13 வயதில் லண்டனில் ஒரு தந்தை; கிருஷ்ணகிரியில் சில தாய்கள்

15222232

 

 

 

‘லண்டனில் குழந்தை முகத்துடன் இருக்கும் 13 வயது ஆல்பி என்னும் சிறுவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறான்’ என்று ஒருவர் தனது  வலைப்பக்கத்தில் ஒரு பதிவு எழுதுகிறார். அடுத்த சில மணி நேரங்களில் அதற்கு 3044 பின்னூட்டங்கள்! அதிர்ச்சியும், வேதனையும், கோபமும் கொப்பளிக்கும்  வார்த்தைகளாக அவை இருக்கின்றன.

“இதுதான் பிரிட்டனின் எதிர்காலமா?”
“இதுவே நீடித்தால், ஆல்பி தனது 26வது வயதில் தாத்தாவாகி விடுவான்”
“பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும் காண்பிக்கும் ஆபாசக் காட்சிகளின் விளைவுதான் இது”
“இனி, பாடப்புத்தகங்களோடு கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதுதான்”
“இந்த சின்ன வயது தந்தையைக் காட்டிலும், புதிதாக பூமிக்கு வந்திருக்கும் அந்தக் குழந்தையை நினைத்தால் கவலையாய் இருக்கிறது”
“அடிப்படை செக்ஸ் கல்வியை உடனே நம் சந்ததியினருக்கு ஆரம்பிக்க வேண்டும்”
“நம் சமூகம் தறிகெட்டுப் போகிறது என்பதன் அபாய எச்சரிக்கை இது”

இப்படியே தொடரும் பின்னூட்டங்களுக்கு இடையே இரண்டு வித்தியாசமானவையும் இருக்கின்றன.


“தாய், தந்தை, குழந்தை மூவருக்கும் வாழ்த்துக்கள்”
“பொறாமையாக இருக்கிறது. ஐந்து மாதங்களாக முயற்சி செய்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை”


வேண்டுமென்றே, வித்தியாசமான பின்னூட்டங்களாக தங்களுடையவை பார்க்கப்பட வேண்டும் என யாரோ எழுதியிருக்கலாம். ஆனாலும் வார்த்தைகள் ஒரு  ஓரத்தில் இருந்து தொந்தரவு செய்கின்றன.

இதற்கிடையே பத்திரிக்கைகள் இந்தச் செய்திக்குள் ஏற்படுத்துகிற சுவராஸ்யங்கள் அருவருப்பானவை. ‘அந்த பையன், தந்தையாகும் தகுதி  பெற்றிருக்கிறானா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதா’ என்று கேள்வியை முன்வைக்கின்றன. ‘யார் உண்மையான தந்தை’ என்று தலைப்பிட்டு,  சாண்டெல்லி என்னும் அந்த 15 வயதுப் பெண்ணுக்கு மேலும் சில பையன்களோடு தொடர்பு இருப்பதாகச் சொல்லி சந்தேகங்களை கிளப்புவதில் மும்முரம் காட்டுகின்றன. 12 வயதில் அந்தப் பையன் தந்தையாகும் வாய்ப்பு உண்டா என்பதே இந்தச் செய்திகளுக்கு அடியில் தேங்கியிருக்கிற முக்கிய கேள்வியாக இருக்கிறது.

இன்னும் குரல் உடையாத ஆல்பி இவைகளை மறுக்கிறான். தான் மட்டும்தான் சாண்டெல்லியுடன் பழகியதாகச் சொல்கிறான். அவனும் ஒரு பெண்ணை குழந்தை பெற வைக்க முடியுமா என்கிற ‘பாலின சாகசமாக’ தன்னிடம் ஆல்பி முயற்சித்ததாக சாண்டெல்லி சொல்கிறாள். இரு குடும்பத்தாரும் அறிமுகமானவர்களாய் இருந்திருக்கிறார்கள். நடுத்தரத்துக்கும் கீழே பொருளாதார வசதியுள்ள குடும்பங்கள்தான். வார இறுதி நாட்களில் சாண்டெல்லியின் வீட்டுக்கு ஆல்பி வருவதும், அங்கேயே தங்குவதும் வழக்கமாகி இருக்கிறது. அதுதான் வீபரீதமாகி இருக்கிறது. தன்னுடல் மாற்றங்களை அறிந்தவுடன் அழுதிருக்கிறாள். அவனும் செய்வதறியாமல் திகைத்திருக்கிறான். 12 வாரம் கழித்து டாக்டரிடம் சென்றிருக்கிறார்கள். டாக்டர் உறுதி செய்தபின் பெற்றோர்களுக்குத் தெரிகிறது. காலதாமதமாகிவிட்டது, அபார்ஷன் வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். ஊருக்கு வெளியே 75 கி.மீ தொலைவில் ஒதுக்குப் புறமாக, ஒரிடத்தில் சாண்டெல்லி பராமரிக்கப்படுகிறாள். குழந்தை பெற்றபின் ஆஸ்பத்திரியிலிருந்து விஷயம் உலகுக்கு எட்டுகிறது. உலகின் மிக வயது குறைந்த தந்தை என ஆல்பி சொல்லப்படுகிறான்.

குழந்தையை வளர்க்க என்ன செய்யப் போகிறாய் என அவனிடம் கேள்வி கேட்டதற்கு, என அப்பா செலவுக்கு 10 பவுண்டு தருவார் என்றானாம். எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத குழந்தைகள் மடியில், அவர்களது குழந்தை. ஆல்பியின் தந்தை, தன் மகனிடம் பேசப் போவதாகவும், இன்னொரு குழந்தை பிறக்காமல் அது தடுக்கலாம் என்றும் சொல்கிறார். அந்தப் பையன் ஆல்பியைச் சுற்றியே மொத்த விவாதமும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சாண்டெல்லி தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி சில முணுமுணுப்புகள் மட்டுமே கேட்கின்றன. பெண்களின் உலகம் வேதனை மிக்கதாகவே இருக்கிறது.

இதையொட்டி பத்திரிக்கைகளில், வயது குறைந்த தந்தையர் உலகின் பல இடங்களில் இருப்பதாகவும், நியுசிலாந்தில் அதிகம் பேர் இருப்பதாகவும் கண்டுபிடிப்புகள் நிகழந்த வண்ணம் இருக்கின்றன. குழந்தைகளின் ஒழுக்கம் குறித்தும், ஆண் பெண் உறவுகள் குறித்தும் இது போன்ற தருணங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு, பிறகு கரைந்து போகும். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என பெரும் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த அவமானத்திற்கு  பொறுப்பானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன. ஜோஸபின் என்னும் சமூக ஆர்வலர் சொன்ன கருத்துதான் சரியாய் இருக்கிறது. “இந்தக் குழந்தைகள் நாம் உருவாக்கிய அமைப்பின் பலிகிடாக்கள். சரிசெய்ய வேண்டியது அமைப்பைத்தான்” என்கிறார்.

தனிப்பட்ட நபர்களை குறிவைத்து விவாதம் நடத்துவதை விட்டு விட்டு அமைப்பின் கோளாறுகளை நாம் பேச வேண்டிய தருணம் இது. ஆனால் நாம் அப்படி பேசுவதில்லை. மாற்றங்களை விரும்புவோர் உரையாடல் துவக்க வேண்டிய புள்ளி இந்த அமைப்பிலிருந்துதான். பலவீனங்களின் விளிம்பில் கொண்டு போய் நம் மனிதர்களை நிறுத்தி எந்த சமயத்திலும்  ஊதியே தள்ளி விடுகிற நிலையில்தான் இந்த அமைப்பு வைத்திருக்கிறது.

இதோ லண்டனைவிட, அதிர்ச்சி நிறைந்ததாய் இருக்கிறது நம் தமிழகம் தருகிற ஒரு செய்தி. எந்த விவாதங்களும் கவனிப்பும் இங்கு இல்லை. சமூகத்தின் மீது கோபம் கோபமாய் வருகிறது.

கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகளில் 27 பேருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பத்துடன் பள்ளிக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது (தீக்கதிர்:18.2.2009). தாலியை சட்டைக்குள் மறைத்து பள்ளிக்கு வருவார்களாம். ஆசிரியர்கள் கண்டித்தால் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடுவார்களாம். இது குறித்து ஆராய்ந்த போது, பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இப்படி நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழில்வளம் அதிகம் இல்லை. விவசாயமும் இல்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூலி  தொழிலாளர்களாக  சாலை அமைப்பது, சாக்கடை வெட்டுவது, டெலிபோன் மற்றும் மின்சார வயர்கள் பதிக்க குழி வெட்டுவது, கட்டிட வேலை செய்வது என  வெளியூர்களுக்கு செல்கிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடிவதில்லை. படிக்க வைத்தால் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். அது வீபரீதமாகி விடுகிறது. எனவே பெற்றோர்களே ’பிள்ளைப் பெற்றாலும் கற்கை நன்றே’ என்று தங்கள் குழந்தைகளுக்கு சின்ன வயதில் திருமணம் செய்து வைக்கிறார்களாம்.

இப்போது நாம் யார் மீது குற்றம் சாட்டப் போகிறோம்?

 

*

கருத்துகள்

39 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. என்ன கொடும சார்... 13 வயசிலியேவா?

  இள வயது திருமணங்கள் தர்மபுரி பகுதியில் தொன்று தொட்டே நடந்து வருவதாகத் தான் தெரிகிறது. அங்கு இருந்த ஐந்து வருடங்களில் நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. மனது வலிக்கிறது.

  உலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

  பதிலளிநீக்கு
 3. ஹூம்...
  பதில்களில்லா கேள்விகள்..
  இந்த மாதிரியான விபரீதங்கள் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. நரேந்திர மோடியிடம் ஆலோசனை கேட்கலாமா? அவர் குஜராத்தில்
  பெண் கல்விக்கு, பெண் முன்னேற்றத்திற்கு நிறைய செய்திருப்பதாக சொல்கிறார்களே?

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இது கொடுமை தான். மேலை நாட்டுக் கலாசாரச் சீரழிவுக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான். அவர்கள் மறக்க முடியாத பாடமாக இருக்கட்டும்.
  ஆனால்...
  //குரல் உடையாத ஆல்பி இவைகளை மறுக்கிறான். தான் மட்டும்தான் சாண்டெல்லியுடன் பழகியதாகச் சொல்கிறான். //

  நெஞ்சைத் தொடுகிறது அவனது வார்த்தைகள். கட்டிய மனைவியையே சந்தேகிக்கும் பேடிகள் நிறைந்த இவ்வுலகில் இச்சிறுவன் எவ்வளவு தூய்மையானவன்.
  எனக்கென்னவோ இச்சிறுவனும் அச்சிறுமியும் வயது வளர்ந்ததும் தாங்கள் செய்த் காரியத்தின் விபரீதம் புரிந்ததும் மிகவும் உன்னதமான‌ பெற்றோர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அது வரை அவர்களது பெற்றோர் இன்னொரு குழந்தை போல் அதையும் பேணிக்காக்க‌ வேண்டும்.
  (நிச்சயம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் எனக்குத் தோன்றியது இது தான்!)

  பதிலளிநீக்கு
 7. நானும் சமீபத்தில் இதே போல ஒரு விஷயத்தைச் சந்தித்தேன். எங்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்யும் ஒரு மெண்மணியின் மகள். அவளுக்கு ஒரு வய்தில் ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது வயிற்றில் ஆறு மாதம். அவள் வயது என்ன வென்றால் ப‌தினேழாம்! 15 வயதில் திருமணம் ஆகிவிட்டதாம். அவள் அம்மாவிடம் விசாரித்ததில் "ஆமாம் இது 9வது படிக்கும் போது லவ் பண்ணி அவ்ன் வீட்டுக்கு ஓடிப் போயிடுச்சி. இட்டுனு வந்தா வயித்துல புள்ள. அப்றம் இன்ன பண்றது. அதான் அவனுக்கே கட்டி வெச்சேன். இப்பொ நல்லா தான் இருக்குது" என்கிறாள். இங்கே யாருக்குப் பரிதாப‌ப்படுவது??

  பதிலளிநீக்கு
 8. உன்னால் முடியும் தோழா!!

  உன் பதிவால், உலகில் சிலரை உன்னால் மாற்ற முடியும்.....

  முயற்சி செய்... தோழா!!

  பதிலளிநீக்கு
 9. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

  பதிலளிநீக்கு
 10. //இனி, பாடப்புத்தகங்களோடு கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதுதான்”//

  வெளிநாடுகளில் இந்த விஷயம் இயல்பாகவே நடக்கிறது.இதிலிருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதுதான் அபாயகரமான விஷயம்.

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு பதிவு.

  //“இந்தக் குழந்தைகள் நாம் உருவாக்கிய அமைப்பின் பலிகிடாக்கள். சரிசெய்ய வேண்டியது அமைப்பைத்தான்”//
  இதையேதான் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டச் சிறுமிகள் விடயத்திலும் சொல்லவேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. சிறுவயது திருமணம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிறுவயதில் தந்தை என்பது மிகவும் புதிது!! இதை சாண்டெல்லி, சோதனைக்காக என்று சொல்லும்பொழுது ஆத்திரம் வருகிறது...

  தாம்பத்தியம் , சோதனைக்களம் ஆகிவிட்டதா!? மெல்ல மெல்ல மேல்நாட்டு நாகரீகம் எனும் போர்வையில் அசிங்கமான நடத்தைகள் நம் நாட்டிற்குள் ஊடுறிவி வரும் வேளையில் இதைப் போன்ற அநாகரீக செயல்களை மேலை நாடுகள் ஏற்றுக் கொண்டால், நம் நாடும் மெல்ல மெல்ல அவ்வித்தையை கடன் வாங்கும்.

  பாலுறவு பற்றி முழுமையாக, உடல்ரீதியாக தகுதி பெறாதவர்களெல்லாம் வீதியில் இறங்கிவிட்டால், அதற்குப் பெண்களும் துணை போனால், கலாச்சாரங்கள் சீரழியும்... நாளை, நம்மைக் காறித் துப்பும்!!

  பதிலளிநீக்கு
 13. எட்வின்!

  தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. சுபாஷிணி!
  வலிக்கும் மனது, தீர்வுகளையும் யோசிக்கும். நம்பிக்கையிருக்கிறது.

  இந்த வாழ்க்கைதான் நமக்கு பிரச்சினைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்கிறது. தாய் நாவலில் வரும் இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 15. கும்க்கி!

  நீங்களே இப்படிச் சொல்லலாமா? நாம் எல்லோரும் சேர்ந்துதான் awareness உருவாக்கணும்.

  பதிலளிநீக்கு
 16. தீபா!

  முதல் பின்னூட்டத்தில் ரொம்ப கனவும் நம்பிக்கையும் இருக்கிறது.அதுவே நம் அனைவரின் ஆசையும் ஆகட்டும். ஆனால் அதுவரை.....?


  ஆனால் இரண்டாவது பின்னூட்டம் வேதனை சுமந்த யதார்த்தம்.

  நம் குழந்தைகளின் அக, புற உலகை நாம் மிகவும் புறக்கணிக்கிறோம். அவர்கள் தனிமை குறித்து நாம் யோசிப்பதேயில்லை. ஆக்கபூர்வமான சிந்தைகளுக்கும், செயல்களுக்கும் அவர்களை வழிநடத்தும் பிரக்ஞை இல்லை. adolecent பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து பெற்றோர்களுக்கே தெரிவதில்லை. அந்த நேரம் அவர்களின் நண்பர்களாக மாறும் பக்குவம் இல்லை. மீசை வளர்வதை கள்ளத்தனமாக பார்க்கும் மகனிடம் உரையாட்ல்களை எப்போது தொடரப் போகிறோம். வெளிப்படையாய் இருப்பது பல பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.

  பதிலளிநீக்கு
 17. பொன்ராஜ்!

  நம்மால் முடியும் தோழனே!

  பதிலளிநீக்கு
 18. வலைப்பூக்கள்!

  உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ரிஷான் ஷெரிப்!

  ஆமாம்.

  குழந்தைகளின் மனதில் வெறுமை படருவதை ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.சுவராஸ்யமும், புதிரும், நிறைந்த அந்த உலகை ஆக்கபூர்வமானதாக்க நாம் யோசிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. ஆதவா!

  இந்தக் கலாச்சாரத்தை விட நம் எதிர்காலச் சந்ததியினர்தான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 21. //குழந்தைகளின் மனதில் வெறுமை படருவதை ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.சுவராஸ்யமும், புதிரும், நிறைந்த அந்த உலகை ஆக்கபூர்வமானதாக்க நாம் யோசிக்க வேண்டும்.//

  கைதட்டி ஆமோதிக்கிறேன். எப்போதும் குறுகுறுவென்று விளையாட்டுக்களும் கும்மளங்காளுமே நிறைந்திருக்க வேண்டும் குழந்தைகளின் மனதில். படிக்கும் நேர்ம் தவிர அவர்களுக்கு விளையாடவே நேரம் போதாமல் இருந்தால் இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழுமா?

  எங்க‌ள் தெருவிலேயே ப‌த்து வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும். ஒரு நாள் கூட அனைவரும் கூடி தெருவில் விளையாடிப் பார்த்தது கிடையாது. ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இருப்பர்களா என்று கூடத் தெரியவில்லை. அவரவர்கள் பள்ளிக்குப்போய் வருகிறார்கள், வீட்டில் டி.வியின் முன் அடைந்து கொள்கிறார்கள்.உடம்பும் சட்டையும் அழுக்காகும் வரை புழுதியில் விளையாடினால் குழந்தைகளின் ப‌ளிங்கு மனம் பளிங்காகவே இருக்கும்! அத‌ற்கான‌ முய‌ற்சியில் இறங்க‌ப் போகிறேன் நான்.

  பதிலளிநீக்கு
 22. The place where I am living the school district is discussing about giving birth control pills to the girls who are between 10-13 in the school. I am living in US southern california.

  Itha entha vahaila sekirathu.......

  பதிலளிநீக்கு
 23. நம்மூரின் குழந்தைத் திருமணங்களை காட்டு மிராண்டியாக்கியவர்கள்,
  இதற்கு என்ன சொல்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 24. அவர்களுக்கான (குழந்தைகள்) உலகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமைதானே..

  பதிலளிநீக்கு
 25. //நரேந்திர மோடியிடம் ஆலோசனை கேட்கலாமா? அவர் குஜராத்தில்
  பெண் கல்விக்கு, பெண் முன்னேற்றத்திற்கு நிறைய செய்திருப்பதாக சொல்கிறார்களே?//

  வீபரீதமான யோசனை.

  பதிலளிநீக்கு
 26. ஹேமா!
  //வெளிநாடுகளில் இந்த விஷயம் இயல்பாகவே நடக்கிறது.//

  மன்னிக்கவும். இது இயல்பு இல்லை.

  பதிலளிநீக்கு
 27. ponnaiha!

  இந்த வலைப்பக்கத்தில் இதுதான் உங்கள் முதல் மறுமொழி என எண்ணுகிறேன். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  Anonymous!
  //The place where I am living the school district is discussing about giving birth control pills to the girls who are between 10-13 in the school. I am living in US southern california.//

  மேலும் அதிர்ச்சியைத் தருகிறது இந்தத் தகவல்.

  பதிலளிநீக்கு
 28. Anonymous!
  //நம்மூரின் குழந்தைத் திருமணங்களை காட்டு மிராண்டியாக்கியவர்கள்,
  இதற்கு என்ன சொல்கிறார்கள்?//

  முதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 29. தமிழன் கறுப்பி!

  //அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமைதானே..//

  உண்மைதான். பெற்றோர்களைத் தாண்டி இந்த சமூகத்தின் செல்வாக்கு குழந்தைகளின் மீது படிகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஹேரி பாட்டர் எல்லோரையும் விட ஒரு குழந்தைக்கு மிக அருகில் உட்கார்ந்து கனவில் பேசிக்ககொண்டு இருக்க முடிகிறது.

  பெற்றோர்களுக்கு குழந்தைகளை கட்டுப்ப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் பழக்கியிருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரத்தையும், தெளிவான புரிதலையும் அளிப்பதில் என்ன தயக்கம்?

  பதிலளிநீக்கு
 30. சமீபத்தில் ,எங்கே என்று நினைவுக்கு வரவில்லை.
  பள்ளியிலிருந்து கடிதம் பெற்றோருக்கு. நாங்கள் சுற்றுலா போகிறோம் ,உங்கள் பெண்ணுக்கு முன்னேற்பாடாக ''காண்டம்'' கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். பெற்றோர் எதிர்பார்த்திருக்கவேண்டும். பதினோரு வயதில் மிடில் ஸ்கூல் லெவலில் செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும்போதே அதைப் பற்றி அப்பாவும் பையனும் பேசிக்கொள்ள வேண்டும்.
  பெண்ணும் அம்மாவும் பேசிக்கொள்ள வேண்டும்.
  வேறு என்ன செய்வது.

  எங்கள்பாட்டி காலத்துக்குப் போகிறோமோ. அவங்கதான் 13 வயசில முதல் பையனைப் பெற்றுவிட்டார்கள். எட்டு வயசில கல்யாணம் அவங்களுக்கு:(

  பதிலளிநீக்கு
 31. This is the product of society.In UK IT IS DIFFICULT TO SEE YOUTHS/ STUDENTS often in public places.They are coming to TESCO/ASDA shops with their parents only.In the bus stops it is difficult to see the young gangs.We can see the youths in good strengh only in the play grounds.So many of present youths staying in home and or with friend's houses only and spending time by seeing TV.
  In UK when we got SUN TV connection along with we got nearly 340 other channels also.Out of that nearly 40 channels are xxx channels.NUDE in TV is a very very common in TV channels.Even many URDU AND LIKE CHANNELS SHOW XXX nude scenes in TV.The first day after our children left the house i blocked/locked all the nude channels.I really afraid of it.How our children could escape from the dangers of such vulgarities?? If compare with blue films available in INDIA the UK PORN-XXX-NUDE channels are too worst...The problems has to be dealt from the social angle only.
  with the modern technology like CHINA-THE GOVT SHOULD BLOCK THE PORN CHANNELS AND WEB SITES
  --SELVAPRIYAN

  பதிலளிநீக்கு
 32. குழந்தை திருமணங்களை சட்டம் தடை செய்த போதும் அவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன ....இதில் சிறு வயதில் இருப்பது ஆண் என்பதால் இத்தனை கேள்விகள் எழுகின்றன .
  நாம் நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம் .

  "பதினோரு வயதில் மிடில் ஸ்கூல் லெவலில் செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும்போதே அதைப் பற்றி அப்பாவும் பையனும் பேசிக்கொள்ள வேண்டும்.
  பெண்ணும் அம்மாவும் பேசிக்கொள்ள வேண்டும்"

  ரொம்ப சரி

  பதிலளிநீக்கு
 33. வல்லிசிம்ஹன்!

  //எங்கள்பாட்டி காலத்துக்குப் போகிறோமோ. அவங்கதான் 13 வயசில முதல் பையனைப் பெற்றுவிட்டார்கள். எட்டு வயசில கல்யாணம் அவங்களுக்கு//

  சக்கரம் பின்னோக்கியா சுழல்வது? நாகரீக வளர்ச்சி இதுவா? வெட்கப்படுவோம்.

  பதிலளிநீக்கு
 34. விமலாவித்யா!

  பொறுப்பற்ற அரசு, பொறுப்பற்ற ஊடகங்களை சுட்டுக்காட்டி இருக்கிறீர்கள். விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் மக்கள் இருந்தாக வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 35. பூங்குழலி!

  தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 36. இந்த விபரீத விளையாட்டு உலகமயம் ஆகாமல் இருந்தால் சரி! ஆட்சியாளர்களுக்கு அதை கவனிக்க நேரம் இருக்குமா என்றுத்தான் தெரியவில்லை! அதுக்கென்ன, இதற்காகவே ஒரு என்.ஜீ.ஓ.வை சர்வதேச அளவில் ஆரம்பித்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடப்போகிறது என்று நம்ப வைக்க முடியாதா என்ன?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!