கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள்!

machine

 

வலைப்பக்கங்களில் பல நண்பர்கள் பத்துப் பத்தாய் பலவிதமான கேள்விகள், பலரிடம் கேட்டு பதிவுகள் எழுதியிருந்தனர். நானும் என் பங்குக்கு பத்து கேள்விகள் எழுப்பியிருக்கிறேன். இவை நம் மனசாட்சியிடம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டியவை.

‘கொஞ்சம்’ நிர்வாணமாய் நின்று பாருங்கள். ஏன் ‘கொஞ்சம்’ என்றால், இப்படி நூறு கேள்விகள் கேட்க முடியும். நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம், தவற விடுகிறோம் என்பதை ரகசியமாகவேனும், நாம் மட்டுமாவது உணரத் தலைப்படுவோம்.

1.இப்போது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கமுண்டா?
2.குழந்தைகளை தெருவில் விளையாட அனுமதிப்பது உண்டா?
3.அவசரமாக ஒரு இடத்துக்கு போய்க் கொண்டு இருக்கிறீர்கள். வழியில் எதிர்பாராதவிதமாக நெருக்கமாய் பழகிய நண்பன் ஒருவனை சந்திக்கிறீர்கள். உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்.?
4.மனைவியோடும்/கணவனோடும், குழந்தைகளோடும் ஒருநாள் பேசும் வார்த்தைகள் எத்தனை? (கூடவே சின்ன இணைப்புக் கேள்வி: நேற்று உங்கள் கணவன்/மனைவி அணிந்திருந்த உடை ஞாபகத்தில் இருக்கிறதா?)
5.தொலைதூரத்துக் கிராமத்தில் தூக்கி வளர்த்த பாட்டியோ, அதுபோல பிணைப்பு மிக்க உறவினரோ இறந்துவிட்டால், துஷ்டிக்குச் செல்வது குறித்த உங்கள் யோசனைகள் என்னவாக இருக்கும்?
6.உங்கள் தெருவிலிருக்கும் எத்தனை வீடுகளோடு பழக்கம் உண்டு?
7.டைரிகளை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்?
8.கோவிலில், பஸ் நிறுத்தத்தில் உங்கள் முன்னே கைநீட்டி நிற்கும் குழந்தைகளைப் பார்த்ததும் என்ன செய்வீர்கள்?
9.உங்களைப் பெற்றவர்கள் உங்களோடு இருக்கின்றனரா?
10.காலையில் பறவையின் சத்தங்கள் கேட்கிறதா?

உங்கள் கோலத்தை உங்களால் ரசிக்க முடிகிறதா? முடிந்தால், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 

 

*

கருத்துகள்

32 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உணர்வுகளோடு கலந்த வாழ்க்கையை யாருக்குதான் பிடிக்காது..நானும் என்னிடம் இந்த கேள்விகளை கேட்டேன்..50/50 தான் பதில்..

    சிந்திக்க வைக்கும் ஆழமான பதிவு

    பதிலளிநீக்கு
  2. சுய தேர்வில் ஓரளவு தேறி விட்டேன் என்றே தோன்றுகிறது. உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. அதிலும் நட்சத்திர வாரம் மணி மகுடத்தில் உள்ள வைரம்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    பதிலளிநீக்கு
  3. கோலம் போட்டேன். ஆனால் அதை ரசிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  4. hummmmmmm

    சிந்திக்க வைக்கும் ஆழமான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. ரொம்பவே சிந்திக்க வைத்தீர்கள் இந்த பதிவின் மூலம்

    பதிலளிநீக்கு
  6. //இப்போது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கமுண்டா//

    நிச்சயமாக இல்லை... மின்னஞ்சல் கூட குறைந்து விட்டது. only orkut scraps.
    :(
    யோசிக்க வைத்த பதிவு

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க தூண்டும் பதிவு,

    ஆனா இன்னா தலைப்பு தல இது,ஒரே பேஜாரா க்குது

    பதிலளிநீக்கு
  8. தயவு செய்து இந்தப் பதிவிற்கு நையாண்டி என்ற லேபிளை எடுத்து விடவும்.

    சென்னை சில்க்ஸின் காலண்டர் ஒன்றில் உறவுகள் மேம்பட என்று பல விஷய்ங்களை எழுதியிருப்பார்கள்.

    அடுத்த வருட காலண்டரில் யாராவது தங்கள் இந்தக் கேள்விகளை ப்ரிண்ட் எடுத்து அச்சிட்டு எல்லா வீடுகளிலும் மாட்டலாம்.

    உண்மை அறையட்டும் எல்லார் கன்னங்களிலும்.

    பதிலளிநீக்கு
  9. தலைப்பைப் பார்த்து, இந்த வார நட்சத்திரம் எல்லோரையும் அகோரிசாமியாராகச் சொல்கிறாரான்னு பார்க்க ஓடிவந்தேன்.

    நல்ல வேளை, சின்ன சின்ன கேள்விகளில் தவறுகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். பாராட்டு.

    சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  10. பொளீர்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி இருக்குது.

    ஒரு சில கேல்விகளுக்கான பதில்கள் குற்ற உணர்வுடன் தலையைத் தாழ்த்திக் கொள்ளவும் ஒரு சிலவற்றின் பதில்கள் அப்பாடா இதையாவது செய்யறோமே என்று மனதில் நிம்மதியையும் ஏற்படுத்துகின்றன.

    பரிசல் சொன்னது போல நையாண்டியை எடுத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்க தூண்டும் பதிவு,

    பதிலளிநீக்கு
  12. கொஞ்சம் நின்றுதான் பார்த்தேன்...
    முள் சாட்டையால் விளாசி விட்டீர்கள் மாதவராஜ் ...

    மனிதன்
    சிந்தித்து திருந்துவதற்கென்றே
    உங்கள் பதிவு அமைவது அருமை...

    தொடர்ந்து மிகவும் இரசிக்கிறேன்.
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  13. //குழந்தைகளை தெருவில் விளையாட அனுமதிப்பது உண்டா?//

    தெருவில் விளையாடாத குழந்தைகளை விட விளையாடும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

    விஞ்ஞான பூர்வமாக நிறுபிக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. நீங்க கேட்ட்க் கேள்வி போளேர்னு அறைஞ்ச மாதிரி இருக்கு...தேறிட்டேன்....

    பதிலளிநீக்கு
  15. உங்கள் கேள்விகளை எதிர்கொள்ளும் திராணி நம் ஒருவருக்கும் இருக்காது
    உங்கள் ஒவ்வொரு கேள்வியுமே என்னை குத்தியது.

    பதிலளிநீக்கு
  16. ஒரு பதிவு எழுதுவதாக இருந்தேன் உங்களுடைய மூன்று கேள்விகள் அங்கேயும் இருந்தது
    டைரி, கடிதம், உறவுகளோடு பேசுகிற வார்த்தைகள்...

    ம்ம்ம..

    பதிலளிநீக்கு
  17. சரமாரியான பதிவுகள் சுருக்கமாகவும் அழுத்தமாகவும்...!

    பதிலளிநீக்கு
  18. என்ன சொல்லி பாராட்டினால் தகும்? மிக மிக நல்ல பதிவு ..சிந்திக்கும் போது கொஞ்சம் நெருடலாய் உள்ளது...

    பதிலளிநீக்கு
  19. பரிசல், நந்தா, அத்திரி எல்லாம் சொன்னாலும் நீங்க அடிச்சது இன்னும் வலிக்குது. பயங்கரமா பெயில். ஆனாலும், குறைவு மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகளை (!) கொஞ்ச வேண்டும் என்று இப்பதான் பதிவில் எழுதினேன் :)

    சூப்பர் பதிவு மாதவ். வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  20. எந்திரத்தனமான நிலையற்ற வேகமான இச்சூழலில் இக்கேள்விகள் நெஞ்சிலறைந்து புரட்டிப்போடுவதோடு மட்டுமல்லாது புரட்டிப்பார்க்கவும் செய்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. மனதில் குற்ற உணர்ச்சி எழுகிறது...

    செய்த தவறுகளை விட சில தவறுகளையாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை தருகிறது உங்கள் பதிவு...

    பதிலளிநீக்கு
  22. மிக நல்ல சிந்தனைகள்...
    நேற்றை மறக்காத வாழ்வை வாழ்ந்தாலே 'நிர்வாணத்திலும்' அழகாகத்தான் இருப்போம்.

    பலரால் அது முடிவதில்லை;அப்படி வாழ்வை வாழ்வதில்லை என்பதுதான் சோகம் !

    பதிலளிநீக்கு
  23. //இப்படி நூறு கேள்விகள் கேட்க முடியும்//

    உண்மைதான்.எத்தனையோ கேள்விகள் வரும்.எவ்வளவோ விசயங்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம்.எப்போது மீட்டெடுக்கபோகிறோம்?சரியாக பதில்சொல்ல தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  24. எந்த நாணயத்துக்கும் இருபக்கங்கள் உண்டு.நீங்கள் கேள்வி கேட்ட அதே வர்க்கத்தை நோக்கி சில கேள்விகள்:

    1. எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ் என்றால் என்ன என்று தெரியுமா? அங்கே போகும் நிலை உங்களுக்கு ஏன் வரவில்லை?

    2. உங்களுக்கு கிடைத்த கல்வியையும்,வாய்ப்புகளையும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கவிருக்கும் கல்வியையும்,வாய்ய்ப்புகளையும் ஒப்பிடுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு போராடியது போல உங்கள் குழந்தைகளும் போராடவேண்டுமா?

    3. கூட்டுகுடும்பத்தில் உங்கள் அன்னை மகிழ்ச்சியாக இருந்தாரா? அவரது மாமனார், மாமியார் அவரை எப்படி நடத்தினார்கள்?

    4. வரதட்சிணை என்றால் என்ன என்று தெரியுமா?

    5. நகர்புற வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமைகளும், எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சின் மகத்துவமும் தெரியுமா? (தெரியாதவர்கள் வறுமையின் நிறம் சிகப்பு, பட்டம் பறக்கட்டும் ஆகிய திரைப்படங்களை பார்க்கவும்)

    இன்னமும் கேட்கமுடியும்..ஆனால் உங்கள் பதிவை படித்துவிட்டு நோஸ்டால்ஜியாவில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு பிடிக்குமா என தெரியவில்லை:-)))

    யதார்த்தத்தில் ஆர்க்குட்டும்,பேஸ்புக்கும் நமது நட்பின் வட்டத்தை விரிவாக்குகிறது. இமெயில் என்பது தபால்துறையின் மறுவடிவம்தான். இன்றைய தலைமுறை வாழும் வாழ்வு அவர்கள் தாய்,தந்தையர் கண்ட கனவு...இன்றைய பெண்களுக்கு எளிதில் கிடைக்கும் தனிகுடித்தனம் என்பது அவர்கள் பாட்டி,அம்மா,அத்தை ஆகியோருக்கு மறுக்கப்பட்ட ஒரு உரிமை.இதை வாய் விட்டு கேட்டதற்கு அவர்கள் தாக்கப்பட்டுகூட இருக்கலாம்.காதல் மணம் என்ற ஒரு சிம்பிளான விஷயம் போன தலைமுறையில் பாவமாக கருதப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. எல்லா கேள்விகளும் யோசிக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. நான் சொல்ல நினைத்ததை செல்வன் சரியாகச் சொல்லி விட்டார்!

    விஞ்ஞான வளர்ச்சியால், பொருளாதார வளர்ச்சியால், தற்போது இன்னும் எத்தனை எத்தனையோ மாற்றங்களை நாம் தினமும் அனுபவிக்கிறோம்... இந்த வளர்ச்சியோடு, காலத்தோடு போட்டியிட முடியாத மனிதர்களின் நிலைதான் வருந்தத்தக்கது. மதிப்பிழந்த சைக்கிள் ரிக்க்ஷா, ஆள் நடமாட்டம் குறைந்த திரையரங்குகள், காணாமல் போகும் மாட்டு வண்டிகளின் சத்தம் இப்படி எத்த்னை எத்தனையோ!!

    பதிலளிநீக்கு
  27. வந்து ‘சத்திய சோதனை’ செய்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    தராசு!
    தலைப்பு ஏன் பேஜாராயிருக்கு. நிர்வாணம் என்றவுடன் உடல் சார்ந்த பார்வைகளே நமக்கு வர ஆரம்பிக்கின்றன. நாம் மொழியையும் கொச்சைப்படுத்தி வைத்திருக்கிறோம். திறந்த மனதோடு உங்களை நீங்கள் பாருங்கள் என்றுதான் இங்கு அர்த்தம்.

    பரிசல்!
    சட்டென்று எனக்கு அறை விட்டாற் போலிருந்தது. உடனே நையாண்டி என்பதை எடுத்து விட்டேன். நான் உங்களை மிகுந்த நகைச்சுவையான மனிதர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.இவ்வளவு நுட்பமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறீர்கள் எனும் போது சந்தோஷமாய்த்தான் இருந்தது.


    வால்பையன்!
    உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியமாகவும், sportiveஆகவும் இருக்கும்!


    செல்வன்!
    உங்கள் கடைசிப் பத்தி தவிர மற்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை. வேலைவாய்ப்பு அலுவலகம் எவ்வளவு நிரம்பி வழிகிறது என்பதிலிருந்து ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் மறுக்க முடியும். ஆனால் நீங்கள் சொன்ன வந்த விஷயம் முக்கியமானது. எல்லாவற்றுக்கும் இன்னொரு பக்கம் உண்டுதான்.அதை எப்படி வரும் தலைமுறைக்கு சாதகமானதாக்கிக் கொடுக்கிறோம் என்பதில்தான் இந்த தலைமுறையின் சவால் இருக்கிறது. தையல் மிஷின் வந்தாலும் ஊசி இல்லாமலா இருக்கிறது?

    வத்திராயிருப்பு!
    உங்கள் பார்வையில் இருக்கும் இந்த பரிவு எல்லோருக்கும் வர வேண்டும்.அது சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!