எல்லா மண்ணிலும் எம் மனிதர்களே!

கேள்விப்படுகிற விஷயங்களும், செய்திகளும் எந்த மனிதனையும் நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கும். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் இருக்கும் உறவு, இடம், உடமை எல்லாவற்றையும் இழந்து திக்கற்று நிற்கிற காட்சிகள் வதைக்கின்றன. சிங்கள இராணுவத்தின் கொலைவெறித் தாக்குதலில் சிதிலமாகிப் போன சாதாரண மக்களின் வாழ்க்கை துயரும், வேதனையும் நிரம்பியதாக இருக்கிறது. அந்த நிலப்பரப்பில் வெடித்துக் கிளம்பும் அவலக் குரல்கள் நம் சிந்தனைகளை அறுக்கின்றன. எல்லாவற்றையும் பார்த்து என்ன எதுவென்று புரியாமல் திக்பிரமையில் அலறும் குழந்தையின் கண்களை இந்த உலகம் எப்படி சந்திக்க முடியும்? எதன் பொருட்டு, யார் இவர்களை வாழ்வின் விளிம்புக்கு துரத்தியது என்று எண்ணும்போது நமக்கு சிங்கள் இராணுவத்தின் மீது கோபம் வருகிறது. விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்கள் எழுகின்றன. உரிய அதிகாரப் பங்கீடும், பரவலும் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு கொடுக்கப்படுவதற்கான ஜனநாயக ரீதியான போராட்டங்கள் பலவீனமடைந்து போனதும், ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வலுப்பெற்றதும் வரலாற்றின் பிழைகளாக நம்முன் வந்து இந்தக் கணத்தில் நிற்கின்றன. தொடர்ந்து முப்பது வருடங்களாக கண்ணி வெடிகள் விதைக்கப்பட்ட பிரதேசத்தில், என்ன பூக்கள் பூத்திருக்கும் என்று தெரியவில்லை. ஆயுதந்தாங்கி நிற்கும் இரு முனைகளுக்கு இடையில் அப்பாவி மக்கள் தன் தங்கள் உலகத்தை இழந்து நிற்கிறார்கள்.

அவர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்புவதும், அவர்கள் வேதனையை நம்முடையதாக பாவிப்பதும் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். இதில் எங்கு வருகிறது, எதற்கு வருகிறது தமிழ் இரத்தம், தமிழ் இனம் என்னும் கோஷங்கள் என்றுதான் தெரியவில்லை. குறிப்பாக தமிழ்த்திரையுலத்தினரை நோக்கி எனக்கு இந்தக் கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. இவர்கள் அண்மைக்காலங்களில் மூன்று முறை இயக்கம் நடத்தியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்யென்றால், கர்நாடகாவிற்கு மின்சாரத்தை கொடுக்கக் கூடாது என்று நெய்வேலியில் போராட்டம், ஒகேனக்கல் தண்ணீர் பிரச்சினையின் போது சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், இப்போது ஈழத்தமிழர்களுக்காக இராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஆகிய மூன்றுமே அடிப்படையில் தமிழ் இன உணர்வு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. சமூகம் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளில் ஒதுங்கி நிற்காமல் இப்படி தங்களை வெளிப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானதும் அவசியமானதும் ஆகும். இந்தப் பிரக்ஞையை நாம் மதிக்கத்தான் வேண்டும். அதேநேரம் எத்தனையோ சமகாலப் பிரச்சினைகளில் வாளாயிருந்த இவர்கள், இப்படிப்பட்ட இன உணைர்வின் அடிப்படையில் மட்டும் வாளை உருவி நிற்பது முக்கியமாகப்படுகிறது. இராமேஸ்வரத்திற்கு புறப்படுவதற்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா அளித்த பேட்டி கவனத்திற்குரியது. திரையுலகத்தில் 'தமிழ் இன உணர்வு குழு' என்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதையே பேட்ஜாகவும் இராமேஸ்வரத்தில் அணிந்திருக்கின்றனர். இங்கு இன உணர்வு மனிதனுக்கு அவசியமா, அவசியமில்லையா என்பதல்ல பிரச்சினை. தமிழன், தமிழ் இனம் என்னும் ஒற்றை அடையாளத்தோடு மட்டுமே இயங்குவது, செயல்படுவது என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

சரி. அப்படி ஒரு இன உணர்வோடு தொடந்து இயங்குகிறவர்களா இவர்கள்?. தமிழக முதல்வரின் கைங்கரியத்தால்தான் இன்றைக்கு தமிழ்ப் பெயர்களை தங்கள் படங்களுக்கு இந்த தமிழ் இன உணர்வு மிக்கவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்குத் தெரியும். இவர்கள் எத்தனை பேர் தங்கள் படங்களில் தமிழ் பேசும் கதாநாயகிகளையும், கதாநாயகர்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். எந்த மொழி என்றே புரியாத எத்தனை பாடல்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியும். மத்திய அரசு, தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க இவர்கள் என்னவெல்லாம் காரியங்கள் ஆற்றியிருக்கிறார்கள் என்று தெரியும். இந்த மண்ணில் நலிந்து கொண்டிருக்கும் எத்தனையோ நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாக்க இவர்கள் என்னவெல்லாம் முயற்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியும். மகத்தான தமிழ் இலக்கியப் படைப்புகளை எத்தனை பேர் சினிமாவாக்கி மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதும் தெரியும். இவர்களின் போற்றும்படியான தமிழ் உணர்வை இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்குள் எல்லாம் விலாவாரியாக போக விரும்பவில்லை.

அதிகாரத்தின் கோரப்பற்களால் எளிய மனிதர்கள் உலத்தின் எந்த மூலையில் தாக்கப்பட்டாலும் அவர்களுக்காக வருந்துகிறவனே கலைஞனாகவும், இலக்கியவாதியாகவும் இருக்க முடியும். பிஜூத் தீவில் கரும்புத்தோட்டத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக் கண்ணீர் சிந்தியதால்தான் இன்றைக்கும் பாரதி மகாகவியாக போற்றப்படுகிறார். 'கேளடா மானிடா' என்று சொன்னதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. பாரதி இப்போது இருந்திருந்தால் பாலஸ்தீன மக்களுக்காகவும், ஈராக் மக்களுக்காகவும், இலங்கை மக்களுக்காகவும் ஆயிரம் கவிதைகளில் தன் கோபத்தையும், வலியையும் கொட்டியிருப்பார். தனக்காக, தன் இனத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறவர்களாக இல்லாமல் மொத்த மனித இனத்தின் குரலாக கலைஞர்களின் இதயத் துடிப்புகள் ஒலிக்க வேண்டும் என்பதே என் கருத்தும், கனவும். அப்போதுதான் அவர்களின் குரல்கள் சகலதிசைகளிலும் எதிரொலிக்கும். சமயவேலின் இந்தக் கவிதை அப்படியொரு எல்லைகளற்ற பெருவெளியில் கேட்கிறது.

எல்லா மண்ணிலும் எம் மனிதர்கள்
எத்தனை உடைகள் வீடுகள்
எத்தனை பண்பாடுகள், மொழிகள்

எல்லாவகை நிலங்களிலும்
எல்லாவகை மனிதர்களோடும்
கொஞ்ச கொஞ்ச காலம் வாழ விரும்புகிறேன்

பூமி உருண்டை முழுசுக்கும்
என்னை நண்பனாக்குகிற
இந்த நிலக்காட்சிகளை
நான் பெரிதும் நேசிக்கிறேன்

இலங்கையில் துயரப்படும் மக்களுக்காக தமிழனாக மட்டுமில்லாமல் மனிதனாக குரல் கொடுப்போம். அது மொத்த மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வலிமை கொண்டதாயிருக்கும்.

முன்பக்கம்

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. //அதிகாரத்தின் கோரப்பற்களால் எளிய மனிதர்கள் உலத்தின் எந்த மூலையில் தாக்கப்பட்டாலும் அவர்களுக்காக வருந்துகிறவனே கலைஞனாகவும், இலக்கியவாதியாகவும் இருக்க முடியும்.//

  கண்டிப்பாக! அநீதியால் வீழும் மக்கள் அனைவருக்காகவும் நம் மனம் கலங்கி,அவர்களை காப்பாற்றும் வழிகளில் கவனம் செலுத்த முயற்சித்தல் வேண்டும்!

  பதிலளிநீக்கு
 2. //எல்லாவகை நிலங்களிலும்
  எல்லாவகை மனிதர்களோடும்
  கொஞ்ச கொஞ்ச காலம் வாழ விரும்புகிறேன்///


  அழகிய வார்த்தைகளில், அற்புதமான வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
 3. /இலங்கையில் துயரப்படும் மக்களுக்காக தமிழனாக மட்டுமில்லாமல் மனிதனாக குரல் கொடுப்போம். அது மொத்த மனித சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வலிமை கொண்டதாயிருக்கும்.///


  வழிமொழிகிறேன்!

  எம் ஈழ மக்கள் வாழ்க்கை சிறக்க வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. ஆயில்யன்!
  நன்றி.
  மனசில் பட்டதை சொல்லிவிடணும் என்று எழுதினேன்.
  உங்கள் கருத்து அதற்கு வலிமை சேர்ப்பதாக உணர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. yes>>>no dispute with you are article.The questions raised towards film personalities are the true voices of rational thinking people.
  At the same time one very small addition. Could your lines be with ''SRILANKA ARMY ''INSTEAD OF''singalee army''? write>write>write more.It should reach masses.So try to post your writings in magazines/periodicals/papers.
  Please have a hard attempts to accupy a place for your write ups.No other way...Or try to publise books to ventilate your writings....vimalavidya@gmail.com-Namakkal-94426 34002.

  பதிலளிநீக்கு
 6. ///ஆயுதந்தாங்கி நிற்கும் இரு முனைகளுக்கு இடையில் அப்பாவி மக்கள் தன் தங்கள் உலகத்தை இழந்து நிற்கிறார்கள்.///

  இதற்கு என்ன‌ செய்ய‌ப்போகிறோம்

  இதற்கு என்ன‌ செய்ய‌ப்போகிறோம்

  இப்ப‌டி எழுதுவ‌தைத்த‌விர‌

  இதற்கு வேறு என்ன‌ செய்து விட‌ப்போகிறோம்

  இந்த கையாலாகாத்த‌ன‌ம் ம‌ன‌தை மிகவும் சோர்வ‌டைய‌ச் செய்கிற‌து மாத‌வ‌ராஜ்

  பதிலளிநீக்கு
 7. Analytical - touching - moving. Keep writing and posting so as to pierce the right conscience of people who normally tend to be misled by pomp and show. Winning the hearts is half winning the battle. Congrats.

  Jayaguru

  பதிலளிநீக்கு
 8. ////இலங்கையில் துயரப்படும் மக்களுக்காக தமிழனாக மட்டுமில்லாமல் மனிதனாக குரல் கொடுப்போம். ////

  தமிழனாகவா? அன்றி மனிதனாகவா? எனபதற்கே முதன்மை தந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்து விடாமல், -

  உருப்படியாக, அவர்களுக்கு எவ் வகையிலேனும் உதவ முடிந்தால் -

  அதுவே சரி.
  அதுவே அனைத்தினும் பெரிது.

  பதிலளிநீக்கு
 9. சிறப்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. இதற்கு முந்தைய எழுத்து நிறம் நன்றாக இருந்தாற்போலிருக்கிறதே மாதவராஜ்.

  இந்த நிறம் கண்ணை உறுத்துகிறார்போலிருக்கிறதே.

  எனக்கு மட்டும்தான் அப்படித்தெரிகிறதா

  பதிலளிநீக்கு
 11. விமலவித்யா அவர்களுக்கு'

  ஏற்றுக்கொள்கிறேன்.
  சிங்கள இராணுவம் என்பதற்கு பதிலாக இலங்கை இராணுவம் என்றுதான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மதுமிதா!

  சோர்வடைய வேண்டியதில்லை.
  உங்கள் வருத்தமும், வேதனையும் எனக்கும் இருக்கிறது.
  இந்தக் கொடுமைகளை நினைத்துப் பார்க்கிற, அல்லது நாலு பேரிடம் சொல்கிற மனிதர்கள்தான் இங்கு உடனடியாக வேண்டி இருக்கிறது.
  உங்கள் கருத்துக்களை திரும்ப திரும்ப சொல்லுங்கள்.
  அது உண்மையாக இருக்கும்போது, அந்தக் கருத்துக்களுக்கு வலிமை கூடும். சக்தி பிறக்கும். அது பெரும் இயக்கமாக பரிணமிக்கும்.
  அவரவர்களுக்கென்று ஆயிரம் அரசியலும், உள்நோக்கமும் இருந்தாலும், மக்கள் இலங்கைப் பிரச்சினை குறித்து யோசிக்கிறார்கள் என்பதுதான்
  சென்னையில் 6 கி.மீ தூரத்திற்கு மனிதர்கள் கைகோர்த்து நிற்க வைத்திருக்கிறது. எம்.பிக்கள் ராஜினாமா என்ற "முடிவு' வைத்திருக்கிறது. தொடர்ந்து இது குறித்து பேசுவதும், எழுதுவதும் இந்த உணர்வு மட்டங்களை இன்னும் மேலெழுப்பும். அப்படி ஒரு மாபெரும் காரியத்தில் நீங்களும், நானும் இப்போதைக்கு ஒரு துரும்பைத்தான் எடுத்துப் போட முடியும்.
  அதுவரை, அந்த மக்களுக்காக நீங்கள் அழலாம். அவர்களது கண்ணீரை உங்கள் கரங்கள் நீட்டி துடைக்க எத்தனிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. சிக்கிமுக்கி அவர்களுக்கு!

  உங்கள் கவலை நியாயமானது.

  ஆனால் இந்தப் பிரச்சினையில் நீங்களும், நானும் அவசரப்பட்டு ஒன்றும் உடனையாக நிகழ்ந்து விடாது என்னும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  ஒரு இனப்பிரச்சினை என்பது மிகுந்த சிக்கலும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் நிறைந்ததாயிருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில், இன்னும் எத்தனையோ தேசங்களில், கண்டங்களில் இது போல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே இருக்கிறது. மிகுந்த பக்குவத்தோடு கையாண்டு இந்தப் பிரச்சினையை சரி செய்ததும் நிகழ்ந்திருக்கிறது. அவைகளிலிருந்து நாம் பாடங்களையும், அனுபவங்களையும் பெற்றாக வேண்டும்.

  இலங்கைப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் பலகாலமாக புகைந்து கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக தீவீரமாகி இருக்கிறது. நம்மைப் பொறுத்த வரையில் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களாக இருந்தாலும், அது இலங்கை என்னும் தேசத்தின் உள்நாட்டுப் பிரச்சினை என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். இப்போதும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும் என தொடர்ந்து இயக்கங்கள் மணிப்பூரிலும், காஷ்மீரிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. "காஷ்மீர் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் வேறு எந்த நாடும் தலையிட முடியாது என்றுதான் நாம் பாகிஸ்தானிடம் சொல்லி வருகிறோம்'. ஆக, ஒரு அண்டை நாடாக நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று வரைமுறைகள் இருக்கின்றன.

  இனப்பிரச்சினைக்கு ஆயுதந்தாங்கிய போராட்டம் ஒரு போதும் தீர்வாகிவிட முடியாது. ஜனநாயகரீதியான போராட்டங்களே அதனைச் சாத்தியப்படுத்த முடியும். எங்கே குறைந்த பட்ச ஜனநாயகம் கூட இல்லையோ, அங்குதான் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் சாத்தியமாகும். வெற்றியும் பெறும். ஆனால் இருந்த ஜனநாயகப் பாதைகளைக் கூட அடைத்துவிட்டு ஆயுதம் எடுத்தது இலங்கையில் விடுதலைப்புலிகள் செய்த தவறு. சரி. விடுதலைப்புலிகள் கேட்பது போல தனி ஈழம் அமைக்கப்பட்டு விட்டால், இந்த இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று யாராவது கனவு காண முடியுமா? இதோ, இந்தியாவென்றும், பாகிஸ்தான் என்றும் பிரிந்த பிறகு இங்கு அமைதியும் நட்புமா இரண்டு நாடுகளுக்கு இடையில் பூத்துக் குலுங்குகிறது? இங்கேயே இப்படி என்றல், அந்த சின்னஞ்சிறு தீவுக்குள் இன மோதல்கள், இரண்டு நாட்டின் மோதல்களாக மாறி நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

  இப்போது உடனடியாக நாம் இதைத்தான் விரும்ப முடியும். இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும். அதற்கான அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அடுத்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். இறுதியாக, ஜனநாயகரீதியான வழிமுறைகளை எல்லோரும் ஆராய வேண்டும். இவையாவும் நாம் தமிழன் குறுகிய தளத்தில் நின்று சிந்தித்தால் சாத்தியமாகாது, மனிதன் என்னும் விரிந்த தளத்தில் சிந்தித்தால் மட்டுமே சாத்தியம் என்றுதான் நான் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 14. குருமூர்த்தி அவர்களுக்கு

  வணக்கம்.

  இந்த ஆதரவில் தொடர்ந்து எழுதுவேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. maximum india

  வணக்கம்.

  உங்களைப் போன்றவர்கள் ஆதரவில் தொடர்ந்து எழுதுவேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. மதுமிதா

  கண்ணை உறுத்துகிறதா?

  ஆனால் சிலர் நன்றாக இருப்பதாகவும் சொன்னார்கள்.

  எதற்கும் அம்முவிடம் கேட்டுக் கொள்கிறேனே?

  பதிலளிநீக்கு
 17. ///எதற்கும் அம்முவிடம் கேட்டுக் கொள்கிறேனே?///

  நல்லதொரு சிறந்த முடிவு:)

  பதிலளிநீக்கு
 18. Once again, you have proved that you are one of those rarest people, who can claim to be "true communists"

  Bravo Uncle!

  அப்புறம், உங்கள் கோபமும் கேள்விகளும் பாரதியாரின் "நடிப்புச் சுதேசிகள்" கவிதையை நினைவு படுத்துகின்றன.

  பதிலளிநீக்கு
 19. தீபா!

  உன் வாழ்த்துக்கள் உற்சாகமளிக்கிறது.
  தொடர்ந்துஎழுதுவேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. Nice Quote...
  //எல்லா மண்ணிலும் எம் மனிதர்கள்//.
  Love the People..

  Somasundaram Hariharan

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!