செம்பழுப்பான சீரகத்தண்ணீரோடு 'கலாபவனின்' நினைவுகள் இன்னமும் நிழலாடுகின்றன. ஜான் ஆபிரஹம் தேசீய அவார்டுக்கான டாகுமெண்ட்ரி மற்றும் குறும்படங்களுக்கான விழா அது.Federation of film Societies of India வின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியின் சார்பில் SIGNS-2006 என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் நடந்தது.
முன்னூறுக்கும் மேல் வந்த படங்களிலிருந்து 25 டாகுமெண்ட்ரி படங்களையும், 12 குறும்படங்களையும் போட்டிக்கு தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதில் social,Gender ,Environment ,History ,Biography அப்புறம் என அவார்டுக்கான படங்கள் தேர்ந்தெடுப்பதற்கான உட்பிரிவுகளும் உண்டு. அந்த டாகுமெண்டரிகளில் 'இரவுகள் உடையும்' படமும் ஒன்று. SIGNS-2006விலிருந்து அழைப்பு வந்திருந்தது. 6 நாட்கள் தங்க விசாலமான இடம் கொடுத்து அனைத்து படங்களையும் பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தார்கள். கேரள அமைச்சர் எம்.ஏ.பேபி விழாவைத் தொடங்கி வைத்தார்.
போட்டிக்கு வந்த படங்கள் தவிர, focus என்று - போட்டிக்கு வந்து தேர்ந்தெடுக்கப்படாத- ஆனால் முக்கியமான 43 படங்கள் திரையிட்டார்கள். அது போக, இந்தியத் திரைப்படப் பிரிவின் படங்கள், SIGNS-2006 சார்பில் திரையிட்ட படங்கள், அனிமேஷன் படங்கள் என்று மொத்தம் 92 படங்கள்! மழையும், மரங்கள் அடர்ந்த சாலைகளுமாய் விடிந்த நாட்களோடு ஒட்டுமொத்தமாக ஒரு இந்திய அனுபவத்தை பெற முடிந்தது.
காயங்களும், கவிதைகளுமாய் கொட்டிக்கிடக்கிற கேரளத்து வாய்க்கால் பாதைகள் (Ways and Words ), அசாம் தேயிலைத்தோட்டத்து மக்களின் கனவுகள் புதைந்த மலைப்பிரதேசம் (Land of Driggers ), மின்சாரமற்ற இமயமலையின் அடிவாரக் கிராமம் ஒன்றில் நீரிலிருந்து வெளிச்சம் பெறும் மனிதர்கள் (Three man and a bulb ), உப்பு வயல்களில் பாவும் கால்களோடு தமிழக கடற்கரையோரத்து மக்கள் (உப்புக்காற்று), இருட்டில் வெளிச்சப்புள்ளிகளாய் விரிந்து கிடக்கும் பம்பாய் (7 Islands and a metro ), பனிபடர்ந்த இமயமலையின் மேலே ஆட்டுப்பாலும், காற்றுவெளியுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பக் இனத்து மக்கள் (Riding solo to the top of the world), கல்கத்தாவின் நெரிசலான குடியிருப்பில் வாழ்வுக்கும், கல்விக்குமாய் மல்லுக்கட்டுகிற ஆண்களற்ற குடும்பத்தின் இரண்டு பெண்கள் (shaja), ஹைடெக் உலகத்து அவசரவாழ்வில் தன் கண்களைத் தேடும் இளைஞன் (Mouse race), நகரத்து இரவில் புணர்ந்து காலையில் ஒருவரை ஒருவர் அறியாமல் எதிர் எதிரே செல்லும் அந்த ஆணும், பெண்ணும் (Scribbles of the city ), மழையிலும், வெயிலிலும் காலவெளிகளைத் தாண்டி நிற்கும் கல்லில் வடிக்கப்பட கலாச்சாரமும் வரலாறும் (Khajurho) என இந்திய நிலப்பரப்பின் வசீகரங்களும், பாரம்பரியங்களும், சோகங்களும், சிந்தனைகளும் டிஜிட்டல் பதிவில் பார்வையாளனுக்குள் கலந்தபடி இருந்தன.
கேரளத்துக்குரிய சிறப்பு இந்த ஆவணப்படங்களுக்குள் ததும்பிக் கொண்டிருக்கிறது. தங்கள் மண்ணில் பிறந்த கலைஞர்களை போற்றிப் பாதுகாக்கிற கவனமும், சிரத்தையும் மரபில் ஊறிய இயல்பாக வெளிப்படுகிறது. தேடித் தேடிச் சேர்த்திருக்கிறார்கள். நாடோடியைப் போல அலைந்து திரிந்த சிற்பக் கலைஞர் அசோகன் புதுவை (As if in the dark), இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்னனின் இளமைப் பருவம் (Finger print ), கதகளி கலைஞர் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (Directed by Adoor Gopalakrishnan), மலையாளச் சினிமாவில் நடிகராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக பரிணமித்த முத்துக்குளம் ராகவன் பிள்ளை (Malayala cinemayayude akshara guru ), 1935ல் முதன்முதலாக சினிமா எடுத்த ஜே.சி.டேனியல்(The Lost Life ), மலையாலக் கவிஞர் அய்யப்ப பணிக்கர் (Blue sun and Green moon ) என ஒவ்வொருவரையும் பற்றி டாகுமெண்டரிகள் எடுத்து உலகறியச் செய்திருக்கிறார்கள். தமிழகத்து மண்ணோடும், மக்களோடு கலந்து நிற்கிற எத்தனையோக் கலைஞர்கள் காலத்தின் நினைவுகளிலிருந்து மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்னும் வருத்தம் மேலோங்கி வந்தது. எதிர்வரும் சந்ததிகளுக்கு அந்த வேர்களை அடையாளம் காட்டாமல் நமது முகங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தோன்றவில்லை. SIGNS-2006ன் மிக முக்கியமான சிறப்பம்சமாக பேசப்பட்டது, சமகாலத்தில் நடந்த முக்கியமான மக்கள் போராட்டங்களைப் பற்றிய படங்கள். இராணுவத்தை எதிர்த்து மணிப்பூர் மக்கள் நடத்திய கொதிப்பு மிக்க இயக்கம் (ASFPA 1958), இராணுவத்தினால் காணாமல் போன தங்கள் கணவரைத் தேடியலையும் ஆயிரக்கணக்கான காஷ்மீரத்து மூஸ்லீம் பெண்களின் கேள்விகள் (Waiting...), நர்மதா அணையை எதிர்த்து அம்மக்கள் நடத்திவரும் போராட்டம் (Redefining the peace ), பறிக்கப்பட்ட தங்கள் வாழ்க்கையை மீட்க தமிழ்நாட்டில் சாலைப்பணியாளர்கள் போராடிய மூன்றரை வருடங்கள் (இரவுகள் உடையும்), கேரளத்தில் ஆதிவாசிகள் சிந்திய இரத்தம் (Three narratives ) ஆகியவை பார்வையாளர்களை அதிர வைத்தன. அதனால்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்த நடுவர்குழு ஒரு முக்கிய பரிந்துரையையும் முன்வைத்தது. டாகுமெண்டரிகளில் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உட்பிரிவுகளோடு இனி people's resistence என இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
அரங்கு நிறைந்த பார்வையாளர்களாக இல்லாவிட்டாலும் எப்போதும் இருநூறிலிருந்து முன்னூறு பார்வையாளர்கள் இருந்தனர். SIGNS 2005ஐக் காட்டிலும் இது அதிகம் என விழாவை நடத்திக் கொண்டிருந்தவர்கள் குறிப்பிட்டார்கள். ஆவணப்படம் மற்றும் குறும்படங்களுக்காக அவர்கள் நடத்திய இரண்டாவது விழாதான் அது. கைரலி, ஏசியாநெட் தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு நாளும் இந்த விழாவைப் பற்றி செய்திகளும் முக்கிய படங்களின் இயக்குனர்களிடம் பெற்ற பேட்டிகளும் ஒளிபரப்பாகியது. சன் டி.வி குரூப் சூர்யாவுக்கு வேறு முக்கிய செய்திகள் இருந்திருக்கும் போல.
ஒவ்வொரு நாளும் படங்களை இயக்கியவர்களோடு பார்வையாளர்கள் உரையாடிய open forum சுவராஸ்யமாக இருந்தது. ஆண்களும், பெண்களுமாய் நிறைய இளைஞர்கள் சீரியஸாக பங்கெடுத்துக் கொண்டனர். கொஞ்சம் 'பெரிய சினிமா' பாணியில் ஒரு காதல் கதையை எடுத்திருந்த இயக்குனர் ஒருவரை கடுமையாகச் சாடிவிட்டனர். "ஜான் ஆபிரகாம் நினைவாக நடத்தப்படும் இந்த விழாவுக்குரிய படமா இது?" என்று விரட்ட, அந்த இயக்குனர் கடைசிவரை தலைகுனிந்தே இருந்தார். புரியாமல் இயக்குவது எப்படி படமாகும் என ஒன்னொரு இயக்குனரைக் கேட்டனர். "நல்ல சினிமாக்களைப் புரிந்து கொள்ள ஒரு பயிற்சி வேணும்" என்றார் அந்த இயக்குனர். இதனையொட்டி, மாறி மாறி நடந்த விவாதங்கள் நேரமின்மையால் முடிவுக்கு வந்தது. "யதார்த்தங்களற்ற ஒரே பாணி சினிமாப் படங்களைப் பார்த்து பார்த்து நாம் ஒரு வரையறைக்கு ஆட்பட்டிருக்கிறோம். ஆனால் அது மட்டுமே சினிமா அல்ல. சில சினிமாக்களை உடனே புரிந்து கொள்ள முடியாது. தொடர்ந்து பல்வேறு சினிமாக்களைப் பார்த்து பார்த்து பயிற்சி எடுத்துத்தான் ஆக வேண்டும்" என்பதில் அந்த இயக்குனர் உறுதியாக இருந்தார். சில இயக்குனர்கள் தியேட்டரில் திரையிடும்போதே தங்கள் படத்துக்குரிய ரெஸ்பான்ஸை பார்த்துவிட்டு open forum வராமல் தலைமறைவானதும் நடந்தது.
நடுவர் குழுவில் பரிசுக்குரிய சிறந்த படங்களாக AFSPA 1958,Waiting , Beyond the wheel , Riding solo to the top of the world , Vedio Game , I am the very beautiful , Kadal Theerathu ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டன. இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பரிசளித்து வாழ்த்தினார்.
AFSPA-1958
மணிப்பூரில் உருவான பிரிவினைவாத இயக்கத்தையொட்டி 1958ல் Armed Force Special Power Actஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தப் பின்னணியில், 2004 ஜூலை 11ம் தேதியிலிருந்து நாட்குறிப்புகளாக நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இராணுவம் சந்தேகப்பட்ட மனோரமா தேவி என்னும் இளம்பெண்ணை வீட்டிலிருந்து ஒருநாள் தூக்கிக்கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் கற்பழித்துக் கொன்று விடுகிறது. நடந்ததை அறிந்ததும் மணிப்பூரே கொந்தளிக்கிறது. வயதான பெண்மணிகள் இராணுவ முகாம் வாசலில் நிர்வாணமாய் படுத்து "ஏ...தேவிடியாப் பசங்களா! வாங்கடா...ஒங்க வெறியைத் தணித்துவிட்டுப் போங்கடா" என்று வான் நோக்கி கைகளைத் தூக்கி கதறும்போது நாடி நரம்பெல்லாம் ஆடிப்போகிறது. ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. பேரணி நடக்கிறது. முதலமைச்சர் மத்திய அரசிடம் பேசுவதாகச் சொல்கிறார். மாணவர்கள் இராணுவ முகாம் நோக்கி பேரணி நடத்துகிறார்கள். போலீஸ் இராணுவத்திற்குக் கொஞ்சமும் சளைக்காமல் மிருகங்களைப் போல அவர்களைத் தாக்குகிறது. மீண்டும் இரண்டு நாட்களில் நெஞ்சில் மகாத்மா படத்தைக் குத்திக் கொண்டு அவர்கள் ஊர்வலம் செல்கிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். மூத்த பிரஜைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். AFSPA-1958-ஐ ரத்துச் செய்ய வேண்டும் என மணிப்பூர் தெருக்களெங்கும் முழக்கங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மக்களின் கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சர் பரிந்துரை செய்ததை மத்திய அரசு நிராகரிக்கிறது. மாணவர்கள் உடலில் தீ வைத்துக் கொண்டு நீண்ட சாலையில் ஓடுகிறார்கள். மாணவர் தலைவன் முழுவதுமாய் எரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் "எங்களுக்கு சுதந்திரம் இல்லை. இராணுவம் வெளியேற வேண்டும். தொடர்ந்து போராடுவோம்." என மரண வாக்குமூலம் தருகிறான். சில மணி நேரங்களில் இறந்தும் போகிறான். அவனது உடலை காவல்துறையே எரித்து விடுகிறது. மக்கள் அவனுக்கு தனியே அஞ்சலி செலுத்தி உறுதி கொள்கிறார்கள். படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் அனைத்துமே நேரடி காட்சிகளால் ஆனவை. மரண வாக்கு மூலம் போன்ற காட்சிகள் கூட குளோசப் ஷாட்டில் இருக்கிறது. படத்துக்கு கிடைத்த Footageகள் மிக முக்கியமானவை
Waiting:
இதுவும் இராணுவத்தின் கோரமான முகத்தைப் பற்றியதுதான். இன்னொரு பிரதேசத்தில், இன்னொரு மக்கள் சித்திரவதைக்குள்ளாகிறார்கள். காஷ்மீரில் Border Security Force க்கு எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அதிகாரம் இருக்கிறது. இப்படி அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம் ஆண்கள் பிறகு அவர்கள் வீடுகளுக்குத் திரும்பியதே இல்லை. அவர்களைத் தேடுகிற மனைவிகளின், அப்பாவுக்காகக் காத்திருக்கிற குழந்தைகளின் மன ஓட்டத்தையும் ஏக்கத்தையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. காஷ்மீர் என்றதும் தீவீரவாதிகளின் கொடூர பூமியாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் காட்டாத இன்னொரு முகத்தை இந்தப்படத்தில் நாம் பார்க்க முடிகிறது. "உங்கள் கணவர் போல ஒருவர் கிடைத்திருக்கிறார். வந்து அடையாளம் காட்டுங்கள்" இராணுவ முகாம்களிலிருந்து இரவு 1 மணிக்கும் இந்த பெண்களுக்கு உயரதிகாரிகள் போன் செய்கிறார்கள். கணவன் திரும்பி வராத இந்த குடும்பங்களுக்குள் பெண்களுக்கு தங்கள் உறவினர்களாலும் தொல்லைகள் ஏற்படுகின்றன. "இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே" எந்த கேள்விக்கு மெனமாக மறுத்து வெற்றிடத்தில் நிலைக்கும் அவர்களது கண்கள் கலங்க வைக்கின்றன. குழந்தைகளின் சிரிப்பு கூட சோகமாய் இருக்கிறது. "தீவீரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்படும்போது நாங்கள் அவர்களுக்காக அழுகிறோம். ஆனால் எங்களுக்காக யார் வருந்துகிறார்கள்...?" என உடைந்து பேசும்போது பார்வையாளர்களுக்கு எந்த பேதமுமில்லாமல் பரிவு உண்டாவதுதான் இந்தப் படத்தின் வெற்றி.
Beyond the wheel:
மண்பாண்டங்களைச் செய்யும் மூன்று வயதான பெண்மணிகளைப் பற்றிய படம் இது. காலம் காலமாக நமது சமூகத்தில் பல தொழில்களில் பெண்களுக்கு இடமே கிடையாது. மண் பாண்டங்கள் செய்வதும் அப்படி ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்தப் பெண்கள் அதை உடைத்து ஒரு கலையாகவே மண்ணைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இயல்பாகவே படைப்புத்திறன் கொண்ட அவர்கள் விரல்களிலிருந்து நுட்பங்கள் மண்ணில் மீட்டப்படுகின்றன. உள்ளங்கைகளில் பானைகள் உருவம் பெறுகின்றன. கடைவீதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் "இதில் நீங்கள் செய்த பானையை உங்களால் அடையாளம் காண முடியுமா?" என டாகுமெண்டரி எடுக்கும் பெண் கேட்கிறார். "நான் பெற்றதை நான் அடையாளம் காண முடியாதா?. என் கண்களை மூடிக்கொண்டு கூடப் பார்க்க முடியும். அவைகளில் என் ரேகைகள்தானே இருக்கும்." என்கிறார் ஒரு பெண்மணி. இன்னொருவர் செய்த பானை ஒன்று உடைந்து போகிறது. வேதனையோடு அதை கையில் எடுத்துப் பார்க்கிறார். "ஐயோ..இப்படி ஆகி விட்டதே. எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். பெவிகால் வைத்து ஒட்ட வைக்க முடியுமா?" என காமிராவிலிருந்து குரல் கேட்கிறது. "அட பெண்ணே...பெண்ணே! மண்ணை ஒட்ட வைக்க பெவிகாலா...! தண்ணீரே போதும்." என அந்தப் பெண்மணி வேதனை மறந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதன் எதிரொலிகளோடு படம் முடிவடைகிறது. வாழ்க்கை, நிலப்பரப்பு, உரையாடல் எல்லாமே கவிதையாய் நமக்குள் படருகின்றன
Riding solo to the top of world:
மும்பையை சேர்ந்த பாலிவுட் துணை இயக்குனரான கவுரவ் இமயமலையின் உச்சிப்பிரதேசங்களுக்கு தன்னந்தனியாய் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார். பனிபடர்ந்த தனிமைப் பாதைகளில் அந்தப் பயணத்தை அவரே காட்சிப்படுத்தி இருப்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம். 70 நாட்களில் 5000கி.மீ பயணம் செய்கிறார். காமிராவை பாதைகளின் ஓரத்தில் வைத்து- பயணம் செய்துவிட்டு- திரும்ப வந்து காமிராவை எடுத்துக் கொள்ள வேண்டும். யாருமற்ற வெளிகளில் அவரே அடித்து தங்குகிறார். இடையிடையே வழியில் வசிக்கும் மக்களோடு உரையாடுவது, உண்பது, அவர்கள் வாழ்வை புரிந்து கொள்வது என சுவராஸ்யமான அனுபவங்களாக இருக்கின்றன. திபெத் அருகில் இவருக்கு நெருக்கமாக இருக்கும் அந்த 'சம்பக்' குடும்பத்தாரிடம் இருந்து பிரியமுடியாமல் நாமும் தவிக்கிறோம். இயற்கையின் மக்களாக அவர்கள் இருக்கிறார்கள். இறுதியில் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது காமிரா முன் நின்று நம்மிடம் கவுரவ் சொல்கிறார். "இனி கிழமைகளையும், தேதிகளையும் கொண்டு நகரும் உலகுக்கு திரும்புகிறேன்" என்னும் அந்த வார்த்தைகள் மிகுந்த அடர்த்தியானவை.
Vedio Game:
இந்திய நிலப்பரப்பில் மோட்டார் காரில் பயணிக்கும் ஒருவனது கனவுகள், பார்வைகள் தத்துவங்களின் பின்புலத்தில் சொல்லப்படுகின்றன. கருப்பு வெள்ளை பட ரீல் சுருளின் சில நெகடிவ்கள் அவனுக்கு கிடைக்கின்றன. அதிலிருக்கும் பிரதேசங்களைத் தேடுகிறான். கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கான பயணம் அது. காரின் அசைவுகளில், பாகங்களில் பட்டுத் தெறிக்கும் நினவுச் சிதறல்களில் காலங்கள் அசைகின்றன. அன்பு சூழ்ந்த வீடும், உறவும் கனவாயிருக்கிறது. நேரடியாக இல்லாமல் பூடகமாகவே இந்தப் படத்தின் காட்சிகள் இருப்பதால் சொல்ல வந்த விஷயம் மங்கலாகவே தெரிகிறது.
I am the very beautiful:
மும்பையின் பார்களில் பாடும் ஒரு பெண்ணைப் பற்றிய ஆவணப்படம் இது. அவளுக்கும் ஒரு சினிமா இயக்குனருக்கும் இடையே ஏற்படும் உறவிலிருந்து அவளது கதை சொல்லப்படுகிறது. அவளோடு இருக்கும் நேரங்களில் அந்த இயக்குனர் எடுத்த காட்சிகளின் வழியே அவளது உடலும் உள்ளமும் கொஞ்சம் கொஞ்சமாய் புலனாகின்றன. ஏற்கனவே ஒருவனைத் திருமணம் செய்து, மனமுறிவால் வெறுமையுற்று உடலெங்கும் தீக்காயங்களோடு மீள்கிறாள். நம்பிக்கையோடு காலத்தை எதிர்கொள்கிறாள். பல ஆண்கள் இப்போதும் அவளைக் காதலிக்கிறார்கள். அவளோடு இருந்த தருணங்களை சந்தோஷமாக நினைவு கொள்கிறார்கள். கல்கத்தாவில் இருக்கும் வீடு அவள் மீது அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறது. சுற்றியிருக்கிற ஆண்கள் உலகத்தில் தன்னை எப்படிக் காட்டிக்கொள்வது என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. "இத்தனை நாளூம் கூடவே இருந்து படம் எடுத்து பெருமைகளைச் சேர்த்துக் கொள். ஆனால் எனக்கு மிஞ்சப் போவது என்ன?" என்று குடிபோதையில் தன் காதலனான இயக்குனரிடம் கத்துகிறாள். காலையில் நம்பிக்கை தளராமல் "நான் ரொம்ப அழகானவள்" என வீதிகளில் நடக்கிறாள்.
Kadal Theerathu:
மலையாளத்தில் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான ஓ.வி.விஜயனின் கதையைத் தழுவி எடுத்த குறும்படம். 1940களின் காலம் போல கதை காட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மனிதர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கிளம்பி கண்ணனூர்ச் சிறையில் இருக்கும் தன் மகனைச் சந்திக்க கிளம்புகிறார். நாளை அவனுக்குத் தூக்குத் தண்டனை. சிறையில் அவனைப் பார்க்கிறார். இருவரும் மெனமாக அழுகிறார்கள். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மகனின் உடல் தரப்படுகிறது. கடலோரத்தில் அந்த உடலை எரித்துவிட்டு எளிய மனிதர் விம்முகிறார். கடலலைகள் வீங்கி வீங்கி தணிகின்றன.
இவை தவிர, திரையிட்ட படங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைகளும் இருந்தன. கோலி விளையாட்டு,Baba black beard , நிழலாட்டம்,Shajia ,Mouse race ,Purugatory , The mother ,The kite போன்றவை முக்கியமான செய்திகளோடு இருந்தன. ஆந்திராவில் இருந்து வந்திருந்த ink என்னும் திரைப்படம் ஒன்றும் புரியவில்லை. உலகமே கெட்டுப் போய்க் கிடக்கிறது என்னும் வேதனை சூழ்ந்த கவிஞனின் இதயத் துடிப்புகள் என்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. she writesஎன்று தமிழ்ப் பெண் கவிஞர்கள் சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புளும், அவர்களது எழுத்துக்களிலிருந்து எழுந்த சர்ச்சைகளும் ஆவணப்படமாக திரையிடப்பட்டது. படமாக்கப்பட்டிருந்த விதம் மிகச் சாதாரணமாக இருந்தது. பதேர் பாஞ்சாலி உருவாக்கப்பட்ட விதத்தை சத்யஜித்ரேவின் குரலின் வழியாகவே An ode to Pather Panchali என்ற படம் சொல்லியது. பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் அந்த மனிதரின் முழுமையான ஈடுபாடு இருப்பது தெரிய வருகிறது.
இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய எழுச்சியை இந்தத் திரைப்படங்களில் காண முடிந்தது. கண்முன்னே கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் பதிவு செய்யும் முயற்சிகள் இதோ சாத்தியமாகி இருக்கின்றன. அறியப்பட்டாத வலிகளையும், அழகுகளையும் இரத்தமும் சதையுமாக வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிகிறது. வெவ்வெறான முகங்களை, பழக்கவழக்கங்களை முதன்முதலாக திரையில் காணமுடிகிறது. அடேயப்பா...எத்தனை கோணங்கள்! எத்தனை பார்வைகள்!! 'நூறு நூறு பூக்கள் மலரட்டும்' என்று கனவு கண்ட மாவோவின் வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. 'கோடிகளின் பூமியிலிருந்து' சினிமா சாமானியரின் கைகளுக்கு தாவிக்கொண்டு இருக்கிறது. உண்மைகள் எந்த அரிதாரமும் இல்லாமல் அழகானவை என்பதுதான் இத்தனைக்கும் அடியில் இருக்கிற உண்மை.
ஒரு எச்சரிக்கையும் ஒலிக்கிறது. படங்களை எடுக்கிறவர்கள் பற்றிய நோக்கங்களிலிருந்து அது சத்தமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறது. பல கார்ப்பரேட்களும், தொண்டு நிறுவனங்களும் பணம் கொடுத்து இளம் இயக்குனர்களைப் பயன்படுத்துவது படங்களின் டைட்டில்களில் உறைந்திருக்கிறது. எப்போதும் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்போது அதை திசைத் திருப்பி விடுகிற சதியை முதலாளித்துவம் செய்யும். அதன் ஒரு பகுதியாகவே இந்த கார்ப்பரேட்களின் ஈடுபாடு இருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும். திரையரங்குகளைவிட்டு சினிமா தெருக்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்றடைவதுதான் மாற்று சினிமாவுக்கான, மக்கள் சினிமாவுக்கான பாதையாக இருக்க முடியும். இவர்கள் தயாரிக்கும் படங்கள் எந்த மக்களிடம் செல்லப் போகின்றன. எத்தனை படங்கள் அப்படி சென்றிருக்கின்றன. யோசிக்கவும் கவனமாகவும் இருக்க வேண்டிய நேரமிது. இப்படி தயாரிக்கப்படும் படங்கள் பிறகு, விளம்பரதாரர்கள் விருப்பங்களுக்கேற்ப ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போலாகி உயிரற்றுப் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மக்களிடம் பணம் வசூலித்து, மக்களுக்கான படங்கள் தயாரிக்க அலைந்த கலகக்காரன் ஜான் ஆபிரகாம் இதை மன்னிக்கவே மாட்டார்.
இது போலப் படங்கள் வெளி வருகின்றன என்று கூடத் தெரியாது. அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள். அவலங்கள் தொடரும் ஒரு நாடாகி விட்டதே இந்தியா....
பதிலளிநீக்குநன்றி வல்லிசிம்ஹன்!
பதிலளிநீக்குநீங்கள்தான் முதன் முதலாக இதற்கு கருத்து தெரிவித்திருக்கிறீர்கள்.
உண்மையில் ஒரு அற்புதமான அனுபவம் அது.
அவலங்கள் இப்போதுதான் வெளியே தெரிய வருகின்றன. நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினைகள் தெரியாமலிருக்கும் வரை அவை பிரச்சினைகளாகவே நீடிக்கும்.
தெரிந்த பிறகு தீர்வுகளுக்கு முயற்சிக்கும்.