குழந்தைகளின் கனவுப் பள்ளி

"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே" ஏசுநாதரின் பிரசித்தி பெற்ற வரிகள் இந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக் குழந்தைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. குழந்தையை போட்டு கல்வி நசுக்குவதும் அவர்கள் கூன் விழுந்து போவதும் கண்ணெதிரே காட்சிகளாகின்றன. "குண்டூசியால் குத்தப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைப் போல இன்றைய பள்ளிக்கூடங்களில் பெஞ்சுகளோடு ஆணிகளால் அறையப்பட்டு இருக்கின்றனர் குழந்தைகள்." இத்தாலிய முதல் பெண் மருத்துவரான மேரியா மாண்டிசோரி இப்படி வருத்தப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அவர்கள் ஆணிகளால் அறையப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சிரித்துக் கொண்டே பள்ளிக்குள் நுழைகிற குழந்தைகளை போன வாரத்துக்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை. தோழர்.கிருஷ்ணன் தங்கள் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் நடத்துகிற பள்ளியை பார்க்க வேண்டுமென ரொம்ப நாளாய் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். பட்டுக்கோட்டையிலிருந்து பத்து நிமிட தூரத்தில் குறிச்சி என்னும் அந்த சிறிய ஊர். பிரதான சாலையிலிருந்து இளம் செம்மண் பாதை ஒன்று நீள அந்தச் சின்னக் கட்டிடம். குழந்தைகளின் உற்சாகமான குரல்களில் மிதந்தபடி இருந்தது. தோழர். தனபாலை நோக்கி ஓடி வந்து குழந்தைகள் அப்பிக் கொள்கின்றன. ஒரு குழந்தை தாவி மேலே ஏறிக்கொள்கிறது. இந்த 'கரஸ்பாண்டெட்' என்கிற வார்த்தை ஒரு மாதிரி பயமுறுத்துகிற, கண்டிப்பான உருவமாய்த்தான் சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. அவர் வந்தால் மொத்த பள்ளியுமே அமைதியாகும். 'கரஸ்பாண்டென்ட்...கரஸ்பாண்டென்ட்' என்று வகுப்புக்கு வகுப்பு முணுமுணுப்புகள் கேட்கும். தோழர்.தனபால், கரஸ்பாண்டென்ட்டாக இல்லாமல் உண்மையிலேயே தாளாளராகத்தான் இருக்கிறார்.
குழந்தைகள் வரிசை வரிசையாய் அப்படியே உட்கார்ந்திராமல் அங்கங்கே தனித்தனியாய், ஒன்றிரண்டு பேராய் தங்கள் இஷ்டத்துக்கு உட்கார்ந்து இருந்தார்கள். எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு எதிரே, வெளியே நீண்டிருந்த வராண்டாவின் சின்னச் சுவர் முழுவதும் கருப்பு வண்ணத்தில் இருக்க சில குழந்தைகள் அங்கே உட்கார்ந்து அவர்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு குழந்தைகள் பல வண்ணங்களில் நிறைந்திருந்த பாசிகளை நூல்களில் கோர்த்துக் கொண்டிருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எழுதப்பட்டிருந்த அட்டையை தரையில் விரித்து ஒவ்வொன்றுக்கும் அருகே அந்த எண்களுக்கேற்ற சிறுகற்களை கூறு கூறாய் வைத்துக் கொண்டிருந்தனர். காலியான நூல் கண்டுகளை கை விரல்களில் நுழைத்து எண்ணிக் கொண்டிருந்தனர். ஒரு டப்பாவில் நிறைந்திருந்த மணலில் இருந்து பொடி பொடி கற்களை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தனர். சுவரில் Racing to Learn என்று ஒரு அழகான படம் தொங்கிக் கொண்டிருந்தது.
'இவன்தான் யாசிக்' என்றார் தனபால். கையில் காகிதத்தில் செய்திருந்த காற்றாடியை காற்றின் திசையில் வைத்து சுற்றுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன். முந்திய இரவு தனபால் அவர்களின் வீட்டில் தங்கிய போது அவர் இந்தப் பள்ளியை பற்றி விவரித்த போது அதில் யாசிக்கும் வந்திருந்தான். இவன் பள்ளியில் சேர்ந்த போது மிகுந்த கோபக்காரனாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தானாம். சக குழந்தைகளை அடித்து விடுவானாம். டீச்சர்கள் பொறுமையிழந்து இவனை அடித்து அடக்கா விட்டால் அடங்க மாட்டான் என சொன்னார்களாம். அவன் பெற்றோர்களுமே 'நல்லா அடிங்க... அப்பத்தான் திருந்துவான்' என்று எரிந்து விழுந்தார்களாம். பிரம்பு என்கிற அதிகாரத்தின், அடக்குமுறையின் அடையாளம் பள்ளியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பொறுமையாக அவனது நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அவனுக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டனவாம். தினமும் சோடா பாட்டில் மூடிகளை அவனிடம் கொடுத்து ஆணியையும் சுத்தியலையும் கொடுத்து அவைகளில் ஒட்டை போடச் சொன்னார்களாம். அவன் ஆர்வமாய் செய்தானாம். அவன் கோபத்திற்கான வடிகாலாய் அந்தப் பயிற்சி இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அவனது பெற்றோர்களையும் மாறி மாறி சந்தித்து அவனை வீட்டில் கூட அடிக்காதிர்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வேறு வேறு பயிற்சிகளில் அவனை மூழ்க வைத்திருக்கிறார்கள். சில மாதங்களில் அவனிடம் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இன்று எல்லோரிடமும் இயல்பாய் இருக்கிறானாம். சுற்றிய காற்றாடியை கைகளால் பிடித்து நிறுத்தினேன். அண்ணாந்து பார்த்து சிரித்துக் கொண்டே 'கரண்ட் போச்சு' என சிரித்தான்.
"டீச்சர் நான் எழுதியதை பார்க்க வாங்க" என யூ.கே.ஜி டீச்சரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. பத்து பத்தாய் குச்சிகளை அடுக்கி கட்டி கட்டி வைத்துக் கொண்டிருந்தான் ஆசீர்வாதம். இன்னொரு வகுப்பில் பாரதி என்கிற சிறு பையன் உட்கார்ந்து கத்தரிக்காய் நறுக்கிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு அந்த வேலை பிடித்திருக்கிறதாம். மனதை ஒருமுகப்படுத்த இந்தக் காரியங்கள் உதவும் என்று சொன்னார்கள். ஒன்றாம் வகுப்பில் இரண்டு மூன்று குழந்தைகளிடம் 'ஷட் அப்' என்று சொல்லிப் பார்த்தேன். அசைவற்று என்னைப் பார்த்தார்கள். எனக்கு என் பையன் நிகில்குமாரின் பரிதாபமான முகம் வந்து கஷ்டப்படுத்தியது. எல்.கே.ஜியில் சேருகிற வரையில் அவன் வீட்டில் அட்டகாசங்கள் பண்ணிக் கொண்டிருந்தான். எந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தாலும் இரண்டே நாளில் அதை துவம்சம் செய்து விடுவான். கம்ப்யூட்டரை ஆன் பண்ணி விடுவான். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்கிறேன் என்று உதைத்துக் கொண்டிருப்பான். புத்தகங்களை கிழித்து விடுவான். அடங்கவே மாட்டான். பள்ளியில் சேர்ந்த சரியாக இரண்டாவது நாள் காலையில் மிக்ஸியை போடும் போது அருகில் போய் அதை தட்டிக் கொண்டிருந்தான். என் மூத்த மகள் "நிகில்.. ஸிட் டவுன்..ஷட் அப்" என்று ஒரு அதட்டல் போட்டாள். அவ்வளவுதான். அப்படியே அதே இடத்தில் சட்டென்று உட்கார்ந்து கையைக் கட்டி வாயை பொத்திக் கொண்டான். தாங்கவே முடியவில்லை. வாரியணைத்துக் கொண்டேன். இரண்டே நாட்களில் அந்தப் பள்ளி அவனை அடக்கி ஒடுக்கியிருந்தது. இங்கே பள்ளியில் குழந்தைகள் பறவைகளைப் போல இருந்தார்கள்.
கொஞ்சம் தூரத்தில் ஆறிலிருந்து எட்டு வரைக்கும் வகுப்புகளுக்கு தனியே கட்டிடம் இருந்தது. அதைப் பார்க்க சென்றோம். இங்கே படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் வேறு பள்ளியில் படித்தவர்கள். அதனால் எங்கள் கல்வி முறையோடு அவர்களுக்கு பெரிய சம்பந்தம் இருக்காது. பள்ளி ஆரம்பித்து இரண்டு வருடங்களே ஆவதால் இப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே எங்கள் கல்வி முறையில் முழுமையாக வளர்ந்தவர்களாக இருப்பார்கள்" என்றார் தனபால். தரையில் சாக்பீஸால் நீள்வட்ட பாதைகள் வரையப்பட்டு பல வண்ணங்களில், பல அளவுகளில் பந்துகள் சூரியக் குடும்பமாய் அமைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அதன் அருகில் நின்று விளக்கங்களையும், சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
மதிய உணவுக்கான வேளை நெருங்கும் போது தனபாலிடம் விடை பெற்று கிளம்ப ஆரம்பித்தோம். அந்த மூன்று மணி நேரத்தில் அந்நியோன்யமாய் பழகிய குழந்தைகள் டாடா சொல்லின. ஆதிமூலமும், பாலகீர்த்தனவும் பிரியத்தோடு கையைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். யூ.கே.ஜி டீச்சர் தன்னருகில் குழந்தைகளை உட்கார வைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். மைதானத்தில் பெரிய பெரிய டயர்களை மணலில் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வெயில் இல்லாமல் இதமான காற்று அதிராம்பட்டினக் கடற்கரையிலிருந்து வீசிக்கொண்டிருந்தது."ஓய்வில்லாத கடல் பேரிரைச்சல் இடுகிறது. எல்லையற்ற வார்த்தைகளின் கடற்கரையில் குழந்தைகள் ஆரவாரத்துடன் சந்திக்கின்றனர்." மகாகவி தாகூரின் குழந்தைகள் இவர்கள்.
பஸ்ஸில் ஏறி இரவு வீடு வந்து சேருகிற வரையில் பள்ளியின் நினைவாகவே இருந்தது. சுவர்கள், தளம் எதுவும் பூசப்படாமல் அந்தப் பள்ளி செங்கற்சுவர்களாகவே இருந்தது. ஆனால் உயிர்த்துடிப்போடு இருந்தது. அடுத்த நாள் காலையில் நிகில்குமாரை பள்ளியில் கொண்டுவிடச் சென்றேன். பிரமாதமான கட்டிடங்களுடன் பெரிதாய் நின்றிருந்தது. பள்ளிக்குள் செல்லவே பிடிக்காமல் திரும்பி திரும்பி ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சென்றான். 'அப்பா என்னக் காப்பாத்துப்பா" அவன் குரலற்ற அழைப்பு எனக்குள் தவிப்பை ஏற்படுத்தியது. இது என் குழந்தைக்கான பள்ளி அல்ல. அது குறிச்சியில் இருக்கிறது.
(பின் குறிப்பு: இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்திலிருந்து வேணுகோபால், இந்த வருடம் எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். அவர்களது, பள்ளி, இல்லை நமது கனவுப்பள்ளியில் 10ம் வகுப்பில் 96 சதவீதம் பாஸ் என்று. உற்சாகமாய் இருக்கிறது. அதிராம்பட்டினக் காற்று தழுவிச் செல்கிறது)
ஆதலினால் காதல் செய்வீர் -முதல் அத்தியாயம்

எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டொன்றில் 'ஐ லவ் யூ ' என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆணின் மனம் திறந்த செய்தி இருக்கிறது. மும்பையின் யானைக்குகை பாறைகளில் இருக்கும் ஆண், பெண் பெயர்கள் குற்றாலத்தில் வேறு பெயர்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஓடுகிற டவுன் பஸ் சீட்டுக்களின் பின்புறங்களையும் இந்த ஆதாம் ஏவாள்கள் விட்டு வைக்கவில்லை.
அவர்கள் யாராகவும் இருக்கலாம். இரண்டு கண்களில் ஆரம்பித்த உறவு ஒன்று உலகமே பார்க்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணின் பெயரையும், பெண்ணின் பெயரையும் இப்படி சேர்த்து எழுதினாலே காதல் என்பதாக யாரும் சொல்லாமலேயே அர்த்தம் உறைக்கிறது. அப்படியொரு தன்னிச்சையான அறிவை காலம் மனிதர்களுக்கு ஊட்டியிருக்கிறது.
இளமையின் வாசலில் காலைச்சூரியனின் முதல் ஒளிக்கீற்றாகவும், மாலைச் சூரியனின் மங்கிய ஒளியாகவும் படர்ந்து விடுகிறது. எப்படிப்பட்டவராக இருந்தாலும், முகத்தில் ஒரு களையையும், அர்த்தமுள்ள புன்னகையையும் தருவித்துவிடுகிற மாயம் அதற்கு இருக்கிறது. நிற்கிற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கிறது. பார்க்கிற இடத்தில் பசுமை பூத்தொடுக்கிறது. தனிமை திகட்டாமல் கனவு காணச் செய்கிறது. உலகமே அழகாய் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகத்தில் வேறு எந்தக் காதலருக்கும் ஏற்பட்டிராது என்று கர்வம் கொள்ள வைக்கிறது. ஆதி மனிதனின் முடிகள் அடர்ந்த தோலில் தோன்றிய அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்கும் புதியதாகவே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருக்கிறது. அந்த பொறி உடல் மாற்றங்களோடு பருவம் அடைகிற போது கொழுந்து விட்டு பற்றிக் கொள்கிறது. எதையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் மனித சுபாவம் சுவாரஸ்யம் கொண்டு தத்தளிக்கிறது. புரிந்தும் புரியாமல் அலைபாய்கிறது. தனக்கும் எல்லாம் நேர்கிறது என்பது பாடாய் படுத்துகிறது. தன்னை தானே ரசிக்கிற குறுகுறுப்பில் பிறக்கிறது. தனது ரகசியங்களை எதிர்வினையின் மூலம் புரிந்து கொள்ள முயலும் துடிப்பில் வளர்கிறது.
இந்த புதிய உலகத்தின் திறவுகோல் ஒரு பெண்ணுக்கு ஆணின் பார்வையில் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் பார்வையில் இருக்கிறது. திறந்துவிடும் கண்களுக்காக பூத்துக் கிடக்கிறார்கள். ரகசியங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொண்டு உடல் விசித்திரங்களில் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.ஒரு ஆணின் கண்கள் பல பெண்களின் கண்களைப் பார்க்கின்றன. ஒரு பெண்ணின் கண்கள் பல ஆண்களின் கண்களைப் பார்க்கின்றன. வாழும் சமூகமும், வாய்க்கும் சூழலும் அவரவர்களுக்குள் மூட்டி வைத்திருக்கிற பிரமைகளுக்கும், பிம்பங்களுக்கும் அருகில் நெருங்கி வருகிறவர்களை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களது கோட்டு உருவங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள். அவரவர் சித்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவம் பெறும் என நம்புகிறார்கள். செந்தூரப்பூவே என்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்.
எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாய் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பெறவும் உன்மத்தம் பிடித்துப் போகிறது. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களெல்லாம் போய் நிற்கிறார்கள். பிடித்தமானவராய் மாறுவதற்கு வித்தைகளும், சாகசங்களும் செய்து பார்க்கிறார்கள். மலையுச்சியிலிருந்து குதிக்கப் போவதாகவும், விஷமருந்தி இரத்தம் கக்கிச் சாகப் போவதாகவும் கடைசிச் செய்தி அனுப்பி பார்க்கிறார்கள். பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியோ ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான். நமது சினிமாக்கள் கொஞ்சங்கூட சமூகப் பொறுப்பற்று விடலைகளின் உள்ளத்தில் தீயை வைத்துக் கொண்டிருக்கின்றன.
பார்வைக்கு மறு பார்வை எதிர்த் தரப்பில் பதிலாய் கிடைக்கிற போது வானவில் தோன்றுகிறது. சக வயதொத்த பால் பேதம் கொண்டவரின் சம்மதமே பிறவிப்பயனாகிறது. உறுதி செய்து கொள்ள மீண்டும் மீண்டும் பார்வைகளில் திளைக்கிறார்கள். கால்களில் நடுக்கமும், கண்களில் படபடப்புமாய் பரிதவிக்கிறார்கள். தனக்காக ஒரு இளவரசன் வரப் போகிறான் என அவனும், இனியுள்ள காலம் முழுவதையும் அந்த ஒருத்தியோடுதான் என அவனும் கற்பனை செய்கிறார்கள்.
அவளது தலைமுடியொன்றை தனது விரல்களில் சுற்றி மோதிரம் என பெருமைப் படுகிறான் அவன். அவளது பாதம்பட்ட மண்ணை கவனத்துடன் அள்ளி தனது வழி பாட்டுக்கு பாதுகாக்கிறான் அவன். அவனது அழுக்குக் கைகுட்டையை கவர்ந்து சலவை செய்து மயங்கிப் போகிறாள் அவள். அசட்டுத்தனங்களும், சினிமாத்தனங்களுமாய் சிறுத்துப் போனாலும் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது. வசீகரமான பயணமாக, ரகசிய அனுபவமாக உணரப்படுகிறது. எல்லைகளற்ற பெருவெளியில் மனிதர்களை சஞ்சரிக்க வைக்கிறது.
இடைவெளிகளை மேலும் மேலும் குறைக்க வேண்டும் என பித்துப் பிடித்து நிற்கிறார்கள். காதலின் சாலையில் யாவரின் பயணங்களும் அதை நோக்கியே செல்கின்றன. ஆண் பெண் உறவுகளை திருமணங்களே உறுதி செய்கின்றன. சமூகத்தின் சம்மதம் முக்கியமாகிறது. திருமணத்திற்கான ஒழுக்கத்தையும், விதிகளையும் சமூகமே கற்பித்து வைத்திருக்கின்றன. ஜாதி பார்க்கிறது. மதம் பார்க்கிறது. கல்வி பார்க்கிறது. வாழ்வதற்கான வசதி பார்க்கிறது. இவைகளை பார்க்காத காதலையும், காதலரையும் நிராகரிக்கிறது. வன்மத்தோடு எதிர்க்கிறது. எல்லாவற்றையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்கிற உறுதி வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் வசதியாகவும், சமூகத்தில் கௌரவமானவர்களாக வாழ்வதிலும் இருக்கிறது.
இப்படித்தான்- இவ்வளவுதான் காதல் பற்றிய நமது புரிதல்களும், உணர்வுகளுமாக தேங்கிப் போய் கிடக்கின்றன. திரைப்படங்களில் ஆட்டமாய் ஆடுவதும், சண்டையாய் போடுவதும் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் கடைசிக் காட்சிக்காகவே இருக்கின்றன. அந்தி மங்கும் வானத்தின் பின்னணியில் காதலனும், காதலியும் கட்டிப் பிடித்து சேர்ந்து நடக்கும் காட்சி வந்ததும், ரசிக பெருமக்கள் அப்பாடா என்று இருக்கைகளை விட்டு எழுந்து வீடுகளுக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் காதலின் வெற்றியென சொல்லி சூரியன்கள் மறைகின்றன. முதலிரவுக் காட்சிகளே காதலின் உச்சக்கட்டம் என்று விளக்குகள் அணைக்கப் படுகின்றன.
அந்த ஆணின் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகவில்லை. அந்த பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போகவில்லை. ஆனால் காதல் மட்டும் முடிந்து விடுகிறது. இருந் தாலும், இதயத்தை அம்பால் துளைப்பதாக, லிப்ஸ்டிக் உதடுகளாக, கோர்த்திருக்கும் ஆண் பெண் கைகளாக, கண்ணை மூடி முத்தம் கொடுப்பதாக கடைகளில் வாழ்த்து அட்டைகள் வண்ண வண்ணமாக தொங்கவிடப் பட்டிருக்கின்றன. தொலைக்காட்சியில் விசேஷ நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படுகின்றன. இணையதளங்களில் வாழ்த்துச் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், கொண்டாடவும் ஏராளமான ஏற்பாடுகள். மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளம்பரங்கள். கல்லூரிகளில், நட்சத்திர ஓட்டல்களில் விழாக்கள். நடனங்கள். நகரத்து யுவன்களும், யுவதிகளும் காய்ச்சல் வந்து நிற்க உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சின்னக் குழந்தைகள் சோப்பு நுரையை ஊதி நீர்க்குமிழிகளை பறக்க வைத்து ஆனந்தப்படுவதைப் போல 'லவ்' 'லவ்' என்று சகல இடங்களிலும் காதலர் தின நிகழ்ச்சிகள் தென்படுகின்றன.
வாழ்வில் காதலை அறியமுடியாமல், எதோ ஒரு தினத்தில் காதலைக் கொண்டாடுவது வேடிக்கை தான். அவஸ்தைகளோடும், பரவசங்களோடும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தவர்கள் விரைவில் அதனைத் தொலைத்து விட்டு வெறுங்கையோடு நிற்பது பரிதாபம் தான். காதலில் தோய்ந்து தோய்ந்து விரிந்த காவியங்களையும், கவிதைகளையும் கொண்டு பூமிப்பந்தையே அந்த உருகும் மொழியால் மூடி விடலாம். அவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் காதல் பிடிபடாத வண்ணத்துப் பூச்சியாய் மனிதர்களுக்கு போக்குக் காட்டி பறந்து கொண்டிருப்பது விசித்திரம்தான்.
"இதெல்லாம் காதலே இல்ல..." என்று ஒருகுரல் ஒலிக்கிறது. "டீன் ஏஜ் பருவத்துல வர்ற ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்" இன்னொரு குரல் ஒலிக்கிறது. "காதலுக்கும் காமத்துக்கும் ஒண்ணும் வித்தியாசமில்ல" என்றும் சொல்லப்படுகிறது. காதலைப் புரிந்து கொள்ளவும், என்றென்றும் வாடாத மலராய் அதை தரிசிக்கவும் முனையாமல் இப்படியான சிந்தனைகள் சமூகப்பரப்பில் கீறிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் காதல் இருந்ததாகவும், இப்போது அது இல்லையெனவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆண் பெண் உறவுகளில் காதல் என்றென்றைக்கும் நிலைத்திருக்க முடியாமல் எது தடையாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் துடிப்புகளும், அறிந்து கொள்ள முடியாத ஏமாற்றங்களுமே இவைகளின் அடிநாதமாய் இருக்கின்றன.
வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர்-2

2. Adventures of Huckklebery finn.(ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள்)
"அமெரிக்காவின் அனைத்து நவீன எழுத்துக்களும் ஒரு புத்தகத்திலிருந்து வந்தவை. அது மார்க் ட்வைன் எழுதிய Adventures of Huckklebery finn. அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு புத்தகம் வரவில்லை' என்று எழுத்தாளர் எர்னஸ்டோ ஹெம்மிங்வே 1935ல் எழுதுகிறார். அமெரிக்காவின் மதிப்பு மிக்க கன்கார்டு நூலகமோ "மூர்க்கத்தனத்தையும், அநாகரீகத்தையும் பேசும் இந்த புத்தகம் சேரிகளுக்குத்தான் லாயக்கு. அறிவும் மரியாதையும் மிக்க மனிதர்களுக்கு ஏற்புடையதல்ல" என்று இந்த நாவல் வெளிவந்த 1885ம் ஆண்டிலேயே தடைசெய்தது. 1902ல் டென்வர் பொது நூலகத்திலிருந்து தடை செய்யப்பட்டது. 1905ல் புரூக்ளினில் உள்ள பொது நூலகம் "இன்றைய இளைய தலைமுறைக்கு மோசமான முன்னுதாரணம் என்றும் கெட்ட நடத்தைக்கு தூண்டுகிறது என்றும்' அறிவித்தது. 1950களில் இன ரீதியான உணர்வுகளைத் தூண்டுவதாக தடை செய்யப்பட்டது. 1990களில் நடந்த சர்வே ஒன்றில் இப்போதும் சர்ச்சைக்குள்ளான புத்தகங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள்' இருப்பது தெரிய வந்திருக்கிறது. இன்றுவரை வகுப்பறைகளில் மாணவர்கள் கைகளில் இந்தப் புத்தகத்தை கொடுப்பதற்கு அமெரிக்கச் சமூகம் வெகுவாக யோசிக்கிறது. 120 ஆண்டுகளாக ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்து இந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலக் கட்டத்தின் வாழ்க்கைச் சித்திரங்களை ட்வைன் இந்தக் கதையில் தீட்டியிருக்கிறார். அடிமைகளின் அவலநிலையும், இனவேறுபாடுகளைக் கடந்த நட்பும் 46 அத்தியாயங்களின் அடிநாதமாக இருக்கிறது. மிசிசிபி நதியின் அழகிய வர்ணங்களும், அதன் கரையோரத்து மனிதர்களும் நமக்குள் அலைமோதுகிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் ஏற்படுகிற சமூக மாற்றங்களுக்கும், உண்மையான விடுதலைக்கும் உள்ள முரண்பாட்டின் தளத்தில் கதாபாத்திரங்கள் அசைகிறார்கள்.
"டாம் சாயரின் தீரச்செயல்கள் (Adventures of Tom Sawyer )' முடிந்த இடத்தில், 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள்' கதை ஆரம்பிக்கிறது. அதில் டாமுக்கும், ஹக்கிளுக்கும் பனிரெண்டாயிரம் டாலர் பணம் கிடைப்பதாகவும், இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வதாகவும் முடிந்திருக்கும். நீதிபதி தாட்சர் அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, நாளொன்றுக்கு ஒரு டாலர் பணம் கிடைக்க வழி செய்கிறார். விதவையான டக்ளஸ், ஹக்கிளை பராமரிப்பதாக அழைத்துச் செல்கிறாள். புதுத்துணிகளை வாங்கித் தருகிறாள். டக்ளஸ் சகோதரி மிஸ்.வாட்ஸன் பைபிள் படிக்கச் சொல்லித் தருகிறாள். ஹக்கிற்கு இந்த "ஒழுக்கச் சிறைக்குள்' அடைபட முடியவில்லை. வீடு மரணமடைந்ததைப் போல அசைவற்றிருப்பதாகப் படுகிறது. மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்து கொடுமையில் வாடும் ஜிம் என்னும் கறுப்பின அடிமை ஒருவன் அங்கு வேலைக்காரனாக இருக்கிறான்.
ஹக்கிடம் இருக்கும் பணத்தை அடைவதற்காக குடிகாரனான அவன் தந்தை முயற்சிக்கிறான். காட்டுப்பன்றியின் இரத்தத்தை சுற்றிலும் சிந்தி உலகுக்குத் தான் செத்துப்போனவனாய் நாடகமாடி கட்டுமரத்தில் தப்பிக்கிறான் ஹக். யாரிடமோ தன்னை விற்க முயற்சி நடப்பது தெரிந்து ஜிம்மும் டக்ளஸ் வீட்டிலிருந்து தப்பித்து ஓடுகிறான். ஜாக்ஸன் தீவில் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஊருக்குள் ஹக்கை கொன்றுவிட்டு ஜிம் தப்பித்துவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. பகல்வேளைகளில் நதியோடும், இரவில் அருகில் இருக்கும் டவுனுக்குள் நுழைந்து உணவுக்கு எதாவது ஏற்பாடு செய்தபடியும் பயணம் தொடர்கிறது. நீராவிப்படகில் மூன்று கொள்ளையர்கள் வருகிறார்கள். அவர்களுக்குள்ளேயே மோதல் உருவாகி இரண்டு கொள்ளையர்கள் சேர்ந்து மூன்றாம் கொள்ளையனை கொல்ல முயற்சிக்கிறார்கள். கடைசியில் கவிழும் படகில் மாட்டிக்கொள்கிறார்கள். ஜிம்மும் ஹக்கும் பொழுது விடிவதற்காக நதிக்கரையில் ஒதுங்கி நிற்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றிப் பேசுகிறான் ஹக். உலகத்திலேயே அபத்தமான முட்டாள் அவன் என்று சொல்கிறான் ஜிம். குழந்தை முழுவதுமாக வேண்டும் என்பதுதான் வழக்கு என்றும் அதை விட்டு விட்டு குழந்தையை எப்படி பாதிப் பாதியாக ஒருவனுக்கு சிந்திக்கத் தோன்றும் என்றும் வாதிடுகிறான். ஜிம்மிற்கு அந்த நீதியை புரிய வைக்க ஹக்கினால் முடியவில்லை. ஒஹியோ நதியும், மிசிசிபி நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கெய்ரோ நகருக்குச் செல்ல திட்டமிடுகின்றனர். அங்குதான் அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக இருக்க முடியும் என ஆசைப்படுகிறான் ஜிம். பனி நிறைய இருந்ததால் அடையாளம் தெரியாமல் கெய்ரோவைத் தாண்டிவிட்டதை உணருகின்றனர்.
ஜிம்மைத் தப்பிக்க வைப்பது தவறு என்றும், டக்ளஸ் சொன்னதுபோல் நரகம்தான் வந்து சேரும் என்றும் ஹக்கிற்கு ஒருபக்கம் தோன்றுகிறது. கூடவே அவன் நல்ல நண்பன் என்றும் புரிகிறது. ஓடிப்போன அடிமை ஒருவனைத் தேடி இரண்டு வெள்ளைக்காரர்கள் கரையில் வருவதைப் பார்க்கிறான். ஜிம்மை கட்டுமரத்தில் இருக்கவைத்து விட்டு ஹக், "யாரும் படகை கரைக்கு இழுக்க வர மாட்டேன்கிறார்கள்" என்று பொய் சொல்கிறான். அவர்களுக்கு பிளேக் நோய் என்று வெள்ளைக்காரர்கள் நினைத்து, கரைக்கு வர வேண்டாமென்று சொல்லி இருபது டாலர் பணத்தை தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
படகு ஒன்றில் மோதி கட்டுமரம் கவிழ்ந்துவிடுகிறது. ஹக் தட்டுத்தடுமாறி கரையேறுகிறான். ஜிம்மைக் காணவில்லை. துப்பாக்கிகளோடு சிலர் வருகின்றனர். ஹக்கை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் கிரேஞ்சர்போர்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஹக் தன் பெயர் ஜார்ஜ் சாக்ஸன் என்றும் தான் ஒரு அனாதை என்றும் சொல்லிக்கொள்கிறான். அந்தக் குடும்பத்தாருக்கு ஹக் பிடித்தமானவனாய் மாறுகிறான். எல்லோருக்கும் இளயவனான பக், ஹக்கிற்கு நெருங்கிய நண்பனாகிறான். அவர்கள் குடும்பத்திற்கும் ஸ்டீபன்சன் குடும்பத்திற்கும் முப்பது வருடத்திற்கும் மேலாக தகராறு. ஒருநாள் கடும் சண்டை நடக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவர் கொல்ல, கடைசியில் கிரேஞ்சர் போர்டு குடும்பத்தில் இளைய மகளும், ஸ்டீபன்சன் குடும்பத்தில் இளைய மகனுமே மிஞ்சுகிறார்கள். இறந்துபோன பக்கை கட்டிப்பிடித்து அழுகிறான் ஹக். நதிக்கரையில் இருக்கும் ஜிம்மோடு பயணத்தைத் தொடருகிறான். ஹக் பிழைத்து திரும்பியதில் ஜிம்மிற்கு பெரும் சந்தோஷம்.
காட்டிற்குள்ளிருந்து கிங் மற்றும் டியூக் என்பவர்கள் வந்து கட்டுமரத்தில் ஏறிக்கொள்கிறார்கள். ஒரு நகரத்தை வந்தடைகிறார்கள். கிங்கும், டியூக்கும் துண்டு பிரசுரங்கள் எழுதி ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். ஜிம்மிற்கு அவர்கள் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கவில்லை. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் 'ரோமியோ ஜூலியட்' வசனங்களை இஷ்டத்திற்கு பேச பத்துப் பேர் போலத்தான் பார்க்கிறார்கள். 'ராயல் நான்சச் ( )' என்றொரு நாடகம் போடப் போவதாகச் சொல்லி 'குழந்தைகளும், பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆண்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கிங் நிர்வாணமாக, உடலெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டு மேடையில் தோன்றுகிறான். ஒரே ஆரவாரம். நாடகம் முடிந்ததாகச் சொல்லி அறிவிக்கவும் கூட்டம் கோபத்தில் கொந்தளிக்கிறது. ஒருவன் கூட்டத்திலிருந்து மேடையில் ஏறி 'நாம் இவர்களை கோபத்தில் எதாவது செய்தால் மொத்த ஊரும் நாம் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி எள்ளி நகையாடும். ஊரில் மற்றவர்களும் ஏமாறட்டும்" என்கிறான். கூட்டம் கலைந்து போகிறது. அடுத்த நாளும் ஒரே ஆண்களின் கூட்டம். ஏமாறுகிறது. மூன்றாவது நாள் கூட்டம் அழுகிய முட்டைகளோடும், செத்த பூனைகளோடும் நுழைகிறது. கிங்கும், டியூக்கும் ஓடுகிறார்கள். ஜிம் தயாராக கட்டுமரத்தில் இருக்கவும் தப்பிக்கிறார்கள்.
ஜிம்மிற்கு காது கேட்காத மகள் எலிசபெத்தின் நினைவுகள் வந்து துயரம் தருகின்றன. கிங் அவன் மீது பெயிண்ட் அடித்து விடுகிறான். ஜிம்மும் அவர்களோடு நகரத்தில் சுதந்திரமாக உலவ முடிகிறது. நகரத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான பீட்டர் வில்க்ஸ் இறந்துவிட்டதாகவும் அவரது இரண்டு சகோதரர்கள் லண்டனிலிருந்து வரவில்லையென்றும் செய்தி கிடைக்கிறது. கிங்கும், டியூக்கும் அந்த இரண்டு சகோதரர்களாகவும், ஹக் பணியாளாகவும் நடிக்க முடிவு செய்கிறார்கள். எல்லாம் நம்பும்படி நடக்கிறது. வீட்டிலிருக்கும் அடிமைகளை விற்கிறார்கள். வீட்டை ஏலம் விட ஏற்பாடு செய்கிறார்கள். கடைசி மகள் மேரி ஜேன் அழுகிறாள். ஹக்கிற்கு அவள் மீது இரக்கமும் அன்பும் ஏற்படுகிறது. உண்மையைச் சொல்லி அங்குள்ள தன் நண்பன் ஒருவனின் வீட்டில் பாதுகாப்பாக அவளை வைக்கிறான். பீட்டர் வில்க்ஸின் உண்மையான சகோதரர்கள் லண்டனிலிருந்து வந்து விட உண்மை வெளிப்படுகிறது. கிங்கும், டியூக்கும் தப்பியோடி நதிக்கரை வருகிறார்கள். ஹக்கை ஏமாற்றிவிட்டு ஜிம்மை ஓடிவந்த அடிமை என்று காட்டிக் கொடுத்து விடுகிறார்கள். ஹக்கிற்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 'நரகமே வந்தாலும் வரட்டும்' என்று ஜிம்மைக் காப்பாற்றத் துடிக்கிறான்.
ஜிம் விற்கப்பட்ட பண்ணைக்கு வருகிறான். ஆண்ட்டி சல்லி அவனை டாம் சாயர் என்று வரவேற்கிறாள். அவள் டாம் சாயரின் ஆண்ட்டி என்பது தெரிந்ததும் ஹக்கிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. மிஸ் வாட்ஸன் இறந்துபோய் விட்டதும் அவளது உயிலில் ஜிம்மை விடுதலை செய்திருப்பதும் இறுதியில் தெரிய வருகின்றன. ஜிம் தன் குடும்பத்தைச் சந்திக்க சுதந்திரமாகச் செல்கிறான்.
கதையில் வரும் பெரும்பாலான வெள்ளையினத்தவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுச் சாகும் கொள்ளையர்களாக, பிளேக் என்றதும் சக மனிதனைக் காப்பாற்றுகிற எண்ணமற்று ஓடுகிறவர்களாக, எப்படியாவது பணம் சம்பாதிக்க அலையும் கிங் மற்றும் டியூக் என்னும் இரட்டையர்களாக, காரணமற்று பழிவாங்குகிற எண்ணம் மட்டுமே கொண்ட கிரேஞ்சர்போர்டு மற்றும் ஸ்டீபன்ஸன்களாக, தாங்கள் மட்டும் ஏமாந்ததோடு நில்லாமல் ஊரே ஏமாறட்டும் என நினைக்கும் மாந்தர்களாக இருக்கிறார்கள். ஜிம் என்னும் நீக்ரோ அடிமை தன்னலமற்றவனாக, களங்கமற்ற நட்பு கொண்டவனாக நிற்கிறான். அப்பாவியான அவனுக்குள் இருக்கும் உண்மை அமைதியாக நிழலாடுகிறது. எல்லோரையும் போல சுதந்திரமாக நடப்பதற்கு அவனுக்குள் ஏற்படும் தவிப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது. மார்க் ட்வைன் சிறுவர் உலகின் வழியாக "பெரியவர்களுக்கான' வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்.
புத்தகம் கேள்விக்குள்ளாவது நாகரீகம் என்ற போர்வையில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும், மதத்தின் பேரில் ஊறியிருக்கும் மூடப் பழக்க வழக்கங்களையும். சிறுவர்களை பகுத்தறியத் தூண்டும் நெருப்பை நாவல் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. அந்த வெப்பம் தாங்க முடியாமல்தான் 'கனவான்கள்', புத்தகத்திற்கு எதிராக வழிவழியாக (நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் நம்பியார் போல) கோபம் கொள்கின்றனர். நாவலின் நடை பேச்சு வழக்கில் இருப்பது கூட தடைவிதிக்க ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டதும், மார்க் ட்வைன் இலக்கிய அமைப்புகளுக்கு சவால் விட்டார். உங்கள் புத்தக விற்பனை மையங்கள் மூலமாக இந்தப் புத்தகத்தை விற்பதை விட வீடு வீடாகச் சென்று விற்பேன் என்றார்.
இனவேற்றுமைகள் களையப்பட்டுவிட்ட சமூகத்தில், இந்த புத்தகம் இன உணர்வுகளைத் தூண்டுவதாக இருக்கும் என்கிறார்கள் ஒரு சிலர். "நமது சமூகத்திலிருந்து இன வேற்றுமைகளை அகற்றிவிட்டால். ஹக்கிள் பெரி ஃபின் கற்றுக் கொடுப்பதற்கு மிக எளிதான புத்தகமாக இருக்கும்" என்கிறார் டேவிட் பிரெட்லீ. 'இன வேற்றுமைகள் இன்று இல்லை' என மெனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பொய்க்கு எதிராக ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்கள் கலகம் செய்து கொண்டிருப்பதாகவும், இந்த நாவலுக்கான எதிர்ப்பின் மூலம் இன வேற்றுமையும், பகைமையும் இன்னும் இருக்கின்றன என்றும் வாதங்கள் முன்வருகின்றன.
அடிமைகளாக இருப்பது என்பது மிக இயல்பான, இயற்கையான ஒரு காரியம் என்பதாக மொத்த சமூகமும் ஏற்றுக்கொண்டிருப்பதை நாவலின் பல இடங்களில் பார்க்க முடியும். மார்க் ட்வைன் சமூகத்தில் நிலவும் இந்த 'மௌன சம்மதத்தை' கடுமையாக எதிர்த்தார். இந்த தீவீரம்தான் மார்க் ட்வைனை பிறகு முழுநேர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக நிலைநிறுத்துகிறது. 1835ல் பிறந்த ட்வைன் 1901 முதல் மரணமடைந்த 1910 வரையிலான தனது வாழ்வின் கடைசிக் காலக்கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பின் உதவித்தலைவராக இருந்திருக்கிறார். ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அமெரிக்க யுத்தவெறிக்கு எதிராக பெரும் பிரச்சாரம் செய்திருக்கிறார். ஒரு சமூகப் போராளியாக வாழ்ந்திருக்கும் அந்த எழுத்தாளரின் புத்தகங்களை இன்று உலகத்துப் பள்ளிகளில் எல்லாம் நமது அருமைக்குரிய சிறுகுழந்தைகள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவை காத்ரீனா புயல் தாக்கிய போது, அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளித்ததிலும், நிவாரண உதவி செய்ததிலும் புஷ் அரசின் மெத்தனத்தை உலகமே கடுமையாக விமர்சித்தது. இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்க காட்டிய வேகம் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதில் இல்லை என்று எதிர்க்குரல்கள் கேட்டன. ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், பொருட்சேதங்களுக்கும் முக்கிய காரணம், பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலார் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. 'ஹக்கிள்பெரி ஃபின்னின் தீரச்செயல்களின்' இரண்டாம் பாகத்தை 120 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு எழுத்தாளர் இன்று எழுத ஆரம்பித்திருக்கக் கூடும்.
எல்லா மண்ணிலும் எம் மனிதர்களே!
அவர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்புவதும், அவர்கள் வேதனையை நம்முடையதாக பாவிப்பதும் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். இதில் எங்கு வருகிறது, எதற்கு வருகிறது தமிழ் இரத்தம், தமிழ் இனம் என்னும் கோஷங்கள் என்றுதான் தெரியவில்லை. குறிப்பாக தமிழ்த்திரையுலத்தினரை நோக்கி எனக்கு இந்தக் கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. இவர்கள் அண்மைக்காலங்களில் மூன்று முறை இயக்கம் நடத்தியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்யென்றால், கர்நாடகாவிற்கு மின்சாரத்தை கொடுக்கக் கூடாது என்று நெய்வேலியில் போராட்டம், ஒகேனக்கல் தண்ணீர் பிரச்சினையின் போது சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், இப்போது ஈழத்தமிழர்களுக்காக இராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஆகிய மூன்றுமே அடிப்படையில் தமிழ் இன உணர்வு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. சமூகம் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளில் ஒதுங்கி நிற்காமல் இப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானதும் அவசியமானதும் ஆகும். இந்தப் பிரக்ஞையை நாம் மதிக்கத்தான் வேண்டும். அதேநேரம் எத்தனையோ சமகாலப் பிரச்சினைகளில் வாளாயிருந்த இவர்கள், இப்படிப்பட்ட இன உணைர்வின் அடிப்படையில் மட்டும் வாளை உருவி நிற்பது முக்கியமாகப்படுகிறது. இராமேஸ்வரத்திற்கு புறப்படுவதற்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா அளித்த பேட்டி கவனத்திற்குரியது. திரையுலகத்தில் 'தமிழ் இன உணர்வு குழு' என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதையே பேட்ஜாகவும் இராமேஸ்வரத்தில் அணிந்திருக்கின்றனர். இங்கு இன உணர்வு மனிதனுக்கு அவசியமா, அவசியமில்லையா என்பதல்ல பிரச்சினை. தமிழன், தமிழ் இனம் என்னும் ஒற்றை அடையாளத்தோடு மட்டுமே இயங்குவது, செயல்படுவது என்பதுதான் யோசிக்க வைக்கிறது.
சரி. அப்படி ஒரு இன உணர்வோடு தொடந்து இயங்குகிறவர்களா இவர்கள்?. தமிழக முதல்வரின் கைங்கரியத்தால்தான் இன்றைக்கு தமிழ்ப் பெயர்களை தங்கள் படங்களுக்கு இந்த தமிழ் இன உணர்வு மிக்கவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்குத் தெரியும். இவர்கள் எத்தனை பேர் தங்கள் படங்களில் தமிழ் பேசும் கதாநாயகிகளையும், கதாநாயகர்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். எந்த மொழி என்றே புரியாத எத்தனை பாடல்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியும். மத்திய அரசு, தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க இவர்கள் என்னவெல்லாம் காரியங்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்று தெரியும். இந்த மண்ணில் நலிந்து கொண்டிருக்கும் எத்தனையோ நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்க இவர்கள் என்னவெல்லாம் முயற்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியும். மகத்தான தமிழ் இலக்கியப் படைப்புகளை எத்தனை பேர் சினிமாவாக்கி மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதும் தெரியும். இவர்களின் போற்றும்படியான தமிழ் உணர்வை இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்குள் எல்லாம் விலாவாரியாக போக விரும்பவில்லை.
அதிகாரத்தின் கோரப்பற்களால் எளிய மனிதர்கள் உலத்தின் எந்த மூலையில் தாக்கப்பட்டாலும் அவர்களுக்காக வருந்துகிறவனே கலைஞனாகவும், இலக்கியவாதியாகவும் இருக்க முடியும். பிஜூத் தீவில் கரும்புத்தோட்டத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக் கண்ணீர் சிந்தியதால்தான் இன்றைக்கும் பாரதி மகாகவியாக போற்றப்படுகிறார். 'கேளடா மானிடா' என்று சொன்னதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. பாரதி இப்போது இருந்திருந்தால் பாலஸ்தீன மக்களுக்காகவும், ஈராக் மக்களுக்காகவும், இலங்கை மக்களுக்காகவும் ஆயிரம் கவிதைகளில் தன் கோபத்தையும், வலியையும் கொட்டியிருப்பார். தனக்காக, தன் இனத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறவர்களாக இல்லாமல் மொத்த மனித இனத்தின் குரலாக கலைஞர்களின் இதயத் துடிப்புகள் ஒலிக்க வேண்டும் என்பதே என் கருத்தும், கனவும். அப்போதுதான் அவர்களின் குரல்கள் சகலதிசைகளிலும் எதிரொலிக்கும். சமயவேலின் இந்தக் கவிதை அப்படியொரு எல்லைகளற்ற பெருவெளியில் கேட்கிறது.
எல்லா மண்ணிலும் எம் மனிதர்கள்
எத்தனை உடைகள் வீடுகள்
எத்தனை பண்பாடுகள், மொழிகள்
எல்லாவகை நிலங்களிலும்
எல்லாவகை மனிதர்களோடும்
கொஞ்ச கொஞ்ச காலம் வாழ விரும்புகிறேன்
பூமி உருண்டை முழுசுக்கும்
என்னை நண்பனாக்குகிற
இந்த நிலக்காட்சிகளை
நான் பெரிதும் நேசிக்கிறேன்
இலங்கையில் துயரப்படும் மக்களுக்காக தமிழனாக மட்டுமில்லாமல் மனிதனாக குரல் கொடுப்போம். அது மொத்த மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வலிமை கொண்டதாயிருக்கும்.
வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர் -1

("மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது.")
"அவர்கள் உடல் ரீதியாக போர்களிலிருந்து தப்பியிருந்தாலும், உள்ளரீதியாக அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இன்றைய சந்ததியிடம் இந்த நாவல் பேச முயற்சிக்கும்." இப்படித்தான் All quiet on the western front நாவலைப்பற்றிய ஒரு வரி முன்னுரையாக ரெமார்க்யூ குறிப்பிடுகிறார்.
கனவுகள் ததும்பிய 18 வயதுப் பையனாக இருந்தபோது அவர் ஜெர்மனிக்காக முதல் உலகப்போரில் பங்குபெற வேண்டியதிருந்தது. போர்முனையில் குண்டுகளின் சத்தங்களோடும், குதிரைகளின் குளம்படி சத்தங்களோடும் நான்கு வருடங்கள் கழிகின்றன. 1918ல் போர் முடிவடைகிறது. தனது ஊருக்குத் திரும்புகிறார். வெறுமையும், இழப்புகளும் அலைக்கழிக்கின்றன. முடிந்த வாழ்க்கை விரட்டுகிறது. இறந்துபோன நண்பர்களின் முச்சுக்காற்று இரவுகளில் அருகில் கேட்கிறது. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு போர் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். போரைப்பற்றி சிந்திப்பதை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் அது கருநிழலாய் அவர் தலைக்கு மேல் தொங்கியபடி சித்திரவதை செய்கிறது. போர் மகத்தானது என்கிற அபிப்ராயம் அவருக்கு துளியும் இல்லை. மாறி மாறி ஊட்டப்படுகிற தேசபக்தி குறித்த பிரமைகளுக்கு மாற்றாக தன் எழுத்தைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தங்களோடு ரெமார்க்யூ எழுதி 1929ல் வெளிவந்த புத்தகந்தான் All quiet on the western front.
அதற்கு முந்தைய நாவல்களில், போர் என்பது பெருமிதங்களையும், சாகசங்களையும் தேக்கி வைத்த நினைவுப்பரப்பாகவே படியவைக்கப்பட்டிருந்தது. பெரும் வெற்றி பெற்றவர்கள் காவியநாயகர்களாக போற்றப்பட்டார்கள். அந்த மயக்கங்களிலிருந்து ரெமார்க்யூ மக்களை எழுப்பியபடி இருந்தார். பிரமைகளை தகர்த்தெறியும் உண்மைகளை பேசிக்கொண்டிருந்தார். முதல் வருடத்திலேயே பத்து லட்சம் பிரதிகள் விற்றன. அதாவது, முதல் உலகப் போரில் ஜெர்மனி தன்மக்களில் எத்தனை பேரை இழந்திருந்ததோ, அதில் ஏறத்தாழ பாதியளவு பிரதிகள். அமெரிக்க சினிமாக் கம்பெனி ஒன்று 1930ல் அந்த நாவலைப் படமாக்கியது. 1932க்குள் 29 மொழிகளில் வெளியானது. யாருமறியாத பத்திரிக்கையாளனாக அப்போது இருந்த ரெமார்க்யூ உலகமே திரும்பிப்பார்த்த எழுத்தாளனாகியிருந்தார்.
ஜெர்மனியின் கீர்த்திக்கு அந்த நாவல் களங்கம் கற்பிக்கிறது என்றனர் நாஜிக்கள். ரெமார்க்யூவை 'பிரெஞ்சு யூதன்' என்றும், 'வயதான மனிதன்' என்றும், 'யுத்த களத்தையே அறியாதவன்' என்றும் பொய்களை பரப்பினர். கோயபல்ஸ் இதனை 'யூதப்பொய்' என்று வர்ணித்தான். 1932ல் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. 'ஜெர்மனியே எழுந்திரு' என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டு ஹிட்லரின் வெறியர்கள் தெருக்களில் புத்தகத்தை தீ வைத்து எரித்தனர். அவரது படம் திரையிடப்பட்ட அரங்குகளுக்கு

நாவல் துவங்குகிற புள்ளியிலிருந்தே, போருக்கு எதிரான குரல் கேட்கிறது. முதல் உலகப்போர் ஆரம்பமானதும், 18 வயதே பால் பாமர் தனது நண்பர்களுடன் ஜெர்மனி இராணுவத்தில் சேர்ந்து மேற்கு முனையில் போரிட்டு வருகிறான். அவனது கண்களின் வழியே யுத்தகளமும் அந்தக் காலமும் விரிகிறது. அவனது சிந்தனைகளிலிருந்து கதை நகர்கிறது. பாமரின் நண்பர்களில் ஒருவனான முல்லர் ஒரு புத்தகப் புழு. ஆல்பிரட் கிரோப் புத்தி கூர்மையானவன். இராணுவ அதிகாரிகளின் விலைமாதுக்களை விரும்பும் தாடி வைத்த லியர், அப்புறம் ஜேடான், வாயில்லா மிருகங்களை நேசிக்கும் டெட்டரிங், வெஸ்தஸ், காட்டிலாகா அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட்ட கெம்மரிச் ஆகியோரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஓய்வற்ற, கடுமையான இரண்டு வாரங்களுக்குப் பிறகு பால் பாமரும் அவனது தோழர்களும் போர்முனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். 150 பேராக சென்றவர்கள் 80 பேராக குறைந்திருக்கிறார்கள். பசி அவர்களை அலைக்கழிக்கிறது. 150 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருந்தாலும் சமையற்காரன் அந்த 80 பேருக்கு உண்டான பங்கினை மட்டும் கொடுக்கிறான். வந்தவர்கள் இறந்து போன வீரர்களின் பங்கினையும் கேட்கிறார்கள். மறுக்கப்படுகிறது. சத்தம் போடுகிறார்கள். இராணுவ ஒழுங்கை பசி மீற வைக்கிறது. இறந்து போன 70 பேரை பற்றிய பிரக்ஞை அப்போது யாருக்கும் இல்லாமல் போகிறது.
உணவு முடிந்ததும் கண்ணிவெடியில் சிக்கி உயிழந்து கொண்டிருக்கும் அவனது பள்ளி தோழன் கெம்மரிச்சை போய் பார்க்கிறார்கள். நண்பன் முல்லர் கெம்மரிச்சின் அருமையான தோல் ஷூக்களை யார் வைத்துக்கொள்ளலாம் என பேசுகிறான். "நீங்கள் எல்லோரும் இரும்பு இளைஞர்கள்' என அழைத்த அவர்களது பள்ளி ஆசிரியர் கண்டோ ரெக்கின் வார்த்தைகள் இப்போது வேதனை கலந்த சிரிப்பாக கிரோப்பின் உதடுகளிலிருந்து வெளிப்படுகிறது. பாமருக்கு கெம்மரிச்சின் தாயாரின் கண்ணீர் ததும்பும் முகம் நினைவுக்கு வருகிறது. இராணுவத்துக்கு அனுப்பும்போது 'இவனை நல்லாப் பாத்துக்கப்பா" என்று தன்னிடம் அந்த அன்பு உருவம் சொன்னது பாமரை வதைக்கிறது. கெம்மரிச்சின் கால்களுக்கு வைத்தியம் செய்ய டாக்டர் மறுக்கிறான். ஏற்கனவே இது போல ஆறேழு கால்களுக்கு வைத்தியம் செய்தாகிவிட்டதாக கூறிச் சென்றுவிடுகிறான்.
பள்ளியில் படிக்கிற காலத்தில் கவிதை எழுதக்கூடியவனாக, நுட்பமான பார்வைகளோடு பொங்கித் திளைக்கூடியவனாக இருந்தவன் பாமர். தனக்கு நேர்ந்திருக்கும் காலத்தை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் துயரத்தில் வீழ்கிறான். இதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி, தனது வசந்தகாலத்தை நினைக்காமல் இருப்பதே என்று முடிவு செய்கிறான். மனிதர்களை அவர்களின் இயல்பான உணர்வுகளிலிருந்து போர் கட்டாயமாக பிரித்து எடுக்கிறது.
குரூரமான பயிற்சிகள் அளிக்கும் இராணுவ அதிகாரி ஹிம்மல்ஸ்டாஸ் மீதான வெறுப்பும், பாமரையும் அவனது பள்ளித் தோழர்களையும் இராணுவமயமாக்க சிரத்தை எடுத்த ஆசிரியர் கண்டோ ரெக் குறித்த நினைவுகளும், போர்க்களத்தில் பறி கொடுத்த தோழர்களின் உயிரற்ற பார்வைகளுமாய் நாட்கள் நகர்கின்றன. தனது ஷூக்களை முல்லரிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, கெம்மரிச் சில நாட்கள் கழித்து கண்களில் நீர் வழிந்தோட இறந்து போகிறான். அவனது கடைசித் தருணங்களில் கூடவே இருக்கிறான் பாமர். அந்த படுக்கை இன்னொரு காயம்பட்ட வீரனுக்கு தேவைப்படுகிறது. உடனடியாக கெம்மரிச்சின் உயிரற்ற உடல் அகற்றப்படுகிறது.
கேட் என்றழைக்கப்படும் 40 வயது நிரம்பிய முன்னாள் இராணுவக்காரன் தனிஸ்லாஸ் கச்சென்ஸ்கியுடன் நட்பு ஏற்படுகிறது. கேட் ஒரு துப்புரவுத் தொழிலாளியுமாவான். பாமருக்கு போரின் நிஜமுகத்தை விளக்குகிறான் அவன். அதிகாரம் மனிதர்களுக்குள் வக்கிரபுத்தியைக் கொண்டு வருவதைச் சொல்கிறான். கிரோப் ஒரு கற்பனைச் சித்திரம் தீட்டுகிறான். போர் ஒரு விழா போலக் கொண்டாடப்பட வேண்டும் எனவும், இரண்டு நாட்டின் இராணுவ அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்களுக்கு நடுவில் நின்று போரிட வேண்டும் எனவும், கடைசியாக யார் ஒருவர் பிழைக்கிறாரோ அவரே அந்த நாட்டை ஆள வேண்டும் எனவும் சொல்கிறான்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை எப்படி தவறாக வளர்த்திருக்கிறார்கள் என்பதை யோசிக்கிறான் பாமர். பிரெஷ்யாவின் (ஒன்றுபட்ட ஜெர்மனியின்) கனவாக உருவாக்கப்பட்டிருந்த 'சக்தி வாய்ந்த இராணுவம்' என்பது வயதானவர்களிடம் உறைந்திருப்பதை பார்க்கிறான். பாமரும், அவனது நண்பர்களும் இராணுவ வழக்கங்களை முட்டாள்தனமானதாகவும், மூத்த இராணுவ அதிகாரிகள் இளையவர்களுக்கு துரோகம் செய்வதாகவும் கருதுகிறார்கள். போருக்குப் பிறகு நமக்கு என்ன மிஞ்சப் போகிறது என்பதை பாமரும் அவன் நண்பர்களும் விவாதிப்பது ஒரு பெரும் வெற்றிடத்தைக் காட்டுகிறது.
புதிது புதிதாக இராணுவத்திற்கு 17 வயது கூட நிரம்பாத இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பாலும் அவனது நண்பர்களும் பழைய இராணுவக்காரர்கள் ஆகிறார்கள். பதுங்கு குழிகளும், பீரங்கியின் உறுமல்களும், எப்போதும் புலன்களை சத்தங்களின் மீது செலுத்தி கொண்டிருக்கும் வீரர்களுமாய் போர்க்களம் காட்டப்படுகிறது. கூடவே பயிற்சி பெற்று வந்த ஒரு இளம் படைவீரன் குண்டுவீச்சில் கண்முன்னால் சதைகள் வெடிக்க தூக்கியெறியப்படுகிறான். கண்ணிமைக்கும் நேரத்தில் அடையாளமற்றுப் போய்விடுகிறான். ஒரு படைவீரனுக்கும் இந்த மண்ணுக்குமான உறவு சோகம் சொட்டும் கவிதையாக இருக்கிறது.
எல்லா உணர்வுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பழைய சடலங்களோடு, இறந்து போன புதிய மனிதர்கள் தூக்கியெறியப்படுகின்ற காட்சி தாங்க முடியாததாயிருக்கிறது. மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் நிர்வாண சடலங்களையும், மண்ணில் பரவிக்கிடக்கும் மனித உறுப்புக்களையும் ஸ்பரிசிக்க வேண்டியிருக்கிறது. காயமடைந்த குதிரைகளின் விசித்திரமான அலறல் பெரும் அதிர்வுகளோடு எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. போருக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத, அந்த கம்பீரமான பிராணிகள் யுத்தகளத்தில் மரண அவஸ்தையோடு கதறுவது மனித இனத்தையே சபிப்பது போல இருக்கிறது.
தன் வகுப்பு நண்பர்கள் பலர் இறந்து போனதை எண்ணி கிரோப் வருத்தமடைகிறான். ஜெர்மனி தன் வல்லமையை இழந்து வருவது தெரிகிறது. பாமர் தன் இளமைப்பருவத்தையே இழந்து விட்டதாய் வருந்துகிறான். இடையில் அவனுக்கு இரண்டு வாரம் விடுமுறை கிடைக்கிறது. சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அம்மா புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். ஊரே பசியால் வதங்கிக்கொண்டிருக்கிறது. எதையும் சொந்தமானதாக பாமரால் உணரமுடியவில்லை. "அங்க ரொம்ப கஷ்டமா இருக்கிறதா" என்று அம்மா கேட்கும்போது பொய் சொல்கிறான். தனது படுக்கையறையில் உட்கார்ந்து புத்தகங்களையும், படங்களையும் பார்க்கிறான். திரும்ப முடியாத அந்தக் குழந்தைப் பருவம் சுகமாக இருந்தாலும் காலத்தின் நிழல்களாகவேத் தெரிகின்றன. கெம்மரிச் வீட்டிற்குச் சென்று அவனது தாயிடம், கெம்மரிச்சின் மரணத்தைச் சொல்கிறான். "அவன் எப்படி இறந்தான்" என்னும் அந்த தாயின் கேள்விக்கு, காயம்பட்டு உடனடியாக இறந்து விட்டதாக பொய் சொல்கிறான். திரும்பவும் போர்க்களத்திற்கு செல்வதற்கு முந்தைய இரவு பாமரின் தாய் அவனை வந்து பார்க்கிறாள். தூங்குவது போல பாசாங்கு செய்கிறான். அவளது மார்பில் சாய்ந்து, அழுது அப்போதே இறந்துவிட வேண்டும் போல இருக்கிறது. இனி லீவில் ஊருக்கு வரக்கூடாது என்றும், வந்தால் தாய்க்கும், தனக்கும் வேதனைதான் அதிகரிக்கும் என்றும் முடிவு செய்கிறான்.
ஆறு வார கால பயிற்சிக்கு பாமர் செல்கிறான். அங்கே சிறையில் ரஷ்யக் கைதிகளைப் பார்க்கிறான். ஜெர்மனிய வீரர்களிடம் உணவுக்கு அவர்கள் பிச்சை கேட்கிறார்கள். பாமர் அவர்களை இரக்கத்துடன் பார்க்கிறான். விவசாயிகளின் முகங்களாகத் தெரியும் அவர்களுக்கும் தனக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. இதுவரை பார்த்தறியாத அந்த மனிதர்களை ஒரே வார்த்தையில் 'எதிரிகள்' என்று எப்படி அழைக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒரு கைதி இரவில் வயலின் வாசிக்க, காற்றில் தனியாக அலையும் அந்த சுருதி துயரத்தை அதிகரிக்கிறது. பாமரின் தந்தையும், சகோதரியும் அவனைப் பார்க்க வருகிறார்கள். மௌனத்தில் உறைந்து போகிறார்கள். தாய் அவனுக்குச் சில கேக்குகளைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறாள். அந்தக் கேக்குகளில் இரண்டை ரஷ்யக் கைதிகளுக்கு கொடுக்கிறான் பாமர்.
மீண்டும் போர்க்களத்திற்கு வருகிறான். கேட், முல்லர், கிரோப் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ஜெர்மானியச் சக்கரவர்த்தி கெய்சர் வருகிறார் என்று அவர்களுக்கு புதுச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. எந்த ஆகிருதியுமற்ற அந்த கெய்சரைப் பார்த்து அலுப்புத் தட்டுகிறது. போர்கள் இது போன்ற தலைவர்களுக்காகவே நடக்கின்றன என்றும், அவர்கள் மட்டுமே வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறுவார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
போர்க்களத்தில் ஒரு வீரன் தனது நாட்டுக்காக போரிடவில்லை என்பதையும், தன் உயிரை பாதுகாப்பதற்காகவே போரிடுகிறான் என்பதையும் நாவல் திரும்ப திரும்ப பல சம்பவங்களில் சொல்கிறது. ஒருமுறை போர்க்களத்தில் எதிரிகளின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க பாமர் ஒரு பதுங்கு குழியில் ஒளிந்து கொள்கிறான். அங்கு ஒரு 'எதிரி'யும் திடுமென நுழைகிறான். பாமர் அவனைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். குற்றுயிரோடு முனகும் அந்த பிரெஞ்சுப் படைவீரனுக்கு பாமர் கட்டுப் பொட்டு தண்ணீர் கொடுக்கிறான். இறந்துபோன அந்த மனிதனிடம் தான் அவனைக் கொல்ல விரும்பவில்லை என கதறுகிறான். ஒரு பெண்ணும், ஒரு பெண் குழந்தையும் நிற்கும் போட்டோ ஒன்றை இறந்தவனின் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்து அழுகிறான். கேட்டும், கிரோப்பும் பாமரை சமாதானப்படுத்துகிறார்கள்.
பாமரும், கிரோப்பும் ஒரு தடவை காலில் காயம்பட்டு அவதிப்படுகிறார்கள். ஆஸ்பத்திரியில் தினந்தோறும் பலர் இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான் பாமர். வயிற்றில் காயத்தோடு இருக்கும் லெவண்டோ வ்ஸ்கி என்னும் நாற்பது வயது வீரன் ஒருவன் தன்னைக் காண நெடுநாட்களுக்குப் பிறகு வரும் மனைவியோடு சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறான். மற்ற நோயாளிகள் அதற்கு உதவி செய்கிறார்கள். கிரோப் லெவண்டோ வ்ஸ்கியின் குழந்தையை வைத்து விளையாடுகிறான். அவனுடைய காயத்தின் ரணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பாமருக்கு லீவு கிடைக்கிறது. அவனது தாய் முன்னைக் காட்டிலும் கஷ்டப்படுகிறாள். திரும்ப போர்க்களத்திற்கு வரும் பாமருக்கு போர் என்பது தன் தாய் கஷ்டப்படும் புற்று நோயைப் போலத் தெரிகிறது. முல்லர் எதிர்ப்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். அவனிடமிருந்து ஷூக்களை பாமர் பெற்றுக் கொள்கிறான். அவை கெம்மரிச்சுடையவை. தொடையில் ஏற்பட்ட காயத்தால் லியர் இறந்து போகிறான். 1918ன் கோடை கடுமையாக இருக்கிறது. பாமரின் நண்பர்களில் மிஞ்சியிருந்த கேட்டும் இறந்து போகிறான்.
போர் சீக்கிரம் முடிவடையவில்லையென்றால் தலைவர்களை மக்கள் எதிர்க்கும் நிலை வரும் என்றொரு கருத்து பரவுகிறது. ஜெர்மனி நாளுக்கு நாள் பலவீனப்பட்டுப் போகிறது. போர் முனையில் விஷவாயுவை முகர்ந்து பாமர் திணறுகிறான். அவன் வீட்டுக்குச் செல்ல பதினான்கு நாட்கள் லீவு தரப்படுகிறது. ஆனால் சொந்த ஊருக்குச் சென்று நடை பிணம் போலத் தானே இருக்கப் போகிறோம் என்று நினைக்கிறான். எத்தனையோ குண்டுவீச்சிலிருந்து தப்பித்த தன்னிலிருந்து வாழ்க்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாய் ஒரு வெறுமை அழுத்துகிறது.
1918 அக்டோ பரில் ஒரு நாளில் பாமர் இறுதியாக கொல்லப்படுகிறான். விடுதலை பெற்ற சந்தோஷம் அவன் முகத்தில் நிலைக்கிறது. 'All quiet on the western front'(மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது) என்ற வாசகங்களோடு இராணுவ முகாமிற்கு ஒரு தந்தி வருகிறது. நாவல் இத்துடன் முடிவடைகிறது.
போருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டு மனிதகுலத்தின் மீது ஒரு நீண்ட விசாரணையை இந்த நாவல் நடத்தியிருக்கிறது. யார் வென்றாலும், யார் தோற்றாலும் எல்லாவற்றையும் இழக்கப் போவது இருதரப்பு மக்கள் என்பதை வெறுமை படர, படர உணர்த்தி விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் பருவங்கள் அதுபாட்டுக்கு வழக்கம்போல் மாறிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'போர் இயற்கைக்கு விரோதமானது' என்பதை குறிப்பறிய வைக்கிறது. முன்பின் தெரியாத இன்னொரு நாட்டின் ஒரு வீரனை எந்த சம்பந்தமுமில்லாமல் கொல்ல வேண்டியிருக்கிறது. பிறிதொரு நேரத்தில் கொன்றவனும், கொல்லப்படுகிறவனும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கக்கூட முடியும் என்றெல்லாம் நாவல் நம்மிடம் உரையாடுகிறது. தேசம் என்றும், மண் என்றும் உருவேற்றி அதற்குள் தேசீயவாதம் என்னும் வெறியை ஊட்டி, வல்லரசு என்று இராணுவசக்தியை வளர்ப்பது யாருக்காக என்று அதிகாரத்தின் மீது கணைகளை இந்த நாவல் வீசியிருக்கிறது.
மிகச் சரியாக உணர முடிந்தால் இந்த நாவல் பகவத் கீதைக்கும் நேர் எதிரான கலகக்குரல். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணனோடு இந்த நாவல் அனுபவத்தின் தளத்தில் நின்று எதிர்வாதம் செய்கிறது. இந்த அரசியலைப் புரிந்து கொண்டதால்தான் நாஜிக்கள் அங்கு இந்த நாவலை தடை செய்திருக்கிறார்கள்.
போர் குறித்த கொடூரங்கள் பேசப்பட்டதால் இந்த நாவலை வலதுசாரிகள் எதிர்த்தனர். என்னதான் போரை எதிர்த்து பேசினாலும், நாவலின் கதாநாயகன் கடைசிவரை போர் வீரனாக இருப்பது எதிர்மறையானது என்று இடதுசாரிகளும் விமர்சித்தனர். 1952ல் தடை நீங்கினாலும், நாவலில் வரும் பாமரின் கதாபாத்திரம் போல, ரெமார்க்யூ தனது சொந்த ஊருக்கு கடைசி வரை திரும்பவில்லை. 1970, செப்டம்பர் 25ல் ரிமார்க்யூ ரோமில் இறந்து போகிறார். அவர் பிறந்த ஜெர்மனியில் ஒரு வார இதழில் அஞ்சலி செலுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவரது புகழ்பெற்ற 'மேற்கு முனையில் அமைதி நிலவுகிறது' பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த புத்தகம் மட்டும் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இந்த தடை செய்யப்பட்ட புத்தகம் இருக்கிறது. இதற்குப் பிறகு போரை எதிர்த்து ஏராளமான இலக்கியங்கள் வந்திருக்கின்றன. அமெரிக்காவின் யுத்த வெறிக்கு எதிராக இன்று உலகம் முழுவதும் திரண்டு நிற்கிறார்கள். இதவிட இந்த நாவலின் வெற்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
ஆனாலும்- 2006, ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் இஸ்தான்புல் நகரத்து நீதிமன்றத்தில் எழுத்தாளர் பெரிஹன் மேக்டன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். துருக்கியில் அனைவரும் குறைந்த பட்சம் 15 மாதங்களாவது இராணுவத்தில் பணிபுரிந்திருக்க வேண்டுமாம். இதற்கு எதிரான கருத்துடன் அவரது நாவல் ஒன்று சமீபத்தில் வெளிவந்திருக்கிறதாம்.
அடிபட்டாலும் அதிகாரம் தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது... மீண்டும் ஒருமுறை தோற்றுப் போவதற்கு!
இது வேறு இதிகாசம்

எத்தனை கோணங்கள், எத்தனை பார்வைகள்

செம்பழுப்பான சீரகத்தண்ணீரோடு 'கலாபவனின்' நினைவுகள் இன்னமும் நிழலாடுகின்றன. ஜான் ஆபிரஹம் தேசீய அவார்டுக்கான டாகுமெண்ட்ரி மற்றும் குறும்படங்களுக்கான விழா அது.Federation of film Societies of India வின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியின் சார்பில் SIGNS-2006 என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் நடந்தது.
முன்னூறுக்கும் மேல் வந்த படங்களிலிருந்து 25 டாகுமெண்ட்ரி படங்களையும், 12 குறும்படங்களையும் போட்டிக்கு தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதில் social,Gender ,Environment ,History ,Biography அப்புறம் என அவார்டுக்கான படங்கள் தேர்ந்தெடுப்பதற்கான உட்பிரிவுகளும் உண்டு. அந்த டாகுமெண்டரிகளில் 'இரவுகள் உடையும்' படமும் ஒன்று. SIGNS-2006விலிருந்து அழைப்பு வந்திருந்தது. 6 நாட்கள் தங்க விசாலமான இடம் கொடுத்து அனைத்து படங்களையும் பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தார்கள். கேரள அமைச்சர் எம்.ஏ.பேபி விழாவைத் தொடங்கி வைத்தார்.
போட்டிக்கு வந்த படங்கள் தவிர, focus என்று - போட்டிக்கு வந்து தேர்ந்தெடுக்கப்படாத- ஆனால் முக்கியமான 43 படங்கள் திரையிட்டார்கள். அது போக, இந்தியத் திரைப்படப் பிரிவின் படங்கள், SIGNS-2006 சார்பில் திரையிட்ட படங்கள், அனிமேஷன் படங்கள் என்று மொத்தம் 92 படங்கள்! மழையும், மரங்கள் அடர்ந்த சாலைகளுமாய் விடிந்த நாட்களோடு ஒட்டுமொத்தமாக ஒரு இந்திய அனுபவத்தை பெற முடிந்தது.
காயங்களும், கவிதைகளுமாய் கொட்டிக்கிடக்கிற கேரளத்து வாய்க்கால் பாதைகள் (Ways and Words ), அசாம் தேயிலைத்தோட்டத்து மக்களின் கனவுகள் புதைந்த மலைப்பிரதேசம் (Land of Driggers ), மின்சாரமற்ற இமயமலையின் அடிவாரக் கிராமம் ஒன்றில் நீரிலிருந்து வெளிச்சம் பெறும் மனிதர்கள் (Three man and a bulb ), உப்பு வயல்களில் பாவும் கால்களோடு தமிழக கடற்கரையோரத்து மக்கள் (உப்புக்காற்று), இருட்டில் வெளிச்சப்புள்ளிகளாய் விரிந்து கிடக்கும் பம்பாய் (7 Islands and a metro ), பனிபடர்ந்த இமயமலையின் மேலே ஆட்டுப்பாலும், காற்றுவெளியுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பக் இனத்து மக்கள் (Riding solo to the top of the world), கல்கத்தாவின் நெரிசலான குடியிருப்பில் வாழ்வுக்கும், கல்விக்குமாய் மல்லுக்கட்டுகிற ஆண்களற்ற குடும்பத்தின் இரண்டு பெண்கள் (shaja), ஹைடெக் உலகத்து அவசரவாழ்வில் தன் கண்களைத் தேடும் இளைஞன் (Mouse race), நகரத்து இரவில் புணர்ந்து காலையில் ஒருவரை ஒருவர் அறியாமல் எதிர் எதிரே செல்லும் அந்த ஆணும், பெண்ணும் (Scribbles of the city ), மழையிலும், வெயிலிலும் காலவெளிகளைத் தாண்டி நிற்கும் கல்லில் வடிக்கப்பட கலாச்சாரமும் வரலாறும் (Khajurho) என இந்திய நிலப்பரப்பின் வசீகரங்களும், பாரம்பரியங்களும், சோகங்களும், சிந்தனைகளும் டிஜிட்டல் பதிவில் பார்வையாளனுக்குள் கலந்தபடி இருந்தன.
கேரளத்துக்குரிய சிறப்பு இந்த ஆவணப்படங்களுக்குள் ததும்பிக் கொண்டிருக்கிறது. தங்கள் மண்ணில் பிறந்த கலைஞர்களை போற்றிப் பாதுகாக்கிற கவனமும், சிரத்தையும் மரபில் ஊறிய இயல்பாக வெளிப்படுகிறது. தேடித் தேடிச் சேர்த்திருக்கிறார்கள். நாடோடியைப் போல அலைந்து திரிந்த சிற்பக் கலைஞர் அசோகன் புதுவை (As if in the dark), இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்னனின் இளமைப் பருவம் (Finger print ), கதகளி கலைஞர் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (Directed by Adoor Gopalakrishnan), மலையாளச் சினிமாவில் நடிகராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக பரிணமித்த முத்துக்குளம் ராகவன் பிள்ளை (Malayala cinemayayude akshara guru ), 1935ல் முதன்முதலாக சினிமா எடுத்த ஜே.சி.டேனியல்(The Lost Life ), மலையாலக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் (Blue sun and Green moon ) என ஒவ்வொருவரையும் பற்றி டாகுமெண்டரிகள் எடுத்து உலகறியச் செய்திருக்கிறார்கள். தமிழகத்து மண்ணோடும், மக்களோடு கலந்து நிற்கிற எத்தனையோக் கலைஞர்கள் காலத்தின் நினைவுகளிலிருந்து மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்னும் வருத்தம் மேலோங்கி வந்தது. எதிர்வரும் சந்ததிகளுக்கு அந்த வேர்களை அடையாளம் காட்டாமல் நமது முகங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. SIGNS-2006ன் மிக முக்கியமான சிறப்பம்சமாக பேசப்பட்டது, சமகாலத்தில் நடந்த முக்கியமான மக்கள் போராட்டங்களைப் பற்றிய படங்கள். இராணுவத்தை எதிர்த்து மணிப்பூர் மக்கள் நடத்திய கொதிப்பு மிக்க இயக்கம் (ASFPA 1958), இராணுவத்தினால் காணாமல் போன தங்கள் கணவரைத் தேடியலையும் ஆயிரக்கணக்கான காஷ்மீரத்து மூஸ்லீம் பெண்களின் கேள்விகள் (Waiting...), நர்மதா அணையை எதிர்த்து அம்மக்கள் நடத்திவரும் போராட்டம் (Redefining the peace ), பறிக்கப்பட்ட தங்கள் வாழ்க்கையை மீட்க தமிழ்நாட்டில் சாலைப்பணியாளர்கள் போராடிய மூன்றரை வருடங்கள் (இரவுகள் உடையும்), கேரளத்தில் ஆதிவாசிகள் சிந்திய இரத்தம் (Three narratives ) ஆகியவை பார்வையாளர்களை அதிர வைத்தன. அதனால்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்த நடுவர்குழு ஒரு முக்கிய பரிந்துரையையும் முன்வைத்தது. டாகுமெண்டரிகளில் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உட்பிரிவுகளோடு இனி people's resistence என இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
அரங்கு நிறைந்த பார்வையாளர்களாக இல்லாவிட்டாலும் எப்போதும் இருநூறிலிருந்து முன்னூறு பார்வையாளர்கள் இருந்தனர். SIGNS 2005ஐக் காட்டிலும் இது அதிகம் என விழாவை நடத்திக் கொண்டிருந்தவர்கள் குறிப்பிட்டார்கள். ஆவணப்படம் மற்றும் குறும்படங்களுக்காக அவர்கள் நடத்திய இரண்டாவது விழாதான் அது. கைரலி, ஏசியாநெட் தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு நாளும் இந்த விழாவைப் பற்றி செய்திகளும் முக்கிய படங்களின் இயக்குனர்களிடம் பெற்ற பேட்டிகளும் ஒளிபரப்பாகியது. சன் டி.வி குரூப் சூர்யாவுக்கு வேறு முக்கிய செய்திகள் இருந்திருக்கும் போல.
ஒவ்வொரு நாளும் படங்களை இயக்கியவர்களோடு பார்வையாளர்கள் உரையாடிய open forum சுவராஸ்யமாக இருந்தது. ஆண்களும், பெண்களுமாய் நிறைய இளைஞர்கள் சீரியஸாக பங்கெடுத்துக் கொண்டனர். கொஞ்சம் 'பெரிய சினிமா' பாணியில் ஒரு காதல் கதையை எடுத்திருந்த இயக்குனர் ஒருவரை கடுமையாகச் சாடிவிட்டனர். "ஜான் ஆபிரகாம் நினைவாக நடத்தப்படும் இந்த விழாவுக்குரிய படமா இது?" என்று விரட்ட, அந்த இயக்குனர் கடைசிவரை தலைகுனிந்தே இருந்தார். புரியாமல் இயக்குவது எப்படி படமாகும் என ஒன்னொரு இயக்குனரைக் கேட்டனர். "நல்ல சினிமாக்களைப் புரிந்து கொள்ள ஒரு பயிற்சி வேணும்" என்றார் அந்த இயக்குனர். இதனையொட்டி, மாறி மாறி நடந்த விவாதங்கள் நேரமின்மையால் முடிவுக்கு வந்தது. "யதார்த்தங்களற்ற ஒரே பாணி சினிமாப் படங்களைப் பார்த்து பார்த்து நாம் ஒரு வரையறைக்கு ஆட்பட்டிருக்கிறோம். ஆனால் அது மட்டுமே சினிமா அல்ல. சில சினிமாக்களை உடனே புரிந்து கொள்ள முடியாது. தொடர்ந்து பல்வேறு சினிமாக்களைப் பார்த்து பார்த்து பயிற்சி எடுத்துத்தான் ஆக வேண்டும்" என்பதில் அந்த இயக்குனர் உறுதியாக இருந்தார். சில இயக்குனர்கள் தியேட்டரில் திரையிடும்போதே தங்கள் படத்துக்குரிய ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு open forum வராமல் தலைமறைவானதும் நடந்தது.
நடுவர் குழுவில் பரிசுக்குரிய சிறந்த படங்களாக AFSPA 1958,Waiting , Beyond the wheel , Riding solo to the top of the world , Vedio Game , I am the very beautiful , Kadal Theerathu ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டன. இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பரிசளித்து வாழ்த்தினார்.
AFSPA-1958
மணிப்பூரில் உருவான பிரிவினைவாத இயக்கத்தையொட்டி 1958ல் Armed Force Special Power Actஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தப் பின்னணியில், 2004 ஜூலை 11ம் தேதியிலிருந்து நாட்குறிப்புகளாக நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இராணுவம் சந்தேகப்பட்ட மனோரமா தேவி என்னும் இளம்பெண்ணை வீட்டிலிருந்து ஒருநாள் தூக்கிக்கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் கற்பழித்துக் கொன்று விடுகிறது. நடந்ததை அறிந்ததும் மணிப்பூரே கொந்தளிக்கிறது. வயதான பெண்மணிகள் இராணுவ முகாம் வாசலில் நிர்வாணமாய் படுத்து "ஏ...தேவிடியாப் பசங்களா! வாங்கடா...ஒங்க வெறியைத் தணித்துவிட்டுப் போங்கடா" என்று வான் நோக்கி கைகளைத் தூக்கி கதறும்போது நாடி நரம்பெல்லாம் ஆடிப்போகிறது. ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பேரணி நடக்கிறது. முதலமைச்சர் மத்திய அரசிடம் பேசுவதாகச் சொல்கிறார். மாணவர்கள் இராணுவ முகாம் நோக்கி பேரணி நடத்துகிறார்கள். போலீஸ் இராணுவத்திற்குக் கொஞ்சமும் சளைக்காமல் மிருகங்களைப் போல அவர்களைத் தாக்குகிறது. மீண்டும் இரண்டு நாட்களில் நெஞ்சில் மகாத்மா படத்தைக் குத்திக் கொண்டு அவர்கள் ஊர்வலம் செல்கிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். மூத்த பிரஜைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். AFSPA-1958-ஐ ரத்துச் செய்ய வேண்டும் என மணிப்பூர் தெருக்களெங்கும் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மக்களின் கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சர் பரிந்துரை செய்ததை மத்திய அரசு நிராகரிக்கிறது. மாணவர்கள் உடலில் தீ வைத்துக் கொண்டு நீண்ட சாலையில் ஓடுகிறார்கள். மாணவர் தலைவன் முழுவதுமாய் எரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் "எங்களுக்கு சுதந்திரம் இல்லை. இராணுவம் வெளியேற வேண்டும். தொடர்ந்து போராடுவோம்." என மரண வாக்குமூலம் தருகிறான். சில மணி நேரங்களில் இறந்தும் போகிறான். அவனது உடலை காவல்துறையே எரித்து விடுகிறது. மக்கள் அவனுக்கு தனியே அஞ்சலி செலுத்தி உறுதி கொள்கிறார்கள். படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் அனைத்துமே நேரடி காட்சிகளால் ஆனவை. மரண வாக்கு மூலம் போன்ற காட்சிகள் கூட குளோசப் ஷாட்டில் இருக்கிறது. படத்துக்கு கிடைத்த Footageகள் மிக முக்கியமானவை
Waiting:
இதுவும் இராணுவத்தின் கோரமான முகத்தைப் பற்றியதுதான். இன்னொரு பிரதேசத்தில், இன்னொரு மக்கள் சித்திரவதைக்குள்ளாகிறார்கள். காஷ்மீரில் Border Security Force க்கு எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அதிகாரம் இருக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம் ஆண்கள் பிறகு அவர்கள் வீடுகளுக்குத் திரும்பியதே இல்லை. அவர்களைத் தேடுகிற மனைவிகளின், அப்பாவுக்காகக் காத்திருக்கிற குழந்தைகளின் மன ஓட்டத்தையும் ஏக்கத்தையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. காஷ்மீர் என்றதும் தீவீரவாதிகளின் கொடூர பூமியாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் காட்டாத இன்னொரு முகத்தை இந்தப்படத்தில் நாம் பார்க்க முடிகிறது. "உங்கள் கணவர் போல ஒருவர் கிடைத்திருக்கிறார். வந்து அடையாளம் காட்டுங்கள்" இராணுவ முகாம்களிலிருந்து இரவு 1 மணிக்கும் இந்த பெண்களுக்கு உயரதிகாரிகள் போன் செய்கிறார்கள். கணவன் திரும்பி வராத இந்த குடும்பங்களுக்குள் பெண்களுக்கு தங்கள் உறவினர்களாலும் தொல்லைகள் ஏற்படுகின்றன. "இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே" எந்த கேள்விக்கு மெனமாக மறுத்து வெற்றிடத்தில் நிலைக்கும் அவர்களது கண்கள் கலங்க வைக்கின்றன. குழந்தைகளின் சிரிப்பு கூட சோகமாய் இருக்கிறது. "தீவீரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும்போது நாங்கள் அவர்களுக்காக அழுகிறோம். ஆனால் எங்களுக்காக யார் வருந்துகிறார்கள்...?" என உடைந்து பேசும்போது பார்வையாளர்களுக்கு எந்த பேதமுமில்லாமல் பரிவு உண்டாவதுதான் இந்தப் படத்தின் வெற்றி.
Beyond the wheel:
மண்பாண்டங்களைச் செய்யும் மூன்று வயதான பெண்மணிகளைப் பற்றிய படம் இது. காலம் காலமாக நமது சமூகத்தில் பல தொழில்களில் பெண்களுக்கு இடமே கிடையாது. மண் பாண்டங்கள் செய்வதும் அப்படி ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்தப் பெண்கள் அதை உடைத்து ஒரு கலையாகவே மண்ணைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இயல்பாகவே படைப்புத்திறன் கொண்ட அவர்கள் விரல்களிலிருந்து நுட்பங்கள் மண்ணில் மீட்டப்படுகின்றன. உள்ளங்கைகளில் பானைகள் உருவம் பெறுகின்றன. கடைவீதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் "இதில் நீங்கள் செய்த பானையை உங்களால் அடையாளம் காண முடியுமா?" என டாகுமெண்டரி எடுக்கும் பெண் கேட்கிறார். "நான் பெற்றதை நான் அடையாளம் காண முடியாதா?. என் கண்களை மூடிக்கொண்டு கூடப் பார்க்க முடியும். அவைகளில் என் ரேகைகள்தானே இருக்கும்." என்கிறார் ஒரு பெண்மணி. இன்னொருவர் செய்த பானை ஒன்று உடைந்து போகிறது. வேதனையோடு அதை கையில் எடுத்துப் பார்க்கிறார். "ஐயோ..இப்படி ஆகி விட்டதே. எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். பெவிகால் வைத்து ஒட்ட வைக்க முடியுமா?" என காமிராவிலிருந்து குரல் கேட்கிறது. "அட பெண்ணே...பெண்ணே! மண்ணை ஒட்ட வைக்க பெவிகாலா...! தண்ணீரே போதும்." என அந்தப் பெண்மணி வேதனை மறந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதன் எதிரொலிகளோடு படம் முடிவடைகிறது. வாழ்க்கை, நிலப்பரப்பு, உரையாடல் எல்லாமே கவிதையாய் நமக்குள் படருகின்றன
Riding solo to the top of world:
மும்பையை சேர்ந்த பாலிவுட் துணை இயக்குனரான கவுரவ் இமயமலையின் உச்சிப்பிரதேசங்களுக்கு தன்னந்தனியாய் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார். பனிபடர்ந்த தனிமைப் பாதைகளில் அந்தப் பயணத்தை அவரே காட்சிப்படுத்தி இருப்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம். 70 நாட்களில் 5000கி.மீ பயணம் செய்கிறார். காமிராவை பாதைகளின் ஓரத்தில் வைத்து- பயணம் செய்துவிட்டு- திரும்ப வந்து காமிராவை எடுத்துக் கொள்ள வேண்டும். யாருமற்ற வெளிகளில் அவரே அடித்து தங்குகிறார். இடையிடையே வழியில் வசிக்கும் மக்களோடு உரையாடுவது, உண்பது, அவர்கள் வாழ்வை புரிந்து கொள்வது என சுவராஸ்யமான அனுபவங்களாக இருக்கின்றன. திபெத் அருகில் இவருக்கு நெருக்கமாக இருக்கும் அந்த 'சம்பக்' குடும்பத்தாரிடம் இருந்து பிரியமுடியாமல் நாமும் தவிக்கிறோம். இயற்கையின் மக்களாக அவர்கள் இருக்கிறார்கள். இறுதியில் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது காமிரா முன் நின்று நம்மிடம் கவுரவ் சொல்கிறார். "இனி கிழமைகளையும், தேதிகளையும் கொண்டு நகரும் உலகுக்கு திரும்புகிறேன்" என்னும் அந்த வார்த்தைகள் மிகுந்த அடர்த்தியானவை.
Vedio Game:
இந்திய நிலப்பரப்பில் மோட்டார் காரில் பயணிக்கும் ஒருவனது கனவுகள், பார்வைகள் தத்துவங்களின் பின்புலத்தில் சொல்லப்படுகின்றன. கருப்பு வெள்ளை பட ரீல் சுருளின் சில நெகடிவ்கள் அவனுக்கு கிடைக்கின்றன. அதிலிருக்கும் பிரதேசங்களைத் தேடுகிறான். கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கான பயணம் அது. காரின் அசைவுகளில், பாகங்களில் பட்டுத் தெறிக்கும் நினவுச் சிதறல்களில் காலங்கள் அசைகின்றன. அன்பு சூழ்ந்த வீடும், உறவும் கனவாயிருக்கிறது. நேரடியாக இல்லாமல் பூடகமாகவே இந்தப் படத்தின் காட்சிகள் இருப்பதால் சொல்ல வந்த விஷயம் மங்கலாகவே தெரிகிறது.
I am the very beautiful:
மும்பையின் பார்களில் பாடும் ஒரு பெண்ணைப் பற்றிய ஆவணப்படம் இது. அவளுக்கும் ஒரு சினிமா இயக்குனருக்கும் இடையே ஏற்படும் உறவிலிருந்து அவளது கதை சொல்லப்படுகிறது. அவளோடு இருக்கும் நேரங்களில் அந்த இயக்குனர் எடுத்த காட்சிகளின் வழியே அவளது உடலும் உள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாய் புலனாகின்றன. ஏற்கனவே ஒருவனைத் திருமணம் செய்து, மனமுறிவால் வெறுமையுற்று உடலெங்கும் தீக்காயங்களோடு மீள்கிறாள். நம்பிக்கையோடு காலத்தை எதிர்கொள்கிறாள். பல ஆண்கள் இப்போதும் அவளைக் காதலிக்கிறார்கள். அவளோடு இருந்த தருணங்களை சந்தோஷமாக நினைவு கொள்கிறார்கள். கல்கத்தாவில் இருக்கும் வீடு அவள் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறது. சுற்றியிருக்கிற ஆண்கள் உலகத்தில் தன்னை எப்படிக் காட்டிக்கொள்வது என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. "இத்தனை நாளூம் கூடவே இருந்து படம் எடுத்து பெருமைகளைச் சேர்த்துக் கொள். ஆனால் எனக்கு மிஞ்சப் போவது என்ன?" என்று குடிபோதையில் தன் காதலனான இயக்குனரிடம் கத்துகிறாள். காலையில் நம்பிக்கை தளராமல் "நான் ரொம்ப அழகானவள்" என வீதிகளில் நடக்கிறாள்.
Kadal Theerathu:
மலையாளத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான ஓ.வி.விஜயனின் கதையைத் தழுவி எடுத்த குறும்படம். 1940களின் காலம் போல கதை காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மனிதர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கிளம்பி கண்ணனூர்ச் சிறையில் இருக்கும் தன் மகனைச் சந்திக்க கிளம்புகிறார். நாளை அவனுக்குத் தூக்குத் தண்டனை. சிறையில் அவனைப் பார்க்கிறார். இருவரும் மெனமாக அழுகிறார்கள். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மகனின் உடல் தரப்படுகிறது. கடலோரத்தில் அந்த உடலை எரித்துவிட்டு எளிய மனிதர் விம்முகிறார். கடலலைகள் வீங்கி வீங்கி தணிகின்றன.
இவை தவிர, திரையிட்ட படங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைகளும் இருந்தன. கோலி விளையாட்டு,Baba black beard , நிழலாட்டம்,Shajia ,Mouse race ,Purugatory , The mother ,The kite போன்றவை முக்கியமான செய்திகளோடு இருந்தன. ஆந்திராவில் இருந்து வந்திருந்த ink என்னும் திரைப்படம் ஒன்றும் புரியவில்லை. உலகமே கெட்டுப் போய்க் கிடக்கிறது என்னும் வேதனை சூழ்ந்த கவிஞனின் இதயத் துடிப்புகள் என்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. she writesஎன்று தமிழ்ப் பெண் கவிஞர்கள் சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புளும், அவர்களது எழுத்துக்களிலிருந்து எழுந்த சர்ச்சைகளும் ஆவணப்படமாக திரையிடப்பட்டது. படமாக்கப்பட்டிருந்த விதம் மிகச் சாதாரணமாக இருந்தது. பதேர் பாஞ்சாலி உருவாக்கப்பட்ட விதத்தை சத்யஜித்ரேவின் குரலின் வழியாகவே An ode to Pather Panchali என்ற படம் சொல்லியது. பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் அந்த மனிதரின் முழுமையான ஈடுபாடு இருப்பது தெரிய வருகிறது.
இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய எழுச்சியை இந்தத் திரைப்படங்களில் காண முடிந்தது. கண்முன்னே கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் பதிவு செய்யும் முயற்சிகள் இதோ சாத்தியமாகி இருக்கின்றன. அறியப்பட்டாத வலிகளையும், அழகுகளையும் இரத்தமும் சதையுமாக வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிகிறது. வெவ்வெறான முகங்களை, பழக்கவழக்கங்களை முதன்முதலாக திரையில் காணமுடிகிறது. அடேயப்பா...எத்தனை கோணங்கள்! எத்தனை பார்வைகள்!! 'நூறு நூறு பூக்கள் மலரட்டும்' என்று கனவு கண்ட மாவோவின் வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. 'கோடிகளின் பூமியிலிருந்து' சினிமா சாமானியரின் கைகளுக்கு தாவிக்கொண்டு இருக்கிறது. உண்மைகள் எந்த அரிதாரமும் இல்லாமல் அழகானவை என்பதுதான் இத்தனைக்கும் அடியில் இருக்கிற உண்மை.
ஒரு எச்சரிக்கையும் ஒலிக்கிறது. படங்களை எடுக்கிறவர்கள் பற்றிய நோக்கங்களிலிருந்து அது சத்தமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது. பல கார்ப்பரேட்களும், தொண்டு நிறுவனங்களும் பணம் கொடுத்து இளம் இயக்குனர்களைப் பயன்படுத்துவது படங்களின் டைட்டில்களில் உறைந்திருக்கிறது. எப்போதும் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்போது அதை திசைத் திருப்பி விடுகிற சதியை முதலாளித்துவம் செய்யும். அதன் ஒரு பகுதியாகவே இந்த கார்ப்பரேட்களின் ஈடுபாடு இருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும். திரையரங்குகளைவிட்டு சினிமா தெருக்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்றடைவதுதான் மாற்று சினிமாவுக்கான, மக்கள் சினிமாவுக்கான பாதையாக இருக்க முடியும். இவர்கள் தயாரிக்கும் படங்கள் எந்த மக்களிடம் செல்லப் போகின்றன. எத்தனை படங்கள் அப்படி சென்றிருக்கின்றன. யோசிக்கவும் கவனமாகவும் இருக்க வேண்டிய நேரமிது. இப்படி தயாரிக்கப்படும் படங்கள் பிறகு, விளம்பரதாரர்கள் விருப்பங்களுக்கேற்ப ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போலாகி உயிரற்றுப் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மக்களிடம் பணம் வசூலித்து, மக்களுக்கான படங்கள் தயாரிக்க அலைந்த கலகக்காரன் ஜான் ஆபிரகாம் இதை மன்னிக்கவே மாட்டார்.
எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன

பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்திற்கு வெளி பூராவும் ஈசல்கள் அங்குமிங்கும் அலைக்கழிந்து பறந்து கிடந்த 2005 டிசம்பர் மாதத்தின் ஒரு அந்தி நேரம். மெனமாக சாத்தூர் வீதியில் வந்து தெருக்களில் நுழைந்து ஆற்றங்கரையோரமாய் நடந்து மயானக்கரையில் திரளாய் நின்றிருந்த மக்கள் தங்கள் மீது மோதி விழுந்து கொண்டிருந்த அந்த பூச்சிகளை பொருட்படுத்தாமல் கடந்தகால நினைவுப்பரப்பிற்குள் உறைந்தும், உருகியும் போயிருந்தார்கள். எழுத்தாளர்கள் பொன்னீலன், தமிழ்ச்செல்வன், சிவசுப்பிரமணியன், கோணங்கி, சோ.தருமன், ஷாஜஹான், லட்சுமணப்பெருமாள், உதயசங்கர், காமராஜ் ஆகியோர், கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த தோழர்கள், பழகிய ஆசிரியர்கள், அவரிடம் படித்த மாணவர்கள், மருத்துவர்கள் என பலரும் நிறைந்திருந்தனர். கசிந்து கொண்டிருந்த மெல்லிய முணுமுணுப்புகளில் உச்சரிக்கப்பட்ட தனுஷ்கோடி ராமசாமி என்னும் மனிதர் அங்கே சிதையில் இருந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்து, டாக்டர் அறம் தனது அருமைத் தந்தைக்கு கொள்ளி வைக்க, தீப்பற்றிய கணத்தில் கண்கள் கலங்கின. 'வாருங்கள், வாருங்கள் எங்கள் இளைஞரே' வரவேற்கும் தனுஷ்கோடி ராமசாமியின் பெருங்குரல் கேட்கிறது. தோற்றத்துக்கு சம்பந்தமில்லாமல் அவரின் கைவிரல்கள் சின்னச்சின்னதாகவும், மென்மையாகவும் இருக்கும். கண்களை அகல விரித்து பாவனையோடு பார்க்கின்ற, "ஏ..மனுஷா.." என்று நகைச்சுவைக்கு குலுங்கி குலுங்கி சிரிக்கிற அந்த முகம் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது.
ஒரு ஓரமாய் நின்று கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் பொன்னீலன் இரங்கல் கூட்டத்தில் தழுதழுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசும் போதும் வார்த்தைகள் உடைந்து உடைந்து வந்தன. தோழர் நாவலில் இறுதியில் விடைபெறும்போது 'காம்ரேட்" என்று துடித்துக்கூவிய ஷபின்னாவின் குரலே எல்லோருக்குள்ளும் படிந்து விட்டிருந்தது. "மாதவராஜ்...பேச வாங்க" யாரோ அழைத்தார்கள். போகவில்லை. கதறி அழுவதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. அப்படி ஒரு உணர்வு பூர்வமான உறவோடு கைகளை அகல விரித்து எல்லோரையும் வாசலில் நின்று அழைத்த மனிதராயிருந்தார் தனுஷ்கோடி ராமசாமி. இருபது வருடங்களாக மிக நெருக்கமாக பழகிக் கலந்த சொந்தம் ஒன்று, புகைந்த நெருப்பில் கரைந்து கொண்டிருந்தது.
அந்த நாள் இன்னும் கலையாமல் இருக்கிறது. 1985ம் ஆண்டில் ஒரு மத்தியான வெயில் நேரம். பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து சங்கம் தர்ணா நடத்திக்கொண்டிருந்தது. அமர்ந்திருந்த வங்கித்தோழர் ஒருவர் கையில் சிறுகதைப் புத்தகம் இருந்தது. வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியக் கிராமங்களில் சோகத்தை உரக்கச் சொல்லிய தொகுப்பின் முதல் கதை 'நாரணம்மா'வின் அலறல் உலுக்கியது. கதை எழுதியவரின் இதயம் எழுத்துக்களில் துடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் "நாரணம்மா கதை எழுதியவரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான தோழர்.தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் நம்மிடையே இப்போது பேசுவார்கள் என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் அறிவித்த போது பிரமிப்பாய் இருந்தது. புத்தகங்களிலிருக்கும் வாசனை போல எழுத்தாளர்களிடம் ஒரு வசீகரம் இருப்பதாகவே எப்போதும் படுகிறது. கம்பீரமான பார்வையும், கிருதாவும், மீசையுமாக, பேண்ட் சட்டை போட்ட கிராமத்து மனிதராய் அவர் இருந்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாரணம்மாவின் அழுகையை பத்திரமாக வைத்திருக்கும் அந்த மனிதர் மீது அன்பு பெருகியபடி இருந்தது. கிருஷ்ணகுமாரிடம் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டுச் சென்றார்
இன்னொருமுறை அதேபோல் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம். சங்கத்தின் முடிவின்படி நானும் இன்னும் நான்கு தோழர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தோம். இரண்டாம் நாள் சாயங்காலம். தனுஷ்கோடி ராமசாமி வாழ்த்திப் பேசினார். சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து "நீங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் மகளை காதலிக்கிறீர்களாமே?" என்று வியப்போடு கேட்டார். கிருஷ்ணகுமார் சொல்லியிருக்க வேண்டும். சங்கடத்தில் நெளிந்தபடி புன்னகைத்தேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு மெனமாய் இருந்தார்.
ஒருநாள் வக்கீல் மாரிமுத்து என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். ஆற்றங்கரையொட்டிச் செல்லும் கிணற்றுக்கடவுத் தெருவில் ஒரு காம்பவுண்டு வீடு. வக்கீல் மாரிமுத்துவை உரக்க வரவேற்றவர் கூடவே என்னைப் பார்த்து அடையாளம் கண்டு, "வரணும்..வரணும்" என்று நாற்காலியை காட்டி அமரச் செய்தார். உள்பக்கம் தலை திருப்பி "சரஸ்வதி...! டீ கிடைக்குமா.." என்று கேட்டுக் கொண்டார். ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போதான் அவரது மகன் அறம் படித்துக் கொண்டிருந்தான். 'தோழர்' நாவலை எழுதிக் கொண்டிருந்த நேரம். பேச்சு அதிலிருந்து ஆரம்பித்து, கிறிஸ்டியன் மிஷனரிகளை மையமிட்டு, அப்படியே ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆரையெல்லாம் சுற்றி வந்து, பாரதியைத் தாண்டி, டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பில் லயித்து, சிங்கிஸ் ஐத்மாத்தாவோடு உலவியபடி இரண்டு மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீண்டது. அப்போதுதான் சோவியத் இலக்கியங்களை படிக்க ஆரம்பித்திருந்ததால் அந்த உரையாடல்கள் பெரும் சுவராஸ்யத்தோடு இருந்தன. 'தீபம்', 'கணையாழி' பத்திரிக்கைகளில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதியிருந்த எனக்கு இலக்கியத்தின் மீது மேலும் பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்தது.
அதுதான் விடாமல் அவரைத் தேடிச் செல்ல வைத்திருக்க வேண்டும். அப்போது கிணற்றுக்கடவுத் தெருவில் இருந்த அந்த காம்பவுண்டு வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் நானும் காமராஜும் அடிக்கடி செல்ல ஆரம்பித்தோம். சேவு, பொரிகடலை, சிகரெட்டுகள் வாங்கிக்கொண்டு பைபாஸ் கடந்து வைப்பாற்றுக்குள் இறங்கி எதாவது ஒரு மணல் திட்டில் உட்கார்ந்து அவரோடு பேசிய நாட்கள் வாழ்வின் இனிமையான தருணங்களாக இப்போதும் வற்றாமல் இருக்கின்றன. மணலை நோக்கமற்றுக் கீறியபடி எத்தனை எத்தனையோ கணங்கள் அவரை உள்வாங்கியிருக்கிறேன். பேச்சின் நடுவே குறுக்கிட மாட்டார். முழுவதுமாய் கவனித்த பிறகு பொறுப்போடும், ஆழத்தோடும் பேச ஆரம்பிப்பார். எல்லாம் தனக்குத் தெரிந்ததாய் ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. எல்லோரிடமும் தெரிந்து கொள்வதற்கு விஷயங்கள் இருக்கிறது என்பதே அவரது மனநிலையாக இருந்தது. சிறுபிள்ளைத்தனமாகப் பேசினால்கூட புறக்கணிக்காமல் நோகாத விமர்சனத்தோடு அதை புரிய வைப்பார். நகைச்சுவையை அவர் ரசிப்பதே அழகாகவும் உயிர்ப்போடும் இருக்கும். பேச்சின் இடையிடையே சிலசமயங்கள் தூரத்துப் பாலத்தின் மீது எதிரும் புதிருமாய் வெளிச்சத்தை இறைத்தபடி ஒடிக்கொண்டிருக்கும் வாகனங்களை பார்த்தபடி மெனங்களாய்க் கழியும். அசைபோட்டுக்கொண்டும், சிந்தனை வயப்பட்டும் இருந்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பிப்போம். குரல்களே உடலாகவும், உள்ளமாகவும் வெளிப்படுகிற இருள் சூழ்ந்து பத்துப் பதினோரு மணியைத் தாண்டிவிடும். ஒவ்வொரு முறையும் இன்னும் நிறைய பேச வேண்டியிருப்பதாகவே பிரிய நேரிடும்.
ஆனந்த விகடனில் "அன்புள்ள.." சிறுகதையப் படித்தபோது மிக முக்கியமான விஷயம் ஒன்றை அவரது எழுத்து தொட்டுவிட்டதாய் பட்டது. கிராமத்தின் எளிய பெண் ஒருத்தி தனது மனதுக்குப் பிடித்தவனுக்கு கடிதம் எழுத ஆரம்பித்து கடைசி வரை வெளிப்படுத்த முடியாமல் போவதாய் அந்தக்கதை முடியும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்டாளுக்கு 'திருப்பாவையாக' வந்திருந்த தைரியம் இன்னமும் நமது பெண்களுக்கு இல்லையே என்றும், ஒரு பெண் தன்னை முதலில் வெளிப்படுத்துவதை அருவருப்பாகவும், நாகரீகமற்றும் இந்தச் சமூகம் கருதுகிறது என்றும் தெரிவித்தேன். தான் எழுதிய கதையைக் காட்டிலும் இந்த விமர்சனம் அடர்த்தியாக இருப்பதாக என்னை உற்றுப் பார்த்துக்கொண்டு சொன்னார். பாராட்டுவதில் தயக்கம் கொஞ்சமும் இருக்காது. இதைச் சொல்லி அவரை விமர்சிப்பவர்களை நிறைய பார்த்திருக்கிறேன். எதையும் அதீதமாய் பண்ணுகிறார் என்று சிரிக்கும் கேலிப்பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். எனக்கென்னவோ அது ஒரு அபூர்வ குணமாகவே தோன்றுகிறது. எது குறித்தும் ஆச்சரியப்படாத, உற்சாகமடையாத, சக மனிதனிடம் இருக்கும் திறமைகளை பாராட்டத் தெரியாத மொண்ணையாகப் போன சமூகத்தில் தனுஷ்கோடி ராமசாமி வித்தியாசமான மனிதர்தான். தோழர் நாவல் படித்துவிட்டு காமராஜ் அவருக்கு எழுதிய போது "ஏ...நம்ம காமராஜ்தானா! கடிதமே இவ்வளவு இலக்கிய நயத்தோடு இருக்கிறதே...நீ கதை எழுதலாமே மனுஷா.." என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். காமராஜ் அவரிடம் ஆரிய வைசியப் பள்ளியில் தமிழ் படித்தவன். எனது 'மண்குடம்' கதையையும், ஷாஜஹானின் 'ஈன்ற பொழுது.." கதையையும் படித்துவிட்டு பல நாட்கள் ஒயாமல் பேசியிருக்கிறார். அவரது பல நண்பர்களிடம் சிலாகித்திருக்கிறார். இளைஞர்களிடம் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதனாலேயே இளமையாக இருந்தார்.
தனக்கு முந்தையவர்கள் மீதும் அளப்பரிய மரியாதையும், விமர்சனம் தாண்டிய அன்பும் கொண்டிருந்தார். மகாத்மா காந்தியை, மகாகவி பாரதியை, எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதற்கு அவரிடம் நிறைய இருந்தன. சமூகத்தின் மீதிருக்கும் அக்கறையே, அதற்கு எதாவது ஒரு வகையில் பங்களிப்புச் செய்தவர்களையும் நினைவுகூறச் செய்கிறது. மாறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதைவிட இணக்கமான விஷயங்களோடு மனிதர்களை அடையாளம் காண்பது அவரது தன்மையாகவே இருந்தது. அது பலவீனமா, பலமா என்ற ஆராய்ச்சியை மற்றவர்களே செய்து கொண்டிருந்தார்கள். ஜெயகாந்தனைப்போலவே தன்னை ஆக்கிக் கொள்கிறார் என்றும் கூட பேசியிருக்கிறார்கள். அவரே அதைச்சொல்லிவிட்டு, சொன்னால் சொல்லிக்கொள்ளட்டும் என்பது போல அமைதி காப்பார். புதுமைப்பித்தன், ஜீவா, தொ.மு.சி, கு.அழகிரிசாமி, கி.ரா, கு.ப.ரா, சுந்தரராமசாமி, பொன்னீலன், கந்தர்வன் எழுத்துக்களைப் பற்றி அடிக்கடி பேசுவார். 'ஜே.ஜே சில குறிப்புகள்' மீது அவருக்கு லயிப்பும் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. வண்ணதாசனின் கதை சொல்லும் அழகில் தன்னை பறிகொடுப்பார். ஆரம்ப காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஈடுபாடு கொண்டு, அவரோடு தர்க்கங்கள் செய்து பின்னாளில் மார்க்சீயத்தின் பால் ஈர்க்கப்பட்டு 'அசோகவனம்' கதையோடு தமிழ்ச்செல்வன் அவரது வீட்டுக் கதவைத் தட்டிய இரவை எத்தனையோ தடவைச் சொல்லியிருக்கிறார். வேதனையோடு பகிர்ந்து கொண்டது என்றால் ஜி.நாகராஜனோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான். மதுரை வீதிகளில் தாடியோடும், கந்தல் உடையோடும், மிகுந்த உரிமையோடும் வழிமறித்து பணம் கேட்ட நாட்களை நினைவு கூர்ந்து "எப்பேர்ப்பட்ட எழுத்தாளன்' என்று அதற்கு மேல் பேச முடியாமல் கொஞ்ச நேரம் மெனமாயிருப்பார். எல்லோரையும் நேசிக்கிற ஒரு பரந்த தளத்தில் அவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
தான் நம்பிக்கை வைத்திருந்த எழுத்தாளர்கள் பலர் எழுதாமல் நிறுத்திக் கொண்டதை பெருங்குறையாக கருதினார். "சங்க வேலைகளை குறைத்துக் கொண்டு நீங்கள் நிறைய எழுதலாம்" என்று என்னிடம் அடிக்கடிச் சொல்வார். தமிழ்ச்செல்வனிடமும் இதேபோல் சொல்லியிருக்கிறார். இலக்கியத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறையே "தொழிற்சங்க வேலைகள் பார்ப்பதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவையில்லை" என்று சொல்ல வைத்தது. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் இருந்து செயல்படுவதைத் தாண்டி பரந்த மக்களிடம் செல்ல வேண்டியவர்கள் இலக்கியவாதிகள் என உறுதியாக நம்பினார். வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்த போதும், சாத்தூரில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் பலர் எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தோம். அதில் பலர் அவரது மாணவர்களாக இருந்தனர். இன்று எங்கெங்கோ இருக்கும் சாத்தூரின் இளைஞர்கள் பலரிடம் ஒரு இடதுசாரி சிந்தனையும், தொடர்பும் இருப்பதை கவனித்திருக்கிறேன். விசாரித்துப் பார்த்தால் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமியிடம் படித்தவர்களாக இருப்பார்கள். ஆசிரியரைப் பிடிக்காமல், அவரிடம் ஈர்ப்பு இல்லாமல், அவரது தன்மைகள் மாணவனிடம் படிந்து விடாது. அவரது மாணவர்கள் எல்லோரும் 'அண்ணா' என்றுதான் அவரை அழைத்தார்கள். ஆசிரியப் பணியில் அவ்வப்போது ஏற்படும் சோர்வுகளையெல்லாம் இந்த உறவுகளால்தான் அவர் துடைத்தெறிந்திருக்க வேண்டும்.
பாவமாய் இருக்கும். பரீட்சை முடிந்து லீவில்தான் இருப்பார் என்று பார்க்கச் சென்றால் கட்டுக் கட்டாய் விடைத்தாள்கள் மேஜையில் அடுக்கி வைத்து திருத்திக் கொண்டு இருப்பார். 'தொடர்ந்து ஒரே வேலையைச் செய்கிறீர்களே....போரடிக்காதா?' என்றால் சிரிப்பார். "ஒரே கேள்விதான். பதில் விதவிதமாய் இருக்கும்" என்று மாணவர்கள் படிக்கிற அழகைக் காட்டுவார். "ஒரே பாடம்தான் தொடர்ந்து எடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு வருடமும் வேறு வேறு மாணவர்கள்" என்று தத்துவம் போலச் சொல்வார். கல்வியமைப்பின் மீதும், ஆசிரியர்கள் மீது கடுமையான விமர்சனம் அவருக்கு இருந்தது. 'தொழில்தர்மத்தைச் சொல்லிக் கொடுக்காமல் உரிமைகளை மட்டும் சங்கங்கள் சொல்லிக் கொடுக்கின்றன" என்று வருத்தப்படுவார். பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஒரு கனவுகொண்டிருந்தார். அதனால் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்று கொஞ்சகாலம் செயல்பட்டும் பார்த்தார். கனவுக்கும் யதார்த்தங்களுக்குமான இடைவெளியில் முட்டிப் பார்த்து, முடியாமல் ஒருநாள் திடுமென தலைமையாசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து மீண்டும் தமிழாசிரியராக நிம்மதியடைந்தார். அந்தக் காலக் கட்டங்களில் குழப்பங்களோடும் வேதனையோடும் சங்கடப்பட்டார்.
சோவியத் நொறுங்கிய போது மிகவும் கலங்கிப் போனார். ஆயுத ஒழிப்பு குறித்து ரீகனுக்கும், கோர்பச்சேவுக்கும் நடந்த உரையாடலை மிகுந்த ஆரவாரத்தோடு ஒரு காலத்தில் வாசித்துக் காட்டி, கோர்பச்சேவின் வார்த்தைகளை பெருமிதத்தோடு கூட்டங்களில் முழங்கவும் செய்தார். பெரிஸ்த்ரோய்கா, கிளாஸ்நாத்தையெல்லாம் உயர்த்திப் பிடித்து "யாருக்கு இந்த தைரியம் வரும். யார் தனது பலவீனங்களை இப்படி போட்டு உலகத்தின் முன் உடைப்பார்கள். யாரால் இந்தப் புதுமைகளை சிந்திக்க முடியும்" என வேகமாகப் பேசியிருந்தார். சட்டென எல்லாம் கலைந்து போன போது தடுமாறி நின்றார். பெருமூச்சோடு மெனங்கள் சூழ்ந்த அந்த நாட்களில் அடிக்கடி அவரைப் போய் பார்ப்பேன். மீள்வதற்குச் சிரமப்பட்டார். அதுபோல ஜோதிபாசு பிரதமர் பதவிக்கு வாய்ப்பு வந்து, சி.பி.எம் அதை மறுத்தபோதும் ரொம்ப வருத்தப்பட்டார். 'நம்மீது இருக்கும் நம்பிக்கைகளை நாமே தகர்த்து விடுகிறோம்" என்று அடிக்கடிச் சொல்வார். தான் நம்புவதையும் உணர்வதையும் வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இருக்காது. தென்தமிழ் மாவட்டங்களில் ஜாதிக்கலவரங்கள் பற்றி, சாத்தூரிலும் பரவியபோது ஒருநாள் "இந்தக் கலவரமெல்லாம் தேவைதான்" என்று அவர் சொல்லியபோது ஆச்சரியமாக இருந்தது. "திருப்பி அடிக்க மாட்டான் என்று தானே இவ்வளவு காலமா நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ பதிலுக்கு பதில்னு ஆனதால கொஞ்சம் யோசிப்பாங்க." என்றார். எப்போதும் தலீத் மாணவர்களையே தனது வகுப்பில் லீடர்களாக முன்னிறுத்துவாராம்.
இசங்கள் குறித்தெல்லாம் அவர் அலட்டிக்கொண்டதேயில்லை. அதற்குள் உட்கார்ந்து விவாதம் செய்ய ஆர்வமும் பெரிதாக இருந்ததில்லை. மேஜிக்கல் ரியலிசம் குறித்து சுற்றிலும் பேசப்பட்டபோது அவர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் 'அன்னை வயல்' பித்தனாக மாறிப் போயிருந்தார். இராணுவம் செல்லும் புகை வண்டியில் பெற்ற மகனைக் காண மணிக்கணக்காக காத்திருந்தும் கடைசியில் நிற்காமல் செல்லும் வண்டியிலிருந்து வீசியெறியப்பட்ட தன் மகனின் தொப்பியை மார்பில் பொத்தி அந்த அன்னை அழும்போது புத்தகத்தை அதற்குமேல் படிக்க முடியாமல் தரையில் புரண்டு புரண்டு அழுததைச் சொல்லியிருக்கிறார். பல கூட்டங்களில் அந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக பேசியுமிருக்கிறார். 'எழுத்து என்பது மிக எளிமையாக, இயல்பாக, உண்மையாக இருக்க வேண்டும்' என்பதுதான் அவர் அறிந்து கொண்ட இலக்கணம். 'மதினிமார்களின் கதை', 'கைத்தடி கேட்ட நூறு கேள்விகள்' தவிர கோணங்கியின் எழுத்துக்களின் மீது பிரமிப்பு அவருக்கு இருந்ததில்லை. "யப்பா...ஒங்கதை ஒண்ணும் எனக்குப் புரியல. அதுக்கு நா வெக்கப்பட வேண்டியதுமில்ல" என்று கோணங்கியிடம் சொல்லவும் செய்வார். வாக்குவாதம் நடக்கும். "நீங்க எழுதுறதெல்லாம் எழுத்தா" என்றெல்லாம் கோணங்கி கோபப்படுவார். தனுஷ்கோடி ராமசாமியின் துணைவியார் சரஸ்வதி, இதெல்லாம் சகஜம் என்பது போல அமைதியாக எல்லோருக்கும் டீ பரிமாறிக்கொண்டு இருப்பார்கள். ஒருதடவை கோணங்கி எழுதிய கடிதமொன்றை சிரித்துக்கொண்டே காண்பித்தார். அதில் "எல்லோரும் மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் காலரியைச் சுற்றி ஓடி கோல், கோல் என கத்திக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றிருந்தது. பிறகு ஒரு வாரத்துக்குள் கோணங்கி அவர் வீட்டுக்கு வந்து உணவருந்தி, விடிய விடிய பேசிச் சென்றதையும் சிரித்துக்கொண்டே சொன்னார். பிடிபடாத அன்பின் விளையாட்டாய் காட்சியளித்தாலும், கதை எழுதுகிறவர் என்று ஒருவர் பற்றி ஒருவர் வைத்திருந்த பரஸ்பரமற்ற புரிதலே இத்தனைக்கும் அடியில் நீரோட்டமாய் இருந்திருக்க வேண்டும். முகமெல்லாம் கனத்து, தொண்டை அடைக்க ஒரு மாலையைத் தூக்கிக் கொண்டு வந்து தனுஷ்கோடி ராமசாமியின் உடல் மீது வைத்து, கண்கள் பொங்க நின்ற கோணங்கியை பார்த்தபோது, திரும்பப்பெற முடியாத ஒன்றை இழந்த சோகம் தெரிந்தது.
சங்க இலக்கியங்களை வெறும் பாடமாக பார்க்காமல், வாழ்க்கையாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்திருந்தது அவரால். மார்கஸ், லெனின் எழுதிய கட்டுரைத் தொகுதிகளோடு பெரிது பெரிதாக கம்பராமாயணத் தொகுதிகளையும் வரிசையாக அவரது அலமாரிகளில் பார்க்கலாம். கம்பனின் வரிகளை ஒரு சுதியோடு சொல்லி, விளக்கமளிக்கும் போது கேட்பதற்கு ஆசை ஆசையாய் இருக்கும். அப்படியொரு செறிவுமிக்க இலக்கியப் பார்வையும், ரசனையும் இருந்தது. அகத்திணையில் வீசிக்கொண்டிருக்கும் தமிழரின் காதல் வேட்கையை அவரிடம்தான் சுவாசித்தேன். புறங்காலால் அடித்து கடலையே வற்றச் செய்து விடுவேன் என்று தன் பிரிவுத் துயரை சித்தரிக்கும் தொன்மை காலத்துப் பெண்ணை பார்த்தேன். அழகுத் தமிழின் அற்புதங்களையெல்லாம் தனக்குள் சுமந்து கொண்டிருந்த மனிதர் அவர். "இதையெல்லாம் நீங்கள் பேசுகிற மாதிரியே எழுதினால் போதும். இந்தத் தலைமுறைக்கு நமது பாரம்பரியம் மிக்க இலக்கியத்தை அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும், தமிழை அவர்களுக்கு நெருக்கமானதாக உணர வைக்கவும் முடியும்" என்றேன். "அப்படியா..." என்று ஆச்சரியத்தோடு, தீவீரமாகவே யோசித்தார். இலக்கியத்தின் நயங்களோடு ஒரு சிறுகதை மட்டும் எழுதினார். வேறு என்னவெல்லாம் செய்ய நினைத்திருந்தாரோ. வெந்தணலில் தமிழ் வெந்து கொண்டிருந்தது.
தேடிப் போகிற சில சமயங்களில் வீட்டில் இருக்க மாட்டார். அவரது துணைவியார் "மானாமதுரை போயிருக்காங்க" என்பார்கள். "திருவண்ணாமலை போயிருக்காங்க" என்பார்கள். வெளியூர் சென்று வந்த பிறகு, தான் சந்தித்த இளைஞர்களை, புதிய இலக்கியவாதிகளைப் பற்றி விடாமல் பேசுவார். அவர் யார், பெயர் என்ன என்பது கூட என் நினைவில் இருந்ததில்லை. சுவராஸ்யமற்றும் இருக்கும். மனிதர்கள் மீது எப்போதும் ஈர்ப்பு இருந்தது. புதுமைகளை ஆராதிக்கிற அபூர்வ குணத்தின் வெளிப்பாடு என எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் "நேற்று ஜே.கேவைப் பார்த்தேன்" என்று சொல்லி பொருள் நிறைந்த பார்வையோடு நிறுத்துவார். புன்னனகையோடு காத்திருப்பேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது அப்படியொரு காதல் இருந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதெல்லாம் எப்படியும் எதாவது ஒரு விஷயம் ஜே.கேவைச் சுற்றி வந்துவிடும். அவர் எழுதியது, பேசியது, அவரைப் பற்றி தெரிந்து கொண்டது, அவரைச் சந்தித்தது என ஏராளமான சம்பவங்களை வைத்திருந்தார். 'ஜே.கே வாழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம்' என்பதை பெருமை பொங்கச் சொல்வார். மெல்ல "மெட்ராஸுக்குப் போயிருந்தீங்களா...அம்முவை பார்த்தீங்களா" என்று கேட்டுக் கொள்வார். பின்னாளில் எங்கள் திருமணம் குறித்து சென்னை சென்று ஜே.கேவிடம் அவர்தான் முதலில் பேசினார். எங்கள் வாழ்வெல்லாம் வந்துகொண்டிருக்கும் மிக முக்கிய மனிதர்.
பொங்கி வந்த அழுகையோடுதான் அம்மு அன்று இருந்தாள். சென்னையிலிருந்து அவரது உடல் கொண்டு வரப்பட்டு தென்வடல் புதுத்தெருவில் அவரது வீட்டின் முன்பு வைக்கப்பட்ட போது, "ஏ...அம்மு! உன் அங்க்கிளப் பாத்தியா" என்று சரஸ்வதி அம்மாள் கதறியபோது அம்மு வெடித்து அழுதாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தொண்டை அடைத்தது. தொழிற்சங்க வேலைகள் காரணமாக வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்த 1990களில் நான் அவரைப் பார்க்கச் செல்வது ரொம்ப குறைந்து போனது. அவர் எங்கள் வீட்டுக்கு சாயங்கால வேளைகளில் வருவார். பெரும்பாலும் நான் இருக்க மாட்டேன். அம்முவோடு பேசியிருந்து செல்வார். அவள் முதல் குழந்தை உண்டாகியிருந்த சமயத்தில் கல்கத்தா, டெல்லி, கைதராபாத், சென்னை என ஒடிக்கொண்டு இருந்தேன். அப்போதெல்லாம் தனுஷ்கோடி ராமசாமியும், அவரது துணைவியாரும் வந்து அம்முவைப் பார்த்துக்கொள்ளவும், அவளுக்குப் பிடித்தமானதை செய்து கொண்டு வரவும் செய்தார்கள். "சங்க வேலைகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே.." என லேசாய் கடிந்து கொள்ளவும் செய்தார். "எங்க அப்பாவப் பாக்குறதப் போல இருக்கு" என அம்மு அடிக்கடிச் சொல்வாள். ஆச்சரியமாக இருக்கும். எங்கள் குழந்தைகளின் பிறந்த நாட்களைக் கூட கவனமாக ஞாபகம் வைத்து, அவரும் அவர் துணைவியாரும் வீட்டுக்கு வந்து வாழ்த்துச் சொல்வார்கள். அன்பைத் தவிர அந்தக் குடும்பத்திற்கு வேறு எதுவும் தெரியாதோ என்றுதான் தோன்றும்.
யோசிப்பதற்கும், சொல்வதற்கும் எவ்வளவோ இருந்து கொண்டே இருக்கின்றன. பழகிப் பேசிய காலங்கள் அடுக்கப்படாத காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கம்மங்கூழும், கேப்பைக்களியும் கிடைத்த சிறுபிராயத்தில் அரிசிச் சோற்றுக்கு ஆசைப்பட்ட காலத்திலிருந்து, தன் மகனை டாக்டராகப் பார்த்து பூரித்த காலம் வரை எவ்வளவோ எவ்வளவோ சொல்லியிருக்கிறார். எதையும் யாரிடமும் எதிர்பார்க்காத மனிதராகவே கடைசிவரை மிடுக்காக வாழ்ந்திருக்கிறார். சாத்தூர் வீதிகளில் கம்பீரமாக நடந்து திரிந்த அந்த மனிதர் தனது கடைசி நாட்களில் புற்றுநோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே அடைந்து போனது மிகப்பெரிய சோகம். கொடுக்கப்பட்ட வைத்தியம் முழுவதுமாய் எதிர்ப்பு சக்தியை உறிஞ்சிவிட, யாரும் போய்ப் பார்ப்பதே அவருக்கு ஆபத்தானதாய் மாறிவிடும் என்றாகிப் போனச் சூழலில், இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே போய்ப் பார்க்க முடிந்தது. கடைசியாய் தமிழ்ச்செல்வன், லஷ்மிகாந்தன், காமராஜ் ஆகிய தோழர்களோடு சென்றிருந்தபோது மெலிந்த தேகத்தோடு இருந்தவரிடம் நம்பிக்கை பூத்துக் குலுங்கியதை தரிசிக்க முடிந்தது. அந்த நேரத்திலும் எழுத்தாளர் லட்சுமணப்பெருமாளின் கதையைப் படித்து ரசித்ததைச் சொன்னார். எல்லோரும் மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு சந்தோஷமடைந்தார். ஜீவாவின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டார். அடுத்த சில நாட்களில் எல்லாம் இரக்கமற்று வெறுமையில் புதைந்து போனது.
ஆசிரியர் பணி, அதில் ஓய்வு பெற்ற பிறகு அருமை மகன் திருமணம் முடிந்து முழுமையாக எழுதுவதற்கு உட்கார்ந்த நேரம் தனுஷ்கோடி ராமசாமி என்னும் எழுத்தாளர் மறைந்து விட்டார். எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன. வாழ்க்கையே ஒரு புதையலாக அவரிடம் இருந்தது. எல்லாம் சட்டென தொலைந்து போனது போல சோகம் அழுத்துகிறது. உண்மையை நம்ப மறுத்து, திடுமென 'என்ன மனுஷா..." என்று குரல் எழுப்பியவாறு வீட்டின் முன் வந்து நிற்க மாட்டாரா எனத் தோன்றுகிறது. சந்தோஷப்படும்படி எதாவது நடந்தால், 'இதப் பார்ப்பதற்கு அவர் இல்லையே' என்று ஏங்க வைக்கிறது. அழுத்தமாக பற்றும் முடிகள் அடர்ந்த தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் கைகளின் ஸ்பரிசத்தை சொரசொரப்பாய் உணர முடிகிறது. அவர் எழுதாத கதைகள் குறித்து சிந்திக்க வைக்கிறது.