஊடகங்கள்தான்.
ஆனால் இவை எதுவும் தங்கள் மனதில் நிற்கவில்லை. ஜெயலெட்சுமி, ஷெரினா, ஜீவஜோதி ஆகியோரின் கதையும், சதையும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
"அவனும் போடறான்னு இவங்களும் பாக்கிறாங்களே" என்பது நியாயமில்லாத வார்த்தைகள்.����
வார்த்தைகள் ஒரு நீரோடையை போல எவ்வித சலனுமுமில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குரொம்ப அற்புதமாக உள்ளது கட்டுரை!
//ஆண்களின் அந்தரங்கம் சாகசமானதாகவும், பெண்களின் அந்தரங்கம் அருவருப்பானதாகவும் பார்க்கப்படுகின்றன //
பதிலளிநீக்குஅப்படித்தோன்றவில்லை. பல திருமணங்கள் செய்வது வேண்டுமானால் அப்படித்தோன்றலாம்.
கிளிண்டன் பற்றிய செய்திகள் அவரது சாகஸமாகவா உங்களுக்கு தோன்றியதா?. அல்லது மற்றவர்களுக்கு தோன்றியதா? இல்லையே...
இதுபோன்ற செய்திகளை விவாதிப்பதில் ஒரு கிளுகிளுப்பு. அவ்வளவுதான். மற்றபடி அந்தரங்கள் பறிபோனது; அவமானப் படுவது எல்லோருக்கும் ஒன்றுதான். மொத்தத்தில் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.
திருச்சி விஜயராஜ் அவர்கள் சொன்ன கருத்துகள் அனைத்தும் அருமை!!!!
பதிலளிநீக்குசிந்திக்க வைத்தது
பாராட்டுகள்!!!! பாராட்டுகள்!!!!!!
நவீன்!
பதிலளிநீக்குஸ்ரீ-நிசி!
சுரேஷ்!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
சுரேஷ்!
கிளிண்டன் பற்றி இந்தச் செய்திகள் கேள்விப்படாவிட்டலும் அவர் மீது எனக்கு மதிப்பு வந்திருக்காது.
அதற்குப் பிறகு இந்தியா வந்த அவரை இந்த அரசும், இராஜஸ்தானும் எப்படிக் கொண்டாடியது என்பது உங்களுக்கு நினைவிருக்குமே!
விஜயா!
பதிலளிநீக்குஉங்கள் கருத்துப் படித்தேன்.
//"அவனும் போடறான்னு இவங்களும் பாக்கிறாங்களே" என்பது நியாயமில்லாத வார்த்தைகள்// என்று முடித்திருக்கிறீர்கள். இந்தக் கருத்தை நான் சொன்னதாக சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதாக எழுதியிருக்கிறேன்.
இருக்கட்டும். மற்ற உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் மிக உண்மையாகவே பேசியிருக்கலாம். ஆனால் அவை உண்மையல்ல. நியாயமுமல்ல என்பது என் அபிப்பிராயம். உண்மை போலும் தோன்றும் பெரும் பொய்கள். இதற்கான விரிவான பதிலை நாளை தனிப் பதிவாகவே எழுதுகிறேன். படியுங்கள். அப்புறம் பேசுவோம்.
பொன்ராஜ்!
உங்களுக்கும்தான்.
யானைக்கும் அடி சறுக்கும்!!! என்பார்கள்.
பதிலளிநீக்குஅனால் தங்களுக்கு அடி சறுக்கக் கூடாது.... என்பது எங்கள் ஆசை!!!!
வாழ்த்துக்கள்.
கோபம் கூடாது !!!
naan enna sonnalum sarithan
பதிலளிநீக்குநம் தேசம் ஆயிரம் மனைவிகள் கொண்ட தசரதனை கொண்டாடிய தேசம்.
பதிலளிநீக்குநம் தேசம் ஐந்து கணவன் கொண்ட திரௌபதியை கொண்டாடிய தேசம்.
கிளிண்டனும், ஜெயலஷ்மியும் இவர்களுக்கு குறைந்தவர்களா ?
எந்த பார்வையை வைத்துக்கொண்டு இவர்களிடம் குற்றம் காண்பது ?
காலம் காலமாய் எல்லா விதமான பார்வைகளும், அதனதன் பங்கிற்கு ஆட்சி செலுத்தியே வந்துள்ளன. கால சக்கரத்தில் அவை ஜெயித்தும், தோற்றும் போயுள்ளன.
ஏன் ஜெயலஷ்மி தேவதையாக முடியாது ? கிளிண்டன் தசரதன் ஆக இன்னும் 998 வேண்டும்.
நாம் இறந்த காலத்தையும் குற்றம் சொல்வதற்கில்லை, நிகழ் காலத்தையும் குற்றம் சொல்வதற்கில்லை. உலகம் ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சிக்கும், பார்வைக்கும் உட்பட்டே இயங்குகிறது. எத்தனை ஊடகங்கள் வந்தாலும் பாரதியின் வேகம் தணிந்து விடாது, ராவணனின் ஆசை அழிந்து விடாது, மாதவ்வின் பக்கங்கள் தீராது, ..........
இந்த பதில் விஜயா என்பவருக்கானது.
பதிலளிநீக்குஏன் தேவதைகள் புத்திசாலித்தனத்துடனும், நிராசைகளுடனும் இருக்கிறார்கள்?
என் பார்வையில் அவர்கள் சந்தோஷத்துடனேயே இருக்கிறார்கள். ஆனாலும், உங்களுக்கான பதில்...
நல்ல புத்தி, எல்லாவற்றிலும் முழுமையை தேடுவது. அது கிடைப்பதுண்டா? அதனால்தான் நிராசை.
உங்களுக்கு தெரிந்த தேவதைகளிடம் கேட்டுத்தான் பாருங்களேன் !!
இன்றைய ஊடகங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும்..எல்லோரும் விழு ந்து விழுந்து படிக்கவேண்டுமானால் அதற்கு திரெளபதிகளின் அந்தப்புற கதைகள் தேவைப்படுகின்றன.அன்று ஜெயலட்சுமி..இனி ஈரோடு வள்ளி அவர்களின் கதைக்காக ஊடகங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன..ஏனெனில் பாதிக்கப்படுவது அவர்களின் குடும்பப்பெண்கள் இல்லையல்லவா?
பதிலளிநீக்குஆ.ஈசுவரன்