வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் - ஒரு விவாதம்

unemployment

எனது வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் என்ற பதிவில் சாத்தூரில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு இருந்தேன். பெருமளவில் இணைய நண்பர்கள் வாசித்தனர். கருத்தும் தெரிவித்திருந்தனர். பவானிசங்கர் தனது சொந்த அனுபவத்தையே நெஞ்சை உருக்கும் விதமாகச் சொல்லியிருந்தார். அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலர் பின்னூட்டம் இட்டிருந்தனர். பவானிசங்கரும் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உறுதிகொண்டதோடு மட்டுமில்லாமல், “பார்ப்போம், வால் ஸ்டிரிட்டா, நாமா?” என்று எழுதியிருந்தார்.

இதற்குப் பிறகு நண்பர் கார்த்திகேயன் எழுதியிருந்த பின்னூட்டம் முக்கியமானதாக இருக்கிறது. அவர் சொல்கிறார்:

“ஐயா, இந்தப் பதிவு புத்திசாலித்தனமான அமெரிக்கா எதிர்ப்புப் பிரச்சாரம் போல் தோன்றுகிறது. ஒரு இளைஞனின் மரணத்தை பயன்படுத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தன் நாட்டில் ஐந்து லட்சம் பேர் வேலையிழக்கும் நிலையிலும் வேறு எந்த நாடு globalisation கடைப்பிடித்து தன் வேலைகளை பிற நாடுகளுக்கு அளிப்பதை தொடரும்?”

இதை அவரைப் பொறுத்த அளவில் மிக உண்மையாகவும், நேர்மையாகவும்தான் எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் இங்கு பலருக்கும் இருப்பதால், அவருக்கு மட்டும் பின்னூட்டமாக பதில் அளிப்பதை விட, பதிவாக எல்லோருக்கும் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீபரீதத்தை நிகழ்த்தி காட்டும் சக்தியே நிதி மூலதனம்.

மூலதனம் அதன் தோலை உரித்துக் கொண்டு 'நிதி மூலதனமாக' உருவெடுத்திருக்கிறது. இந்த நிதி மூலதனம் சர்வ வல்லமை கொண்டவையாக அதன் இயல்பிலேயே இருக்கிறது. தன்னை  உலகின் ஒவ்வொரு துகளிலிருந்து சேகரிப்பதும், மேலும், மேலும் வளர்ப்பதுமே அதன்  பிறவி நோக்கமாக இருக்கிறது. தேசங்களையும், எல்லைகளையும் மிகச் சுதந்திரமாக தாண்டுகிறது. இதற்காக வடிவமாக்கப்பட்டது தான், சுதந்திரச் சந்தை, உலகமயமாக்கல் எல்லாம்.

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டும் ஊதியம், அமெரிக்கர்களோடு ஒப்பிடும்போது குறைவே. எப்படிப்பார்த்தாலும் லாபம், லாபம் மட்டுமே இதன் பின்னால் உள்ள சூட்சுமம். குறைந்த உதியத்திற்கு ஆள் எடுக்கும் ஏற்பாடுகள்தாம் இவைகள். மிகச்சரியாக புரிந்துகொண்டால் இவையாவும், மூலதனத்திற்கும், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளுக்குச் செய்யும் சேவகமே தவிர, இலட்சக்கணக்கான அமெரிக்கர்களை விட்டு விட்டு, இந்தியர்களுக்குச் செய்கிற தியாகம் அல்ல! உழைப்புக்கு கொடுக்கிற மரியாதையும் அல்ல.அமெரிகாவில் நிலவும் நிதி நெருக்கடிகள் அங்கு இப்போது வேலையின்மையை அதிகரித்திருக்கின்றன. அவர்களே குறைந்த ஊதியத்திற்கு தயாராகும் போது, அங்கிருந்து நாம் விரட்டப்படும் அபாயமும் இருக்கிறது.

இந்தியாவில் தயாரித்தால் 50 ருபாய் ஆகும் ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ருபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும்  ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதிமூலதனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன.

சரி. அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படுவதால் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், எதோ ஒரு ஊதியம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்று ஒரு வாதம் முன் வைக்கப்படலாம். ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும் போது  இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். விளம்பரம், அரசின் சலுகைகள், அசூரத்தனமான தொழில்நுட்பத்தின் முன்னால் நிற்க முடியாமல் சடசடவென்று உதிர்ந்து போகும். மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் அந்தத் தொழிலில் அந்த பன்னாட்டுக் கம்பெனியே சர்வ ஆதிக்கமும் பெற்றிருக்கும்.

ஏராளமான ஆலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் குப்பையெனத் தூக்கி எறியப்பட்டு இருப்பார்கள். பன்னாட்டுக் கம்பெனியின் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பின்னால் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் வாழ்வின் தவிப்புகள் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகள் புரியாமல், ரேஷன் கடையின் முனால் ஒரு மணிநேரம் காத்துக்கிடப்பது கேவலம் என நினைக்கும் இளைஞர்கள், மவுண்ட் ரோட்டில் விடியும் முன்பு டை கட்டிக் கொண்டு காத்துக் கிடக்கிறார்கள்.

இவை அமெரிக்காவுக்கு எதிரான புத்திசாலித்தனமான பிரச்சாரம் அல்ல, அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு எதிரான வரலாற்று சாட்சிகள்.

 

*

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டும் ஊதியம், அமெரிக்கர்களோடு ஒப்பிடும்போது குறைவே

  *******

  நீங்கள் சொல்லும் மற்ற கருத்துக்களில் ஒப்புதல் உண்டு. ஆனால் மேலே குறித்திருக்கும் இந்தக் கருத்துடன் மாறுபடுகிறேன்.

  அடிப்படையில் அமெரிக்காவில் இருக்கும் எல்லோருக்குமே மென்பொருள் துறையில் அவர்களின் திறமைக்கு ஏற்ப சமமான சம்பளம் தான் வழங்கப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும், இந்தியர்களும் என்ற பேதங்கள் இல்லை. ஆனால் விசா மூலம் அமெரிக்கா வரும் இந்தியர்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளன. நேரடியாக நிறுவனங்களிடம் வேலை செய்ய முடியாமல் சில இடைநிலை நிறுவனங்கள் மூலமாகவே வேலை செய்ய வேண்டும் (Consultants). அப்படி செய்யும் பொழுது நமக்கு வரும் சம்பளத்தை அந்த இடைநிலை நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் எடுத்துக் கொள்வார்கள். எனவே தான் சம்பளம் குறைவாக வருமே தவிர அடிப்படையில் ஒரே சம்பளம் தான்.

  அமெரிக்காவில் இருக்கின்ற இந்திய நிறுவனங்கள் தான் மிகவும் குறைவாக சம்பளம் வழங்குகிறார்கள். இந்திய ரூபாயில் ஒரு சம்பளம், டாலரில் கொஞ்சம் சம்பளம் என இவர்கள் அடிக்கும் கொள்ளை தான் அதிகம். இந்திய நிறுவனங்களுக்குள் ப்ராஜக்ட் பிடிக்க நடக்கும் போட்டியில் Billing rate கடுமையாக குறைந்து இங்கே இருந்தவர்களின் சம்பளத்தையும் சேர்த்து குறைத்து விட்டார்கள் என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 டாலர் என்பது எல்லாம் இங்கே ரொம்ப சாதாரணம். ஆனால் இந்திய நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலருக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அதனால் இங்கே சம்பளம் குறைந்து விட்டது என்பது தான் உண்மை.

  அமெரிக்கர்களா, இந்தியர்களா என பேசுவதை விட அமெரிக்க முதலாளிகள், இந்திய முதலாளிகள் என பேசுவதே பொருத்தமாக இருக்கும். இரண்டு பேருமே கொள்ளைக்காரர்கள் தான். இவர்களிடம் சிக்கி கொண்டிருக்கிற நானும், என் சக அமெரிக்கனும் ஒன்று தான். சில நேரங்களில் அமெரிக்கர்களின் வேலையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் தோன்றும். உலகமயமாக்கத்தால் வாழ்க்கை இழந்த அமெரிக்கர்கள் அதிகம். அவர்களின் வேலையை தான் இந்தியாவிலும், சீனாவிலும் செய்து கொண்டிருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றால் எந்த நாட்டிற்கும் தங்கள் தொழில்களை மாற்றி விடுவார்கள். இந்தியா என்பது அவர்களுக்கு பல வகையிலும் வசதியான இடம். நாளை இந்தியாவை விட வசதியான இடம் கிடைத்தால் இங்கிருந்து அங்கு சென்று விடுவார்கள்.

  தங்களுடைய வேலை தங்களுடைய நாட்டிலேயே இருக்க வேண்டும் என சாமானிய அமெரிக்கர்கள் நினைப்பதில் தவறு எதுவும் இல்லை. அப்படி அமெரிக்க அரசு சட்டம் கொண்டு வருவதையும் குறை சொல்ல முடியாது. ஆனால் அமெரிக்க முதலாளிகளை மீறி அப்படி ஒரு சட்டம் நடைமுறைக்கு வராது என்பது தான் உண்மையான நிலவரம்.

  நன்றி....

  பதிலளிநீக்கு
 2. This vicious cycle>>>of the new economical policies has been broken by the bad evils of capitalists reformations.The LEADER OF THE POLICY -US-HAS BEEN ADMITTED IN THE sick Hospital.The new medicines of 'Stimulus"package will not cure the patient immediately.The partners of the patient >>India and others>>UK,JERMANY,CANADA GULF COUNTRIES AND REST OF THE WORLD>>NEED TO CHANGE THEIR economical path immedeately.The millions of JOB losses and layoffs are the products of liberalisation,privatism,globalisations>>LPG..
  unless we change the economical path we will also be perished by the "US EFFECTS".THE FIGHT AGAINST THE unlimited FDI AND SAFE GUARDING THE Insurance sector and financial sector in the public sector is the only main reasons of our survival in this difficult time.---selvapriyan-Chalakudy

  பதிலளிநீக்கு
 3. மிகத் தெளிவாக உங்கள் பார்வைகளை முன்வைத்திருக்கிறீர்கள். உடன்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. //ஒரு காலத்தில் படையெடுத்து நாடு பிடித்தவர்கள் இன்று மாயாவிகளைப் போல் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேற்று நாட்டின் பொருளாதாரத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்தியுள்ளது.//

  ஒரு நாடு Globalisation ஏற்று கொள்ளாவிட்டாலும் இதை செய்ய முடியும், ஐரோப்பிய நாடுகள் நினைத்தாலும் செய்ய முடியும், அமெரிக்காவின் உதவி இல்லாமல். Ex:: Zimbabwe

  //பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளுக்குச் செய்யும் சேவகமே தவிர, இலட்சக்கணக்கான அமெரிக்கர்களை விட்டு விட்டு, இந்தியர்களுக்குச் செய்கிற தியாகம் அல்ல! //

  ஆம் ஒத்துக்கொள்கிறேன். அதே போல் இது இந்தியர்களுக்கு செய்கிற த்ரோகமும் அல்ல.அமெரிக்காவின் Globalisation Policy காரணமாக இந்தியர்களுக்கு கிடைத்த சிறு நன்மை.

  //ஒரு அமெரிக்க கம்பெனி இங்கு நிறுவப்படும் போது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் அதே துறையைச் சார்ந்த தொழில்கள் மிக வேகமாக பாதிக்கப்படும். //

  ஆம்,இதுவரை Monpoly காரணமாக உலகதரத்திற்கு தன்னை மேம்படுத்தி கொள்ளாத நிறுவங்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

  இந்தியாவின் சிறு மற்றும் பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. Globalisation காரணமாக எளியவர்கள் மீதான இவர்கள் ஆதிகாரம் சிறிதளவேனும் குறையும் and also கூலி/சம்பளமும் கூடும் . (Due to demand for work force by MNC's)Ex:: Tirupur.

  பதிலளிநீக்கு
 5. Thanks to globalization and American investment China could
  achieve remarkable growth and could sustain that growth. Will you criticise China for that, as
  due to global recession and crisis in USA Chinese exports have been affected, unemployment has increased and many units have been shut.For you commies if China does benefit from globalization that is
  good , if India benefits that
  is bad . China could prosper because of low labor costs. Manufacturing jobs moved to China and Mexico, from USA. India has
  comparative advantage in services
  and in manufacturing also. So despite this crisis, in the long run India will benefit from globalization. Why dont you all
  preach your theory to China or
  Vietnam.Vietnam is welcoming
  FDI from anywhere in the world.
  Nobody can dare to show a black flag if the US president visits
  Vietnam.Vietnam is a member of
  WTO.Cuba is also liberalising
  its economy. The commies in India
  are the only ones who hate gloablization even when the so called communist countries have
  opened up their economy and welcome globalization as an opportunity.Chia has joined WTO.Vietnam benefits from liberalization of
  global trade in textiles. So does
  Bangladesh. Vietnam takes a pragmatic view. So does China.
  The commies in India are dogmatic.

  பதிலளிநீக்கு
 6. 'இந்தியாவில் தயாரித்தால் 50 ருபாய் ஆகும் ஒரு பொருள் அமெரிக்காவில் தயாரித்தால் 150 ருபாய் வரை ஆகலாம். அமெரிக்காவில் கொடுக்கப்படும் ஊதியம் முதற்கொண்டு அனைத்தும் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். அந்த பொருள் இங்கு தயாரிக்கப்படுவதே அமெரிக்காவுக்கு லாபம். எனவே அமெரிக்க கம்பெனிகள் தங்கள் நிதிமூலதனத்தைக் கொண்டு இந்தியாவில் தொழில் புரிய வருகின்றன.'

  The same applies to China.
  Yet 'communist' China
  opened up its economy much
  before India. China could
  prosper because of the foreign
  investment and jobs created
  on account of the boom in
  foreign investment. It welcomes
  investment from everywhere.
  Has CPI(M) ever criticised China
  for this and for using globalization for its benefit.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் சசி!
  //நீங்கள் சொல்லும் மற்ற கருத்துக்களில் ஒப்புதல் உண்டு. ஆனால் மேலே குறித்திருக்கும் இந்தக் கருத்துடன் மாறுபடுகிறேன்.//


  நீங்கள் சொல்வதையும் என்னால் முழுமையாக ஒப்புக்கொள்ள முடிவதில்லை.

  எனக்குத் தெரிந்தவரையில், இது பல துறைகளில் நடைமுறையாய் இருக்கிறது.

  மேலும், இங்கிருப்பது போல ஊதியங்கள் அங்கு வெளிப்படையாய் இருப்பதும் இல்லை எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவருடைய ஊதியம், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இன்னொருவருக்கு தெரியும் வாய்ப்பும் மிகக் குறைவே. personal appraisal மூலம் உயர்த்தப்படும் இன்கிரிமெண்ட்களில் கூட ஒவ்வொருவருக்குள்ளும் வித்தியாசங்கள் இருக்கும் என அறிந்திருக்கிறேன்.

  இந்த நடைமுறை இப்போது ஐ.டி உபயமாக இந்தியாவிலும் வந்துகொண்டிருக்கிறது.

  அப்போதுதானே, சம்பள வித்தியாசங்கள் அறிந்து, கொடி பிடிக்க முடியாது!

  பதிலளிநீக்கு
 8. விமலா வித்யா!

  சுந்தர்

  உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கார்த்திகேயன்!

  //ஒரு நாடு Globalisation ஏற்று கொள்ளாவிட்டாலும் இதை செய்ய முடியும், ஐரோப்பிய நாடுகள் நினைத்தாலும் செய்ய முடியும், அமெரிக்காவின் உதவி இல்லாமல். Ex:: Zimbabwe//

  ஐரோப்பிய நாடுகள் Globalisation policyஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று யார் சொன்னது. அமெரிக்கா மட்டுமே அதற்கு முழு குத்தகைக்காரர் என்று யார் சொன்னது?

  //ஆம் ஒத்துக்கொள்கிறேன். அதே போல் இது இந்தியர்களுக்கு செய்கிற த்ரோகமும் அல்ல.அமெரிக்காவின் Globalisation Policy காரணமாக இந்தியர்களுக்கு கிடைத்த சிறு நன்மை.//

  யாருக்கு நன்மை என்று சொல்லலாமா?

  //ஆம்,இதுவரை Monpoly காரணமாக உலகதரத்திற்கு தன்னை மேம்படுத்தி கொள்ளாத நிறுவங்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.

  இந்தியாவின் சிறு மற்றும் பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஆதிக்க சாதிகளிடம் தான் உள்ளது. Globalisation காரணமாக எளியவர்கள் மீதான இவர்கள் ஆதிகாரம் சிறிதளவேனும் குறையும் and also கூலி/சம்பளமும் கூடும் .//

  பல நூற்றாண்டுகளாக இங்கிருக்கும் வளங்களும், செல்வமும் தொடர்ந்து சுரண்டப்பட்டன. சொந்தக்காலில் நிற்பதற்கே முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது சதா நேரமும், முஷ்டி உயர்த்தி பலம் காட்டிக் கொண்டிருக்கிற ஒருவனிடம் எப்படி சரிக்குச் ச்மமாக போட்டியிட முடியும்.

  பெரும் நிறுவனங்கள் ஆதிக்க ஜாதியிடம் இருப்பதை என்பதை ஒப்புக் கொள்கிறேன். சிறுநிறுவனங்களில் ஆதிக்க ஜாதியில் இல்லாதவர்களும் பெருமளவில் நுழைந்த காலம் இருந்தது. (உ-ம்) சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி சுற்றியிருக்கும் பகுதிகளில், தீப்பெட்டி தொழில்.

  இன்று இந்த சிறுநிறுவனகங்கள்தாம் விழுங்கப்படுகின்றன. பெரும் நிறுவனங்கள் சலுகைகளால் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்த அரசியல் இப்போது புரியும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அனானிமஸ்!

  (இருவரா அல்லது ஒருவரா)இரண்டு கருத்துக்க்களும் ஒரே தொனிதான். ஒரே அர்த்தம்தான்.

  1.இதே பாலிசியை சீனா ஏற்றுக்ககொள்ள வில்லையா? அதை மட்டும் கண்டிக்கவில்லை, என்கிறீர்கள்.

  சீனா தன் நாட்டு மக்களை மனதில் வைத்து இந்த உலகமயமாக்கலை தன் நாட்டிற்கேற்ப தகவமைத்துக்கொண்டது. இந்தியா தனது பெரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக அப்படியே ஏற்றுக் கொண்டது.

  2. உலகமயமாக்கல் நன்மையான ஒரு காரியம் என்கிறீர்கள்.

  என்ன நன்மை, யாருக்கு நன்மை என்று கொஞ்சம் விளக்குங்களேன்.

  பதிலளிநீக்கு
 11. 'இன்று இந்த சிறுநிறுவனகங்கள்தாம் விழுங்கப்படுகின்றன. பெரும் நிறுவனங்கள் சலுகைகளால் நிலைநிறுத்தப்படுகின்றன'

  சாதியை வைத்து இதை வாதிட முடியாது. சிறு நிறுவனங்களுக்கு
  இன்னும் சலுகைகள் கிடைக்கின்றன.
  திருப்பூர் கொழிக்கக் காரணம் என்ன?.தமிழ்நாட்டில் தோல் தொழிலில் முஸ்லீம்கள் பங்கு அதிகம்.
  தையலாடை/பின்னலாடை தொழில்,
  தோல் தொழில் இரண்டும் உலகமயமாதல் காரணமாக பெரு
  வளர்ச்சி பெற்றன. சிறு நிறுவனங்கள்தான் இத்தொழில்களில்
  அதிகம். அவை எந்த சாதி/மதத்தினை
  சார்ந்தவர்களிடம் இருக்கின்றன.

  கோவை/திருப்பூர்
  கவுண்டர்கள்,நாயக்கர்கள்,
  நாயுடுகள், வட ஆற்காடு முஸ்லீம்கள், சிவகாசி,
  விருதுநகர் நாடார்கள்- இவர்கள்
  உலகமயமாதலால் பலன் அடையவில்லையா?.

  அந்நிய நாட்டு நிறுவனங்கள் இத் தொழில்களில் இல்லை.பெரிய
  தொழிற் குழுமங்கள் பல இத்தொழில்களில் ஈடுபடவில்லை.
  டாடாவும்,ஹிந்துஸ்தான் லிவரும்
  இருந்தாலும் அவை இத்தொழில்களில்
  பகாசுர நிறுவனங்களாக இல்லை.
  அவை ஏற்றுமதியில்தான் அதிக
  கவனம் செலுத்துகின்றன. இன்று
  பல துறைகளில் பல சிறு மற்றும் பெரிய தொழில் நிறுவங்களை பாதிப்பது மலிவான இறக்குமதிகள்.இதில் சீனாவின்
  ‘கைவரிசை' அதிகம்.கம்யுனிஸ்ட்கள்
  அதைப் பற்றி பேசமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 12. //ஐரோப்பிய நாடுகள் Globalisation policyஐ ஏற்றுக்கொள்ளவில்லை என்று யார் சொன்னது. அமெரிக்கா மட்டுமே அதற்கு முழு குத்தகைக்காரர் என்று யார் சொன்னது?//

  நான் தவறாக புரிந்து கொள்ளபட்டுவிட்டேன் என நினைக்கிறேன். TO BE CLEARER,

  Globalisation policyஐ கடைபிடிக்கின்ற நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் மற்ற நாடுகளால் கட்டுப்படுத்த இயலும் என்பது தவறு என நினைகிறேன். Globalisation policyஐ கடைபிடிக்காத நாட்டின்(EX: ZIMBABWE) பொருளாதரத்தையும் சீர்குலைக்க நினைத்தால்(EU countries) முடியும்.
  //யாருக்கு நன்மை என்று சொல்லலாமா?//

  எங்கள் மக்களே இருக்கிறார்கள்.
  உலகமயமாக்கல் காரணமாக திருப்பூரில் US & Europe ற்கு பனியன் உற்பத்தி செய்ய முடிகிறது.

  இதனால் இங்கிருக்கும் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கறது. விவசாய கூலி வேலைகளை தவிர மற்ற வேலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட கிராமத்து தலித்துகளை இந்த கம்பனிகள் இருகரம் கூப்பி அழைத்துக்கொண்டனர். ( 30 KM சுற்றளவுக்கு கம்பனி பேருந்துகள் பணியாட்களை அழைத்து செல்ல வருகின்றன) அவர்களுக்கு எவராலும் தர இயலாத பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. மக்கள் ஆதிக்க சாதியினரிடம் விவசாய கூலிக்காக அடிமைப்பட்டு கிடக்க வேண்டியதில்லை. இது 'ஆயுத எழுத்து' படத்தின் "ஜன கன மன.. ஜனங்களை நினை.." பாடலை ஒலிபரப்பி கொண்டு TEMPO TRAVELLAR வாகனத்தில் வந்த புரச்சிகர குரூப்பினால் உருவாக்க முடியாத நம்பிக்கை, பொருளாதார சுதந்திரம் உருவாக்கியுள்ள தன்னம்பிக்கை.

  "இப்பத்த தண்டுவனுகல்லாம் பனியன் கம்பனிக்கு போய் பழகிட்டானுங்க, நம்மள மதிக்கிறதில்ல"
  "கூலிக்கு ஆள் வேணும்னா கெஞ்ச வேண்டியதா இருக்கு"
  போன்ற பய குரல்கள் விவசாய பெருசுகளிடம் கேட்க துவங்கி இருக்கின்றன.

  இந்த மாற்றங்கள் என் முன்னே நிகழ்ந்தவைகள். இது நன்மை என நான் நினைகின்றேன்.

  மேலும் பலர் நன்மை பெற்றிருக்கிறார்கள்- நான் உட்பட.. ( நீங்கள் கூட இருக்கலாம் ;) )

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!