எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டொன்றில் 'ஐ லவ் யூ ' என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆணின் மனம் திறந்த செய்தி இருக்கிறது. மும்பையின் யானைக்குகை பாறைகளில் இருக்கும் ஆண், பெண் பெயர்கள் குற்றாலத்தில் வேறு பெயர்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஓடுகிற டவுன் பஸ் சீட்டுக்களின் பின்புறங்களையும் இந்த ஆதாம் ஏவாள்கள் விட்டு வைக்கவில்லை.
அவர்கள் யாராகவும் இருக்கலாம். இரண்டு கண்களில் ஆரம்பித்த உறவு ஒன்று உலகமே பார்க்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆணின் பெயரையும், பெண்ணின் பெயரையும் இப்படி சேர்த்து எழுதினாலே காதல் என்பதாக யாரும் சொல்லாமலேயே அர்த்தம் உறைக்கிறது. அப்படியொரு தன்னிச்சையான அறிவை காலம் மனிதர்களுக்கு ஊட்டியிருக்கிறது.
இளமையின் வாசலில் காலைச்சூரியனின் முதல் ஒளிக்கீற்றாகவும், மாலைச் சூரியனின் மங்கிய ஒளியாகவும் படர்ந்து விடுகிறது. எப்படிப்பட்டவராக இருந்தாலும், முகத்தில் ஒரு களையையும், அர்த்தமுள்ள புன்னகையையும் தருவித்துவிடுகிற மாயம் அதற்கு இருக்கிறது. நிற்கிற இடத்தில் நிலம் ஊற்றெடுக்கிறது. பார்க்கிற இடத்தில் பசுமை பூத்தொடுக்கிறது. தனிமை திகட்டாமல் கனவு காணச் செய்கிறது. உலகமே அழகாய் இருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகத்தில் வேறு எந்தக் காதலருக்கும் ஏற்பட்டிராது என்று கர்வம் கொள்ள வைக்கிறது. ஆதி மனிதனின் முடிகள் அடர்ந்த தோலில் தோன்றிய அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்கும் புதியதாகவே தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் சிறு வயதிலிருந்தே ஈர்ப்பு இருக்கிறது. அந்த பொறி உடல் மாற்றங்களோடு பருவம் அடைகிற போது கொழுந்து விட்டு பற்றிக் கொள்கிறது. எதையும் அறிந்து கொள்ளத் துடிக்கும் மனித சுபாவம் சுவாரஸ்யம் கொண்டு தத்தளிக்கிறது. புரிந்தும் புரியாமல் அலைபாய்கிறது. தனக்கும் எல்லாம் நேர்கிறது என்பது பாடாய் படுத்துகிறது. தன்னை தானே ரசிக்கிற குறுகுறுப்பில் பிறக்கிறது. தனது ரகசியங்களை எதிர்வினையின் மூலம் புரிந்து கொள்ள முயலும் துடிப்பில் வளர்கிறது.
இந்த புதிய உலகத்தின் திறவுகோல் ஒரு பெண்ணுக்கு ஆணின் பார்வையில் இருக்கிறது. ஒரு ஆணுக்கு பெண்ணின் பார்வையில் இருக்கிறது. திறந்துவிடும் கண்களுக்காக பூத்துக் கிடக்கிறார்கள். ரகசியங்கள் பொதிந்த பார்வைகளை பரிமாறிக் கொண்டு உடல் விசித்திரங்களில் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.ஒரு ஆணின் கண்கள் பல பெண்களின் கண்களைப் பார்க்கின்றன. ஒரு பெண்ணின் கண்கள் பல ஆண்களின் கண்களைப் பார்க்கின்றன. வாழும் சமூகமும், வாய்க்கும் சூழலும் அவரவர்களுக்குள் மூட்டி வைத்திருக்கிற பிரமைகளுக்கும், பிம்பங்களுக்கும் அருகில் நெருங்கி வருகிறவர்களை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்கள். தங்களது கோட்டு உருவங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள். அவரவர் சித்திரங்கள் மிகச் சிறப்பாக வடிவம் பெறும் என நம்புகிறார்கள். செந்தூரப்பூவே என்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்.
எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாய் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பெறவும் உன்மத்தம் பிடித்துப் போகிறது. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களெல்லாம் போய் நிற்கிறார்கள். பிடித்தமானவராய் மாறுவதற்கு வித்தைகளும், சாகசங்களும் செய்து பார்க்கிறார்கள். மலையுச்சியிலிருந்து குதிக்கப் போவதாகவும், விஷமருந்தி இரத்தம் கக்கிச் சாகப் போவதாகவும் கடைசிச் செய்தி அனுப்பி பார்க்கிறார்கள். பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியோ ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான். நமது சினிமாக்கள் கொஞ்சங்கூட சமூகப் பொறுப்பற்று விடலைகளின் உள்ளத்தில் தீயை வைத்துக் கொண்டிருக்கின்றன.
பார்வைக்கு மறு பார்வை எதிர்த் தரப்பில் பதிலாய் கிடைக்கிற போது வானவில் தோன்றுகிறது. சக வயதொத்த பால் பேதம் கொண்டவரின் சம்மதமே பிறவிப்பயனாகிறது. உறுதி செய்து கொள்ள மீண்டும் மீண்டும் பார்வைகளில் திளைக்கிறார்கள். கால்களில் நடுக்கமும், கண்களில் படபடப்புமாய் பரிதவிக்கிறார்கள். தனக்காக ஒரு இளவரசன் வரப் போகிறான் என அவனும், இனியுள்ள காலம் முழுவதையும் அந்த ஒருத்தியோடுதான் என அவனும் கற்பனை செய்கிறார்கள்.
அவளது தலைமுடியொன்றை தனது விரல்களில் சுற்றி மோதிரம் என பெருமைப் படுகிறான் அவன். அவளது பாதம்பட்ட மண்ணை கவனத்துடன் அள்ளி தனது வழி பாட்டுக்கு பாதுகாக்கிறான் அவன். அவனது அழுக்குக் கைகுட்டையை கவர்ந்து சலவை செய்து மயங்கிப் போகிறாள் அவள். அசட்டுத்தனங்களும், சினிமாத்தனங்களுமாய் சிறுத்துப் போனாலும் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது. வசீகரமான பயணமாக, ரகசிய அனுபவமாக உணரப்படுகிறது. எல்லைகளற்ற பெருவெளியில் மனிதர்களை சஞ்சரிக்க வைக்கிறது.
இடைவெளிகளை மேலும் மேலும் குறைக்க வேண்டும் என பித்துப் பிடித்து நிற்கிறார்கள். காதலின் சாலையில் யாவரின் பயணங்களும் அதை நோக்கியே செல்கின்றன. ஆண் பெண் உறவுகளை திருமணங்களே உறுதி செய்கின்றன. சமூகத்தின் சம்மதம் முக்கியமாகிறது. திருமணத்திற்கான ஒழுக்கத்தையும், விதிகளையும் சமூகமே கற்பித்து வைத்திருக்கின்றன. ஜாதி பார்க்கிறது. மதம் பார்க்கிறது. கல்வி பார்க்கிறது. வாழ்வதற்கான வசதி பார்க்கிறது. இவைகளை பார்க்காத காதலையும், காதலரையும் நிராகரிக்கிறது. வன்மத்தோடு எதிர்க்கிறது. எல்லாவற்றையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தங்கள் சொந்தக் காலில் நிற்கிற உறுதி வேண்டியிருக்கிறது. காதலின் வெற்றி என்பது காதலர்கள் வசதியாகவும், சமூகத்தில் கௌரவமானவர்களாக வாழ்வதிலும் இருக்கிறது.
இப்படித்தான்- இவ்வளவுதான் காதல் பற்றிய நமது புரிதல்களும், உணர்வுகளுமாக தேங்கிப் போய் கிடக்கின்றன. திரைப்படங்களில் ஆட்டமாய் ஆடுவதும், சண்டையாய் போடுவதும் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் கடைசிக் காட்சிக்காகவே இருக்கின்றன. அந்தி மங்கும் வானத்தின் பின்னணியில் காதலனும், காதலியும் கட்டிப் பிடித்து சேர்ந்து நடக்கும் காட்சி வந்ததும், ரசிக பெருமக்கள் அப்பாடா என்று இருக்கைகளை விட்டு எழுந்து வீடுகளுக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர். விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் காதலின் வெற்றியென சொல்லி சூரியன்கள் மறைகின்றன. முதலிரவுக் காட்சிகளே காதலின் உச்சக்கட்டம் என்று விளக்குகள் அணைக்கப் படுகின்றன.
அந்த ஆணின் வாழ்க்கை அத்தோடு முடிந்து போகவில்லை. அந்த பெண்ணின் வாழ்க்கையும் அத்தோடு முடிந்து போகவில்லை. ஆனால் காதல் மட்டும் முடிந்து விடுகிறது. இருந் தாலும், இதயத்தை அம்பால் துளைப்பதாக, லிப்ஸ்டிக் உதடுகளாக, கோர்த்திருக்கும் ஆண் பெண் கைகளாக, கண்ணை மூடி முத்தம் கொடுப்பதாக கடைகளில் வாழ்த்து அட்டைகள் வண்ண வண்ணமாக தொங்கவிடப் பட்டிருக்கின்றன. தொலைக்காட்சியில் விசேஷ நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படுகின்றன. இணையதளங்களில் வாழ்த்துச் சொல்லவும், தொடர்பு கொள்ளவும், கொண்டாடவும் ஏராளமான ஏற்பாடுகள். மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளம்பரங்கள். கல்லூரிகளில், நட்சத்திர ஓட்டல்களில் விழாக்கள். நடனங்கள். நகரத்து யுவன்களும், யுவதிகளும் காய்ச்சல் வந்து நிற்க உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சின்னக் குழந்தைகள் சோப்பு நுரையை ஊதி நீர்க்குமிழிகளை பறக்க வைத்து ஆனந்தப்படுவதைப் போல 'லவ்' 'லவ்' என்று சகல இடங்களிலும் காதலர் தின நிகழ்ச்சிகள் தென்படுகின்றன.
வாழ்வில் காதலை அறியமுடியாமல், எதோ ஒரு தினத்தில் காதலைக் கொண்டாடுவது வேடிக்கை தான். அவஸ்தைகளோடும், பரவசங்களோடும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தவர்கள் விரைவில் அதனைத் தொலைத்து விட்டு வெறுங்கையோடு நிற்பது பரிதாபம் தான். காதலில் தோய்ந்து தோய்ந்து விரிந்த காவியங்களையும், கவிதைகளையும் கொண்டு பூமிப்பந்தையே அந்த உருகும் மொழியால் மூடி விடலாம். அவ்வளவு பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் காதல் பிடிபடாத வண்ணத்துப் பூச்சியாய் மனிதர்களுக்கு போக்குக் காட்டி பறந்து கொண்டிருப்பது விசித்திரம்தான்.
"இதெல்லாம் காதலே இல்ல..." என்று ஒருகுரல் ஒலிக்கிறது. "டீன் ஏஜ் பருவத்துல வர்ற ஒரு ஃபீலிங். அவ்வளவுதான்" இன்னொரு குரல் ஒலிக்கிறது. "காதலுக்கும் காமத்துக்கும் ஒண்ணும் வித்தியாசமில்ல" என்றும் சொல்லப்படுகிறது. காதலைப் புரிந்து கொள்ளவும், என்றென்றும் வாடாத மலராய் அதை தரிசிக்கவும் முனையாமல் இப்படியான சிந்தனைகள் சமூகப்பரப்பில் கீறிக்கொண்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் காதல் இருந்ததாகவும், இப்போது அது இல்லையெனவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆண் பெண் உறவுகளில் காதல் என்றென்றைக்கும் நிலைத்திருக்க முடியாமல் எது தடையாய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் துடிப்புகளும், அறிந்து கொள்ள முடியாத ஏமாற்றங்களுமே இவைகளின் அடிநாதமாய் இருக்கின்றன.
தொடரும்...
அச்சச்சோ...
பதிலளிநீக்குஇதே தலைப்பில் நான் ஒரு கதை ஏழு பாகம் வரை எழுதிட்டேனே ??
நீங்களும் நல்லாத்தான் எழுதுறீங்க...
ஆதலினால் காதல் செய்வீர்
பதிலளிநீக்குகிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்.
சினிமாவிலும் காதல்
பதிலளிநீக்குகதையிலும் காதலா?
word verification-ஐ எடுக்காவிட்டால் உங்க கூட டூ
பதிலளிநீக்குநமக்கு பிடிச்ச சப்ஜெக்ட்:)
பதிலளிநீக்குமாய வண்ணத்துப் பூச்சி என்பது சரிதான்.
தொடரும் அடுத்த அத்தியாயத்தில் என்ன எழுதுகிறீர்கள் எனப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.
ஒரு முக்கிய விஷயம் யாருக்கும் சொல்ல வேண்டாம். மிக ரகசியம்.
ஒட்டு மொத்த காதலர்களின் சங்கங்களின் தமிழக (அகில இந்திய, உலக)தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
(ச்ச்ச்ச்ச்சும்மா ஒரு சம்பாஷணைக் கூட்டத்தில் (வெறும் 5 நபர்கள்தான்) காதலர்களுக்கு வாங்கிய வக்காலத்து கண்டு இந்தப் பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். இதில் முக்கியமானது இரு கூட்டத்தில் இது ஒரே மாதிரியாக நிகழ்ந்தது, காதலர்களின் தானைத் தலைவியாக அறிவித்துவிட்டார்கள். வேண்டாம் பட்டம் என்று மறுத்துப்பார்த்து இயலாததால் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டேன்:)))))))))
செந்தழல் ரவி!
பதிலளிநீக்குஇந்த புத்தகம் நான் எழுதி, வெளிவந்து மூன்று வருடங்களாகி விட்டது.
இணையதளத்தில் ஒவ்வொரு அத்தியாயமாக பதிவு செய்கிறேன்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
வால்பையன்!
பதிலளிநீக்குநீங்கள் பல வலைப்பக்கங்களில் எழுதும் கமெண்ட்களை படித்திருக்கிறேன்.
சட்டென்று, உங்களைப் பார்க்கத் தோன்றும்.
காதல் கிடைக்கவில்லையென்றால் கல்யாணம் செய்வீர், மனைவியை காதல் செய்வீர்!
சினிமா என்ன, கதை என்ன, உலகம் பூரா காதல்தான்!
டூ விட்டுவிட வேண்டாம். WORD VERIFICATION என்றால் என்னவென்று தெரியவில்லையே!
வந்துட்டீங்களா மதுமிதா!
பதிலளிநீக்குஅண்ட, பிரம்ம, சர்வலோக காதல் தலைவியே!
வருக!
ஐயன் எழுதுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அடுத்த அத்தியாயத்துக்கு இரண்டு நாள் பொறுத்திருக்கலாமா?
///அண்ட, பிரம்ம, சர்வலோக காதல் தலைவியே! வருக!///
பதிலளிநீக்குஅது:)
இப்படித்தாங்க நான் வேணான்னு சொல்லச் சொல்ல புதுசு புதுசா பட்டங்கள் கிடைக்குது:)
(நமக்கு நாமே திட்டத்தில் பட்டம் வந்ததாக யாரும் சொல்லிவிடக்கூடாதே அதுக்கு இந்த டிஸ்கி)
WORD VERIFICATION என்றால், உங்கள் பதிவில் கமெண்ட் இடும் போது அப்படியே இட முடிவதில்லை. WORD VERIFICATION என்று கேட்கும். அதில் தெரியும் எழுத்துகளை டைப் செய்தால்தான் கமெண்ட் இட முடியும். ஒரு எழுத்து தவறாக டைப் செய்துவிட்டாலும் மறுபடி புது ஆங்கில எழுத்துகளைக் காட்டும்.
Leave your comment பெட்டிக்கு கீழே இருப்பதை அப்படியே காப்பி செய்து போட்டிருக்கிறேன் பாருங்கள்.
///
Word Verification
Type the characters you see in the picture above.
Choose an identity
Google/Blogger
Username
Password
No Google Account? Sign up here.
You can also use your Blogger account.
OpenID
OpenID LiveJournal WordPress TypePad AIM
Name/URL Name
URL
Anonymous
Publish Your ///
Settings ல் போய்தான் இதை மாற்ற வேண்டும்.
நாங்கள் Comment Moderation என்று போட்டிருக்கிறோம். அதில் யாரும் கமெண்ட் இட்டால் நம் மெயில் ஐடிக்கு நேரடியாக வந்துவிடும். அங்கே நாம் பப்ளிஷ் செய்தால்தான் அது பதிவில் தெரியவரும்.
மதுமிதா!
பதிலளிநீக்குஉங்கள் உதவிக்கு நன்றி.
முகப்பை மாற்றியிருக்கிறேன். எப்படியிருக்கு?
waiting for the whole book
பதிலளிநீக்குருத்ரன் சார்!
பதிலளிநீக்குஇன்னும் நாளை அனேகமாக இந்தத் தொடர் முழுமையுறும்.
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி!