இது வேறு இதிகாசம்

"படத்தில் சில காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. காட்சியாக பதியும்போது ஒன்றிப் போகிறோம். ஆனால் இந்தக் காட்சியை காமிராவை வைத்து சிலர் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஒரு பதற்றம் வருகிறது". ஸ்ரீவில்லிப்புத்தூரில் இந்தப் படம் திரையிட்டு முடித்தபிறகு பார்வையாளர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார். படப்படிப்புக் குழுவினருக்கு நேர்கிற ஒரு அனுபவத்தை பார்வையாளர்கள் பெரும்பாலும் உணரத் தலைப்படுவதில்லை. அந்தக் காட்சியோடு ஒன்றியோ அல்லது ஒன்றாமலோ பார்த்துக் கடந்து போகிறவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக படம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்த்து விமர்சனம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். காமிரா கோணம், இடம், வெளிச்சம், வசனம், தூரம், பொழுது, பாத்திரங்கள், அவர்களுக்கான நடை உடை பாவனைகள் என எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டு, மாறி மாறி ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்படுகிற கதைப்படங்களின் காட்சிகள் குறித்து விரிவாக பேசமுடிகிற, பேசப்படுகிற காலம் இது. ஆவணப்படங்கள் வேறுபடுகிறது. ஒருக் குறிப்பிட்ட காட்சியை அந்த நேரத்தில் தவறவிட்டால் வேறு எப்போதும் எடுக்கவே முடியாது. ஒருக் குறிப்பிட்ட வார்த்தையில் கிடைக்கும் உயிர்த் துடிப்பான அர்த்தங்களையும் தொனியையும் அந்த நேரத்தில் தவறவிட்டால் மீண்டும் பெறவே முடியாது. (திரும்ப எத்தனை முறை அதே வசனங்களை சொல்ல வைத்து எடுத்தாலும் முதல் தடவை வெளிப்பட்ட அந்த புத்தம்புதுத் தன்மை கிடைக்காது). ஆவணப்படத்தின் சிறப்பே இதுதான். ஒவ்வொரு ஆவணப்படத்திலும் அதில் சொல்லப்பட்டவைகளை, எடுக்கப்பட்ட காட்சிகளைத் தாண்டி சொல்லப்படாதவைகள் நிறையவே இருக்கின்றன. எடுக்கப்படாத காட்சிகள் எவ்வளவோ தோன்றி மறைந்திருக்கின்றன. அவைகளை படம் பிடிக்கிற போது, படம் பிடிக்க முடியாத போது ஏற்படுகிற வலியும், வேதனையும் ஒரு ஆவணப்படக்காரனுக்கு மட்டுமே சொந்தமாகிறது.

கொலை செய்யப்பட்ட நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சக்கனின் மகள் ஜமுனாவிடம் பேசிக் கொண்டு இருந்தோம். பரிதவிப்போடு காற்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்த வெட்ட வெளி அது. தந்தை மீது கொள்ளை கொள்ளையாய் பாசம் வைத்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் முதலில் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தாள். தந்தையின் நினைவுகள் வர ஆரம்பித்ததும் கண்கள் பொங்கிப் பொகின்றன. அடக்க மாட்டாமல் அழ ஆரம்பிக்கிறாள். கண்ணீர்த் துளிகள் நிற்கவேயில்லை. என் மகளின் வயதொத்த அந்தக் குழந்தையின் சோகம் பற்றிக்கொள்ள, 'ஐயோ' என நானும் கதறி திரும்பிக் கொள்கிறேன். தொடர்ந்து உதவி இயக்குனரான காமராஜ் அவளிடம் ஆறுதலாய் பேசுகிறான். எல்லாவற்றையும் ஓளிப்பதிவாளர் பிரியா கார்த்தி பானசோனிக் 62 த்ரீ சி.சி.டியின் அந்த சின்ன மானிட்டரில் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அன்று இரவு எடுத்த காட்சிகளை டிவியில் பார்க்கிறோம். 'ஐயோ' என்று என் சத்தமும் கேட்கிறது. கார்த்தி என்னைப் பார்த்து லேசாய் சிரிக்கிறான். பேட்டி எடுக்கும் போது இடையிடையே 'உம்' கொட்டுவதை, தேவையில்லாமல் குறுக்கிடுவதை தவிர்க்க வேண்டும் என எத்தனையோ முறை எங்களுக்குள் பேசியிருக்கிறோம். ஆனாலும் இந்த "ஐயோ". ஒருவர் திட்டமிட்டு அழும்போது, அதை ஒருவர் திட்டமிட்டுக் காட்சிப்படுத்தும் போது இந்த 'ஐயோ' வராது. இரத்தமும் சதையுமான நேரடிக் காட்சிக் களத்தில் இயக்குனர்களோ, ஓளிப்பதிவாளர்களோ இல்லை. மனிதர்களே இருக்கிறார்கள். பியூச்சர் பிலிம் படப்பிடிப்புகளில் ஒருவர் தத்ரூபமாக அழும்போது, சுற்றி நிற்பவர்கள் கைதட்டி அதைப் பாராட்டி விட முடியும். இங்கு கனத்த இதயத்தோடுதான் அதைத் தாங்க வேண்டும். அழுவதாக ஒருவர் நடித்து முடிந்ததும், அவரது இயல்பான நடவடிக்கைகளுக்கு சட்டென தன்னை மாற்றிக் கொள்ள முடியும். இங்கோ, படப்பிடிப்புக் குழுவினர் அங்கிருந்து அகன்ற பிறகும், அழுதவர்கள் கிளறி விடப்பட்ட நினவுகளிலிருந்து மீளாமல் விசும்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக ஆவணப்படங்களைக் காட்டிலும் மற்ற படங்கள் தரம் குறைந்தது என்று அர்த்தமில்லை. தன்மையும், சூழலும் வித்தியாசமானது என்பதுதான் சொல்ல வந்த விஷயம்.


இப்படி ஏராளமான அனுபவங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த வெளியாக 'இது வேறு இதிகாசம்' எடுத்த ஒன்றரை வருட காலம் அலைகளென ததும்பிக் கிடக்கிறது. ஐம்பத்தெட்டு மணி நேரம் ஷூட்டிங் நடத்தி அதை 65 நிமிடங்களுக்குள் சொல்ல முயன்ற காரியம் இது. அசாம், காஷ்மீர் போன்ற பெரும் பதற்றம் நிறைந்த பிரதேசங்களில் கூட தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை மார் தட்டிச் சொல்கிற தேசத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாடார்மங்கலம் போன்ற பஞ்சாயத்துக்களில் பத்துவருடமாக தேர்தல் நடத்த முடியாமல் போன அவலத்தைச் சொல்கிற கதை இது. வேர்களைத் தேடிப் பிரவேசித்து, பலப்பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் படிந்திருக்கும் அழுக்குகளின் தடம் பார்த்த வரலாறு இது. சமூகச் சிக்கல்களும், நுட்பமான அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கின்ற ஒரு களத்தை காட்சிப்படுத்துவது எத்தனை சோதனைகளும், சவால்களும் நிறைந்தது என்பதை உணர்ந்தபடியே ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டியதிருந்தது.


2005 அக்டோபரில் திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் "பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்கச்சினேந்தல் பஞ்சாயத்துக்களில் பத்துவருடமாக தேர்தல் நடத்த முடியாமல் இருப்பதை கண்டித்தும், அதை சமூகத்தின் மனசாட்சியான எழுத்தாளர்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது, களமிறங்கி பிரச்சாரம் செய்தாக வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றிய தருணத்திலிருந்து எங்கள் கரிசல் குழுவினரின் காமிரா இயங்க ஆரம்பித்தது. 2005 டிசம்பர் 25ம் தேதி மதுரையில் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதம் இருந்த போது அதை முழுக்க படம் பிடித்து வைத்துக் கொண்டோம். பிரச்சினையின் தீவீரத்தையும் ஆழத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம். பத்து வருடமாகத் தேர்தல் நடத்தவில்லை, இனி சுழற்சி முறையில் இந்த நான்கு தொகுதிகளும் பொதுத் தொகுதியாகிவிடும் என அங்கிருந்த ஆதிக்க சக்திகள் மௌனப்புன்னகையோடு எதிர்பார்த்திருந்த வேளை அது. சுழற்சி முறையில் மாற்றம் வரக்கூடாது, பத்தாண்டுகள் முழுமையாக தலித் மக்கள் பஞ்சாயத்துத் தலைமையில் இருந்த பிறகே பொதுத் தொகுதியாக்க வேண்டும் என எழுத்தாளர்களும், முற்போக்கு சக்திகளும் அரசை வலியுறுத்திய காலம் அது. இந்த முக்கியப் புள்ளியிலிருந்து எங்கள் பயணம் ஆரம்பமானது.


உசிலம்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். "அதோ தெரிகிறதே, அந்த மலைகளுக்கு அடிவாரத்தில் பாப்பாப்பட்டி இருக்கிறது" என்று எங்களை அழைத்துச் சென்ற எழுத்தாளர் வெங்கடேசன் சொல்லிக் கொண்டிருந்தார். "அதுதான் பிறன்மலை. அதனால்தான் அவர்களுக்கு பிறன்மலைக்கள்ளர்' என்று பெயர் வந்திருக்க வேண்டும் என்றார். அந்தக் கடினமான குன்று ஏராளமான கதைகளைச் சுமந்தபடி எங்களோடு வெயிலில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. "குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றியும், அதில் பிறன்மலைக் கள்ளர்கள் வேட்டையாடப்பட்டதையும், பசும்பொன் முத்துராமலிங்கம், வா போன்றவர்கள் பிரிட்டிஷாரின் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியதையும் வெங்கடேசன் சொல்லிக்கொண்டு இருந்தார். "ஒருகாலத்தில் இப்படி அடக்கி ஒடுக்கப்பட்ட இவர்கள், இன்னொரு சமூக மக்களை எப்படி அடக்கி வைக்கிறார்கள் என கேட்டேன். "இந்திய சமூகத்தின் முக்கியக் கூறாகவும், சாதீயக் கட்டுமானத்தின் நுட்பமாகவும் இதுவே இருக்கிறது" என்றார். இதற்கான காரணங்களை மிக அழுத்தமாகவும், எளிமையாகவும் பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியனும், தொ.பரமசிவமும் பிறகு சொன்னார்கள். "தங்களுக்கு மேலே ஒரு ஜாதி இருக்கக் கூடாது என்று நினைக்கிற அதே வேளையில் தங்களுக்குக் கீழே ஒரு ஜாதி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்". பத்து வருடமாகத் தேர்தல் நடத்த முடியாமல் போனதைச் சொல்ல வரும்போது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஆதிக்க சாதிகள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு நகரத் தொடங்குகிற போது, அந்த இடத்திற்கு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வந்ததையும், தலித் மக்கள் தொடர்ந்து அடக்கப்பட்டு வருவதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங்களுக்கு ஐந்து முறைகளுக்கும் மேலாகச் சென்று வந்திருக்கிறோம். முதன்முறையாகச் சென்ற போது பதற்றமே எங்களுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது. ஊரின் நடுவே வைக்கப்பட்டிருந்த மூக்கையாத் தேவரின் சிலையும், அதன் கீழே சுவரில் "நான்கு தொகுதிகளையும் பொதுத் தொகுதியாக்க வேண்டும்" என்ற வாசகத்துடன் ஓட்டி வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளும் எங்களை வரவேற்றன. தயங்கியபடியே ஒரு டீக்கடையில் நுழைந்தோம். அதை நடத்திக் கொண்டிருந்த பெண்மணி மிகுந்த வாஞ்சையோடும், பரிவோடும் எங்களை உபசரித்தார். மெல்லப் பேச்சுக் கொடுத்தோம். டீக்கடைக்குள் இருந்தவர்களில் ஒருவர் "எந்தப் பத்திரிக்கையிலிருந்து வருகிறீர்கள்?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டார். வரும் அந்நியர்கள் பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள் என்பதை அந்த மக்களால் அடையாளம் கண்டுவிட முடிகிறது. மிக வாடிக்கையான ஒன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். பத்துவருடங்களாக இந்த விஷயம் குறித்து முக்கியப் பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதை நாங்கள் சேகரிக்க ஆரம்பித்திருந்தோம். வாய்க்கு வந்த ஒரு பத்திரிக்கை பெயரைச் சொன்னோம். பிறகு 'எதுக்கு இந்த ஊர்ல பத்து வருசமா தேர்தல் நடக்கல" என்றோம். டீக்கடைப் பெண்மணி "சாமிக்கு ஆகாதிங்க... மொதல்ல ஒருத்தன் பஞ்சாயத்துத் தலைவரா நின்னான். அவன் வீட்டுல இடி விழுந்தது. அதுக்கப்புறம் ஒருத்தன் செத்துப் போனான். இன்னொருத்தன் வீட்டுல நாலு ஆட்டுக்குட்டிய நாய் தூக்கிட்டுப் போய்ட்டு. அதுதான் சாமிக்கு பயந்து நாங்க பொதுத் தொகுதியாக்க வேண்டும் என கேட்கிறோம்" என்றார். அங்கிருந்து பஞ்சாயத்து அலுவலகம் சென்றோம். பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சில வாலிபர்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். மிக இயல்பாக பேசினார்கள். "அவங்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்ல. வித்தியாசம் பாக்குறதுமில்ல" என்றான் ஒருவன். "லாரி டிரைவரா இருக்கேன். வெளியூர்ல போனா கேக்காங்க. இவ்வளவு கொடுமைக்காரங்களா நீங்கன்னு சொல்றாங்க. காலாகாலமா இப்படி இருக்கு. அதுக்கு நாங்க என்ன செய்ய?" என்றான் இன்னொருவன். நாட்டாமங்கலத்தில் கோயில் பூசாரி "அவங்களா நிக்க மாட்டேன்னு சொல்றாங்க. பிள்ளங்க பிள்ளைங்களாத்தான் இருக்கோணும். பெரியவங்களாகக் கூடாதுன்னு அவங்களே விலகிக்கிறாங்க. ஒங்களுக்கு வெளியே இருந்து பாக்கும் போது வித்தியாசமாத் தெரியலாம்" என்று சொன்னவர் காமிரா பதிவு செய்வதைப் பார்த்து கோபமா "ஏ..எடுக்காதப்பா" என அதட்டினார். தலித் மக்கள் வசிக்கும் பகுதி எங்கும் செல்லவில்லை. ஒரு விஷயம் தெளிவாக எங்களுக்கு அன்றைக்கு புரிந்தது. சின்னப் பையன்களிலிருந்து வயதானவர்கள் வரை இந்தப் பிரச்சினை குறித்து ஒரே தொனியில் பேசுகிறார்கள். தொடர்ந்து அந்த ஊர்களுக்குள் உரையாடல்கள் நடந்து கொண்டே இருந்திருக்கின்றன.பஞ்சாயத்துத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட 1996லிருந்து நீளும் இந்தப் பிரச்சைனையில் யார் யாரெல்லம் இதுவரை சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எந்த இயக்கமெல்லாம் அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சித்தது என்பதை ஆராய ஆரம்பித்தோம். மிக முக்கிய பங்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு இருந்தது. முதல் நான்கைந்து வருடங்கள் தேர்தல் நடத்தவே முடியாமல், யாரும் போட்டியிட முன்வராமல் இருந்த இறுக்கத்தை உடைத்த இயக்கம் அதுவாகத்தான் இருந்தது. அதன் பொதுச்செயலாளர் திருமாவளவனை பேட்டி கண்டோம். அந்த இயக்கம் நடத்திய போராட்டங்கள் குறித்த பதிவுகள் பத்திக்கைச் செய்திகளாகவோ, வீடியோக்களாகவோ இருந்தால் தாருங்கள் என்றோம். தருவதாகச் சொன்னார். ஆனால் தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டும் எங்களுக்கு கிடைக்கவேயில்லை. நாங்களாக பெருமுயற்சி எடுத்து மக்கள் கண்காணிப்பகத்திலிருந்து 'பொது விசாரணை' குறித்த வீடியோக் காட்சிகளை பெற்றோம். காலச்சுவடு பத்திரிக்கை ஆசிரியர் கண்ணன் தலைமையில் எழுத்தாளர்கள் ரவிக்குமார், மேலாண்மை பொன்னுச்சாமி, சிவசுப்பிரமணியன் போன்றவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வந்ததைக் கேள்விப்பட்டோம். கண்ணனை தொடர்பு கொண்டோம். அது குறித்து காலச்சுவட்டில் வந்த கட்டுரை, புகைப்படங்களை தந்து உதவினார். அந்தக் குழுவில் சென்று வந்த மேலாண்மை பொன்னுச்சாமி எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய மாநிலத் தலைவர்களில் ஒருவர். நாங்களும் அதே அமைப்பைச் சார்ந்தவர்களாயிருப்பதால் வேண்டுமென்றே அவரிடம் பேட்டி எடுப்பதைத் தவிர்த்து, பேராசிரியர் சிவசுப்பிரமணியனிடம் சென்று பதிவு செய்து கொண்டோம். பஞ்சாயத்துத் தேர்தல் குறித்தும், அதன் ஜனநாயகம் குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் நடத்தி வருபவரும், அது குறித்து ஏறத்தாழ முப்பது புத்தகங்களுக்கு மேல் எழுதியிருப்பவரும், ராவ் காந்தி பவுண்டேசனில் முக்கிய உறுப்பினராக இருப்பவரும், பொது விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தவருமான காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் பழனித்துரையை பேட்டி கண்டோம். பாப்பாப்பட்டி ஊருக்குப் பக்கத்து ஊரைச் சேர்ந்தவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம் சென்று பிரச்சினையின் பின்புலங்களைத் தெரிந்து கொண்டோம். இந்த நான்கு பஞ்சாயத்துக்களிலும் இருக்கிற தலித் மக்களிடம் அச்சத்தை உறைய வைத்த, 1996ல் நடந்த மேலவளவுப் படுகொலை குறித்த விஷயங்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். நேரில் சென்று கொலை நடந்த இடத்தைப் பார்த்தோம். அதைப் பார்த்தவர்களிடம் பேசினோம். ஒன்றிலிருந்து ஒன்றாக தேடி அலைந்து கொண்டே இருந்தோம். ஆவணப்படத்திற்கு இதுதான் முக்கியமானது. எதையும் விடாமல் தொடரும்போதுதான் ஒன்றின் முழுப் பரிமாணத்தை உணர முடியும். எல்லாம் அறிந்து கொண்டு எடுக்கப்படுவதில்லை ஆவணப்படம். களத்தில் நின்று அறிந்து கொள்வதுதான் ஆவணப்படம் என நான் நினைக்கிறேன். அதை மற்றவர்களும் சரியாக அறியச் செய்யும் போது அந்த முயற்சி முழுமை பெறுகிறது.


இவைகளுக்கு ஊடாக காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டு வந்தன. மதுரைக்கு புதிய கலெக்டராக உதயச்சந்திரன் பொறுப்பேற்கிறார். உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றன. முதலில் இந்த நான்கு பஞ்சாயத்துக்களிலும் சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்கிறது. இடது சாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி எல்லோரும் சுழற்சி முறையில் மாற்றம் கூடாது, தனித்தொகுதிகளாக நீடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. அரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு அறிவிக்கப்படுகிறது. அரசின் உறுதி ஆதிக்க சக்திகளின் உறுதியை உடைக்கிறது. கலெக்டரின் முயற்சியால் நான்கு பஞ்சாயத்துக்களிலும் தலித் மக்கள் பொறுப்புக்கு வர வேகமாக காய்கள் நடத்தப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக களத்தில் நின்று வேலை செய்கிறது. முக்கியமான இரண்டு கட்சித்தோழர்களை சந்தித்து பேசினோம். மனுத்தாக்கல் நடை பெறுகிறது. கீரிப்பட்டி பஞ்சாயத்தில் ஊர் சார்பாக நிறுத்தப்படுகிறவர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடியாகி சி.பி.எம் சார்பில் நிறுத்தப்பட்ட பால்ச்சாமியின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட நான்கு பஞ்சாயத்துக்களில் ஜனநாயகத்தின் முதல் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. பால்சாமியிடம் பேட்டி எடுத்துக் கொண்டோம். பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் போட்டி நிலவுகிறது. "யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள், ஆனால் தேர்தெடுக்கப்படுகிறவர்கள் முழு ஐந்து வருடங்களும் பதவியில் நீடிக்க வேண்டும்" என எழுத்தாளர் சங்கம் சார்பில் அந்த ஊர்களுக்குள் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வனின் கருத்துக்களை கேட்டு அறிந்தோம். தேர்தல் நடக்கிறது. பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் ஊர் சார்பாக நிறுத்தப்படுகிறவர்களே வெற்றி பெறுகிறார்கள். பதவிப் பிரமாணம் அந்த ஊர்களில் கோலாகலமாக நடைபெற, கீரிப்பட்டியில் பதற்றத்தோடு நடந்து முடிகிறது. கலெக்டர் உதயச்சந்திரனிடம் பேட்டி எடுத்துக் கொண்டோம். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைச் சந்திக்க பலமுறை முயன்றோம். மலேசியா சென்றிருக்கிறார், வெளியூர் சென்றிருக்கிறார் என்ற பதிலே கிடைத்தது. வெற்றி பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து அரசு சார்பில் கௌரவிக்கப்பட்டு சமத்துவப் பெருவிழா நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் வெற்றி என்று கொண்டாடப்படுகிறது. பிரண்ட்லைன் பத்திரிக்கையில் "மக்கள் மனதில் மாற்றம்" என கட்டுரை வெளியாகிறது. எல்லாவற்றையும் நேரடியாக பதிவு செய்து கொண்டோம். உள்ளுக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. "இது வெற்றியா" என்று ஒரு கேள்வி எங்களுக்குள் அடங்காமல் எழுந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் இதுவரை எடுத்து வந்த காட்சிகளின் ஒட்டுமொத்த உருவம் மெல்ல மெல்ல புலப்பட ஆரம்பித்தது.இந்த நேரத்தில்தான் ஒரு பெரும் அதிர்வை தந்தது நக்கலமுத்தன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் படுகொலை. கனத்த இதயத்தோடு மீண்டும் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். மேலவளவுப் படுகொலைக்கும், நக்கலமுத்தன்பட்டி படுகொலைக்கும் இடையில் கடந்திருக்கும் பதினோரு வருடங்களில் நடந்த சிறு மாற்றம் இதுதான். அன்று மேலவளவில் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராவதையே அனுமதிக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. இன்று அவர்கள் பெயருக்கு இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் பஞ்சாயத்தை நடத்துகிற பொறுப்பு எங்களிடமே இருக்க வேண்டும், அதை மீறி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள தலித்கள் முனைந்தால் விட மாட்டோம் என்கிற எச்சரிக்கையை ஆதிக்க சக்திகள் சொல்லியிருக்கின்றன. இதற்கு ஒரு நீண்ட போராட்டம் நடத்தியாக வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. மீண்டும் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊர்களுக்கு ஐந்தாவது முறையாகச் சென்றோம். பெரும்பாலும் தலித் மக்கள் வாழும் பகுதியில் படபிடிப்பு நடத்தினோம். தெருக்களில் இளைஞர்களையேப் பார்க்க முடியவில்லை என்பது சிந்தனையில் பட்டது. விசாரிக்கும் போதுதான் தெரிந்தது. எந்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்துவிட்ட மனிதர்கள் சென்ற தலைமுறையினராக இருக்கிறார்கள். இன்று எதிர்த்து நிற்கும் மனோபாவங்கள் தலையெடுக்கின்றன. ஊருக்குள் இருந்தால்தானே வம்பு என்று வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் திருப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று விட்டிருந்தனர். "ஊரைப் பகைச்சுட்டு, கவர்மெண்டை நம்பி போயிட்டான். எங்களைக் கேட்டிருந்தா நிக்க விட்டிருக்க மாட்டோம்' என கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பால்ச்சாமியின் சகோதரி கண்ணிர் மல்கச் சொன்னார். பஞ்சாயத்துத் தலைவர்களோடு ஏ.கே 47 ஏந்திய காவலாளிகள் நடந்து சென்றார்கள். பார்வையாளர்களுக்கு சொல்லப் போகும் சித்திரம் இப்போது தெளிவானது.


இந்தப் படத்தை பின்னணிக் குரல்களின்றி சொல்ல வேண்டும் என்பதில் எங்கள் குழு உறுதியாய் இருந்தது. எத்தனை கவனமாக இருந்தாலும், படம் எடுப்பவர்களே காட்சிகளைப் பற்றிப் பேச ஆரம்பிப்பதால், எதாவது ஒரு இடத்தில் ஒருவித சார்புத் தன்மை ஒட்டிக்கொண்டு இருப்பதாக பார்வையாளன் உணர்ந்துவிடக் கூடும். இந்தப் படம் பேசுகிற விஷயம் மிக நுட்பமானது என்பதால், நாங்கள் அதனை தவிர்க்க விரும்பினோம். பேட்டிகள், காட்சிகள் மூலமே தொகுக்க முயற்சி செய்தோம். இதில்தான் பெரும் வேலையும், சிரமங்களும் இருந்தன. காட்சிகள் கண்ணிகளாக ஒன்றுக்கொன்று தொடர்போடு அடுக்கப்படும் போதுதான் சொல்ல வருகிற விஷயத்தோடு யாரும் பயணிக்க முடியும். இதில் முக்கிய பிரச்சினையாயிருந்தது ஒலிப்பதிவில் இருந்த இரைச்சல். பேட்டிகள் தெளிவாக இருந்தன. ஊர் மக்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை. பல சமயங்களில் காமிராவை எதிரே இருப்பவர்களுக்குத் தெரியாமல் கையாள வேண்டியிருந்தது. கூட்டமாய் மக்கள் பேசும் போது ஒரே சமயத்தில் பலர் பேசுகிறார்கள். யார் பேசுவதும் புரியாமல் போய் விடுகிறது. எங்களிடம் இருந்த குறைந்த தொழில் நுட்ப உபகரணங்களும், சாதனங்களும் இந்த இழப்புகளுக்கு காரணங்கள்தான். இவைகளோடுதான் படத்தொகுப்பு வேலைகளை ஆரம்பித்தோம். திரும்பத் திரும்ப எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து, உரையாடல்களை எழுதி, தேவையானவைகளை அடுக்கி, ஸ்கிரிப்ட் எழுதி, அதன் அடிப்படையில் படத் தொகுப்பு நடந்தது. சிபிசரவணன் ஏழெட்டு நாட்களும், முனிஷ் மூன்று நாட்களும் எங்களோடு இரவு பகல் அறியாமல் தொடர்ந்து உட்கார்ந்து பணி புரிந்தார்கள். மிக மோசமாக ஒலியமைப்பு இருந்த படியால் சில முக்கிய காட்சிகளை வைக்க முடியாமல் போனது. நாட்டாமங்கலத்தில் ஊர் பொது இடத்தில் ஒரு கல் இருக்கை இருந்தது. அது குறித்து அறிந்திராத நான் அருகிலிருந்த ஒரு தலித் இளைஞனை அதில் உட்கார்ந்து பேசுவதற்கு அழைத்தேன். "அதில் அவங்கதான் உக்கார முடியும், நாங்க உக்காரக் கூடாது" என்று ஒதுங்கினான். மிக முக்கியமான இந்தப் பதிவில் அந்த இளைஞன் பேசுகிற சத்தம் கேட்கவேயில்லை. இழந்தது இழந்ததுதான்.


இன்னொரு முக்கியமான திட்டமிடல், படத்தில் யாரைப்பற்றியும் நேரடியான விமர்சனங்களையோ, பாதகமான பார்வைகளையோ சொல்லாமல் விஷயத்தை மட்டும் அதன் தீவீரத் தன்மையோடு புரிய வைக்க வேண்டும் என நினைத்தது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும் காட்சிகளை மட்டுமே கோர்த்தோம். எந்த சமூக மக்களும் புண்படக் கூடாது, அதே நேரம் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சமூகக் கடமையாகவே இதில் கவனம் செலுத்தினோம். ஒரு அரசியல் தலைவரின் பேட்டியில் ஒருக் குறிப்பிட்ட சமூகம் குறித்த பெருமிதம் அப்பட்டமாகத் தெரிந்தது. அது அவருக்கும் நல்லதல்ல, படத்திற்கும் தேவையில்லை என முடிவு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகள் தீர்மானம் ஒன்று "உசிலம்பட்டி பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும்" என்றது. இரு தரப்பு மக்களின் முரண்பாட்டை மேலும் வளர்க்கும் என்பதால் எடுத்து விட்டோம். எழுத்தாளர் ஒருவர் பொது விசாரணையில் "அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்" என்கிறார். சேர்க்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் ஊழியர் ஒருவர் தன் சமூக மக்களாலேயே தனக்கு நேர்ந்த அவமானங்களை சொல்லும் போது "உன் தாயையோ, உன் தங்கையையோ ஒரு தலித்துக்கு கல்யாணம் செய்து வை" என்ற வார்த்தைகள் இருந்தன. வெட்டி விட்டோம். ஆனால் நேரம் கருதி, தேவையான விஷயங்கள் எவ்வளவோ சொல்ல முடியாமலும் போயிருக்கின்றன. தொகுத்து முடித்த போது படம் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஓடக்கூடியதாயிருந்தது. சாதி குறித்த வரலாற்றுப் பின்னணி, சுதந்திரத்துக்கு பிறகு வந்த மாற்றம், சூத்திரனாயிருந்தவன் இன்று தன்னை ஆண்ட பரம்பரை என்று மீசை முறுக்கிக் கொள்வது, தலித்களின் நிலை மட்டும் மாறாமல் இருப்பது, பஞ்சாயத்து முறை அவர்களை அதிகாரத்துக் கொண்டு வர செய்த முயற்சி, அதில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் என புள்ளிகளையெல்லாம் இணைத்து, 'இது வேறு இதிகாசம்' என ஆழமான அர்த்தத்தோடு படவேலைகளை முடித்திருந்தோம். மிகத் தெரிந்த நண்பர்கள் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டு இவ்வளவு நேரம் ஓடினால் யார் பொறுமையாக பார்ப்பார்கள்? என கேள்வியை வைத்தார்கள். 'ஆவணப்படம் பார்க்கிற முறை வேறு. கலாச்சாரம் வேறு. அதற்கு நாம் பழகியாக வேண்டும்' என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அந்த பயத்தை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தார்கள். பேசியவர்களே மாறி மாறி பேசிக் கொண்டு இருப்பது போரடிக்கும் என்று இன்னும் சில எழுத்தாளர் பெருமக்கள் சொல்ல சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. எதோ ரணம் போல உள்ளுக்குள் அறுத்தெடுக்க பிரச்சினையை மட்டும் சொல்வதாக 65 நிமிடங்களுக்குள் மீண்டும் எடிட் செய்து முடித்தோம். பெரும்பாலும் காட்சிகள் வழியாகவே படம் நகருமாறு அமைத்தோம். ஆனாலும் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. நேரடியாகச் சொல்லாமல் படம் சில அழுத்தமான கருத்துக்களை வெளிப்படுத்தவே செய்கிறது. படத்தின் நோக்கமே இது போன்ற பிரச்சினைகளைப்பற்றி பொது வெளியில் பகிரங்கமாக உரையாடல்களை நடத்த வேண்டும் என்பதுதான். அதுதான் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும். மௌனங்களுக்குள் புதைந்து கிடக்கும் வக்கிரங்கள் உடைந்திடும். அது நிகழவில்லை.


தலித் மக்கள் விடுதலை தலித் மக்களால் மட்டுமே சாத்தியமானதல்ல என்று படத்தின் கோணம் செல்கிறது. இன்னும் எல்லாக் கிராமங்களிலும் தலித் மக்களுக்கு தனி கிளாஸ் டீக்கடைகளில் கொடுக்கப்படுகிறது என்பதை சி.பி.எம்மின் தாலுகாச் செயலாளர் ஒப்புக் கொள்கிறார். இதிலிருந்து சிந்தனைகள் துவங்க மறுக்கிறது. பார்த்தவர்கள் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறார்கள். சிலர் மெல்ல பேசுகிறார்கள். அபூர்வமாகவே விமர்சனங்கள் வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலிருந்து, இது சி.பி.எம் படம், அவர்களுக்கு ஏற்றாற் போல் எடுத்துக் கொண்டார்கள் என்று குரல் கேட்கிறது. சி.பி.எம்மிலோ 'திருமாவளவனுக்கு அதிக பட்ச இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற முணுமுணுப்புக்கள் கேட்கின்றன. மற்ற சில அமைப்புக்கள் "எங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்" என்று வாளாயிருக்கின்றனர். யார் யாரெல்லாம் களத்தில் நின்றார்களோ அவர்களை மட்டுமே படத்தில் இணைத்திருக்கிறோம். தாங்கள் பதிவு செய்யப்படவில்லை, தாங்கள் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்ற உள்மன ஆதங்கங்களில் ஒளிந்து கொண்டு சிலர் அமைதி காக்கின்றனர். சி.பி.எம்மை கலெக்டரும், பழனித்துரையும் தூக்கிப் பிடித்திருப்பது பலருக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது. இந்த விவகாரங்களுக்குள் பால்ச்சாமியின் சகோதரியின் கேள்வியும், ஜமுனாவின் அழுகையும் அதிர்வுகளற்று அடங்கிப் போவதுதான் மிகப்பெரும் சோகமாயிருக்கிறது. தலித் மக்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள் வெறும் டிஜிட்டல் பதிவாகிப் போவது வேதனை தருகிறது. உரையாடல்களுக்கேற்ற காட்சிச் சித்தரிப்புகளை திட்டமிட்டு, திட்டமிட்டு அமைத்திருந்தோம். "பூங்கொடியனுக்கு 35 ஒட்டுத்தான். கருத்தக் கண்ணனை எதுத்து நிக்க வச்சு வாபஸ் வாங்க வச்சிட்டங்க" என்று பால்ச்சாமி கூறும்போது கீரிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சிறுவர்களின் ஆடுபுலி ஆட்டம் விளையாட்டத்தில் காய்கள் வெட்டப்படும் காட்சி வரும். "இந்தியா முழுக்க இதுதான் நிலைமை. தாழ்த்தப்பட்டவர்கள் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உதவித்தலைவர்கள்தான் நிர்வாகம் செய்கிறார்கள்" என்று திருமாவளவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது தலித் மக்கள் தெருவில் ஒரு கருப்பு ஆட்டின் மீது வெள்ளை ஆடு காலை வைத்து மரத்தில் தொங்கும் புல்லுக்கட்டை கடிக்கும் காட்சி வரும். அதுகுறித்தெல்லாம் கூட யாரும் பேசக் காணோம். படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய குறைகளும் இருக்கின்றன. அவைகளையும் யாரும் சுட்டிக்காட்டக் காணோம். காற்று அப்படியே நின்று போய்விட புழுக்கமாய் இருக்கிறது.


மாற்று கலாச்சாரம், மாற்று சினிமா என்று நிறைய பேசுகிறோம். நிறைய முயற்சி செய்கிறோம். படத்துக்கான செலவில் மூன்றில் ஒன்று கூட இன்று வரை தேறவில்லை. அது ஒரு புறம். மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறதா என்றால் அதற்கான ஏற்பாடும், மெனக்கெடலும் இல்லை. சிவாஜி படம் வெற்றி பெற வேண்டும் என அலகு குத்தி காவடி எடுக்கும் இளைஞர்கள் நிறைந்த தேசத்தில் நாம் வெறி பிடித்து ஆற்ற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. பாப்பாப்பட்டிக்கு பக்கத்து ஊரைச்சேர்ந்த பிறன்மலைக் கள்ளர் சமூகத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் யாரிடமோ நம்பர் வாங்கி திடுமென ஒருநாள் காலையில் செல்போனில் பேசினார். "உசுர உருக வச்சிட்டீங்க." என்று ஆரம்பித்தார். சட்டென எல்லாம் பற்றிக் கொண்ட மாதிரி இருந்தது. புதுக்கோட்டை சாந்தியைப் போய்ப் பார்க்க வேண்டும். பாவலர் ஒம்முத்துமாரி வீடு பக்கத்தில் திருவேங்கடத்தில்தான் இருக்கிறது.


கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அய்யோ கடவுளே! முடியல சாமி. இதுக்க்கு மேல படம் எடுத்த நிகழ்ச்சியை எப்படிதான் எழுத முடியும். ஆனா வாசிக்கையில் இன்னும் நாம் காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து வெளியே வரவில்லையோ என்றே தோன்றுகிறது.

  ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் எடுத்த‌தையே எழுத்தில் ப‌ட‌மாக‌க் காட்டிவிட்டீர்க‌ள் மாத‌வ‌ராஜ்.

  இன்னும் புதுப்புது இதிகாசம் படையுங்கள். அந்த ஆற்றல் உள்ளது உங்களிடம்.

  'உசுர உருக வெச்சிட்டீங்க'

  பதிலளிநீக்கு
 2. இத்தகைய முக்கிய ஆவணப்படம் , வெகு முக்கிய காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்காமல் கருத்து சொல்வது அசிங்கமாக இருக்கிறது. எங்கு கிடைக்கும் என்பதை சொல்லுங்கள்.

  உங்களின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள கென்!

  உற்சாகமாயிருக்கிறது.

  இந்த படத்தின் குறுந்தகடு சென்னையில், தேனாம்பேட்டையில், பாரதி புத்த்காலயத்தில் கிடைக்கும். இல்லையென்றால், ப்ரியா ஸ்டூடியோ, மெயின் ரோடு, சாத்தூரில் கிடைக்கும். ஏன் சிரமம்? விரைவில் "யு டியுப்' மூலம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. டாக்டர் ருத்ரன் சார்!

  ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  தொடர்ந்து எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 5. மதுமிதா!

  படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
  பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.
  இன்னும் பல விஷயங்களை சொல்லவில்லை.
  இதுபோன்ற ஏராளமான துயரங்கள் தமிழகத்தின் பல கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
  வாழ்க்கை இங்கு எளிதாக இல்லை.

  பதிலளிநீக்கு
 6. இந்த ஆவணப்பட குறுந்தகடோடு பள்ளம்,இரவுகள் உடையும் இவையும் தேவைப்படுகின்றன.

  யூடியூபில் கிடைக்கச்செய்வதாக இங்கே குறிப்பிட்டிருந்தீர்கள்.தேடினேன் கிடைக்கவில்லை.பிற இரண்டும் கூட பாரதி புத்தகாலயத்திலேயே கிடைக்குமா?

  மேலும் இதுவரை தமிழில் வந்துள்ள சிறந்த ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் குறித்து அறிந்து கொள்ள விருப்பம்.நீங்கள் கண்ட முக்கிய ஆவணப்படங்கள் குறித்து ஒரு சிறிய மின்மடல் அனுப்ப முடியுமா?

  எனது மின்னஞ்சல் முகவரி roudran@gmail.com .நான் சௌதியில் இருக்கிறேன்.நண்பர்களிடம் சொல்லி தான் தேடி அனுப்ப சொல்ல வேண்டும்.இல்லாவிட்டால் நான் ஊருக்கு செல்லும் பொழுது வாங்க வேண்டும்.அவை கிடைக்கும் இடங்கள் குறித்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!