பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்-2

maathu1ஆண்கள் தங்கியிருக்கும் லாட்ஜைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதிப் படித்திருக்கிறேன். அதன் தலைப்பு சரியாய் ஞாபகம் இல்லை. சேவல் என்று  ஆரம்பிக்கும். மணிசங்கர் லாட்ஜ் அப்படி இருக்கவில்லை. அங்கு நான் தங்கியிருந்த இரண்டு வருடங்களை இப்போது நினைத்தால் சுவராஸ்யமாகத்தான்  இருக்கிறது. ஆனால் வீட்டிற்குள்ளேயே இருபத்திரண்டு வருடங்களாக வளர்ந்து வந்த எனக்கு அப்போது மணிசங்கர் லாட்ஜ் வாழ்க்கை அச்சமும், பரவசமுமாக  இருந்தது. பலதுறைகளில் பணிபுரிந்த ஆண்கள் அங்கே தங்கியிருந்தார்கள்.  இரவுகள் மதுவின் வாசனையோடும், புகை நடுவே சீட்டுக்கச்சேரிகளோடும் நகர்ந்தன.   பின்னிரவு கழிந்த பின்னர் லாட்ஜிலிருந்து வெளியேறிய பெண்ணைப்பற்றி கண்சிமிட்டலோடு காலையில் குளிக்கும் இடங்களில் பேச்சுக்கள் தொடர்ந்தன.  இன்னும் சிலர் கோடு கிழித்ததைப் போல, இந்த நேரத்தில் இந்த காரியம், நானுண்டு என் வேலை உண்டு என சாமி படங்களோடு தங்கள் அறைகளை விட்டு  வெளியே வராமலிருந்தார்கள்.  மொத்தமிருந்த எட்டு அறைகளில், இருபத்து நான்கு ஆண்களில் புத்தகம் படித்துப் பேச யாரும் வாய்த்திருக்கவில்லை.  நானும்  பேக் பைப்பரின் வாசனையில் கிறங்கிப் போனேன்.  காலியான பாட்டில்களுக்குள் கடந்தகால வாழ்க்கையும், நான் வாசித்திருந்த கதைகளும் போய் ஒளிந்து  கொண்டன. நடு இரவில் அம்மாவை நினைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, அழுது கொண்டிருப்பேன். அம்முவுக்கு கடிதம் எழுதிவிட்டு, காலையில் முதல்  வேலையாக கிழித்துப் போடுவேன்.

 

இதற்கு முன்பு வாசிக்காதவர்கள் வாசிக்க
பாட்டியின் குரலில் இருந்து விரிந்த கதை உலகம்-1

அப்போதுதான் கிருஷ்ணகுமாரோடு (இப்போது 'ராமையாவின் குடிசை', 'என்று தணியும்' ஆவணப்பட இயக்குனர் பாரதிகிருஷ்ணகுமார்தான்) எனக்கு பரிச்சயம்  ஏற்பட்டது. நான் பணிபுரிந்து வந்த பாண்டியன் கிராம வங்கியில்தான் அவரும் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  வாடகைக்கு சின்னதாய் ஒரு வீடு எடுத்து  தங்கியிருந்தார். சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த அவரோடு பேச ஆரம்பிக்க, அதுவரை நான் வாசித்த புத்தகங்களே இருவருக்குமான உரையாடல்களை  டீக்களோடும், சிகரெட்டுக்களோடும் தொடர வைத்தன.  பாரதியின் வாழ்வை, கவிதையை அதன் வீரியத்தோடு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். சோவியத்  இலக்கியத்திற்குள் என்னைக் கொண்டு போய் நிறுத்தியவர் அவர்தான். வாழ்வின் திசை மாறியது இந்தப் புள்ளியிலிருந்துதான் என நினைக்கிறேன். என்  மாலைநேரங்கள் அவரோடு புலர ஆரம்பித்தன. இரவுகள் அர்த்தம் கொண்டவையாயின. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, டாக்டர் வல்லபாய் போன்ற  நண்பர்கள் கிடைத்தனர்.   வைப்பாற்றங்கரையில், 42-பி எல்.எப்.தெருதான் எங்கள் சங்க அலுவலகத்தின் முகவரி. அங்கேயே தங்கிக் கொண்டேன்.  அன்று ஆரம்பித்து இன்று வரை என் நண்பனாய் தொடர்கிற காமராஜ் அங்குதான் கிடைத்தான். நடு இரவில் வந்து கதவைத் தட்டி, விளக்குகளை எரிய விட்டு   இலக்கியம் பேச ஆரம்பிப்பார் எஸ்.ஏ.பெருமாள். காகங்களின் சத்தங்கள் கேட்ட பிறகு, கீழே போய் பிலால் கடையில் டீக் குடித்துவிட்டு கம்பீரமாக சாலையில்  நடந்து செல்வார் அவர்.

 

மரத்தில் அடையும் பறவைகளின் இரைச்சல்களோடு நானும் காமராஜும் மாக்ஸீம் கார்க்கியையும், டால்ஸ்டாயையும் படிக்க ஆரம்பித்தோம். செக்கோவ்  கதைகளைப் படித்து, மனித மனங்களின் விசித்திரக் கூறுகளை அந்த மனிதர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என வியந்து போவோம்.(செக்கோவ் கதைகளைப்  படிக்கும் போது ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்துவிட்டாள்' என்னையுமறியாமல் ஞாபகத்திற்கு வரும்). இதற்கு இடையில் அம்மு எனக்கு கடிதம்  எழுதியது, காயிதே மில்லத்தில் படித்துக்கொண்டிருந்தவளை ஹிக்கிம்பாதம்ஸுக்கு வரச்சொல்லி அங்கு வைத்து அவளும் நானும் முதன்முதலாய்  பேசிக்கொண்டது, பின்னர் அடையாறில் வைத்து "கல்லூரி முடித்து, பி.எட் முடிக்கும் வரை காத்திருக்க முடியுமா?" என அவள் கேட்டது, நானும் சம்மதித்து  வந்து தஸ்தாவஸ்கியின் வெண்ணிற இரவுகளைப் படித்து பைத்தியம் போலானது எல்லாம் நடந்தது. சங்கத்தின் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம்  உட்கார்ந்து, நான்காம் நாள் காலை டாக்டர் பரிசோதித்து, கைது செய்து ஆஸ்பத்திரியில் வலது கையில் டிரிப்ஸ் ஏத்தியதும் நடந்தது. எனது இடது கையில்  நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை' நாவலைத் தந்தார் கிருஷ்ணகுமார். கையூருக்குள் பயணமானேன். நானே அப்புவானேன். நானே சிருகண்டனானேன்.  ஆஸ்பத்திரியில் இருந்து சங்க அலுவலகம் சென்ற பிறகும் கையூரிலிருந்து நான் திரும்பவில்லை.  கடைசிப் பக்கங்களில் வாய்விட்டுக் கதறி அழுதேன்.

 

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி வீட்டுக்கு வாரத்துக்கு இரண்டு மூன்று தடவையாவது போய் பேசிக் கொண்டே இருப்போம். அப்போது அவரது கதைகள்  ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தன. தோழர் நாவலை எழுதி முடித்திருந்தார். சிங்கிஸ் ஐத்மாத்தாவும்,  ஜமீலாவும் வைப்பாற்றின் மணல்வெளி பூராவும்  நிரம்பியிருந்தார்கள். மைக்கேல் ஷோலக்கோவ், துர்க்கனேவ், வண்ணதாசன், பூமணி, சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், பிரேம்சந்த், பஷீர் என ஒளி வீசிய நாட்கள்  அவை. அம்முவுக்கு நான் எழுதிய பல கடிதங்களில் எதாவது படித்த புத்தகங்களைப் பற்றிய செய்திகள் இருக்கும். வண்ணநிலவனின் கடல்புரத்தில் மிக  நுட்பமான உணர்வுகளோடு மனம் உருகிப்போகும் வெளியில் சஞ்சரிக்க வைத்தது. தமிழ்ச்செல்வனின் "வெயிலோடு போய்"  (இந்தச் சிறுகதைதான் இப்போது பூ  படமாய் வந்திருக்கிறது) சிறுகதைத் தொகுப்பு பால்ய காலத்து நினைவுகளையும், பெண்மனதின் குரலையும் மிக அருகில் இருந்து சொல்வது போல இருந்தது.  நானும் எழுத ஆரம்பித்தேன். தாகத்துக்கு எப்போதும் விக்கிக் கொண்டிருப்பதாய் அடிகுழாய்களின் சத்தம் கேட்கும் சாத்தூர்தான் 'மண்குடம்' சிறுகதையாய்  வெளிப்பட்டது.  கந்தர்வன் சாத்தூர் வந்த போது,  கையைப் பிடித்து முத்தம் தந்தார். கோவில்பட்டிக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்துக்கு போயிருந்த போது   தமிழ்ச்செல்வன் தேடி வந்து "நீங்கதான் மாதவராஜா?" என தட்டிக் கொடுத்து நிறைய எழுதுங்கள் என்றார். கணையாழியின் கடைசிப் பக்கத்தில் சுஜாதா அந்தக்  கதை குறித்து சிலாகித்து எழுதியிருந்தார். 

 

எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, உதயசங்கர் என பலரோடு தொடர்பு ஏற்பட்ட காலங்கள் அவை. எழுத்தாளர்கள் கோணங்கியையும்,  எஸ்.ராமகிருஷ்ணனையும் சந்தித்தது இந்தச் சமயங்களில்தான்.  கைப்பிரதியில் இருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதையை டாக்டர் வல்லபாய்  கிளினிக்கில் வைத்து வாசித்தோம். புரியவேயில்லை. லேசாக சிரித்துக் கொண்டார். அவர்கள் இருவரோடும் அவ்வப்போது சங்க அலுவலகத்தில், வைப்பாற்றில்,  தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வீட்டில் ரியலிசம், சர்ரியலிஸம், மேஜிக்கல் ரியலிசம் என பெரும் விவாதங்கள் நடந்து நட்போடு தொடரும்.  எஸ்.ராமகிருஷ்னனின் முதல் சிறுகதைத் தொகுப்பையும், கோணங்கியின் 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' மற்றும் 'மதினிமார்கள் கதை'யும் எனக்கு அவர்கள்  மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தின. அவர்களின் மொழியாற்றல் மீது இன்று வரை எனக்கு பிரமிப்பு விலகாமல் இருக்கிறது. அவர்களோடு படித்த முக்கியப்  புத்தகங்களைப் பற்றி பேசும் போது 'நாம் என்ன படித்திருக்கிறோம்' என்றுதான் எப்போதும் தோன்றும்.

 

இரண்டு மூன்று வருடங்களில்  எட்டு கதைகள் போல எழுதியிருந்தேன். மூத்த அண்ணன் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்திருந்தான். என் தங்கைக்கும், இரண்டாவது  அண்ணனுக்கும் திருமணமாயிருந்தது. தொழிற்சங்க நடவடிக்கைகளும், என் காதல் சமாச்சாரமும் மிகத் தீவீரமான வேளையில் புத்தகங்கள் பக்கம் நான்  போகவில்லை. 44 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் என் நேரங்களை பெருமளவில் அதற்கு முன்னரும், பின்னரும் எடுத்துக் கொண்டது. எழுத்தாளர்.தனுஷ்கோடி  ராமசாமி எனக்காக சென்னை சென்று, எழுத்தாளர் ஜெயகாந்தனோடு பேசினார்.  தன்னை வந்து பார்க்குமாறு அவர் சொல்லி அனுப்பினார். சில மாதங்கள் கழித்து  நான் மட்டும் அவர் வீட்டுக்கு (எப்படி தைரியம் வந்தது என்பது இப்போது வரை ஆச்சரியம்தான்) சென்றேன். என் வாசிப்பு உலகத்தில் ஆளுமை மிக்க  எழுத்துக்களோடு வலம் வந்த அந்த எழுத்தாளரோடு நடந்த முதல் சந்திப்பு முற்றிலும் வித்தியாசமானது. அவரே சம்மதித்து, திருமணத்தை நடத்தி வைத்தார்.  என் கதைகளைப் படித்து நன்றாக இருக்கிறது என அவரே முன்னுரை எழுதி மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்து 'இராஜகுமாரனாக' வெளிவர ஏற்பாடு செய்தார்.  சென்னையில் அம்முவின் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் எதாவது ஒரு முக்கியமான புத்தகத்தை வாசித்து விடுவேன். அல்லது சாத்தூருக்கு கொண்டு வந்து  வாசிப்பேன்.

 

பிறகு அறிவொளி இயக்க நண்பர்களோடு நெருக்கமும், தொடர்பும் ஏற்பட்டது. சாத்தூரில் பொறுப்பாளராயிருந்தவர் ச.வெங்கடாச்சலம். (இவர் எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணனின் அண்ணன்.) கிராமத்துச் சொலவடைகளும், நாட்டுப்புறங்களில் இன்றும் இருக்கும் கதைகளும் அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர்.  தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அங்கு சென்று விடுவோம் நானும் காமராஜும். ஏராளமான புத்தகங்கள் கொண்ட அலுவலகம் அது. கு.அழகிரிசாமி,  புதுமைப்பித்தன், ரகுநாதன், கு.பா.ரா கதைகளை படித்தது எல்லாம் அங்குதான். அறிவொளி இயக்க நண்பர்களோடு சேர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கப் பணிகளும் நடந்தன.

 

கிருஷ்ணகுமாருக்குப் பிறகு நான் சங்கத்தின் பொதுச்செயலாளராகி எந்நேரமும் எங்காவது பயணம் செய்ய ஆரம்பித்தேன். கல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் என  அகில இந்திய வேலைகளும் இருக்கும். புத்தகம் படிப்பது ரெயிலில்தான் என்றானது. கலீல் கிப்ரானின் முழுத் தொகுதி, சதத் ஹசன் மாண்ட்டோ, அதுவரையிலும்  படிக்காமல் விட்டிருந்த மோகமுள், ஜெயமோகனின் ரப்பர், காடு என என் பயணங்கள் விரிந்தன. ஆனால் அவைகளை முழுசாய் உள்ளிழுத்து அசை போடுவதற்கு நேரமிருக்காது. தொழில்தகராறுச் சட்ட விதிகளையும், பல ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கைக் கோப்புகளையும் படித்து,  சுற்றறிக்கைகள் எழுதி, கூட்டங்களில் பேசி  களைப்பும் , அசதியும் மனதில் நிரந்தரமாயிருக்கும். அம்முவும், குழந்தையும் தான் இளைப்பாற வைத்தவர்கள். பத்து வருடங்கள் இப்படியே ஒடிப் போயின. மொத்தத்தில் ஐந்தோ, ஆறோ கதைகள் எழுதினேன். அப்போது வந்த புத்தகங்கள், எழுத்தாளர்கள் யார் யார் என்று தெரியாத இடைவெளி ஏற்பட்டிருந்தது. எதாவது இலக்கியக் கூட்டங்களில் நண்பர்கள் காலச்சுவட்டில் வந்த கதையப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எதுவும் தெரியாமல் நான் கேட்டுக்கொண்டு இருப்பேன். ஆதவன் தீட்சண்யா அறிமுகமானது இந்தக் காலக் கட்டத்தில்தான். விசை பத்திரிக்கை எல்லோரும் சேர்ந்து கொண்டு வரத் திட்டமிட்டு, பிறகு அவரே முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதாயிற்று.

mathu3

 

இரண்டாயிரத்துக்குப் பிறகு, சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுபட்ட பிறகுதான் படிக்கவும், எழுதவும் நேரமும், மனமும் வாய்த்தது. ஆனால் non-fiction  பக்கம் போய் விட்டேன். அதற்கான புத்தகங்கள் வாசிப்பதும், எழுதுவதும் பிடித்துப் போயிற்று. கடந்த மூன்று வருடங்களாக ஆவணப்படங்கள் பக்கம் போய்  நின்றேன். நிற்கிறேன். பாரதி புத்தகாலயம் வந்த பிறகு வீடு நிறைய புத்தகங்களோடு சிரிக்கிறது. அண்மையில் படித்தது விடுதலையின் நிறமும், மீன்காரத்  தெருவும். இதற்கு இடையில் தீபா (எழுத்தாளர் ஜெயகாந்தனின் இளைய மகள்) பிளாக் சம்பந்தமாக ஒரு வருடத்திற்கு முன்பு எனக்குச் சொல்லியது இப்போது  நிஜமாகி, இந்த செப்டம்பரிலிருந்து உங்கள் முன் வந்து நிற்கிறேன். ஜ்யோவ்ராம் சுந்தரை, வடகரை வேலனை, அனுஜன்யாவை, மதுமிதாவை,கென்னை,  தங்கராசா சீனிவாசாவை, லேகாவை வாசித்துக் கொண்டு நிற்கிறேன்.

 

என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக்  கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள்  என்னிடம் கேட்டாள்.

 

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதவராஜ்,

    ஒரு தோழமை கருதி பெயர் சொலியே அழைக்கலாம்தானே, உங்கள் மீதான பொறாமையும் பிரமிப்பையும் இன்னும் அதிகமாக்கியது இரண்டாம் பாகம்.

    நீங்கள் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இவ்வளவு பரந்துபட்ட வாசிப்பனுபவம் எனக்கு வாய்க்கவில்லை.

    தன் கையூன்றிக்கரணம் போடும் வாழ்க்கையினிடையே ஆசுவாசப்படுத்தி மூச்சுவிடும் ஒரு முயற்சியாகவே வாசிப்பு எனக்கு வாய்த்திருக்கிறது.

    கிராமச் சாலைகளில் காரைத் துரத்தும் நாயாகத்தான் ஆகிவிட்டது வாழ்க்கை. அந்தக்காரைப் பிடித்துத்தான் என்ன செய்யப் போகிறதந்த நாய்? அது போல பொருள்தேடும் வாழ்க்கையில் இழந்ததொரு தட்டிலும் பெற்றதொரு தடட்டிலும் இட்டால் எக்காலத்திலும் சமமாக இருக்காதென்பதான வாழ்க்கையே விதிக்கப்பட்டிருக்கிறது நம்மில் பலருக்கும்.

    எல்லோரது வாழ்க்கையும் அவரவர் விசிட்டிங் கார்டால் அறியப்படுவதொரு சோகம்தானெனினும் அவ்வாறே நகர்கிறது;தவிர்க்கவியலாமல்.

    லாட்ஜ் வாழ்க்கையை கூர்ந்து கவனித்திருகிறீர்கள். அதனோடு ஒட்ட முடியாமல் போவதொரு சோகம்; சுடுதண்ணீரில் இடப்பட்ட மீன்குஞ்சு போன்றதொரு மனநிலை. நானும் அனுபவித்திருக்கிறேன் 1986-ல், சென்னையில். அதென்னவோ சிகரெட்டுக்கும், மதுவுக்கும் சேரும் உடனடிச் சொந்தம் வாசித்தலுக்கும் ரசித்தலுக்கும் அமைவதில்லை.

    எழுத்தாளர்களோடு பழகிக்களிக்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. கொடுத்து வைத்தவர்.

    உங்கள் காதல் பற்றி அறிகையில் ஒரு விஷயம் நன்கு புலப்படுகிறது; நேர்மையான காதல் காத்திருந்து காரியம் சாதிக்கும், நிச்சயம் கைகூடுமென்பது. வாழ்த்துக்கள்.

    //என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.//

    கசக்கிறதெனினும், நிதர்சனம் இதுதான்.

    இருந்தபோதிலும் நாளையபொழுது நல்லதாக விடியுமென்ற நம்ம்பிக்க்கையில் கடக்கிறது ஒவ்வொரு இரவும்.

    நம்பிக்கைகளைப் புதுப்பிக்கவும், தோல்வியிலிருந்து மீண்டெழவும் ஆகப்பெரிய துணை புரிவதே வாசிப்பின் வசீகரம்.

    பதிலளிநீக்கு
  2. அருமைத் தோழன் வடகரை வேலன்!

    நன்றி.

    நிறைய தயக்கங்களோடுதான் எழுதினேன்.
    சொல்லாமல் விட்டதும் இருக்கிறது.
    வேறொரு சந்த்ர்ப்பத்தில் சொல்லணும்.

    சூழ்நிலையில்தானே நாம் உருவாக்கப்படுகிறோம்.
    அதைத்தான் தங்கையின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறேன்.

    சென்னைக்கு கிளம்ம்புகிறேன்.

    எப்போது சிவகாசி வருவீர்கள்?
    திருத்தங்கலில்தான் வேலை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வேலன்!

    //அதென்னவோ சிகரெட்டுக்கும், மதுவுக்கும் சேரும் உடனடிச் சொந்தம் வாசித்தலுக்கும் ரசித்தலுக்கும் அமைவதில்லை//

    ரொம்ப உண்மை.

    பதிலளிநீக்கு
  4. முதல் தொடர் இலகுவாக எல்லோருக்கும் வாய்த்துவிடக்கூடிதொன்றுதான் என நினைக்கிறேன்.. ஆனால் இரண்டாவது பகுதியை வாசிக்கையில் உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை வரம் என்றே நினைக்கிறேன்...

    இன்னும் நிறைய உச்சங்களை நீங்கள் தொடுவீர்கள் ....
    உங்கள் கரங்களைப் பற்றக்கிடைத்த சந்தோசத்தோடு..

    அன்புடன் ஜீவன்...

    பதிலளிநீக்கு
  5. //அவர்களோடு படித்த முக்கியப் புத்தகங்களைப் பற்றி பேசும் போது 'நாம் என்ன படித்திருக்கிறோம்' என்றுதான் எப்போதும் தோன்றும்.//


    இந்த தன்னடக்கம் தான் உங்களது அரிய குணமும் அறிவும் கூட!
    மேலும் புதுமைகளை அறிந்து கொள்வதிலும் கற்றுக் கொள்வதிலும் உங்களூக்கு இருக்கும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். உங்களோடு பழகி அறியாத பல விஷயங்களை உங்கள் இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்... பெருமைப்படுகிறேன்!

    பதிலளிநீக்கு
  6. நடு இரவில் அம்மாவை நினைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, அழுது கொண்டிருப்பேன். அம்முவுக்கு கடிதம் எழுதிவிட்டு, காலையில் முதல் வேலையாக கிழித்துப் போடுவேன்.
    ======
    I also faced the same feelings at my college days while was in the hostel. your script flow is good one.sorry to write in english. not able to write fluently in the tamil fonts :)

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் குறிப்பிடும் சிறு நாவலின் பெயர், 'சேவல் பண்ணை'. உங்கள் வாசிப்பை என்னதோடு அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  8. //ஆண்கள் தங்கியிருக்கும் லாட்ஜைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதிப் படித்திருக்கிறேன். அதன் தலைப்பு சரியாய் ஞாபகம் இல்லை. சேவல் என்று ஆரம்பிக்கும். //

    சேவல் பண்ணை

    பதிலளிநீக்கு
  9. என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை, இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு "இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.//
    இந்த வரிகள் மிகவும் வேதனையை தந்தன. உங்கள் தங்கை என்னும்பொழுது வயது நாற்பதுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். முன்பு போல இப்பொழுது வீட்டுவேலை சுமைகள் குறைவு. செல்வியும், கோலங்களும் பார்க்க நேரம்
    இருக்கும்பொழுது, தினசரியை புரட்ட ஆகும் பத்து நிமிட நேரமின்மை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. விலங்குகளை
    யாரும் போடவில்லை. விரும்பி அணிந்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. தங்கராசா ஜீவராஜ்!

    உங்கள் கரங்களை நானும் இறுக்கமாக பற்றிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தீபா!

    நாம் எல்லோருமே எதாவது ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
    இந்தப் புரிதல்தான் முக்கியமானது என்று நினைக்கிறேன்.
    அதுதான் நம் சிந்தனைகளை வளப்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  13. ஜீவன்!

    தங்கள் வருகைக்கும், எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ரமேஷ் வைத்யா!

    நாவலின் தலைப்பை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
    வாசிப்பில் நமது அடையாளங்கள் ஒன்றாய் இருய்ப்பது சந்தோஷமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. உஷா!

    வாய்ப்புகளையும், சூழலையும் நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
    ஒரு சிற்றூரில் வசிக்கும் அவளுக்கு, வீட்டிற்குள் புத்தகங்கள் எப்படி வரும்? ஆனந்தவிகடனும், குமுதமும்தான் அவளுக்கு மிஞ்சிப் போனால் வாய்க்கின்றன.
    வாசிக்கிறவர்கள், அதைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் கூட இருக்கும்போது, அது குறித்த ரசனையும், விருப்பமும் இயல்பாக ஏற்படும். இருபது வருடங்களுக்கு மேலாக வேறொரு உலகத்தில் வாழ்ந்துவிட்டு, திரும்பவும், தனது விருப்பமான உலகத்தை மீட்டெடுப்பது, குடும்பத்தில் நமது பெண்களுக்கு மிகவும் அரிதான காரியம். விலங்குகளை யாரும் போடவில்லை, நாமே விரும்பி அணிந்து கொள்கிறோம். இதில் 'விரும்பி' என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தவிர்க்க முடியாமல் அணிந்து கொள்கிறோம் என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!