நாம்

 

life under pepal tree டிசம்பர் 31 இரவு பனிரெண்டு மணியை நெருங்கும் வேளையில் ஒருதடவை சென்னைப் பட்டிணத்தின் முக்கிய வீதிகளில் போய் நின்று பாருங்கள்.சூழலே பைத்தியம் பிடித்ததாய் ஆகிப்போக வெறிக் கூச்சலும், வாகனங்களின் இரைச்சலுமாய் அல்லோலப்படும்."ஹேப்பி நியு இயர்" என்று அண்ட சராசரங்களும் நடுங்கிப்போக கத்தியபடி கையில் பீர் பாட்டில்களோடு பைக்குகளின் பின்னால் இரண்டு பேர், மூன்று பேர்  என்று உட்கார்ந்து பறக்கும் யுவன்களை ஏராளமாய் பார்க்கலாம். ரத்தம் வடியும் உதடுகளாக லிப்ஸ்டிக் அணிந்த யுவதிகளையும் சமதையாக பார்க்கலாம். நட்சத்திர ஒட்டல்களின் கண்டபடி நடனங்கள்....மேற்கத்திய இசை முழக்கங்கள்...அதன் கசிவுகள் வெளிகளில் இப்படியாய் பாய்ந்திட கடற்கரை அலைகளே பதுங்கும்.ஆங்கிலவருடம் நள்ளிரவில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தை தமிழ்ச்சமூகம் எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்கிறது பாருங்கள்.

 

அதேநேரம் சில அழகுகளையும், நளினங்களையும் பார்க்கமுடிகிறது. வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வந்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதும், வண்ண வண்ண கோலங்கள் போடுவதும், கேக்குகள் கொடுப்பதும் ரசிக்கிறமாதிரி இருக்கிறதுதான்.

 

இப்போது அதுபோல இன்னொரு தினம் நாட்குறிப்புகளில் முக்கியமாகி வருகிறது.பிப்ரவரி 14. 'வாலண்டைன் டே' . முதலில் வாயில் நுழைவதற்கே சிரமப்பட்ட அந்த வார்த்தை இப்போது தமிழ்ச் சமூகத்தின் பிரபலமான விஷயம்!. குறிப்பாக நமது மாணவர்கள் புத்தாடை அணிவதும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதையும், கொண்டாடுவதையும் பார்த்தால் ஆச்சரியமாக ருக்கிறது. ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு  நாம் நினைத்திராத காட்சிகள் இவை.

 

ஆனால் இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அரவமே இல்லாமல் நமது திருவிழா ஒன்று தொலைந்து போய்க் கொண்டிருப்பதுதான் சகிக்க முடியாத அவலம். மற்ற தினங்களை, விழாக்களைக் கொண்டாடுவது  ஆரோக்கியமானதுதான். ஆனால் நம் அடையாளத்தை அழித்துக் கொண்டு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

தைப் பொங்கல்! எப்பேர்ப்பட்ட நாள் அது. இந்த மண்ணின் உற்சவம் அது. ஒளிக்கதிருக்கும், நெற்கதிருக்குமான பந்தம் தொடரும் இயற்கையின் புன்னகை அது.வெள்ளையடிக்கப்பட்ட வீடு புது மணத்தோடு நிறைந்திருக்கும். வாசல்கள் கோலங்களால் சிரித்துக் கொண்டிருக்கும். மஞ்சளும், கரும்பும் இலை தழைகளோடும் வேரடி மண்துகள்களோடும் சாத்திவைக்கப்பட்டிருக்கும்.மூட்டப்பட்ட தீயில் பொங்கல் மேலே மேலே எழும்பிவர , நாதஸ்வரம் காட்சிப் படலங்களில் இசையைத் தெளித்தபடி பரவிப் படரும்.புதுப் பானையை மீறிய உற்சாகமாய் பொங்கல் வடிய குலவைச் சத்தங்களில் மனித அழகு சிறகடிக்கும். விடிகாலையிலேயே குளித்து சூரிய வரவுக்காய் காத்திருக்கும் உற்சாகமான தருணம். எல்லோரும் குழந்தைகளாக மாறிப்போகும் இனிப்பானநாள். வீடு தாண்டி பெண்களின் பேச்சும் சிரிப்பும் படபடக்க வீதிகளெல்லாம் குதூகலமாய் கலகலக்கும்.

 

இப்போது அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது. மனிதர்கள் மெல்ல எழுந்திருக்கிறார்கள். சாவகாசமாய் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து டி.வி களின் முன்னால் உட்கார்ந்து சோம்பல் முறிக்கிறார்கள்.கரும்பை கடிக்க திராணி இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி லாவகமாய் வேர்க்கடலையைப் போல கொறிக்கிறார்கள்.வாசம் இல்லை.மஞ்சள் இல்லை. உற்சாகம் இல்லை.பண்டிகைக்கான எந்த அடையாளமுமில்லை. என்ன ஆகிவிட்டது? இது எப்படி நேர்ந்தது? யோசிக்கிற பிரக்ஞையும் இல்லை. நமக்கும், நம் வாழ்வுக்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத நாட்களையெல்லாம் கொண்டாட துடிக்கிற நாம் நமது பாரம்பரிய திருநாளை எப்படி சாதாரணமாக்கிவிட்டோம். கனவில் மட்டும் பார்த்த மாதிரி, கொண்டு வந்த அற்புதங்களை எப்படி  தொலைத்துவிட்டு நிற்கிறோம்.பொங்கல் இந்த மண்ணை, நமக்கு உயிரளிக்கும் உழவுத்தொழிலை, சூரியனை, ஏர் இழுக்கும் மாட்டை மரியாதை செய்யும் வைபவம். விவசாயத்தை இந்த அரசு புறக்கணிக்கிற மாதிரி நாமும் அதற்கான பண்டிகையை புறக்கணித்து கொண்டிருக்கிறோம்.

 

நாம் மெல்ல மெல்ல நம்மை இழந்து கொண்டிருக்கும் இந்த தாழ்வுக்கு பின்புலம் உண்டு. சமூக யதார்த்தத்துக்கு சம்பந்தமில்லாத மேற்கத்திய வாழ்க்கைமுறையில் திளைக்கும் ஆண்களும் பெண்களுமே டி.வி விளம்பரஙகளில் கரையான்களாய் வந்து நம்மை அரிக்கின்றனர். நுனிநாக்கில் நிறைய ஆங்கிலமும், கொஞ்சமாய்  தமிழும் கலந்து பேசும் டி.வி அறிவிப்பாளர்களை நாம் தினம்தினம் போதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.சாக்லெட், கேக்கின் ருசியில் மரத்துப் போன நாக்கு கரும்பின் ருசி அறியமாட்டேன்கிறது.

 

அவர்கள் நமக்குள் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசங்களில் ஒன்று மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாய் இருப்பதுதான். அதுதான் அழகு. ஆயிரம் வண்ணங்களில்...ஆயிரம் ஆயிரம் மலர்களாய்...மனிதர்கள் பூத்துக் குலுங்குவதுதான் அற்புதம். பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள்,பல கலாச்சாரம் இவற்றோடுதான் மனித சமூகம் காலங்களை கடந்து வந்திருக்கிறது.

 

அந்த வேர்களுக்கு வென்னீர் ஊற்றி, அழித்து ஒரே மனிதன், ஒரே கலாச்சாரம் என்று உருவாக்குவது நம் வாழ்வின் மீது நெருப்பு வைக்கிற காரியம். வானவில்லை பிய்த்துப் போடுகிற அராஜகம். விழுதுகளையெல்லாம் வெட்டிவீழ்த்திவிட்டால் ஆலமரத்தின் அடையாளம்தான் என்ன? ஆயுள்தான் என்ன? நமது சுயங்களை புதைத்துவிட்டு  நாம் யாராய் இருக்கப் போகிறோம்?

 

ஒருநாள் கண்ணாடி முன் நாம் நிற்கும்போது, கண்ணாடியில் நமது முகமும், உருவமும் தெரியாமல் சம்பந்தமில்லாத யாருடைய முகமோ தெரியப்போகிறது. நினைத்துப் பார்க்கும்போதே அடிவயிற்றில் ஒரு அமானுஷ்யமான பயம்  படருகிறது.

 

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. You have written a real incident whats happening every year!!!
    we should be ashame for this two celebration(new year and feb-14)
    Nice article!!!!

    பதிலளிநீக்கு
  2. //பொங்கல் இந்த மண்ணை, நமக்கு உயிரளிக்கும் உழவுத்தொழிலை, சூரியனை, ஏர் இழுக்கும் மாட்டை மரியாதை செய்யும் வைபவம். விவசாயத்தை இந்த அரசு புறக்கணிக்கிற மாதிரி நாமும் அதற்கான பண்டிகையை புறக்கணித்து கொண்டிருக்கிறோம்.//

    வயக்காட்டுக்குச் சென்று பொங்கல் வைத்து அதை வீட்டில் வைத்துச் சாப்பிட்டதும், அடுத்த நாள் மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றுக் ஊட்டி விட்டுப் பின் நாம் சாப்பிட்டதும், பொய்யாய் பழங்கதையாய் போயின.

    இன்னும் பத்திருபது வருடம் கழித்து வரும் தலைமுறையினருக்குப் பொங்கல் என்பதே ஒரு விடுமுறை என்பதைத் தவிர வேறு என்ன விசேசம் என்று சொல்ல உங்களிடமும், என்னிடமும் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல முடிகிறது; வேதனையுடன்.

    பருவயதினாளாய், பூத்துக் குலுங்கும் அங்கங்களுடனும், மனதை மயக்கும் மோகங்களுடனும் மனைவி வந்த பின், பத்துத் திங்கள் சுமந்து பெற்று, சீராட்டி வளர்த்த தாயை மறந்தவர்களல்லவா நாம். அதைப் போலத்தான், பாரம்பர்யம் உள்ளவைகளை இழந்து விட்டோம்.

    மதர்ஸ் டே கார்டு விற்பனை அதிகமாக ஆகும் அதே நேரம் அதை விட அதிகமாகிறது முதியோர் இல்லம் நோக்கி இடம் பெயரும் பெற்றோர் எண்னிக்கை.

    பதிலளிநீக்கு
  3. மயக்கம் வருகிற நிலையில் இருப்பவனுக்கு முகத்தில் படீரென்று தண்ணீரை அடிக்கிற மாதிரி இருக்கின்றன உங்கள் எழுத்துக்கள். நகரத்தில் இருப்பவர்கள் கொண்டாடும் பொங்கலை நீங்கள் விவரித்திருப்பது ஒவ்வொரு தமிழனும் வெட்கப் படவேண்டிய ஒன்று. நான் உண்மையில் கூனிக் குறுகிப் போனேன். விவசாயத்தின் மகிமையெ தெரியாத நகர வாசிகளுக்குப் பொங்கலின் மகிமை எப்ப்டித் தெரியும். அய்யோ இப்படியே போனால் பாலிதின் பைகளில் அல்ல, மரம் செடிகளிலிருந்து தான் பழம் காய்கள் எல்லாம் கிடைக்கின்ற‌ன என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பதே பெரிய கஷ்டமாகி விடும் அபாய‌ம் இருக்கிற‌து.

    பதிலளிநீக்கு
  4. இந்த உலகத்தில் மாற்றம் என்பது வந்தேதீரும் அதை எற்றுக்கொள்ளும் மனொபக்குவம் நமக்கு வரவேண்டும்.கோவணம் கட்டி பொங்கல் கொண்டாடிய உழவனுக்கு பேண்ட் சர்ட் போட்டு நாம் கொண்டாடிய பொங்கல்(மாற்றம்) எவ்வளவு மனவருத்ததைத் தந்திருக்குமோ அதே வருதத்தை தான் (மாற்றத்தை)நம் இளைய தலைமுறை நமக்கு தந்துகொண்டிருக்கிறது ஆணால்
    வடகரைவேலன் சொன்னது என் உள்ளத்தைத் தொட்டது. மற்றம் என்பது நம் பழமைகளை மற்றலாம் நம் பாசத்தை அல்ல.

    பதிலளிநீக்கு
  5. //அந்த வேர்களுக்கு வென்னீர் ஊற்றி, அழித்து ஒரே மனிதன், ஒரே கலாச்சாரம் என்று உருவாக்குவது நம் வாழ்வின் மீது நெருப்பு வைக்கிற காரியம். வானவில்லை பிய்த்துப் போடுகிற அராஜகம். //என்ன அற்புதமான‌ உவமை. சத்தியமானதும் கூட.

    பதிலளிநீக்கு
  6. Nalla Pathivu...Sonna Yaru Kekka Poranga...Ithellam Ilaya Thalaimuraiyin Kalacharam(The reason is primarily because of the change in the so called MERTO CITIES....which is really going towards "WESTERN MODERNISATION". After some time, they will come back to the original Indian cultural stream...in the due course of time...Till then we have to wait...Thats all...!!!

    பதிலளிநீக்கு
  7. //கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து டி.வி களின் முன்னால் உட்கார்ந்து சோம்பல் முறிக்கிறார்கள்//
    Well said.,
    Now a days any important day is captured/occupaid by TV channels. some time we could not avoid.they offer new cinema,cinestar interview. Is there any relation between"dasvatharam" film with Christmas day.

    Even English new year all people are going to temples early morning with new dresses/not ät all in "Pongal".

    Still we have confusion which is tamil new year "Thai"/ Chithirai?

    Hariharan
    Doha

    பதிலளிநீக்கு
  8. பொன்ராஜ்!

    ஆங்கிலப் புத்தாண்டையும், காதலர் தினத்தையும் கொண்டாடுவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் தமிழர் திருநாளுக்கு அந்த முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதற்கே வெட்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. விவசாயம் மறக்கப்பட்டுவிட்டது . விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வுகளாகிவிட்டது. அவை சமூகத்தில் எவ்வித சலனங்களும் ஏற்படுத்தாத சூழல.விவசாயம் சார்ந்த பொங்கல் விழா மட்டும் எப்படி நிலைக்கும்

    பதிலளிநீக்கு
  10. வேலன்!

    எல்லாவற்றையும், சாதாரணமாக எடுத்துக் கொள்கிற ஒரு மொண்ணைத்தனம் மிகுந்த சமூகமாயிருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த ஆளுகின்ற அமைப்புக்கு அதுதான் பிரதானமானது. அவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்புதலை, இந்தக் கலாச்சாரம், பண்பாடு மூலமாகவே மக்களிடமிருந்து பெறுகின்றனர். அவர்களுக்கு பொங்கல் கொண்டாடப்படுவது முக்கியமல்ல. பொங்கலை மறந்து, பிரச்சினைகளை மறந்து தொலைக் காட்சிகளுக்குள் மக்கள் புதைந்து போவதே முக்கியம்.

    //மதர்ஸ் டே கார்டு விற்பனை அதிகமாக ஆகும் அதே நேரம் அதை விட அதிகமாகிறது முதியோர் இல்லம் நோக்கி இடம் பெயரும் பெற்றோர் எண்னிக்கை.//

    வலிக்கிறது....

    பதிலளிநீக்கு
  11. தீபா!

    இந்தப் பதிவு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    //அய்யோ இப்படியே போனால் பாலிதின் பைகளில் அல்ல, மரம் செடிகளிலிருந்து தான் பழம் காய்கள் எல்லாம் கிடைக்கின்ற‌ன என்று குழந்தைகளுக்கு புரிய வைப்பதே பெரிய கஷ்டமாகி விடும் அபாய‌ம் இருக்கிற‌து.//

    அதிர்வுகளை ஏற்படுத்தும் வரிகள். ஆந்திரக் கவிஞர் நக்னமுனியின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது. அடுத்த பதிவில் அதை எழுதத் தூண்டப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. moulefrite!

    மாற்றம் நிச்சயம் வரும். அது இல்லையென்றால் நாம் இன்னும் காடுகளில்தான் திரிந்து கொண்டிருப்போம்.
    ஒரு திருவிழா, அதுவும் இந்த மண்ணுக்கே உரிய விழா எப்படி மக்களின் மனங்களில் இருந்து பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது என்பதை மாற்றமாக என்னால் ஒத்துக் கொள்ளப்படுவதில்லை.

    பதிலளிநீக்கு
  13. RAMASUBRAMANIA SHARMA!


    இன்றைக்கும் கிராமங்களில் குலதெய்வம் கோவிலுக்கு செல்வது என்று ஒரு வழக்கமிருக்கிறது. அந்தக் குலதெய்வ கோவில்கள் எங்கோ இருக்கும். ஆனால் வருடா வருடம் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வது போல கிராமமே கிளம்பி, குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். அந்தக் குலதெய்வம் யார், எப்படி இந்த வழிபாடு ஏற்பட்டது என்பது சிலருக்கேத் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை அத்தனை ஒழுக்கத்தோடு அதை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், நகரத்து மக்கள் அதைத் தொலைத்து நிற்கின்றனர். அதுதான், பொங்கல் திருநாளிலும் எதிரொலிக்கிறது.

    இதே நகரம், ஆங்கிலப் புத்தாண்டை எவ்வளவு உன்மத்தமாக கொண்டாடுகிறது! இந்த கலாச்சாரம் ஆளுகின்ற அமைப்பினால் ஊட்டப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. ஜீவன்!

    நன்றி.
    உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஹரிஹரன்!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    தொலைக்காட்சி நடத்தும் நிறுவனங்களுக்கு விவஸ்தையே கிடையாது. நம்மையும் விவஸ்தை கெட்டவர்களாக்குவதுதான் அவர்கள் பணியே.

    பதிலளிநீக்கு
  16. அனானிமஸ்!

    தங்கள் வருகைக்கு நன்றி.

    //விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வுகளாகிவிட்டது. அவை சமூகத்தில் எவ்வித சலனங்களும் ஏற்படுத்தாத சூழல.விவசாயம் சார்ந்த பொங்கல் விழா மட்டும் எப்படி நிலைக்கும்//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்தக் கேள்வியில் தான் பதிலும் அடங்கியிருக்கிறது. இந்தக் கேள்வியை எல்லோருக்குள்ளும் விதைக்க வேண்டும். அதுவே பதிலை வரவழைக்கும்.

    பதிலளிநீக்கு
  17. வளர்ந்து வரும் கட்டிடங்களைப் பார்த்துக் கலக்கமாக இருக்கிறது. ப்வயல் வெளியே இல்லாமல் இவர்கள் செய்துவிடுவார்களோ என்று.

    பயிர் விளைச்சலைப் பற்றிச் சொல்லும் பெரியோர்கள் வார்த்தைகள் அரசு நடத்துபவர்களின் காதில் விழுகிறதா.

    அரிசி கிடைக்கும் வரை பொங்கலாவது உண்டு.

    புற நகர்களும் வயல்வெளிகளும் வீடுகளானால், பயிர்க்காடுகள் எங்கே இருக்கும். உண்மையாகவே கவலையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. வல்லி சிம்ஹன்!

    //புற நகர்களும் வயல்வெளிகளும் வீடுகளானால், பயிர்க்காடுகள் எங்கே இருக்கும். உண்மையாகவே கவலையாக இருக்கிறது.//
    உங்களோடு நானும் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. I am not ashame to celebration of new year and feb-14, but I am only ashame because of the methods which they celebrate in METRO CITIES.

    பதிலளிநீக்கு
  20. நல்ல பதிவு மாதவராஜ். தாமதமான பின்னூட்டம். உங்கள் அணுகுமுறை நடைமுறைக்கு சரியாகவும், ஒரு அந்நிய கலாச்சாரத்தைத் துவேஷிப்பதாக இல்லாமலும், மெதுவாக ஆனால் அழுத்தமாக நாம் எங்கே தவறிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறது. தீவிரத் தமிழ் பதிவர்கள் 'பொங்கலை மட்டும் கொண்டாடு; ஆங்கிலம் எதற்கு' என்ற ரீதியில் பதிவு எழுதுவது, சுய திருப்தியையும், கோஷங்களுக்கும் நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு 'எதோ வெறி பிடித்த பெருசு பொலம்புது' என்று தோன்றும். உங்கள் அணுகுமுறை சிறப்பு. அவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

    மனிதத்தின் பன்முகத் தன்மை மற்றும் அதன் அவசியம் பற்றி நீங்கள் எழுதியது பிரமாதம். வாழ்த்துகள் பதிவுக்கும், ஆங்கிலப் புத்தாண்டுக்கும், வரவிருக்கும் பொங்கல் திருநாளுக்கும்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!