நண்பர்களே!
உங்கள் வாசிப்புத் திறனை சோதித்துப் பார்க்க சின்னதாய், சுவராஸ்யமாய் ஒரு விளையாட்டு.
தமிழின் சில முக்கிய நாவல்களில் வரும் சில சித்தரிப்புகள் இங்கே தந்திருக்கிறேன்.
எழுத்தாளரையும், நாவலையும் கண்டுபிடியுங்களேன்!
_________________________________________________________________
1. கலியானத்திற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது காண முடிகிறதா? நோய்களால் இந்த மந்தை அழிந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. அச்சத்தாலும், அழிந்து விடாது என்பது நிச்சயம். மண வாழ்க்கையில் அமைதியும், ஆனந்தமும் கண்டவர் எத்தனை பேர். ஆனால் மணமான பிறகுதான் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, வாழ்க்கையே துவங்குவதாய் ஏகோபித்த நம்பிக்கை உலகம் முழுவதும் உண்டாகி விட்டதே! தெய்வ நம்பிக்கையாவது சிலசமயம் சில இடங்களில் ஆட்டம் காண்கிறது. ஆனால் இந்த கல்யாண நம்பிக்கை எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் மாறுபடாமல் இருந்து வருகிறது.
*
2.அந்தத் தெருவிலே உள்ள வீடுகளிலேயே ஒன்றுக்கொன்று உள்ள முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் அவனுக்குச் சொல்லப்படவில்லை. எனினும் ஹென்றியின் உள்ளுணர்வுக்கு அது புரிந்தது. அந்தத் தெரு ஒருமுன்கூட்டிய திட்டத்துடன் அமைக்கப்பட்டதல்ல என்று அதன் தோற்றத்தில் தெரிந்தது. தத்தம் மனப்போக்கில் சுதந்திரமாகக் கட்டிக்கொள்ளப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லும் வழியையே அவர்கள் தெருவென்று அழைத்து வந்திருந்தனர். எனவேதான் ஒரு வீடு மிகவும் உள்ளடங்கி, முன்புறத்தில் மாட்டுக் கொட்டகையும், வண்டிகள் நிறுத்தும் இடமுமாக இருக்கிறது. இன்னொன்று அதிகமாக முந்திக்கொண்டு வந்து அநாவசியமாக நடுத்தெருவில் நிற்கிறது. அப்புறம் இரண்டு வீடுகளுக்கு இடையே ஒரு திடலில் ஒரே காடாய் மண்டிக் கிடக்கிறது. அப்புறம் ஆடாதொடைச் செடி அடர்ந்த வேலிக்குப் பின்னால் சிறிய நீர்க்குட்டை இருக்கிறது. அதையடுத்து இன்னொரு வீடு. அந்த வீடு சின்னா பின்னமாகச் சிதைந்து கிடக்கிறது. இந்தப்பக்கம் தேவராஜனின் வீட்டுப் பக்கத்தில் நிரந்தரமாகவே அமைந்திருக்கிற இரண்டொரு குடிசைகள். அதன் பிறகு கொஞ்சம் வயல்வெளி. கடைசியில் அந்த ஐயர் வீடு. தெரு அகலமாய், மிருதுவாய், வண்டிகள் போனதால் ஏற்பட்ட சுவடுகளுடன் குளிர்ந்து கிடக்கிறது.
*
3. காலையில் எப்போதும் நேரத்தோடு எழுந்து விடுவான். ஞாயிறிலும் கூட. சில ஞாயிறுகளில் மற்றவர்கள் சண்முகத்தின் கவலையற்றுத் தூங்கி விடுவார்கள். எழுந்து பார்க்கும் போது சூரியன் சுடரும். சண்முகத்துக்கு அப்போது வெளியே போக முடியாது. கூடியவரை அடக்கிப் பார்ப்பது. அடக்க முடிகிற விஷயமா இது? சட்டை பேண்டை மாட்டுக் கொண்டு பாக்கெட்டில் சில்லறையும், சீசன் டிக்கெட்டும் போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வருவான். செம்பூர் ஸ்டேஷனில் அதற்கு செகரியம் கிடையாது. குர்லா ஸ்டேஷன் வந்து, வரிசையில் காத்து நின்று, முந்திப் போனவன் போட்டு விட்டுச் சென்ற பீயைத் தண்ணீர் விட்டுத் தள்ளச்சொல்லி, டப்பாவில் தண்ணீர் நிறைத்தபின் உட்காருவான். போனவுடன் அப்படியே உட்கார்ந்து விடவும் முடியாது. பேண்ட்டை முட்டி வரை மடக்கி விட்டு, பெல்ட் அவிழ்த்து, அண்டர்வேரை கீழேத் தள்ளிவிட்டு.... கழித்து முடிப்பதற்குள் கதவில் தட்டல் கேட்கும். "சலோதீன் நம்பா...சலோஜல்தி....சலோ நோன் நம்பர்" என்று. தான் மிகத் தாமதித்து விட்டோமோ என்று பதைத்து அவசரமாய் முக்கி.... அது பெரிய வேதனை சார்.
*
4. ஊருக்குள்ள நொழையுற எடத்துல சின்ன பஸ் ஸ்டாண்டு இருக்கு. அதுதான் கடேசி பஸ் ஸ்டாண்டு. அதுக்கு மேல பஸ் போகாது. எங்க உலகமே அத்தோட முடிஞ்ச மாறித்தான். பக்கத்துல ஒரு ஓட போகுது. மழ பெஞ்சா அதுல தண்ணி வரும். இல்லன்னா அது நாத்தமெடுத்த பீக்காடுதான். எடது பக்கத்துல ஓடப்பட்டின்னு ஒரு பத்து இருபது வீடுக இருக்கு. அங்க பூரா பனையேறி நாடார்க இருக்காக. வலது பக்கம் தெருக்கூட்ற கொரவனுகளும், செருப்புத் தைக்கிற சக்கிலியனுகளும் இருக்காக. கொஞ்சந்தள்ளி, சட்டிபான செய்ற கொசவங்களும் இருக்காக. இவுகளுக்கு அடுத்துத்தான் பள்ளக்குடி. அதையொட்டி நாங்க பறக்குடி. ஊருக்கு கெழக்க கல்லற இருக்கு. இதயொட்டித்தான் நாங்க இருக்கோம். மத்தபடி தேவமாரு, செட்டிமாரும், ஆசாரிக, நாடாருக வருசையா இருக்காக. இவங்களுக்கு அப்பால நாய்க்கமாரு தெரு. அங்க ஒரு ஒடையார்பட்டி இருக்கு. அதுல ஒடையார்க இருக்காகளாம். இதெப்படி மேச்சாதியா ஒருபக்கம், கீச்சாதியா ஒரு பக்கம்னு பிரிச்சாக தெரில. அவுக எங்க தெருப்பக்கம் வரவே மாட்டாக. பஞ்சாயத்து போர்டு, பால்பண்ணை, பெரிய கடைக, கோயிலு, பள்ளிக்கொடங்க, எல்லாமே அவுக தெருக்குள்ளதா இருக்கு. அவுக எதுக்கு எங்க தெருக்கு வரப்போறாக?
*
5. சவநகரம் எலும்புக் கூடுகளை அடுக்கி உருவாக்கப்பட்ட அமைப்பினை உடையது. மாமிசங்களை உருக்கி ஒட்டப்பட்டு அடுக்கமைக்கப்பட்ட சுவர்கள். திசுக்கள், நரம்பிழைகள் இவை இங்கு இயந்திரங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்நகரின் ஒவ்வொரு சலனமும் இயந்திர உருவுகளின் கதிர்வீச்சால் நிகழ்த்தப்பட்டன. ஆயுத உருவுகளே இந்நகரின் அனைத்து நகர்வையும் வடிவமைத்தன. நிறம் தீட்டிய பிம்ப வடிவங்கள் மட்டுமே இந்நகரின் உயிர்ப்புடவை என்றும் அவற்றிற்கான இடப்பெயர்ச்சி கூறுகளே இந்நகரின் அனைத்து செயல்பாடுகளும் என்பது ஆதிக் குறிப்புகளின் வரையறை.
*
6. மரத்தடியில் எங்காவது ஒரு வசமான பறவையின் இறகு கிடைக்காதா என்று பார்ப்பார். அதை எடுத்து வேண்டிய அளவு போக மீதியை உரிப்பார். அப்படி அவர் உரித்துக் கொண்டிருக்கும் போதே காது நிலை கொள்ளாது; சீக்கிரம் கொண்டா கொண்டா என்று சொல்லுமாம்! எச்சிலை நன்றாகக் கூட்டி விழுங்கிவிட்டு, மேல்வேட்டி காற்றில் நகர்ந்து விடாமல் இருக்க, இழுத்து கக்கத்தில் இடுக்கிக்கொண்டு இறகின் நுனியைப் பதனமாக காதின் துவாரத்துள் நுழைப்பார். அப்போதே கண்கள் சொகத்தின் ஆரம்பத்தால் சொக்க ஆரம்பித்துவிடும். வேண்டிய அளவு நுழைத்தானதும் இறகின் அடியை இரண்டு விரல் கொண்டு கடைய ஆரம்பிப்பார். அய்யோ அந்த இன்பத்துக்கு எதை ஒப்பிட்டுச் சொல்ல. வாயைக் கோணலாக அகட்டிக் கொண்டு கண்களைச் சொருகி, மூடி, தலையை இறகின் கடைதலுக்கு ஏற்ப அசைக்கும் அவரைப் பார்ப்பவர்களுக்கும் ஒரு ஆனந்தம் வராமல் போகாது. இதிலே அடிக்கடி அவர் மிளகாயை கடித்தவர்போல் ஈஸ்....ஈஸ்... என்று வாய்வழியாக காற்றை ஓசையுடன், ரசித்து அனுபவித்து உள்ளுக்கு இழுப்பார். உச்சக்கட்ட சொகத்தில் அனைத்தையும் மறந்து அந்த லயிப்பில் கடைவாய் ஓரம் மளமளவென்று ஜொள்ளு எச்சில் வடிந்துவிடும்.
*
7. அவள் கனவுகள், காட்சிகள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும். வர்ணங்களும், ஒலிகளும் நிறைந்திருக்கும். ஒவ்வொன்றையும் நுட்பமாக படத்தை உட்கார்ந்து பார்த்து விளக்குவது போல் சொல்லுவாள். தண்டபாணிக்கு வியப்பாக இருக்கும். நமக்குக் கனவு வந்தால் பொத்தாம் பொதுவாக ஏதோ உருவம் வருகிறது, போகிறது. இவளுக்கு மட்டும் எப்படி இத்தனை நுணுக்கமாக வர்ணனைகள், நகைகள் எல்லாம் வருகின்றன என்று ஆச்சரியப்படுவார். அதுவும் சாதாரண மனிதர்கள் அவள் கனவில் தோன்றுவதில்லை. தேவர்கள், தோட்டங்கள், நட்சத்திரங்கள், கடல், கோபுரம், கப்பல், ஐந்தாறடித் தாமரைகள் இப்படித்தான் வரும். அவருக்கு வரும் காட்சிகளோ பஸ்ஸில் போகிறது, சாப்பிடுகிறது, யாரோ பையன் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு ஒடிவருகிறது, இப்படித்தான் இருக்கும். ஒரு பெரிய ரவாத்தோசையை வைத்துக்கொண்டு வெகு நேரமாகத் தின்பது போல ஒரு கனவு. அது தின்னத் தின்ன தீராது. பாதிக்கு மேல் தின்ன முடியவில்லை. வயிற்றில் இடமில்லை. ஆனால் தின்றாக வேண்டும் என்று ஏதோ கட்டாயத்தில் உட்கார்ந்து விழித்துக் கொண்டே இருப்பார். அல்லது எண்ணூறு உப்பங்கழியில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டிருப்பது போல ஒரு காட்சி. இப்படித்தான் தண்டபாணியின் கனவுகள் மண்ணிலேயே கிடந்து புரண்டு கொண்டிருக்கும்.
*
8. புகழ் என்பதுதான் என்ன? நமக்குத் தெரியாதவர்களும் நம்மைத் தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம்தானே? அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். அபார சுகம்தான் அது. சந்தேகமே இல்லை. ரோட்டில் நடந்து செல்கிறபோது பின்னாலிருந்து தன்னைச் சுட்டிக் காட்டி இன்னார் என குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்தும், விழாத பாவனையில் சென்றுவிடுகிற சுகம் லேசானதா? புகைப்படத்தோடு பேச்சு தினசரிகளில் பிரசுரமாகிறபொழுது ஒரு பேரானந்த நிலை ஏற்படத்தான் செய்கிறது. மேலுக்கு எல்லாம் துறந்துவிட்டதுபோல் காட்டிக்கொள்வது யாரால்தான் முடியாது? சுகம் சுகம்தான். கழுத்தில் மாலை விழுகிற பொழுது புல்லரிக்கத்தான் செய்கிறது. கரகோஷம் காதில் விழுகிற பொழுதும் அப்படித்தான். இதுபோன்ற இன்ப அனுபவங்களுக்கு ஆளானவன் அல்லவா தாமு? நன்றாக ஆளானவன். தன்னுடைய படத்தை ஒரு கார்ட்டூனிஸ்ட் எப்படிப் போடுவான் என்பதை பார்த்துவிட வேண்டுமென்ற அவனுடைய ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை. இருந்தாலும் அரசியல் வானில் திடீரென்று ஒருநாள் சுடர்விட்டுப் பிரகாசிக்கிற பொழுது, கார்ட்டூனிஸ்ட்கள் திணறக் கூடாது என்பதற்காகச் சில ஆடை அலங்காரங்களையும், சில உதட்டுப் பிதுக்கலகளையும் அவன் ஆதியிலிருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரி காப்பாற்றிக் கொண்டும் வந்திருந்தான். இவ்வாறு எல்லாம் அவன் அனேகம் கனவுகள் விரித்து வருகிறபொழுதுதான் சற்றும் எதிர்பாராமல் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து சேர்ந்தது. ஒரு மேடையில் வீராவேசத்துடன் பேசிக் கொண்டிருக்கிற பொழுது முன்னெச்சரிக்கையின்றித் தூக்கி எறியப்பட்டது போல் உணர்ந்தான் தாமு. அவனும் அவனையொத்த பிரஜைகளும் ஒருநாள் காலையில் கண் விழித்துப் பார்க்கிறபொழுது வெறும் பிரகைகள் ஆகிவிட்டிருந்தனர். ஜனங்களும் எதையோ பறிகொடுத்தது போலவும், தங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அலைந்து கொண்டிருப்பது போலவும் தாமுவுக்குப் பட்டது.
*
9. மழையைச் சிதைத்து வெற்றி கொள்ளும் வேகத்தில் காற்றும், எப்படித்தான் அடித்தாலும் பணிய மாட்டேன் என்று வைராக்கியத்தில் மழையும் போட்டியிட்டன. அடுத்தடுத்து மின்னலும் இடியும். மின்னல் வெளிச்சத்தில் காட்டையே பெயர்த்துக் கொண்டு போய்விடும்படி காற்று அடிப்பது தெரிந்தது. விசவு கயிறுகளை பலமாக்காமல் விட்டிருந்தால் இந்நேரம் பட்டி முழுவதும் திக்காலுக்கொன்றாய்ச் சிதறி விட்டிருக்கும். சுற்றிலுமிருந்து வெள்ளம் குருசின் மையத்தில் புகுந்தது. காற்று இப்போதைக்குக் குறையாது என்று தோன்றிற்று. காற்றில்லாமல் எவ்வளவு நேரம் கொட்டினாலும் பிரச்சினை ஒன்றுமில்லை. இரவெல்லாம் பெய்தாலும் கூட மேட்டுக் காட்டுமண் நீர் முழுவதையும் உறிஞ்சித் தாகம் தீர்த்துக் கொள்ளும். இரண்டு மூன்று மாதங்களாக துளி நீரையும் காணாத பெருந்தாகம். காற்றுதான் பிரச்சினை. எதெதற்கோ பழி தீர்த்துக் கொள்ளும் வெறி.
*
10. அது ஹைதராபாத் செகந்திராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் வீடுகளில் ஒன்று. ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு. மூன்று நான்கு ஆண்கள். மூன்று நான்கு பெண்கள். மூன்று நான்கு குழந்தைகள். தவிர்க்க முடியாத கிழவி ஒருத்தி. அந்த மூன்று ஆண்கள் சேர்ந்து கொண்டு சந்திரசேகரனை கொன்று கூடப் போட்டு விடலாம். ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கையாக இருந்தார்கள். அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது.
சந்திரசேகரன் நிலைமையை புரிந்து கொள்வதற்குள் ஒன்று நடந்தது. அந்த பெண்மணிகளில் பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள். "நாங்கள் பிச்சை கேட்கிறோம். எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்" என்றாள். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவளுடைய கமிஸைக் கழற்றினாள். ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள். அந்த மங்கலான வெளிச்சத்திலயும் அவளுடைய விலா எலும்புகளை தனித்தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள்.
*
11. ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை. அப்படி வலி. 'அம்மா' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன. இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந்தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியையாவது வச்சிருக்கலாம். முளிச்ச நேரத்துல போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனால வர்ற வியாதியில்ல. குடியாததுனால வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம். ஜிஞ்சராவது கிடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையை தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்கவில்லை. தலையணையை லேசாக தள்ளிவிட்டு தந்தியடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையை தரையில் ஊன்றிக் கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்டலோடு இருமல். விலா எலும்புகள் முறிவது போல இருந்தது. வாயிலிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்குப் படிந்த இரண்டு ருபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ருபா வேணுமே! எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும் சரிப்படுத்த முயலுகையில், இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக் கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான்.
*
12. நோய்வாய்ப்பட்ட இருட்டறையில் சருகுகள் உதிர அம்மாவின் உடல் வெளிச்சம் மனதிலிருந்து கசிய கண்களை தூக்கத்தில் தாழ்த்தி கருத்திருந்த பார்வையடியில் மங்கலான பித்தப்பூ பிதற்றிக் கொண்டிருக்கிறது. கண்ணீர்த் தடம்பட்ட சுவர்களில் உலர்ந்த அம்மாவின் ரேகைகளைத் தொட்டான். கீறல்களில் நீர் ஊர்ந்து இருளில் அலைவதைப் பார்த்த விழியோர பீழைகுழி ரத்தமேறிச் சிவந்தது. கோரம்பாயில் அறுந்த நூல் சாயம் போன கோரை வெளிறிய கோடுகளில் உலவும் எறும்புகளின் மெனம் வதைபடும். நோயின் நிறம் பூசிய எறும்புகளின் பாசக்கயிற்றில் கலந்து பிரியும் உறவுகள். அறுந்த பாயின் நூல் இருட்டில் புதைகிறது. அது எங்கே சலனமாகிறது. வெப்பத்தைக் கக்கும் கிழிந்த கம்பளித் துளைகளில் அம்மாவின் விரல்கள் எட்டிப் பார்த்தன. விரல் எதையோ அசைத்தது நோயிலிருந்து.
*
13. பைத்தியம் பலவிதம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு வந்த பின்புதான் தெரிந்தது. இந்த டயரியில் நான் உங்களுக்கு இன்னும் இரண்டொரு பைத்தியங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இது உங்களுக்கு சற்று ஆச்சரியமாகப்படலாம். எதையுமே நாம் ஒரு அசட்டு உணர்ச்சியுடன்தான் பார்க்க கற்றுக் கொண்டிருக்கிறோம். அபிப்பிராயத்திற்கு பயப்படுகிறோம். வியாதியைக் கண்டு பயப்பட்டு அதையே நமது அறிவென்று மயங்குகிறோம். தத்துவத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென்று ஒரு தத்துவம் வகுத்துக் கொள்ள மறுத்து விட்டான். மறந்து விட்டான்.
*
14. ஒரு ஆள் ராத்திரி இரண்டு மணிக்கு 200 கோடி ருபாயை வைக்க எத்தனை பெட்டி வேண்டும், அதை எப்படி வைக்க வேண்டும், எங்கே வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான் என்றால் அவனுக்கு நிச்சயம் பைத்தியந்தான் பிடிக்கப் போகிறது என்று எனக்குத் தோன்றியது. மேலும் டாக்டர் நாதமுனி சமீபகாலமாக என்னை 'அண்ணே' என்று அழைக்க ஆரம்பித்திருந்ததைக் கவனித்தேன். 'இனிமேல் வாழ்க்கையில் இம்மாதிரி ஆட்களோடுதான் பழக வேண்டும் போல இருக்கிறது'. பணம் கைக்கு வருவதற்குள்ளாகவே நான் அண்ணனாக மாறிவிட்டது கவலையையும், பீதியையும் அளித்தது. பணத்தோடு சேர்ந்து இதுபோல் என்னென்ன விபரீதங்கள் வரப்போகிறதோ என எண்ணி விசனமுற்றேன். ஒட்டுமொத்தமாக பணக்காரர்களை எண்ணி மிகுந்த பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது.
*
15. தாங்கள் அனுப்பிய கடிதத்தை வாசித்து துக்க சாகரத்தில் மூழ்கினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல, ஒரு தாசிக்குக்கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துன்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடிதத்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக் கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும், பிரம்மச்சாரியும் சேர்ந்து கொண்டு வெளிப்படுத்தினால் உண்டாகிற அவமானமும், அபவாதமும் உலகமுள்ள வரையில் நீங்குமா?
"என்னடா அது இதுன்னு வித்தியாசம். பாப்பார வீட்டுச் சாமி சிவப்பாயிருக்குமா, பறைய வீட்டுச்சாமி கறுப்பாயிருக்குமா? துலுக்க வீட்டுச் சாமி தொப்பி போட்டிருக்குமா, வேதக்காரச்சாமி சிலுவை போட்டிருக்குமா? எல்லாம் சாமிதான். எல்லோரும் மனுசந்தாண்டா".
*
16. பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளக்கார எஞ்சீனியர் கொடுத்த நரபலி, தலைச்சூலியான பிராமணப் பெண்ணை தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக அந்தர விளக்காய் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜெண்ட் பின்தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக் கொன்றது, பெரிய சண்டியர் கேருசாகியை சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது, இவையெல்லாம் மாணவர்கள் அச்ச வியப்புடன் பேசிக்கொண்ட மர்ம நிகழ்ச்சிகள்.
*
17. நூலகத்தை எரித்த நெருப்பு நெகிமொலாக்களின் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்கள் நம்பிய பல சிந்தனைகளையும் ஒரே நாளில் சாம்பலாக்கிவிட்டது. அவர்களது உலகப்புகழ் பெற்ற அகராதிகளும் கலைக்களஞ்சியமும் கரிந்து மண்ணோடு மண்ணாகி விட்டன. அந்த நூல்களின் அழியாத பகுதிகளை உலகெங்குமுள்ள பழம்பொருள் பாதுகாப்பகங்களில் யாரும் காண முடியும். இவ்வாறு கலைக்களஞ்சியம் தயாரிப்பதிலும், சரித்திர ஆவணங்கள் உருவாக்குவதிலும் தன் வாழ்நாளையெல்லாம் கழித்த விசித்திரமான தெகிமொலா சரித்திர நாயகர்களின் கதை எப்படி முடிந்தது என்பதை மட்டும் தகித்துப்போன துண்டுத்தாள்களின் மூலம் இன்று அறிய முடிந்தது.
*
18. காந்தாரி அழுவதை நிறுத்தி விட்டாள். தன் பிள்ளைகள் இறந்ததை விடவும், இந்தத் துயரத்தின் மூல வேராக இருந்த மனிதனைத் தன் கண்களால் பார்ப்பதற்கே காத்திருந்தாள். அவள் அந்த மனிதனை முன் கண்டதேயில்லை. அவன் குந்தியின் சகோதரன் என்று அறிந்திருந்தாள். வசுதேவன் என்ற கிருஷ்ணன்தான் தன் பிள்ளைகளின் துயர சாவிற்கான மனிதன் என அறிந்திருந்தாள். அவள் தன் கண்களால் அந்த மனிதனைக் காண விரும்பினாள். அவள் தன் துக்கம் பெருகுவதற்குள் அந்த மனிதனின் முகத்தினை ஒரே முறையாவது பார்த்துவிட நினைத்தாள். என் பிள்ளைகளில் யார் அந்த வசுதேவனை அவமதித்தது? தன் பிள்ளைகளின் மீது எதற்காக அவனுக்கு இத்தனை வெறுப்பு. அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
*
19. "இன்னைக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் என்ன தேவைன்னு தெளிவாத் தெரியும். எல்லோரும் இந்த பூமியில்தான் வாழ்ந்தாகணும்னு தெரியும். அதனால பேச்சுவார்த்தை தவிர வேறு வழியே இல்லை. இன்னைக்கு ஒவ்வொரு துறையிலயும் ஒவ்வொரு விஷயத்தையும் பேச்சுவார்த்தைதான் தீர்மானிக்குது. இன்னைக்கு இந்த நிமிஷத்துல உலகத்துல எத்தனை கோடி மேஜைகளில் பேச்சுவார்த்தைகள் நடக்குதுன்னு யோசிச்சுப் பாருங்க. உலகம் இப்படி இருக்குறதுக்குக் காரணம் இந்த பல்லாயிரம் கோடி பேச்சுவார்த்தைகளோட சமரசப் புள்ளிகள்தான். ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கணமும் ஒரே சமயம் சமரசத்திலயும் இருக்கு, போராட்டத்திலயும் இருக்கு. இரண்டுக்கும் நடுவில பேச்சுவார்த்தை மேஜை தொடந்து நகர்ந்துகிட்டே இருக்கு. அந்தச் சலனம்தான் மனிதக் கலாச்சாரத்தோட சலனம். கடைசிப் போராட்டம், கடைசிச் சமரசம்னு பேசிய காலமெல்லாம் போயாச்சு. கடைசிப் புள்ளின்னு ஒண்ணு இல்லை. இருந்தா அது மனிதகுலத்தோட அழிவுதான்."
*
20. "தூ, அவள் உனக்குப் பெண்ணாயிருக்க வயசாச்சு. அதென்ன அக்கிரமம்? அடுக்குமா?" என்கிறாயா சாவித்திரி. இது விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்ந்து வரும் விதியின் பழிவாங்கல். இது உனக்குப் புரியாது. எனக்கேப் புரியலியே. இது சகுந்தலையின் கோபம். சகுந்தலை செத்துப் போனபின் அவள் கோபமாக மாறி, என்னை ஆட்டுவிக்கும் ஆட்டத்தில், அபிதா என் பெண்ணோ, பெண்டோ, இது என் செயலில் இல்லை. அபிதாவில் நான் காணும் சகுந்தலை, என்னில் தன் அம்பியைக் காண மாட்டாளா? சகுந்தலையில் அபிதா, அபிதாவில் சகுந்தலை. ஒருவருக்கொருவர், ஒருவரில் ஒருவர், இவர்கள்தாம் என் சாபம், விமோசனம் இரண்டுமே.
*
21. வண்ணான் சலவை செய்யும் கல் தண்ணீரில் மூழ்கியது. கழுதையின் மேல் அழுக்கு ஏற்றி வந்த வண்ணான் திரும்பி நடந்தான். அசனார் லெப்பையின் மதராசாவில் குர்ஆன் ஓதிக்கொண்டு இருந்த சிறுவர்கள் 'ரண்டுக்குக்' கேட்டு விட்டு வெளியேறினார்கள். வெளியேறியவர்கள் ஆற்றோரத்தில் வந்தனர். தவளை பிடிப்பதை பார்த்து நின்றனர். லெப்பை சட்டைக்குள் கம்பை மறைத்துக் கொண்டு ஆற்றோரத்தில் வந்தார். சில சிறுவர்கள் அவர் உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து எடுத்து ஆற்றில் மீனுக்கு வலை வீசிக் கொண்டிருந்தனர். லெப்பை பதுங்கி வந்தார். மீனுக்கு வலை வீசிக்கொண்டிருந்த சிறுவர்களின் தொடையில் ஓங்கி அடித்தார். "சீ! உராங்குட்டிகளே!" சிறுவர்கள் அவிழ்த்தெடுத்த துணியைக் கையில் பிடித்துக் கொண்டு மதரசாவைப் பார்த்து ஓடினார். பெண்குழந்தைகள் வெட்கப்பட்டனர். கண்ணைப் பொத்திக் கொண்டார்.
*
நம் ஞாபகங்களுக்கான ஒரு விளையாட்டு. அவ்வளவுதான்.
விடைகள் என்னுடைய பின்னூட்டத்தில்.... கடைசியில் சொல்வேன்.
ஜூட்.... ஆரம்பிக்கலாம்!
*
ரொம்ப பெர்சாக்கீது
பதிலளிநீக்குஅப்பாலிக்கா படிச்சிட்டு வாறேன் ...
1.. Thalaikeel vikithangal.
பதிலளிநீக்கு6.. Oru puliyamarathin kathai.
மூன்றாவது நாஞ்சில் நாடனின் நாவல் (பெயர் ஞாபகமில்லை!).
பதிலளிநீக்கு4) நாட்டுப்புறம் - மணிகண்டன்
பதிலளிநீக்குஎட்டாவது சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை.
பதிலளிநீக்குபத்தாவது அசோகமித்திரனின் நாவல் (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை).
பதிலளிநீக்கு11 - ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே. இதைப் போய் மறப்பமா :)
பதிலளிநீக்கு14 - சாரு நிவேதிதாவின் ராச லீலா.
பதிலளிநீக்கு21 - தோப்பில் முகம்மது மீரான். சமீபத்தில்கூடப் படித்தேன். நாவல் பெயர் ஞாபகமில்லை.
பதிலளிநீக்கு20 - லாசரா? போலவே 12ம் லாசரா?
இன்னும் 3 - 4 நாவல் வரிகள் படித்த ஞாபகத்தை லேசாகக் கிளறிவிடுகிறது. ம்ஹூம், யோசித்தும் பெயர் அகப்படமாட்டேன் என்கிறது :(
இந்த விளையாட்டும் நல்லாத்தான் இருக்கு :)
:-(( இரண்டாவது கேள்வி தவிர எதற்கும் பதில் தெரியவில்லை. தமிழ் நாவல்கள் நிறைய படிக்காததன் இழப்பை உணர்கிறேன். லேகா உஷா போன்றோர் வந்தால் பின்னி எடுத்து விடுவார்கள்!
பதிலளிநீக்குஇரண்டாவது கேள்வி தவிர எதற்கும் பதில் தெரியவில்லை. தமிழ் நாவல்கள் நிறைய படிக்காததன் இழப்பை உணர்கிறேன். லேகா உஷா போன்றோர் வந்தால் பின்னி எடுத்து விடுவார்கள்!
ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் இமெயில் ஐடி தந்து அதற்கு மெயில் அனுப்பச் சொல்லுங்கள். ஒருவர் பின்னூட்டத்தில் பதிலளித்து விட்டால் அடுத்து வருபவர்க்குச் சுவாரசியம் இருக்காது. கடைசியாக உங்கள் பின்னூட்டத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவரைக் குறிப்பிட்டு நீங்கள் பாராட்டலாம்!
மன்னிக்க வேண்டும் மாதவராஜ் அவர்களே.
பதிலளிநீக்குநாவல்கள் நான் படித்ததில்லை. அப்படியே படித்திருந்தாலும் ஞாபகத்தில் இருக்காது (எனக்கு ஞாபக மறதி ரொம்பவே அதிகம்)
ஐந்து வரை படித்தேன்.... ஒன்றும் புரியவில்லை..
பெயர்களை மட்டும் தெரிந்து கொள்ள பிறகு வருகிறேன்...
தீபா வரேன் வரேன்.
பதிலளிநீக்கு21, கருத்தலெப்பை
20- அபிதா ?(லா.ச.ரா)
19- ஞாநி எழுதிய... யோசிச்சிக்கிட்டு இருக்கேன்
18- உப பாண்டவம்
11- நாளை மற்றொரு நாளே
10- அ.மியின் பதினெட்டாவது அட்சர கோடு (மறக்கமுடியுமா இந்த வரிகளை)
8- வரிகளை பார்த்தால் பாலகுமரன் மாதிரி இருக்கிறது.
6- கோபல்ல கிராமம்
4- அஞ்சலை ?
2- வண்ணதாசன் மாதிரி இருக்கு?
எல்லாமே அவசரமாய் அடிக்கிறேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கலாம். பல பதில்கள், கலந்துக் கொள்ள வேண்டும் என்ற
ஆவலில் ஒரு ஊகத்தில்தான் :-)
தீபா, இத்தகைய போட்டிகளில் பதில்களை வெளியிடாமல், உதாரணமாய் என்னுடையதில் 2- சரி, 6- தப்பு என்று
பதிலளிநீக்குபோடுவார்கள். மாதவராஜ் அவர்கள் கமெண்ட் மாடரேஷன் போட்டிருந்தால், பதில்கள், கமெண்டுகளை அனுமதிக்காமல்
நிறுத்தி வைத்திருக்கலாம்.
நானும் லேகாவிற்காக வெயிட்டிங் :-)
சாரி,
பதிலளிநீக்குநெக்ஸ்ட் கொஸ்டின்.....
(என்னுடைய நாவல் வாசிப்பு மிகக் குறைவானது என்று எடுத்துக்காட்டியதற்கு நன்றிகள் பல)
உஷா!
பதிலளிநீக்குஆமாம். நான் அதை யோசிக்கவில்லை. இப்போது comment moderation செய்துவிட்டேன்.
நண்பர்களே!
பதிலளிநீக்குமொத்தம் குறிப்பிட்டுள்ள 21 நாவல்களில் இதுவரை பின்னூட்டம் அளித்தவர்களால் 9 நாவல்களே சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றவர்களும் முயற்சிக்கலாமே!
இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை. புளியமரத்தின் கதை மட்டுமே தெரிந்தது. அதையும் சுந்தர்ஜி சொல்லிவிட்டார்.
பதிலளிநீக்குஇவ்வளவு புத்தகங்கள் படித்ததில்லை . (படிப்பதே கொஞ்சுண்டு ) . உங்க கூட வலை பதிவில் நட்பா இருக்கறது இப்போ பெருமையா இருக்கு .வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதெரிந்த ஒரு சில(?) விடைகளும் முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குவிடைகளை அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்
எனவே, விடையை மெயிலில் பெற இந்த பின்னூட்டம்
கிராமத்து நாட்குறிப்பு - மணிகண்டன்
பதிலளிநீக்கு4. கிராமத்து நாட்குறிப்பு - மணிகண்டன்
பதிலளிநீக்குநண்பர்களே!
பதிலளிநீக்குரொம்ப சோதிக்க விரும்பவில்லை.
பதில்கள் இதோ:
1. அரும்பு - எம்.வி.வெங்கட்ராம்
2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
3. மிதவை -நாஞ்சில் நாடன்
4. கருக்கு - பாமா
5. புதைக்கப்பட்ட பிரதிகளும், எழுதப்பட்ட மனிதர்களும் - ரமேஷ் பிரேம்
6. கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
7. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன் 8. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
9. கூள மாதாரி - பெருமாள் முருகன்
10. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
11.நாளை மற்றொரு நாளே -ஜி.நாகராஜன்
12. பிதிரா - கோணங்கி 13. நினைவுப்பாதை - நகுலன்
14. ராஸலீலா - சாரு நிவேதிதா
15. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
16. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
17. சரித்திரத்தில் படிந்த நிழல்கள் - தமிழவன்
18. உபபாண்டவம் - எஸ்.ரமகிருஷ்ணன்
19. பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
20. அபிதா - லா.சா.ராமமிருதம்
21. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
வந்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும், விடையளித்தவர்களுக்கும் மிக்க நன்றி.
ஜ்யோவ்ராமுக்கும், உஷா அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
நிறைய படிப்போம்.
எல்லா புத்தகங்களையும் படித்து நினைவில் வைத்து , பதில் அளித்தவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇந்த அருமையான புத்தகங்களை, தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள் வாங்க வழிமுறை பற்றி எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட பிரதிகளும், கருக்கு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கோபல்ல கிராமம், அம்மா வந்தாள், நினைவுப் பாதை, புயலிலே ஒரு தோணி, சரித்திரத்தில் படிந்த நிழல்கள், பின் தொடரும் நிழலின் குரல்... நான் ஏற்கனவே படித்த நாவல்கள்தான். ஆனால் நினைவுக்கு வரவில்லை :(
பதிலளிநீக்குஅதுவும் நினைவுப் பாதையை குறைந்தது பத்து முறையாவது படித்திருப்பேன். அது நினைவில் வராதது கொஞ்சம் வெட்கமாகக்கூட இருக்கிறது.
வெற்றிமகள்!
பதிலளிநீக்குதமிழில் வெளிவந்த முக்கியமான நாவல்களில் சிலதான் இவை. இன்னும் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளவர்கள் இந்த புத்தகங்களை வாங்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இவைகளில் பல புத்தகங்கள், புத்தகக்கண்காட்சியில் கிடைக்கக் கூடியவைதான்.
ஜ்யோவ்ராம் சுந்தர்!
பதிலளிநீக்குஎனக்கு உங்களைப் பார்த்தால் பிரமிப்பா இருக்கு. என்னால் உங்க அளவுக்கு நிச்சயம் சொல்லியிருக்க முடியாது.
மாதவராஜ், சுவாரசியமாய் இருந்தது. கோணங்கி, நகுலன், சாரு நிவேதிதா தவிர அனைத்தும்
பதிலளிநீக்குபடித்ததே! ஆனால் பெரும்பாலும் உங்க பட்டியல் வாசிப்புகள் என் திருமணத்துக்கு முன்பு. எவ்வளவுக்கு எவ்வளவு புத்தக புழுவாய் , பாடங்களை படிக்காமல் கதை புத்தகங்கள் வாசித்து அம்மாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டதன் பலனாய் புத்தகங்களே கிடைக்காத/ வாசிக்கும் மக்களே இல்லாத ஊர்களுக்கே செல்கிறேன். சென்னைக்கு செல்லும் பொழுது வாங்கி வருபவை, அவைகளையும் அருமையாய் இருக்கு படியுங்கள் என்று நண்பர்களுக்கு தாரை வார்த்தவை அதிகம். இந்த கெட்ட பழக்கத்தை விட வேண்டும் :-)
பொறுமையாய் தட்டச்சு செய்ததற்கு நன்றி
வெற்றிமகள், நான் போன மாதம், எனி இந்தியன் டாட் காமில் வாங்கிய பட்டியலை என் பதிவில் பாருங்கள். நல்ல கலெக்ஷன் இருக்கிறது.
பதிலளிநீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குஉஷா!
பதிலளிநீக்குநாமக்கல் சிபி!
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
/இளைய பல்லவன் said..
பதிலளிநீக்குசாரி,
நெக்ஸ்ட் கொஸ்டின்.....
(என்னுடைய நாவல் வாசிப்பு மிகக் குறைவானது என்று எடுத்துக்காட்டியதற்கு நன்றிகள் பல)/
repeat
4.அஞ்சலையான்னு நண்பர்கள் யோசிச்சாங்க.அது இல்லைன்னு மட்டும் உறுதியாத் தெரிஞ்சது.
அப்புறம் இதுல நான் படிச்சது ஒரு புளிய மரத்தின் கதை மட்டுந்தான்.
இந்தப்பதிவுக்கு பதில் சொல்லக்கூடிய பதிவர்கள் ஒரு சிலர்தான் என்பது என் எண்ணம்...
பதிலளிநீக்குமற்றப்படி என்னை பொறாமைப்பட வைக்கிற பதிவர்களில் உங்கள் பெயரும் இருக்கிறதென்பதை மற்றொரு முறை உறுதிப்படுத்திய பதிவு...
எவ்வளவு புத்தகங்கள்...!!!
முத்துவேல்!
பதிலளிநீக்குதமிழன் கறுப்பி!
இருவருக்கும் நன்றி.
பதிவு ரொம்ப பெருசா இருக்கு...எல்லாரும் பதில் வேற போட்டுடாங்களா.. லேட்டா வந்ததுக்கு தண்டனை..:)
பதிலளிநீக்குகிருத்திகா!
பதிலளிநீக்குஇனும சீக்கிரம் வந்துருங்க.