“ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க”

 

letter

இப்போது ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறேன். தொடர் விளையாட்டு. இலக்கியமாகத்தான். கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள் எழுதி முடித்த பிறகு தோன்றியது இது. கடிதம் எழுதும் வழக்கம் தேய்ந்து தேய்ந்து காணாமல் போன சமூகத்தில் இப்படி பற்ற வைப்போம் என பட்டது. முத்தையாவாக நான் கடிதம் ஒன்றை சாலமனுக்கு எழுதியிருக்கிறேன். இனி ஒரு பதிவாளர் சாலமனாக பதில் கடிதம் முத்தையாவுக்கு எழுத வேண்டும். யார் என்பதை கடிதம் வாசித்து முடித்த பிறகு சொல்வேன்.

--------------------------

                    முத்தையா
                    சென்னை

சாலமன்!

நான்தான் முத்தையா! ஆச்சரியமாக இருக்கிறதா?

நேற்று சண்முகம் வந்தான். ஒரு மாசமாக வராதவன் திடுமென முன்வந்து நின்று “ஏ..லம்பாடி” என்றான். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. “என்னடா.. ஆளையேக் காணோம்” என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன். பக்கத்து இருக்கைக்காரர்கள் திரும்பி பார்த்தார்கள். அலுவலகங்களில் நம் இயலபை தொலைத்துவிட்டுத்தான் உட்கார வேண்டியிருக்கிறது. எதுவுமே இங்கு அமைதியாகத்தான். உனக்கு சிரிப்பு வருமே. கல்லூரி ஹாஸ்டலில் நான் சிரிக்கும்போதும், பேசும் போதும் நீ புத்திமதி சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆட்டோகிராபில்கூட எழுதியிருந்தாய்.... முத்தையாவுக்கு பதிலாக சத்தையா என்று.

சண்முகமும் நானும் வெளியே போய் விளங்காத ரெண்டு டீக்களை பேசிக் குடித்தோம். பிரமோஷனில் நாமக்கல்லுக்கு அடுத்த வாரம் போகிறானாம். பைக்கில் போய்க்கொண்டிருந்தவன் கம்ர்ஷியல் டாக்ஸ் ஆபிஸிற்கு இன்னும் கொஞ்சம் தொந்தியோடு காரில் போகலாம். “நம்ம செட்ல நீதாண்டா பிரமோஷன் எதுவும் ஆகாம கிளர்க்காகவே இருக்கே” என்று வருத்தப்பட்டான். மேலே போகப் போக எவனுக்காவது அடிமையாய் இருந்தாக வேண்டியிருக்கிறது. கூழைக் கும்பிடு, பல்லிளித்தல் எல்லாம் செய்தாக வேண்டும். இயல்புக்கு மீறி எதுவும் நம்மால் முடியாது. அதெல்லாம் அவனுக்குப் புரியாது. திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு ஏறும் வழியில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அந்தி சாயும் வேளையில் உன்னோடு பேசிய கணங்கள் இன்னும் சிலிர்ப்போடு நினைவுகளில் ததும்பிக் கொண்டிருக்கின்றன. நான்கு ஆண்டு காலம் உன்னைப் பார்க்காவிட்டாலும், உன்னோடு பேசாவிட்டாலும், நீ புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன். நான் அப்படித்தான்!

கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு சண்முகம் சென்று விட்டான். அவனுடைய ‘பிராக்டிக்கல்தனங்கள்’ எரிச்சலாயிருந்த போதிலும், இனி அவனை எப்போது பார்க்கப் போகிறோம் என்பது வேதனை தருகிறது. அவன் மட்டும்தான் நம்மோடு படித்ததில் சென்னையில் என் கூட இருந்தவன். சனிக்கிழமைகளில் பாரில் வைத்து ஒரு பெக் அடித்ததும் இரண்டு சிகரெட்டுகள் பற்ற வைத்து எனக்கு ஒன்றைத் தந்தவன். எப்படித்தான், என்னதான் பேசினாலும் கல்லூரி வாழ்க்கையும் கடந்தகாலமும் பேச்சில் வரும். சில நாட்களில் அவனோடு பீச்சுக்குச் சென்று காற்றின் பரவசத்தோடு மணலை அளைந்து கொண்டிருப்பேன். உன்னோடு வந்தாலே போர்தாண்டா என்று சிகப்பாய் போகும் எவளையாவது பார்த்துக் கொண்டிருப்பான். கடைசி வருசம் பம்பாய்க்கு நாம் டூர் போயிருந்த போது நீ கூடச் சொன்னாய், விவஸ்தையில்லாமல் பார்க்கிறான் என்று. பயந்து போகிற மாதிரி அப்படிப் பார்ப்பான். இன்னமும் பார்க்கிறான்.

வேறெங்கோ சென்று விட்டேன். சண்முகம் போனதும் என பக்கத்து சீட்டில் பணிபுரியும் சரண்யா, “யார் சார் இவர்.. அவ்வளவு சந்தோஷப்பட்டீங்க” என்று கேட்டார்கள். சொன்னேன். சொன்னேன் என்றால் நம் கல்லூரி, அரட்டை, சந்தோஷம் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சொன்னேன். ”அப்படியா”,  என்றுவிட்டு மௌனமானார்கள். பிறகு “ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க” என்றார்கள். எதற்கு என்றேன். “கூட படிச்சவங்க பழகினவங்களோடு தொடர்ந்து எப்படியோ ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறீங்க.. ஆனா, பொம்பளைங்க அப்படியில்ல. கல்யாணமானதும் எல்லோரும் எங்கெங்கேயோ போயிருவாங்க. புருஷன், புள்ளைங்க மட்டும்தான்.” என்று சொல்லிவிட்டு பைலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டார்கள். தலை நிமிரவில்லை. மேடம் என்றேன். பதில் இல்லை. நிமிர்ந்தார்கள். கண்கள் தளும்பியிருந்தன. ஸாரி என்று நானும் அமைதியானேன். சரண்யா தனது அருமையான காலங்களையும், நண்பர்களையும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் சட்டென்று உன் ஞாபகம் வந்தது. நானும் உன்னைத் தொலைத்து இருக்கிறேனே. இதில் ஆண்கள் என்ன, பெண்கள் என்ன...

வீட்டுக்கு வந்ததும் என் பழைய சூட்கேஸ் ஒன்றில் அள்ளிப் போட்டு வைத்திருந்தவைகளில் உன் கடிதங்களை தேடினேன். இருபத்தோரு கடிதங்களாய் இருந்தாய். படிக்க ஆரம்பித்தேன். “ஏங்க வச்ச காபி ஆறிப்போகுது... குடிச்சுட்டு படிங்க..”என்றாள் சித்ரா. சரியென்று கத்தினேன். “என்ன சொன்னேன்... ஏன் இப்படி சத்தம் போடுறீங்க..” என்று சொல்லிப் போய்விட்டாள். காபியை மடக் மடக்கென்று குடித்தேன், இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல.

டிகிரி முடித்து விட்டு, கோயம்புத்தூரில் நீ எம்.பி.ஏ படித்தது, சாந்தி தியேட்டர் அருகே செல்லாராம்ஸில் உதவி மேலாளராக இருந்தது, தங்கியிருந்த வீட்டிற்கு எதிரே உள்ள பெண்ணை நீ ரசித்தது, அவள் யாரையோ காதலித்து நுங்கம்பாக்கம் தாண்டி தண்டவாளத்தின் குறுக்கே பாய்ந்தது என்று உன் காலங்கள்  மெல்ல மெல்ல எனக்குள் நிரம்பிக்கொண்டு இருந்தன. அடர்த்தியான கவிதைகள் போல ஒவ்வொரு கடிதமும் இருந்தது. ஆமாம், இப்போது கவிதைகள் எழுதுகிறாயா...? எங்கே, கம்பெனியில் மிக உயர்ந்த பொறுப்பிலிருக்கும் நீ ஐம்பது பேருக்கு நல்ல மேய்ப்பனாக வேண்டுமானால் இருக்கலாம். அப்படித்தானே ஆகி விடுகிறது. மார்ஷிலின் நாகர் கோவிலில் ஒரு மரக்கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறான். கல்லூரி மலர்களில் அவன் வரைந்திருந்த ஓவியங்களை நானும், நீயும் எவ்வளவு ரசித்திருப்போம்.

‘என்னங்க படிக்கிறீங்க...பழைய காகிதங்களை எடுத்து வச்சிருக்கீங்க..” என்றாள் சித்ரா மீண்டும் அருகில் வந்து. “சாலமனின் கடிதம்..” என்றேன். “யாரு” என்று யோசித்தாள். அவமானமாய் இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் என்னைப்பற்றி அவளுக்கென்ன தெரியும். அவளைப் பற்றி எனக்கென்ன தெரியும். கல்யாணத்துக்கு நீ வந்திருந்ததைச் சொன்னேன். அது முடிந்துதான் பனிரெண்டு வருஷங்கள் ஆகிவிட்டதே. “எனக்கும் கீதான்னு ஒரு ஃபிரண்டு இருந்தா... கடிதம்லாம் எழுதினா...  இப்போ எங்க இருக்காளோ” சொல்லிக்கொண்டு வந்தவள் பதற்றத்துடன் எழுந்து “ஐய்யய்யோ அடுப்புல சப்பாத்தி தீயுது....” என ஓடினாள்.

நான் இந்த கடிதத்தை எழுத உட்கார்ந்தேன். தோன்றியதையெல்லாம் எழுதினேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் லதாவுக்கும், எழாவது படிக்கும் கிஷோருக்கும் சப்பாத்தி கொடுத்து விட்டு அவள் என்னையும் அழைக்கிறாள். சாப்பிடும்போது சித்ரா “அழகிய கண்ணே...” என உதிரிப்பூக்கள் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். பன்னீர் புஷ்பங்கள் படம் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் தியேட்டரிலிருந்து ஹாஸ்டல் வரை நீயும் நானும் நடந்து வந்தது நினைவிலிருக்கிறது.

இந்தக் கணத்தில் விடை பெற நினைக்கிறேன். 

எந்த முகவரிக்கு கடிதம் அனுப்புவது என்று விழித்த போது இரண்டு வருஷத்துக்கு முன்பு திருச்சி ஜங்ஷனில் பெங்களூருக்கு குடும்பத்தோடு நீ சென்று கொண்டிருந்தபோது, சென்னயிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த நான் உன்னைப் பார்த்த கணங்களும், அவசரம் அவசரமாய் நீ தந்த விசிட்டிங் கார்டும் நினவுக்கு வந்தன. கொஞ்சநாள் முன்னால், வீட்டை ஒழுங்கு படுத்திய போது விசிட்டிங் கார்டுகளையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரோவில் வைத்தது ஞாபகத்திலிருந்தது. ஒருவேளை அதில் நீ இருக்க மாட்டாயா என்று பார்த்தபோது சந்தோசம் கொண்டேன். அதிலிருந்த செல்போனுக்கு காலையில் தொடர்பு கொள்ளலாமா என்று நினைத்து வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன். நீ என் இதயத்தில் இருப்பவன். விரல்களில் அல்ல.

அன்று திருச்சியில் என்னைப் பார்க்க உன் பையனோடு வண்டியை விட்டு இறங்கிய போது, அவனது செருப்பு கூட  தண்டவாளத்திற்குள் விழுந்து விட்டது அல்லவா. அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்குமா. என்ன படிக்கிறான். ஒரு பையன் மட்டும்தானே. என்னை உன் மனைவிக்குத் தெரியுமா.

தயவு செய்து ஃபேஸ்புக், ஆர்க்குட் எனத் தேடாதே. செல்போனில் பேசாதே. கடிதம் எழுது. நானும் எழுதுகிறேன்.

அன்புடன்

முத்தையா.

--------------------------

முத்தையா, சாலமனின் உலகத்திற்குள் கொஞ்சம்தான் நாம் எட்டிப் பார்த்திருக்கிறோம். சம காலவாழ்வின் சித்திரங்கள்தானே தானே அல்லது நாம்தானே அவர்கள்.
அடுத்து சாலமனாக யாரை அழைக்கலாம் என யோசிக்கிறபோது அய்யனார், ஜ்யோவ்ராம், கென், செல்வேந்திரன், யாத்ரா, வடகரைவேலன், பைத்தியக்காரன், நந்தா, எஸ்.பாலபாரதி என இன்னும் பலரும் நினைவுக்கு வருகிறார்கள். சீட்டு எடுத்துப் பார்த்து ஜ்யோவ்ராம் சுந்தரை அழைக்கிறேன். அடுத்து சாலமனாக யாரை வேண்டுமானாலும் சுந்தர் அழைக்கலாம். ஒரு ரவுண்டு வந்த பிறகு எதாவது சந்தர்ப்பத்தில் சாலமனாக எழுதவும் அடியேனுக்கு விருப்பம். பார்ப்போம் இந்தத் தொடர் என்ன கதையாகிறது என்று.....

 

பி.கு: தங்கள் நண்பர்களுக்கு கடிதத் தொடர் ஒன்றை இதுபோல பெண் பதிவர்களும் ஆரம்பிக்கலாமே. தமிழ்நதி, தீபா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, வித்யா யாராவது ஒருத்தர் யோசிக்கலாமே.

 

*

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. \\தங்கள் நண்பர்களுக்கு கடிதத் தொடர் ஒன்றை இதுபோல பெண் பதிவர்களும் ஆரம்பிக்கலாமே\\

  நாமளும் முயற்சி செய்வோம்

  நல்ல விடயம்

  நல்லது நண்பரே

  பதிலளிநீக்கு
 2. துவங்கும் ஆட்டத்தில் ஏதோ ஒரு கணத்தில் இணைய முடியுமா என்ற ஆவலில்....
  எஸ்.ஜி.ரமேஷ்பாபு

  பதிலளிநீக்கு
 3. மிகச்சிறந்த ஓ(ஆ)ட்டம் ஸார். தேவையான ஒன்றும்

  பதிலளிநீக்கு
 4. ஒரு காலத்தில் விழுந்து விழுந்து கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தவன்தான்... எழுதுகிறேன். அழைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அட நானும் நேத்து ஒரு கடிதம் எழுதி்யிருக்கேன் பாருங்க.

  பதிலளிநீக்கு
 6. அருமையான ஐடியா! நாம் கற்பனை செய்தாலும் நம் சொந்த அனுபவங்களைக் கலந்தாலும் எல்லோராலும் அடையாளப்படுத்திப் பார்க்க முடியும்.

  சந்தோஷத்துடன் நானே ஆரம்பிக்கிறேன். தொடர்வது யாரென்று பதிவு போட்டு முடித்துச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆகா..நல்லாருக்கே! நானும் இதுபோல, அதாவது இது மாதிரி இல்லை, ஆனா இதையொட்டி என் கல்லூரித்தோழி எனக்கு எழுதிய நிஜ கடிதத்தை வைத்து பதிவு போட எண்ணியிருந்தேன்...ஒரே கொசுவத்தியா இருக்கேன்னு தள்ளிவச்சிருக்கேன் அந்த ஐடியாவை!
  சீக்கிரம் போடறேன்! அந்தப் பதிவில் இரண்டு கருத்துகளை சொல்ல நினைச்சுருந்தேன்! எதிர்பாராதவிதமா நாங்க குடும்பமா சந்திச்சோம், (1) ஆனா அவளால என்கூட சரியா பேசமுடியலை! இன்னொன்னு, (2)நாங்க கல்லூரில ஒரு விவாதம் நடத்தியிருந்தோம்..எவ்ளோ பேர் வேலைக்கு போவோம் அப்படின்னு! ஒரு சாரார் கண்டிப்பா போவோம்னு, இன்னொரு சாரார் நான் போக மாட்டேன்னும்! வீட்டிலே இருந்து பிள்ளைகளை கவனிச்சிப்பேன், ஏன்னா, நாங்க சின்ன வயசா இருக்கும்போது எங்க அம்மா வேலைக்கு போய்ட்டதால, நாங்க வீட்டுக்கு வரும்போது பார்த்துக்க யாரும் இருக்க மாட்டாங்க, அதனால என் பிள்ளைக்கு அப்படி நிலைமை வர விடமாட்டோம் அப்படி இருந்தது அவங்க வாதம்! நாங்க, அப்படின்னா எதுக்கு படிப்பை வீணாக்கறே அப்படின்னு! நான் வேலைக்குப் போவேன்ற பக்கமும், என் தோழி போகமாட்டேன்ற பக்கம்! அப்புறம் அந்த விவாதத்தை எப்படி முடிந்ததுன்னா, பிள்ளைகள் வளர்ந்து ஒரு சில வருடங்களுக்குப் பின் வேலைக்கு போவேன்னு! அப்படி சொன்ன என் தோழியைதான் சந்திச்சேன்! அவ வேலைக்கு போகலைன்னும் நான் அறிவேன்! அவ எதுக்காக என் கூட சகஜமா பேசறதை தவிர்த்தான்னு தெரிஞ்சுக்கறதுக்காக அந்த பதிவு போடணும்னு! மிக நீளமான பின்னூட்டம்..மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 8. மாதவராஜ்,

  வித்தியாசமான, அவசியமான தொடர் விளையாட்டு. தொடர்வோம்.

  ஒன்று மட்டும் இடிக்கிறது. ஆண் பதிவர்கள் தனி, பெண் பதிவர்கள் தனி என இருக்கவேண்டுமா? நட்பில் பாலினம் அவசியமா?

  உங்கள் அனுபவத்தை வைத்துதான் இப்படி நீங்கள் பிரித்திருக்க வேண்டும். உங்களுக்கும் இப்படியான வரையறைகளில் உடன்பாடில்லை என்பதை உங்கள் பதிவுகளை படிக்கும்போதே தெரிகிறது.

  என்றாலும் ஏதோவொரு எச்சரிக்கை உணர்வு உங்களை இப்படி யோசிக்க வைத்திருக்க வேண்டும்.

  ஆனாலும், இப்படியான பாலின பிரிதல் கடிதத்தில் அவசியமா? நட்பில் ஆண் - பெண் பேதங்கள் இருக்குமா?

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  பதிலளிநீக்கு
 9. மாதவராஜ்,

  சென்ற பின்னூட்டத்துக்கு ஒரு சிறு விளக்கம். உங்களை குறித்து எனக்கோ, என்னைக் குறித்து உங்களுக்கோ அதிகம் தெரியாது (ஒன்றுமே?). எனவே புரிந்து கொள்வார் என்ற நினைப்பில் வந்துவிழும் வார்த்தைகள், சமயத்தில் தப்பா நினைப்பாரோ / தப்பா நினைச்சுட்டாரே, என்பதான மன அவஸ்தைகளுக்கு ஆளாக்கலாம். எனவேதான் இந்த வாக்குமூலம்

  உங்கள் அனுபவம் என நான் குறிப்பிட்டது, தொழிற்சங்க ரீதியான அனுபவங்களையும், இப்படியான தொடர் விளையாட்டுக்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு எல்லைகளை தாண்டலாம் என்பதாலும்தான்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  பதிலளிநீக்கு
 10. அருமை மாதவராஜ். கடிதம் பல விஷயங்களைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறது.

  அடுத்து ஜ்யோவ்ராம் சுந்தர் அடிச்சு ஆடப் போறார்.

  உங்களது இந்த கடிதம் எனது பழைய பதிவை நினைவுபடுத்தி இருக்கிறது.

  கனவுகளைத் தொலைத்தவள்

  பதிலளிநீக்கு
 11. கனவுகளைத் தொலைத்தவள்

  இணைப்பு தவறாக கொடுத்து விட்டேன். மக்களே மற்ற எவரும் சுய விளம்பரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். :)

  பதிலளிநீக்கு
 12. கடிதம் எழுதுவதென்பது எல்லோருக்கும் சரிவரக் கைகூடுவதில்லை...

  நல்ல தொடர்பதிவுக்கான அழைப்பு...

  பதிலளிநீக்கு
 13. என் உறவுகளுக்கென்று எழுதி அனுப்பாமல் வைத்திருக்கிற கடிதங்கள் பல இருக்கிறது... அனுப்பினால்தான் அவை கடிதங்களா என்ன?

  பதிலளிநீக்கு
 14. ஒரு அழகான காணாக்காலங்களை
  மறுபடியும் துளக்கியிருக்கீங்க
  அருமையான ஆரம்பம்

  பதிலளிநீக்கு
 15. வித்தியாசமான முயற்சி!!! கடிதமுறை!! இன்னும் முழுதாய் படிக்க வில்லை! படித்துவிடுகிறேன்!!

  பதிலளிநீக்கு
 16. அருமையான விஷயம். மறந்துபோன ஒரு தொடர்பு முறையை நியாபகப்படுத்தி உள்ளீர்கள். நன்றி.

  //சரண்யா தனது அருமையான காலங்களையும், நண்பர்களையும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.//

  பெண்களின் நட்பு பெரும்பாலும் ஏன் திருமணத்திற்கு பின் தொடருவதில்லை? அதற்கு முக்கிய காரணம் நம் ஆண்கள் தானே.. தம் நண்பர்கள் என்றவுடன் குதூகளிக்கும் நம் பெரும்பாலான ஆண்கள், தம் தாய்க்கும், மனைவிக்கும் நட்புவட்டம் இருக்கும், இருக்க வேண்டும் என்பதை ஏன் உணருவதில்லை என எனக்கு புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 17. நல்ல ஒரு தொடரை ஆரம்பிச்சிருக்கீங்க சார், இப்பவே எனக்கு ஆட்டோகிராப் ஓடுது, என் பெயரும் சீட்டுக்குலுக்கலில் இருந்ததில் மகிழ்ச்சி, கூட்டுப்படைப்பில் சாத்தியங்கள் அதிகம், அது எங்கெங்கெல்லாம் அழைத்துச் செல்லப் போகிறது என்பதில் மிகவும் ஆவலாயிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 18. 'நட்புக்குப் பாலினம் இல்லை'த்தான். ஆனால், உலகத்தின் கண்களுக்கு இருக்கிறதே... யாராவது தோழிகள் ஆரம்பித்தால் நானும் கலந்துகொள்கிறேன். ஆரம்பம்தான் கொஞ்சம் சிக்கல் இல்லையா? எனது தோழி எனக்கு எழுதிய கடிதங்கள் ஏறத்தாழ ஐம்பது இருக்கின்றன. அதன் அடியில் இருக்கும் பெயரை விடுத்துப் பார்த்தால் காதல் கடிதங்கள் போலவே இருக்கும்:)

  பதிலளிநீக்கு
 19. மிக மிக அருமையான பதிவு. நெகிழவைக்கும் concept என்றாலும், மிக நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்.

  சுந்தர் எழுதியதைப் படித்த பின்பே உங்கள் பதிவைப் பார்த்தேன். இரண்டுமே இரு வேறு தளங்கள் என்றாலும் ... உங்களுக்கும் hats off.

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 20. வந்து ரசித்து அற்புதமான தங்கள் நினைவுகளை அசை போட்டவர்களுக்கு நன்றி. வலைப்பக்கங்களை மேலும் மேலும் அர்த்தமுள்ளதாக்குவோம்.

  சுந்தர்! அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி.

  தீபா!
  இப்படி ஒரு தொடர் துவங்கியது சந்தோஷமளிக்கிறது.

  சந்தனமுல்லை!
  நீங்கள் தீபா துவங்கிய புள்ளியில் அடுத்த புள்ளியா... !வருகிறேன் உங்கள் வலைப்பக்கம். உங்கள் பின்னூட்டம் அற்புதம். ரசித்தேன்.

  பைத்தியக்காரன்!
  எதற்கு வாக்குமூலம். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்களே சொல்லிய எச்சரிக்கை. பின்னால் தமிழ்நதி சொல்வதையும் கவனியுங்கள்.

  நந்தா!
  உங்கள் எழுத்துநடை எப்போதுமே எனக்குப் பிடிக்கும். இன்உ இரவு படித்து விடுவேன்.

  தமிழன்கறுப்பி!

  //அனுப்பினால்தான் அவை கடிதங்களா என்ன// ஆஹா... உண்மை. அவைகளை பதிவுகளாக போடலாமே..

  மணிநேரன்!
  முழுமையாக ஆண்கள் என்று சொல்ல முடியாது. நம் குடும்ப அமைப்புகள்தான்.


  தமிழ்நதி!
  தீபா ஆரம்பித்து, சந்தனமுல்லை அடுத்த புள்ளி வைத்துவிட்டார்கள். எப்படியும் நீங்கள் அந்த சுற்றில் வருவீர்கள், வரவேண்டும் என காத்திருக்கிறேன். உங்கள் மொழி, மிக நுட்பமான, தேர்ந்த உளியால் செதுக்கியது போல் உணர்வேன்.  மேலும் இனிய நண்பர்கள்
  நர்சிம்,
  மண்குதிரை,
  வேலன்,
  யாத்ரா,
  முத்துராமலிங்கம்,
  அனுஜன்யா,
  நட்புடன் ஜமால்,
  நட்புடன் ரமேஷ்,
  ஆதவா

  அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. ஆட்டம் தொடருவோம்.

  பதிலளிநீக்கு
 21. "தங்கள் நண்பர்களுக்கு கடிதத் தொடர் ஒன்றை இதுபோல பெண் பதிவர்களும் ஆரம்பிக்கலாமே. தமிழ்நதி, தீபா, மதுமிதா, ராமச்சந்திரன் உஷா, வித்யா யாராவது ஒருத்தர் யோசிக்கலாமே."

  கூகுள் ரீடரில் படித்துவிட்டு பின்னூட்டத்தை இதை நோக்கி முகாந்தரமிட்டு வலைப்பக்கத்துக்கு வந்தால், பைத்தியக்காரன் ஆரம்பித்து, தமிழ்நதி மறுத்து நீங்கள் வந்து முடித்து வைத்திருக்கிறீர்கள்... கூடுதல் சொல்ல ஏதுமில்லை தான் ஆனாலும்.. எனக்கு உவப்போ ஒப்புமையோயில்லை.. நட்புக்கு பாலினம் தேவையில்லை.. அவரவர் விளிம்புகளை அறிந்தும் புரிந்தும் கொள்ள முடிபவர்களை மட்டும்தானே நாம் நட்பு என்ற வட்டத்துள் கொண்டுவரமுடியும் எனவே விளிம்பும் இல்லை.....

  பதிலளிநீக்கு
 22. நன்றி போட்டாகிவிட்டது பாருங்கள் http://nunippul.blogspot.com/2009/04/blog-post.html

  கிருத்திகா சொல்வதை நானும் வழி மொழிகிறேன். நட்பில் ஆண் பெண் பேதம் என்ன?

  பதிலளிநீக்கு
 23. யூத்ஃபுல் விகடனில் உங்கள் பதிவை தற்போது பார்த்தேன்.. வாழ்த்துக்கள்@@

  பதிலளிநீக்கு
 24. தமிழ்மண நட்சத்திரத்துக்கு தாமதமான வாழ்த்து. கணினி சிக்கல், தொடர்ந்த பணிச்சுமையால் வர இயலவில்லை.

  ஆண்கள் எல்லாம் கொடுத்துவச்சவங்க. ஆமாங்க ஆமாம். உண்மையிலேயே
  ஆண்கள் எல்லாம் கொடுத்துவச்சவங்க. பெண்களும் கொடுத்துவச்சவங்களா இருக்கப் பார்க்குறோம். ஆண்கள் விடலையே.

  அழைப்பிற்கு ந‌ன்றி மாத‌வ‌ராஜ்.

  எழுதிவிட்டு வ‌ந்து லிங்க் த‌ருகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. http://madhumithaa.blogspot.com/2009/04/blog-post_05.html

  நன்றி மாதவராஜ்

  இன்னொரு மடலுடன் வருகிறேன்:)

  பதிலளிநீக்கு
 26. மிகவும் தேவையான பதிவு தோழரே.. நாம் நிறையவே மாறிவிட்டோம்.. இப்போதெல்லாம் நான் என்னை ஒரு மனிதனை உணரும் தருணங்கள் குறைந்துகொண்டே வருகின்றன..பணத்தின் பிடியில் இருந்து தப்பித்து, மனிதனாய் இயற்கையோடு ஒன்றி வாழ்க்கையை ரசித்த நொடிகளை தேடினாள் வெறுமையே மிஞ்சுகிறது....இந்த வெறுமைகளை அகற்ற கடிதங்களே சிறந்தவை, பேச்சால்,பார்வையால் உணர்த்த முடியாததை கடிதங்கள் உணர்த்தும்.... நானும் இந்த தொடர் ஓட்டத்தில் பங்குக்கொள்ள முயற்சிக்கிறேன்....

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!