இந்த வெட்கங்கெட்ட பண்டிகை இந்தியக் கலாச்சாரத்துக்கு கேடானது என்று கூப்பாடு ஒருபுறம் கேட்கிறது.
அதை கண்டு கொள்ளாமல் இன்னொருபுறம் காதலர் தின வாழ்த்துக்கள் உற்சாகத்துடன் காற்றின் திசைகளில் கேட்ட வண்ணம் இருக்கின்றன.
நமக்கு முன்னால், காலம் காலமாக, யார் யாரெல்லாமோ காதல் குறித்து பேசியிருக்கிறார்கள், யோசித்திருக்கிறார்கள்.
இலக்கியங்களின் பக்கங்களில் அவை மெல்லிய புன்னகையோடு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சுவராஸ்யமான இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத சில பக்கங்களை நாம் இன்று பார்க்கலாம் எனத் தோன்றியது.
_______________________________________________________
ஒரு இளம்பெண் வீட்டின் பின்புறத்தில் திணையை காயவைத்து இருக்கிறாள். அதன் அருகில் ஒரு பெண்மான் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது வீட்டிற்குள்ளிருந்து வந்து திணையைப் பார்த்துக் கொண்டு , வீட்டுவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறாள். ஒருதடவை வீட்டின் பின்கதவைத் திறந்து பார்க்கிறபோது திணையை கோழிகளும், காகங்களும் தின்று கொண்டிருக்கின்றன. அதே நேரம் எங்கிருந்தோ வந்த ஆண்மான் ஒன்று பெண்மான் அருகில் மயங்கி நிற்கிறது. அந்த பெண் தயங்குகிறாள். காகங்களையும், கோழிகளையும் விரட்டினால் ஆண்மானும் ஓடிவிடும். யோசித்தவள் பேசாமல் பின்கதவை சாத்திவிட்டு வீட்டிற்குள் இருந்துவிடுகிறாள். அவளுக்கு சந்தோஷம் பொங்கி நிற்கிறது.
- சங்க காலத்துப் பாடல் ஒன்றிலிருந்து...
_______________________________________________________
வாழ்க்கையில் கிடைத்திருக்கும் ஒரே வண்ணம் அது. கலைகளின், வாழ்க்கையின் அர்த்தங்களை அது தருகிறது. அந்த வண்ணத்தின் நிறமே காதல்!
- மார்க் சாகல்
வாழ்க்கை என்னும் மலரின் தேன் துளிகளே காதல்
- விக்டர் ஹியுகோ
காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது
- கிரேக்க பழமொழி
காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது.
- கலீல் கிப்ரான்
இனிமையான சந்தோஷமும்
வலிமிகுந்த காயமுமே காதல்
- பேர்ல் பேர்லி
கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்.
- மார்க் ட்வைன்
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஒயில்டு
காதலே என் மதம்.
அதற்காக இறப்பேன்.
- ஜான் கீட்ஸ்
_______________________________________________________
காதலுக்காக திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிகிறது.
- ஜோஷ் பில்லிங்ஸ்
காதல் என்பது கற்பனை.
திருமணம் என்பது நிஜம்.
கற்பனைக்கும், நிஜத்திற்குமான முரண்பாட்டின்
தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
- கோயத்
காதல் என்பது நெருப்பு.
உன் இதயம் குளிர் காயப் போகிறதா
அல்லது
உன் வீடு தீப்பற்றப் போகிறதா
என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.
- ஜோன் கிராபோர்ட்
காதலுக்கு பல முகங்கள்
வெட்கத்தோடு வளரும்
வசந்தகாலப் பூக்களைப் போல
ஓடையிலே கூடுகிற
சிறிய நீர்த்திவலைகள் போல
எண்ணற்றவை
கவனமாக அவற்றுள்ளே
நோக்கினால் உனது முகத்தையே
காணலாம் நீ
- ஹெகலர் ஷெப்பீல்டு
நான் உன்னை காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும் அது.
சூரியன் குளிர்ந்து போகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் உன்னை காதலிப்பேன்.
- ஷேக்ஸ்பியர்
_______________________________________________________
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
- பாரதியார்
பழைய காலத்திலிருந்தே ஆண் பெண்ணை நேசித்து வருகிறான். பெண் ஆணை நேசித்து வருகிறாள் . எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு உண்டு. இனச் சேருதல், இனப்பெருக்கம் இதற்கான வழியே காதல். கொஞ்சம் மணம் வீசுகிற அற்புதமான ஏமாற்று.
- வைக்கம் முகம்மது பஷிர்
ஒரு பெண்ணை காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்றுவது, உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.
- சச்சிதானந்தன்
காட்டுத் தீ போல தேகத் தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலை புத்தித் தெளிவு என்ற அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி பணிய வைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு
- புதுமைப்பித்தன்
காதலென்பது நமது கதைகளைப் பொறுத்த வரையில் இருவர் செய்து கொள்ளும் நிச்சயதார்த்தம். உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக அவன் அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது செத்துப் போக வேண்டும். விவாகரத்தைக் கூட அனுமதிப்பார்கள் போலிருக்கிறது. இந்த காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால் நமது பண்பாடு கெட்டுப் போகுமென்று சொல்கிறார்கள்.
- ஜெயகாந்தன்.
தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என் கருத்து.
- கவிஞர் கண்ணதாசன்.
காதலும் ஆண் பெண் உறவுகளும் பெருமளவு மாறுதலடைந்து விட்டன. காதலின் அர்த்தத்திலிருந்து பாலுறவு பழக்கங்கள் வரை இனியும் பழைய அர்த்தத்தில் இல்லை. இங்குதான் காதலை எழுத முற்படும் கவி புதிய சவால்களை அடைகிறான்.
- மனுஷ்யபுத்திரன்
_______________________________________________________
தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம். "காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?"
ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக் காட்டி "அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்" என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங் கையோடு வந்தாராம்.
ஆசிரியர் கேட்டாராம். "ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?' அதற்கு பிளேட்டோ சொல்லி யிருக்கிறார்." அற்புதமான தண்டுகளை பார்த் தேன். அதை விடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது"
"இதுதான் காதல்" என்றாராம் ஆசிரியர்.
சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் "திருமணம் என்றால் என்ன" என்றாராம்.
ஆசிரியர் "அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள் வாய்" என்றாராம்.
பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதா ரண மரத்தை வெட்டிக் கொண்டு வந்தாராம். "ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டி னாய்" என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். "என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப் பட்டால், இதையும் இழக்க வேண்டி யிருக்குமே என்று வெட்டிவிட்டேன்" என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.
"இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புத மான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்" என்று ஆசிரியர் விளக்கினாராம்.
_______________________________________________________
நான் எப்போதும் யாரை என்னுடையவளென
நினைத்துக் கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை.
மாறாக
அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன் வேறொரு பெண்ணை
விரும்புகிறான்.
மேலும் என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்.
இந்த பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் பெண்ணையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
நொந்து நிந்திப்பது
- பத்ருஹரி
_______________________________________________________
வீடெங்கும் குப்பைக் கூளம்
முகமெங்கும் வேர்வை
கையெங்கும் சமையல்
மனமெங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்
அசடானேன்.
கேட்பதல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்!
- -த.பிச்சமூர்த்தி
_______________________________________________________
அருமைக் காதலனே!
நட்சத்திரங்களை எழுத்துக் கூட்டிப் பார்த்தால்
உன் பெயர்தான் வருகிறது.
உனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
ஷெனாய் இசையும், பருப்புச் சாதமும்
என் பாசத்துக்குரியவை ஆகிவிட்டன.
உன் இதயத்து வால்வுகளில்
என் நினைவு துடிப்பது தெரியும். ஆயினும்-
எனக்கென்று சில குணங்கள்,ஆசாபாசங்கள்,
லட்சியங்கள் இருப்பதை
நீ உணர்வதேயில்லை.
காதலிக்கு மூளை இருக்கிறது என்பதே
கசப்பான உண்மையாய் இருக்கிறது உனக்கு.
அந்த மூளை வேலை செய்கிறது என்பது
அவமானமாய்த் தோன்றுகிறது உனக்கு.
உனக்கு கீழ்பட்டு உன்னையே மையமாக வைத்து
என் வாழ்க்கை இருக்க வேண்டும் என விரும்புகிறாய் நீ.
என் மனதை, உணர்ச்சிகளை எரித்து
என்னை இயந்தரமாக்கப் பார்க்கிறாய்.
அதுவே நல்ல இல்லறம் என்கிறாய்.
உடலை எரிப்பதற்கு சதி என்றால்
இதற்குப் பெயர் என்னவோ?
மன்னித்துவிடு..
என்னால் உடன்கட்டையேற முடியாது
உடலளவிலும் சரி
மனதளவிலும் சரி.
- -நாகராணி
_______________________________________________________
"நான் உயரே பறக்க விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய துணை
எப்போதும் கூட்டினிலே
ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றது கழுகு.
"என்னால் பறக்க முடியாது.
அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை.
ஆனால் என்னுடைய துணை வானில்
உயரே உயரே பறப்பதைக் காண
நான் பரவசமடைகிறேன்." என்றது பெட்டைக்கோழி.
அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.
"ஆ.. இதுதான் காதல், என் அன்பே" கூவினர்.
கோழி அமர்ந்தது.
கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக."
- -சார்லெட் பெர்கின்ஸ்
_______________________________________________________
என் கவிதைகளிலிருந்து
மலரை நீ எடுத்துவிட்டால்
என் பருவங்களில் ஒன்று
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
காதலை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் இரண்டு
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
ரொட்டியை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் மூன்று மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
சுதந்திரத்தை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் நான்கும் மடிந்து விடும்.
- ஷெர்கோ
______________________________________________________
ஒருவரையொருவர் காதலியுங்கள்.
ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள்.
அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள்.
ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள்.
ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள்.
ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.
ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
- கலீல் கிப்ரான்
______________________________________________________
இங்கு ஏற்கனவே காதல் குறித்து எழுதியவை....
- மாய வண்ணத்துப்பூச்சி
- உதிரும் சிறகுகள்
- ஆதிக்காதலும் காவியக்காதலும்
- ஆண் ஒரு கிரகம், பெண் ஒரு கிரகம்
- ஆதலினால் காதல் செய்வீர்!
______________________________________________________
உலகத்து காதலர்கள் அனைவருக்கும்
தீராத பக்கங்களின் காதலர் தின வாழ்த்துக்கள்.
*
நாந்தான் முதல்ல............
பதிலளிநீக்குமுழுசா படிச்சுட்டு பின்னூட்டம் போடறேனுங்க
ஆஹா பொக்கிஷம்.
பதிலளிநீக்குமறக்க முடியாத காதலர் தினப் பதிவு
பிளாட்டோ - காதல் - கல்யாணம் முன்னர் (2002-03) வாக்கில் ஆமந்த விகடனில் வெளியானது. ஏதோ ஒரு கார்பொரேட் சாமியாரின் தன்னம்பிக்கை+வாழ்க்கை வாழ கற்றுக் கொடுக்கும் கட்டுரையில்.
தவறாக அடித்துவிட்டேன். ஆமந்த விகடன் இல்லை ஆனந்த விகடன்
பதிலளிநீக்குபொன்மொழிகள் யாவும் ரசித்தேன்.. இதைச் சேகரிக்க நீங்கள் கடும் முயற்சி மேற்கொண்டது தெரிகிறது. காதல் என்பது பழங்காலம் முதல் இன்று வரையிலும் என்று காலகட்டங்களில் பிரித்து மொழிகளைக் கொடுத்திருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குஅபாரம். சில வரிகள் சிலாகித்தேன்.
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
பாரதியின் கோபம் பாருங்கள்... இத்தனை வருடங்கள் ஆனபின்பும் இன்னும் இந்த வழக்கம் இருக்கிறதா இல்லையா... அப்போ நாடகம், இப்போ சினிமா.
பிளாட்டோவின் கதையும் நான் படித்திருக்கிறேன். மிக அருமையான விளக்கம்....
காதலர் தின வாழ்த்துக்கள் சார்..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகாதல் மனிதமறுமலர்ச்சி ஆனிவேர்,ஆனால் தற்போதை காதல் விவாதிக்கபடவேண்டியது
பதிலளிநீக்குஉண்மையான காதலுக்கு வாழ்த்துக்கள்!!!!!!
பதிலளிநீக்குமாதவ்,
பதிலளிநீக்குநம்ம பாலிசி, கலீல் கிப்ரான் சொன்னது போல,
ஒருவரையொருவர் காதலியுங்கள்.
ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
என்பதுதான்.
காதல் மீது எனக்கு மரியாதை ஏற்படுத்திய ஆதர்சக் காதலர்களான உங்களுக்கும் அம்முவுக்கும் இதயபூர்வமான காதலர் தின வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குமுரளிகண்ணன் சொன்னது போல் இப்பதிவு பொக்கிஷமே தான்!
பாரதியின் கவிதை...அருமை
பதிலளிநீக்கு"நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்"
ஒவ்வொருவரையும் சுயவிமர்சனம் செய்ய வைக்கும் வரிகள்.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன்ன தோழர் காதல் குறித்து பெரியார் சொல்லியதையும் போட்டிருக்கலாம் அல்லவா?
பதிலளிநீக்குபரவாயில்லை நான் பதிவு செய்கிறேன்.
காதல் குறித்து பெரியார் கருத்தை அறிய :
http://tamizachiyin-periyar.com/index.php?article=170
மிக நேர்த்தியான குறிப்புகள், கவிதைகள்.
பதிலளிநீக்குஒரு கைப்பிரதிக்கான விஷ்யங்கள்.
வலை பெற்ற பேறு.
ஆதவா!
பதிலளிநீக்குமுரளிக்கண்ணன்!
தீபா!
வலைப்பூக்கள்!
பொன்ராஜ்!
அனைவருக்கும் நன்றி.
வேலன்!
பதிலளிநீக்குஎனக்கும் கலீல் கிபரான் தான்!
அதுதான் கடைசியாக அவரைக் குறிப்பிட்டேன்.
சொல்லரசன்!
பதிலளிநீக்குநன்றி.
இதற்கு முன்பு நான் காதல் குறித்து எழுதிய பதிவுகளின் லிங்க் கொடுத்திருக்கிறேன்.
முடிந்தால் படியுங்கள்.
சோமசிந்தரம்!
பதிலளிநீக்குநன்றி.
நாமக்கல் சிபி!
தங்கள் முதல் வருகை என எண்ணுகிறேன். அடிக்கடி சந்திப்போம். நன்றி.
காமராஜ்!
மிக்க நன்றி.
தமிழச்சி!
பதிலளிநீக்குஆமாங்க. பெரியாரையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.மிக முக்கியமான குறிப்பாக இருந்திருக்கும். ஆனாலும் ஆறுதல்... அதற்கு நீங்கள் இருக்கிறீர்களே என்றுதான். நன்றி. படிக்க வருகிறேன்.
சங்ககாலப் பாடம் குறிப்பு அதி அற்புதம்!
பதிலளிநீக்குநன்றி!!!
//தங்கள் முதல் வருகை என எண்ணுகிறேன். அடிக்கடி சந்திப்போம். நன்றி.//
பதிலளிநீக்குஆமாம்! உங்களது நண்பர் ஒருவர் உங்களை அறிமுகப்படுத்தினார்!
யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!
பரிசல்காரன்!
பதிலளிநீக்குஉங்கள் ரசனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. சந்தோஷமாக இருக்கிறது. அதற்காகத்தான் அதை முதலில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
நாமக்கல் சிபி!
பதிலளிநீக்குகண்டுபிடித்து விட்டேன். எனதருமை விமலா வித்யா அவர்கள்தானே!
சங்கப் பாடல் ஆச்சரியப்படும் வகையில் subtle.
பதிலளிநீக்குஜெ.கே.வின் பார்வையும் அபாரம்.
கிப்ரானின் "சேர்ந்தே நில்லுங்கள்.
ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.
ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது." அருமை.
ஒரு அருமையான தொகுப்பு காதலைக் காதலிக்கும் அனைவருக்கும்.
அனுஜன்யா
"எப்போதும் ஓரே பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்க முடியாது" - இது சீனாவில் புழக்கத்தில் இருக்கும் பழமொழி :)
பதிலளிநீக்குஅனுஜன்யா!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
செல்வேந்திரன்!
பதிலளிநீக்குஅது பழமொழி.
எப்போதும் ஒரே ஆணை காதலித்துக் கொண்டிருக்க முடியாது என்று ஒரு புது மொழி வந்தால்....
இத்தனை நாள் இந்தப் பதிவைப் பார்க்கவில்லை. நல்லதொரு காதல் பதிவு. தலைப்பு நன்றாக இருக்கிறது. வரிசைக்கிரமமாக வந்தாலும் எப்போதும் சுதந்திரம் முக்கியம்.
பதிலளிநீக்குசங்ககாலப் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. யார் எழுதியது எனத் தெரியுமா. காட்டில் நீர் குடிக்க நின்ற ஆண், பெண் யானைகள் தும்பிக்கையை நீரில் விட்டு மற்றவர் குடிக்கட்டுமென தான் குடிக்காமலே இருந்த காட்சி நினைவுக்கு வருகிறது. இதே காட்சியை இரு மான்களை வைத்தும் சொல்லுவர்.
காதலர்களால் நிரம்பியிருக்கும் உலகு எவ்வளவு அற்புதமாய் இருக்கும். துவேஷம், வெறுப்பு எதுவும் இருக்காது. அன்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பியிருக்கும். நினைத்த காரியம் உடன் வெற்றியாய் முடியும். மாமலை கடுகாகும். வெப்பம் வெண்ணிலாவாகும். ஆனால், வீணாகப் போகாமல் காத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
இரண்டு வருடங்களாக 'நீங்கா இன்பம்' பதிவு எழுதவில்லை. நினைவு படுத்திவிட்டீர்கள்.
அந்த பிளாட்டோ கதை உங்களுடைய முந்தைய காதல் தொடர் பதிவில் இட்டிருந்தீர்கள் என நினைவு.
///அவள் விரும்பும் பெண்ணையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
நொந்து நிந்திப்பது பத்ருஹரி ///
அவள் விரும்பும் அவனையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்குயாரை
நொந்து நிந்திப்பது
பர்த்ருஹரி என்று இருக்கவேண்டும் மாதவராஜ்.
நன்று. தமிழாக்கம் சரியாகச் செய்திருக்கிறீர்கள்:)
எப்போதும் ஒரே ஆணை காதலித்துக் கொண்டிருக்க முடியாது என்று எழுதலாம்தான். ஆனால் வேறு முத்திரை குத்திவிடுவார்களே மாது ஐயா.
அம்முவுக்கும், மாதுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.