புல்லுக்குப் பாயும் நீர் கொஞ்சம் நெல்லுக்கும் புசியும்

newspapers10376

 

நிராசை மிக்க தேவதைகளைப் பற்றி ஊடகங்கள் சித்தரித்த விதம் மற்றும் தொனியை என்னுடைய பெண்ணின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்க அனுமதி என்னும் பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். விஜயா என்பவர் அதற்கு பின்னூட்டமாக இப்படி எழுதியிருக்கிறார்:

“ஒரு பரபரப்பான நிகழ்வை செய்தியாக தருவதே ஊடகங்களின் வேலை. தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்திகள் ஊடகங்களில் வராவிட்டால் உங்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்காது.இங்கிலாந்தின் ரோஜா, தேவதை என்றெல்லாம் புகழப்படும் டயானாவின் இன்னொருபுறம் எவ்வளவு மோசமானது என்று தெரிவதற்கு காரணம் ஊடகங்கள் தான். தொழில் அதிபரால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதி, அரசியல் புள்ளி ஆதரவில் வாழ்ந்ததற்காக அலைக்கழிக்கப்பட்ட ஷெரினா, போலிசாருக்கு பாதிப்பு ஏற்படுத்திய, போலீசாரால் பாதிக்கப்பட்ட ஜெயலெட்சுமி ஆகியோர் தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வராவிட்டால் வெளியே தெரிந்திருக்காது. பலர் முகமூடி கிழிந்து இருக்காது.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியானதும் சாதனை செய்த மாணவ-மாணவிகளை துரத்தி,துரத்தி அவர்களின் படங்களும், செய்திகளும் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. மதுரை அருகே குக்கிராமத்தை சேர்ந்த பெண்மணி சின்னபிள்ளையின் சாதனையையும், பிரதமர் வாஜ்பாய் அவர் காலில் விழுந்ததையும் பிரமாதப்படுத்தியது ஊடகங்கள்தான். அப்துல் கலாமின் ஒவ்வொரு அசைவுகளையும்,வார்த்தைகளையும் செய்தியாக்கியதும் ஊடகங்கள்தான். இரண்டு கால்களும் இல்லாவிட்டாலும் கார் மெக்கானிக்காக பணியாற்றும் வாலிபர், கண் பார்வை இல்லாத மாண்வி தேர்வு எழுதும் செய்திகள், படங்கள் ஊடகங்களில்தான் வெளியாகின்ற்ன.
கலவர பூமியாக இருந்தாலும், கார்கில் போர்க்களமாக இருந்தாலும் குண்டுகளுக்கு இடையே ஓடித்திரிந்து உயிரோட்டமான செய்திகளையும்,படங்களையும் மக்களுக்கு தருபவை ஊடகங்கள்தான்.

ஆனால் இவை எதுவும் தங்கள் மனதில் நிற்கவில்லை. ஜெயலெட்சுமி, ஷெரினா, ஜீவஜோதி ஆகியோரின் கதையும், சதையும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
"அவனும் போடறான்னு இவங்களும் பாக்கிறாங்களே" என்பது நியாயமில்லாத வார்த்தைகள்.”

அவருடைய பார்வையில் இதை மிக நேர்மையாகவும், உளப்பூர்வமாகவும் முன்வைத்திருப்பதாகவே கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் பல கோணங்களும், பல பார்வைகளும் இருக்கவேச் செய்கின்றன. "அவனும் போடறான்னு இவங்களும் பாக்கிறாங்களே" என்பதை, அந்தப் பதிவில் என்னுடைய வார்த்தைகளாக தெரிவிக்கவில்லை. படித்தால் தெரியும். அதை விடுவோம். ஊடகங்களின் சாதனைகளை, பெருமைகளை பட்டியலிட்டு, இவ்வளவு இருக்கிறதே, இதுதானா தெரிகிறது உங்களுக்கு என்று கடைசியில் ஒரு அபிப்பிராயத்துக்கும் வந்திருக்கிறார். எனது பதிவு, ஒரு குறிப்பிட்ட செய்தியையும் அதன் முன்னும் பின்னுமான வெளியையும் சொல்ல முயற்சித்தது. அவ்வளவே. ஒட்டு மொத்த ஊடகங்கள் குறித்தோ அல்லது ஒட்டுமொத்தமாய் ஊடகங்கள் குறித்தோ எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.

இப்போது பின்னூட்டத்தில் கருத்து வந்த பிறகு, ஊடகங்கள் குறித்தும் ஒரு பதிவு எழுத அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். அவருடைய வார்த்தைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒரு பரபரப்பான நிகழ்வை செய்தியாகத் தருவதே ஊடகங்களின் வேலை என்கிறார். இதுவே தலைகீழானது. ஒரு செய்தியை பரபரப்பான நிகழ்வாக்குவதும், ஆக்காததும் ஊடகங்களின் வேலை என்றால் சரியாக இருக்கும். ஷில்பா ஷெட்டி விவகாரத்தை மடக்கி மடக்கிச் செய்திகளை தொடர்ந்து பத்து நாட்கள் போட்டு எதோ பெரிய இனப்பிரச்சினை போல படம் காட்டினார்கள் இங்கே பக்கத்தில், ரொம்ப பக்கத்தில் புதுக்கோட்டை சாந்தி என்று பெண்மணி இருக்கிறார். ஆசியன் கேம்ஸில் இந்தியாவுக்குத் ஒரு வெள்ளிப்பதக்கம் வாங்கித் தந்தவர். இந்த ’ஒரு’ இந்தியாவுக்கு எவ்வளவு பெரியது என்று சொல்ல வேண்டியதில்லை. தகுதி பெற்று, ஓடி, பரிசு வாங்கிய பிறகு அவர் பெண் இல்லை என்பதாகவும், அவர் பரிசு பெறத் தகுதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி கண்டவரை இப்படி அவமானப்படுத்தியதற்கு எதிராக எந்த ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகள் வாசித்தனவாம். பரிசு பெற்றபோது தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்திகள் போட்டவர்கள் பிரச்சினையான பிறகு அல்லவா தீவீரம் காட்டியிருந்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு விரக்தியுற்று அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததை எத்தனை ஊடகங்கள் பேசின?

நக்கலமுத்தன்பட்டியில் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவர் கொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தையும் புதைப்பதற்கு இடமில்லாமல், கொண்டு செல்ல பாதையுமில்லாமல் அவதிப்பட்டதை எந்த ஊடகங்கள் படம் போட்டு விளக்கின? கார்கில் போரில் உயிரைப் பணயம் வைத்து செய்திகள் சேகரித்தவர்கள் எங்கு போனார்களாம்?  மும்பையில் அழகிப்போட்டி நடக்கும்போது, வெளியே விவசாயிகள் பிரச்சினை நடந்தது. அங்கு இவர்கள் இல்லை. எல்லாரும் உள்ளே உயிரோட்டமான செய்திகளைத் தருவதற்கு காமிராவோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கிடந்தார்கள். ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படியும் ஊடகங்களின் பணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

டயானாவின் இன்னொரு புறம் எவ்வளவு மோசமானது என்பது ஊடகங்கள் இல்லையென்றால் தெரிந்திருக்காதாம். எனது மிக எளிமையான கேள்வி, “தெரிந்து என்ன ஆகப்போகிறது?’ என்பதுதான். அதைத் தெரிவித்ததன் மூலம் என்ன சமூகப்பணியை இந்த ஊடகங்கள் செய்துவிட்டனவாம். ஜீவஜோதி, ஜெயலட்சுமி, ஷெரினா விவகாரங்களில் பலர் முகமூடிகள் கிழிக்கப்பட்டன என்கிறார். என் வருத்தம் கிழிக்கப்பட்டது அந்த மூகமூடிகள் மட்டுமா என்பதுதான். ஒரு பெண்ணின் அந்தரங்கத்திற்குள் இந்த பத்திரிகைகள் எவ்வளவு அத்து மீறின. அது தேவையா? ஒரு குற்றம், அது தொடர்பான செய்திகளைத் தாண்டி இங்கு என்னவெல்லாம் “ருசிகரமாக’ பேசப்பட்டன. இந்த இடத்தில் எனக்கு ரொம்ப நாள் இருக்கும் சந்தேகம் ஒன்றையும் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட செய்திகளில் சிக்கியவர்களை ‘அழகி’ என்று பதம் உபயோகிக்க வேண்டும் என எதாவது ஊடகச் சூத்திரம் இருக்கிறதா? எத்தனை “அழகி கைது”, “அழகிகள் உல்லாசம்”, “அழகி கொலை”.

வாஜ்பாய் காலில் விழுந்தாராம். அப்துல் கலாமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், வார்த்தைகளையும் செய்திகள் ஆக்கியதாம். இதன் பின்னால் இருக்கும் அரசியல் குறித்து பேசலாம். மான்புமிகு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எங்கு சென்றாலும் குழந்தைகளோடு பேசிக்கொண்டே இருந்தார். மெட்ரிக் ஸ்கூலுக்குள்ளேயே நுழைந்த கால்கள் சூளைமேடு அரசு தொடக்கப் பள்ளிக்குள் ஏன் நுழையவில்லை. சேரிப்பகுதிக்குள்ளும், கல்லுடைக்கும் பிரதேசங்களிலும் சென்று குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என ஏன் பிரசங்கம் செய்யவில்லை. குழந்தைகளுக்குள் இத்தனை வேறுபாடா? அசந்து தூங்கிவிட்டு, பிறகு விழித்து, சண்டை போட்டு அதை என்னமோ மகாபாரத யுத்த ரேஞ்சுக்கு இந்த பத்திரிகைகள் பா.ஜ.வோடு சேர்ந்து சித்தரித்த விதம்தான் உலகக்கொடுமை. குறுகிய தேசீய வெறியை விதைப்பதுதானே கார்கில் செய்திகளின் நோக்கமாயிருந்தது.

எதோ தரும காரியங்கள் செய்தது போல, பத்திரிகைகள் அதைச் செய்யவில்லையா, இதைச் செய்யவில்லையா என்று நிறைய சொல்லப்படுகின்றன. துட்டு ஐயா... துட்டு. நாம் சொல்வதற்கு முன் இன்னொரு பத்திரிகை சொல்லிவிட்டால் என்ற பயம். சந்தையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் வெறி. செய்திகள் முந்தித் தருவது வேறு எதனால்? அதேநேரம் ஒன்றுபோல சேர்ந்து சில செய்திகளை மறைக்கவும், திரித்து எழுதவும் செய்கின்றன. வி.பி.சிங்தான் அதற்கு சரியான உதாரணம். பா.ஜ.க மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு அவர் ஆட்சி நடத்திய போது ஆரம்பத்தில் அவரை அப்படி புகழ்ந்தன. ராஜா என்றார்கள். மதியுக மந்திரி என்றார்கள். கம்பி மேல நடக்கும் வித்தை தெரிந்தவர் என பாராட்டினார்கள். ஒரேநாளில் எல்லாம் தலைகீழானது. மண்டல் கமிஷனை வி.பி.சிங் கையிலெடுத்தார். அடுத்த நிமிஷமே யோசிக்காமல் அவரை மெண்டல் என்றார்கள். கேலியாய் சித்தரித்தார்கள். இது தற்செயலானதா? இதற்குப் பின்னால் எவ்வளவு அரசியல் இருக்கிறது. ஊடகங்களின் அரசியல்!

இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், நோம்சாவ்ஸ்கியை படிக்க பரிந்துரை செய்கிறேன். இங்கு அனைத்து ஊடகங்களும் பெரும் செல்வந்தர்களிடமே  இருக்கின்றன. அவர்களின் வர்க்க நலன் சார்ந்துதான் அவை பேசும். பேசாமல் இருக்கும். அவ்வப்போது மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சாதனையாளர்கள் குறித்து செய்திகள் என்னும் தர்ம காரியங்களைச் செய்வார்கள். புல்லுக்குப் பாயும் நெல் கொஞ்சம் நெல்லுக்கும் புசியும்.

இதைத் தாண்டி ஊடகங்களில் சமூகப் பார்வையோடும், வேகத்தோடும் செயல்படும் பலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன்.

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. \\டயானாவின் இன்னொரு புறம் எவ்வளவு மோசமானது என்பது ஊடகங்கள் இல்லையென்றால் தெரிந்திருக்காதாம். எனது மிக எளிமையான கேள்வி, “தெரிந்து என்ன ஆகப்போகிறது?’ என்பதுதான். அதைத் தெரிவித்ததன் மூலம் என்ன சமூகப்பணியை இந்த ஊடகங்கள் செய்துவிட்டனவாம். \\

    உண்மைதான். இந்த மாதிரியான செய்திகளை ஒளிபரப்பக்கூடாதென்பதில்லை. ஆனால் முதல் முக்கியத்துவம் இம்மாதிரியான செய்திகளுக்குத் தர வேண்டுமா என்பது தான் கேள்வி?

    பதிலளிநீக்கு
  2. மும்பையில் நடந்த தாக்குதல் குறித்து இவர்கள் செய்த கூத்து பற்றி இவர்கள் செய்த அட்டகாசம் பற்றி பக்கம் பக்கமாக எலுதலாம் கேட்டால் பத்திரிக்கை சுதந்திரம் என்பார்கள் இவர்களை திருத்தவே முடியாது

    பதிலளிநீக்கு
  3. ஊடகங்கள் வியாபரதானமாகவும்
    தான் சார்ந்த முகங்களை பிரதிபலிப்பதும் மறுக்க முடியாத உண்மையாகதான் இருக்கின்றது. நான் பெறிதும் மதிப்போடு வாங்கி வாசித்து வந்த ஆ.வியை கூட முன்பை போல வாங்கமுடியவில்லை.
    நீங்கள் குறிப்பட்டது ஒரு செய்தியின்
    ஊடகங்களின் அனுகுமுறையையும் அதன் இன்னொருபக்கத்தையும் தான்.
    அது ஊடகங்களின் ஒட்டு மொத்த செயல்களை குறித்து அல்ல எனபது தெளிவாக இருந்தது.

    விஜயா அவர்கள் சொன்ன அவர் பார்வையில் முன் வைத்திருந்த
    விசயவகள் சரியனபட்டாளும் உங்களுடைய பதில் மேன்மையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  4. இன்றைய ஊடகங்களில் வந்த முதல் பக்க செய்தி

    ஐஷ்வர்யாராய் பத்மஸ்ரீ விருது
    பெற்றார்
    பத்மபூஷன் விருது பெற்ற ஜெயகாந்தன் ஐயா பேரல்லாம் அந்த செய்தி்யின் கடைசியில்
    ஜெயகாந்தன் ஐயாவுக்கு என்னோட வணக்கத்தை தெரிவிச்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நன்றி மாதவராஜ். எனது பின்னூட்டத்துக்கு பதிலாக ஒரு பதிவையே கொடுத்து இருக்கிறீர்கள் உங்கள் அனைத்து பதிவுகளிலும் நான் ரசிக்கும் எழுத்து வன்மை சமுக சிந்தனைகள் அற்புதமாக இருக்கும். அதே போல இந்த பதிவும் நன்றாக இருந்த்தது.

    நிகழ்வுகளை செய்திகளாக தருவதே ஊடகங்களின் வேலை என்று தான் எனது பின்னுட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன். உலகின் அனைத்து நிகழ்வுகளையும் ஊடகங்களில் வெளியிடும் போது, சில குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே தங்கள் மனதில் வாங்கிக் கொண்டு, அதற்காக ஊடகங்களை மட்டம் தட்ட வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன்.

    ஷில்பா ஷெட்டி, புதுக்கோட்டை சாந்தி பற்றிய செய்திகளும் அப்படித்தான். சாந்தி பதக்கம் வென்ற போதும், பிரச்சனைகளில் சிக்கிய போதும் ஊடகங்கள் தான் செய்தி வெளியிட்டன. அவர் தற்கொலைக்கு முயன்றதும் ஊடகங்களில் செய்தியாக வந்தன, இதில் ஊடகங்களின் தவறு என்ன? தலித் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதும் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தன. அதற்காக போரட்டம் நடத்த வேண்டியது ஊடகங்கள் வேலை அல்ல.

    அப்துல் கலாம் குறித்த செய்திக்கு கொஞ்சம் கோபமாகவே பதிலளித்து இருக்கிறீர்கள். அப்துல் கலாம் சேரிக்கு சென்று ஏன் பிரசங்கங்கள் செய்ய வில்லை என்று சாடி இருந்தீர்கள். அப்துல் காலம் சேரியில் பிரசங்கங்கள் செய்யாததற்கு ஊடகங்களா காரணாம்? தங்கள் ஆசைப்படி அவர் சேரியில் பிரசங்கம் செய்து இருந்தால், ஒரு அறிவொளி இயக்க ஊழியர் அல்லது தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூடுதலாக கிடைத்து இருக்கலாம். ஆனால் உலகம் போற்றும் விஞ்ஞானி கிடைத்து இருப்பாரா?

    முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்த செய்தியும் அப்படித்தான். அவருக்கு எதிராக போரட்டம் நடத்தியது ஜாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் தான். ஊடகங்கள் அல்ல. ஊடகங்களில் செய்திகள் மட்டுமே வந்தன.

    மகாபாரத யுத்தம் ரேஞ்சில் பத்திரிகைகள் பா.ஜா.வோடு சேர்ந்து கொண்டன என்று மாதவராஜ் கூறியிருக்கிறீர்கள். மகாபாரதத்தில் இருந்தே நானும் சொல்கிறேன். கண்ணில்லாத அரசன் திருதராஷ்டிரனுக்கு பாரத போரின் காட்சிகளை "ரன்னிங் கமன்ட் ரி"யாக கூறியவர் அவரது தேரோட்டி சஞ்சயன் (உலகின் முதல் ஊடகவியலார்). அவர் போரைப் பற்றி வர்ணிக்கும் போது, கவுரவர்கள் தோற்கும் காட்சிகளையும் விவரிக்க வேண்டியதாயிற்று. அப்போது மன்னன் திருதராஷ்டிரன் கோபத்துடன் கேட்டான் "உனக்கு நல்ல காட்சிகளே தெரியாதா? எனது புத்திரர்கள் தோற்பதையே சொல்கிறாயே?" என்றான். இதில் சஞ்சயன் தவறு ஏதாவது இருக்கிறதா?" நடந்ததை சொல்வது தான் ஊடகங்களின் வேலை.

    அழகி கைது, உல்லாசம் போன்ற வார்த்தைகள் ஊடகங்களில் என்ன பதங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்று உங்களுக்கும் தெரியும் மற்றவர்களுக்கும் புரியும். சங்கடமான வார்த்தைகளை தவிர்ப்பதற்காக உபயோகப் படுத்தும் சங்கோத வார்த்தைகள் தான் அவை. இதில் எந்த சூத்திரமும், சூட்சமமும் இல்லை.

    செய்திகளை முந்தி தருவதற்கு காரணம் "துட்டு ஐயா துட்டு...." என்று கூறியிருக்கிறீர்கள். நான் என்ன ஊடகங்கள் சேவை செய்கின்றன என்றா கூறினேன்? வழங்கிய கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பும் வங்கிகள் உள்ளன. படிக்க வந்த மாணவியை கீழ்ப் படியவில்லை என்று அடித்துக் கொன்று விட்டு பிணத்தை மறைத்து வைக்கும் ஆசிரியைகளும் உள்ள்னர். தனது மருத்துவம் பலனளிக்காமல் இறந்த நோயாளியின் பிணத்தை தர வேண்டுமானால் பணத்தை எண்ணி வை என்று கூறும் டாக்டர்களும் உள்ளனர். இங்கெல்லாம் சேவை இருக்கிறதா?

    ஆனால் தங்கள் பதிவில் "புல்லுக்கு பாயும் நீர் நெல்லுக்கு புசிவது போல..." ஊடகங்கள் சிறிது சேவை செய்வதாக குறிபிட்டுள்ளீர்கள். சேவையையே வியாபாரமாக செய்வதை விட வியாபாரத்தில் சேவை செய்வது பாராட்டத்தக்கதே....!!!

    பதிலளிநீக்கு
  7. திரு.விஜயராஜ் அவர்களுக்கு...

    ரொம்ப சந்தோஷம். மீண்டும் வந்து ஆரோக்கியமான உரையாடலை நடத்தியதற்கு.

    என்னுடைய எழுத்து நடையை ரசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மிக அழகான, தெளிவான நடையில் சாமர்த்தியமாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்தேன். ஆனால் நீங்கள் சொல்லியிருயிக்கும் விஷயங்களோடு இன்னமும் முரண்பாடு உண்டு.

    நான் குறிப்பிட்ட விஷயங்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு இருக்கலாம். எப்படி வெளியிட்டன எனபதை பார்க்க வேண்டும். முதல் பக்கத்தில் வெளியிடுவதற்கும், எங்கோ ஒரு மூலையில் வெளியிடுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா இல்லையா? ஷில்பா ஷெட்டுக்கும், புதுக்கோடை சாந்திக்கும் எந்தெந்த பக்கங்கள் என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. அங்குதான் முரண்பாடே. ஊடகங்களை தெருவிலிறங்கி போராட நானும் சொல்லவில்லை. பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கிறதே அதன்படி செயல்பட வேண்டும் என்றே சொல்கிறேன். புதுக்கோடை சாந்திக்கு நேர்ந்த அவமானம் எத்தனை பேருக்குச் சென்று அடைந்தது. அது தேசிய அவமனமாகவும், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவமானமாகவும் ஊடகங்கள் பார்க்கவில்லை. அது ஊடகங்களின் தோல்வியா... வெற்றியா? தலித் பஞ்சாயத்துத் தலைவர் கொலைசெய்யப்பட்டதை நாலு வரி செய்தியாக போட்டுவிட்டு கடமை முடிந்ததாய் இருந்துவிட்டன. மழை பெய்த இரவில் செல்போன் வெளிச்சத்தில் அவர் புதைக்கப்பட்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வந்திருந்தன.எவ்வளவு அவலம். ஆனால் செய்தியாக அடுத்தநாள் பத்திரிகையில் வரவேயில்லையே? தொலைகாட்சியில் காட்டப்படவேயில்லையே?

    அப்துல் கலாம் விஞ்ஞானி. அப்புறம் ஜனாதிபதி. அப்போதுதான் கான்வெண்ட் பிள்ளைகளிடம் பேசினார். அந்த ஜனாதிபதி பதவியோடு சேரிகளுக்குச் சென்றிருக்கலாமே. சென்றிருந்தால் இந்த ஊடகங்கள் நிச்சயம் அவரைப் புறக்கணித்திருக்கும்.மதித்திருக்காது. இதுதான் நான் சொல்ல வந்த விஷயம். செல்வந்தர்களின் வர்க்க நலன்களுக்கு இசைவாக இருக்கும் வரை அவர் புனிதர். அப்படித்தான் படம் காட்டின ஊடகங்கள். என்னைப் பொறுத்தவரையில் சேரியில் பயணம் செய்யாத ஜனாதிபதியை விட, அங்கு பயணம் செய்த சாதாரண அறிவொளி இயக்கத் தொண்டனை நான் மதிக்கிறேன்.

    தயவுசெய்து திருதராஷ்டிரனை மக்களுக்கு உவமானம் செய்து கேலி செய்யாதீர்கள். இங்கு திருதராஷ்டிரன் அந்தந்த ஊடகங்களின் முதலாளிகள்தான். சஞ்சயன் ஒரு போதும் அந்த முதலாளிகளுக்கு கெட்ட செய்திகளைச் சொல்வதில்லை.
    அவனுக்கும் கண் இல்லையே!!!!!!!


    நீங்கள் சொன்னது போல் இதரத் துறைகளிலும் ஒரு சில தனிநபர்கள் மோசமானவர்களாயிருக்கலாம். ஊடகத்துறையில் ஒரு சில தனிநபர்களே நல்லவர்களாயிருக்கிறார்கள்.

    ஒருவழியாய் இது வியாபாரம் என ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

    எனது பார்வைக்கும், உங்கள் பார்வைக்கும் முரண்பாடுகள் இருக்கலாம். அவைகளோடு ஆரோக்கியமான விவாதங்களைத் தொடர்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வித்யா!

    உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். எத்ற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில்தான் பத்திரிகைகளின்ன் தர்மங்கள் அல்ல சூட்சுமங்கள் ஓளிந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. வெங்கடெஷ் சுப்பிரம்ணியம்!

    ஆமாங்க.அந்த கூத்தை மட்டும் பத்துப் பதிவுகளில் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  10. முத்துராமலிங்கம்!
    புன்னகை!

    இருவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஊடகங்களைப் பற்றி நல்ல தகவல்கள்...

    “பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி” மக்கள் பணம் வீண் என செய்திகளை அள்ளிவீசும் மீடியா என்றாவது மசோதாக்களின் விபரத்தை மக்களுக்கு வழங்கியதுண்டா,வங்கிமசோதா,இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு போன்றவற்றை பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் நிறைவேறாமல் தடுத்ததால் மக்கள் சேமிப்பு பாதுகாக்கப்பட்டது குறித்து ஒரு செய்திகூட வரவில்லை.நம்மை வெள்ளித்திரையில் மூழ்கடிக்கும் வேலையில் தான் அதிகமாக மீடியா ஈடுபடுகிறது.

    இன்று கட்டணம்(கேபிள் தவிர) இல்லாமல் தொலைக்காட்சியை பார்த்து வருகின்றோம், நெடுந்தொடர்கள், சினிமா, இன்னபிற இவ்வளவு நிகழ்ச்சிகளையும் வழங்குபவர்கள் யார்,பெருவணிகம். இவர்கள் நம்மிடம் பொருட்களை விற்பனை செய்யும் போதே விளம்பரக்கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள், இதை கட்டுப்படுத்த திணவுயில்லாத அரசுகள்.
    விளம்பரத்தில் தொழில் செய்யும் மீடியாக்கள் யாருடைய நலன்களை பாதுகாப்பார்கள், அவர்கள் தரும் செய்தி எப்படி நடு நிலையாக இருக்கும்.

    இப்படிப்பட்ட ஊடகங்களுக்கு எதிராக வலைப்பக்கங்கள் மூலம் தான் மக்களுக்கு செய்தி சொல்லமுடியும்.

    உங்கள் பணிசிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  12. அண்ணனா? தம்பியா? சபாஷ்! சரியான போட்டி!

    :-)) (Just for fun)

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல. ஏற்றுக் கொள்ள முடிகிற விஷயங்கள். நானும் ஏதாவது தப்பா சொல்லுவாரு நொட்டம் சொல்லலாமுன்னு கண் கொத்திப் பாம்பாட்டாம் பார்த்துக்கிட்டே இருக்கேன். இன்னும் அகப்படலை.

    என்னிக்காவது மாட்டாமலா போவீங்க. :)

    பதிலளிநீக்கு
  14. பிரசுரத்துக்கல்ல!

    //நெல்லுக்கிறைத்த நீர்வாய்க்கால் வழியோடி
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை//

    அண்ணா!
    பொசியுமா?? புசியுமா???
    பொசி- கசிதல் போன்றது
    புசி- சாப்பிடுவது..
    தவறாகக் கொள்ள வேண்டாம்; எனக்கு குழப்பமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  15. ஆரோக்கியமான விவாதம் !!!

    வாழ்த்துக்கள்!!

    திரு.விஜயராஜ் அவர்கள் இன்றைய ஊடகங்களில் வரும் நல்ல செய்திகளைப்பற்றி ஆரோக்கியமாக, அழகாக கூறி உள்ளார்..

    திரு.மாதவராஜ் இன்றைய ஊடகங்களில் வரும் சில சிறுமையான செய்திகளைப்பற்றி அழகாக கூறி உள்ளார்..

    இரண்டும் வாக்குவாதங்களும் மிகவும் அருமையாக இருந்தது

    உடன்பிறப்பு இரண்டு பேரும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் விவாதங்கள் முலம் காட்டி விட்டார்கள்..

    மகிழ்ச்சி!!! மகிழ்ச்சி!!!

    வாழ்த்துக்கள். நன்றி!!

    பதிலளிநீக்கு
  16. ஒரே ஒரு தகவலை மட்டும் பதிவு செய்து விட ஆசைப்படுகிறேன்.மரட்டிய மாநிலம் விதர்பாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகல் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்ட செய்தியை தேசிய ஊடகங்கள் எதுவும் முன்னுரிமை கொடுத்துச் செய்தியாக்கவில்லை.முதல் பக்கத்தில் போடவுமில்லை.மன்மோகன் அங்கு விசிட் செய்தபோது national level மீடியாக்கள் சார்பாக எட்டுப்பேர் மட்டுமே இருந்தனர்.அதே நிமிடத்தில் விதர்பாவிலிருந்து ஒருமணி நேர விமானப்பயணத்தில் இருக்கிற மும்பையில் நடந்துகொண்டிருந்த லக்மே fashion show வைக் cover செய்ய 600 க்கு மேற்பட்ட media persons குவிந்து கிடந்தனர்.

    நம் கோபம் media persons மீதல்ல.மீடியாக்களின் மேல்தான். நல்ல விவாதம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. எனது பின்னுட்டத்துக்கு நல்ல பதில் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி மாதவராஜ். ஆனால் நான் மேலும் சில விள்க்கங்களை கூற விழைகின்றேன்.

    புதுக்கோட்டை சாந்திக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் எந்தெந்த பக்கங்கள் என்பதை பத்திரிகைகள் தீர்மானிப்பதில் முரண்பாடு எதுவும் இல்லை.புதுக்கோட்டை சாந்தி தொடர்பான செய்திகள் விளையாட்டு செய்திகள் இடம் பெறும் பக்கத்தில் வருகின்றன. ஷில்பா ஷெட்டி செய்திகள் வேறு பக்கங்களில் வெளியாகின்றன. விளையாட்டு செய்தி பக்கம் பெரும்பாலும் பத்திரிகையின் பின்பகுதியில்தான் இடம் பெறுகின்றன. இதனை நீங்கள் தவறாக கருத தேவையில்லை. புதுக்கோட்டை சாந்திக்கு ஏற்பட்டது தேசிய அவமானம் என்று நீங்கள் கருதுவதில் தவறு இல்லை.நியாயமான ஆதங்கம்தான். ஆனால் சாந்திக்காக யாராவது போராட முன்வந்து இருந்தால், போராடி இருந்தால் அந்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து இருக்கும்.

    அப்துல் கலாம் சேரிகளுக்கு சென்று இருந்தால் ஊடகங்கள் நிச்சயம் அவரை புறக்கணித்து இருக்கும் என்று ஊகத்தில் கூறி இருக்கிறீர்கள். அன்னை தெரசா உயர்வர்க்கத்தினருக்கு சேவை செய்யவில்லை. அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் ஊடகங்கள் உடன் சென்று முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. இளவரசர் சார்லஸ் மும்பை வந்தபோது, 'டப்பா வாலா'க்களை சந்தித்தார், அந்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டன. சந்தன வீரப்பன் செய்திகளுக்காக அடர்ந்த காடுகளுக்குள் அலைந்து திரிந்த ஊடகங்களுக்கு, சேரிகளுக்குள் செல்ல எந்த தயக்கமும் இருக்க வாய்ப்பு இல்லை.
    டயானா, ஜெயலட்சுமியின் அந்தரங்கம் பறிபோனதாக பதறி இருக்கிறீர்கள். 'பிரின்சஸ் ஆப் வேல்ஸ்' என்று அழைக்கப்பட்ட டயானா தன்னுடைய குதிரை பயிற்சியாளர், சமையல்காரர், பாகிஸ்தான் டாக்டர், முஸ்லிம் வணிகரின் மகன் என்று பலருடன் தொடர்பு வைத்து இருந்தார். போலீஸ் துறையில் ஏட்டு முதல் எஸ்.பி. வரை வளைத்துப் போட்டதாக கூறப்பட்டவர் ஜெயலட்சுமி. இவர்கள் குடும்பமா நடத்தினார்கள்? கோ-ஆப்ரேட்டிவ் சொசைட்டி அல்லவா ந்டத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்தரங்கம் இருந்ததா? அதற்குள் அடுத்தவர்கள் எட்டிப் பார்த்து விட்டார்கள் என்று நீங்கள் ஆத்ங்கப்படுகிறீர்களே...!

    திருதராஷ்டிரனை மக்களுக்கு உவமானம் செய்து கேலி பேசவில்லை. எல்லா செய்திகளையும் கூறினாலும், குறிப்பிட்ட சில செய்திகளை மட்டுமே கூறுவதாக சஞ்சயன் மீது கோபப்பட்டார். நீங்கள் எல்லா செய்திகளும் ஊடகங்களில் இடம் பெற்றாலும், சில குறிப்பிட்ட செய்திகளுக்கே முக்யத்துவம் தருவதாக கோபப்ப்ட்டு இருந்தீர்கள். எனவே வருத்தத்துடன் சொல்கிறேன், உங்களைத் தான் திருதராஷ்டிரனுடன் ஒப்பிட்டு இருந்தேன்.

    ஜனநாயகத்தின் 4 தூண்கள் பாராளுமன்றம், நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகங்கள். பாராளுமன்றத்தை எடுத்துக் கொண்டால், அதன் உறுப்பினர்கள் லஞ்சம்- ஊழலில் திளைத்துப்போய் உள்ளனர். நிர்வாகத்துறையும் ஊழலிலும், முறை கேடுகளிலும் சளைக்கவில்லை. நீதித்துறை மீதும் நம்பகத்தன்மை குறைகிறது. விமர்சனங்கள். வரத்தொடங்கிவிட்டன. ஆனால் இந்த 3 துறைகளைப் போல ஊடகத்துறையில் லஞ்சம்- ஊழல் மலிந்துவிடவில்லை. ஏராளமான விஷயங்களை தெரிந்து வைத்துள்ள தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பல சந்தர்ப்பங்களில் லஞ்சமும், ஊழலும் ஊடகங்கள் வாயிலாகவே வெளிவந்துள்ளன என்பதும் உண்மை. இன்னொன்று பத்திரிகைகள் சேவை செய்கின்றன என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை. அவை தங்களின் வேலையை செய்கின்றன என்றே சொல்கிறேன்.

    ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் ரசனைக்கேற்பதான் வருகின்ற்ன. மக்கள் ரசிக்காத எதையும் ஊடகங்களால் திணித்துவிட முடியாது. சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் ஊடகங்களை மக்கள் புறக்கணித்தால், உடனடியாக ஊடகங்கள் சினிமாவை புறக்கணித்துவிடும் என்பது நிச்சயம். டயானா, ஜெயலட்சுமி,ஷெரினாவின் செய்திகள் வெளியிட்டால் விற்பனை குறையும் என்ற நிலை ஏற்பட்டால் அந்த செய்திகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிடும். மக்களின் ரசனை மாறுபட்டால்தான் ஊடகங்களின் தரம் உயரும்.

    நான் சொல்லி இருக்கும் விஷயங்களுடன் முரண்படுவதாக தெரிவித்து இருக்கிறீர்கள், பிரியத்துக்குரிய மாதவராஜ், நான் உங்களுடன் முரண்படவில்லை. நட்சத்திர பதிவாளரான நீங்கள், எனது கருத்துடன் உடன்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஷெரினா, ஜெயலட்சுமி, டயானா ஆகியோர் மீது கோபப்படாமல் ஊடகங்கள் மீது ஆத்திரப்படுகிறீர்களே..! சமூக அவல்ங்களின் மீதான உங்கள் கோபம் இலக்கு தவறிய அம்பாக போய்விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  18. //விளையாட்டு செய்தி பக்கம் பெரும்பாலும் பத்திரிகையின் பின்பகுதியில்தான் இடம் பெறுகின்றன. //

    அப்படியா? முதல் பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின் படம் (சத அடிப்பது போல், மட்டையைச் சுழற்றுவது போல்) வந்ததே இல்லையா?

    குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும் அங்கிள்! சும்மா சைக்கிள் கேப்பில் சுண்டெலி வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. தீபா நலமா....

    விளையாட்டுச் செய்திகள் பத்திரிகையின் முதல் பக்கம் வெளியிடப்படுவதில்லை.யாராவது சாதனை புரிந்தால் அவர்களை கவுரவிக்கும் வகையில் முதல் பக்கம் படம் மட்டும் பிரசுரிக்கப்படுகிறது.

    மாதவராஜ் கவனிக்கவும்.''விளையாட்டுத் தொடர்பான படங்கள் முதல் பக்கம் பிரசுரிக்கப்படுகிறது''என்று தீபா கூறுவது எனக்கல்ல...உங்களுக்குத்தான்

    பதிலளிநீக்கு
  20. Hi Madhav and Viyayraj,

    you both, write about the 2 key ingredients of the media. Both of you are Right. You both have the wonderful, detailed vision about things. It is good to have you in one place. For the spectators like us, who are able to see both sides in detail. I hope you won't get into too much emotion to loose the healthy argument. Please don't loose it like the "so called intellects" Good luck Bro's

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!