(1)"All quiet on the western front"
("மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது.")
"அவர்கள் உடல் ரீதியாக போர்களிலிருந்து தப்பியிருந்தாலும், உள்ளரீதியாக அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இன்றைய சந்ததியிடம் இந்த நாவல் பேச முயற்சிக்கும்." இப்படித்தான் All quiet on the western front நாவலைப்பற்றிய ஒரு வரி முன்னுரையாக ரெமார்க்யூ குறிப்பிடுகிறார்.
கனவுகள் ததும்பிய 18 வயதுப் பையனாக இருந்தபோது அவர் ஜெர்மனிக்காக முதல் உலகப்போரில் பங்குபெற வேண்டியதிருந்தது. போர்முனையில் குண்டுகளின் சத்தங்களோடும், குதிரைகளின் குளம்படி சத்தங்களோடும் நான்கு வருடங்கள் கழிகின்றன. 1918ல் போர் முடிவடைகிறது. தனது ஊருக்குத் திரும்புகிறார். வெறுமையும், இழப்புகளும் அலைக்கழிக்கின்றன. முடிந்த வாழ்க்கை விரட்டுகிறது. இறந்துபோன நண்பர்களின் முச்சுக்காற்று இரவுகளில் அருகில் கேட்கிறது. கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு போர் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். போரைப்பற்றி சிந்திப்பதை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் அது கருநிழலாய் அவர் தலைக்கு மேல் தொங்கியபடி சித்திரவதை செய்கிறது. போர் மகத்தானது என்கிற அபிப்ராயம் அவருக்கு துளியும் இல்லை. மாறி மாறி ஊட்டப்படுகிற தேசபக்தி குறித்த பிரமைகளுக்கு மாற்றாக தன் எழுத்தைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. இந்த மன அழுத்தங்களோடு ரெமார்க்யூ எழுதி 1929ல் வெளிவந்த புத்தகந்தான் All quiet on the western front.
அதற்கு முந்தைய நாவல்களில், போர் என்பது பெருமிதங்களையும், சாகசங்களையும் தேக்கி வைத்த நினைவுப்பரப்பாகவே படியவைக்கப்பட்டிருந்தது. பெரும் வெற்றி பெற்றவர்கள் காவியநாயகர்களாக போற்றப்பட்டார்கள். அந்த மயக்கங்களிலிருந்து ரெமார்க்யூ மக்களை எழுப்பியபடி இருந்தார். பிரமைகளை தகர்த்தெறியும் உண்மைகளை பேசிக்கொண்டிருந்தார். முதல் வருடத்திலேயே பத்து லட்சம் பிரதிகள் விற்றன. அதாவது, முதல் உலகப் போரில் ஜெர்மனி தன்மக்களில் எத்தனை பேரை இழந்திருந்ததோ, அதில் ஏறத்தாழ பாதியளவு பிரதிகள். அமெரிக்க சினிமாக் கம்பெனி ஒன்று 1930ல் அந்த நாவலைப் படமாக்கியது. 1932க்குள் 29 மொழிகளில் வெளியானது. யாருமறியாத பத்திரிக்கையாளனாக அப்போது இருந்த ரெமார்க்யூ உலகமே திரும்பிப்பார்த்த எழுத்தாளனாகியிருந்தார்.
ஜெர்மனியின் கீர்த்திக்கு அந்த நாவல் களங்கம் கற்பிக்கிறது என்றனர் நாஜிக்கள். ரெமார்க்யூவை 'பிரெஞ்சு யூதன்' என்றும், 'வயதான மனிதன்' என்றும், 'யுத்த களத்தையே அறியாதவன்' என்றும் பொய்களை பரப்பினர். கோயபல்ஸ் இதனை 'யூதப்பொய்' என்று வர்ணித்தான். 1932ல் அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. 'ஜெர்மனியே எழுந்திரு' என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டு ஹிட்லரின் வெறியர்கள் தெருக்களில் புத்தகத்தை தீ வைத்து எரித்தனர். அவரது படம் திரையிடப்பட்ட அரங்குகளுக்குள் எலிகளை பிடித்து விட்டனர். குண்டுகளை எறிந்தனர். அந்த புத்தகத்தை எழுதியதால் ரெமார்க்யூ ஜெர்மனியிலிருந்து ஒரு அகதியாய் வெளியேற வேண்டியிருந்தது. "நான் யூதனும் அல்ல. நான் இடதுசாரியுமல்ல. அமைதியை விரும்புகிற மனிதன். அவ்வளவே" என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டார். 1941ல் அமெரிக்க குடியுரிமையை பெற்றுக் கொண்டார். அவரது இளைய சகோதரி ஜெர்மனியில் நாஜிக்களால் கொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போர் முடிந்து, நாஜிக்களின் பெரும் அழிவுக்குப் பிறகு 1952ல்தான் All quiet on the western front நாவலுக்கான தடை நீங்கியது.
நாவல் துவங்குகிற புள்ளியிலிருந்தே, போருக்கு எதிரான குரல் கேட்கிறது. முதல் உலகப்போர் ஆரம்பமானதும், 18 வயதே பால் பாமர் தனது நண்பர்களுடன் ஜெர்மனி இராணுவத்தில் சேர்ந்து மேற்கு முனையில் போரிட்டு வருகிறான். அவனது கண்களின் வழியே யுத்தகளமும் அந்தக் காலமும் விரிகிறது. அவனது சிந்தனைகளிலிருந்து கதை நகர்கிறது. பாமரின் நண்பர்களில் ஒருவனான முல்லர் ஒரு புத்தகப் புழு. ஆல்பிரட் கிரோப் புத்தி கூர்மையானவன். இராணுவ அதிகாரிகளின் விலைமாதுக்களை விரும்பும் தாடி வைத்த லியர், அப்புறம் ஜேடான், வாயில்லா மிருகங்களை நேசிக்கும் டெட்டரிங், வெஸ்தஸ், காட்டிலாகா அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட்ட கெம்மரிச் ஆகியோரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஓய்வற்ற, கடுமையான இரண்டு வாரங்களுக்குப் பிறகு பால் பாமரும் அவனது தோழர்களும் போர்முனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். 150 பேராக சென்றவர்கள் 80 பேராக குறைந்திருக்கிறார்கள். பசி அவர்களை அலைக்கழிக்கிறது. 150 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருந்தாலும் சமையற்காரன் அந்த 80 பேருக்கு உண்டான பங்கினை மட்டும் கொடுக்கிறான். வந்தவர்கள் இறந்து போன வீரர்களின் பங்கினையும் கேட்கிறார்கள். மறுக்கப்படுகிறது. சத்தம் போடுகிறார்கள். இராணுவ ஒழுங்கை பசி மீற வைக்கிறது. இறந்து போன 70 பேரை பற்றிய பிரக்ஞை அப்போது யாருக்கும் இல்லாமல் போகிறது.
உணவு முடிந்ததும் கண்ணிவெடியில் சிக்கி உயிழந்து கொண்டிருக்கும் அவனது பள்ளி தோழன் கெம்மரிச்சை போய் பார்க்கிறார்கள். நண்பன் முல்லர் கெம்மரிச்சின் அருமையான தோல் ஷூக்களை யார் வைத்துக்கொள்ளலாம் என பேசுகிறான். "நீங்கள் எல்லோரும் இரும்பு இளைஞர்கள்' என அழைத்த அவர்களது பள்ளி ஆசிரியர் கண்டோ ரெக்கின் வார்த்தைகள் இப்போது வேதனை கலந்த சிரிப்பாக கிரோப்பின் உதடுகளிலிருந்து வெளிப்படுகிறது. பாமருக்கு கெம்மரிச்சின் தாயாரின் கண்ணீர் ததும்பும் முகம் நினைவுக்கு வருகிறது. இராணுவத்துக்கு அனுப்பும்போது 'இவனை நல்லாப் பாத்துக்கப்பா" என்று தன்னிடம் அந்த அன்பு உருவம் சொன்னது பாமரை வதைக்கிறது. கெம்மரிச்சின் கால்களுக்கு வைத்தியம் செய்ய டாக்டர் மறுக்கிறான். ஏற்கனவே இது போல ஆறேழு கால்களுக்கு வைத்தியம் செய்தாகிவிட்டதாக கூறிச் சென்றுவிடுகிறான்.
பள்ளியில் படிக்கிற காலத்தில் கவிதை எழுதக்கூடியவனாக, நுட்பமான பார்வைகளோடு பொங்கித் திளைக்கூடியவனாக இருந்தவன் பாமர். தனக்கு நேர்ந்திருக்கும் காலத்தை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் துயரத்தில் வீழ்கிறான். இதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி, தனது வசந்தகாலத்தை நினைக்காமல் இருப்பதே என்று முடிவு செய்கிறான். மனிதர்களை அவர்களின் இயல்பான உணர்வுகளிலிருந்து போர் கட்டாயமாக பிரித்து எடுக்கிறது.
குரூரமான பயிற்சிகள் அளிக்கும் இராணுவ அதிகாரி ஹிம்மல்ஸ்டாஸ் மீதான வெறுப்பும், பாமரையும் அவனது பள்ளித் தோழர்களையும் இராணுவமயமாக்க சிரத்தை எடுத்த ஆசிரியர் கண்டோ ரெக் குறித்த நினைவுகளும், போர்க்களத்தில் பறி கொடுத்த தோழர்களின் உயிரற்ற பார்வைகளுமாய் நாட்கள் நகர்கின்றன. தனது ஷூக்களை முல்லரிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, கெம்மரிச் சில நாட்கள் கழித்து கண்களில் நீர் வழிந்தோட இறந்து போகிறான். அவனது கடைசித் தருணங்களில் கூடவே இருக்கிறான் பாமர். அந்த படுக்கை இன்னொரு காயம்பட்ட வீரனுக்கு தேவைப்படுகிறது. உடனடியாக கெம்மரிச்சின் உயிரற்ற உடல் அகற்றப்படுகிறது.
கேட் என்றழைக்கப்படும் 40 வயது நிரம்பிய முன்னாள் இராணுவக்காரன் தனிஸ்லாஸ் கச்சென்ஸ்கியுடன் நட்பு ஏற்படுகிறது. கேட் ஒரு துப்புரவுத் தொழிலாளியுமாவான். பாமருக்கு போரின் நிஜமுகத்தை விளக்குகிறான் அவன். அதிகாரம் மனிதர்களுக்குள் வக்கிரபுத்தியைக் கொண்டு வருவதைச் சொல்கிறான். கிரோப் ஒரு கற்பனைச் சித்திரம் தீட்டுகிறான். போர் ஒரு விழா போலக் கொண்டாடப்பட வேண்டும் எனவும், இரண்டு நாட்டின் இராணுவ அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்களுக்கு நடுவில் நின்று போரிட வேண்டும் எனவும், கடைசியாக யார் ஒருவர் பிழைக்கிறாரோ அவரே அந்த நாட்டை ஆள வேண்டும் எனவும் சொல்கிறான்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை எப்படி தவறாக வளர்த்திருக்கிறார்கள் என்பதை யோசிக்கிறான் பாமர். பிரெஷ்யாவின் (ஒன்றுபட்ட ஜெர்மனியின்) கனவாக உருவாக்கப்பட்டிருந்த 'சக்தி வாய்ந்த இராணுவம்' என்பது வயதானவர்களிடம் உறைந்திருப்பதை பார்க்கிறான். பாமரும், அவனது நண்பர்களும் இராணுவ வழக்கங்களை முட்டாள்தனமானதாகவும், மூத்த இராணுவ அதிகாரிகள் இளையவர்களுக்கு துரோகம் செய்வதாகவும் கருதுகிறார்கள். போருக்குப் பிறகு நமக்கு என்ன மிஞ்சப் போகிறது என்பதை பாமரும் அவன் நண்பர்களும் விவாதிப்பது ஒரு பெரும் வெற்றிடத்தைக் காட்டுகிறது.
புதிது புதிதாக இராணுவத்திற்கு 17 வயது கூட நிரம்பாத இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பாலும் அவனது நண்பர்களும் பழைய இராணுவக்காரர்கள் ஆகிறார்கள். பதுங்கு குழிகளும், பீரங்கியின் உறுமல்களும், எப்போதும் புலன்களை சத்தங்களின் மீது செலுத்தி கொண்டிருக்கும் வீரர்களுமாய் போர்க்களம் காட்டப்படுகிறது. கூடவே பயிற்சி பெற்று வந்த ஒரு இளம் படைவீரன் குண்டுவீச்சில் கண்முன்னால் சதைகள் வெடிக்க தூக்கியெறியப்படுகிறான். கண்ணிமைக்கும் நேரத்தில் அடையாளமற்றுப் போய்விடுகிறான். ஒரு படைவீரனுக்கும் இந்த மண்ணுக்குமான உறவு சோகம் சொட்டும் கவிதையாக இருக்கிறது.
எல்லா உணர்வுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பழைய சடலங்களோடு, இறந்து போன புதிய மனிதர்கள் தூக்கியெறியப்படுகின்ற காட்சி தாங்க முடியாததாயிருக்கிறது. மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் நிர்வாண சடலங்களையும், மண்ணில் பரவிக்கிடக்கும் மனித உறுப்புக்களையும் ஸ்பரிசிக்க வேண்டியிருக்கிறது. காயமடைந்த குதிரைகளின் விசித்திரமான அலறல் பெரும் அதிர்வுகளோடு எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. போருக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத, அந்த கம்பீரமான பிராணிகள் யுத்தகளத்தில் மரண அவஸ்தையோடு கதறுவது மனித இனத்தையே சபிப்பது போல இருக்கிறது.
தன் வகுப்பு நண்பர்கள் பலர் இறந்து போனதை எண்ணி கிரோப் வருத்தமடைகிறான். ஜெர்மனி தன் வல்லமையை இழந்து வருவது தெரிகிறது. பாமர் தன் இளமைப்பருவத்தையே இழந்து விட்டதாய் வருந்துகிறான். இடையில் அவனுக்கு இரண்டு வாரம் விடுமுறை கிடைக்கிறது. சொந்த ஊருக்குத் திரும்புகிறான். அம்மா புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். ஊரே பசியால் வதங்கிக்கொண்டிருக்கிறது. எதையும் சொந்தமானதாக பாமரால் உணரமுடியவில்லை. "அங்க ரொம்ப கஷ்டமா இருக்கிறதா" என்று அம்மா கேட்கும்போது பொய் சொல்கிறான். தனது படுக்கையறையில் உட்கார்ந்து புத்தகங்களையும், படங்களையும் பார்க்கிறான். திரும்ப முடியாத அந்தக் குழந்தைப் பருவம் சுகமாக இருந்தாலும் காலத்தின் நிழல்களாகவேத் தெரிகின்றன. கெம்மரிச் வீட்டிற்குச் சென்று அவனது தாயிடம், கெம்மரிச்சின் மரணத்தைச் சொல்கிறான். "அவன் எப்படி இறந்தான்" என்னும் அந்த தாயின் கேள்விக்கு, காயம்பட்டு உடனடியாக இறந்து விட்டதாக பொய் சொல்கிறான். திரும்பவும் போர்க்களத்திற்கு செல்வதற்கு முந்தைய இரவு பாமரின் தாய் அவனை வந்து பார்க்கிறாள். தூங்குவது போல பாசாங்கு செய்கிறான். அவளது மார்பில் சாய்ந்து, அழுது அப்போதே இறந்துவிட வேண்டும் போல இருக்கிறது. இனி லீவில் ஊருக்கு வரக்கூடாது என்றும், வந்தால் தாய்க்கும், தனக்கும் வேதனைதான் அதிகரிக்கும் என்றும் முடிவு செய்கிறான்.
ஆறு வார கால பயிற்சிக்கு பாமர் செல்கிறான். அங்கே சிறையில் ரஷ்யக் கைதிகளைப் பார்க்கிறான். ஜெர்மனிய வீரர்களிடம் உணவுக்கு அவர்கள் பிச்சை கேட்கிறார்கள். பாமர் அவர்களை இரக்கத்துடன் பார்க்கிறான். விவசாயிகளின் முகங்களாகத் தெரியும் அவர்களுக்கும் தனக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. இதுவரை பார்த்தறியாத அந்த மனிதர்களை ஒரே வார்த்தையில் 'எதிரிகள்' என்று எப்படி அழைக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஒரு கைதி இரவில் வயலின் வாசிக்க, காற்றில் தனியாக அலையும் அந்த சுருதி துயரத்தை அதிகரிக்கிறது. பாமரின் தந்தையும், சகோதரியும் அவனைப் பார்க்க வருகிறார்கள். மௌனத்தில் உறைந்து போகிறார்கள். தாய் அவனுக்குச் சில கேக்குகளைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறாள். அந்தக் கேக்குகளில் இரண்டை ரஷ்யக் கைதிகளுக்கு கொடுக்கிறான் பாமர்.
மீண்டும் போர்க்களத்திற்கு வருகிறான். கேட், முல்லர், கிரோப் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ஜெர்மானியச் சக்கரவர்த்தி கெய்சர் வருகிறார் என்று அவர்களுக்கு புதுச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. எந்த ஆகிருதியுமற்ற அந்த கெய்சரைப் பார்த்து அலுப்புத் தட்டுகிறது. போர்கள் இது போன்ற தலைவர்களுக்காகவே நடக்கின்றன என்றும், அவர்கள் மட்டுமே வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறுவார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
போர்க்களத்தில் ஒரு வீரன் தனது நாட்டுக்காக போரிடவில்லை என்பதையும், தன் உயிரை பாதுகாப்பதற்காகவே போரிடுகிறான் என்பதையும் நாவல் திரும்ப திரும்ப பல சம்பவங்களில் சொல்கிறது. ஒருமுறை போர்க்களத்தில் எதிரிகளின் குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க பாமர் ஒரு பதுங்கு குழியில் ஒளிந்து கொள்கிறான். அங்கு ஒரு 'எதிரி'யும் திடுமென நுழைகிறான். பாமர் அவனைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். குற்றுயிரோடு முனகும் அந்த பிரெஞ்சுப் படைவீரனுக்கு பாமர் கட்டுப் பொட்டு தண்ணீர் கொடுக்கிறான். இறந்துபோன அந்த மனிதனிடம் தான் அவனைக் கொல்ல விரும்பவில்லை என கதறுகிறான். ஒரு பெண்ணும், ஒரு பெண் குழந்தையும் நிற்கும் போட்டோ ஒன்றை இறந்தவனின் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்து அழுகிறான். கேட்டும், கிரோப்பும் பாமரை சமாதானப்படுத்துகிறார்கள்.
பாமரும், கிரோப்பும் ஒரு தடவை காலில் காயம்பட்டு அவதிப்படுகிறார்கள். ஆஸ்பத்திரியில் தினந்தோறும் பலர் இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான் பாமர். வயிற்றில் காயத்தோடு இருக்கும் லெவண்டோ வ்ஸ்கி என்னும் நாற்பது வயது வீரன் ஒருவன் தன்னைக் காண நெடுநாட்களுக்குப் பிறகு வரும் மனைவியோடு சந்தோஷமாக இருக்க ஆசைப்படுகிறான். மற்ற நோயாளிகள் அதற்கு உதவி செய்கிறார்கள். கிரோப் லெவண்டோ வ்ஸ்கியின் குழந்தையை வைத்து விளையாடுகிறான். அவனுடைய காயத்தின் ரணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பாமருக்கு லீவு கிடைக்கிறது. அவனது தாய் முன்னைக் காட்டிலும் கஷ்டப்படுகிறாள். திரும்ப போர்க்களத்திற்கு வரும் பாமருக்கு போர் என்பது தன் தாய் கஷ்டப்படும் புற்று நோயைப் போலத் தெரிகிறது. முல்லர் எதிர்ப்படையால் சுட்டுக்கொல்லப்படுகிறான். அவனிடமிருந்து ஷூக்களை பாமர் பெற்றுக் கொள்கிறான். அவை கெம்மரிச்சுடையவை. தொடையில் ஏற்பட்ட காயத்தால் லியர் இறந்து போகிறான். 1918ன் கோடை கடுமையாக இருக்கிறது. பாமரின் நண்பர்களில் மிஞ்சியிருந்த கேட்டும் இறந்து போகிறான்.
போர் சீக்கிரம் முடிவடையவில்லையென்றால் தலைவர்களை மக்கள் எதிர்க்கும் நிலை வரும் என்றொரு கருத்து பரவுகிறது. ஜெர்மனி நாளுக்கு நாள் பலவீனப்பட்டுப் போகிறது. போர் முனையில் விஷவாயுவை முகர்ந்து பாமர் திணறுகிறான். அவன் வீட்டுக்குச் செல்ல பதினான்கு நாட்கள் லீவு தரப்படுகிறது. ஆனால் சொந்த ஊருக்குச் சென்று நடை பிணம் போலத் தானே இருக்கப் போகிறோம் என்று நினைக்கிறான். எத்தனையோ குண்டுவீச்சிலிருந்து தப்பித்த தன்னிலிருந்து வாழ்க்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாய் ஒரு வெறுமை அழுத்துகிறது.
1918 அக்டோ பரில் ஒரு நாளில் பாமர் இறுதியாக கொல்லப்படுகிறான். விடுதலை பெற்ற சந்தோஷம் அவன் முகத்தில் நிலைக்கிறது. 'All quiet on the western front'(மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது) என்ற வாசகங்களோடு இராணுவ முகாமிற்கு ஒரு தந்தி வருகிறது. நாவல் இத்துடன் முடிவடைகிறது.
போருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டு மனிதகுலத்தின் மீது ஒரு நீண்ட விசாரணையை இந்த நாவல் நடத்தியிருக்கிறது. யார் வென்றாலும், யார் தோற்றாலும் எல்லாவற்றையும் இழக்கப் போவது இருதரப்பு மக்கள் என்பதை வெறுமை படர, படர உணர்த்தி விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் பருவங்கள் அதுபாட்டுக்கு வழக்கம்போல் மாறிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'போர் இயற்கைக்கு விரோதமானது' என்பதை குறிப்பறிய வைக்கிறது. முன்பின் தெரியாத இன்னொரு நாட்டின் ஒரு வீரனை எந்த சம்பந்தமுமில்லாமல் கொல்ல வேண்டியிருக்கிறது. பிறிதொரு நேரத்தில் கொன்றவனும், கொல்லப்படுகிறவனும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கக்கூட முடியும் என்றெல்லாம் நாவல் நம்மிடம் உரையாடுகிறது. தேசம் என்றும், மண் என்றும் உருவேற்றி அதற்குள் தேசீயவாதம் என்னும் வெறியை ஊட்டி, வல்லரசு என்று இராணுவசக்தியை வளர்ப்பது யாருக்காக என்று அதிகாரத்தின் மீது கணைகளை இந்த நாவல் வீசியிருக்கிறது.
மிகச் சரியாக உணர முடிந்தால் இந்த நாவல் பகவத் கீதைக்கும் நேர் எதிரான கலகக்குரல். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணனோடு இந்த நாவல் அனுபவத்தின் தளத்தில் நின்று எதிர்வாதம் செய்கிறது. இந்த அரசியலைப் புரிந்து கொண்டதால்தான் நாஜிக்கள் அங்கு இந்த நாவலை தடை செய்திருக்கிறார்கள்.
போர் குறித்த கொடூரங்கள் பேசப்பட்டதால் இந்த நாவலை வலதுசாரிகள் எதிர்த்தனர். என்னதான் போரை எதிர்த்து பேசினாலும், நாவலின் கதாநாயகன் கடைசிவரை போர் வீரனாக இருப்பது எதிர்மறையானது என்று இடதுசாரிகளும் விமர்சித்தனர். 1952ல் தடை நீங்கினாலும், நாவலில் வரும் பாமரின் கதாபாத்திரம் போல, ரெமார்க்யூ தனது சொந்த ஊருக்கு கடைசி வரை திரும்பவில்லை. 1970, செப்டம்பர் 25ல் ரிமார்க்யூ ரோமில் இறந்து போகிறார். அவர் பிறந்த ஜெர்மனியில் ஒரு வார இதழில் அஞ்சலி செலுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவரது புகழ்பெற்ற 'மேற்கு முனையில் அமைதி நிலவுகிறது' பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த புத்தகம் மட்டும் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இந்த தடை செய்யப்பட்ட புத்தகம் இருக்கிறது. இதற்குப் பிறகு போரை எதிர்த்து ஏராளமான இலக்கியங்கள் வந்திருக்கின்றன. அமெரிக்காவின் யுத்த வெறிக்கு எதிராக இன்று உலகம் முழுவதும் திரண்டு நிற்கிறார்கள். இதவிட இந்த நாவலின் வெற்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
ஆனாலும்- 2006, ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் இஸ்தான்புல் நகரத்து நீதிமன்றத்தில் எழுத்தாளர் பெரிஹன் மேக்டன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். துருக்கியில் அனைவரும் குறைந்த பட்சம் 15 மாதங்களாவது இராணுவத்தில் பணிபுரிந்திருக்க வேண்டுமாம். இதற்கு எதிரான கருத்துடன் அவரது நாவல் ஒன்று சமீபத்தில் வெளிவந்திருக்கிறதாம்.
அடிபட்டாலும் அதிகாரம் தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது... மீண்டும் ஒருமுறை தோற்றுப் போவதற்கு!
வரலாற்றில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு தொடர் -1
அக்டோபர் 23, 2008
6
முழுக்க இதை வாசித்து விட்டு சோகத்தோடு நேற்று நான் போட்ட கமெண்ட் எங்கே போச்சுது.
பதிலளிநீக்குஎங்கே எங்கே எங்கே
இந்த ஈழச் சூழலோடு இதை ரிலேட் செய்து சாதாரண மக்களுக்கான தேவையேயில்லாத இந்த வாழ்வியல் தண்டனை ஏன் என்ற கேள்வி எப்போதும்போல் இம்முறையும் மனதை வதைத்தெடுத்துவிட்டது. போரில் அரசியல் ஆடும் அரசின் (உலகம் முழுக்க ஆட்சி புரியும் எந்த அரசானாலும் அதன்) மிருகப்பசி எப்போது தீரும். மனிதகுலத்திற்கான சாபம் தானோ இது.
வளமையான உலகில் பாதுகாப்பாக வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறதே. இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும், இல்லாத காரணங்கள் கற்பிதம்செய்யப்பட்டு நிகழும் இந்த நாகரீகமற்ற காட்டுத்தனம் தீரும் நாள் என்றுதான் வரும்.
மதுமிதா!
பதிலளிநீக்குஎன்னுடைய இன்னொரு blogஐ நீக்கிவிட்டு, அதில் எழுதிய எல்லாவற்ரையும் ஒரே blog ல் கொண்டு வரும்போது, கட்டுரையோடு உங்கள் கமெண்ட்டும் போய்விட்டது.
மன்னிக்கவும்.
நாவல் குறித்து உங்கள் கருத்து நியாயமானது. மனதில் ஏற்பட்ட வருத்தமும் நியாயமானது. இதுபோன்ற எழுத்துக்களை மீண்டும் மீண்டும் நம்மால் முடிந்தவரை ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதே மிகச் சிறந்த காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நல்ல பதிவு. உங்க முகப்பு பக்கம் நல்லாயிருக்கு!
பதிலளிநீக்குமேலும் வளர வாழ்த்துக்கள்!
சுடர்மணி!
பதிலளிநீக்குநன்றி.
தொடர்ந்து எழுதுவேன்.
முகப்பு நன்றாக இருக்கிறதா?
மிக்க நன்றி.
சரியான நேரத்தில் இந்த கதையை படிக்கிறேன். ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை தான் இந்த கதை நினைவூட்டியது. இரு பக்கமும் இத்தனை உயிர்கள் பலியாக இராஜபக்சே எதை சாதித்தார் என்று தான் தெரியவில்லை. வன்முறை எவ்வகையை சேர்ந்தாலும் அது ஏற்புடையது அல்ல. அது பிரபாகரன் ஆனாலும், இராஜபக்சே ஆனாலும் எல்லாம் ஒன்று தான். ஆனால் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஎன் நண்பர் ஒருவர் இன்று விரதம் இருந்து இறைவனிடம் அந்த மக்களின் நன்மைக்காக பிரார்த்திப்போம் என்று சொன்னதின் பெயரில் நானும் என் நண்பர்கள் சிலரும் இன்று விரதம் இருந்து வேண்டுகிறோம். பசியுடன் நாம் ஒன்றை வேண்டும் போது அது இறைவனால் கேட்கப்படும். நம் உணர்வலைகளின் உந்துதல் அந்த மக்களுக்கு நன்மையை உண்டு பண்ணும். இதை அஞ்ஞானமாக எடுத்தாலும் சரி, விஞ்ஞானமாக எடுத்தாலும் சரி.
தங்களால் இயன்றால் தாங்களும் தங்கள் நண்பர்களுடன் இணைந்து அந்த மக்களின் நன்மைக்காக ஒரு நாள் விரதமிருந்து வேண்டுங்கள்.
Thanks, Article is very good and i like this.
பதிலளிநீக்குplease write and share more.