புக் பாயிண்டில் தீ, வம்சி புத்தகங்கள் வெளியீடு இடமாற்றம்!
அதிர்ச்சியும் கலக்கமுமான குரலில் சற்றுமுன் எழுத்தாளர் பவா.செல்லத்துரை போன் செய்தார்.
நாளை (சனிக்கிழமை - 30.1.2010) மாலையும், நாளை மறுநாள் (ஞாயிறு - 31.1.2010) காலையும், வம்சி புத்தக வெளியீடுகள் நடக்க இருந்ததை ஏற்கனவே-
நான் , பைத்தியக்காரன் , உமா ஷக்தி , செல்வேந்திரன்
ஆகியோர் தங்கள் பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்தோம்.
இந்த நிகழ்ச்சிகள் நடக்க இருந்த புக்பாயிண்ட்டில் இன்று தீப்பிடித்து விட்டதாம். அங்கிருந்த பல லட்சம் பெறுமான புத்தகங்கள் அழிந்துவிட்டதாம். மேற்கொண்டு தகவல்கள் பவாவுக்கும் தெரியவில்லை. கேட்பதற்கு சங்கடமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
எனவே, புத்தக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:
தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை
ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:
இக்ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்
இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.
சொல்லித் தெரிவதில்லை - 2
தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தூரத்தில் மாமா யமஹாவில் போவதைப் பார்த்துவிட்டான். ‘காலையில் டவுணுக்குப் போய்ட்டு ராத்திரிதானே வருவாங்க... இன்னைக்கு என்ன மத்தியானமே வந்துட்டாங்க’ யோசனையத் தாண்டி சந்தோஷமே வந்தது. இன்றைக்கு விடக்கூடாது எனத் தீர்மானம் செய்து மாமாவின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.
வழியில் மங்கையர்க்கரசி “யப்பு.... புளியும், வெங்காயமும் அக்காவுக்கு வாங்கித் தாறியா” என கடைக்கு அனுப்பி வைத்தாள். தட்டமுடியாமல் சென்றவன், பிறகு மாமா வீடு போய்ச் சேரும் போது முற்றத்தில் பாட்டி மட்டும் உட்கார்ந்து கீரை ஆய்ந்துகொண்டு இருந்தார்கள். அறைக்கதவு சாத்தியிருந்தது.
இவன் வேகமாய்ப் போய் ‘மாமா’ என்று கதவைத் தள்ளினான். உள்ளே பூட்டப்பட்டு இருந்தது. திரும்பவும் “மாமா” என்று குரல் எழுப்பினான்.
பாட்டி விறுவிறுவென அருகில் வந்து “ஏலே... மாமா இல்ல...” என்று ரகசியமாய் சொல்வதைப் போல் சொன்னார்கள்.
“நா... மாமா வந்ததைப் பாத்தேனே...” என்றான்.
“பைத்தியக்காரா.... மாமா வரல்லடா..” என்றார்கள் சிறு பதற்றத்துடன்.
”இதோ.... வாசல்ல பைக் நிக்குதே. ஏம்பாட்டி... இந்த வயசுலயும் பொய் சொல்றீங்க. மாமா... மாமா” கதவைத் தட்ட ஆரம்பித்தான்.
சட்டென்று அவனைக் கதவருகில் இருந்து இழுத்து கொஞ்சம் தள்ளிக் கொண்டு போனாள். “ஏ... பைத்தியக்காரா சொன்னா கேக்க மாட்டியா. மாமா வந்துட்டு, பைக்க வச்சுட்டு அவசரமா தோட்டத்துப் பக்கம் போயிருக்கான். வந்துருவான்”
“சரி... அத்தய எங்க. உள்ள பேன் ஓடுற சத்தம் கேக்குதே?”
“அவ.... அவ.... தலைவலிக்குன்னு உள்ள தூங்குறா”
“அதுக்கு பூட்டிக்கிட்டா தூங்குறாவ”
“பாருங்கய்யா இந்தப் பைத்தியக்காரன! போலீஸ்காரன் மாரில்லா கேள்வியாக் கேக்குறான்.”
“நானா பைத்தியம். நீங்கதா பைத்தியம். சரி. நா இங்கய இருக்கேன். இன்னிக்கு மாமாவப் பாத்துட்டுத்தான் போவணும்”
“நல்ல நேரம் பாத்துத்தான் வந்துருக்கே. சரி, ஒங்க மாமங்கிட்ட அப்பிடி என்னதான் ஆகணும் ”
“கல்யாணத்தோடயே கிரிக்கெட் பேட் வாங்கித் தர்றேன்னு சொன்னாவ. வாங்கியேத் தரல்ல. இன்னிக்கு மாமாவ உட மாட்டேன். கூடயே டவுணுக்குப் போய் பேட் வாங்கிட்டுத்தான் மறுவேல..”
“பேட் என்னடா பேட். ஒனக்கு ஒரு பொண்டாட்டியே அவன் தரப்போறான்...” என்று பாட்டி வாய்விட்டு சிரித்தார்கள்.
“போங்க பாட்டி! அசிங்கமாப் பேசாதீங்க.” என்றாலும் வெட்கமாய் போய்விட்டது. குழைந்தான்.
“ரொம்ப வெக்கப்படாத. வா கடைக்குப் போவம். ஒனக்கு பபுல்காம் வாங்கித் தர்றேன். அதுக்குள்ள மாமா வந்துருவான்” என அவனை அழைத்துக்கொண்டுச் சென்றார்கள் பாட்டி.
அன்றைக்கே சிறுவனுக்கு பேட் கிடைத்ததும், பின்னாட்களில் “கொடுத்து வச்சவ. இப்படி மாமியாக்காரிக்கு மரியாத கொடுக்குற மருமகா எங்க கெடைப்பா!” என்று பாட்டி மீது வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டு சில கிழவிகள் ஊருக்குள் அலைந்ததும் தனிக்கதைகள் அல்ல.
சென்னையில் இரண்டு, கோவில்பட்டியில் ஒன்று!
வம்சி புக்ஸ் சார்பில் சென்னையில், அண்ணாசாலையில், புக்பாயிண்ட் அரங்கத்தில் (ஸ்பென்சர் எதிரில்) இரண்டு அமர்வாக புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
முதல் அமர்வு ஜனவரி 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.
1. எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் ‘கனகதுர்கா’வை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிகையாளர் ஞானி பெறுகிறார். கவிஞர் யுகபாரதி மற்றும் இயக்குனர் சிம்புத்தேவன் அவர்களும் புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்கள்.
2.எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரின் ‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’யை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெறுகிறார். கவிஞர் இரா.சின்னச்சாமி புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்.
3.எழுத்தாளர்.லட்சுமணப்பெருமாள் அவர்களின் கதைகளின் தொகுப்பை பத்திரிகையாளர் விஜயசங்கர் வெளியிட, கவிஞர் நா.முத்துக்குமார் பெறுகிறார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றுகிறார்.
இரண்டாம் அமர்வு ஜனவரி 31ம் தேதி அதே புக் பாயிண்ட் அரங்கில் ஜனவரி 31ம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.
1. சா.தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கும் லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’ புத்தகத்தை இயக்குனர் பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெறுகிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் உரையாற்றுகின்றனர்.
2. சா.தேவதாஸ் மொழிபெயர்த்திருக்கும் ஹென்றி ஜேம்ஸின் ‘அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட, எழுத்தாளர் கிருஷாங்கினி பெறுகிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பத்திரிகையாளர் கடற்கரய் அவர்களும் உரையாற்றுகிறார்கள்.
3.எழுத்தாளர் உதயஷங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் ட்ராஸ்கி மருது வெளியிட பால்வண்ணம் அவர்கள் பெற்றுக்கொள்கிறார். மணிமாறன் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிகழ்ச்சிக்கு பாரதி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்க, பவா.செல்லத்துரை நன்றியுரையாற்றுகிறார்.
இன்னொரு புத்தக வெளியிடு ஜனவரி 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் (ராஜ் மஹால், ராமதாஸ் பூங்கா அருகில்) மாலை 5 மணிக்கு நடக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி மற்றும் நாடகக் கலைஞர் முருகபூபதி அவர்களின் தந்தை எம்.எஸ்.சண்முகம் அவர்கள் எழுதிய ‘பெரிய வயல்’ நாவல் வெளியீடுதான் அது. 75 வயதுக்கும் மேலான திரு.எம்.எஸ்.சண்முகம் அவர்களின் மூன்றாவது படைப்பு இது. இதற்குமுன் ‘பூட்டுப் பாம்படம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பும், ‘நிலம் மறுகும் நாடோடிகள்’ என்னும் நாவலையும் தந்திருக்கிறார். நிலம் அளக்கும் சர்வேயராயிருந்த அவரின் வாழ்வனுபவங்கள் ததும்பி நிற்கும் எழுத்துக்கள்தாம் இவை.
உற்சாகமான ஒரு இலக்கிய சந்திப்பு நிச்சயம் என்பதாய், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு பெரும் பட்டியல் இருக்கிறது அழைப்பிதழில்.
எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, வண்ணதாசன், எஸ்.ஏ.பெருமாள், சு.வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, எஸ்.லட்சுமணப்பெருமாள், ஆதவன் தீட்சண்யா, யவனிகா ஸ்ரீராம், ஷாஜஹான், மாதவராஜ், காமராஜ், ஜனகப்ரியா ஆகியோரும் கவிஞர்கள் சமயவேல், தேவேந்திரபூபதி, கிருஷி, இலட்சுமிகாந்தன் ஆகியோரும் பேராசிரியர்கள் தொ.பரமசிவன் மற்றும் சிவசுப்பிரமணியன் ஆகியோரும் அன்று வாழ்த்திப் பேசுகிறார்கள். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் தோழர்.ஆர்.நல்லக்கண்ணு மற்றும் தோழர்.பி.சம்பத் அவர்களும் இருக்கிறார்கள்.
புத்தக வெளியிட்டிற்கு இடையேவும், முடிந்த பிறகு நடக்கும் அன்பான விசாரிப்புகளுக்காகவும், உரையாடல்களுக்காகவும் காத்திருக்கிறேன். ஞாயிறு இரவெல்லாம் நீளும் சந்திப்பு, திங்கட்கிழமை காலையில் கண்களை சொக்க வைக்கும். இருக்கட்டும். இது போன்ற நிகழ்ச்சிகள்தானே நாட்களை சுவராசியமாக்குகின்றன.
மாதவராஜ் பக்கங்கள் - 20
வா.மு.கோமுவின் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ நாவல் எனக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டு, படிக்கவேண்டும் என உந்துதல் ஏற்பட்டு, புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்து படித்தால், புஷ்பா தங்கதுரையின் எழுத்துக்களை விடவும் மோசமாக உணர்ந்தேன். நாற்பது நாளைக்குள் எழுதப்பட்ட இந்த நாவலைப் பற்றி இப்படித்தான் பின்பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது:
பாலின்பத்தின் வேட்கைகளும், வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் என்றும் சொல்லக்கூடாதவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆசாபாசங்களும், இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது.
நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.
ஆனால் இந்த நாவல் இன்பமூட்டவுமில்லை. பயப்பட வைக்கவுமில்லை. தமிழ்ச்சினிமாவில் வருகிற விடலைகளின் அபத்தக் காதல், காமம் எல்லாம் நாவலில் மேலும் முற்றிய நிலையிலிருந்தன. ஆண் பெண் உறவுகள் எப்போதும் முறுக்கேறிய நிலையிலிருந்தன. உடல் குறித்த உரையாடல்கள் எந்த சுவராசியமுமில்லாமல் அயற்சியை உண்டு பண்ணின. எவ்வளவோ சொல்வதற்கு வேண்டியிருக்கிற சமூகத்தின் மொத்த வெளியிலும் இவைகளையா நிரப்பி, பொதுப்பண்பாடு என்று முத்திரை குத்துவது?
காதல், காமம் குறித்து பொதுவெளியில் பேசவேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. இன்னும் நிறைய நிறைய பேசலாம். அதன் அழகை, அர்த்தங்களை, அந்தரங்கச் சுவைகளைப் பேசவேண்டும். வாழ்வின் வசீகரமான நுட்பமான பகுதிகள் அவை. அப்பட்டமாக, அப்படியே பேசுகிறோம் என்பது வக்கிரங்களாக மாறிவிடக் கூடும். ‘அதிலென்ன ரகசியம் வேண்டியிருக்கிறது, நாசூக்கு வேண்டியிருக்கிறது, சமூகத்தின் வழமைகளை கட்டுடைக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குரல்கள் எழக்கூடும். தங்கையின் மீது தன் காதலனுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்று அக்கா புரிந்துகொண்டவுடன், தங்கை இரவில் சுயபோகம் (இங்கு நாகரீகமான வார்த்தை குறிப்பிடப்பட்டு இருக்கிறது) செய்துகொள்கிறவள் என்று காதலனிடம் தங்கையைப் பற்றிப் போட்டுக் கொடுப்பது இன்பமூட்டுவதாக இருக்கிறதா? பயப்பட வைப்பதாக இருக்கிறதா? எனக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. இதைப் போல நூறு விஷயங்கள் கொண்டதுதான் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’.
பதிவர் ராகவன் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ’சில விஷயங்களை சொல்லாமல் விடுவதுதான் அழகு’ என்று. உண்மைதான். எப்போதோ படித்த ஒரு கதையை இங்கு சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாட்டில், அரசன் மக்களை ரொம்பக் கொடுமைப்படுத்துவான். ரொட்டிக்கு வழியில்லாமல் கஷ்டப்படுவார்கள். அரசி நல்லவளாயிருப்பாள். எல்லோரும் அவளிடம் போய் முறையிடுவார்கள். அரசி, மக்களுக்காக அரசனிடம் பேசுவாள். ‘மக்களுக்காக இவ்வளவு வருத்தப்படுகிறியே..அந்த இழிந்த மனிதர்களுக்காக எது வேண்டுமானாலும் நீ செய்யத் தயாரா?” என்று கேட்பான். அவள் சம்மதிப்பாள். ”நண்பகலில், நகரத்தின் வீதிகளில் நீ ஆடையில்லாமல் நடந்து வா” என்பான் அரசன். மக்களுக்காக அரசியும் அவ்வாறேச் செய்வாள். தங்கள் அரசியின் கோலத்தைப் பார்க்காமல் மக்கள் அனைவரும் தங்கள் கதவுகளை மூடிக்கொள்வார்கள். அப்போது அந்த எழுத்தாளர் எழுதுவார்....’ மக்களின் அன்பினாலும், தனது கருணையாலும் நெய்யப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு அரசி நடந்து வந்தாள்’ என்று. இங்கே படைப்பு இன்பமூட்டுவதாக இருக்கிறது. பச்சை, நீலம், மஞ்சள் என்றில்லாமல் எழுத்துக்களை இந்த நிறத்தில் பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது!
வா.மு.கோமுவின் ’மண்பூதம்’ என்னும் சிறுகதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முதல் கதையான ’பச்சைமனிதன்’ மொழியும், படிமங்களும் வித்தியாசமாய் இருந்தது. முதலில் இங்கிருந்து வா.மு.கோமுவை படித்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அவரது ‘ஒரு பிற்பகல் மரணம்’ சிறுகதைத் தொகுதியும் அடுத்து படிப்பதற்காக வைத்திருக்கிறேன்.
நேற்று குடியரசு தின விழா நிகழ்வில் பீட்டர் அல்போன்ஸ் சுதந்திர இந்தியா, காங்கிரஸ் குறித்தெல்லாம் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தலையிலடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. காமராஜரைப் பற்றிச் சொல்லும்போது அவர் மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர், அவரது குடும்பத்தைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார். மூப்பனாரைப் பற்றி சொல்லும்போது அவருக்கு என்று ஒரு பாரம்பரியமும், வரலாறும் ஏற்கனவே இருந்தது என்றார். பண்மும், நிலமும் கொண்டவர்களுக்குத்தான் வரலாறு இருக்கிறது எனப் புரிதல் கொண்ட இவரைப் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் அறிவுஜீவிகளில் அடக்கம் போலும்.
கலைஞர் டி.வியில் நேற்று காட்டிய இசையும், நாட்டியமுமான அந்த நிகழ்ச்சியில் மெய்மறந்து போனேன். உடல் ஊனம் கொண்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் வாழ்வின் முக்கிய அனுபவங்களில் ஒன்றாகி விட்டது. இசையோடு கலந்த அவர்களது அசைவுகள் பிரமிப்பில் ஆழ்த்தின. வனாந்திரத்தில் சிதறிக்கிடந்த அழகையெல்லாம் அள்ளிப்பருகியது போல இருந்தது. சூரியன் உதித்தது. பறவைகள் சிறகிசைத்தன. வண்ணத்துப் பூச்சிகள் காதல் செய்தன. தோகை விரித்து, கழுத்து வெட்டி மயில் ஒன்று நீர் குடித்து ஆடிய காட்சியில் கலையின் அழகெல்லாம் திரண்டிருந்தது. அழகு. அற்புதம். அதிசயம் எல்லாம்!
கரிசக்காட்டு மண் பிசைந்த மொழிக்காரன் அருமைத் தோழன் காமராஜ் இன்று 200வது பதிவு எழுதி இருக்கிறான். அவனுக்கு என் வாழ்த்துக்கள்.
தர்ப்பண சுந்தரி
- எஸ்.வி.வேணுகோபாலன்
சுற்றுலாத் தலமாயிருந்த அந்தப் புராதனக் கோயிலை விடவும் அதிக வயோதிகம் தெரிந்தது கேசவ அய்யங்காரிடம். கன்னங்கருத்த சரீரத்தின் மீது வெள்ளை வெளேரென்று எடுப்பாகத் தெரிந்த வேட்டியை அவ்வண்ணமே பாதுகாக்க அவர் படும் பாடு அவருக்குத் தான் தெரியும். திருத்தமான பஞ்சகச்ச வேட்டி ஒடிசலான அவரது தேகத்தில் ஒட்டியிருந்தது. நடுப்பகலின் வெயில் சுளீரென்று அடித்துக் கொண்டிருக்க அடுத்த டூரிஸ்டு பஸ் எப்போது வரும் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தார் அவர்.
மே மாதத்தின் ஓயாத வரும்படிகளோ, ஜூன் ஜூலைகளின் 'டல்'லடிக்கும் பொழுதுகளோ அவரை பெரிதாக பாதிப்பதில்லை. யாத்ரிகர்களுக்குக் கோவிலைக் காட்ட வேண்டிய கடமை அவருடையது. வழிகாட்டி. உரிமம் பெற்ற கைடு அவர், அவ்வளவுதான். கும்பல் கும்பலாகக் குவிகிற மக்களிடையே புகுந்து அவர்களுக்குத் தேவையான மொழி இன்னதென்று தேர்வு செய்த மாத்திரத்தில் அடுத்த கணம் அவர்கள் அவ்வளவு பேரையும் தன்வசம் கொண்டுவந்து விடுவார். பிறகென்ன 'பைடு பைப்பர்' கதையில் வருகிற இனிய இசையைப் பெருக்கிச் செல்லும் குழலூதுவோனாக அவர் செல்ல, பைப்பர் பின்னே சென்ற எலிகளைப் போலவோ, குழந்தைகளைப் போலவோ சுற்றுலா வந்த கூட்டம் ஆர்வத்தோடு பின்தொடர்வது சாதாரண காட்சி.
ஒரு சிறிய டார்ச் லைட், மிகச் சிறிய கண்ணாடி, ஓர் ஈர்க்குச்சி சகிதம் அவரது வழிகாட்டும் படலம் பிரதான கோவிலிலிருந்து தொடங்கும். பிரமிக்க வைக்கும் கல் தூண்கள், முகப்புத் தோரணங்கள், சின்னஞ்சிறு சிற்பங்கள் என்று ஒன்று விடாமல் காட்டியபடி பேசிச் செல்வார் கேசவர். அவரது அசத்தலான ஆங்கில வருணனையில் சொக்கிய அந்நிய தேசத்தவர் பலர் சிற்பத்தைவிட அவரை அதிகம் அதிசயித்தபடி நகர்வார்கள்.
இன்றைய அடுத்த கோஷ்டி எங்கிருந்தோ என்றபடி மனசுக்குள், "கேசவா, எல்லாம் நீ அளக்கற படி" என்று சொல்லிக் கொண்டார். கர்நாடக மாநிலத்தின் உள் மாவட்டம் ஒன்றிலிருந்த அந்தச் சரித்திர பேராலயம் இப்படி எத்தனையோ பெருமூச்சுக்களை உட்கொண்டு கிண்ணென்று இருந்தது. கருவறையின் மீது பெரிய விமானமும், சுற்றிலுமிருந்த கற்சுவர்களில் அசத்திக் கொண்டிருந்த வேலைப்பாடுகளுமாக ஈர்த்துக் கொண்டிருந்தது கோவில். 'என்ன உன் வேலைகள், பெரிய வேலைகள்! எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு வந்து உட்கார் இங்கே ஒரு விநாடி' என்கிற மாதிரியான ஒரு கம்பீரம் விகசிக்க நின்றிருந்த தலத்தின் வாசலில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு பயணிகள் கூட்டம் சளசளவென்று பேசிக்கொண்டு நுழைந்தது.
(2)
கோவில் வாசலருகே இருந்த இளநீர்க் கடைக்காரி கடந்து போகிறவர்களை இரைந்து இரைந்து அழைத்துக் கொண்டிருந்தாள். அவளது தடித்த உடல்வாகுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் அழுக்குப் பச்சை நிறத்திலிருந்த மெல்லிய சேலை பரவித் தோற்றுப் போய் நெளிந்தது. அரிவாள் வைத்திருந்த கையோடு முழங்கை முட்டினை நெற்றிக்குக் கொண்டுபோய் வியர்வையை வழித்து விட்டுக் கொண்டபடி தொடர்ந்து கூவியபடியும், எதிரே நிற்பவர்களுக்கான காய்களை ஒரு விற்பன்னருக்குரிய தேர்ச்சியோடு பொறுக்கி எடுத்து வீச், வீச்சென்று வெட்டி இளநீர் மேலே தெறிக்க அநாயாசமாக அவர்களிடம் ஸ்டிரா போட்டு நீட்டிக் கொண்டிருந்தாள். அதே வேகத்தில் குடித்துவிட்டு காயை நீட்டியவர்களிடமிருந்து வாங்கி பளுக் பளுக்கென்று அதைப் பிளந்து வழுக்கையை வெட்டியெடுத்துத் தருவதும், ஒன்றுமற்ற ஓடுகளை சுவாரசியமற்று அருகே மலையாகக் குவிந்திருந்த மட்டைகளின்மீது எறிவதும், காசை எண்ணி எண்ணி வாங்கி மீதி தருவதும், இடுப்பில் முடிந்து கொள்வதுமாக ஓர் அதிரடி மின்னல் வேலைக்காரியாக சுழன்றடித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு இந்த விடுமுறைக் காலங்கள் முக்கியமானவை. காய்ச்சல் கண்டிருந்தாலும் வம்படியாகக் கடையைப் போட்டு நின்றுவிடுவாள். 'என்ன சம்பாதித்து என்ன சுகம் கண்டோம்' என்று அவளுள்ளிருந்தும் பெருமூச்சு எழாத நாள் கிடையாது. அவளது பிரார்த்தனைகள் கோவிலுள் நுழையக் காணோம். அவை வாசலில் திரண்டிருந்த மட்டைக் குவியலின்மீது மோதி மோதி உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கக் கூடும்.
தமிழகப் பயணிகள் குழுவில் ஒரு குழந்தை, 'அப்பா இளநீர்' என்று கையைப் பிடித்து இழுத்தது. திரும்பி வரும்போது பார்த்துக்கலாம் என்ற வார்த்தைகளோடு குழந்தை இழுபட்டு உள்ளே சென்று மறைந்து விட்டது. இளநீர்க் கடைக்காரி நாகலட்சுமிக்குச் சற்று ஓய்வு கிடைத்தாற்போலிருந்தது. எதிரே டீக்கடையைப் பார்த்து சைகை செய்துவிட்டு எந்த திட்டமிட்ட உருவிலுமில்லாதிருந்த ஒரு மர ஸ்டூலின்மீது உட்கார்ந்து டீ வரக் காத்திருந்தாள் நாகலட்சுமி.
சூடான டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கத் தவிர்க்க மாட்டாதபடி அவளது தம்பி மாதேஷின் நினைவு வந்தது. 'ஊருக்குப் பூரா சூட்டைத் தணிக்கிற சரக்கை வித்துட்டு, நீ எதுக்கு அக்கா இந்த உருப்படாத டீயை உறிஞ்சிட்டு நிக்கறே' என்று சிரிப்பான் அவன். அதென்னவோ சிறு வயசிலருந்து டீக்கு அடிமைப்பட்டு வளந்தாச்சு. போதாததற்கு இந்தக் கழுத டீ அதிகம் போனா நாலு ரூபா. ஒரு இளநீர் குறைஞ்சா பதினஞ்சு ரூபா இல்ல நஷ்டம்....
வேண்டாம், அவன் நெனப்பு வேண்டாம் என்று பதறியது மனது. இளநீரை மட்டும் வெட்டிக் கொண்டிருந்த அரிவாள் அப்பாவியாக அந்தக் கதையைத் தனக்குள் ஒளித்துக் கொண்டு இளநீர்க் குவியலிடையே ஒருபக்கமாக ஒளித்துப் படுத்திருந்தது. சூடான டீ உள்ளே இறங்கியதாலோ, மாதேஷின் நினைவு எழுப்பிய வெப்பமோ குப்பென்று பெருக்கெடுத்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் நாகலட்சுமி.
உள்ளே நுழைந்த கூட்டம் வெளியில் வர எப்படியும் முக்கால் மணி நேரம் எடுக்கும் என்று அவளுக்குத் தெரியும். வேறு டூரிஸ்ட் பஸ், கார் வரக் காத்திருக்கத் தொடங்கினாள் அவள். வயதான அப்பா சாப்பாடு எடுத்துவர எப்படியும் மணி இரண்டரை, மூன்றாகி விடும். அதுவரை அசைபோடவோ என்னவோ மாதேஷ் நினைவு மீண்டும் மீண்டும் சுழன்றடித்தது உள்ளே.....
(3)
உள்ளே கேசவய்யங்கார் தமிழில் இதிகாச, புராணக் கதைகள் சகிதம் சிற்பக் காட்சிகளை அறிமுகப்படுத்தலானார். வந்த இருபத்து நாலு பேரும் ஒவ்வொரு தினுசாகக் கதையை வாங்கியபடி அவரோடே நடந்தனர். புதுமண ஜோடி ஒன்று பரஸ்பர ஸ்பரிசத் துள்ளலில் திளைத்தவண்ணம் சிற்பங்களை நோக்கிக் கொண்டு வந்தது. உடன் வந்த பெரியவர் ஒருவர் நர்த்தன விநாயகர் உருவைக் காட்டித் தலையில் குட்டிக் கொண்டு நடந்தால் இந்த இரண்டு வாலிபமும் வேறு எதையோ காட்டிக் காட்டிச் சிரித்தபடி சென்றது. சிறுவர் கும்பல் கம்பங்களைத் தொடுவதும், அண்ணாந்து பார்த்து அசந்து போவதுமாக ஆட்டமும் பாட்டமுமாக நகர்ந்தது.
கேசவய்யங்கார் நடு நாயகமாகக் கூட்டத்தினிடையே நின்று ஹொய்சாள வம்சம் கட்டிய விஷ்ணு ஆலயத்தின் அருமை பெருமைகளை கன்னடத்தில் நனைந்த தமிழில் விளக்க ஆரம்பித்தார். ஹோய் சாலா என்றால், 'சாலா அதை அடித்துக் கொல்' என்று பொருள். சாலா என்ற மன்னன் தன்னைத் தாக்க வந்த புலியை ஒற்றைக் கையால் அடித்துக் கொன்ற வீரத்தைப் பற்றியே ஹோய்சாள வம்சம் என்ற பெயராயிற்று. அதனாலேயே சாலா பெயர் நிலைத்தது போலவே, சாம்ராஜ்யத்தின் சின்னமாக அந்தப் புலியும் அமரத்துவம் பெற்றது என்று ஏதோ தனது கொள்ளுத் தாத்தாவின் புகழைப் பரப்புகிற தொனியில் துவங்கினார் கேசவர். ராஜாக்களின் பெயரை கணினியில் பார்த்துப் படிக்கிற வேகத்தில் சொல்லிக் கொண்டு போனார். சமணராயிருந்த மன்னனை ராமானுஜர் வைஷ்ணவனாக்கிய கதை, விஷ்ணுவர்த்தனின் ஜைன பத்தினி சாந்தலாவின் அபார நாட்டியத் திறன், அவளையே சிலை வடித்திருந்த கோலம், அலங்காரத் தூண்கள், அவற்றின் தயாரிப்பிலிருந்த அசாத்திய உழைப்பு.....என ஆற்றோட்டமாக ஓடிக் கொண்டிருந்தது அவரது பொழிவு.
ஒரு தகவல் விடாது குறித்துக் கொண்டே வேகவேகமாக அவரோடு நடைபோட்டு வந்தவர்கள், சொல்லும்போது எங்கோ பராக் பார்த்துவிட்டு அவரைத் திரும்ப முதலிலிருந்து சொல்லச் சொல்லிக் கேட்டவாறும் சில பயணிகள், வரலாற்றில் ஆழ்வதைவிட, கதைகளில் மிதப்பதைவிட அவர் காட்டும் ஒவ்வோர் உருவையும் கடவுளின் அவதாரமாகக் கருதி பக்திபூர்வமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டும், கண்களை இறுக்க மூடி 'பரமேஸ்வரா, நாராயணா, ஸ்ரீ ஹரி..' என்று ஜபித்துக் கொண்டும் நடந்தவர்கள்.... என வகை வகையாய்க் கலந்து வருபவர்கள் தமிழகப் பட்டியலிலும் இருந்தார்கள்.
பிரகாரத்திலிருந்த மண்டபங்கள், விமானத்தின் மீதான சிற்பங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டி வருகையில் பலநேரம் நிமிர்ந்து பார்க்கக் கூடத் தேவையில்லாமல் சர்வ அநாயாசமாக அது அது இருக்குமிடம் ஒரு நூற்றாண்டாய்த் தமக்குப் பாடமானது மாதிரியான தோரணையில் சொல்லி வந்தார் கேசவய்யங்கார். உயரமான இடத்துச் சிற்பமொன்றின் நுட்பமொன்றை விளக்க வேண்டி வர, கைப் பிரம்பை உயர்த்தித் தொட்டு எல்லோரும் பார்த்தாயிற்றா, பார்த்தாயிற்றா என்று கேட்டு விட்டு நகர்ந்தார். சிற்ப உருவம் ஒன்றின் காதில் நுழைத்த ஈர்க்குச்சி இன்னொரு காது வழியாக வருவதைக் காட்டி, "ஏதாவது விஷயம் சொன்னால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுகிறவர்களைப் போல.." என்று சிரிக்காமல் சொல்லிச் சென்றார்.
பிரகார வெளியில் சிற்பங்களுக்கிடையேயான ஓர் இடைவெளியில் பாறை மீது தனது சட்டைப்பையிலிருந்து எடுத்த காந்தத் துண்டினை ஒட்ட வைத்து அங்கு உலோகக் கலப்பு இருப்பதை விளக்கினார். பெண்மணி ஒருத்தியின் தலைக்குளியல் சிற்பத்தில் அவள் அலசிக் கொண்டிருந்த முடிக் கற்றையின் ஒவ்வொரு நுனியிலும் சேகரமாகித் திரண்டு கீழ்விழக் காத்திருந்த நீர்த்துளிகளைக்கூட விடாது சித்தரித்திருந்த பெயர் தெரியாத சிற்பியை நினைக்குமாறு பயணியரைக் கேட்டுக் கொண்டார். அடுத்து தனது காலணியைக் கழற்றி சினத்தோடு குரங்கை விரட்டிக் கொண்டிருந்த பெண் சிற்பம். பிறகு தசாவதாரம். மகாபாரதப் போர். நடனக்காரர்கள். வாத்தியக்காரர்கள். யோகியர். சேடிப் பெண்கள் சூழ நங்கையர்.....சொல்லிக் கொண்டே வந்தார்.
கையில் தாங்கிப் பிடித்த கண்ணாடியில் தனது ஒப்பனையைச் சரிபார்த்துக் கொண்டு நின்ற நடன நங்கை சிற்பத்தின் சொரூபத்தில் சொக்கி நின்றுவிட்ட ஒரு இளம்பெண் நோட்டுப்புத்தகத்தில் பென்சில் கோடுகளால் நிமிட நேரத்தில் அந்தச் சிற்பத்தைப் பிரதி எடுத்தாள். துவண்ட இடையும், அவளது ஒய்யாரமும், நுட்பமாகப் பதிவாகியிருந்த சின்னச்சின்ன வேலைப்பாடுகளுமாக மின்னிய அந்தச் சிலையை கேசவர் தர்ப்பணசுந்தரி என்று அழைத்தார். தர்ப்பண் என்றால் கண்ணாடி, சுந்தரி என்றால் அழகிய பெண் என்று ஏதோ ஏழாம் வாய்ப்பாட்டைச் சொல்வது மாதிரி மொண மொணவென்று அவர் சொல்லிவிட்டுப் பட்டென்று அங்கிருந்து நகர்ந்தது வித்தியாசமாயிருந்தது. அந்த ஒயிலான நடனமாதுவிற்கு அவர் அத்தனை மரியாதை அளிக்காதது போலவும், தவிர்த்துவிட்டு நடப்பது போலவும் கூடத் தோன்றியது.
முக்கால் மணி திட்டத்திற்குள் கிட்டத்தட்ட எல்லாம் சொல்லி முடித்துவிட்டு இறுதியாக உயரமாக நின்ற பெருந்தூண் ஒன்றின் எதிரே எல்லோரையும் கொண்டு நிற்க வைத்தார். "40 அடி உயரமுள்ள தூணை பாருங்கள். 20,000 கிலோ எடை" என்றார். "எந்தச் சூறைக் காற்று, பேய் மழைக்குக் கூட சாயாது ஒன்பது நூற்றாண்டுகளாக நிற்கிற அதிசயத்தைப் பாருங்கள்" என்று அடுக்கிக் கொண்டே போனார். தயாராக வைத்திருந்த செய்தித் தாளின் இரண்டு பக்கங்களை அதன் அடியில் நுழைத்து, செங்குத்தாக நிற்கும் அந்தத் தூண் எப்படி தனது புவி ஈர்ப்பு மையத்தின் சரியான புள்ளியின் நின்று கொண்டு கீழே எந்த ஒட்ட வைத்தலுமின்றி விழாமலும் நிற்கிறது என்று காட்டி பரவசப்படுத்தினார். சிறுவர் கும்பல் கை தட்டி ஆரவாரித்தது.
(4)
கோவிலுக்குள் நுழைந்த கும்பல் இன்னமும் வெளியே வராதிருக்க மாதேஷின் நினைவுகள் நாகலட்சுமியை ஆட்கொண்டிருந்தன.
மேற்படிப்புக்கு என்று பெங்களூர் போனவன் மேற்சாதிப் பெண்ணைக் கட்டிக் கொண்டுவந்து நிற்பான் என்று யார் நினைத்தார்கள்...அன்றைய இரவு பாழிரவானது. நாகலட்சுமி எவ்வளவோ தடுத்தும், அப்பா கோபத்தில் எடுத்த அரிவாள் திசை மாறி அம்மா மண்டையில் மோதி குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்தவள் எழுந்திராமல் படுத்திருக்கிறாள் இன்னும் அன்று விழுந்தபடியே.
மாதேஷ் ஓடிப் போனவன் பின்னொரு போதும் அந்த அழிந்த நகரத்தின் வரலாற்றுத் தடங்களைத் தேடி வரவில்லை. இரட்டை சரித்திர பிரசித்தமாய் அருகிலிருந்த இந்தக் கோவில் நகரத்திற்குக் குடும்பத்தோடு குடியேறிய சுவாரசியமற்ற கதையில் அப்புறமும் எத்தனை கசப்பான வாழ்க்கைப் பதிவுகள். இளநீரைக் குடிக்கிற வரை இனிப்பா, உப்பா என்பதன் புதிர் அவிழாத மாதிரிதானே அமைகிறது வாழ்க்கைப் பயணமும்..............
சேலைத் தலைப்பை எடுத்து வெயிலுக்குப் பாதுகாப்பாய் தலையைச் சுற்றிக் கொண்டு கூட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் நாகலட்சுமி.
(5)
மெதுவாக, எங்கே துவங்கினாரோ அந்த இடத்தருகே வந்து நின்று கை கூப்பி எல்லாம் முடிந்தது என்று சூசகமாக உணர்த்தினார் கேசவய்யங்கார். அவரவர் கையில் திணிக்க வந்த உபரி கரன்சி நோட்டுக்களை உலர்ந்த ஒரு புன்னகை மூலம் மறுத்துக் கொண்டார். ஏற்கெனவே ரசீது போட்டு வாங்கிக் கொண்ட தொகைக்கு மேல் தம்படி கூடப் பெறக் கூடாது, பெறவும் மாட்டேன் என்றும் சொன்னார். சிலர் அவரது கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். புது மண ஜோடி அவரது காலில் விழுந்து ஆசிர்வதிக்கக் கேட்டுக் கொள்ளவும், அடுத்த விஜயம் குழந்தை குட்டிகளோடு வரவேணும் என்று எல்லோரையும் சிரிக்க வைத்து வாழ்த்தினார்.
ஒருவழியாகக் கூட்டம் முழுக்க வாசல் பக்கம் செல்லவும், நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையுமாய் அலைந்த அந்த இளம்பெண் மட்டும் மற்றவர் நகரக் காத்திருந்த மாதிரி அருகே வந்து, "சாமி, ஒண்ணு கேட்கணும்" என்றாள். 'சொல்லம்மா' என்பது மாதிரி பார்த்தார்.
"ஏன் தாத்தா, சின்னச் சின்ன சிற்பத்தை எல்லாம் எப்படி சுவாரசியமாச் சொல்லிட்டு வந்தீங்க...தர்ப்பண சுந்தரி கிட்ட வரும்போது விடுவிடுன்னு தாண்டி வந்த மாதிரி இருந்தது...ப்ளீஸ்...கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்..." என்றாள்.
"முடிஞ்சு போச்சு, இன்னும் அதில் விளக்க என்ன இருக்கிறது", என்றார்.
அவள் ஏதோ கேட்கத் துவங்கவும், கைகளைக் கூப்பி "என் ஜென்ம பிராரப்தம், எல்லாம் முடிஞ்சு போச்சு, கேட்காதே சுந்தரியைப் பற்றி" என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.
திடுக்கிட்டுப் போன அந்த இளம்பெண், "சரி எனக்காக இந்த புத்தகத்தில் கையெழுத்தாவது போட்டுக் கொடுங்க" என்றாள். விரித்து வைத்த புத்தகத்தின் இடப்புறம் இருந்த புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் கேசவர் அதிர்ந்து போய், "யார் இது படத்துல, என் ரூபசுந்தரியா" என்று கன்னடத்தில் இரைந்து வெடித்து அழ ஆரம்பித்தார். தலையில் கையை வைத்துக் கொண்டு கைத் துண்டால் வாயைப் பொத்தியவாறு விம்மத் துவங்கினார்.
அக்கம் பக்கம் பார்த்தவாறு சட்டென்று சுதாரித்துக் கொண்டு துக்கத்தைத் தணித்துக் கொண்டவர், "கேசவா, பெருமாளே...யாரம்மா நீ, குழந்தே என் கிட்ட வா" என்றார்.
"முடியாது தாத்தா, நான் கிட்ட வரக் கூடாது, தீண்டத் தகாத பிறப்பு எனது" என்றாள்.
அதிர்ந்து போய் நின்றார் கேசவய்யங்கார். சட்டென்று துலங்கிவிட்டது எல்லாம்.
"ஈஸ்வரா, ஈஸ்வரா" என்று தலையில் அடித்துக் கொண்டவாறு, "எங்கே உங்கம்மா" என்றார்.
மல்லேஸ்வரம் சீனிவாச பெருமாள் கோவிலில் பட்டராக இருந்த காலங்கள் கேசவய்யங்காரின் கண் முன் வந்து நின்றது. ஒரே ஒரு பெண் குட்டி. ஆசை ஆசையாய் வளர்த்தார். இந்த க்ஷணம் நாட்டிய வகுப்பில் சேருவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம்பிடித்தாள் ரூபசுந்தரி. கல்லூரிக் காலத்தில் ஒருநாள் 'நாட்டிய நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன், இன்னிக்கு ரிகர்சல்", என்று சொல்லிவிட்டுப் போனவள் திரும்ப வரவில்லை. கேசவர் அலைந்து திரிந்ததுதான் மிச்சம்.
ஆறு மாதம் கழித்து ஒரு நள்ளிரவில் வந்து கதவைத் தட்டினாள், தனியாக அல்ல. அருகில் இருந்தான் மாதேஷ். தாலிக் கயிற்றைக் காட்டி அழுதாள்: " தெரியாம ஆயிடுத்து, மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணிடுங்கோப்பா", என்று கதறினாள். அவன் என்ன ஜாதி, என்ன கோத்திரம் என்று நிர்த்தாண்சட்யமாகக் கேட்டார்.
அவள் ஏதும் சொல்லுமுன், மாதேஷ் சொல்லிவிட்டான்.
"நீச ஜன்மங்களா, வெளியே போங்கோ, நிக்கக் கூடாது என் கண் முன்னால...." என்று கதவை அறைந்து சாத்தினார். அம்மாக்காரி அலமேலு அடித்துக் கொண்டு அடித்துக் கொண்டு அரற்றிப் பார்த்தாள். அவர் அசையவில்லை. அடுத்து அவள் வாழ்ந்த ஒன்றரை வருடங்களும் அவரிடம் ஒற்றை வார்த்தை பேசாமலேயே வைராக்கியமாய் இருந்து போய்ச் சேர்ந்தாள்.
தனியராய்ப் போன கேசவய்யங்கார் சிதறிப் போன வாழ்விலிருந்து மீண்டு வந்து இப்படி வரலாற்றுத் தடமாகிவிட்ட கோயிலுக்கு வழிகாட்டியாகக் குடியேறி உட்கார்ந்திருக்கிறார்.
"எங்கேம்மா கண்ணு, உங்கம்மா எங்கே" என்று மீண்டும் அந்த இளம் பெண்ணிடம் கேட்டார் கேசவய்யங்கார்.
"நான் உங்க பேத்தி இல்ல தாத்தா.." என்று நிறுத்தி அவரை நோக்கினாள் அவள். குழப்பமடைந்த அவரது கண்களைப் பார்த்தவாறு, "ரூப சுந்தரியோட மாணவி நான். சென்னையில் டான்ஸ் கத்துக்கிட்டேன் அவங்க கிட்ட....இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியாது..." என்றாள்.
ஏமாற்றமாக அவளை நோக்கினார் கேசவர்.
"சாரி தாத்தா...பஸ்ல தேடிட்டு இருப்பாங்க...நான் புறப்படுறேன்..." என்று வேகமாக அவரிடமிருந்து விலகி நடந்தாள்.
அவள் கோவில் வாசலை எட்டியபோது கூட வந்தவர்கள் ஐஸ் கடை, டீக்கடை என்று பிரிந்து அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க, இவள் நிதானமாக இளநீர்க்கடையில் போய் நின்றாள்.
"நல்ல தண்ணிக் காயா ஒண்ணு வெட்டிக் கொடுங்க அத்தை..." என்று நாகலட்சுமியைப் பார்த்து அவள் கன்னடத்தில் கேட்கவும், "அத்தையாம் அத்தை, இது கூட ஜோராத் தான் இருக்கு", என்று சொல்லிச் சிரித்தபடி பதமான இளநீர் ஒன்றை எடுத்துச் சீவத் தொடங்கினாள் நாகலட்சுமி.
அதற்குள் உடன் வந்தவர்கள் யாரோ அந்த இளம்பெண்ணிடம் வந்து சீக்கிரம் புறப்படச் சொல்லவும், அவள் நிதானமாக, "பல நாள் தேடிக் கிடைக்காத இடத்தையும் என் சொந்தங்களையும் இப்ப தான் கண்டுபிடிச்சிருக்கேன். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு. என் பெட்டியை மட்டும் இறக்கிக் கொடுத்துட்டு நீங்க எல்லாம் புறப்படுங்களேன்...." என்றாள்.
மதியச் சாப்பாடிற்காகக் கோவிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கேசவய்யங்காரின் முகத்தில் குழப்ப ரேகைகள் விடைபெறாமல் இருந்தன. ஒட்டும் உறவுமற்றுத் தன் பிடிமானத்தில் தானே நின்று கொண்டிருப்பதான கல் தூணாய்க் கம்பீரமாக இருப்பதாக நினைத்திருந்த அவரது வாழ்வை ஒரு குமரிப் பெண் குறுக்கிட்டு அசைத்து விட்டு நகர்ந்து விட்டாள். மனம் எங்கோ சிக்குண்டு தவிக்க, வெற்றுப் பாதங்கள் சாலையின் சூட்டினை ருசித்தபடி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தன.
தன்னை நினைத்தபடியே தான் இருப்பது அறியாமல் தன்னைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தபடி இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.
சொல்லித் தெரிவதில்லை - 1
மதிய உணவு முடித்து முதல் பீரியடு ஆரம்பிக்கப் போகிற சமயம். சுற்றிலும் வகுப்பறைக் கட்டிடங்களாக இருக்கிற அந்த பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் நடுவில் இருந்த மைதானத்து வேப்ப மரத்தடியில் அது நடந்துகொண்டு இருந்தது.
எதேச்சையாக வேப்பமரம் நோக்கி திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவி ஒருத்திதான் முதலில் அதைப் பார்த்து “ச்சீய்...இதப் பாருங்கடி..” என முகத்தை மூடினாள். கொஞ்சநேரத்தில் சுற்றி இருந்த வகுப்புகள் யாவும் அல்லோலப்பட்டன. “அய்ய்ய்யே...” என்றுதான் எல்லோரிடமிருந்தும் வார்த்தைகள் வெளிப்பட்டன. பார்த்தவுடன் கூச்சத்திலும், அதிர்ச்சியிலும், வெட்கத்திலும் திரும்பிய முகங்கள் ரகசியமாய் அங்கே திரும்பவும் பார்த்தன. “நல்லாப் பாத்துக்குங்கடி..” கிண்டல் செய்தனர். “போங்கப்பா..” என்று சிலர் பெஞ்சுகளில் தலை கவிழ்ந்துகொண்டனர். ஜன்னல்கள் அருகேயான பெஞ்சுகளில் இருந்தவர்களுக்குத்தான் தெளிவாக பார்க்க முடிந்தது. அந்த இடங்களுக்கு மவுசு கூடியது. “இப்படித்தானா....” என்று யாரோ சொல்ல சத்தமாய் சிரிப்புகள் எழுந்தன. “இப்படியில்ல..” என்று வேறு யாரோ சொல்ல பெரும் ஆரவாரமானது.
டீச்சர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். யாரும் இன்னும் வகுப்புகளுக்கு வராமலிருந்தார்கள். அவர்களுக்கான ஓய்வு அறையில் பரபரப்பு தெரிந்தது. வெளியே வந்து நிற்பதும், வகுப்பறையைப் பார்ப்பதும், வேப்பமரத்தடியை பார்ப்பதுமாக இருந்தனர். அவர்களும் சிரித்தனர். முகத்தை மூடினர். வெட்கப்பட்டனர்.
தமிழ் டீச்சர்தான் வெளியே வந்து “வாட்ச் மேன்... வாட்ச் மேன்” என்று கத்தினார்கள். எங்கேயோ இருந்து தலைதெறிக்க ஓடிவந்த, பள்ளியில் பணிபுரியும் ஒரே ஒரு ஆணான அவரும் அதைப் பார்த்தார். சங்கடப்பட்டு நின்றார். “எத்தன தடவ சொல்லியிருக்கேன். பள்ளிக்கூடத்துக்குள்ள அதுக பாட்டுக்கு நாய்ங்க உள்ளே வருது, போது, இஷ்டத்துக்கு திரியுதுன்னு... இப்ப பாருங்கய்யா.... கருமம்” என்று தலையில் அடித்தார்கள்.
வாட்ச்மேன் சில கற்களை பொறுக்கிக் கொண்டு அந்தப் பக்கம் விரைந்தார். எறிந்து பார்த்தார். இனி பலிக்காது. அதற்கான தருணம் தாண்டியிருந்தது. சிரித்தவர்களுக்கு இப்போது பாவமாயுமிருந்தது. மீண்டும் தமிழ் டீச்சர்தான் வெளியே வந்து “ஒங்களுக்கு கூறுபாடு எதுவும் கெடையாது... போங்கய்யா...” என்று வாட்ச்மேனை விரட்டினார்கள்.
டீச்சர்கள் வகுப்பறைகளுக்கு வந்தார்கள். நுழைந்தவுடன் முதலில் ஜன்னல்களையெல்லாம் வேகமாய் மூடினர். சென்ற பீரியடில் போர்டில் எழுதப்பட்டு இருந்த எழுத்துக்களை அழித்தனர். சின்னச் சின்னதாய் சிரிப்புகளும், முணுமுணுப்புகளுமாய் மாணவிகளிடம் அடர்ந்திருந்தது. அவரவர்க்கான புத்தகத்தை எடுத்துக்கொண்டு “சரி... பாடத்தை ஆரம்பிப்போம்” என்று முகங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அடக்கிவைக்க முடியாமல் மாணவிகள் ஹோவென்று சிரித்தனர். டீச்சர்களும் சிரித்தனர்.
பதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!
கடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லையே என இடையில் இரண்டு மூன்று முறை ஞாபகத்துக்கு வந்து, ‘சரி வேறு முக்கிய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பார்’ என நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் கான்சரினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தார் என்பது கடைசி வரை எனக்குத் தெரியாது. இன்று காலையில் அவர் காலமாகிவிட்டார் என தோழர்கள் கணேஷ் மற்றும் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சொன்னபோது அதிர்ச்சியாய் இருந்தது. புலன்களால் அறியப்பட்டு, அருகில் இருந்த மனிதராய் உணரப்பெற்ற ஒருவரின் இடம் இப்போது வெற்றிடமாக இருக்கிறது. மௌனம் என் தொண்டையில் அடர்த்தியாய் திரண்டு நிற்கிறது.
இடதுசாரிச் சிந்தனைகளோடு தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தவர் அவர். சூடான நடக்கும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவரது அடையாளம். வினவுத் தோழர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பார். தீண்டாமை, இந்துத்துவாவைச் சாடுவார். வாசிப்பவர்கள், பின் தொடருபவர்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருப்பார். சென்னை சென்ட்ரல் சிறைச்சாலை இடிக்கப்படப் போகிறது என்றவுடன் எழுதிய இந்த இரண்டு (1, 2) பதிவுகளும் அழுத்தமானவை. இப்படியானவர் சிலசமயம் ‘எமிலி ஜோலாவின் காதல் கதைகள்’ என்றும், ‘காவியம் படைத்த அரசியல் கவிஞன்’ என்றும் இலக்கியத்தின் பக்கமும் அழகாகவே எட்டிப் பார்ப்பார். ஆச்சரியமாய் இருக்கும்.
2008 டிசம்பரில் ஒருமுறை அவரை எழுத்தாளர் சங்க மாநாட்டில், சென்னையில் வைத்து சந்தித்து இருக்கிறேன். பிளாக் உலகத்தில் அப்போதுதான் நான் அடியெடுத்து வைத்திருந்த சமயம். தேடி வந்து சந்தித்தார். அவர் எழுதியவற்றை படித்து எனக்குள் இயல்பாக எழுந்திருந்த உருவமாக இல்லாமல் மெலியவராய், சின்ன வயதுக்காரராய் தோற்றமளித்தார். வலைப்பக்கங்களில் நான் நன்றாக எழுதுவதாகவும், தொடர்ந்து எழுதவேண்டும் எனவும் பாராட்டிவிட்டுப் போனார்.
அவர் சி.பி.எம் மாநில அலுவலகத்தில் முக்கிய ஊழியர் என்பது தாண்டி வேறு எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. செல்வபெருமாள் என்பது அவரது இயற்பெயர். கட்சிப்பணிகளுக்கிடையே சமயம் கிடைக்கும்போது வலைப்பக்கம் எழுதி வந்திருக்கிறார். 2005லிருந்து இதுவரை 338 பதிவுகள் எழுதியிருக்கிறார்! இன்றுதான் ப்ரொபைலில் பார்த்தேன். வயது நாற்பது என்று இருந்தது. தோழர்களிடம் தொலைபேசியில் விசாரித்தபோது குரல் தழுதழுக்க “மூனு பெண்குழந்தைங்க அவருக்கு. முதல் குழந்தை ஏழாம் வகுப்பு.... இரண்டாவது குழந்தை ஐந்தாம் வகுப்பு.... கடைசிக்குழந்தை ஒன்றாம் வகுப்பு..” என்றனர். ஈ.மெயிலில் அவர்கள் அனுப்பி வைத்த போட்டோவில், அவருக்குப் பின்னால் குழந்தை வரைந்திருந்த கோடுகள் கொண்ட சுவர் இருந்தது. அவரது கடைசிக்குழந்தையின் சிந்தனையாய் இருக்கலாம்.
பூட்டியிருந்த கதவைத் திறந்து பார்த்தது போலிருந்தது இன்று அவர் வலைப்பக்கம் சென்றபோது. நிறைய எழுதியிருக்கிறார். பதிவுகளை ஒவ்வொன்றாய் புரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வாசித்துக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருந்த ஒரு மனிதனின் ஆன்மா அங்கே இருக்கிறது.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்
இந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ஒன்றாகும். மராட்டிய மாநிலத்தின் சதாரா மாவட்டத்திலுள்ள நெய்கா(ம்)வ் என்ற சிற்றூரில் பிறந்த அவரது தந்தையார் காந்தோஜி நெவ்சே ஆவார். தாயின் பெயர் லட்சுமி.
வரலாற்றாசிரியர்கள் என்போர் (உண்மையைச் சொல்ல) அஞ்சாதவராக, நல்ல நெறியாளராக, சுதந்திர சிந்தனையாளராக, வெளிப்படையான உள்ளம் கொண்டவராக, உண்மையைத் தேடுபவராக, அந்த உண்மையை எந்த இன்னல் நேர்ந்தாலும் நிறுவத் தயாரானவராக இருத்தல் வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக, வரலாற்றாசிரியர்கள் (உண்மை) சிதைக்கப்பட்ட சித்திரங்களையே எடுத்துக் காட்டியுள்ளனர்; உண்மையை ஒருபோதும் அவர்கள் மக்களுக்குச் சொல்லவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் வரலாற்றைப் புனைவுக்கதைகளோடு குழப்பிக் கொள்ள நேர்கிறது. மக்களைப் பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ இயலாதோராக மாற்றிவிட்டனர் வரலாற்றாசிரியர்கள். பகுத்துப் பார்த்தறிய இயலாதவர்களாக அவர்களை முடக்கிவிட்டனர்.
கீழ்மட்ட மக்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றை முதன்முதலாகத் துவக்கிய சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது பிறந்த நாள் (ஜனவரி 3) ஏன் 'ஆசிரியர் தினமாக'க் கொண்டாடப்படுவதில்லை என்று நான் எப்போதுமே வியப்பதுண்டு.
மகாத்மா ஜோதிபா ஃபுலே அவர்களும், சாவிதிரிபாய் ஃபுலே அவர்களும் தான் சாதிய போக்குக்கும், பார்ப்பனிய-சாதிய கலாச்சாரத்திற்கும் எதிராகப் போர்க்கொடி உயர்த்தியவர்களில் முதன்மையானவர்கள். மராத்திய மண்ணின் இந்தத் தம்பதியினர் பார்ப்பனிய மரபான அம்சங்களுக்கும், சிந்தனைகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டினர். ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான இயக்கத்தில் சாவித்ரிபாய் சரிசம பங்காற்றினார். முறைப்படியான பாடசாலைக் கல்வி பெற்றிராதவர்தான் என்றபோதிலும், அவரைப் படிக்குமாறு தூண்டி ஊக்குவித்தார் மகாத்மா ஜோதிபா ஃபுலே. பின்னாளில் அவர் தமது கணவர் துவக்கிவைத்த பள்ளியின் முதல் பெண் ஆசிரியரானார். உயர்சாதி ஆசாரம் கடைப்பிடித்தவர்களது உதாசீனப் பார்வையை சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்த அவரது ஆசிரியப்பணி அத்தனை இலகுவானதாயில்லை. அவர்கள் பல முறை இவர் மீது கற்களை எறியவும், சாணத்தை வீசவும் செய்தனர். இந்த இளம் தம்பதியினர் எல்லாத் தரப்பு மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. பாடசாலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஒரு நாள் விடாது சாவித்ரிபாய் அவர்கள் மோசமான சங்கடங்களை எதிர்கொண்டார். கற்கள், சேறு மற்றும் கழிவுகளை அவர் கடந்து சென்ற போதெல்லாம் அவர்மீது விட்டெறிந்தனர். ஆனால், சாவித்ரிபாய் இவை ஒவ்வொன்றையும் அமைதியாகவும் அதே வேளையில் துணிச்சலாகவும் எதிர்கொண்டார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியில் இந்தியா இருந்த காலத்தில் கவனத்தை ஈர்த்த கவிதைகளைப் படைத்த முதல் தலித் பெண் - ஏன், முதல் பெண்மணி சாவித்ரிபாய் ஃபுலே அவர்கள்தான். ஆங்கிலத்தின் அவசியத்தையும், கல்வியின் இன்றியமையாமையையும் வலியுறுத்திச் சொல்லும் நவீனக் கவிதைகளின் தாய் சாவித்ரிபாய் ஃபுலே.
கல்வி கற்றுக் கொள், போ
சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள்
வேலை செய்யுங்கள்,அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள்
அறிவில்லாதிருந்தால்
இழந்து நிற்போம் அனைத்தையும் -
அறிவிழந்து போனால்
நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம்.
சும்மா இராதீர்கள், போய் இனியேனும்
கல்வியைப் பெறுங்கள்
ஒடுக்கப்பட்டோர் மற்றும் கைவிடப்பட்டோர்
அனைவரது
துன்பங்களையும் போக்குங்கள்.
படிக்க உங்களுக்கு வாய்த்துள்ளது ஒரு பொன்னான நேரம்
எனவே படியுங்கள்,
தகர்த்தெறியுங்கள் சாதியச் சங்கிலிகளை
வீசியெறிங்கள் பார்ப்பனிய வேதங்களை
- சாவித்ரிபாய் ஃபுலே
தீண்டப்படாதோரின் நிழல்களைத் தீண்டினாலும் தீட்டு என்று கருதப்பட்டுவந்த காலத்தில் தீண்டப்படாதோரின் தாகத்தைத் தணிக்க தவித்த வாய்க்குத் தண்ணீர் தரக்கூட மனமற்றிருந்த சமயத்தில், சாவித்ரிபாய் ஃபுலே அவர்களும் மகாத்மா ஜோதி ஃபுலே அவர்களும் தீண்டப்படாதோருக்காக தங்கள் இல்லத்தினுள்ளேயே கிணறு எடுத்தனர். இதைப் பார்த்தாவது பார்ப்பனர்கள் மனம் திருந்தி தீண்டப்படாத மக்கள்பால் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வார்களா என்று பார்த்தனர். ஆயினும், இது நடந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்றும் கூட தலித் மக்கள் தண்ணிர் உரிமைக்குப் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது.
இழந்துபோன சமூக, கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டுமானால் கல்வி அவசியம் என்பதை மிகச் சரியாகச் சிந்தித்ததால், ஃபுலே தம்பதியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி போதிக்க முன்கை எடுத்தனர். சாவித்ரிபாய் ஃபுலே 1852ல் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. விதவைப் பெண்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற அக்கால சமூக வழக்கத்திற்கு எதிராக மும்பயிலும், புனேவிலும் நாவிதர்களின் வேலைநிறுத்தமொன்றை வெற்றிகரமாக நடத்துமளவு அவர் தீரம் கொண்டிருந்தார்.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு தீர்விற்கான பல ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் அவர்கள் இருவரும் இலவச உணவு பரிமாறினர். பாதிப்புற்ற மக்களிடையே பணியாற்றிய சாவித்ரிபாய் ஃபுலே, பிளேக் நோயால் தாக்குண்டிருந்த ஒரு குழந்தைக்கு உதவப் போன இடத்தில் கிருமி தொற்றிக்கொண்டதால் மரணமடைந்தார்.
ஜான்சி ராணி, லட்சுமிபாய் போன்றோர் பெயரும், காந்தி-நேரு குடும்பத்தினரின் மனைவியர் பெயர்களும், தோழியர் பெயர்களும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றிருக்க, சாவித்ரிபாய் ஃபுலே போன்ற சரித்திர நாயகியின் பெயர் எப்படி விடுபடப் போயிற்று என்ற கேள்வியை, சிந்திக்கும் திறனுள்ள எவரும் கேட்கவே செய்வர்.
இருண்ட காலத்தில் உன்னதமான ஆசிரியப் பணியைத் துணிச்சலோடு மேற்கொண்ட சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது சிறப்பினை இந்தியப் பெண்கள் சமூகம் அறியாது. இந்தியப் பெண்கள் கடக்கக் கூடாதென மன்னிக்கவே முடியாத எல்லைக் கோடுகள் கிழிக்கப்பட்டுவந்ததை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிந்தவர் அவர். அதற்காக இன்றைய பெண்கள் சமூகம் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும்.
(பர்தீப் சிங் ஆட்ரி அவர்களின் கட்டுரையை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் எஸ்.வி.வேணுகோபாலன்)
கடவுள் தப்பித்தான்!
சில நமிடங்களில் நாசமாகிப்போனது சர்வமும். 7.8 ரிக்டர் நடுக்கம் 200000 த்திற்கும் மேலான மக்களை அழித்துப் போட்டிருந்தது. அன்பு, காதல், அழகு, கவிதை, கதை, விளையாட்டு, போட்டி, பொறாமை, விரோதம், கோபம், திறமை, சாதனை, நம்பிக்கை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாயிருந்தது. மூக்கில் துணி கட்டிய இருவர் இடிந்த சுவருக்குக் கீழே தெரிந்த ஒரு சிறுவனின் பாதத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். சகிக்க முடியமால் கண்களை பொத்திக்கொண்டால் காற்றெல்லாம் அழுகிய பிணவாடை அடிக்கிறது. கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் இழந்து நிற்கிறது நிலம். நாமும் கூட செத்துப் போயிருக்கலாமே என உயிர் தப்பியவர்கள் பைத்தியமாக கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
எல்லாம் அறிந்த கடவுள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் முன்கூட்டியே அந்த பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தான்.
வெற்றிலை வாழ்க்கை
வெற்றிலை இடிப்பதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு எங்கேயோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்கள் பாட்டி. பேத்திக்கு பாவமாயிருந்தது. கல்லூரிப் பாடபுத்தகத்தை கீழே வைத்துவிட்டு பாட்டியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
என்ன வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் என்றுதான் தோன்றியது. “பொண்ணு, தண்ணி கொண்டு வா” என்று தாத்தா கூப்பிட்டால் தட்டுத்தடுமாறி எழுந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு பாட்டிதான் செல்ல வேண்டும். காத்திருந்து தாத்தாவின் கையில்தான் கொடுக்க வேண்டும். கீழேவைத்துவிட்டால் அவ்வளவுதான். காலால் சொம்பை எட்டிவிட்டு கூப்பாடு போடுவார். கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்வார். சில மாதங்களுக்கு முன்பு தாத்தா சாகும்வரை இந்தப் பாடுதான். எதற்கெடுத்தாலும் சண்டைதான். பாட்டியை அடித்து விரட்டி விடவும் செய்வார். எத்தனைமுறை மகன், மகள் வீடுகளில் வந்து பரிதாபமாக பாட்டி அடைக்கலமாகி இருக்கிறார்கள். அம்மாவிடம் கேட்ட கதைகளும், சிறுவயதிலிருந்து பார்த்த காட்சிகளும் ஒவ்வொன்றாய் ஓட ஆரம்பித்தன.
வாஞ்சையோடு பாட்டியின் அருகில் சென்று கட்டிப் பிடித்தாள். “என்ன ஆச்சி.. ஒருமாதிரியா இருக்கீங்க...?” என்றாள்.
“இல்லம்மா... வெத்தலய நா இப்படி இடிச்சுக்கிட்டு இருந்தா ஒங்க தாத்தா ஆசையா பொண்ணு எனக்கும் ஒரு வா தான்னு கைய நீட்டுவாவ ...” என்று தழுதழுத்தார்கள்.
பாட்டியின் கண்ணீர், இடித்த வெற்றிலைக்குள் விழுந்தது.
எங்க போச்சு?
தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அம்மா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களை சம்மதிக்க வைத்து இந்த நகரத்திற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் கூடவே இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள முடிந்தது. இன்று அவனும், அவளும் அவரவர் அலுவலகங்களுக்கு கிளம்ப, குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர். வீட்டைப் பூட்டிக்கொள்ளவும், சமைத்திருந்த மதிய உணவையும், ஃபிளாஸ்கில் போட்டு வைத்திருந்த டீயைப் பற்றியும் அம்மாவிடம் சொல்லப்பட்டு இருந்தது. ரிமோட்டை இயக்கி எப்படி டி.வி பார்ப்பது என்றும், எந்தெந்த நம்பர்களில் எந்தெந்த சானல் என்றும் கூட விளக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தவிப்பாய் இருந்தது. வீட்டில் போன் இருந்தாலாவது அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. ஊரில் பேசவும், பழகவும் வீடுசுற்றி மனிதர்கள் இருப்பார்கள். தனியாய், உள்ளே பூட்டிக்கொண்ட வீட்டில் அம்மா என்ன செய்வார்களோ என உறுத்திக் கொண்டே இருந்தது.
சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும், நேரே வீட்டிற்கு போனான். குழந்தைகள் வந்திருந்தனர். அம்மா வாசலருகே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்னம்மா, எப்படியிருந்தீங்க.... என்ன சீரியல் பாத்தீங்க” என்றான் சிரித்தவாறு.
“எய்யா... முன்னால் எல்லாம் ஒங்க வீட்டுல எவ்வளவு சிட்டுக்குருவி உண்டு. ஜன்னல் வழியா அதுபாட்டுக்கு உள்ளே வந்து போகும். துணிக் காயப்போட்டு இருக்குற கொடியில வரிசையா உக்காந்து கத்தும். இந்த புங்க மரத்துல எப்பப் பாத்தாலும் அடைஞ்சு கிடக்கும். இப்ப ஒன்னையும் காணம். எங்க போச்சு?” என்றார்கள் வருத்தமாக.
டாம் அன்ட் ஜெர்ரி
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
கதவடியின் சின்ன இடைவெளிக்குள் உடலைக் குறுக்கி எலி நுழைந்து போனது. துரத்தி வந்த பூனை, வேகத்தை மட்டுப்படுத்த முடியாமல் கதவில் முட்டி அங்கே வீழ்ந்தது. நீள் மேசை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில் தாவிய எலி, சரியாக ஒருவன் கையிலிருந்த ஸ்பூனில் மோதியது. பதறியவன் அவசரமாய் எழுந்திரிக்க, ஐஸ்கிரீம் சிதறி ஒருத்தியின் முகம் பூராவும் வழிந்தது. தெறித்த ஸ்பூனோ, ஜன்னல் வழியே வந்த பூனையின் தலையை சரியாக தாக்கியது. ஆத்திரத்தில் பூனை, ரப்பர் போல வளைந்து விருட்டென்று பாய, எலியோ சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஒருத்தியின் கொண்டைக்குள் தாவிச்சென்று ஒளிந்து கொண்டது. சாப்பாட்டு மேஜையில் விழுந்த பூனை கண்டு எல்லோரும் ஓட, களேபரமானது. எலிக்கொண்டை பார்த்து ஊன் தெரிய உர்ரென்று முறைத்த பூனை திரும்பவும் துரத்த, தன்னைத்தான் பூனை துரத்துவதாய் அந்தப் பெண் வீல் வீலென்று கத்திக்கொண்டே ஓடி, படிகளெல்லாம் இறங்கி ஓடி, வீடு விட்டு வெளியே ஓடிக்கொண்டு இருந்தாள். கொண்டையில் இருந்தபடி ஹாஹாவென சிரித்தபடியே பூனைக்கு எரிச்சலூட்டியது எலி. மரத்தடியில் ஊஞ்சல் போட்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு குரங்கின் மீது தடுக்கி விழுந்தாள் அந்தப் பெண். விழித்த குரங்கு ‘ஐ லவ் யூ’ என கைகளை விரித்து இன்பமயமாய்ச் சொல்ல, அவள் மயங்கி விழுந்தாள். கொண்டையிலிருந்து எலி தலையெட்டிப் பார்த்தது. அதனைப் பிடித்துக் கொண்டு, “இங்கே நீ என்ன செய்கிறாய் பொடியா” என தகரக் குரலில் குரங்கு கேட்டது. துரத்தி வந்த பூனையோ, எலியைப் பிடிக்கிறேன் என்று குரங்கின் வாலை மிதித்துவிட்டது. “மடையா” என குரங்கு துரத்தியது பூனையை. அதன் கைப்பிடிக்குள் எலி இருந்தது. குதி குதித்து பூனை ஓடியது. மரங்கள், செடிகள் எல்லாம் வண்ண வண்ணமாய் பின்னுக்கு நகர்ந்தன. ஒரே ஒட்டம்தான். கடைசியில் மலையுச்சியில் போய் நின்று பூனை விழித்தது. குரங்கும் அதனருகே வேகமாய் வந்தது. பின்னால் அருவி. “செத்தேன்” என பூனை குதித்தது. குரங்கும் அப்படியே நிலைதடுமாறி குதிக்க நீரின் வழியே கிழே பாய்ந்தனர். “ஐயோ”வென குரங்கு கைகளை விரிக்க, எலி நழுவியது. ஒருவர் பின் ஒருவராய் தண்ணீரில் விழுந்தனர். தண்ணீரில் இருந்து முதலில் தலையெட்டிப் பார்த்த எலி, அருகில் சென்ற மரக்கிளையின் மீது தாவி ஏறிக்கொண்டது. குரங்கோ ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என ஒரு சின்னப் பாறையின் மீது உட்கார்ந்து கொண்டது. எலி மரக்கிளையோடு சென்று கரை ஒதுங்கியது. நிம்மதியாய் மூச்சுவிட்டது. நனைந்து போயிருந்த அதன் மேலிருந்து தண்ணீர் வழிந்தது.
இப்போது சிறுவனும் நனைந்து போயிருந்தான். அவன் முடியிலிருந்தும், மூக்கின் நுனியிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டு இருந்தன. “டாம் எப்படியும் வந்துவிடும்” என அவன் வாய் முணுமுணுத்தது. அவ்வாறே நடந்தது. எங்கேயோ ஒரு இடத்தில் நீரின் மேல் சட்டென்று தலைதூக்கிய பூனை “எலியே, நீ எங்கு சென்றாலும் விடமாட்டேன்” என கறுவியது.
மார்க்சிய ஜோதி அணைவதில்லை!
ஜோதி பாசு! மிகவும் நெருக்கமான, எப்போதும் கூடவே இருக்கிற ஒரு சக்தி போலவே இந்த பேர் புலப்படுகிறது. அபூர்வமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அறிய முடிகிறது. ஆரவாரமற்ற, அமைதியான, ஆறுதலான ஒரு உருவமாய் அருகே இருக்கிறார். |
அவரது போராட்டங்கள் நிறைந்த இளமைக் காலம் பற்றி, நீண்டகால முதலமைச்சராயிருந்த சாதனை பற்றி, இந்திய அரசியலில் கூட்டணி ஆட்சியை நடைமுறைப்படுத்திய திறனையும், தெளிவையும் பற்றி நிறைய சொல்ல முடியும். நேருவின் காலத்திலிருந்து மூன்று தலைமுறை அரசியலைத்தாண்டி, நான்காவது தலைமுறைக்குள் காலடி வைத்தபிறகும் களங்கம் சுமக்காமல் நெருப்பாகவே இருந்திருக்கிறார்.
இந்த அரசியலில் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிகாரத்தில் நெடுநாள் இருந்துகொண்டு இப்படியொரு பேரை பெறுவது சாதாரணமல்ல. ‘சத்தியசோதனை’க்கு சற்றும் குறைந்ததல்ல.
முதலாளித்துவ பாராளுமன்ற அமைப்பிற்குள் இருந்துகொண்டு, அதை எதிர்த்து போராடியபடி, சாத்தியப்பட்ட அளவு மக்களுக்கு அவரால் செய்ய முடிந்தது. மண்ணும், மனிதர்களும் அவரை உற்றுப் பார்த்தனர். கேட்டனர்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் அவர்
கம்பீரமாக உயர்த்திய கரங்கள், தேசத்தில் அலைஅலையாய் பரவின.
இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு உந்துவிசையாக இருந்தார். ‘மாறும் என்பதைத் தவிர அனைத்தும் மாறும்’ என நம்பிக்கையோடு காலத்தைப் பார்த்த இளைஞர்களின் முன்னால் நடந்து கொண்டு இருந்தார். இடதுசாரிகளின் குரலையும், அரசியலையும், இந்த தேசத்தில் பரவலாக்கிய மார்க்சீய தூதன் அவர்.
எத்தனை போராட்டங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை பேச்சுக்கள், எத்தனை நெருக்கடிகள், எத்தனை சாதனைகள், எத்தனை பயணங்கள், எத்தனை வருடங்கள்.... போதும்... போதும்... அவர் ஓய்வெடுக்கட்டும்.
‘மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரமாயிரம் மெழுகுவர்த்திகளை ஓளிரச் செய்யலாம். அதனால் மெழுகுவர்த்தியின் ஆயுள் குறைந்துவிடப் போவதில்லை’ என்னும் கவுதம புத்தரின் வார்த்தைகள் இந்த நேரத்தில் மிகுந்த அர்த்தமுள்ளவையாய் இருக்கின்றன.
மார்க்சீய ஜோதி ஒருபோதும் அணையாது. அதன் தொடர் ஒட்ட வெளிச்சத்தில் காலம் முன்னே நீண்டு செல்கிறது.......
வரலாறு அவர்! “இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார், இப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்திருக்கிறார்..” என இளையதலைமுறைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் அவர் எப்போதும் அடையாளமாக இருக்கப் போகிறார்!
சினிமா ரசிகன்
அப்போது வெளிவந்த அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தவரின் கண்களை யாரோ பிடுங்கி இருந்தார்கள். கலவரம் எதுவும் ஏற்படுமோ என அச்சமாய்த்தான் இருந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது வெளிவந்த இந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் அதே இடத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. இவரது ஆண்குறியை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.
இப்படியும் மூன்று சினிமா விமர்சனங்கள்!
அவதார்:
ஒபாமாவை நாயகனாக அவதாரம் எடுக்க வைத்த ஆங்கிலப்படம். தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அமெரிக்கக் கப்பல் பொருளாதாரச் சரிவால் மூழ்கியதை எடுத்த படக்குழுவினரின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு. படம் தயாரித்துக் கொண்டு இருக்கும்போதே ஒபாமாவுக்கு பரிசு கிடைத்திருந்தது கூடுதல் சிறப்பு. பிரம்மாண்டமாக இருக்கிறது. தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒபாமாவினர் செய்யும் சாகசங்களும், தந்திரங்களும் அதிரவைக்கின்றன. கடைசிக் காட்சியில் ஒபாமா, செல்போனை எடுத்து “என்ன, இன்னும் முப்பதாயிரம் பேர் தேவைப்படுகிறார்களா.” எனச் சொல்வதுடன் படம் முடிவடைகிறது. இதன் அடுத்த பாகம் வரக்கூடும். இன்னொரு பரிசும் ஒபாமாவுக்கு உண்டுதான் போலும்.
வேட்டைக்காரன்:
பா.ஜ.கவின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறார் கதாநாயகர் மோகன் பகவத். அத்வானியுடனான மோதல்தான் கதையின் முக்கியமான பகுதி. படத்தின் முதற்பகுதியில் அத்வானி முரண்டு பிடித்தாலும், பிற்பகுதியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெள்ளைக்கொடி காட்டுகிறார். வெளியில் அது சமாதானம் போலத் தெரிந்தாலும், சரணாகதி என்பது பார்வையாளர்களுக்குப் புரிகிறது. அடைக்க முடியாத பெரிய ஓட்டையை பா.ஜ.கவில் வேட்டைக்காரன் போடுகிறான்.
நான் அவன் இல்லை – 3 :
படம் எடுத்ததே தெரியாமல் திடுமென ரிலீசான படம். ஏற்கனவே இந்தப் படத்தின் தலைப்பும், அதில் சொல்லப்படுகிற செய்தியும் பரபரப்பானவை என்பதால் இந்த மூன்றாவது படமும் எகிறுகிறது. கதாநாயகனாக என்.டி.திவாரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் துவக்கத்திலேயே அப்பாவிப்பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் திவாரி. அப்பாவிதானோ என நினைப்பதற்குள் வில்லத்தனமான காட்சிகள் துவங்குகின்றன. தள்ளாத வயதிலும், அவர் தறிகெட்டு ஆடுவது கண்டு அதிர்ச்சி ஏற்படுகிறது. கையும், களவுமாக சிக்கியவுடன் ‘இதெல்லாம் சும்மா, செட்டப்’ என அலறுகிறார். கிளைமாக்சில் சொந்த ஊருக்கு ரகசியமாக திரும்புகிறார். அங்கும் “நான் அவன் இல்லை” என்கிறார். ஊரே சிரிக்கிறது.
(நண்பர் கணேஷ் எழுதிய கற்பனை விமர்சனங்கள் இவை!)
யாருங்க அந்த பிளாக்கர்?
எனக்கு மிக நெருக்கமான நண்பர் போல இருந்த ஒருவருடன் சிரித்தபடியே வந்தார் அவர். “என்ன எப்படியிருக்கீங்க...” என்று மிக சரளமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார். எனக்கு அவரை சுத்தமாகத் தெரியவில்லை. என் குழந்தைகள், அவர்களின் படிப்பு... என வரிசையாகக் கேட்டுக்கொண்டே இருந்தார். தயங்கித் தயங்கி சொல்லிக்கொண்டே வந்தேன்.
கறுப்பாய், சுமாரான உயரத்தில் இருந்தார். கிருதாக்கள் நீண்டு அடர்த்தியாக இருந்தன. அந்த அளவுக்கு மீசை சிறப்பாக இல்லை. வழுக்கைத் தலையில் முன்னால் கொத்தாய் முடியிருந்தது. குரல் மட்டும் பழக்கமானதாய் இருந்தது.
ஒருக் கட்டத்தில் மெல்ல, “நீங்க... யாரு....” என கேட்டும் விட்டேன். “என்னைத் தெரியலையா” என்று ஹோவென்று சிரித்தார். அவரருகில் இருந்த என் நண்பர் (?) அவரும் சிரித்தார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. இதுபோல அடிக்கடி நிகழ்ந்தும் விடுகிறது. “தெரிந்த மாதிரியும் இருக்கிறது.... தெரியாத மாதிரியும் இருக்கிறது....” என எதோ உளற ஆரம்பித்தேன். திரும்பவும் அவர்கள் சிரித்தார்கள்.
போனில் பேசிய பிளாக்கர் யாரோவாக இருக்க வேண்டும் என புரிதல் வந்தது. ‘யாராக இருக்கும்.... ராகவனா.... கும்க்கியா.... இல்லை. கும்க்கியைப் பார்த்திருக்கிறேன்.... ஜம்மென்று இருப்பார். ராகவனையும் போட்டோவில் பார்த்திருக்கிறேன். சிரித்தமுகமாய் இருப்பார். வேறு யார்.....? ஆனால் இந்தக் குரல் கேட்டு இருக்கிறேனே...’ என் தவிப்பை உணர்ந்த மாதிரி இருந்தது. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
“சமீபத்தில் நீங்கள் கடல் பற்றி எழுதியிருந்தீர்களே.... அதுபற்றி நாம் பேசினோமே.... இப்போது ஞாபகம் வருகிறதா..?” என்றார். நானும் “ஆமாம், ஆமாம்...” என்று சொல்லிக்கொண்டே யோசித்துப் பார்த்தேன். யாரென்று மட்டும் தெரியவில்லை. சங்கடமாயிருந்தது. அவர்கள் சத்தம் போட்டு சிரித்தார்கள்.
கண்களைத் திறந்து பார்த்த போது காணாமல் போய்விட்டார்கள்.
தயவுசெய்து, வந்த பிளாக்கர் யாரென்று அவரேச் சொல்லி விட்டால் புண்ணியமாய் போகும்.
மாதவராஜ் பக்கங்கள் – 19
“நிறைய பேர் செத்துக்கொண்டு இருக்கிறோம். உணவு இல்லை. தண்ணீர் இல்லை. போன் இல்லை. எதுவும் இல்லை. எங்களை யார் காப்பாற்றுவார்கள்” என ஒரு இளைஞன் கதறுகிறான். ஹைட்டி என்னும் அந்த சிறு தீவீல் நடந்த பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிகமானோர் இறந்து போயிருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் சரியாக இல்லை. எல்லா இடங்களிலும் மனித உடல்கள். ஹைட்டியின் அதிபர் பிரவல் ‘சேதங்களும், இழப்புகளும் கற்பனை செய்ய முடியாதவை” என்கிறார். சர்வதேச சமூகத்தின் உதவியை இறைஞ்சியபடி ஹைட்டி நிற்கிறது. பூமியின் உள் மடிப்புகளில் ஏற்படும் சிறு அசைவுகள் அதன் மேற்பரப்பில் எவ்வளவு பெரிய நாசத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதனை அறியமுடியாத மனித சமூகம் பெரும் இழப்புகளை சந்தித்தபடியே யுகங்களைத் தாண்டி பயணம் செய்து கொண்டு இருக்கிறது!
நேற்று அதிகாலையிலேயே பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று காலையில்தான் துயரச்செய்தி தெரியும். ‘இப்படித்தான் நாம் இருக்கிறோமா’என ஒருவித அவமானத்துடன் கனத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். செல் இசைக்கிறது. எடுக்கிறேன். “ஹேப்பி பொங்கல்” என்கிறார் திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பர். நானும் பதிலுக்கு தமிழில் சொல்கிறேன்.
வீட்டுக்கு வெளியே பொங்கல் வைக்க வேண்டுமென்று ஆசையெல்லாம் கதைக்காகவில்லை. ஒவ்வொரு தடவையும் சொல்லிப் பார்ப்பேன். அம்முவுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது. சென்னையின் வளர்ப்பு அவள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை, “ரொம்ப ஆசைப்படுறீங்க, இந்த தடவை நீங்க சொல்ற மாதிரி வச்சிருவோம் ஆனா ஒங்க பாடு!” என்றாள். அதன்பிறகுதான் அதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. அடுப்புக்கு செங்கல்களை மூன்று பக்கமும் வைத்துவிடலாம். ஆனால் விடாமல் எரியும் நெருப்புக்கு விறகு? காலையில்தான் நிலைமை உறைத்தது.
அப்போது எங்கள் வீட்டிற்கு அருகில், இப்போது போல நிறைய வீடுகள் வரவில்லை. அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கினோம். வீட்டின் பின்பக்கத்தில் கொஞ்சம் சிரட்டைகள் இருந்தன. காய்ந்து போன தென்னை மட்டையும் கிடைத்தன. ஒருவாறு தேற்றி, அடுப்பு பற்ற வைத்து பொங்க ஆரம்பித்தோம். மகளும், மகனும் சுற்றி உட்கார்ந்து எரிய எரிய விறகு வைத்தார்கள். பொங்கல் அரிசி, வெல்லம், இதர சமாச்சர்ரங்கள் என அம்முதான் அங்குமிங்குமாய் சிரமப்பட்டாள். கண்களில் எரிச்சல் உண்டாக்கியது புகை. ஆனாலும் சந்தோஷமாய் இருந்தது. பொங்கலும் சரியான பக்குவத்தில் வரவில்லை என்பது வேறு விஷயம். பக்கத்து வீடுகளுக்கு ‘எங்கள் வீட்டுப் பொங்கல்’ என்று கொடுப்பதற்கு தயக்கமாகி விட்டது.
அடுத்த பொங்கலுக்கு வெளியே வைத்து பொங்க வேண்டாம் என அம்மு சொல்லிவிட்டாள். ‘எல்லாவற்றுக்கும் நீங்களே இருந்து, முதலிலேயே சகல ஏற்பாடுகளும் செய்வதாக இருப்பின் சரி’ என்றாள். என் பக்கம் பந்தை நகர்த்திவிட்டாள். நான்கு வருடங்களாக அப்படியே இருக்கிறது அந்தப் பந்து. கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் இதோ பொங்கிக் கொண்டு இருக்கிறது.
அருகில் என்.ஜீ.ஓ காலனியிலிருந்து சில இளைஞர்கள் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தார்கள். “சார். ஒவ்வொரு தடவையும் பொங்கல் விழான்னு குழந்தைகள் டான்ஸ், போட்டிகள் வைப்போம். இந்த தடவை பட்டி மன்றம் வைக்கலாம் என்று இருக்கிறோம். நீங்கள் பேச வரவேண்டும்” என்றனர். நான் பட்டிமன்றம் பேசுவதெல்லாம் கிடையாது என மறுத்து, காமராஜ் மற்றும் சில நண்பர்கள் பேசுவார்கள் என்றேன். “என்ன தலைப்பு” என கேட்டேன். நீங்களே சொல்லுங்கள் என்றனர். ‘நவீனச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறதா, கொண்டாடவில்லையா’ என்பது போல வைக்கலாமே என்றேன். பிடித்துப் போயிருக்க வேண்டும். சரியென்று ஏற்பாடு செய்யப் புறப்பட்டு விட்டார்கள். முன்னர் விவசாயத்தை கொண்டாடினோம். விவசாயிகளைக் கொண்டாடினோம். இப்போது விவசாயிகளை யார் கொண்டாடுகிறார்கள். மாடுகள் எல்லாம் போய் டிராக்டரும் இன்னும் கதிர் அறுக்கும் மெஷின்களும் வந்து விட்டன. மாட்டுப் பொங்கலில் என்ன அர்த்தம் இருக்கிறது. நண்பர்கள் இன்று மாலை பேசுவதை கேட்கும் ஆவலில் இருக்கிறேன்.
இதோ ஹீ... ஹீயென்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் பொங்கல் கொண்டாட்டமாக ஆரம்பமாகிவிட்டது. நான் வா.மு.கோமுவின் “சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். இன்னும் 70 பக்கங்கள் போல படிக்க வேண்டியிருக்கிறது.
“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!”
வாய்விட்டு சிரித்ததைப் போல, இன்றைய சாயங்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஒரு மழை பெய்து நின்றது.
ஈரம் பாவிய வெளி சிலிர்த்துப் போய் நிற்கிறது. எல்லாம் சட்டென புதுசாய் தெரிகிறது. சின்னதாய் கட்டிக் கிடந்த நீரில் கருங்குருவிகள் இரண்டு தலையை முக்கி, முக்கி உடலை உதறிக்கொண்டிருக்கின்றன. கலைந்து போயிருந்த வாசல் கோலங்களின் வர்ணங்களில் அடையாளம் தெரியாத ஒரு மந்தகாசம் பூத்திருக்கிறது. சிமெண்ட் சாலை போடப்பட்டு இருக்கும் அடுத்த தெருவிலிருந்து “ஆத்து மேட்டுல.... ஒரு பாட்டு கேக்குது” என ஸ்பீக்கர் செட் யாருக்கோ பாடுகிறது.
கரும்புகள் சிலவற்றையும், மஞ்சள் குலைகளையும் கட்டிவைத்த சைக்கிளில் ஒருவர் தெருமுனையில் திரும்புவது தெரிகிறது.
“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!”
நடப்பதெல்லாம் நன்மைக்கே..............
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்......என்ற பழைய திரைப்படப் பாடல், கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் மிக பிரசித்தம். நினைப்பது நடப்பது இருக்கட்டும், நினைக்கிறபடி நடக்க முடிகிறதா நம்மால் என்று கொஞ்சம் அசைபோடுவோம் வாருங்கள். சொல்வது சுலபம். சொன்னபடி நடப்பது சிரமம் என்பது முதுமொழியல்லவா. வேறு எதற்குப் பொருந்துமோ, நடை விஷயத்திற்கு இது கனப் பொருத்தம்.
நடை வாழ்வின் முக்கிய அங்கமானது. தளர்நடை போடும் குழந்தைப் பருவத்தில் அழகியலாகத் துவங்குகிற நடை அப்புறம் நடக்க சாத்தியமான கட்டம் வரை எத்தனை நடை, எத்தனை விதமான நடை...ஒரு நடை போய்விட்டு வந்துவிடலாம் என்று துவங்கி, நடையாய் நடந்தும் கிடைக்காத வேலை, படியாத ஆசாமி, நடவாத காரியம், வாய்க்காத கடன், குதிராத வரன்....என்று சோர்ந்து விழுகிற வரை நடக்கின்றனர் மனிதர்கள். கவலைகளிலிருந்து விடுதலை நோக்கி நடக்கும் நடை ஒருபுறம், விடுதலையை நோக்கிய திசையில் இன்னொரு தளையில் சிக்கவைக்கும் நடை ஒரு புறம். ஆனாலும், தவிர்க்க முடிவதில்லை இந்த நடையை.
நடையினால் ஆய பயனென் கொல் என்று வள்ளுவர் மாதிரி ஒரு கேள்வி போட்டுத்தான் பார்ப்போமே. நடை கால்களுக்கு வலு சேர்க்கிறது. தசைகள், மூட்டு எலும்புகள் வலுப்படுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது. புத்துணர்ச்சி கிடைக்கிறது. நுரையீரல்களுக்கும் சுவாச வேலை இலகுவாகிறது. எவ்வளவிற்கு நடக்கிறோமோ, அவ்வளவிற்குண்டான பயன் கிடைக்கவே செய்கிறது.
ஆனால், பெரும்பாலும் நடை என்பது, நடைபயிற்சி என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிற பொருளில் ஏதோ நாற்பது நாற்பத்தைந்தைக் கடந்த மனிதர்களுக்குத் தான் என்பது போல புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படியில்லை, வயது வேறுபாடின்றி எந்தப் பாலரும் நடக்கலாம். நடை அவசியம் என்று மருத்துவரால் அறிவுறுத்தப்படுகிறவர்கள், அன்பு கூர்ந்து மருத்துவர் சொல்படி 'நடப்பது' நல்லது.
நடப்பதை ஓர் உற்சாக அனுபவமாக எடுத்துக் கொண்டு நடப்பதுதான் கூடுதல் பயனளிக்க வல்லது. கடனுக்காக நடப்பது (இங்கு சிலேடை எதுவும் பயன்படுத்தப்படவில்லை, கடனுக்காக என்றால் கடமைக்காக என்ற பொருளில்) - இயந்திரகதியாக நடப்பது அத்தனை பலனளிக்காது. அதாவது, கடிகாரத்தில் ஒரு கண், உடனே மனத்தில் நாற்பத்தைந்து நிமிட நடைக்கான ஓர் உத்தரவு, சரக் சரக் சரக்கென்று இராணுவ ரீதியான நடை, எப்பொழுதடா நாற்பத்தைந்து நிமிடம் முடியும் என்று இடையே இடையே கடிகாரத்தில் மீண்டும் ஒரு கண்....என்று ஒரு தவிர்க்க முடியாத கடனாக முடித்துவிட்டு வருவது உடலுக்கோ, உள்ளத்திற்கோ அத்தனை புத்துணர்ச்சியைத் தராது. அந்த நடை நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கிய நடையாக இராது, கடந்த காலக் கசப்பான தடயங்களை நோக்கிய அலுப்பான நடையாக மாறிவிடுகிறது. நடையின் நோக்கமே இழந்த வசந்தங்களை மீட்பதான தாகத்துடன் இருந்தால் ஒரு சுருதி சுத்தமான பாடல் போல அவ்வளவு சுகந்தமாக அமையும்.
இத்தனை நேரம் அல்லது இத்தனை தூரம் நடப்பது தேவை என்ற திட்டத்தை வைத்துக் கொள்வதில் தவறில்லை. அந்த இலக்கை அவரவர் சொந்தத் திறனிலிருந்து பார்த்துப் படிப்படியாக உயர்த்திச் சென்று அடைவதுதான் சிறந்தது. அடுத்தவரது நடையைப் பார்த்தோ, அடுத்தவரது அறிவுறுத்தலைக் கேட்டோ, ஒரு சிலரது பேச்சுக்கு அஞ்சியோ எல்லாம் வீறாப்பு நடைக்கு இறங்கிவிடக் கூடாது. (இது வாழ்க்கையின் எல்லா அம்சத்திற்கும் பொருந்தும் தானே!).
உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றுக்கான சிகிச்சை எடுப்போர் போன்றோர் அன்றாடம் குறைந்தபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்களாவது 'வாக்கிங்' போனால்தான் பலனுண்டு என்று மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. முதல் இருபது நிமிட நடைக்கான எரிபொருளாக நமது உடலிலிருக்கும் குளுக்கோஸ் சத்து பயன்பட்டுவிடுகிறது. எனவே அதற்குமேலும் நடந்தால்தான் கொழுப்புச் சக்தியைக் கரைக்க முடியும் என்ற அளவில்தான் இந்த குறைந்தபட்ச அளவுகோல் அவசியமாகிறது.
நடக்கும்போது உரிய காலணிகளை அணிவது நல்லது. பாதம் தேய்ந்து போன காலணிகள் ஏற்றலும் தாழ்த்தலுமான முறையில் அழுந்துவதால் அவற்றால் கால்களுக்கு வலிதான் ஏற்படும். அதுவே கூட நடையை சோர்வாக்கும். அதேபோல் காற்று உட்புகும் வண்ணம் அமைந்துள்ள - சற்று மிதமான எடை உடையதாகவுமுள்ள இதம் பதமான காலணிகள் ஏற்றது.
சீரான பரப்பில் நடப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடும் பள்ளமுமானதாகவோ, கரடு முரடானதாகவோ உள்ள பாதையில் நடக்க வேண்டிய சமூகத் தேவையைத் தவிர்க்கக் கூடாதுதான். ஆனால், அந்தப் பாதையை எல்லோருக்குமான சம பரப்பாக மாற்ற வேண்டிய நினைவுகளோடு, நடைபயிற்சியின் போது அதற்கு உகந்த பாதையில் நடக்க வேண்டும்.
பூங்கா போன்ற இடங்கள் கிடைத்தால் விடவேண்டாம். சின்னஞ்சிறு வட்டங்களாக இல்லாமல், நீள் வட்டப் பாதையாக இருந்தால், அலுப்பின்றி நடக்கலாம். நகரங்களிலும், மாநகரங்களிலும் பாதசாரிகளுக்கு அத்தனை மரியாதை கிடைப்பதில்லை. எல்லாமே வாகனங்களின் ஏகபோக உரிமையாகிக் கொண்டிருக்கின்றன நமது வீதிகளும், சாலைகளும். எனவே, பாதுகாப்பு கருதியாவது உரிய இடம், உரிய நேரம் பார்த்து நடக்க வேண்டியது அவசியமாகிறது.
உலக இன்பங்களைப் பாடுகையில், 'வானகமே, இளவெயிலே, மரச்செறிவே....'என்றான் மகாகவி. இளவெயில் உடலுக்கு மிகவும் உகந்தது. அப்படியான காலை நேரங்கள் நடைக்கு ஏற்றது. அல்லது மாலை நேரங்கள் இருக்கவே இருக்கின்றன. வானகத்தை, மரச்செறிவை, பூக்களை, கடந்து போகும் மழலையின் ஈர்க்கும் புன்சிரிப்பை ரசித்துக் கொண்டே நடக்கலாம். அபூர்வக் காட்சிகள் எதிர்ப்படும்போது ஏதோ விரதம் எடுத்தவர் போல முகத்தை வேறுபக்கம் பார்த்துக் கொண்டு போனால் நமக்கு யாரும் தீவிர நடை பயிற்சியாளர் என்று விருது கொடுக்கப் போவதில்லை. எந்தப் பயிற்சியும் உடலும், உள்ளமும் இன்புறும் விதம் எடுக்க வேண்டும்.
வேர்க்க விருவிருக்க நடந்து திரும்பினால்தான் ஆயிற்று என்று கருத வேண்டாம். சிலருக்கு பத்தடி தூரம் போவதற்குள் முதுகு நனைந்திருக்கும். வேறு சிலர் வேர்வை என்ற சொல்லுக்கு எத்தனை எழுத்து என்று கேட்பவராக இருக்கலாம். அதெல்லாம் யோசித்துக் கொண்டு நடக்க வேண்டியதில்லை. உற்சாகமாக இரண்டு கைகளையும் வீசிப் போட்டுக் கொண்டு 'ஆகட்டுண்டா தம்பி ராஜா, நட ராஜா' என்று நடக்க வேண்டியது தான்.
காலை புறப்படும்போது இலேசாக ஏதாவது திடப் பொருள் உட்கொள்வதில் தவறில்லை. வெறும் வயிற்றோடு ஜனத்திரள் இருக்கும் பகுதியில் நடக்க நேர்ந்தால் கிருமிகள் தொற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே ஜன சந்தடியோ, வாகனப் புகை மண்டலமோ இல்லாத பகுதியைத் தேர்ந்தெடுத்துவிடுவது நல்லது. இந்த ஆண்டாவது 'போகி' அன்றைக்கு தெருக்களில் குப்பை கூளங்களைக் கொளுத்திக் கொண்டாட வேண்டாம் என்று போராடிப் பாருங்கள். எதற்கும் அத்தகைய சூழ் நிலைகளில் நடையைத் தவிர்த்துவிடுங்கள்.
சிலர் அதிக சாப்பாடு சாப்பிட்டு விட்டு கொஞ்சம் காலார நடந்துவிட்டு வரலாம் என்று நினைப்பதுண்டு. அதில் தவறில்லை; ஆனால், வயிறார உண்டு விட்டு நீண்ட நடை நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அது, செரிமான வேலைக்கு இடையூறாக இருக்கக் கூடும். நடந்தால் எடையை சித்து வேலை மாதிரி குறைத்துவிட முடியும் என்று பலரும் நம்புகின்றனர். அது உண்மையில்லை. நடப்பது அதன் பங்கிற்கான கலோரிகளைக் குறைக்க உதவும். எடையைக் குறைப்பது என்பது உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம், இவற்றுக்கான மருந்துகள் எல்லாம் சம்பந்தப்பட்டது. கொழுப்புச் சத்து குறைத்துக் கொள்ளாமல் - வாட்டி எடுக்கும் பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் உளச்சோர்விலிருந்து விடுபடாமல், வெறும் நடையினால் மட்டும் பெருத்த உடல் இளைத்துவிடுவதில்லை.
அதே போல், 'அடுத்த வேலை என்ன செய்ய வேண்டும், ஐயோ இன்றைக்கு இருபது நிமிடம் தாமதமாக எழுந்ததால் சமையல் அரோகரா ஆகிவிடுமே, குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ, நாம் போவதற்குள் காண்ட்ராக்டர் வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ.....' என்றெல்லாம் கவலைகளை அடுக்கிக் கொண்டே நடை பயிற்சி செய்தால் சோர்வு குறையாது. அதனால் தான் சிலருக்கு நடை பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பட பட வென்று அடித்துக் கொள்வதாக உணர்வது. அது நடையின் மீதுள்ள பிழையன்று. தவிர்க்க முடியாத வேலைகள் இருக்குமானால், அன்று நடையைத் தவிர்த்துவிட்டு முன்னுரிமை வேலைகளை கவனிக்கலாம். அல்லது வேறு ஒருவரிடம் பொறுப்பு அளித்துவிட்டு இலேசான மனத்தோடு நடையை கவனிக்கலாம். ஒரு நாள் அல்லது தொடர்ந்து ஓரிரு நாட்கள் நடை பயிற்சி எடுக்க முடியவில்லை என்று வருந்துவதால் ஏற்படும் அசதி, நடை இல்லாததால் ஏற்படும் இழப்பைவிட அதிகமானது. இதில் தெளிவு தேவை. நடையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் தண்ணீரை அருந்துவது, அப்பாடா என்று மின்விசிறியைச் சுழலவிட்டு அதன் கீழ் நிற்பது, குளிர்பதன அறைக்குள் போய் உட்கார்வது போன்றவை, நடையினால் பெற்ற பயன்களை நழுவச் செய்துவிடும். சூடான உடல் தானாகத் தணிந்து வர விட்டு விடவேண்டும்.
அன்றாடப் பணிகளின்போது நடக்க வாய்ப்பிருக்கும் இடங்களில் நடைக்கே முன்னுரிமை கொடுப்பது நல்லது. பிறந்த குழந்தை எப்போது நடக்கும் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறோம். வயதான காலங்களில் இறுதி மூச்சுவரை அடுத்தவர் உதவியின்றி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இடையில் ஏன் தவிர்க்க வேண்டும். நடப்பது எல்லாம் நல்லதற்கே என்று நடக்கலாமே.
நடப்போம். அநீதிக்கு எதிரான பேரணிகளில் நடப்போம். சமத்துவ உரிமைகளுக்கான குரல்களோடு நடப்போம். புவி வெப்பமயமாதலோ, வேறு தாக்குதல்களோ அவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாதையில் மனித குல மேன்மைக்கான நடையை நடப்போம்.
எஸ்.வி. வேணுகோபாலன் ( மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம் டி (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து)
அவனுக்கென்ன!
பட்டப்பகலில் இது நடந்தது. உலகமே வேடிக்கை பார்த்தது.
ஆனால் அவன் சாதாரணமாகவும், இயல்பாகவும் இருந்தான். கந்தல் கந்தலான ஆடையில் அழுக்காயிருந்தான். தாடியும், மீசையும் அதுபாட்டுக்கு வளர்ந்து கிடந்தது.
நாற்கரச்சாலையின் தார்ப் பரப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தான். அந்த பார்சலை அவிழ்த்தான். உள்ளிருந்த இலையை விரித்தான். இட்லிகள் இருந்தன. பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்திருந்த சாம்பாரை நிதானமாய் அதில் ஊற்றினான். இட்லியைப் பிய்த்து ஒரு வாய் சாப்பிட்டான். வானம் பார்த்தான்.
எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த லாரிகளும், பஸ்களும், கார்களும் அருகில் வந்ததும், வேகம் தணித்து வளைந்துதான் தாண்டிச் சென்றன. கொஞ்சம் தள்ளி கடையோரங்களில் நின்றவர்கள், முதலில் அதிர்ச்சியோடு பார்த்து பிறகு சுவராசியம் கொண்டனர். சிலர் சிரிக்கவும் செய்தனர். விலகியே நின்றனர் யாவரும்.
ஒரு நாய் அவனருகே சென்றது. ஒரு இட்லியை அதற்குப் போட்டான். குனிந்து சாப்பிட்டது. சிரித்தான். வானம் பார்த்தான்.
அவனுக்கென்ன...!
மண் வாசித்த புத்தகங்கள்!
சனிக்கிழமை காலை பதினோரு மணியிலிருந்து புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். உள்ளே புழுக்கமும் வேர்வையுமாய் இருக்க, புத்தகங்களிலிருந்து காற்று வீசிக்கொண்டு இருந்தது. யாரிடமும் நிதானமாக பேசிட முடியவில்லை. பாரதி புத்தகாலயம் நாகராஜன் அவர்களிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு காலச்சுவட்டில் நுழைந்துவிட்டேன். அப்புறம் அவர் இருமுறை போன் செய்து, எங்கு இருக்கிறீர்கள் என கேட்டுவிட்டு, போகும்போது சந்திக்க வேண்டும் என்று சொல்லவும் செய்தார். சந்திக்கவில்லை.
வலைப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட புத்தகங்களை முதன்முதலாக அப்போதுதான் வம்சியில் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன. ‘பெருவெளிச்சலனங்களில்’ காத்திகைப் பாண்டியன் அவர்களது பதிவின் பாதி ஒரு பக்கம் தாண்டிச் சென்று இருந்தது. அதாவது 47ம் பக்கத்திற்கு பிறகு 46 வந்து விட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து 48ம் பக்கம் வருகிறது. கஷ்டமாக இருந்தது. ‘புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டுமென்கிற அவசரம். பிரிண்டிங், பைண்டிங்கில் பிசகு” என்று பவாவும் வருத்தப்பட்டார்.
அவ்வப்போது வந்து “இந்தப் புத்தகம் வாங்கி விட்டீர்களா, இதை வாங்கலாமா?” என நான் நின்றிருந்த ஸ்டால்களில் எல்லாம் தோன்றி, உமா மகேஸ்வரன் கேட்டுக் கொண்டு இருந்தார். சிரித்த முகத்துக்காரர். கும்க்கியோடு சுற்றினேன். சட்டென்று நெருக்கமாகிவிடும் மனிதர். மணிகண்டன் அவர்களை பார்த்தேன். சாரு நிவேதிதா உயிர்மையில் யாருக்கோ புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு இருந்தார். இடையில் வெளியே வந்து வெட்டி வைத்த பழத்துண்டுகள் சாப்பிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டோம். நான்கு மணிக்குப் போல வெளியே வந்த பிறகு “என்ன அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று போன் செய்தார் நிலாரசிகன்.
ஞாயிற்றுக் கிழமையும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். இதற்குமுன்னர் இருமுறை அவசரமாக சென்னைக்கு வந்து சென்ற போதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பார்க்க நேரமில்லாமல் போயிருந்தது. இந்த தடவை பார்க்க வேண்டும் என்றிருந்தேன். காலையில் அவர்களே போன் செய்து “எப்போ வர்றீங்க..”என்று கேட்டு விட்டார். இரண்டு மணிநேரம் அவரோடு இருந்தேன். அம்முவை, குழந்தைகளை விசாரித்தார். வலைப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட புத்தகங்களை கொடுத்தேன். லேசாக புரட்டிப் பார்த்துவிட்டு, “நல்ல விஷயம்” என்றார். ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கித் தந்தார். புத்தகக் கண் காட்சி குறித்து கேட்டுக் கொண்டார். ‘புகை மற்றும் தண்ணீரை’ சுத்தமாக விட்டு இரண்டு வருடத்திற்கும் மேலாகிறது. கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் நிதானமாகவும், சாந்தமாகவும் இருக்கிறார். மௌனமான நேரங்களில் டி.வியில், ராமாயணத்தில் அவரது கண்கள் இருந்தன. முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து அவரது எழுத்துக்களை ஓரளவு அறிந்திருக்கிறேன். இருபது வருடங்களாக அவரை நெருக்கத்தில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவரது பக்கங்களை புரட்டிக்கொண்டு இருந்தேன்.
மதியம் ஒரு மணிக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, அவசரம் அவசரமாக 6.30க்கு பஸ்ஸை பிடிக்க முடியும் எனத் தோன்றவில்லை. தீபா வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தூங்கி விட்டேன். எஸ்.வி.வேணுகோபலன் போன்செய்து “என்ன நீங்கள் புத்தகக் கண்காட்சி வரலையா” என்றார். பவா போன் செய்து. “என்ன மாது, இன்னிக்கு நீங்கள் வந்திருக்கலாமே.... நிறைய பேர் உங்களை விசாரித்தார்கள், இதோ சென்ஷியிடம் பேசுங்கள்’ என்றார். எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நான் பேசியது அவருக்கு சரியாக கேட்கவில்லை. பிறகு பேசுகிறேன் என்றார். இன்னொருவரும் பேசினார். அவர் பேசியதும், நான் பேசியதுமே சரியாக கேட்கவில்லை. தண்டோரா பேசினார். பஸ்ஸிற்கு காத்து நிற்கும்போது “அமிர்தவர்ஷிணி அம்மாள்” வந்திருந்தாங்க என்றார் பவா. போன் செய்து அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன். நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் அவரது எழுத்துக்கள் ஒரு தொகுப்பாக வரும் என நம்பிக்கை இருக்கிறது.
வண்ண வெளிச்சங்களால் நிரம்பிய சென்னையை விட்டுக் கிளம்பினேன். டாஸ்மார்க் ஒன்றில் வெளியே, சாலையோரம் நின்றபடியே சிலர் குடித்துக்கொண்டு இருந்தனர். இரண்டு பேர் கடுமையாக விவாதித்துக் கொண்டு இருந்தனர். வாகனங்கள் நிரம்பிய சாலை அலுப்பைத் தந்தது. வண்டலூர் தாண்டியபிறகு இருட்டுக்குள்ளும், குளிருக்குள்ளும் பஸ் பயணமானது. பின்னாலிருந்த ஒருவர் “சார் ஜன்னலை சாத்துங்க” என்றார். டி.வியில் தனுஷ் குத்திய குத்தில் தடிமனான ஒருவன் கார் கண்ணாடியையெல்லாம் உடைத்துக்கொண்டு விழுந்தான். தப்பிக்க தூக்கம் வரவில்லை.
காலையில் 4.30 மணிக்கு சாத்தூர் வந்து சேர்ந்தேன். எங்கும் ஈரமாயிருந்தது. நேற்று மழை பெய்திருக்க வேண்டும். பஸ்ஸை விட்டு இறங்கினேன். அந்த ஆம்னி பஸ்ஸின் பின்னால் வைத்திருந்த அட்டைப்பெட்டியை எடுத்து தரச் சொன்னேன். அந்தத் தம்பி வேகமாகவும், அலட்சியமாகவும் எடுத்து வைக்க, அட்டைப் பெட்டையின் கீழ் பாகம் கிழிய புத்தகங்கள் சடசடவென்று சரிந்தன. மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை.
கால் நூற்றாண்டைக் கடக்கிறது ஃபிரண்ட்லைன் பத்திரிகை!
ஃபிரண்ட்லைன் சிறப்பிதழின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, வரலாறு நம் கண் முன்னே உருண்டோடுகிறது. கண்களில் கண்ணீர் வழிகிறது. என்ன மாதிரியான ஒரு காலத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ச தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (குறும்செய்தியில் அனுப்பியது)
'இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்' என்று துவங்கும் தனது அருமையான கவிதையை மகாகவி இப்படி முடிக்கிறான்: ’சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’. விடுதலையின் உண்மையான பொருள் சுதந்திரம் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம். பரந்துபட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய பத்திரிகை உலகிற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பெயரிட்டிருக்கின்றனர். பத்திரிகையின் சுதந்திரத் தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிற சூழல் இது. இதில் சமகால நடப்புகள் குறித்த பொதுவிவாத மேடை எங்கே இருக்கிறது என்பதைத் தேட வேண்டியிருக்கிறது. உலகமயம் என்ற மாயவலை பின்னப்பட்டிருக்கிற சவால் நிறைந்த வெளியில், எச்சரிக்கை மணியடிக்க வேண்டிய வேலையைச் செய்பவர்கள் மிகச் சிலராகவே இருப்பது தற்செயலானதல்ல, அதுவும் உலகமயத்தின் சவால்களில் ஒன்று. கசப்பான நிஜங்களைச் சுட்டிக் காட்டியவாறும், அதிர்ச்சியான நிகழ்வுகளின்மீது பிரதிபலித்துக் கொண்டும், அதே வேளையில் நம்பிக்கையாக இங்குமங்கும் ஒளிரும் சுடர்ப்படங்களைப் பதியவைத்தவண்ணமும் இயங்கிக் கொண்டிருக்கிற வித்தியாசமான ஓர் இதழ் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதே வாசகர்களைச் சிறப்பிக்கிற விஷயமாகும்.
1984ல் வரத் துவங்கிய ஃபிரண்ட்லைன் பத்திரிகை கால் நூற்றாண்டைக் கடந்திருப்பதைப் பதிவு செய்து ஒரு சிறப்பிதழ் வந்திருப்பது உற்சாகம் கரைபுரளத்தக்க விஷயமாகும். 'பத்திரிகை தளத்தில் 25 ஆண்டுக்காலச் செம்மைப்பணி' என்று அதன் முகப்பில் பொலியும் வாசகங்கள் உண்மையிலேயே அர்த்தம் நிறைந்தவை. நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட 1975ன் இருண்டகாலத்திற்குப்பின்னான இந்திய அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டுக் காட்சிகள் பல்வேறு முக்கிய நிகழ்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவை. 1977 பொதுத் தேர்தல் முடிவுகள் அதுவரை நாடு சந்தித்திராத அதிர்ச்சி முடிவுகளையும், புதிய கதாபாத்திரங்களையும் மக்கள்முன் வழங்கின. 1980ல் இந்திராகாந்தி ஆட்சியை மீட்டெடுத்தாலும், வேகமான வெவ்வேறு நடப்புகள் அதற்குப்பின் நடக்கக் காத்திருந்தன. இந்தப்பின்புலத்தில், ஹிந்து பத்திரிகைக் குழுமத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய ஃபிரண்ட்லைன், ஆங்கில வாசக உள்ளங்களில் அதன் நூதன வடிவம், கருத்தாக்கம், தீர்மானமான நிலைபாடுகளால் புதுவித விவாதத்தையும், கிளர்ச்சியையும் உருவாக்கியதை மறக்க முடியாது.
சிறப்பிதழின் நுழைவாசலில், தலைமை ஆசிரியர் என் ராம் நிறுவுவதுபோல், ஃபிரண்ட்லைன் மதச்சார்பற்ற, வெகுமக்கள் சார்ந்த, முற்போக்கு தளத்தில் இயங்குவது வெளிப்படையான உண்மை என்பதால், இந்த நேர்க்கோட்டிற்கு எதிரான திசையிலிருந்து இதற்கு ஒவ்வாத குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், சமகால நடப்புகள் குறித்த சீரிய பார்வை பெற விரும்புவோர் தவிர்க்க முடியாத இதழாக நிலைபெற்றிருக்கிறது ஃபிரண்ட்லைன்.
தேச, சர்வதேச அரசியல் விவாதங்களே ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கிறது என்றாலும், ஃபிரண்ட்லைன் இதழை வருடத் துவங்குகிற ஒவ்வொரு தருணமும் அதன் வகைப்படுத்தப்பட்ட வெவ்வேறு ரசனைக்குரிய அம்சங்களை நினைவூட்டும். கலை, இலக்கியம், நாடக அரங்கம், திரை உலகம் போன்றவற்றிலும் மரபார்ந்த விஷயங்கள், புதிய பரிசோதனைகள் இரண்டின் சுவைகளையும் பருகத் தந்து கொண்டேயிருப்பது இதன் அரிய நேர்த்தி. ஆங்கில மொழியின் வித்தியாசமான இலக்கண விவகாரங்களை வாசிக்கவென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், சமூக முரண்பாடுகள் என இந்தக்காலத்தில் நம்மை பாதித்துக் கொண்டிருக்கும் பொருள் மீது ஃபிரண்ட்லைன் படைப்பாக்கங்கள் செய்துவரும் தாக்கம் அளப்பரியது.
இந்தப் பின்னணியில் வந்திருக்கும் சிறப்பிதழ் பொருளாதாரம், மத அடிப்படைவாதம், சமூக நீதி, உலக விவகாரம், கல்வி-பொது சுகாதாரம்-சுற்றுச்சூழல்-வரலாறு-அறிவியல்-கலை, இலக்கிய, இசை உலகம் என்ற தலைப்புகள் ஒவ்வொன்றின்கீழும் தேர்ந்த சிறப்புக் கட்டுரை ஒன்றும் தொடர்ந்து பழம்பதிவுகளின் நினைவுகூரலும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. வழக்கம்போலவே கவனத்தை ஈர்க்கின்றன புகைப்படங்கள். அவற்றில் எழில் கொஞ்சுபவையும் உண்டு, துயரங்களைப் பெருக்குபவையும், அதிர்ச்சி உறைய வைப்பவையும் உண்டு. தீண்டாமைக் கொடுமை, மனிதர் மலத்தை மனிதரே அள்ளும் அவலம் உள்ளிட்ட விஷயங்களையும், உலகமய பொருளாதாரத்தின் மனிதவிரோத விளைவுகளையும், மத வெறியின் பேயாட்டத்தையும் அம்பலப்படுத்தியதில் ஃபிரண்ட்லைன் தனிப்பெருமை மிக்க பங்களிப்பைச் செய்திருப்பது சிறப்பிதழில் தனி கவனம் பெறுகிறது. இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சி வெளிப்பாடுகள் உள்ளிட்ட பதிவுகள் ஃபிரண்ட்லைன் இதழுக்கு வெளியே அரிதானவை.
ஒரு கால் நூற்றண்டுக்காலம் நடந்த நடையை ஒரு சின்ன விழிப்பார்வையால் தன்னைத்தானே சொக்கி நின்று பார்த்துக் கொள்கிற பார்வையாக ஃபிரண்ட்லைன் சிறப்பிதழ் வந்திருப்பது நீண்டகால வாசகர்களுக்கு ஒரு சொந்தவூர் திரும்புதல் மாதிரி என்றால், புதியவர்களுக்கு ஒரு புதையலின் அடையாளச் சீட்டு அது. எதைத்தவிர்ப்பது, எதை விட்டுவிடாதிருப்பது என்று ஆசிரியர்குழு திணறியிருப்பது ஒரு பத்திரிகையினது கடந்தகாலச் சுவடுகளின் பெருமை. ஃபிரண்ட்லைன் தொட்ட எல்லைகள், கடந்த வெளிகள் எல்லாம் பலம்-பலவீன சுய விமர்சன அட்டவணைகளால் இறுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றின்மீது டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா தொகுத்துத்தரும் ஒரு நறுக்குப்பதிவில் புள்ளிவிவரங்கள் மூலமாக அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஃபிரண்ட்லைன், இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி காலத்தில், மாற்று உலகத்தின் வாசலுக்கான வெளிச்சத்தின் திசையைத் தேடுபவர்களுக்கு நிச்சயம் ஒரு கைவிளக்கு. சிறப்பிதழ் அதன் முகவரி.
- எஸ்.வி. வேணுகோபாலன்
கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் யோசனை
புத்தகக் கண்காட்சி குறித்த செய்திகளும், கண்காட்சிக்கு சென்று வந்தவர்களின் அனுபவங்களும் படித்தும், கேட்டும் பெருமூச்சு வருகிறது. நினைத்த மாத்திரத்தில் சட்டென்று சாத்தூரில் இருந்து மறைந்து சென்னையில் புத்தகக்கண்காட்சிக்குள் நடமாடுகிற வித்தையோ, விந்தையோ வசப்படவில்லையே என்றெல்லாம் கூட தோன்றுகிறது. எந்தப் புத்தகமெல்லாம் வாங்கவேண்டும் என்றோ, எவ்வளவு புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றோ திட்டமிடுதல்கள் எதுவும் கிடையாது. முதலில் அங்கு செல்ல வேண்டும். அவ்வளவுதான். அப்புறம் ஒவ்வொரு புத்தகமாக பார்க்க வேண்டும். பிறகு முன்னுரை படித்தோ, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டோ, பிடித்த புத்தகங்களை வாங்க வேண்டும். பதிவுலகின் நண்பர்கள் சிலர், சென்னைக்கு எப்போது வருவீர்களென்றும், சந்திக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்கள்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் 51 பேரை சஸ்பெண்ட் செய்ததோடு இல்லாமல், புத்தாண்டுச் செய்தியாக ஜனவரி 2ம் தேதி 250க்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட் வழங்கியிருக்கிறது. ஜனவரி 11ம் தேதி மாலையில் விருதுநகரில் பெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் சென்னைக்குச் செல்ல நாட்களை ஒதுக்குவது சிரமமே. சக தோழர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டி வரும். இருப்பினும் இந்த வார சனி, ஞாயிறு (ஜனவரி, 9, 10) கிழமைகளில் புத்தகக் கண்காட்சிக்கு சென்று விடுவது முடிவு செய்திருக்கிறேன். ஜனவரி 9ம் தேதி காலையில் வம்சியிலோ, பாரதி புத்தகாலயத்திலேயோ நண்பர்கள் வந்தால் சந்திக்கலாம். எனது தொலைபேசி எண்: 9443866719. பார்ப்போம்.
அழகுவேல் என்னோடு ஊரில் ஒன்பது வரை படித்துவிட்டு, பிறகு சென்னையில் தொழில் செய்ய அவனது அண்ணனோடு சென்றுவிட்டான். எபோதாவது அவனைப் பார்ப்பேன். மூன்று நாட்களுக்கு முன்பு எனது இன்னொரு நண்பனிடம் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கி, இரவு 10 மணிக்கு மேல் போன் செய்தான். ஆச்சரியமாயிருந்தது. “என்னடா” என்றேன். “மாது, கொன்னுட்டே...” என்றான். புரியவில்லை. அன்று அவன் குடும்பத்தோடு புத்தகக் கண்காட்சிக்கு சென்றதையும் அங்கு, நான் தொகுத்திருந்த வலைப்பதிவர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்களை வாங்கியதையும், அதில் குழந்தைகளைப் பற்றிய சொற்சித்திரத்தைப் படித்ததையும் திரும்பத் திரும்பச் சொன்னான். “நீயாடா, நீயாடா..” என்று இடையிடையே கேட்டுக் கொண்டான் (அவை நானும் சொல்ல வேண்டியவை). போதையிலிருந்தான் என்பது குரலில் தெரிந்தது. அவன் போனை வைத்த பிறகு ஊர் நினைவுகள் எனக்குள் போதைகொண்டு இறங்கின. சந்தோஷமாய்த்தான் இருந்தது.
“நான்கு வயதையொட்டிய குழந்தைகள் வாசித்துப் புழங்குவதற்கான புத்தகங்கள் இவை. எப்போதுமே எந்த ஒரு பொருளையும் பெரியவர்கள் எதற்காக பயன்படுத்துகிறார்களோ, அதற்காக மட்டுமே குழந்தைகள் பயன்படுத்துவதில்லை. நாற்காலிகள் கார்களாகி வீடே ரோடாகிப் போகும். அதே போலப் புத்தகங்கள் வாசிக்க மட்டுந்தான் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. புத்தகத்தை ஒரு குழம்புச் சட்டியாக்கி மூடியைத் திறந்து கரண்டியை உள்ளே விட்டுக் குழம்பு ஊற்றுவதைப் போல ஒரு குழந்தை நடிப்பதைப் பார்த்தேன். நம் மூளைக்கு ஒரு போதும் எட்டாத கற்பனை இது. இந்தக் குழந்தைகளுக்கு புத்தகம் எழுதும் அருகதை நமக்கு ஒருபோதும் கிடையாது என அந்த நிமிடத்தில் தோன்றியது. அவர்களுக்கு நீதிக்கதைகள் எழுதும் நமக்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் குறைவுதான் என்று நினைத்தேன். ‘தம் தம் தம்பி புத்தகங்கள்’ என்னும் இவ்வரிசை அந்தக் கொடுமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது”
இப்படி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை நேர்மையாகச் செய்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயத்தின் கடை எண்:140
பவா செல்லத்துரை உற்சாகமாய் நேற்று பேசினார். புத்தகக் கண்காட்சியில், வம்சி ஸ்டாலில், நான் தொகுத்த வலைப்பதிவர்களின் படைப்புகள் அடங்கிய நான்கு புத்தகங்களும், அய்யனார் (தனிமையின் இசை) அவர்களின் புத்தகங்களும் அதிகமாக வாங்கப்பட்டிருப்பதாய் தெரிவித்தார். சென்னையில் வைத்து புத்தகங்களை வெளியிடும் ஏற்பாடு உடனடியாகச் செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார். யோசனை மட்டும் சொன்னால் போதுமானது, மற்ற ஏற்பாடுகள் அனைத்தையும் வம்சி பார்த்துக் கொள்ளும் என்கிறார். உங்களுக்கு எதாவது தோன்றினால் சொல்லுங்களேன்.
சொந்த மண்ணும் சொந்தக் கால்களும்!
'என்ன பாட்டி சேமியா ஐஸ் சாப்பிடுறீங்களா?'
கேட்டதும் அந்த அம்மாவுக்கு கொஞ்சம் வெட்கமும் , சந்தோஷமும் வந்துவிட்டது. அப்போது கிளையில் அவர்கள் ஒருவர் மட்டுமே வாடிக்கையாளராக இருந்தார்கள்.
'ஆமா..தம்பிக்கு எப்பவுமே வெளையாட்டுத்தான்.பாட்டிக்கிட்டே கேக்குற கேள்வியப் பாரு?'
'பாட்டி..ஒங்கக் கிட்ட முறுக்கு வேணுமா, கடலை உருண்டை வேணுமான்னு கேட்டா நா வெளையாடுறதாச் சொல்லலாம். ஐஸ்தான கேட்டேன். கடிக்க கிடிக்க வேண்டியதில்லையே'
'அ..போங்க தம்பி.' செல்லமாய் கோபப்பட்டார்கள்.
வாங்கிக் கொடுத்த போது மிகுந்த வாஞ்சையோடு பார்த்தார்கள். சொர்ணத்தாயம்மாள். வயசு அம்பதுக்கு மேலிருக்கும். நரை கலந்த முடி ஒழுங்கற்று எனக்கென்ன என்று கலைந்திருக்கும். சாதாரணமாய் பேசும்போதே லேசாய் மூச்சிறைக்கும். எப்போதும் சின்ன சுருதியோடு அசைந்தபடி இருக்கும் விரல்கள். ஒற்றை ஆளாய் குடும்பத்தை இழுத்த களைப்பு அந்த உடலிலும், மனசிலும் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும்.
முப்பது வருஷத்துக்கு மேலிருக்குமாம். ஒரு அதிகாலையில் கருப்பட்டி கடித்து நீத்துப்பாகத்தை குடித்துவிட்டு குருசாமி தலைக்கயிறையும், சுண்ணாம்பு கலந்த குடுவைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன்தான். பனைமரத்திலிருந்து கீழே விழுந்து பேச்சு மூச்சற்று போனான். இதை இப்போது சொர்ணத்தாயம்மாள் சொல்லும்போதும் குரல் கரகரத்துவிடுகிறது. பார்வை நிலைகுத்தி விடுகிறது. இரண்டு ஆண்பிளைகளை வாழ்வின் அர்த்தமாகக் கொண்டு சொர்ணத்தாயம்மாள் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஊருக்கு வெளியே ஒற்றையடிப்பாதையாய் இழுத்துச் செல்லும் தேரிக்காட்டுக்குள் மூன்றுபேரின் வயிற்றுக்கான பிழைப்பு இருந்தது.. முட்களும் புதர்களுமாய் அடர்ந்து கிடக்கும் ஒடை மரங்கள்தான் அந்த குடும்பத்திற்கு நிழல் தந்தன. காய்ந்த மரங்களை வெட்டி முள் அடித்து ஒரு சுமை கொண்டு வந்து ஊருக்குள் பானைக்காரர் வீட்டிற்கு, பட்டாணித் தாத்தா வீட்டிற்கு என்று மாற்றி மாற்றி விறகு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கால்களில் மாறி மாறி புண்களும், கைகளில் சிராய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். தேகம் முழுவதும் வெயிலும், முட்களும் பாய்ந்திருக்கும்.
இன்று இரண்டு பையன்களில் மூத்தவன் பம்பாயில் கடலை மிட்டாய்க் கடையிலும், இரண்டாவது மகன் வண்டலூரில் ஒரு பலசரக்கு கடையிலும் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். சொர்ணத்தாயம்மாள் அதே ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். வங்கியின் இந்தக் கிராமத்துக் கிளைக்கு, வாரத்துக்கு இரண்டு நாள் வருவார்கள். இருபது ருபாயோ, பதினைஞ்சு ருபாயோ போடுவார்கள். ஒருநாளும் பணத்தைத் திரும்ப எடுத்ததே கிடையாது.
'பாட்டி.. எதுக்கு இங்க கிடந்து சங்கடப்படுறீங்க...பேசாம எதாவது ஒரு பையங்கிட்டப் போயி இருக்க வேண்டியதுதான?' ஒருநாள் கேட்ட போது முதலில் கவனிக்காத மாதிரி இருந்தார்கள். பணத்தை போட்டு விட்டு கிளம்பும்போது 'அது வந்து தம்பி... நமக்கு இந்த மண்ணுதான் ஒட்டும். இங்கதான் இந்த கட்டை வேகணும்.' என்றார்கள். முகம் அழுத்தமாயிருந்தது.
'இல்ல..ஒடம்பை கவனிக்க...கடைசிக் காலத்துல ஒத்தாசையா இருக்க.. பிள்ளைங்க கூட இருக்குறது நல்லாயிருக்கும்னு சொன்னேன்.'
'பாவம்யா.. எங்கயாவது அதுக நல்லாயிருக்கட்டும். நம்ம என்ன அவுங்களுக்கு பெரிய படிப்பா படிக்க வச்சுட்டோம். எதோ ஆளாக்கியிருக்கோம். இனும அதுக பாடு. நாம தொந்தரவா இருக்கக் கூடாது'
'நீங்க இந்தப் பணத்த எடுத்து ஒங்க காலுக்கு வைத்தியம் பாக்கலாம்ல. கொஞ்சம் சத்தான ஆகாரம் எதாவது சாப்பிடலாம்ல'
'ஆமா..இதச் சாப்புட்டுத்தான் உயிர் வாழப்போறமா. போகுறதுன்னா எப்படியும் போகும். ஆனா அம்மா ஈமச் செலவுக்குன்னு கூட எம்புள்ளைக நாளைக்கு கலங்கி நிக்கக்கூடாது. யாரையும் எதிர் பார்க்கக் கூடாது. அதுக்குத்தான் இதெல்லாம்' பாஸ் புத்தகத்தை கண்ணில் ஒத்திக் கொண்டு காலை கொஞ்சம் நொண்டியபடி சொர்ணத்தாயம்மாள் நடந்து சென்றார்கள்.
வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாம் புதைந்து இருக்கிறது. இத்தனை வயதுக்கு பிறகும் தன் காலில் நிற்க வேண்டும் என்கிற ரோஷமும், இந்த மண்ணோடு உயிரைப் பிசைந்து வைத்திருக்கிற உறவும் கிராமங்களில், எளிய மனிதர்களிடம்தான் இருக்கிறது.
என்ன நேரத்தில் அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டுச் சென்றார்களோ இரண்டு மாதத்துக்குள் சொர்ணத்தாயம்மாள் இறந்து போனார்கள். மத்தியானம் போல கிளையில் பணிபுரிந்த மூன்று பேரும் பார்க்கச் சென்றோம். கோழிக்கூடு போல இருந்த சின்ன குடிசையின் வாசலில் சொர்ணத்தாயம்மாளை படுக்க வைத்திருந்தார்கள். கட்டை விரல்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தக் கால்கள் ஒய்வெடுத்து இருந்தன. எத்தனை முறை இந்தக் கால்கள் வங்கியின் வாசலை மிதித்து இருக்கும். கண்கள் கலங்கின. 'மூத்த பையன் வர்றதுக்கு நாளாகும். இளையவன் சாயங்காலம் வந்துருவான். வந்தவுடன் எடுக்க வேண்டியதுதான்' யாரோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள். நாங்கள் திரும்பினோம்.
எத்தனையோ வாடிக்கையாளர்கள்..எத்தனையோ மனிதர்கள்...எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் என்று காலம் வேகமாக தாவிச் சென்றாலும் சிலர் நமது கண்களுக்குள்ளேயே நிறைந்து விடுகிறார்கள்.எப்போதாவது லெட்ஜரை புரட்டும்போது முடிக்கப்பட்ட கணக்கு உள்ள அந்தப் பக்கம் சொர்ணத்தாயம்மாளை ஞாபகப்படுத்தி மறையும். கிளைகளில் கம்ப்யூட்டர்கள் வந்தபிறகு நினைவுகளின் அடுக்குகளில் புதைந்திருக்கிறார்கள் துயரமும், வைராக்கியமும் நிறைந்த உருவமாக.
எண்களின் உலகம்
அரைமனிதர்களாயிருந்த
அவனது அரையும்
அவளது அரையும்
சேர்ந்த ஒன்றை
எண்களின் உலகத்தில் தவழவிட்டார்கள்.
செல்போன்
கிரெடிட் கார்டு
கஸ்டமர் ஐ.டி
பேன் நமபர் இவைகளோடு
வேறென்ன எண்களையெல்லாம்
அதற்கு சூட்டுவது என
உலகம் யோசித்துக் கொண்டிருந்தது
பேரைச் சூட்டிய தாத்தாவுக்கு
முகமே நினைவிலிருந்தது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வெளிச்சம் சிந்திய இந்த பவுர்ணமியில் இரவு யாவரையும் தூக்கி இடுப்பில் வைத்தபடி பயணம் செய்கிறது. தொலைதூரத்தில் நட்சத்திரப்புள்ளிகளென வரிசையாய் கடந்து போக ஒரு டிரெயின் சப்தம் தாலாட்டியபடி அசைந்து அசைந்து கரைகிறது. குளிர் கடலைப் போல ரகசியங்களை விழுங்கியபடி எங்கும் நிறைந்திருக்கிறது
நிலப்பரப்பும், மரங்களும் நிழலாய் பாவும் வசீகரவெளியில் காதலும், கருமமும் உட்கொண்ட பித்தனைப்போல வெறிக்கிறேன். வெளிர் நிறப் பறவை ஒன்று அனாதியாய் தலைக்கு மேல் இந்த நேரத்திலும் அமைதியாய் செல்கிறது. அறியாத பாவிகள் சிலர் பட்டாசு வெடிக்கிறார்கள்.
நமக்கான பாடலை இசைத்தபடி காலம் முன்னே செல்கிறது. அதன் கைவிரலைப் பிடித்துவிடும் எத்தனிப்பில் விரல்கள் துழாவுகின்றன.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் யாவருக்கும்!